வியாழன், 26 நவம்பர், 2009

முத்தம்


பதிவிட ஏதும் இல்லாததால் இது
குசும்பன் பாணியில் சொல்வதென்றால் Enter தட்டி தட்டி ஒரு கவிதை(?!)

உன் இதழ்களைத்தான் முத்தமிட
நினைத்தேன்

ஆனால் என் உதடுகள்

தினம் ஷ்பரிசிப்பதோ

சிகரட் பில்டரைத்தான்


புதன், 25 நவம்பர், 2009

சரத் பொன்சேகாவின் பஞ்ச் டயலாக்


இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் அடுத்த வருடம் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. போர் வெற்றிக்கு காரணமாக சிங்கள மக்கள் மத்தியில் தன்னை வெளிக் காட்டிக் கொண்ட மகிந்த எவ்வித தடைகளும் இன்றி அனைத்து மக்களினதும் ஏகோபித்த தெரிவாக மீளவும் தெரிவாவார் என்ற நிலை இருந்த போதுதான் அவரே எதிர்பார்க்காத இந்த மாற்றம் வந்து சேர்ந்தது. போர் வெற்றியில் தன்னோடு சேர்ந்து பங்காற்றிய இராணுவத் தளபதியை ஊடங்களில் முன்னிறுத்தாது தவிர்த்ததும் , சந்தேகக் கண் கொண்டு பார்த்ததும், அவரை அரவணைத்துச் செல்ல தவறியதும் இன்று இவருக்கே வினையாகஅமைந்துள்ளது.



சற்றுத் திரும்பிப் பார்த்தோமானால் போர் வெற்றி மகிந்த முனைந்து மக்கள் முன் காட்டுவது போல அவரது தனிப்பட்ட வெற்றி கிடையாது. ரணில் விக்கரமசிங்க அவர் காலத்திலேயே புலிகளை ஒடுக்குவதற்கான வலுவான அடித்தளத்தை இராஜதந்திர ரீதியில் இட்டிருந்தார். பேச்சுவார்த்தையை இழுத்தடித்து இடைப்பட்ட காலப்பகுதியில் வன்னியினுள் இருந்த அமைதியான நிலைமையை போராளிகளிடமும்,மக்களிடமும் காணப்பட்ட போருக்கு ஆதரவான மனநிலையை சிதைக்கப் பயன்படுத்தியது, கருணாவை பிரித்தெடுத்து கிழக்கு மாகாணத்தை கை நழுவி போகச் செய்தது என்பன இவற்றுள்சில.

இலங்கையில் UNP அரசு அமைந்தால் அமெரிக்கா உள்ளிட்ட மேலைத்தேயங்களின் ஆதரவுடனும் , சுதந்திரக்கட்சி ஆட்சி அமைகையில் இந்திய,ரஷ்ய,சீன ஆதரவுடனும் புலிகளுக்கெதிரான போர் எப்பொழுதும் முனைப்பாக முன்னெடுக்கப்பட்டது. ஆனால் தமிழர் தரப்பு இவ்வாறான நேசத்தரப்புகளை கொண்டிருக்காமையால் தனியாகவே போராடும் நிலையிலேயே இருந்தது. ஓரளவேனும் வெளிநாட்டு தொடர்புகளை சிறப்பாக பேண வல்ல பாலசிங்கம் அவர்கள் இயற்கை எய்தியமையும் அதைத் தொடர்ந்த முக்கிய தளபதிகளின் மறைவும் மேலும் இயக்கத்தை பலவீனப்படுத்த அதன் பின் தமிழர் தலைமை தீர்க்கதரிசனமின்றி தேர்தலைப் புறக்கணிக்க ம்ம் இந்த நிலைமை. ஆக செத்த பாம்பை அடித்திருக்கிறார் மகிந்த

ரணில் வந்திருந்தால் பிரச்சினை தீர்ந்திருக்குமா என்பவர்களுக்கு பிரச்சினை தீர்ந்திருக்குமோ இல்லையோ இங்கே JVP கொடிப் பிடித்து ஆர்ப்பாட்டம் செய்துக் கொண்டிருந்தாலும் உயிரிழப்பின்றி ஐரோப்பிய நாடுகளில் சமாதானமாவது பேசிக் கொண்டிருந்திருக்கலாம்.

ஆனாலும் மகிந்த வந்த ஆரம்பக் காலப்பகுதியில் அப்போது இருந்த நிலையில் போருக்கு செல்ல முடியாத நிலையிலேயே இருந்தார். எனினும் அதையும் கெடுத்து யானை மன்னிக்கவும் புலி மாவிலாறு அணைக்கட்டை மூடி தன தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டது. தம் மீது இருந்த அதீத நம்பிக்கையா? அல்லது எதிரி மீதிருந்த தவறான கணிப்பா? இன்று வரை புரியவில்லை. என் பழைய பதிவொன்றைப் பார்த்தேன் கோயபல்சை நம்மூர் கெஹலிய ரம்புக்வேள்ளவுடன் ஒப்பிட்டு எழுதியது. அத்தனை தூரம் நம்பிக்கையுடன் தோற்கவே மாட்டார்கள் இவர்கள் சொல்வதுதான் பொய் என்ற சராசரி தமிழரின் மனநிலையில்தான் நானும்இருந்திருக்கிறேன்.



ஆனால் இன்றைக்கும் அதே மாதிரி வருவார், போராடுவோம், வெல்வோம் என்ற ரீதியில் கதைப்பது யாரை ஏமாற்றவெனத்தான் தெரியவில்லை. கதைப்போர் பெரும்பாலும் புலம்பெயர்ந்தோர் அல்லது தமிழகத்தைச் சேர்ந்தோர். புலம்பெயர்ந்தோருக்கு தமது இத்தனை வருடக் கனவு தகர்ந்து போனதில் உள்ள ஏமாற்றம் புரியக்கூடியதே. ஆனால் தமிழகம்! இங்கே தமிழர் தரப்பு பலமாய் இருந்த போதெல்லாம் வாய் பொத்தி சினிமா பார்த்து காலம் கழித்து விட்டு இப்போது பேசுவதில் யாதொரு பயனுமில்லை. அதுவும் கடைசி தேர்தலில் கூட வைகோவைத் தோற்கச் செய்தீர்கள், காங்கிரசை ஆட்சிப் பீடம் ஏற்றினீர்கள். சீமான் வகையறாக்களுக்கு வேறு தேவைகள் உண்டு. அவரது நாம் தமிழர் இயக்கமும் பிரபாகரன் பிறந்ததின வாழ்த்துப் போஸ்டர்களும் அதைத்தான் காட்டுகின்றன. தமிழகத்தில் தமிழ், இனம்,மானம்,தமிழ்நாடு எனப் பேசுவது அரசியல் வெற்றிக்கான ஒரு வழி அவ்வளவே. நாம் தமிழர்கள் உணர்ச்சித் ததும்ப இனம் பற்றிக் கதைப்போம் ஆனால் இனத்திற்காக ஒரு மயிரும் புடுங்க மாட்டோம் (நான் உட்பட).

ஆக இன்றைய நிலையில் விரும்பியோ விரும்பாமலோ தேர்தலொன்று நம் மீது திணிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சிறும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் அரசத் தலைவராக வரமுடியாத நிலையில் இரு பெரும் கட்சிகளில் ஒருவரையே நாம் தெரிவு செய்ய வேண்டியுள்ளது. இம்முறையும் தேர்தலைப் புறக்கணிப்பதால் யாதொரு பயனும் கிட்டுமென நான் கருதவில்ல்லை. ஆக இரண்டில் எது ஆகக் குறைந்த பாதகத்தை தருமென்பதே நம்முன் இருக்கும் தெரிவு. சரி எதுவாக அமைய வேண்டுமென்பது தொடர்பாக விவாதிக்க வேண்டியதில்லை. இலங்கையில் இருப்போர் இன்றைய நிலைமையை நன்கு அவதானிபபின் அவர்களாகவே ஒரு முடிவுக்கு வரக்கூடியதாய் இருக்கும்.
ம்ம் நிறைய எழுதியதில் தலைப்போடு தொடர்பான விஷயத்தை பேசவே முடியவில்லை. பொது வேட்பாளர் பொன்சேகா தான் என்பது கிட்டத்தட்ட முடிவான மாதிரிதான். அனுரா குமார திசாநாயக்க(JVP) நேற்று தமது பொது வேட்பாளர் இவர் என அறிவித்தார். லக்ஸ்மன் கிரியெல்ல(UNP) வேட்பாளர் பெயரை சொல்ல விலை எனினும் மக்கள் வாக்களிப்பது போரை வென்றவர்களுக்கா? விற்றவர்களுக்கா? என்ற தீர்க்கமான முடிவெடுக்கும் காலத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் எனக் கூறினார். ஆக இவை அவர்தான் போதுவேட்பாளர் என்பதை ஊர்ஜிதப் படுத்துவதாகவே உள்ளது.
நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னாள் ராணுவத் தளபதி சொன்னதுதான் சுவாரசியம். நீங்கள் அதிபர் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் வெல்வீர்களா? என்ற ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு ஒரு Hero பாணியில் அவர் சொன்ன பதில்
I have never lost in my life

செவ்வாய், 24 நவம்பர், 2009

தூக்கம் திருடிய கனவுக் கன்னியர் - ஒரு ஜொள் பதிவு

பொழுது போகாமலிருந்ததலும் கொஞ்சம் ஹிட்ஸ் கூட்ட ஆசைப்பட்டதாலும் இப்படி ஒரு பதிவு. நம் எல்லோருக்கும் பிடித்த கனவுக் கன்னியர்கள் இருப்பார்கள் இல்லையா? கொஞ்சம் அவற்றை மீட்டுப் பார்ப்பதிலும் பகிர்வதிலும் ஒரு அலாதியான சந்தோசம். இதோ எனக்கு பிடித்தவர்கள். இவர்களில் உங்களுக்குப் பிடித்தவைகளையும் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்.

10. Lesley Ann down


ஒரு மூன்று வருடங்களுக்கு முன் ஆசிரியப்பயிற்சியை முடித்து விட்டு Appointment கிடைக்கும் வரை வீட்டில் இருந்த காலப்பகுதி. பொழுது போகாமல் பகல் நேரத்திலேயே MTV(இலங்கையின் தனியார் ஆங்கில Channel) யில் ஆங்கில தொடர்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன். அப்படிப் பார்த்ததுதான் Sunset beach. அதே தொடரில் ஏகப்பட்ட இளம்பெண்கள் இருந்தாலும் என்னைக் கவர்ந்ததென்னவோ கொஞ்சம் வயசான Lesley Ann down. அந்த கொஞ்சம் வயசு எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை. just 54 தன கணவனுக்குத் தெரியாமல் ஒரு வாலிபனுடன் காதல் வளர்க்கும் வேடம். அம்மணி அசத்தியிருப்பார். இப்போதெல்லாம் அவர் நடித்த தொடர்கள் ஏதும் போகின்றதா தெரியவில்லை. போனாலும் பார்க்க நேரமாயிருக்கின்றது.

9. ஷில்பா ஷெட்டி

வண்டுகளின் சிறகசைவினால் எழும் சிறு காற்றுக்கும் துவளும் மெல்லிடையாம் தமயந்திக்கு. ஒருவேளை இப்படி இருந்திருக்குமோ என யோசிக்கச் செய்தவர் இவர் ஷில்பா ஷெட்டி. Mr. Romeo தான் நான் பார்த்த இவரின் முதற் திரைப்படம். எப்பவோ நன்றாக வந்திருக்க வேண்டியவர் Big brother நிகழ்ச்சியினால் காலம் கடந்துதான் புகழ் இவருக்குக் கிடைத்தது. ம்ம் இப்போதும் பெருமூச்செறியச் செய்யும் அழகுக்கு சொந்தக்காரர். ராஜ் குந்த்ராவைப் பார்த்தால்தான் வயிற்றெரிச்சலாய்இருக்கிறது.

8. ரவீனா தண்டன்


இவர் "ஜீசு படிகே மஸ்து மஸ்து " என ஆடிய ஆரம்பக் காலப்படங்களைப் பார்த்த போதெல்லாம் இவர் மீது எவ்வித ஈர்ப்பும் இல்லை. அப்படியே காலச்சக்கரம் உருண்டோடி சில வருடங்களின் பின் அமிதாப்புடன் நடித்த Aks நாகர்ஜுனாவுடன் நடித்த Agni varsha ஆகிய படங்களைப் பார்த்த போது மனம் "ரவீன ரவீனா" எனப் பாடத் தொடங்கியது. பழம் பழுக்க பழுக்கதான் அழகாயிருக்குமாம் இவரை பார்த்தப் போதுதான் அது புரிந்தது. இவரது வெகு சமீபமாய் வந்த படமொன்றைப் பார்த்தேன் ப்ச் பழம்ரொம்பவே பழுத்து விட்டது ரசிக்க முடியவில்லை.

7. Shannon tweed

எல்லோரையும் போல Doctor கனவுடன்தான் நானும் Advanced level ஐ ஆரம்பித்தேன். ஆனால் இன்று வெறும் ஆசிரியனாக ஆகிப் போனதில் பெரும்பங்கு இவருக்கு உண்டு. அவர் Shannon tweed. கண்டி,மாத்தளை அல்லது மலையகப் பகுதிகளை சேர்ந்தவர்கள் கட்டாயம் பேராதேனிய துசித்த படமாளிகையை பற்றியும் அங்கு போடப்படும் படங்களைப் பற்றியும் அறிந்திருப்பார்கள். கண்டியில் எனக்கு சனிக்கிழமை Biology மற்றும் Chemistry வகுப்புகளும் ஞாயிறன்று physics உம நடக்கும். பஸ்,சாப்பாட்டு செலவு போக மிச்சப்படுத்தும் காசை ஒரு மூன்று மாதம் சேர்த்தால் ஒரு படம் பார்ப்பதற்கான காசு ரெடி. அவ்வாறான நாட்களில் physics வகுப்பு முடிய Theater போய் பார்த்த படங்களில் பல இவர் நடித்தவை. Night Eyes,Women Scorned, Indecent Behavior இன்னும் பெயர் ஞாபகத்துக்கு வராத பல. சமீபமாய் கூட அப்படி அப்படி காட்சிகளற்ற அவர் Hulk Hogan உடன் நடித்தப் படம் ஒன்றை TV யில் பார்த்தேன். அவரது படம் பார்க்கும் பரவச அனுபவம் ம்ம் பார்த்தால்தான் தெரியும். Shannon tweed மட்டும் என் வாழ்வில் குறுக்கிடாமல் இருந்தால் நிச்சயம் Doctor ஆகி இருப்பேனோ என்னவோ.

6. Bipasha basu

இவரை நான் முதலில் பார்த்தது Ajnabee என்ற படத்தில். அதில் வில்லியாக வில்லன் அக்ஷய்குமாரின் மனைவியாக நடித்திருப்பார். அப்போது அவரை ரசிக்கத் தொடங்கியது அது அப்படியே Jism, Madoshi எனத் தொடர்ந்து No entry இல் அணில்கபூருடன் வரும் ஒரு பாடல் வரை தொடர்ந்தது. அசரடிக்கும் உயரம், அளவான உடலமைப்போடு கண்கொட்டாது பார்க்கச் செய்யும் கருப்பழகி அவர். Christiano Ronaldo வே கவிழ்ந்த பின் நாமெல்லாம் எம்மாத்திரம் ம்ம் John abraham க்குத்தான் கொடுத்து வைத்திருக்கிறது.

சரி ஒரு ஐந்தை இங்கே போட்டிருக்கின்றேன். நாளையோ நாளை மறுதினமோ முதல் ஐவரையும் போடுகிறேன். Ok

திங்கள், 23 நவம்பர், 2009

மகேலவின் இரட்டைச்சதமும் சுவிஸ் சந்திப்பும்

முதன் முதலில் இந்தியாவில் சரித்திர வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்புகளை எல்லாம் ஏமாற்றி விட்டு Draw இல் முடிந்திருக்கிறது இந்தியாவிற்கெதிரான முதல் டெஸ்ட். பார்ப்போம் நாளைய கான்பூர் போட்டியில் என்ன செய்கிறார்கள் என்று

முரளியின் திறமை மங்கி விட்டதாக கருத்துரைத்தார் சிவராமகிருஷ்ணன். முரளி சாதித்திருப்பவையோடு ஒப்பிட்டால் இவரெல்லாம் ஒரு சுழற் பந்துவீச்சாளராக என்ன செய்திருக்கிறாரோ தெரியவில்லை.

2003 உலகக் கிண்ணத்தோடு அரவிந்த ஒய்வு பெற்றப் போது இனி கிரிக்கெட் பார்ப்பேனா என்றே சந்தேகமாய் இருந்தது. அப்போதெல்லாம் இலங்கையில் உலகத்தரத்தில் மதிக்கக்கூடிய ஒரே துடுப்பாட்டவீரர் அரவிந்த மாத்திரமே என்ற எண்ணம் சற்று அழுத்தமாகவே இருந்தது. ஆனால் அதே two Down position இல் அரவிந்தவை மிஞ்சி சாதனைகள் செய்கிறார் மஹேல. (பதிவுகள் என்ன சொன்னாலும் அரவிந்தவை மிஞ்சியவராக என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பது வேறு விடயம்.)
97 இல் சனத் முச்சதம் பெற்ற போட்டியிலே அறிமுகமான மஹேல அதிலேயே ரொம்பவும் risk எடுத்து பந்தை விக்கெட் வரை வரவிட்டு மிகத் தாமதித்து இலாவகமாய் அடித்த late cut களை பார்த்த போதே மிகுந்த தன்னம்பிக்கையானவராக தோன்றினார். அன்றிலுருந்து இன்று வரை அவர் வந்திருக்கும் பாதை நிச்சயம் மலைப்புக்குரியது. என்றாலும் மேற்கத்தேய ஊடகங்கள் இவரை விட சங்காவையே தூக்கிப் பிடிக்கும் மர்மம்தான் பிடிபடவில்லை. மஹேல இன்னும் கொஞ்சம் Fluent ஆக சங்கா போல English பேசிவிட்டால் சரி என நினைக்கிறேன்.
எல்லாமும் முடிந்த பின் எதைப் பற்றியோ பேச இலங்கையின் முக்கிய தமிழ் பேசும் அரசியற் கட்சி பிரதிநிதிகள் எல்லாம் சுவிஸின் ரைன் நதிக்கரையில் அமைந்திருக்கும் ஓரிடத்தில் கூடியுள்ளனர்.சிங்கள் பேரினவாதத்திற்கெதிரான வலுவான எதிர்த்தரப்பினை விமர்சித்தோ ஆதரித்தோ அதன் வாயிலாக பதவிகளைப் பெற்றோர் இன்றைய நிலையில் தமது பாராளுமன்ற கதிரைகளை எப்படித் தக்க வைப்பது என உரையாடுவார்கள் என்பதுதான் கசப்பானாலும் உண்மை. எப்படியோ பராசக்தி சிவாஜி சொல்வது போல அவர்கள் சுயநலத்தில் ஏதேனும் பொதுநலமும் கலந்திருந்தால் சந்தோஷம்.

ஒரு வழியாக இன்று ஐக்கிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுடனான கூட்டத்தில் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடாத்தி முடிக்க தீர்மானித்துள்ளதாய் ஜனாதிபதி கூறியிருக்கிறார். ஆக பொதுத்தேர்தலா ஜனாதிபதித் தேர்தலா என்ற குழப்பத்தில் இருந்த எதிர்க்கட்சிகளுக்கு குழப்பம் தீர்ந்திருக்கும். இனி என்ன தேர்தல் முடியும் வரை பரஸ்பர தூற்றல்களை ஒரு மசாலா படம் பார்க்கும் மகிழ்வுடன் பார்த்து மகிழ வேண்டியதுதான்.

வியாழன், 19 நவம்பர், 2009

காதலை அழகாய் சொல்வதெப்படி

வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு மிக இலகுவான வேலை காதல் செய்வதுதான் ஆனால் அதை தான் விரும்பும் எதிர்பாலாரிடம் சொல்வதென்பதுதான் கல்லில் நாருரிப்பதை விட கஷ்டமான வேலை.
என்னை கேட்டால் ஒரு பெண்ணிடம் Propose செய்ய தனியான பயிற்சிகளோ முயற்சிகளோ அனாவசியம். அங்கே உங்கள் மேல் கொஞ்சமேனும் Interest இருப்பின் நீங்கள் உளறிக் கொட்டினாலும் ஏற்றுக்கொள்ளப்படுவீர்கள் இல்லையென்றால் நீங்கள் தலை கீழாய் நின்றாலும் அவ்வளவுதான்.
அப்படியா அவர்களுக்கும் நம்மைப் பிடிக்க எப்படி இருக்கவேண்டும் எனக் கேட்காதீர்கள். அதற்கு என்னிடம் பதிலில்லை. தெரிந்தால் இப்படி இராப்பகலாக முழித்து பதிவு போட்டு உங்களை இம்சிக்காமற் குழந்தை குட்டி என settle ஆகி இருப்பேன்.

எனக்குக் கூட ஒரு எண்ணம் இருந்தது பெண்களின் மனதில் நுழைய கவிதை ஒரு நல்ல ஊடகமென. என் பதின்ம வயதுகளில் பாடசாலையிலும் ஆசிரியப் பயிற்சி பெறும் காலத்தில் கல்வியியற் கல்லூரியிலும் நண்பர்களுக்கு T.R பாணியில் எதுகை மோனைகளோடு நான் எழுதித் தரும் அடுத்தடுத்த வரிகளில் வரும் வசனங்களுக்கு எல்லாம் துண்டுகள்( பிகர் என்ற வார்த்தைக்கு இலங்கையில் புழங்கும் கலைச்சொல் என அறிக) மடங்கியதால் ஏற்பட்ட ஒரு miss concept. பின்னொரு நாளில் எனக்காக நான் எழுதிய வரிகள் நிராகரிக்கப் பட்ட போதுதான் புரிந்தது Success Formula கவிதையில் இல்லை கவிதை தரும் நபரில் இருக்கின்றதென.

நான் முதலிலேயே சொன்னது போல காதலை ஓரளவேனும் ருதுப் படுத்திக் கொண்டு சொல்வது நலம். தேவையற்ற வலிகளைக் குறைக்கும். ரொம்பவும் நீட்டி முழக்காமல் ஓரிரு வார்த்தைகளில் சொல்லி விடுங்கள். மணிக்கணக்காக இழுத்து உங்கள் சுயசரிதை,காதலிப்பதற்கான தன்னிலை விளக்கம், உங்களை காதலிப்பதால் கிடைக்கப் போகும் Benefits என்று ஒரு விற்பனை பிரதிநிதி ரேஞ்சில் அலட்டினால் ஒரு Salesman ஐ என்ன செய்வோமோ அதே கதிதான் உங்களுக்கும். Airtel விளம்பரத்தில் Sharuk சொல்கிறாரே வெறும் 5 அல்லது 10 சத செலவிலேயே கேட்டு விடுங்கள் என்று அதுதான் சரி. பர்சுக்கும் மனசுக்கும்.

இதுவரை சினிமாக்களில் வந்த காதலை வெளிப்படுத்தும் காட்சிகளை யோசித்துப் பார்த்தேன்.
பார்த்த அடுத்த சில நொடிகளிலே Train இல் கிட்டார் வாசித்து பாட்டு பாடி காதல் சொல்வது, காதலிக்க வில்லையென்றால் தலையில் கல்லைப் போட்டுக் கொல்லுவதாக சொல்லி காதல் வரப்பண்ணுவது எல்லாம் பார்க்க அழகாயிருந்தாலும் சுத்த சினிமாத்தனம். அடுத்து காதல் எல்லாம் இப்படி வருவதில்லை " அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு" என்ற கணத்தில் பிரபுதேவாவுக்கும் கஜோலுக்கும் பற்றிக் கொள்ளுமே அப்படி வரவேண்டியது.



அட நல்லாயிருக்கே என எனக்கு தோன்றிய சிலக்காட்சிகள்

கஜினியில் சல சலவென பேசிக்கொண்டிருக்கும் அசினிடம் ரொம்ப Manly ஆக எவ்விதப் பதட்டமுமின்றி சூர்யா பஸ்ஸில் வைத்து I love you சொல்லலும் காட்சி.

மௌன ராகத்தில் கார்த்திக் ரேவதியிடம் மைக்கில் சொல்லும் காட்சி

ஒரு கௌரவமான தொழில் செய்யும் பெண் தன காதலை எப்படி வெளிப்படுத்தலாம் காக்க காக்கவில் ஜோ சூர்யாவிடம் காதல் சொல்லும் காட்சி நல்ல உதாரணம்

சலங்கை ஒலியில் கமல் ஜெயப்ப்ரதாவிடம் ஏகப்பட்ட பீடிகைகளோடு சொல்வாரே அந்த காதலுக்கு அது அழகு

வேட்டையாடு விளையாடுவில் பலத்த யோசனைக்குப் பின் சடாரென தவிர்க்கவியலாத ஒரு கணத்தில் ஏலவே திருமணமாகி விவாகரத்தாகி இருக்கும் ஜோவிடம் மனைவியை இழந்த கமல் காதலை சொல்லும் காட்சி.

7G Rainbow colony இல் அந்த இடைவேளைக்கு முந்திய காட்சி

(ன்னா மேல சொன்ன மாதிரி எல்லாம் Try பண்ண முதல் நாம கார்த்திக்,சூர்யா,கமல் ரேஞ்சில் இருக்குறோமான்னும் Think பண்ணுங்கன்னா இதெல்லாம் கேட்டு விட்டு போன நண்பனொருவன் மூடுபனியில் பிரதாப் போத்தன் ஷோபாவிடம் கேட்பாரே அது போல கேட்ட அவலமும் உண்டு.)

சில மாதங்களுக்கு முன் ஒரு ஹிந்தி படம் பார்த்தேன் Vinay pathak ( Rab Ne Bana Di Jodi இல் ஷாருக்கின் நண்பராய் வருவாரே) நடித்தது. சசியின் சொல்லாமலே போல சிரிக்க சிரிக்க ஒரு Sentimental Movie. Davidaniya படத்தின் பெயர் ரஷ்ய மொழியில் போய் வருகிறேன் என அர்த்தமாம். தன ஒரே தாயுடன் இலக்கில்லாது வாழ்ந்து நடுத்தர வயதை எட்டியவனுக்கு திடிரென தனக்கு Stomach cancer இருப்பது தெரிகிறது. இனியாவது தனக்காக வாழ முடிவெடுக்கும் அவன் இறப்பதற்குள் முடிக்க வேண்டிய பத்து விடயங்களை List போட்டு முடிக்கிறான். அதிலொன்று தனது பழைய தோழியை சந்தித்து சொல்ல முடியாமற் போன தன காதலை சொல்வது. ஏலவே திருமணம் ஆகி குழந்தையோடு இருப்பவளிடம் அவர் காதலை சொல்லும் காட்சி. நான் சொல்வதை விட இந்த படத்தை பார்த்திராதவர்கள் சிரமம் பாராது இந்த தொடுப்பில் போய் பாருங்களேன்.

புதன், 18 நவம்பர், 2009

பேராண்மை என் பார்வையில்

இயக்குனர் S.P. ஜனநாதன் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர். உலகின் மிகச் சிறந்த காதல் கதை என அறியப்படும் Fyodor Dostoyevsky இன் White nights ஐ தழுவி இவர் இயக்கிய இயற்கை அந்த வருடத்திற்கான சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதைப்பெற்றது.

அடுத்து ஈ திரைப்படத்தில் அதுவரை எவரும் தொட்டிராத மூன்றாம் உலக நாடுகளை தமது உயிரியல் ஆயுதங்களை பரீட்சிக்கும் களமாக பயன்படுத்தும் வல்லரசுகளின் சதியையும் அதற்கு துணைபோகும் உள்நாட்டு பூர்ஷ்வாக்களைப பற்றியும் படமாக்கி இருந்தார். அதோடு இணைந்ததாக சேரி மக்களின் வாழ்க்கையும் கூடவே தீவிரவாதிகளாகவே அறியப்படும் நக்சல்களின் போராட்ட குணத்தையும் கூட காட்டி இருந்தார்.

தற்போது வெளியாகி நேரும் மறையுமான இருவகை விமர்சனங்களையும் எதிர்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் ஜனாவின் புதிய படைப்புத்தான் பேராண்மை. வழமையாகவே தமிழ் சினிமாவில் காணப்படும் தர்க்கானுபூர்வமாய் ஏற்கவியலாத பல குறைபாடுகள் இந்த படத்திலும் உண்டு. எனினும் படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதி வரை ஒரு Encyclopedia போல சொல்லும் விடயங்கள் ஏராளம். முதற்பாதியில் சற்றே பிரச்சார தொனி எட்டிப் பார்த்தாலும் பிற்பாதி விறு விறுப்பாய் நகர்வது என்னவோ உண்மை.

மலைவாழ் பழங்குடி இனத்தை சேர்ந்த துருவன் காட்டிலாகா அதிகாரியாய் பணிபுரிகிறான். அங்கே N.C.C பயிற்சிக்கு வரும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பேற்கும் துருவன் அதில் குறிப்பிடட்ட 5 பெண்களாலும் தனது உயரதிகாரி கணபதி ராமாலும் தனது சாதி குறித்தான இழிவசைகளை அவ்வப்போது எதிர்கொள்கிறான். சரியாக கீழ்ப்படிந்து தமது பயிற்சியை நிறைவு செய்யாமையை காரணம் காட்டி அந்த 5 இளம்பெண்களையும் மேலதிகப் பயிற்சிக்கு காட்டுக்குள் அழைத்துச் செல்லும் துருவன் அங்கே அந்நியச் சக்திகளால் நாட்டுக்கு ஏற்படவிருக்கும் அனர்த்தத்தை அறிந்து அதைஅந்த பெண்களின் உதவியோடு தவிர்ப்பதே கதை.

சாதி அடிப்படையிலான புறக்கணிப்புகளை ஏதோ கிராமத்து பெருசுகள் செய்வதாகவே இதுவரை படங்களில் காட்டப்பட்டுள்ளது. இங்கோ எனது students நானே பரிமாறுகிறேன் என ஜெயம் ரவி தரும் வடையை ஒரு பெண் தூக்கிப் போடுவதும், துப்பாக்கிப் பிடிக்க கற்றுத் தருகையில் அசூயையுடன் விலகுவதுமான காட்சிகளில் இளம் பெண்களிலும் வேரூன்றியுள்ள சாதிய வேறுபாடுகளின் தாக்கம் புரிகிறது. ஒருவரோடு பழக முன் அவர்களின் சாதியை பிறிதொருவர் மூலம் விசாரிப்பதும் இன்னுமொருவரின் சாதியை அபிநயங்களின் மூலம் குறிப்பாய் சொல்லி நக்கல் செய்வதுமான பழக்கம் கொண்ட இளம்பெண்களை நானும் சந்தித்திருக்கிறேன்.

படத்தில் வரும் பெண்கள் உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அதைக் காட்டுவதற்கோ என்னவோ அவர்கள் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாகவும் சகஜமாய் தமக்குள்ள A ரக பகிடிகளை பகிர்ந்து கொள்பவர்களாகவும் உள்ளனர். மாடு கன்று ஈன்றதும் சுற்றியிருந்து Happy Birthday to you பாடுவதை இளமைக்கே உரிய குறும்பு என ரசிக்க முடிந்தாலும் அதன் பின் சக தோழியின் உள்ளாடையை உருவுவது, மெதுவடை நல்லா இருக்குமாம் என சொல்லி சிரிப்பது, sir gear போடுங்க நீ போட்டுறாத என்பது, பாம்பு பார்க்கவில்லை என ஏங்குவது இதையெல்லாம் எதில் சேர்ப்பது எனத் தெரியவில்லை. ஒரே வார்த்தையில் சொல்வதாயிருந்தால் திருஷ்டி. அப்படிப் பட்ட பெண்களிடம் போய் ரவி உபரி மதிப்பு பற்றி பாடம் எடுக்கிறார். பொருளாதார அரசியல் கற்பதன் அவசியம் குறித்து சொல்கிறார்.

பல தகவல்களை படம் போகிற போக்கில் சொல்லிப் போகிறது. விவசாய நிலத்தை சேதப்படுத்த அந்நியர்களால் பரப்பப்பட்ட சீமைக்கருவேலமரங்கள், சிறுத்தையின் காலடித்தடம், யானையின் சாணம் ஆகியவற்றைக் கொண்டு தகவலறியும் Discovery, National Geographic channel வகையறா Wild life தகவல்கள் என.

உழைக்கும் வர்க்க சர்வாதிகாரம் வந்தே தீரும் என்கிறார் ஒருவர். இது ஜனாவின் ஆதங்கம் எனப் புரிகிறது ஆனால் க்யூபாவே கொஞ்சம் தாராளம் காட்ட முற்பட்டிருக்கும் வேளையில் இது கொஞ்சம் அதிகப்படியான ஆசைதான்.
போராடப் போகையில் தமிழரின் போராட்டத்தை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது என்கிறார் ரவி. படம் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்ததால் வந்து விட்டது என நினைக்கிறேன்.

படத்தில் நான் சார்ந்த்த மலையகத் தமிழரின் வாழ்வியலையும் இழிநிலையையும் ஒரு சில காட்சிகள் எனக்கு ஞாபகமூட்டின. சிறுவனுக்கு இரவில் பாடமெடுக்கும் போது பச்சை தேயிலை விலைக் குறித்துக் கேட்பதும், தமது நிலத்தில் விளைந்தவற்றை மற்றவர்களுக்கு கொடுத்து சந்தோஷப்படுவதும், பொன்வண்ணன் அவர்களின் பாடப்புத்தகங்களை பார்த்து இதெல்லாம் படிக்கிறானுங்க எனப் பொருமுவதும் அவ்வாறனவற்றில் சில.
அதே படத்தின் பாடல் வரிதான் ஞாபகம் வருகிறது

" தேயிலையும் மரமாகும் அதை வளர்ப்பதில்லை
சிகரத்தில் இருந்தாலும் நாம வளர்வதில்ல"

படத்தில் ஆயுதங்களை அனாயாசமாக பெண்கள் மற்றும் ஜெயம்ரவி கையாளுவது தொடர்பில் ஏற்க சங்கடங்கள் இருந்தாலும் படத்தின் வர்த்தக நோக்கம் கருதியதான அவ்வாறன காட்சிகளை ஜனநாதன் படத்தில் சொல்லிய மற்றைய கருத்துக்களுக்காக மன்னிக்கலாம் என நினைக்கிறேன். ஒன்றுமே செய்யாமல் இருப்பதை விட சினிமா முதலாளிகளை சமாளித்து அவர்கள் தேவையை பூர்த்தி செய்தவாறே தான் சொல்ல வந்த கருத்துக்களில் ஓரளவேனும் சொல்லியது சாதனையல்லவா. தணிக்கை குழு வெட்டியிராத வசனங்கள் இருந்திருப்பின் படம் இன்னும் வீரியமானதாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

படத்தில் தேவையே இல்லாத விடயங்கள் ஏன் என்று விளங்கவேயில்லை.

வடிவேலுவின் நகைச்சுவைப் பகுதி

பெண்கள் திடீரென உணர்ச்சி பெற்று கண்ணனுக்கு மையெல்லாம் இட்டு காளி,துர்க்கை என அகோரமாய் வில்லன்களோடு சண்டையிடுவது.

இறந்த பெண்ணை அடக்கம் செய்யும் போது கந்த சஷ்டி கவசம் ஒலிப்பது.

இருந்தாலும் கொஞ்சம் நிறையவே குறை இருந்தாலும் நிறைவானப் படம்.

திங்கள், 16 நவம்பர், 2009

பா இளையராஜா இசையும் இத்தாலியில் மாலினிக்கு விருதும்

"பா" ஹிந்தி திரைப்படத்தின் பாடல்கள் வெளிவந்துருக்கின்றன. இந்த மனுஷனுக்கு ஏன் இன்னும் ஹிந்தி திரையுலகில் சரியான break அமையவில்லை என அமிதாப் இளையராஜாவை சிலாகித்ததாய் அறிந்தேன். இளையராஜாவின் பின்னணி இசையின்றி படம் பார்த்த போது ஜீவனின்றி இருந்ததாம். அமிதாப்புக்கு இப்போதுதான் தெரிந்திருக்கிறது 1980 களில் இருந்தே தமிழர்கள் அறிந்து வைத்திருப்பது. ஏற்கனவே இதே பால்கியின் இயக்கத்தில் அமிதாப் நடித்து வெளிவந்த சீனிகம் படத்தில் குழலூதும் கண்ணனுக்கு, மன்றம் வந்த தென்றலுக்கு பாடல்களின் மெட்டை பயன்படுத்திய ராஜா இதிலே எனக்கும் ரொம்பவும் பிடித்த "சங்கத்தில் பாடாத கவிதை " பாடலின் மெட்டை பயன்படுத்தியிருக்கிறார். நான் கேப்டனின் காட்சிகளை பார்க்க பயந்து கேட்க மாத்திரமே செய்த பாடல்.
ஹிச்சய்கி ஹிச்சய்கி, ஹல்கே சோ போலே பாடல்களை கேட்ட போதும் எங்கேயோ கேட்ட உணர்வு.
அமிதாப் நன்றாக நடிப்பார் இங்கே அவரது குரலும் நடிக்கிறது மேரே பா பாடலில்.

கிட்டத்தட்ட பிரட் பிட்டின் The curious case of benjamin button ஐ படம் ஒத்திருக்கும் என நினைக்கிறேன். ஆனால் அது போல வாழ்க்கை பின்னோக்கி நகரும் ஒருவனின் கதையாக அல்லாமல் முதிர்ந்த தோற்றம் கொண்ட சிறுவன் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை மையமாக கொண்டதாக.

நாம் ரசித்து என்ன செய்ய இங்கே ஒருவர் அமிதாப்பச்சனின் நடிப்பையே தரம் தாழ்த்திய இசையை இளையராஜா வழங்கியதாக விமர்சனம் எழுதி நமக்குத்தான் ரசனை போதவில்லையோ என்ற உணர்வை ஏற்படுத்தி விடுவார். என்ன செய்ய அவரே சொல்வது போல போதை தரும் அந்த எழுத்துக்களுக்கு சொந்தக்காரரை வாசிக்காமலும் இருக்கமுடியவில்லை.

பாட்டு இங்கே போய் கேட்கலாம்

மாலினி சிவாஜியோடு
நம்மூர் மாலினி பொன்சேகாவுக்கு, இத்தாலியின் (நமக்கு இத்தாலி என்றவுடன் ஞாபகம் வருவது முசோலினியும் இன்னொரு பாசிஸ்ட் பெண்மணியும்தான்) Levante international film festival இல் அவர் நடித்த ஆகாச குசும் (ஆகாய பூக்கள்) படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றிருக்கின்றார். ஜோ அபேவிக்கிரம, நீட்டா பெர்னாண்டோ வரிசையில் இவரும் சேர்கிறார். சிங்கள சினிமாவின் ராணி என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் இவர் சிவாஜி ஜோடியாக பைலட் பிரேம்நாத் படத்தில் நடித்திருக்கிறார்.

இது சிவாஜியோடு நடித்த போதல்ல தற்போதைய படம்

சிங்கள் சினிமாவின் மீது எனக்கு எப்போதும் ஒரு வியப்புண்டு லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் ஆரம்பித்து வைத்த விருதுக்கான படங்களை எடுக்கும் மரபு இன்னமும் தொடர்வது ஆச்சரியமானது. அதிலும் மேற்கண்ட படத்தை எடுத்த பிரசன்னா விதானகே இலங்கையின் மணிரத்னம் என அறியப்படுபவர் ( என்னைக் கேட்டால் அவரை விட மேல்) . இலங்கை போன்ற ஒரு நாட்டில் இருந்துகொண்டே இராணுவத்தையும் அரசையும் விமர்சித்த இவரது புரசந்த களுவர (பௌர்ணமி இரவு) ஒரு முக்கிய படைப்பு. பின்னணி இசை கூட இல்லாமலே பார்வையாளனை காட்சிகளுக்குள் உள்ளீர்த்துக் கொள்ளக்கூடிய காட்சியமைப்புகள் இப்படத்தின் சிறப்பம்சம்.

அசோகா ஹந்தகம, விமுக்தி ஜெயசுந்தர போன்றோரின் படைப்புகள் கூட முக்கியத்துவம் மிக்கதே.
ஏனோ தமிழக சினிமா விமர்சகர்கள் சிங்கள படங்களை அவ்வளவாக கண்டுகொள்வதில்லை. அவர்கள் அதிகம் பார்ப்பதும் எழுதுவதும் ஈரானிய மற்றும் கொரியப் படங்களைப் பற்றித்தான். அதுவும் விமுக்தியின் சுலங்க எனு பினிஸ்ஸ (காற்று வருவதற்காக) போன்ற ஒரு படம் தமிழில் வருவதற்கும் அதை நம் கலாச்சாரக் காவலர்கள் ஜீரணிப்பதற்கும் இன்னும் பல வருடங்கள் தேவைப்படும். சாருவுக்கு படம் பிடிக்கலாம் பார்த்தாரெனில்.

மேலே நான் சொன்ன இயக்குனர்கள் எல்லாம் கோடிகளில் சம்பளம் வாங்குபவர்கள் அல்ல. தமிழருக்காக மேடைகளில் வாய் கிழிய பேசும் படைப்பாளிகள் தமது படைப்புகளில் மேலே கூறியவர்கள் செய்ததில் சிறிதளவாவது செய்திருக்கிரார்களா ?

சனி, 14 நவம்பர், 2009

டார்வினிஸம் பொய்யா


இன்று இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது யாத்திரிகனின் இந்த பதிவை காண நேர்ந்தது. பதிவின் நோக்கம் எனக்கு தெளிவாகவில்லையெனினும் அது இயற்கை தேர்வுக் கொள்கையை நிராகரித்து சிறப்பு படைப்புக் கொள்கையே சரி எனும் பாங்கில் அமைந்திருந்தது. மு. மயூரன் அவரின் நோக்கை சரியாய் அறிந்து தர வேண்டிய விதத்தில் சிறப்பான பின்னூட்டங்களை வழங்கி இருந்தார்.
ஏதோ எனது சிற்றறிவுக்கு எட்டிய வகையில் டார்வினிஸம் பற்றி யாத்திரிகனின் சந்தேகங்களுடன் தொடர்பு படுத்திக் கதைக்கலாம் என நினைக்கிறேன்.

முதலாவது டார்வின் தனது கொள்கையை மிகப் பலவீனமான அடித்தளத்திலே கட்டியமைத்தார் என்று கூறுகிறார். அது ஓரளவு உண்மைதான் Theory of natural selection ஐ விளக்குகையில் அங்கிகள் மிகையாய் உற்பத்தி ஆகின்றன என்றும் அவ்வாறு மிகையாய் உற்பத்தியான அங்கிகளிடையே மாறல்கள் உண்டென்பதும் மாத்திரமே அவர் அவதானங்களின் வாயிலாக கண்டறிந்த உண்மைகள். மிச்சமெல்லாம் அந்த அவதானங்களின் அடிப்படையில் அவர் கட்டியெழுப்பிய அனுமானங்கள். இத்தனை ஏன் அந்த மாறல்கள் எப்படி ஏற்பட்டன எப்படி அடுத்த சந்ததிகளுக்கு கடத்தப்படுகின்றன என்பதை கூட அவரால் விளக்க முடியவில்லை.ஆனாலும் இரண்டு நூற்றாண்டுகள் கடந்த பின்னும் இன்னும் வலுவிழக்காது இருப்பதும் அவரால் விளக்கமளிக்கப்படாமற் போனவை இன்று ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டுமிருப்பது அவரின் மேதமையைதான் விளக்குகின்றதே அன்றி வேறில்லை.

முதல் உயிரின் தோற்றம் பற்றி உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை Harun yahya வாயிலாக கேட்டிருக்கீர்கள். முதல் உயிரி கடவுளால் படைக்கப்பட்டு பின் கூர்ப்பு நடைப்பெற்றது என டார்வின் சொல்லியிருந்தால் கேள்வியின்றி கூர்ப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பீர்கள். Origin of species இன் ஏதோ ஒரு பதிப்பில் டார்வினும் படைப்போன் என்ற ஒரு வார்த்தையை பாவித்தார் வேறெதற்கு மதவாதிகளை சமாளிக்கத்தான். பின் அதை நினைத்து புலம்பியது தனிக்கதை. சரி உங்கள் பிரச்சினைக்கு வருவோம்
முதல் உயிரியின் தோற்றம் பற்றிய Oparin இன் உயிர் இரசாயனக் கூர்ப்புக் கொள்கையை stanley miller உம் Urey உம் ஆய்வு கூடத்தில் செய்த பரிசோதனையின் மூலம்( NH3, CH4, H2O, H2 வாயுக்களை கொண்ட வாயு அறையில் உயர் மின்னழுத்தம் மூலம் சக்தியை வழங்கி Amino acids,ribose வெல்லங்கள், Adenin போன்றவற்றை தொகுத்தது) 1950 களிலேயே உலகுக்கு காட்டி விட்டனர். இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று Orgel வெகு அண்மையில் 6 அங்குல Nucleotide ஐயே தொகுத்து காட்டி விட்டார். so உங்கள் முதல் வாதம் அடிப்பட்டு போகிறது.



அடுத்தது பரம்பரை இயல்புகள் கடத்தப்படுவது பற்றி. நண்பரே டார்வினால் இயல்புகள் கடத்தப்படுவது பற்றி விளக்கமளிக்க முடியவில்லை என்பது உண்மையே. எனினும் பலர் அது தொடர்பில் ஆய்வுகளை செய்த வண்ணமே இருந்தனர். August Weismann 34 சந்ததிகளுக்கு எலிகளின் வாலை வெட்டி செய்தபரிசோதனை பற்றி அறிந்திருப்பீர்கள்.
ஆக சந்ததிகளுக்கு இயல்புகள் கடத்தப்படுவது மரபணுக்களின் மூலமே மரபணுக்களில் ஏற்படும் மாறல்கள் மட்டுமே கடத்தப்படும் புறத்தோற்ற மாறல்கள் கடத்தப்படாது என சான்றுகளோடு கூறிய மெண்டல் டார்வின் கொள்கைக்கு வலு சேர்த்துள்ளாரா இல்லை அதை தகர்த்துள்ளாரா. அடுத்து மிகையாய் உற்பத்தியான அங்கிகளுக்கிடையே மாறல்கள் எவ்வாறு உருவாகின்றன என அவர் அறிந்திராத போதும் பின் வந்தவர்களால் விகாரம்(Mutation) பற்றிய கருத்துக்கள் கூறப்பட்டது.

அடுத்து Survival of the fittest ஐ வைத்துக் கொண்டு சமூகத்தில் மேலாதிக்கம் செலுத்த முற்படும் அதிகார வர்க்கத்தின் சதிதான் டார்வினை தூக்கிப் பிடிப்பது என்று சொன்ன போதுதான் உங்கள் சமூகப் பிரக்ஞை என்னை மெய்சிலிர்க்க வைத்தது.
இதையே இப்படிப் பார்க்கும் நீங்கள் எஜமானனாக வெள்ளையனும் அடிமையாக கருப்பனும் ஆண்டவானேலேயே படைக்கப்பட்டனர் என்றும் பிரம்மா தன் உடல் பாகங்களில் இருந்து சதுர் வர்ணங்களையும் படைத்தான் தலையில் உதித்தவனுக்கு மற்றவனெல்லாம் சேவகம் செய்ய வேண்டுமெனவும் சொல்லி சொல்லியே வயிறு வளர்க்கும் வீணர் கூட்டத்தை அல்லவா ஒரு பிடி பிடித்திருக்க வேண்டும்.

அப்புறம் கடைசியாக ஒரு விடயம் Science இல மாற்றம் என்பதே மாறாத விடயம். 1000 வருடங்களுக்கு முந்திய Holy Bible ஐயோ குரானையோ வேதங்களையோ தூக்கிப் பிடிக்க இது ஒன்றும் மனிதனை அடிமைப் படுத்த வந்த அஞ்ஞானம் அல்ல. எப்படி நியுட்டனின் இயக்க விதிகளால் சகல இயக்கங்களையும் விளக்க முடியாத போது ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு அவசியப்பட்டதோ அது போல தொடரும் கண்டுப்பிடிப்புகள் விஞ்ஞானத்தை வலுப்படுத்துமே அன்றி அதை நீர்த்துப் போகச் செய்யாது.

வெள்ளி, 13 நவம்பர், 2009

காதல் தோல்வியை கடப்பது எப்படி


Teen age இல் சகஜம்தான் காதல் தோல்விகளும் அதன் பின் அடுத்த காதல் வரை தாடி,கவிதை,இத்யாதி இத்யாதிகளும் ஆனால் ஏழு கழுதை வயசாகி பொறுப்பான தொழிலில் இருப்போரும் இம்மாதிரியான அபத்தங்களில் விழுவதைத்தான் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

இப்படித்தான் என் நண்பனும் பெரியார் வழியில் சுயமரியாதைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டவன். திடீரென

" ஏன் மச்சான் சாமி கும்பிடுற புள்ளைய Love பண்ணினாலும் பிரச்சினை இல்லை, சின்ன சின்ன முரண்பாடுகள் இருப்பதுதான் காதலுக்கு அழகு, நினைச்சு பாரு நாம அவளுக்காகவே கோயில் போக அங்கே அவள் அடம் பிடித்து நமக்கு விபூதி பூசினால் உனக்காகத்தான் பூசிக்கிறேன் என்று நாம் சொல்லும் போது கடவுள் இருக்கிறாரோ இல்லையோ காதல் இருக்குமில்லையா?

என கதை விடும் போதே சந்தேகப் பட்டேன் பய எங்கயோ மாட்டப் போகிறான் என அப்படியே அதை உறுதிப் படுத்தும் விதமாய் காதல் வந்து விட்டதாய் புலம்ப ஆரம்பித்தான். காதலை சொல்ல முன்னமே வீடு கட்டுவது தொடங்கி குழந்தைகளுக்கு Bed time stories சொல்வதாக எல்லாம் ஏகப்பட்ட கற்பனை. சாப்பாட்டுத் தட்டில் என்னய்யா தெரியப் போகிறது சோத்தை பிசைஞ்சு வைத்து தட்டைப் பார்த்து தனியே சிரிக்கிறான். வேணாம்டா confirm பண்ணிட்டு கனவு காணு என சொன்னப் பின் இதோ கேட்டு விட்டு வந்தவன் கேட்ட நாள் முதல் பேயறைந்தவன் போல

எனக்கும் சங்கடமாய்தான் இருந்தது. பதின்ம பருவக் காதலை விட இதில் ஆபத்து அதிகம் என நினைக்கிறேன். எப்போதும் தன் வேலையில் busy ஆகா இருப்பவன் தன் தனிமைக்கு துணை தேடியே காதலில் விழுகிறான். ஓரளவு மன முதிர்ச்சியும் பொறுப்பும் இருப்பதால் கண்டிப்பாய் நடக்கும் என நம்புகிறான். கனவு காண்கிறான். ஆகவே அந்த நிராகரிப்பு அதிகம் வலியை ஏற்படுத்தி விடுகிறது. காதல் என்ற ஒன்று உண்டோ இல்லையோ நம்மை ஒருவர் நிராகரிக்கின்றார்கள் என்பதும் ஏகாந்தமான கணங்களை தனக்குள் சிரித்து அனுபவிக்கச் செய்த கனவுகளை இனி துறந்து விட வேண்டுமென்பதும் நிச்சயம் வலி மிக்கதாய்தான் இருக்க வேண்டும்.

ஆழ்ந்த அனுதாபங்கள் நண்பனுக்கு அவன் அவலத்தை அழகாய் ஓரிரு வார்த்தைகளில் சொல்ல நினைத்து கீழ் கண்ட கவிதை(!!!!!) எழுதினேன். அலங்கோலமாய் போய்விட்டது. இருந்தாலும் பரவாயில்லை வாசித்துப் பாருங்களேன்.



நினைத்தே பார்க்கவில்லை
சில நொடிகளே நீடித்த
உன் தலையாட்டல்
யுகம் யுகமாய் என்னை
துரத்துமென

முன்பும் தனிமைதான்
எனக்கு துணை
ஆனால் இப்போது மட்டும்
ஏன் இத்தனை வெறுமை
இந்த தீராத் தனிமையில்

திருப்தியுற்றிருப்பாய்
மறுக்கப்பட்டவன் மலர்ந்த
முகத்துடன் பேசுவதால்
அறிவாயா
சிறு புன்னைகையால் நான்
புதைத்து விட்ட
கருகிப் போன என் கனவுகளை

பார்வையாலே காதல் கற்றுத்
தந்தவளே
சொல்லித் தரக் கூடாதா
நிராகரிப்பின் பின்னரான
இரவுகளை தாங்கும் உத்தியை

புதன், 11 நவம்பர், 2009

100 பெரியார் வந்தாலும்


பாடசாலை நூலகத்தில் புத்தக அலுமாரியை புரட்டி கொண்டிருந்தேன். ஆன்மீக புத்தகங்கள் அடுக்கப் பட்டிருந்த பகுதியில் இருந்த ஒரு புத்தகத்தின் அட்டையில் பெரியார். இலேசாக அதிர்ந்தவன் யாரேனும் கவனயீனமாய் மாற்றி வைத்திருக்கக் கூடும் என்ற எண்ணத்தில் புத்தகத்தை எடுத்து புரட்டினேன். அதிலோ அழகாக புத்தக இலக்கம், புத்தகம் அடங்கும் பிரிவு என்பன விரிவாக எழுதப்பட்டிருந்தது.

"Teacher இந்த Book ஏன் இதுல வச்சிருக்கீங்க "

"ஏன் அப்ப எதுல வரும்?"

"ஐயோ Teacher பெரியார் கடவுள் நம்பிக்கையையே தீவிரமா எதிர்த்தவர்"

"அய்யய்யோ தாடி வச்சிருக்கவும் சாமியார்னு நினைச்சிட்டேன்" என்றவாறே தன அசட்டுத் தனத்தை பெரியதோர் நகைச்சுவையாக நினைத்து சிரித்தார். இன்னும் இரண்டு பெண்ணாசிரியர்களும் அவரோடு சிரிப்பில் கலந்து கொண்டனர்.

"இல்ல தர்ஷன் அத திருப்பி மாத்தி எழுதி பதிஞ்சிக்கிட்டு இருக்க ஏலாது, அதுலேயே இருக்கட்டும் யாருக்கு தெரியும்" என்றார்.

ஒரு சிந்தனாவாதியாக தன் சமூகத்தில் புரையோடியிருந்த அபத்தங்களை களைய எண்ணத்தாலும் சொல்லாலும் செயலாலும் இறுதி மூச்சுள்ளவரை உழைத்த ஒரு சமூகப்போராளி. பின்நவீனத்துவவாதிகளின் வார்த்தையில் சொல்வதாய் இருந்தால் சராசரிகளின் பொதுப்புத்தியில் உறைந்து போயிருந்த அபத்தங்களை கட்டுடைத்தவர். அப்படிப்பட்டவரை எத்தனை தூரம் நம் ஆசிரியர்களே அறிந்து வைத்துள்ளனர் என எண்ணியபோது வேதனையாக இருந்தது. மெல்ல பெரியார் தொடர்பில் நானறிந்து அவரது கருத்துக்களை உள்ளத்தில் வரித்துக் கொண்ட காலப்பகுதியை மனதுள் அசைப் போட்டு பார்த்தேன்.

சுயச் சிந்தனையை மழுங்கடிக்கச் செய்வதில் இலங்கையின் கல்வி முறைக்கு பெரும் பங்கு உண்டு. குழந்தைகளில் நல்ல விழுமியங்களை ஆன்மிகக் கல்வியின் வாயிலாக மட்டுமே ஏற்படுத்த முடியும் என்று சொல்லி சிறு வயதிலிருந்தே சிறுவர்களின் மனதில் மதத்துவேசத்தை வளர்ப்பதில் முன்னிற்பவை இவை. அவ்வகையில் என் சிறு பராயத்தில் ஆழ்ந்த மத நம்பிக்கைகளை கொண்ட ஒருவனாக இருந்த போது ஒரு முறை பெரியாரின் நூலொன்றை படித்து விட்டு பெரும் அதிர்ச்சியுற்றேன். ஹிந்து மதம் ஏனைய மதங்களை விட உயர்ந்ததாயும் அதன் புராணங்கள் சொல்லும் கதைகள் உயர்ந்த உள்ளார்த்தங்களை கொண்டதாயுமே எனக்கு கற்பிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் எவ்வித தயவுத் தாட்சன்யமுமின்றி ஹிந்து மத புராணங்களளில் இருந்த ஆபாசங்களை எள்ளி நகையாடிய அவர் கருத்துக்கள் எனக்கு பெரும் அதிர்ச்சியை தந்தன. எனினும் என் பதின்ம வயதுகளில் சற்றே முதிர்ச்சியுடன் சமூகத்தை அணுகிய போது மதத்தின் பெயரால் நிகழும் மூட பழக்க வழக்கங்களும் ஏற்றத் தாழ்வுகளும் மதத்தின் மீதான தீவிர பற்றை இல்லாமற் செய்திருக்க நான் இலகுவாகவே பெரியார் வசமானேன். அன்றிலுருந்து இன்று வரை தொடர்ந்தும் பெரியாரைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். அவரின் கருத்துக்கள் எத்தனை தூரம் இன்றும் சமூகத்திற்கு அவசியப்படுகிறது என்ற வியப்பு எனக்கு அவரை வாசிக்கும் ஒவ்வோர் சந்தர்ப்பத்திலும் ஏற்படுகிறது.

ஒரு ஆசிரியனுக்கு பாடத்தையும் தாண்டி பலதையும் மாணவனுக்கு கொடுக்க வேண்டிய கடமை இருப்பதாய் நம்புபவன் நான். எனினும் என் மாணவர்களுக்கு கடவுள் நம்பிக்கை தொடர்பான தனிப்பட்ட கருத்துக்களை திணிக்க நான் முற்பட்டதில்லை. அப்படியிருந்தும் அன்றொரு நாள் O/L வகுப்புக்கு Darwin's theory படிப்பிக்கும் போது சிறப்பு படைப்புக் கொள்கை தவறு என விளக்க வேண்டியிருந்தது. Theory of Natural selection பற்றி கற்பிக்கையில் கடவுள் என்ற ஒருவரால் உயிரிகள் படைக்கப்பட்டமைக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என்று ஒரு வார்த்தைதான் சொன்னேன். இதற்கே எனக்கு அடிக்கப்போவதாயும் கொல்லப்போவதாயும் பாடசாலைக்கு மொட்டைக்கடதாசி அனுப்பி என்னை அசிங்கமாய் தூற்றி எழுதி ஆன்மிகம் வழி தாம் பெற்ற விழுமியப் பண்புகளை காட்டியிருக்கின்றனர் நம்மவர்கள்.
ம்ம் "இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் "


திங்கள், 9 நவம்பர், 2009

சச்சின் முதல் சரத் பொன்சேகா வரை


Form is temporary, Class is permanent என்று சொல்வார்கள். அதுதான் ஞாபகம் வந்தது அன்று சச்சினின் அதிரடியைப் பார்த்த போது சச்சினின் துடுப்பாட்டம் எப்போதும் பலரால் சிலாகித்து பேசப்படும் ஒன்று என்றாலும் அழுத்தங்களின் போதோ முக்கியமான போட்டிகளிலோ பிரகாசிப்பதில்லை என்பது
அவர் மீது வைக்கப்படும் பொதுவான குற்றச்சாட்டு .எனினும் அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும் விதமான அந்த அதிரடி சதம் அவரால் மட்டுமே சாத்தியம். சச்சினை தாத்தா என்று சொன்ன யுவராஜ் சிங்கிலிருந்து காம்பிர்,டோனி அனைவரும் ஏமாற்றியதுதான் வருத்தமாய் போய் விட்டது. ம்ம் ஆனால் இந்த சதத்தையும் ஏதோ வெறும் இரண்டாம் நிலை பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவே பெற்றார் என்று அலம்பவும் நிறைய பேர்.



கமல்ஹாசனின் 50 வருட கலைச்சேவையை நினைவு கூறும் விதமாக இங்கு இலங்கையிலும் புத்தகம் வெளியிட்டுக் கொண்டாடி இருக்கிறார்கள். ( பதிவர் வந்தியதேவனுக்கு தெரியுமோ தெரியாது) . இவரது 50 வருட கலைப் பணியை முன்னிட்டு "50 ஆண்டுகள் சினிமாக் கலையில் பத்மஸ்ரீ கமல்ஹாசன்'' என்ற சாந்திலால் டேனியல் தொகுத்த நூல் கடந்த 25/10/2009 அன்று சுகததாஸ ஸ்போர்ட்ஸ் ஹோட்டலில் வெளியிட்டு வைக்கப்பட்டதாம். எனக்கு இருந்த ஒரே சந்தேகம் இந்த விடயம் கமலுக்கு தெரியுமா?

வாழத் தகுதியில்லாதவர்களுக்கு மரணம் ஒரு வரம் என்று பாலா ஒரு தீர்வை சொன்னாலும் சொன்னார் இங்கு நம்மூரிலும் நான்தான் கடவுள் என்ற மப்பில் திரியும் பொலிசாரின் அதிகாரம் தூள் பறக்கிறது. பம்பலப்பிட்டிக் கடலில் தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கேள்விப்பட்டிருப்பீர்கள். பொல்லால் அடிவாங்கி கடலில் மூழ்கி உயிரிழக்கும் அளவுக்கு அந்த இளைஞன் செய்த பாவம் என்ன தெரியுமா? காதல் தோல்வியால் மனச்சிதைவுக்குள்ளாகி இருந்தவன் பாதையில் போகும் வாகனங்களுக்கு கல்லெறிந்துள்ளான்.
சம்பவத்தை முழுவதுமாய் ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளரின் தொழில் நேர்த்தியையும் வேடிக்கை பார்த்த மக்களின் மனிதாபிமானத்தையும் எப்படி சொல்வதென்றே தெரியவில்லை



வேலையற்ற பட்டதாரிகள் இணைந்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் பொலிசாரின் தடியடி+கண்ணீர் புகைகுண்டு வீச்சோடு இனிதே நிறைவுற்றது. பாவம் அதன் ஏற்பாட்டாளர் இப்போதே முன்னால் நெற்றியில் முடியெல்லாம் போய் பரிதாபமாக இருந்தார்(நிச்சயம் இளம் வழுக்கை இல்லை). " பைத்தியக்கரனுகளா இருக்கானுங்க இப்பெல்லாம் எத்தனை வாய்ப்புகள் எது தேவையோ அதை கொஞ்சம் காசை வீசி படிச்சிட்டு வேலைகளை பார்க்கப் போகாம" சலித்துக் கொண்ட நண்பனுக்கு தெரியவில்லை இன்னமும் உலகமயமாக்கலின் சாத்தியங்கள் இலங்கையின் கிராமங்களுக்கு எட்டாதது. பிள்ளை பல்கலைகழகம் போவதாலேயே கை நிறைய சம்பாதிக்கப் போகிறான் என்ற எதிர்பார்ப்பிலிருந்த பெற்றோருக்கும், தான் படிக்கும் காலத்தில் தன்னோடு படித்த அரைகுறை மாணவன் IT அல்லது Marketing fieldஇல கை நிறைய சம்பாதிப்பதை பார்க்கும் இளைஞனுக்கும் எப்படி இருக்கும். இங்கே இப்படி நடந்தாலும் நம்ம ஜனாதிபதி ஹுகோ சாவேசுடன் கை குலுக்குகிறார், அகமது நிஜாமுதீனை அணைக்கிறார், வியட்நாம், நேபாளம் என்று பயணிக்கிறார் சீனாவுடன் சேர்ந்து அமெரிக்காவை மிரட்டுகிறார். என்ன அழகான முரண்பாடு.



சிங்கள மக்கள் மத்தியில் காணப்பட்ட மகிந்த அலை குறைந்து வருவதாய் காட்ட பகீரத பிரயத்தனங்களை மேற்கொள்கின்றன எதிர்கட்சிகள். அமேரிக்கா சென்ற சரத் பொன்சேகா விசாரணைக்கு முகம்கொடுக்காமல் திரும்பி வந்தமையால் சிங்களவர் மத்தியில் ஒரு ஹீரோ ஆகி உள்ளார். அவரை சதி வலையில் சிக்க வைக்க அரசே முயன்றது என UNP யும் JVP யும் குற்றஞ்சாட்டும் அதேவேளை அவரை பத்திரமாய் நாடு சேர்த்தது நாமே என வெளியுறவு அமைச்சர் கூறுகிறார். முன்னால் இராணுவத்தளபதி முகங்கொடுக்க மறுத்த விசாரணைக்கு இரு மாதங்களுக்கு முன்னமே பாதுகாப்பு செயலர் முகங்கொடுத்திருப்பதாய் வந்துள்ள தகவல்கள் நிச்சயம் அரசு தரப்புக்கு ஒரு பின்னடைவுதான். இலங்கையின் பிரதான தொலைகாட்சி ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் கூட்டமைப்பின் போதுவேட்பாளர் யார் என்பது தொடர்பில் SMS போட்டியை ஏன் இன்னும் ஏற்பாடு செய்யவில்லை என்பதே என் யோசனை. ( நமக்கென்ன " ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை")
Related Posts with Thumbnails