வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

சுஜாதா - நடமாடிய கலைக்களஞ்சியம்


சின்ன வயதிலிருந்தே கதை கேட்பதில் எனக்கு அலாதிப் ப்ரியம். எழுத்துக் கூட்டி வாசிக்கத் துவங்கியப் போதே சின்ன சின்னக் கதை புத்தகங்களாய் ஆரம்பித்து பின் அம்புலிமாமா,கோகுலம்,பாலமித்ரா,காமிக்ஸ்கள் எனத் தொடர்ந்தது என் கதையறியும் ஆர்வம். இதுதானோ என்னவோ இன்னமும் ஒரு Daydreamer ஆகவே இருக்கிறேன்.

பதின்ம வயதுகளுக்குள் நுழைய முன்பாகவே மாலைமதி,ராணிமுத்து போன்ற கமர்சியல் நாவல்களை வாசிக்க ஆரம்பித்தேன். ராஜேஷ்குமார்,பட்டுக்கோட்டை பிரபாகர்,சுபா,எஸ்.பாலசுப்ரமணியம்,பி.டி.சாமி எல்லாம் அபோது படித்ததுதான். ராஜேஷ்குமார் நாவல்கள் அப்போது ரொம்பப் பிடிக்கும். முடிவுகளை யூகிக்கக் கூடியதாய் நிலை மாறிய போது அந்த சுவாரசியமும் அற்றுப் போனது.

அப்படியே அடுத்தக் கட்டமாக சாண்டில்யன். அவர் நாவல்களை படித்ததற்கான காரணம் பரகசியம். முழுசாய் படித்து முக்கியமான மேட்டர்கள் இருக்கும் பக்கங்களை அடையாளப்படுத்தி தர வேண்டிய சீரியப் பணி நண்பர்களால் எனக்குத் தரப்பட்டிருந்தது. பிஞ்சிலேயே பழுத்து விட்டேனோ என யோசித்தாலும் வருத்தமில்லை. அதுதான் வாத்தியாரே சொல்லியிருக்கிராறே வாத்சாயனமும் கல்வியே என அதனால் அந்தக் குற்றவுணர்ச்சியும் அற்றுப்போனது. அதுபோக இப்போது எதையாவது இப்படி கிறுக்கித் தள்ள அந்த வாசிப்பனுபவம்தான் கைகொடுக்கிறது. என்ன இன்னமும் ப்ராக்டிகலாக செய்துப் பார்க்காத குறைதான்.

அப்படியே கல்வியியற் கல்லூரி போன போது அங்கிருந்த சூழலோ என்னவோ மார்க்ஸிசம் பால் ஈடுபாடு உண்டானது. முதலில் தோழர் தியாகுவின் "ஆனா ஆவன்னா" வில் ஆரம்பித்தவன் பின் அப்படியே முன்னேற்றப் பதிப்பகத்தின் பல புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன். மாக்சிம் கோர்க்கியின் தாய் நிக்கலாய் ஒஸ்திரோவ்ஸ்கியின் வீரம் விளைந்தது பல தடவை படித்தது. சித்தாந்தங்களை வார்த்தைகளாக உள்வாங்கிக் கொண்டேனே ஒழிய எனக்குள் இருந்த பூர்ஷ்வாவை விரட்ட முடியாத குற்றவுணர்வில் மெல்ல அதன்பாலிருந்த தீவிரத்தைக் குறைத்துக் கொண்டேன். பெரியாரும் அப்போதிருந்துதான் என் உடன் வரத் துவங்கினார்.

இப்படி எனது வாசிப்பனுபவம் வயதுக்கேற்ற மாற்றங்களைக் கண்டிருந்தாலும் அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்தும் வாசித்துக்கொண்டிருக்கும் ஒரே நபர் அமரர் சுஜாதா. காரணம் ரொம்ப simple எதை எழுதினாலும் எளிமையாக எழுதுவார், புரியும்படி எழுதுவார், சுவாரசியமாய் எழுதுவார்.

என்னவாக ஆக வேண்டும் என்று யாரேனும் கேட்டால் டொக்டர் தொடங்கி ஜனாதிபதியாவது வரை சொல்லுவோம். ஆனால் இருந்தா இப்படித்தாண்டா இருக்கணும் என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்தவர் இவர். இவரது அறிவின் வீச்சு பிரமிப்பூட்டக்கூடியது. எழுத்தாளர், நாடகாசிரியர், திரைப்பட வசனக்கர்த்தா, கண்டுப்பிடிப்பாளர் என இந்த மனிதனுக்குத்தான் எத்தனை முகங்கள். எதைப் பற்றித் தெரியாது இவருக்கு. சங்கப் பாடல்கள் தொடங்கி சாப்ட்வேர் வரை பேசுவார். நல்லப் பாடல்களின் ராகங்களைப் பற்றியெல்லாம் ரசனையாய் அலசுவார். நல்லப் படங்களைக் கொண்டாடுவார். அரசியல்,கிரிக்கெட் இன்னும் என்னவெல்லாமோ. இதனாற்றானோ என்னவோ அவரைப் போல இல்லாவிட்டாலும் எல்லாவற்றிலும் கொஞ்ச கொஞ்சமாய் பிய்த்தெடுத்தது ஏதோக் கொஞ்சம் மண்டைக்குள் போட்டு வைத்திருக்க முயல்கிறேன்.

அவரது கொலை அரங்கம் நாவலில் வசந்த் ஒரு முறை " உங்களுக்கு வல்வெட்டித்துறை, மாத்தளை இங்கு யாரேனும் பழைய உறவினர் இருந்து அவர்கள் எதிரிகளாகியிருக்க வாய்ப்பில்லையா?" எனக் கேட்பதாய் ஒரு வசனம் வரும். அடடா சுஜாதா நம்ம ஊர் பெயர எழுதிட்டாருடா என புல்லரித்துப் போயிருக்கிறேன். நமக்குப் பிடித்தவருக்கு நம்ம ஊர் தெரிஞ்சிருக்கே என்ற புளங்காகிதம்.

இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்று சொல்லப்படுவது இவர் எழுத்துக்களுக்கு நூறு சதவீதம் பொருந்தும். ஒரு காலயந்திரப் பயணம் போல கதை நிகழ்வதாய் சொல்லப்படும் காலத்திற்கு நம்மைக் கொண்டு செல்வது அது. சமகால நிகழ்வுகளை ஆங்காங்கே தூவி பயிர் செய்யப் பட்ட காலத்திற்கேற்ற எழுத்துக்கள் அவருடையவை.

Advanced level படிக்கும் போதும் college of Education இலும் நண்பர்கள் மத்தியில் கொஞ்சம் கெத்தாய் உலாவ உதவியது அவ்வப்போது நான் சொல்லும் A ஜோக்குகள் உபயம் வசந்த். என்ன இது போன்ற ஜோக்சைக் கேட்டு வெட்கத்தால் முகம் சிவந்து செல்லமாய் அடிக்கத்தான் யாருமில்லாமல் போய் விட்டனர். ஒருவேளை வசந்த் போல் இல்லாமல் கணேஷ் போல் கொஞ்சம் அழுத்தமானவனாய் இருந்ததாலாயிருக்கலாம். வல்கராக இல்லாமல் முகஞ்சுழிக்கச் செய்யாது உதட்டோரம் புன்னகையை வரச் செய்பவை சுஜாதாவின் பகடிகள். ஏன் போய்சில் கூட அந்த இளைஞர்கள் தமக்குள்ள பரிமாறிக்கொள்ளும் பகடிகளில் அவை வெறும் பாலுணர்வு பாற்பட்டதாக இல்லாமல் ஒரு புத்திசாலித்தனம் இருக்கும்.

இணையம் பரவலாக இல்லாதக் காலத்தில் அவரது எழுத்துக்கள் நிச்சயம் ஒரு பெரும் வரப்பிரசாதமாக இருந்திருக்கும். பிறகு எத்தனை விடயங்களை அவர் அறிமுகப்படுத்தியிருக்கிறார். நாமெல்லாம் Grand master பார்த்து விட்டு யாரையாவது நினைத்துக்கொள் நான் கண்டுப்பிடிக்கிறேன் என விளையாடிக் கொண்டிருக்கும் போது இது Savant syndrome இதை மையமாக வைத்து Rain man படம் எடுக்கப்பட்டிருக்கிறது என எழுதுவார். உலகத்தரத்திலான பெரும் ஆளுமைகளை அடையாளம் காட்டினார். இதையெல்லாம் இவர் செய்தது சிக்கலான வார்த்தைகளாலான பெரிய கட்டுரைகளின் மூலம் அல்ல. ச்சும்மா போகிற போக்கில் தனது எழுத்துக்களில் அள்ளித் தெளித்தவையே அவை.

சிலக் கதைகளை ஒரு சினிமா ஸ்கிரிப்ட் போல இருந்தது என வர்ணிப்பார்கள். எனக்கு ஸ்ரீரங்கத்து தேவதைகள் வாசிக்கும் போது படமே பார்ப்பது போல இருந்தது.

சுஜாதாவின் கதைகளில் நான் படித்தவற்றில் எனக்குப் பிடிக்காதது என்று பெரிதாக எதுவும் இல்லை. ஒன்றே ஒன்று பெயர் ஞாபகமில்லை நன்றாக படித்த தோற்றப் பொலிவற்ற முதிர்கன்னி ஒருவரை அவரது சம்பளத்துக்காக திருமணம் செய்து ஏமாற்றும் ஒருவரின் கதை. இருவரது பார்வையிலும் அந்நாவல் நகரும்.
திக்கான மீசையும் சவரத்திற்குப் பின்னரான பசுமை படர்ந்த மழு மழுப்பான கன்னங்களையும் கொண்ட பசையுடைய ஆண்களை மடக்கி செட்டில் ஆகும் பெண்களின் கனவுகளையே திரும்ப திரும்ப எழுதும் எனக்குப் பிடிக்காத ஒரு எழுத்தாளரின் கதை போல் இருந்ததாலிருக்கலாம்.

மற்றப்படி மறுபிறவி,ஜோசியம் போன்ற அபத்தங்களை எல்லாம் மறுப்பவர் ஆண்டாள் பாசுரங்களை பற்றியும் ஸ்ரீரங்கநாதனை பற்றியும் பக்தி பரவசத்தோடு சொல்லும் போதும் பௌதீக விஞ்ஞானத்தில் தனக்கு இருக்கும் ஞானத்தைப் பயன்படுத்தி பாகவத புராணத்தில் இருக்கும் கதைகளை எல்லாம் ஏதோ விஞ்ஞான கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன என்ற ரீதியில் சொல்லும் போதும் சற்று எரிச்சல் எட்டிப் பார்க்கும்.

சுஜாதா என்ற ஒருவர் இல்லாமலிருந்தால் நிச்சயமாக இன்று இத்தனை பேர் பளோகுகளில் பத்தி எழுத்துக்களை முயற்சித்துக் கொண்டிருக்க மாட்டோம் என நினைக்கிறேன். ஏதோ வருடமொரு முறை நினைவுக் கூறத்தக்கவர் அல்ல அவர். இருந்தாலும் அவரைப் பற்றிய என் எண்ணங்களின் சிறு தொகுப்பே இப்பதிவு.

15 கருத்துகள்:

கார்க்கிபவா சொன்னது…

கடைசி பத்தி நிஜம்

தர்ஷன் சொன்னது…

அப்பா மத்ததெல்லாம் பொய்யா சகா

Unknown சொன்னது…

நல்ல நினைவுகள்.. இந்த வலைமனையில் நன்றாக எழுதக்கூடிய அனைவரும் சுஜாதாவைக் கடக்காமல் வந்திருக்க முடியாது..

இங்கே கடந்து என்பது - படித்து என்ற பொருளில்.. :)

Unknown சொன்னது…

நன்றாக இருந்தது தர்ஷன்.. அருமை..
உண்மையை சொல்வதென்றால் எனக்கு சுஜாதைவை பற்றி அதிகம் தெரியாது.. உங்கள் பதிவு பயன் உள்ளதாக இருந்தது.

தர்ஷன் சொன்னது…

நன்றி முகிலன்
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

நன்றி கார்த்தி
சுஜாதாவை படியுங்கள்

Karthikeyan G சொன்னது…

Periyaar & Sujatha in the same page.. Hmmmm... thats irony.. :)

தர்ஷன் சொன்னது…

//Periyaar & Sujatha in the same page.. Hmmmm... thats irony.. :)//

So what
கார்த்திகேயன் சுஜாதாவை நான் வாசிக்கத் துவங்கியக் காலத்தில் எனக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் இருந்தது. அவரை வாசிக்கக் காரணம் அந்த சுவாரசியமான எழுத்து நடை. என்னை எழுதத் தூண்டியவர். அவ்வளவே
பெரியார் என் சிந்தையை முழுமையாய் பாதித்தவர். சமூகத்தில் நிலவும் போலியான கற்பிதங்களை நிராகரிக்கக் கற்றுத் தந்தவர்.
சுஜாதாவின் எழுத்துக்களின் வசீகரத்தைப் பற்றியே மேலே சொல்லியிருக்கின்றேன்.
சுஜாதாவின் வைணவப் பெருமைப் பற்றியும் கடவுளின் இருப்பை ஞாயப்படுத்தும் எழுத்துக்கள் பற்றியும் எனக்கிருக்கும் விமர்சனத்தை மேலே பதிந்தே இருக்கிறேன். பார்ப்பனர் என்கிற ஒரே காரணத்திற்காக அவரை நிராகரிக்க வேண்டுமா எனத் தெரியவில்லை. ஆரம்பத்தில் இந்த முரண்பாடுப் பற்றிய குற்றவுணர்வு எனக்கும் இருந்தது.
இருந்தாலும் இரண்டும் வேறு வேறு என்றே நினைக்கிறேன்.
பெரியார் ராஜாஜியோடு நட்பாய்த்தானே இருந்திருக்கிறார்.

தர்ஷன் சொன்னது…

நன்றி டெக்‌ஷங்கர்
பதிவுகளை அனைவருக்கும் கொண்டு செல்லும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

ARV Loshan சொன்னது…

ஏன் சுஜாதா,எங்கள் சுஜாதா என்று சொல்வதே எப்போதும் மிகப் பெருமையாக இருக்கும்..
அவர் எமக்கும், தமிழுக்கும் தந்தவை பல..
நன்றாக எழுதியுள்ளீர்கள்.

//இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்று சொல்லப்படுவது இவர் எழுத்துக்களுக்கு நூறு சதவீதம் பொருந்தும். ஒரு காலயந்திரப் பயணம் போல கதை நிகழ்வதாய் சொல்லப்படும் காலத்திற்கு நம்மைக் கொண்டு செல்வது அது. சமகால நிகழ்வுகளை ஆங்காங்கே தூவி பயிர் செய்யப் பட்ட காலத்திற்கேற்ற எழுத்துக்கள் அவருடையவை.//

ஆச்சரியம்.. முன்பொரு தடவை பாடசாலைப் பேச்சுப் போட்டியில் இதே கருத்துக்களை வேறு விதமாக நான் சொல்லியிருக்கிறேன். ஒத்த ரசனை :)

தர்ஷன் சொன்னது…

நன்றி லோஷன் அண்ணா
நிச்சயம் அவரை வாசிக்கும் அனைவரும் அதை உணர்ந்தே இருப்பர்
இருப்பினும் ரசனைகள் ஒத்துப் போனதில் மகிழ்ச்சி

யோ வொய்ஸ் (யோகா) சொன்னது…

நம்ம சுஜாதாவை பற்றி எழுதிய இந்த பதிவை எப்படி மிஸ் பண்ணினேன் என்று தெரியவில்லை.

சுஜாதாபோல் இனி யாரையுமே நினைத்து கூட பார்க்க முடியாது. பெரிய பெரிய அறிவார்ந்த கருத்துக்களை பாமரனும் அறியும்படி எழுதுவதற்கு சுஜாதாவை விட்டால் யாருமில்லை.

ஒருவேளை சுஜாதாவை வாசித்திருக்காவிட்டால், வாசிப்பு என்பதை ஒரு குறிப்பிட்ட வயதோடு விட்டிருப்பேனோ தெரியாது. எதையும் தேடி வாசிக்கும் விருப்பத்தை ஏற்படுத்தியது சுஜாதாவின் எழுத்துக்கள்.

நுவரெலியா புத்தகசாலையில் நான் ஒரு சுஜாதா புத்தகத்தை கொடுத்துவிட்டு சுஜாதாவின் வேறு புத்தகத்தை வாங்கி வரும் போது, எனது நண்பர்களிலொருவர் நான் கொடுத்த புத்தகத்தை வாங்கி வந்த சந்தர்ப்பங்கள் பலவுண்டு.

எழுத்து காமதேனுவான சுஜாதாவின் மரணம் எம்மை போன்றவர்களுக்கு பேரிழப்பாகும்..

ViJe சொன்னது…

மிக்க நன்றி,என் குரு வை பற்றிய உங்கள் பார்வையும் ,பதிவும்

ஷஹி சொன்னது…

மிகவும் அழகாக, கிரிஸ்ப்பாக உள்ளது பதிவு..சுஜாதாவின் கதாபாத்திரங்களின் பெயர்களை குழந்தைகளுக்குச் சூட்டினவர்கள் எல்லாம் உண்டு. எனக்குப் பிடித்த பெயர் "நிலா"...

பெயரில்லா சொன்னது…

எப்போதும் விஞ்ஞானம் சார்ந்த கதைகளையே தந்த ரங்கராஜன்,ஒரு பெண்னின் மன உணர்வுகளை தத்ரூபமாகத் தந்த படைப்பு “காகிதச் சங்கிலிகள்”... நோய் வாய்ப்பட்டு மருத்துவமனையிலிருந்த காலத்தில் மனைவி சுஜாதாவுக்காக எழுதிய கதை அது என ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.. மறுபிறவி,ஜோஸ்யம் பற்றி மறுத்தாலும் “கொலையுதிர் கால”த்தில் கடைசி பக்கத்தில் வஸந்த் மூலம் ஒரு கேள்வி வைத்து நம்மையே குழப்பிடுவாரே... :) நன்றி உங்கள் பகிர்விற்கு... -ஜனனி செல்வநாதன்-

Athisaya சொன்னது…

வணக்கம்
முதலில் வாழ்த்துக்களும் நன்றியும்
சுஜாதா எனும் ஆளமையை வாசித்து உணரத்தொடங்கிய இந்நாட்களில் இத்தளத்தில் இந்தப்பதிவு கண்டது மகிழ்ச்சி

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails