வியாழன், 31 டிசம்பர், 2009

2009 வலிகளும் சந்தோஷங்களும்


2009 ம் வருடம் கடந்து செல்ல இன்னும் சில மணித்துளிகளே இருக்கும் நிலையில் இந்த வருடத்தின் என் கடைசிப் பதிவு. எப்போதும் போல இந்த 2009 உம் எதிர்ப்பார்ப்போடுதான் ஆரம்பித்தது. தனிப்பட்ட முறையில் என் மகிழ்வுக்கு காரணம் நான் வலைப்பதிவு ஆரம்பித்து எழுத ஆரம்பித்தது. எழுதி குவித்த விட வேண்டுமென ஆசையுடன் ஆரம்பித்து சென்று கொண்டிருந்தாலும் மே மாதமளவில் ஒரு பெருந் தேக்கம். இத்தேக்க நிலைமை எனக்கு மட்டுமல்ல கிட்டத்தட்ட இலங்கையில் இருந்து பதிவிடும் அனைவருக்குமே இருந்தது. இதற்கான காரணம் பரகசியம். பதிவெழுதுவதற்கான மனநிலையை இழந்திருந்தோம். அந்த மே மாதத்திற்கு பிறகு நான் மீண்டும் எழுத வந்ததே ஆகஸ்ட்டில்தான். ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் சில இழப்புகள் தாங்கவொண்ணா மனத்துயரை ஏற்படுத்தி விடுகின்றன.


ஆரம்பத்தில் ஏற்க மறுத்து சாட்டு சொல்லிய மனம் பின் ஏற்றுக்கொண்டாலும் இன்னமும் சில வீராவேச வலைப்பதிவுகளில் சொல்லப்படும் விடயங்கள் உண்மையாகிவிடாதா என்ற நப்பாசையும் மனதின் மூலையில் தொக்கி நிற்கிறது. இது சென்ற வருடத்தின் மனதில் தோன்றிய பெரும் வலி இன்னமும் மாறா வலி. மூன்றரை லட்சம் பேரின் கதி என்ன என இதற்கு காரணமான பங்குதாரர்களைக் கேட்டால் 84 இல் ஆலமரம் கதை சொன்னவர்களின் வாரிசுகள் இதற்கும் அழகான உவமைகள் சொல்லக் கூடும்.


இந்த மாபெரும் இழப்பைத் தவிர்த்து என்னை பாதித்த மற்றைய இரு இழப்புகள். ஒன்று மைக்கேல் ஜக்சனுடையது மற்றையது நாகேஷுடையது.
மைக்கேல் ஜாக்சனின் தனிப்பட்ட வாழ்கையை விட்டு விடுவோம். அவரது சாகா வரம் பெற்ற பாடல்களும் நடனமும்மறக்க இயலாதவை . எல்லோரும் வாழ்க்கையில் கடக்கும் காதல் தோல்வி என்னை கடந்த போது அந்தப் பிரிவை அவரின் "You are not alone" பாடலின் துணைக் கொண்டே தவிர்த்தேன்.


நாகேஷ் அவரது பழைய சில படங்களில் அவரும் சில சேட்டைகள் செய்திருக்கிறார். ஆனால் அதையும் தாண்டி அவர் நடிகர் திலகத்தை எல்லாம் தாண்டிய அற்புத நடிகர் (என் கருத்தில்). கமலிடமே அவரின் பாதிப்பு இருப்பதாய் எனக்கு படும்.


ஆகா என மனதுக்கு உவகை ஊட்டிய செய்திகள் எனப் பார்த்தால் முதன்மையானது இசைப்புயல் கண்டம் கடந்து வீசியது. அந்த ஆஸ்கார் கணங்கள் மறக்க முடியாதவை. எவ்வளவு யோசித்து பார்த்தாலும் சந்தோஷக் கணங்கள் வேறெதுவும் ஞாபகம் வரவே இல்லை.


கிரிக்கெட்டில் என்னை சந்தோஷப் படுத்தியது டில்ஷானின் விஸ்வரூபம், வருத்தம் முரளியின் முன்கூட்டிய ஒய்வு அறிவிப்பு. டில்ஷான் அடுத்த வருடம் இன்னும் கலக்குவார் என நம்புவோம்.


சினிமாவை பொறுத்தவரை போன வருடம் சப்பென இருந்தது. பதிவர்களுக்கு நல்லத் தீனிப் போட்ட படங்கள் பாலாவின் நான் கடவுள், கமலின் உன்னைப் போல் ஒருவன், ஜனநாதனின் பேராண்மை மூன்றும் என நினைக்கிறேன். இம்மூன்று படங்களிலும் பாராட்டவோ தூற்றவோ ஏதோ இருந்தன. ஆனால் அப்படி இல்லாமல் வருகைக்கு முன் இருந்தே பட்டையைக் கிளப்பிய படம் சந்தேகமில்லாமல் வேட்டைக்காரன்.

மணமகளை கொஞ்சுவதைப் பார்த்தாலே தெரியுது.

பரபரப்பாய் தேடி தேடி படிக்க வைத்தவர்கள் நடுவில் தேவநாதனும் வருட இறுதியில் என்.டி. திவாரியும். அதாவது சென்டிமென்ட்டும் அக்க்ஷனும் நிரம்பிய சென்ற வருடத்தின் கிளுகிளுப்புக்கள். அதிலும் திவாரி கல்யாணத்தை தள்ளிப் போடாதே என சொன்ன நண்பர்கள் மத்தியில் இன்னும் அறுபது வருடங்களுக்கு வேண்டுமானாலும் தள்ளிப் போடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய மகான்.
சென்ற வருட ஆச்சரியம் பராக் ஒபாமாவும் அவருக்கு கிடைத்த நோபெல் பரிசும். பார்ப்போம் 2010 என்னென்ன ஆச்சரியங்களை தன்னுள் ஒளித்து வைத்திருக்கிறதென.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.






புதன், 30 டிசம்பர், 2009

என்னைப் பாதித்த சினிமா Forest Gump


நாம் சினிமாக்களில் எத்தனையோ பாத்திரங்களைப் பார்த்திருப்போம். ஆனால் அவற்றில் சில மட்டும் எம் மனதை தைத்து நீண்ட நாட்களுக்கு பதிந்திருக்கும். இளந் தாடியுடன் Interview சென்று அங்கே உணர்ச்சிவசப்பட்டு "What else do u want? two horns?" என ஆத்திரப்படும் ரங்கன்,
அதீத புத்திசாலித்தனத்தையும், தன்னம்பிக்கையையும்,வர்க்க உணர்வையும் அப்பாவித் தனத்திற்குள் மறைத்துக் கொள்ளும் கோபத்தையும் பக்குவமாய் வெளிப்படுத்தும் நல்லசிவம்,
தங்கை மேல் பாசமும் அதற்கு சற்றும் குறையாத ரோசமும் கொண்ட காளி, பூக்களை கூட ஒன்று குறையாமல் எண்ணி வைத்து விட்டு பின் "அன்பு காட்டுவதில்தான் கஞ்சத் தனமே கூடாது" என வசனம் பேசும் வித்யாசாகர் என தமிழ் சினிமாவில் என்னைப் பாதித்த பாத்திரங்கள் பல. இப்படி என்னை பாதித்து நீண்ட நாட்களுக்கு என் நினைவை விட்டு அகல மறுத்த ஒருவன்தான் Forest gump.



அவன் நம் எல்லோரையும் போல் ஒரு சாமானியன். ஆம் போலியோவால் பாதிக்கப் பட்டக் கால்களைக் கொண்ட IQ குறைந்தவனாக பாடசாலை அதிபரால் அடையாளப்படுத்தப்படும் அவனிடம் "போறேஸ்ட் நீயும் மற்ற சிறுவர்களைப் போல சாதாரணமானவன்" என்றுதான் அவன் தாய் சொல்கிறாள். அப்படி சாதாரணமானவன் எனச் சொல்லப்படுபவனின் அசாதரணமான வாழ்க்கைத் தொகுப்பே Forest gump.


பேருந்து நிறுத்தமொன்றின் பெஞ்சில் அமர்ந்திருக்கும் Forest gump அங்கிருக்கும் பெண்மணியிடம் தன் கதையை பால்யக்காலத்தில் இருந்து சொல்லத் துவங்குகிறான். அவன் கதையை கேட்கும் நபர்கள் மாறிக் கொண்டேயிருக்கின்றனர். சிலர் அசுவாரசியமாய்,அல்லது நம்பிக்கையின்றி கேட்டப் போதிலும் தனது பால்யம்,சிறு வயதிலிருந்து நேசிக்கும் காதலி ஜெனி,வியட்நாமில் ராணுவத்தில் தன்னோடு இணைந்திருந்த நீக்ரோ நண்பன், தன் வாழ்வில் தான் முகங் கொடுத்த வெற்றித் தோல்விகள், என அனைத்தையும் மீள அசைபோட்டு பார்க்கும் மகிழ்ச்சியில் கதை தொடர்கிறது.


புறக்கணிப்புகள் நிறைந்த அவன் வாழ்வில் தேவதையாக வந்து சேர்பவள் ஜெனி. அவன் கால்கள் குணமானதில் கூட அவள் பங்கிருப்பதாய் கருதுகிறான். அவள் மேல் அளவு கடந்த பிரியத்தை வளர்த்துக் கொள்கிறான். தன் தந்தையால் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் ஜெனி அங்கிருந்து விடுப்பட்டு வெளியேற நினைக்கிறாள்.


காலங்கள் உருண்டோட தன் அபார ஓட்டத் திறமையால் உள்ளூர் ரக்பி அணியில் இடம் பிடிக்கும் Forest gump பின் இராணுவத்தில் சேர்ந்து வியட்நாமிய போரில் பங்கேற்கிறான். அங்கே ராணுவத்தில் தன்னோடு பணியாற்றும் பபா என்ற கறுப்பின வீரனின் கனவான மீன்பிடி தொழிலில் தன்னையும் இணைத்துக் கொள்வதாய் சொல்கிறான்.
எதிர்பாராமல்
போரில் பபா இறக்கும் அதேவேளை இரண்டு கால்களை இழந்ததால் சாக விரும்பும் தன் தலைமை அதிகாரி ஒருவர் உட்பட மிகுதி அனைவரையும் காப்பாற்றும் Forest விருதளித்து கௌரவிக்கப் படுகிறான்.


பின்னாளில் மிகச் சிறந்த பிங் பாங் வீரனாக மாறும் Forest அதன் மூலம் பெற்ற பணத்தொகையைக் கொண்டு பபாவின் கனவான மீன்பிடி தொழிலில் இறங்குகிறான். ஆரம்பத்தில் தன்னைக் காப்பாற்றியதற்காய் வெறுக்கும் அவனது தலைமை அதிகாரி டேன் பின் அவனுடன் இணைந்து மீன்பிடித்துறையில் கிடைக்கும் பணத்தை Apple Computer இல் முதலிடுகிறான். இதன் மூலம் கிடைக்கும் பெரும் பணத்தில் அரைவாசியை பபாவின் குடும்பத்திற்கு வழங்கி அவர்களை திக்கு முக்காடச் செய்கிறான் Forest.


இதற்கிடையில் தன் தந்தையை விட்டு தூரமாய் போகும் ஜெனி கட்டுப் பாடற்ற ஹிப்பிக் கலாச்சாரத்தில் மூழ்கி இலக்கில்லாமல் வாழ்கிறாள். விபச்சாரம் அவளது தொழிலாகிறது. நீண்ட காலத்திற்கு பின் இருவரும் சந்திக்கின்றனர். அவளிடம் தன் காதலை சொல்லும் Forest இடம் மறுக்கும் ஜெனி அன்றிரவு ஆறுதல் பரிசாக செக்ஸ் மட்டும் வைத்துக் கொள்கிறாள். காலையில் அவனிடம் சொல்லாமலே கிளம்பிப் போகிறாள். அதன் பின் காரணமில்லாமலேயே நாட்டைச் சுற்றி ஓடும் Forest அதன் மூலம் ஒரு கவனிப்பை பெறுகிறான். அவனும் ஜெனியும் மீள வாழ்வில் சந்தித்தார்களா? இருவரும் இணைந்தார்களா? என்பதை மனதைப் பிசையும் வண்ணம் சொன்னப் படம்தான் Forest gump.


ம்ம் நான் எழுத ரொம்ப சிரமப்பட்ட பதிவு இதுதான். ஏதோ ஆசையில் ஆரம்பித்து விட்டு வார்த்தைகளை சிக்கனப் படுத்தி எழுத ரொம்ப சிரமப்பட்டேன். யாரேனும் படத்தை பற்றி எழுதி இருக்கிறார்களா எனத் தேடித் பார்த்தேன். ம்ஹ்ம் Hollywood bala, ஜாக்கி சேகர், கேபிள் சங்கர் போன்ற பெருந் தலைகளே தொடல. தேவையான்னு கேட்டுக்கிட்டேன்.
நான் நினைத்ததை விட பதிவு கொஞ்சம் நீண்டு விட்டது. படத்தின் கதையை இங்கே சொல்லியிருக்கிறேன். படத்தில் நான் ரசித்த சில சுவாரசியங்கள் அடுத்த பாகமாக எழுதுகிறேன். சிரமம் பாராமல் வந்து வாசித்து ஆதரவு தாருங்கள் .
Related Posts with Thumbnails