திங்கள், 21 செப்டம்பர், 2009

உன்னைப் போல் ஒருவன் பல நிறைகளும் சில சந்தேகங்களும்


மனிதம், மனிதனை மற்றைய விலங்குகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் அம்சம். வவுனியாவின் முகாம்களில் முள்வேலிகளுக்குள் அடைப்பட்ட மூன்று இலட்சம் பேருக்காக வருத்தப்படும் நான் கேப்பட்டிபோல்லாவில் பேருந்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பால் இறந்த சிங்கள குழந்தைகளுக்காகவும் கலங்க வேண்டும். அதை விடுத்து "செத்தான் சிங்களவன்" என்ற பாணியில் மகிழ்வது எவ்விதத்திலும் பொருத்தமாய் இராது.சாமான்ய மனிதனை காவுகொள்ளும் தீவிரவாதத்தை எதிர்த்து தன வீட்டை தானே சுத்தம் செய்ய தீவிரவாதியாகும் ஒரு சாமான்யனின் ஒரு நாளைய வாழ்க்கை பதிவுதான் உன்னைப் போல் ஒருவன்.

படத்தின் கதை ஏற்கனவே A Wednesday பற்றிய பதிவில் சொல்லியிருப்பதால் படத்தை பற்றிய சில அலசல்கள் மட்டுமே.
படத்தில் பாராட்ட வேண்டிய முதல் அம்சம் சந்தேகத்திற்கிடமின்றி பாத்திரங்களோடு கச்சிதமாய் பொருந்திப் போகும் நடிகர்களும் அவர்களின் மிகையற்ற நடிப்பும்தான்.நஸ்ருதீன் ஷாவுடன் ஒப்பிட்டால் குறைவுதான் என்றாலும் கமல் சிறப்பாகவே நடித்துள்ளார். தன்னை stupid common man என்று கமல் சொன்னாலும் படத்தை பார்க்கும் நம்மால் அவ்வாறு உணர முடியவில்லை என்ன செய்வது அவரை ஒரு நட்சத்திரமாகவே பார்த்து பழகி விட்டோம். மோகன்லால் நடித்திருப்பதாய் தோன்றவில்லை வாழ்ந்திருக்கிறார். மூன்று முறை தேசிய விருது பெற்ற இரண்டு பேர் நடிக்கும் படத்தில் இது ஆச்சரியமில்லைதான். ஆனால் கமல்,மோகன்லால் ஆகியோரையும் தாண்டி படத்தில் பங்கேற்ற அனைவருமே சிறப்பாய் நடித்திருப்பது பாராட்ட தக்கது.

கமல் இந்த படத்தில் நடிக்கப் போகின்றார் என்றவுடனே எனக்கு ஏற்பட சந்தேகம் கமலே சொல்வது போல் அமைதிப் பூங்காவான தமிழகத்தில் நடப்பது போல இந்த கதையை எப்படி தமிழாக்கப் போகின்றார் என்பதுதான். ஆனால் திறமையாகவே முயன்றிருக்கிறார் கமல்.

ஆரம்பம் முதல் இறுதி வரை எள்ளல் இழையோடும் இரா. முருகனின் வசனங்கள் அருமை. ஆனால் பல இடங்களில் ஆதிக்கத் திமிர். இவர் பார்ப்பனரா என்ன?
( கமலுடனான அனுபவங்கள் பற்றி எழுதுறேன் என வாய்ப்புக்காக முகஸ்துதி செய்த கட்டுரை இன்னும் சிறப்பாய் இருந்தது. கிட்டத்தட்ட இதே தரத்தில் மனுஷ்ய புத்திரனும் எழுதியிருந்தார். ஜெயமோகன் கூட தான் கிள்ளிக் கொடுத்த சினிமா தனக்கு அள்ளிக் கொடுத்திருக்கின்றதென எழுதியிருந்ததாய் ஞாபகம் . சாருவும் விரைவில் சினிமாவில் எழுதட்டும்.)

ஹிந்தியில் பாடல்களே இல்லாத இந்த படத்துக்கு தமிழில் இத்தனை பாடல்களா என பயந்திருந்தேன். ஆனால் நல்ல வேளையாக படத்தில் அந்த பாடல்கள் இல்லை. எனினும் பின்னணி இசையில் சிறப்பாகவே செயற் பட்டுள்ளார் சுருதி. பல இடங்களில் அவரது இசை மௌனம் காப்பது காட்சிகளுக்குள் எம்மை ஈர்த்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.

இவை படத்தின் நிறைகள் என்றால் எனக்கிருந்த சில சந்தேகங்கள் உங்களுக்கு விடை தெரிந்தால் பகிர்ந்துக் கொள்ளுங்களேன்.

கமலை போலி பகுத்தறிவுவாதி என பலர் சொல்கிறார்கள். அது உண்மைதானோ என எனக்கு இந்த படத்தை பார்த்த போதுதான் சந்தேகம் வந்தது.
தீவிரவாதி தனக்கேற்பட்ட அவலத்தை தன் மனைவி கொல்லப்பட்டதை சொல்லும் போது அவனது மதம் சார்ந்த வழக்கத்தை முன்னிறுத்திய நையாண்டி அவசியமா? தீவிர இந்துத்துவாக்கள் கூட இவ்வாறு செய்ய தயங்குவரே. (அவரது gene களில் இருக்கும் ஏதோ ஒன்று காரணமாயிருக்கும்.)

திருமணமே காலாவதியான ஒரு விடயம் என பேட்டிக் கொடுப்பவர் அரதைப் பழசான தேசபக்தி எனும் அபத்தத்தை தூக்கிப் பிடிப்பதேன்?

நடிகரான ஸ்ரீமன் தன்னை டாக்டர் என சொல்லிக் கொள்கிறார்.இது யாரையேனும் சுட்டுகிறதா?

வோட்டர் லிஸ்ட்டில் தன் பெயர் இல்லாததால் தன்னை invisible man ஆகவே கருதுவதாக சொல்லும் கமல் அடுத்தாய் நாட்டுக்கு super man ஒருவர் அல்லாமல் தன்னை போல common invisible man தான் அவசியம் எனக் கூறுவதில் ஏதும் அர்த்தம் இருக்குமா?

மும்பை குண்டுவெடிப்பை தமிழர்கள் கண்டுகொள்ளவில்லை என ஆவேசப்படும் கமல் ஈழத்தமிழரின் அவலம் கண்டு தீக்குளித்த தமிழகத்தவரை பார்த்து கலங்கிய வட நாட்டவரின் மனிதாபிமானம் பற்றியும் ஓரிரு வார்த்தைகள் கூறியிருக்கலாம்.

எது எப்படியோ படம் பார்க்க வேண்டிய படம். ரசிகர்களிடத்தில் ஏற்பட்டிருக்கும் இரசனை மாற்றத்தை கமல் சிறப்பாக உள்வாங்கியிருக்கிறார். இப்போதெல்லாம் ரசிகர்கள் சசிகுமார்,செல்வராகவன்,அமீரின் அடுத்தப் படம் தொடர்பில் ஆர்வம் காட்டுகின்றனரே ஒழிய ஹீரோக்களின் படங்கள் தொடர்பில் அல்ல. அதுவும் விஜய் பெயரை சொன்னால் சற்று பயப்படவும் செய்கின்றனர். இம்மாதிரியான படங்களுக்கு தரப்படும் ஆதரவு குப்பைகளின் வருகையைக் குறைக்கும்.
Related Posts with Thumbnails