செவ்வாய், 14 மே, 2013

மரியான் பாடல்கள் என் பார்வையில்





மரியான்  பாடல்கள் "கடல்" படப் பாடல்கள் போல சட்டென ஒட்டிக் கொள்ளும் ரகம் இல்லை என்ற  போதும் கேட்க கேட்க பிடிக்கும் ரஹ்மான் மாஜிக் இருக்கிறது.

இன்னும்  கொஞ்ச நேரம்

நீண்ட நாட்களுக்கு பிறகு நாட்டுப்புற ஸ்டைலை டச் செய்திருக்கிறார்  “இன்னும்  கொஞ்ச நேரம்”  பாடலில், விஜய் பிரகாஷ் வெஸ்டர்ன், க்ளாசிக் என இரண்டிலும் ஸ்கோர் செய்பவர் இங்கு போல்க்கிலும்.  ஏடி கள்ளச்சியிலேயே அசத்தியவர்தான் . கூடவே அவரது அம்மா  போலவே கொஞ்சுகிறார் ஸ்வேதா மோகன் .

சோனாபாரீயா

சென்யோரீட்டா, லோலிட்டா போல ஒரு புதுவார்த்தை  “சோனாபாரீயா”,  ரொம்பவும் எனர்ஜட்டிக்கான பாடல். கேட்பவரை துள்ளாட்டம் போட வைக்கிறது. ப்ரீலியுட் வாத்திய இசையே கொண்டாட்டமான உலகுக்கு கொண்டு செல்கிறது. ஆமா  சோனாபாரீயா என்றால் என்ன?

நேற்று அவள் இருந்தாள்

குறைவான இசைக் கருவிகளுடன் ரொம்பவே மெதுவான ஒரு மெலடி. கொஞ்சம் எங்கோ கேட்ட சாயலும். அசத்துகிறார்கள் விஜய் பிரகாஷும் சின்மயியும்.

I Love my Africa

தமிழுக்கு முற்று முழுதான புது இசை. கண்ணை மூடிக் கேட்டால் நாமும் ஆபிரிக்காவில் இருப்பதை போன்ற உணர்வு. பாடல் முழுதும் தொடரும் தாள வாத்திய இசையே பாட்டின் ப்ரெஷ்னசுக்கு காரணமாய் இருக்கும்.

எங்க போன ராசா


சக்தி ஸ்ரீகோபாலன் என்றவுடன் நெஞ்சுக்குள்ள ரேஞ்சுல எதிர்பார்த்தால் ஒரு மாற்று குறைவுதான் என்ற போதும் மோசமில்லை. பல்லவியில் கேட்பவர்களுக்கு (அது நாந்தேன்) ஒரு அயர்ச்சி இருந்தாலும் சரணத்தில் சரியாகிவிடுகிறது.

நெஞ்சே எழு

பாட்டுக்கு  மெட்டாயிருக்கக் கூடும். ரஹ்மான் குரலே பிரதானம். குட்டி ரேவதிக்கு நல்வரவு


கடல் ராசா

நனவிடைத் தோய்தல் நம்ம பாசையில் சொன்னால் Nostalgia அட யுவன் நல்லா பாடியிருக்காரே எனத் தோணுவது பாடலின் முதல் வெற்றி, பாடலாசிரியராக நன்றாகவே செயற்படுகிறார் பொயெட்டு தனுஷ்

திங்கள், 4 பிப்ரவரி, 2013

கடல் - என் பார்வையில்


நம்மெல்லோர் முன்னும் இரண்டு பாதைகள் இருக்கின்றன. ஒன்று இலகுவாக சுகபோகங்களை அள்ளித்தரும் சாத்தான் வழிநடத்தும் தீய பாதை. மற்றையது அளவில்லா சோதனைகளை தந்தாலும் இறுதியில் ஒரு ஆத்ம திருப்தியையேனும் தரும் தேவனின் புனித பாதை. துரதிஷ்டவசமாக மனிதன் முதலாவதையே தெரிவு செய்கிறான். அந்தப் பாதையில் செல்பவன் சிறிது தூரம் கடந்ததும் விபரீதம் புரிந்து திரும்ப எத்தனித்தாலும் அது அத்தனை இலகுவில்லை. ஏன் அந்த தேவனாலேயே கூட அவனை ரட்சித்து மீளக் கொணர்வது கடினம். ஆனால் மனிதத்தின் உயரிய பண்பு அன்பு. சாத்தானுக்குள் கூட மிச்சமிருக்கும் ஒரு துளி வெளிச்சம் அது. அதனால் எதுவும் சாத்தியம். வழி தவறியவனை மீட்கும். தேவனே வழி மாறினாலும் தடுக்கும். அவ்வளவு ஏன் அந்த சாத்தானையே தோற்கடிக்கும். ஆம் அன்பு ஒன்றே இவ்வுலகில் சாஸ்வதமானது. மேற்படி கருத்தை ஒரு மீனவக் கிராமப் பின்னணியில் மணிரத்தினம்- ஜெயமோகன் கூட்டணி சொல்லியிருக்கும் படமே கடல்.

 எத்தனை அழகான ஒரு கரு படம் பார்த்த ஒவ்வொருத்தனும் மனம் முழுதும் தேவ குணங்கள் அரும்ப நெகிழ்ச்சியாய் வரவேண்டியவன்,  கொலைவெறியேறி  சாத்தான்களாக வரும் வகையில் படமாக்கியிருக்கிறார் மணி.

மணிரத்னம் என் பிரிய இயக்குனர்களில் இவருக்குத்தான் முதலிடம். மணிரத்தினம் மேக்கிங் என்று வாய் பிளந்த காலமொன்றுண்டு. நல்ல தொழினுட்ப கலைஞர்களின்  கூட்டு இருந்தால் துண்டு துக்கடா இயக்குனர்களும் மேக்கிங்கில் அதகளம் பண்ணலாம் என்ற நிலையில் திறமையான திரைக்கதையின் மூலமே தன நிலையை தொடர்ந்து தக்க வைக்கலாம் என்பதை மணி மறந்து விட்டார். "ராக்கம்மா கையத் தட்டு" போன்ற ஒரு பாட்டை படமாக்கியவர் இந்த படத்தில் "அடியே " படமாக்கி இருக்கும் விதத்தை பார்த்தால் எதால் சிரிப்பது என்றே தெரியவில்லை மொண்டேஜ் ஷாட்களின் பின்னணியில் துண்டு துண்டாக நகரும் பாட்டாக இருக்கும் எனப் பார்த்தால் பாசி மாலைகள் சகிதம் 50, 60 க்ரூப் டான்சர்ஸ் புடை சூழ மானாட மயிலாட காம்படிஷனுக்கு வந்தது போல ஆடுகின்றனர் கவுதம் அண்ட் கோ. என்னை கடைசியாக திருப்தி படுத்திய படம் அலை பாயுதே மட்டுமே. அதற்கு முன்னும் ரோஜா முழுப் படமாக என்னை கவர்ந்ததை விட மதுபாலா,அரவிந்த சாமி காதல் காட்சிகளே கவர்ந்தது. பம்பாய், இருவர் ஓகே. அலைபாயுதேக்கு பிறகு கன்னத்தில் முத்தமிட்டால்  கொஞ்சமே கொஞ்சம் இம்ப்ரஸ் செய்தது. மற்றும்படி இன்னமும் நான் மணியின் படங்களில் தேடிப்பார்ப்பது மௌன ராகத்தின் கச்சிதத்தை, நாயகனின் பிரமாண்டத்தை, தளபதி தந்த நெகிழ்ச்சியை துரதிஷ்டவசமாக மேற்கூறிய எதுவும் கடலில் இல்லை.

கதை ஜெயமோகன். குறை சொல்ல ஏதுமில்லை. இந்த அழகான கதையை திரைக்கதையாக்கி படமாக்குவதில் மணிரத்னமே கோட்டை விட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. வசனங்களும் அருமை. ஆரம்பத்திலேயே அர்ஜுன் எனக்கு "பசியும் தெரியும், பைபிளும் தெரியும்" என்று சொல்ல அர்விந்த் ஸ்வாமி "எனக்கு பைபிள் மட்டும்தான் தெரியும்" என்கிறார். இருவரினதும் பாத்திரங்களின் இயல்புகளை தெளிவாக அந்த வசனமே சொல்லி விடுகிறது. சின்னவன் தொம்மனை மீனவர்களோடு அனுப்பும் போது "ஒரு வேளை கடலுக்கு இவனை தெரிஞ்சிருக்கலாம்" என்பது "எல்லாமே க்றித்தவங்கத்தான் ஆனா விசுவாசிகள்" இவையெல்லாம் பதம் பார்க்க சில சோற்றுப் பருக்கைகள். அத்தோடு கடினமான வட்டார வழக்கு என்றும் சொல்ல முடியாது. நானெல்லாம் ஏழாம் உலகத்தின் ஒரு இருவது பக்கத்து அப்புறம் அந்த மொழிக்கு நன்கு பரிச்சயப்பட்டு படித்து முடித்த பின் இருடே, நிப்பாட்டுடே, வாலே, போலேன்னு தூத்துக்குடி பாஷையவே பேசுனவன். அதோடு எல்லாம் ஒப்பிடும் போது வசனங்கள் எளிமையாகவே இருந்தது.

நடிகர்களில் முதலிடத்தை சந்தேகமின்றி தட்டிச் செல்கிறார் பாதர் சாம் ஆக அரவிந்த் சுவாமி அன்றைய கார்த்திக் போல பிறகு வந்த மாதவனைப் போல அலட்டலில்லாத அற்புதமான நடிப்பு.

பெர்க்ஸ்மான் அலையஸ் மேசைக்காரன் அலையஸ் சாத்தானாக அக்ஷன் கிங். அடிதடிதான் ஆண்மையின் இலக்கணம் என நம்பிய பதின்மங்களில் நானும் அர்ஜுன் ரசிகன்தான். அங்கே இங்கே தாவுவது, ஒன்றுக்கு ரெண்டு கதாநாயகிகளோடு குத்தாட்டம் போடுவது, கவுண்டர் அல்லது வடிவேலுவோடு நகைச்சுவை என்ற பெயரில் ஏதேனும் மொக்கை போடுவது என இருந்தவரை காலம் போன காலத்தில் திடிரென நடிக்கச் சொன்னால் என்ன செய்வார். ஆனால் கொஞ்சம் கஷ்டப்பட்டு நடிக்க முயற்சித்திருக்கிறார்.

பிரபு விக்ரம், அதரவா முரளி, சுருதி ஹாசன், வரு சரத், ஐஸ்வர்யா அர்ஜுன் நாளைக்கே வரக்கூடிய சின்ன கேப்டன் என்ற வாரிசு நடிகர்கள் யாரையும் விட கவுதம் கார்த்திக்கை அதிகம் எதிர்ப்பார்த்தேன். காரணம் அவர் பெயருக்கு பின்னாலிருக்கும் கார்த்திக். ம்ஹ்ம் முதற்படம் என்றளவிற்கு ஓக்கே மன்னிப்போம்.


அப்புறம் அந்த உலகத்திலேயே இல்லாத ரெண்டு பேரழகிகளை பெத்திருக்கிற ராதாவை அவர் பொண்ணுங்களோடு சேர்த்து எங்காவது நாடு கடத்திட்டா தேவலாம். கடுப்பேத்துறாங்க மை லார்ட். பின்ன தேவனாலேயே ரட்சிக்க முடியாதவனை மீட்கும், சாத்தானையே அன்பினால் தோற்கடிக்கும் தேவதை எப்பேர்பட்டவளாய் இருக்க வேண்டும். சகிக்கல.

பாரதிராஜா தாஜ்மஹால் என்று ஒரு படம் எடுத்தார் இன்று பலருக்கு அந்த படம் நினைவில் இருக்க காரணம் இசைப்புயல். அது போல காலம் கடந்தாலும் நிற்கும் இசையை படத்துக்கு வழங்கியிருக்கிறார் படத்தின் நிஜ ஹீரோ ஏ. ஆர். ரஹ்மான். மண்வாசனை மண்ணாங்கட்டி வாசனை எல்லாம் விட்டு விடுவோம். படத்தில் பாடல்கள் என்பதே யதார்த்ததிற்கு அப்பாற்பட்டதுதான் எனும்போது அலைகள் ஓய்வதில்லையில் இருந்து கடலுக்குண்டான இந்த 30 வருடத்தில் கடற்கரையோர கிராமங்களில் இசையில் ஒரு இவாலுவேஷன் நடந்திருக்காதா?

ராஜீவ் மேனன் ஒளிப்பதிவை தனியே சிலாகித்தால் அது சூரியனுக்கே டார்ச் அடிப்பது போல விட்டு விடுவோம். மணிக்கு அப்புறம் படத்தின் மிகப் பெரிய சொதப்பல் ஸ்ரீகர் பிரசாத் தேசிய விருது பெற்ற எடிட்டர். சம்பந்தா சம்பந்தமில்லாது  கோர்வைவையில்லாது தாவி செல்லும் காட்சிகளின் தொகுப்பு. தலைவலிக்கு அதுதான் பிரதான காரணம்.

குப்பையில் கிடைத்த கோமேதகம் போல படத்தில் நெகிழ வைத்த ஒரு காட்சி.  துளசியிடம் தான் ஒரு பாவி என கவுதம் சொல்ல அவ்ளோதானே இதோட எல்லாம் போச்சு இனி எல்லாத்தையும் விட்டுறு என்னா என அசால்ட்டாக பாவ மன்னிப்பு அளிப்பார் துளசி தண்டனையிலும் கொடிய அந்த மன்னிப்பின் கனம்  தாங்காத கவுதமின் கதறல் அதைத் தொடர்ந்து  மன்னிக்கப்பட்டதால் பாவங்களிலிருந்து விட்டு விடுதலையான பரவசத்துடன் அப்படியே அவர் துளசியிடம் சரண்டர் ஆவதை காட்டும் "மூங்கில் தோட்டம்" பாடல். இது போல இன்னும் 5 சீன் இருந்திருந்தா?

 படத்தை ஒரேயடியாய் நிராகரிப்பதில் எனக்கு உடன்பாடில்லைத்தான். பார்க்காலாம். ஆனால் நாம் மணியிடம் எதிர்பார்ப்பது இதை அல்ல. அவரின் திறமை நீர்த்து போயிருப்பது அவருக்கே புரிந்தால் செய்ய வேண்டியது பேசாமல் படம் எடுப்பதை நிறுத்தி விட்டு மெட்ராஸ் டாக்கிஸ் மூலம் புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதுதான். நாம் மவுன ராகத்தையும் நாயகனையும் தளபதியையும் காலம் பூரா சிலாகித்துக் கொண்டிருக்கலாம்.

Related Posts with Thumbnails