சனி, 29 மே, 2010

டேய் என்னை அனத்த விடுங்கடா 3


தயவு செய்து நீ வாய் வைத்து
அருந்திய போத்தலில்
எனக்கு தண்ணீர் தராதே
இத்தனை தித்திப்பாய்
நான் டீ கூட குடிப்பதில்லை

இரண்டு நிறுத்தங்கள்
தாண்டிய பின் பேரூந்திலிருந்து
இறங்குகிறேன்
உன் நினைவுகள்
தடைப்பட்டு விடாமல்

கணநேர தனிமையையும்
நீதான் நிரப்புகிறாய்
உன் நினைவுகளால்
அதற்காக கழிப்பறைக்குள்ளுமா
மணிக்கணக்காய் அமரச்செய்வது

வெள்ளி, 28 மே, 2010

சிங்கம் - என் பார்வையில்

சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யத்தை ஒழிக்கும் உயரிய பணியில் ஈடுப்பட்டுள்ள இளையதளபதியோடு தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் சூர்யா. சூர்யாவின் இருபத்தைந்தாவது படமாம். அதனாலோ என்னவோ போலீஸ் ஜீப்பின் கூரையைப் பிய்த்துக் கொண்டு அட்டகாசமாக அறிமுகமாகிறார் சூர்யா. முகத்தில் கோபம் கொப்பளிக்க பாய்ந்து பாய்ந்தே வில்லன்களை துவம்சம் செய்கிறார். எஞ்சிய நேரத்தில் பக்கம் பக்கமாய் ஆவேசமாய் வசனம் பேசுகிறார். அவ்வப்போது உயரப் பிரச்சினைக் காரணமாக தள்ளி நின்றே அனுஷ்காவிடம் காதல் செய்கிறார். காக்கக் காக்க போல் ரொம்ப இயல்பாகவோ அல்லது வாரணம் ஆயிரம்,கஜினி போல் சற்று உழைப்பைக் கொட்டி செய்ய வேண்டிய நடிப்போ படத்துக்கு அவசியப்படவில்லை ஆகவே இவரும் முயலவில்லை.

படத்தின் கதை அது ஹரியின் சாமி படத்திற்கு ஒன்று விட்ட அண்ணன் முறையாக இருக்கிறது.
நல்லூர் எனும் சிறியக் கிராமத்தில் உள்ள காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஆகா கடமையாற்றுகிறார் துரைசிங்கம். ஊரில் உள்ள எல்லோருக்கும் செல்லப்பிள்ளை. ஊரவர்கள் எல்லாம் அவருக்கு உறவினர்கள். சென்னையில் கட்டப் பஞ்சாயத்து,கடத்தல்,மாமுல் எனக் கோலோச்சிக் கொண்டிருக்கும் தாதா பிரகாஷ்ராஜ் கண்டிஷன் பெயில் கையெழுத்து இட நல்லூர் வரவேண்டியவர் தெரியாத்தனமாக தன கையாள்களை அனுப்பி வைக்கிறார். நம்ம சூர்யாவும் சும்மா இருக்காமல் அவரையே அழைத்து வரச் செய்து கையெழுத்து போடச் செய்கிறார். சூர்யாவின் சொந்த ஊரில் தன் ஆட்டம் பலிக்காது என உணர்ந்த பிரகாஷ்ராஜ் அவரை பதவி உயர்வுடன் சென்னைக்கு மாற்றல் பெறச் செய்கிறார். சென்னை வந்த சூர்யாவுக்கு என்ன நடந்தது என்பதை நீங்கள் ஏற்கனவே தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது தடவை பார்த்திருக்கக் கூடிய வாய்ப்பிருப்பதால் அதை சொல்லாமலே விட்டு விடுகிறேன்.

படத்தில் பெரிய ஆறுதல் அனுஷ்கா. சூர்யாவுக்கு கொஞ்சமும் பொருத்தமில்லை என்ற போதும் பெரிய திரையில் அவரைப் பார்த்தது மட்டுமே கொடுத்த காசுக்கு நிறைவைத் தந்தது எனலாம். இலவச இணைப்பாக அவரது தங்கை அந்த பிகரும் நல்லாவே இருந்தது. சீரியல் பார்க்கும் பழக்கமற்ற எனக்கு அப்பெண் கனா காணும் காலங்களில் நடித்தவர் என அறியத் தந்து பொது அறிவை வளர்த்த நண்பருக்கு நன்றி.


விவேக் ம்ம் சிரிக்க வைக்க ரொம்பவே சிரமப்படுகிறார். அவருக்கு ஏன் ஜனங்களின் கலைஞன் எனப் பட்டம் கொடுத்தனர் என இன்றுதான் புரிந்தது. அவர் வரும் காட்சிகளில் மறக்காமல் இரட்டை அர்த்தப் பட வசனம் பேசுகிறார். தியேட்டரில் ஜனங்களும் விசிலடித்து கை தட்டினர்.

மற்றும்படி வழக்கமான ஹரி படம். படத்தை பற்றி பெரிதாக சொல்ல ஏதும் இல்லை. சில படங்கள் பிடித்து பதிவு எழுதுவோம். சில முதல் நாள் பார்த்திருக்கிறோமே என ஹிட்ஸ் கிடைக்க எழுதுவோம். இது இரண்டாவது வகை.

பின்குறிப்பு :- கூட வந்தவர்கள் சுறாவுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்கிறார்கள். அந்த படத்தை பார்க்க வில்லையாதலால் என்னால் ஒப்பிட்டுக் கருத்து சொல்ல முடியவில்லை.

புதன், 19 மே, 2010

டேய் என்னை அனத்த விடுங்கடா 2


குன்றும் குழியுமான
பாதைகளில் கூட
பிரயாணிக்க
பிரியப்படுகிறேன்
உன் கன்னக் குழியில்
விழுந்தெழுந்தப் பின்


உன்னுடன் பேசுகையில்
உன் தோள்களுக்குப் பின்
சிறகுகள் இல்லையென்பதை
நிச்சயித்துக் கொள்கிறேன்
இல்லையென்றால்
ஒரு தேவதையுடன்
பேசுகிறோமோ என
சந்தேகமாய் உள்ளது


மனசாட்சி கேள்வி
கேட்கிறது
ச்சே!
நீயெல்லாம் நாத்திகனா
ஒரு தேவதையை நோக்கி
தவமிருக்கிறாய்


எவ்வளவு வேகமாய்
புரண்டாலும்
விரைவில் விடிவதேயில்லை
உன் நினைவுகளுடன்
நத்தையாய் நகர்கிறது
இரவு



வெள்ளி, 7 மே, 2010

டேய் என்னை அனத்த விடுங்கடா


தேவதைகள் வெண்ணுடையில்
இருந்திருக்கலாம்
சிறகுகள் சகிதம்
கிரேக்க புராணங்களிலும்
பாரதிராஜா படங்களிலும்

நான் பார்த்தவளோ அப்படியில்லை
பின்னாமல் விட்டக் கூந்தல்
நெற்றியில் குங்குமக் கீற்றுடன்
பல நேரம் சல்வாரிலும்
சில நேரம் skirt and blouse இலும்தான்

என்ன
சமயங்களில் ராட்சசியாகிறாள்
குழி விழச் சிரித்து
கொலை செய்தே

அவ்வப்போது சாபமுமிடுகிறாள்
இரவுத் தூக்கம்
இல்லாமற் போகக்கடவதென

அவசரமாய் அவள் நிழற்படம் தேவை
தேவதை என்பது கற்பனையாம்
சொல்லும் என் நண்பர்களிடம்
காட்ட வேண்டும்


இனி அவ்வப்போது இப்படி புலம்பும் வாய்ப்புகள் அதிகம் சகித்துக் கொள்ளுங்கள் நண்பர்களே

வியாழன், 6 மே, 2010

ராவணன் பாடல்கள் - என் பார்வையில்





பால் வேண்டுமானால் பழகப் பழகப் புளிக்கலாம். ஆனால் வைன் பழசாகத்தான் ருசியும் போதையும் அதிகம் என்பர். வைனைப் போலத்தான் நம் இசைப்புயலின் இசையும் கேட்க கேட்க புதிதாய் பாடலில் பொத்தி வைக்கப்பட்ட சூட்சுமங்கள் எல்லாம் பிடிப்பட்டு அப்படியே அந்தப் போதையில் திளைத்து அதன் வசமாகி விடுவோம். முதற்றடவை ராவணன் பாடல்கள் கொஞ்சம் ஏமாற்றத்தை தந்தாலும் போக போகப் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பினாலேயே மேற்கண்ட வரிகள்.

"வீரா" பாடல் ஒரு ஹீரோ புகழ் பாடும் பாடல் முதற்றடவையாக மணி படத்தில். ஒரு தனிப்பாடலாக அல்லாமல் அவ்வப்போது வந்து செல்லும் என நினைக்கிறேன். பாடலில் ஒலிக்கும் சில வரிகள் சத்தியமாய் புரியவில்லை. அது தமிழா என்பதும் சந்தேகமாகவே இருக்கிறது.

"கள்வரே" பாடல் என்னுடைய விருப்பப் பாடகி ஸ்ரேயா கோஷல் பாடியது என்றாலும் ஹிந்தியில் ரீனா பரத்வாஜ் உருகியிருப்பதோடு ஒப்பிட்டால் ஒன்றுமே இல்லை. வலி மிகும் இடங்கள் வலி மிகா இடங்கள் தமிழுக்கு தெரிந்திருப்பது ஸ்ரேயாவுக்கு தெரியாததாலோ என்னவோ சுரத்தேயில்லாமல் இருக்கிறது பல இடங்களில்.

"கெடா கறி" பாடல் ஒரு கல்யாண வீட்டில் பாடப்படும் போல் இருக்கிறது. மிக உன்னிப்பாக கேட்டால் மட்டும் வரிகள் காதில் விழுகிறது.
"இவ கண்ணால பார்த்தா ஜானகி அம்சம் ,
கட்டில் மேல பார்த்தால் சூர்ப்பனகை வம்சம்"

என்ற வரிகள் கல்கியில் பிரகாஷ்ராஜ் சொல்லும் ஒரு வசனத்தை ஞாபகப்படுத்திகிறது.

"கோடு போட்டா" பென்னி தயாள் பாடியிருக்கிறார்.
"வத்திப் போன உசுரோட வாழ்வானே சம்சாரி சப்பாத்திக் கள்ளி வாழ வேணாமே மும்மாரி"
ஆக்ரோஷமான பாடல் வரிகள். ஆனால் பென்னி தயாளின் குரலில் அந்த ஆக்ரோஷம் சுத்தமாய் தவறியிருக்கிறது.

கார்த்திக் பாடியுள்ள "உசுரே போகுதே" இந்தப் படத்தில் தமிழுக்கென்றே எடுத்தது போல பாடல் வரிகளும் இசையும் பொருந்திப் போகும் ஒரேப் பாடல். தன மோகித்தப் பெண்ணை அக்கினிப் பழம் என உருவகித்திருப்பது அருமை. அது எப்படி மணி படங்களில் மட்டும் வைரமுத்தால் இப்படி எல்லாம் எழுத முடிகிறது.


"காட்டுச் சிறுக்கி" என்னைக் கேட்டால் ஆல்பத்தின் ஆகச் சிறந்தப் பாடல் இதுதான் என்பேன். நீண்ட நாட்களுக்கு பிறகு அனுராதா ஸ்ரீராம் வழமை போல் பாடலை வளைத்துக் குழைத்து ஏதேதோ செய்கிறார். கூடவே ஷங்கர் மகாதேவன். இசைப்புயலுக்கு இணையாக வைரமுத்தின் பேனாவும் தாண்டவமாடி இருக்கிறது. வெறுமையும் தனிமையுமாய் கணக்கும் மனதின் வலியை
"பாறாங்கல்லை சுமந்து வழி மறந்து ஒரு நத்தைக் குட்டி நகருதடி"
என எழுதியிருப்பது எனக்கு ரொம்பவும் பிடித்தது.

என்னளவில் பாடல்கள் மோசமில்லை ஆனால் ஆஹா ஓஹோ எனப் புகழும் ரகமுமில்லை. வைரமுத்து மினக்கெட்டு எழுதியிருப்பது தெரிகிறது ஆனால் வார்த்தைகளை கருவிகள் ஆக்கிரமித்து அமுக்கி விடுவது கவலை. எளிதில் மனதில் ஓட்டும் ரகமான இசை இல்லையாதலால் விண்ணைத் தாண்டி வருவாயா போல் ஹிட்டடிக்க போவதில்லை. அடுத்தி ஹிந்தியில் போல் இல்லாமல் தமிழில் வரிகள் குறித்த இசைக்குள் வலிந்து திணிக்கப்பட்டதைப் போல் தோன்றுகிறது. மணிரத்னம் ஹிந்திக்குத் தரும் அதே முக்கியத்துவத்தை தமிழுக்கும் தந்தால் தேவலாம். எப்படியும் பாடல்கள் நிச்சயமாக மணிரத்னத்தின் காட்சியமைப்புகளுடன் பார்க்கும் போது ஒரு புதுவிதமான பரவசத்தைத் தரும் என்பது திண்ணம். அதுவரை எதிர்பார்த்திருப்போம் ஜூன் பதினெட்டை

இதெல்லாம் இசையை ரசிக்க மட்டுமே தெரிந்த ஒரு பாமரனின் பார்வை. யாரேனும் விவரமறிந்தவர்கள் பாடல்களை நுணுகி ஆராய்ந்து விமர்சனம் எழுதுங்கள். படிக்க ஆவலாயுள்ளோம்.
Related Posts with Thumbnails