சனி, 29 அக்டோபர், 2011

அட்டு ஃபிகர் 7ம் அறிவும் சுமார் ஃபிகர் வேலாயுதமும்



ஒவ்வொரு படம் பார்ப்பதற்கும் ஒவ்வோர் மனநிலையில் செல்வோம். அது அந்த படம் சம்பந்தப்பட்டவர்களின் முந்தைய படங்களை வைத்து நாமாக எடுத்துகொண்ட முன்முடிவுகளின் அடிப்படையிலோ அல்லது அதன் படைப்பாளிகள் ஊடகங்களில் சொல்லும் கருத்துக்களின் அடிப்படையிலோ அமையும். 

விஜய் படம் பார்ப்பவர்கள் யாரும் ஒரு அலாதியான கலையனுபவத்தை பெற வேண்டி திரையரங்கிற்கு செல்வதில்லை. கலகலவென நகைச்சுவை, அசத்தல் நடனத்துடன் அருமையாய் 5 பாட்டு, சண்டை காட்சிகள் என ஒரு ரெண்டரை மணி நேர பொழுதை போக்குவதே பிரதான நோக்கம். அதை சரியாய் பொதி செய்து தரத் தெரியாத இயக்குனர்களிடம் மாட்டி அவரும் கஷ்டப்பட்டு நம்மையும் இம்சைப்படுத்தியதே தன் தோல்விகளுக்கு காரணம் எனத் தெரிந்து கொண்டார் போலிருக்கிறது. அவர் ரசிகர்கள் அல்லாதவர்களும் ரசிக்கும் வகையில் சுமாராய் ஒரு படம் விஜயிடமிருந்து.

கதையெல்லாம் சொல்லி அலுப்படிக்க போவதில்லை. 7ம் அறிவு அளவுக்கு புதிதாக, நல்ல முடிச்சுள்ள கதையல்ல. ஒரு 100 படங்களிலாவது பார்த்திருக்க கூடிய தீவிரவாதிகளிடமிருந்து நாட்டைக் காக்க சூப்பர் ஹீரோ அவதாரம் எடுக்கும் சாமான்யனின் கதை. ஆனால் ரசிக்கும் விதமாக அதை கொடுத்த விதத்தில் ஏ.ஆர். முருகதாஸை பல மடங்கு விஞ்சியிருக்கிறார் ராஜா.

விஜய் வழமையான ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் இவற்றோடு நகைச்சுவையும் இயல்பாக வருகிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் வேகம். அவரது ரசிகர்களுக்கு இது தாராளம். நமக்கும் பெரிதாய் அலுக்கவில்லை(சில இடங்கள் தவிர்த்து). சலிப்பூட்டும் அவரது முந்தைய சாகசங்களை ஓரளவு தவிர்த்திருக்கிறார். பாராட்டுக்கள். 

ரெண்டு ஹீரோயினும் சும்மா. ஜெனிலியா ம்ம் பெரிதாய் இம்ப்ரெஸ் செய்யவில்லை. தங்கை கல்யாணத்திற்கு வந்த தேங்காய்கள் சிறுத்திருப்பதாய் விஜய் ஆதங்கப்படும் போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் குலுங்கி குலுங்கி வரும்போதும், விஜய்க்கு ஏதோ மருந்து கொடுத்து மேட்டர் பண்ண பார்க்கும் போதும் ஹன்சிகா வசீகரிக்கிறார்.


சந்தானம் எனக்கு பெரிய ஏமாற்றம் அவரை விட பராட்டா சூரி இதில் கவர்கிறார். எம்.எஸ். பாஸ்கர் அவ்வப்போது சொல்லும் ஒன்லைனர்களால் ரசிக்க வைக்கிறார். வில்லன்களுக்கு விஜய்யிடம் அடி வாங்குவது தவிர பெரிதாய் வேலையில்லை.

விஜய் ஆண்டனி பாடல்கள் கேட்கலாம் ரகம். அங்க இங்க சுட்டாலும் அனைவரும் ரசிக்கும் விதமாக படத்தை தந்திருக்கிறார் ஜெயம் ராஜா. இரண்டாம் பாகம் ரொம்பவும் போரடித்தது உண்மை ஆனால் தியேட்டரில் கேட்ட கைதட்டல்களும் விசில் சத்தங்களும் எல்லோருக்கும் அப்படியல்ல என்பதை புரிய வைத்தது. இருந்தாலும் சண்டைக் காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாமே ராஜா. விஜய் தூக்குடுவை ரீமேக்குவதாக இருந்தால் பிரபுதேவாவை விட ராஜாவை நம்பி கொடுக்கலாம். 


அப்புறம் இந்த படத்தை சலிப்பில்லாமல் என்னைப் பார்க்கச் செய்த ஏ.ஆர்.முருகதாஸுக்கு நன்றி. பிறகு அட்டு ஃபிகரை பார்த்துட்டு பார்த்தா சுமாரான ஃபிகரும் பேரழகியா தெரிவது போலத்தான் இதுவும். 

வியாழன், 27 அக்டோபர், 2011

7ம் அறிவு - என் பார்வையில்



இதற்கு முன் ஒரு படத்தை இத்தனைக் கஷ்டப்பட்டு பார்த்ததில்லை. காலை 10.30 காட்சிக்கு போனால் house full போர்ட் போட்டு விட்டார்கள். சரி வீட்டுக்கு போகலாம் என்று நினைத்த வேளையில் சனீஸ்வரன் நண்பர்கள் ரூபத்தில் விளையாட ஆரம்பித்தான். அடுத்த காட்சியை பார்த்து விட்டு போகலாமென்ற வற்புறுத்தலுக்காக நின்றால் அடுத்த காட்சி நேரத்திலும் நம்மவருக்கே உரிய தள்ளு முள்ளுகளால் நான் மாத்திரம் உள்ளே செல்ல நண்பர்கள் வெளியே ஒருவருக்கு ஒரு டிக்கெட் மட்டுமே என்பது தியேட்டர் ரூல் என்பதால் புலம்ப கூட பக்கத்தில் ஆள் இல்லாமல் தலையைலடித்துக் கொண்டே படத்தைப் பார்த்தேன்.

முருகதாஸில் எனக்கு எப்போதும் பெரிய அபிப்பிராயம் கிடையாது. தீனா ஒரு மொக்கை, ரமணா கேப்டன் படங்களில் ஏதோ சொல்லிக் கொள்ளும் படியான படம். கஜினி மெமெண்டோவின் ஒரு மலினமான பதிப்பு. 

யோசித்து பாருங்கள் மெமெண்டோ பார்த்த பின் லெனார்டின் மனைவியைக் கொன்ற ஜோன் ஜி யார்? நட்டாலியின் காதலனா? இல்லை ஏற்கனவே டெடியுடன் சேர்ந்து கொன்றதாக ஒருவனை சொல்கிறார்களே அவனா? சரி லெனார்டின் மனைவி இன்சூலின் அதிகமாக செலுத்தப்பட்டதால் செத்திருந்தால் டெடி அவனை வைத்து ஏன் அவர்களை போட்டுத் தள்ள வேண்டும். ஜோன் ஜியைக் கொல்ல முன்  அவன் சேமி பற்றி சொல்வான், அப்படியானால் லெனார்டுக்கு ஏலவே அவனோடு பழக்கமுண்டா? என பல கேள்விகள் விரியும். ஆனால் அப்படி ஒரு படத்தை ரொம்ப சீப்பா காதலியைக் கொன்றவனை அடிக்கடி நினைவு தப்பி போகின்றவன் பலி வாங்குகின்றான் அவ்வளவுதான் என்ற ரீதியில் எடுக்கிறாரென்றால் தமிழ் ரசிகர்களை அவர் எவ்வளவு கேவலமாக எடைப் போட்டிருக்கிறார். படத்தில் சஞ்சய் ராமசாமி,கல்பனா என்ற பாத்திரங்களில் சூர்யா,அசின் இருவரினதும் அட்டகாசமான நடிப்பில் வந்த சுவாரஸியமான காதல் காட்சிகளை தவிர்த்து படத்தை கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

சை ஃபை, ஃபேண்டசி படங்களில் லோஜிக் இல்லாமல் இருக்கலாம் பிரச்சினையில்லை. இன்செப்ஷனில் எல்லோரும் மருந்தேற்றிக் கொண்டு கனவுகளில் மூழ்கிப் போவதையும், ப்ரஸ்டீஜில் மனிதனைப் பிரதியெடுக்கும் டெஸ்லா செய்த மெஷினையும் லோஜிக் பார்க்காமல் ஏற்றுக் கொண்டால் படத்தில் சுவாரஸியத்திற்கு குறைவில்லை. சரி அப்படிப் பார்த்தால் ஊசி மருந்து அடிச்சி ஒருத்தர்ட ஜீனோமயே மாற்றி அவரோட பரம்பரையில ஒருத்தர் எப்பையோ கற்ற வித்தைகளை எல்லாம் உடம்பில் ஆவி புகுந்தது போல வரப் பண்றீங்க. நம்பித் தொலைக்கிறோம் அதை சுவாரஸியமாக கோர்வையாக சொல்ல வேண்டாமா?

முருகதாஸை வாயில்லா விட்டால் நாய் தூக்கிக் கொண்டு போயிருக்கும். ஹோலிவுட் காரனே காப்பியடிக்க கூடிய அளவுக்கு கதை பண்ணக் கிளம்பியவர் அப்படியெல்லாம் ஒண்ணும் புடுங்கல. ஃபர்ஸ்ட் ஹாஃப கலகலப்பா கொண்டு போவோம். செகண்ட் ஹாஃப்ல சேஸிங், எக்‌ஷன்ன்னு ஏதாவது விறு விறுப்பா பண்ணுவோம்னு முடிவு பண்ணி வழமையான தமிழ் சினிமாக்களின் மசாலா ஃபார்முலாவில் காட்சிகளை பிரதியிட்டிருக்கிறார். காட்சிகள் வழமையானதாகவும், சில்லியாகவும், சுவாரஸியமற்றும் இருப்பதால் படம் தலைவலியை உண்டு பண்ணுகிறது.

இவர ரொம்ப கலைத்துவமா எல்லாம் படம் எடுக்க சொல்லல. இந்த மாதிரி டெக்னிக்கல் வித்தை காட்டுகிற ஷங்கரைப் பாருங்கள். ஒரே கதைய திரும்ப திரும்ப எடுத்தாலும் ஒவ்வொரு ஷாட்டும் புதுசா இருக்குல்ல. அப்புறம் சொல்ல வந்ததை சிம்பளா பிரச்சினை இல்லாம சொல்லி முடிக்கிறாறில்ல. மயக்கம் என்ன, வேலாயுதம் ஏன் ஒஸ்தி அளவுக்கு கூட பாட்டுகள் இல்லை என்று பார்த்தால் தியேட்டரில் நிம்மதியாக தூங்கவும் விடாமல் பின்னணி இசை ஒரே இரைச்சல். சூர்யா, வில்லன், ஸ்ருதி மூன்று பேரையும் குறை சொல்லக் கூடாது நல்லா நடிச்சிருக்காங்க. ரவி கே. சந்திரன் ஒகே ஆனால் இந்த மனுசண்ட ப்ளெக், பஹேலி, சவாரியா, ஆயுத எழுத்து, கன்னத்தில் முத்தமிட்டால் எல்லாம் யோசித்தால் இதுல ஒண்ணுமே இல்லை.

இப்படி தெரிஞ்சிருந்தா பேசாம வேலாயுதம் போய் சிரிச்சு பார்த்து இருப்பேன். இல்லன்னா ரா 1 போய் தலைவர் வர்ற சீனுக்கு விசில் அடித்திருப்பேன். இல்லாட்டி வீட்டிலேயே உக்காந்து பணியாரம் சாப்பிட்டிருப்பேன். அதெல்லாம் விட்டுட்டு இதை ஒரு படம்னு பார்த்து. முருகதாஸிடம் ஒரே ஒரு விண்ணப்பம் இனி மேல் படம் எடுங்க ஆனா ஒவரா பேசாதிங்க.

திங்கள், 24 அக்டோபர், 2011

சுவரில் கிறுக்கியவை

சும்மா இருக்க முடியாமல் என் ஃபேஸ்புக் சுவரில் அவ்வப்போது கிறுக்கியவை



உனக்கு புரியாதென்றப் போதும்
தொடர்கிறேன்
கவிதை எழுதுவதையும்
உன்னைக் காதல்
செய்வதையும்……..

தண்ணீருக்கு பதிலாய்
கண்ணீரால் துவைக்கிறேன்
நீ வாங்கித் தந்த
ஆடையை

கொடுத்ததெல்லாம்
திரும்பக் கேட்டவள்
மறந்து விட்டாள்,
அவள் நினைவுகளையும்
தந்த முத்தங்களையும்
திரும்பப் பெற

உன்னால்
இழப்புகளேதுமில்லை
வரவுதான்
இன்னமும் மிச்சமிருக்கிறது
உன் நினைவுகளேனும்


உன்னிடம் பேசிக்களித்த
நீண்ட இரவுகள்
இன்னமும் தொடர்கின்றன
என்ன? சம்பாஷணையெல்லாம்
என் தலையணையுடன்தான்

இப்போதுதான் புரிகிறது
எப்போதும் உடனிருப்பேன்
என நீ சொன்னதன் அர்த்தம்
அழகாய் எதைப்பார்த்தாலும்
உன் ஞாபகம்

காம்ப்ளான் அருந்தாமலே
தினம் வளர்கிறது
 உன் மீதான என் காதல்

புதன், 19 அக்டோபர், 2011

பிரபஞ்ச சூப்பர் ஸ்டார்


பிரபஞ்ச சூப்பர் ஸ்டார்(அகில உலக என யாரோ ரஜினி என்பவரை அழைக்கிறார்களாம்) பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனின் திருவடி பணிந்து இப்பதிவை ஆரம்பிக்கிறேன்.

தலைவர் ஓர் அக்குபஞ்சர் டாக்டர். நன்றாக சம்பாதித்துக் கொண்டிருந்தவர் , கலையார்வம் கொண்ட தமிழ் ரசிகர்கள் தமிழில் தரமான சினிமாக்களின் வருகையின்மையால் வெதும்பிக் கொண்டிருந்ததை, எதேச்சையாக தன் கருப்புக் கண்ணாடியைக் கழட்டிய ஒரு கணப்பொழுதில் ஞானத் திருஸ்டியால் அறிந்தார். ரசிகர் தம் குறை தீர்க்க அவர் எடுத்த உடனடி நடவடிக்கைத்தான் ”லத்திகா”.  தமிழ்நாட்டில் பெரம்பலூரில் 200 நாட்களைக் கடந்து இன்னமும் வெற்றி நடைப் போடும் அரியக் கலைப் பொக்கிஷம். அதைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்காகவே சுரங்கப்பாதை, மூலக்கடை முருகன், மன்னவன், திருமா, தேசிய நெடுஞ்சாலை, ஆனந்த தொல்லை என ஒரே நேரத்தில் 6 படங்களில் ஓய்வொழிச்சலின்றி நடித்து வரும் ஒப்பற்ற திரைக்கலைஞன். ”எழுச்சித் தமிழன்” திருமாவளவன் அவர்களால் “பவர் ஸ்டார்” எனப் பட்டமளிக்கப்பட்டு இன்று ரசிகர்களாலும் அவ்வண்ணமே அழைக்கப்படுபவர்.


காற்றடைத்த பலூன்களான இன்றைய தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களையெல்லாம் தன் அக்குபஞ்சர் ஊசியால் குத்தி காத்துப் போன ஸ்டார்களாக்கிய நம்ம பவர் ஸ்டார் பெருமைதனை அகில உலகுக்கும் பரப்பும் நோக்குடன் ஹன்சிகாவின் காதலனும் இலங்கைப் பதிவருமான மைந்தன் சிவாவினால் ஆரம்பிக்கப் பட்ட முகப்புத்தக குழுமம் இன்று 600க்கும் மேற்பட்ட உறுப்பினர்களோடு வீறுநடைப் போடுகின்றது. அவரது இவ்வரியப் பணிக்கு ஓர் அணிலாக நானும் ஓர் பதிவின் மூலம் கைக்கொடுப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

வியாழன், 6 அக்டோபர், 2011

சிலிக்கான் சிங்கம்





”எந்தவொரு மனிதனும் இறப்பதற்கு விரும்புவதில்லை. சொர்க்கத்திற்கு செல்ல நினைப்பவர்கள் கூட. என்றாலும் மரணம் யாராலும் வெற்றிக் கொள்ளப்பட முடியாத, நாம் அனைவரும் கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒரு இலக்கு. மரணம் வாழ்வின் மிகச் சிறந்த கண்டுப்பிடிப்பு. பழையதைக் கழித்து புதியதை புகுத்தி வாழ்வை மாற்றும் தூதன். நீங்களும் கிழடு தட்டி இவ்விடத்தை விட்டு அகலும் நாள் வெகு தூரத்தில் இல்லை. நாடகத்தன்மையான வார்த்தைகளாயிருந்தாலும் இதுவே உண்மை.”

என்று நிலையாமையைப் பற்றிக் கூறியவர் இன்றிலிருந்து நம் மத்தியில் இல்லை. ஆம் ஆச்சரியப்படத் தக்க தொழினுட்ப சாதனைகளின் மூலம் எதிர்காலத்தை நிகழ்காலத்திலேயே காணும் சாத்தியங்களை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்து விட்டார். வாக்மனையும், லாப்டாப்பையுமே வாய் பிளந்து பார்க்கும் என்னைப் போன்ற தற்குறிகளுக்கு எல்லாம் ஐப்பாடும், ஐஃபோனும், ஐப்பேடும் பெரும் ஆச்சரியங்கள்தான்.

இந்த பெயரை நான் முதன்முதலில் கேள்விப்பட்டது குமுதத்தில் வந்த “பிஸினஸ் மகாராஜாக்கள்” என்ற தொடரில். அதன் பிறகு “ஃபொரெஸ்ட் கம்ப்” திரைப்படத்தில் டோம் ஹேன்க்ஸ் இறால் பிடித்து சம்பாதிக்கும் பணத்தை டான் அப்பிள் நிறுவனத்தில் முதலிட்டு பெரிதாய் காசு பார்க்கும் போது அத்தனை லாபம் கொழிக்கும் கம்பனியை நடத்துமளவுக்கு இவரென்ன அவ்வளவு பெரிய அப்பாடாக்கரா என யோசித்திருக்கிறேன். ஆப்பிள் நிறுவன CEO ஆக 2006 தொடக்கம் 2010 வரை வருடமொன்றிற்கு அவர் பெற்ற சம்பளம் 1 டொலர் மட்டுமே. இதை படிக்கும் ஒரு ரூபாய் சம்பளம் பெற்ற வேறு யாரேனும் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.

திருமணம் செய்து கொள்ளாத ஒரு இளம் ஜோடிக்குப் பிறந்து பின் தத்துக் கொடுக்கப்பட்டு கல்வியில் நாட்டமின்றி வளர்ந்து பின் தொழினுட்ப புரட்சியின் தலையாய நபராக மாறிய இவரின் வரலாறு ஒரு சினிமா கதையை விட சுவாரசியமானது. வாழ்வில் சடுதியாக முன்னேற்றத்தை சந்தித்த ஜாப்ஸ் அதையொன்றும் நேர்மையான வழியில் அடையவில்லை. நேர்மையாக ஒரே பாட்டில் வெற்றியை சுவைக்க அவர் ஒன்றும் ரஜினிகாந்த் இல்லையே. ஆக சாம,தான, பேத, தண்டங்களைப் பிரயோகித்தும் முடியாத போது ஏகப்பட்ட தகிடு தத்தங்களை செய்துமே அவர் இந்த இடத்திற்கு வந்தார். துரோகம் என்ற வார்த்தைக்கெல்லாம் இந்த வியாபாரக் காந்ததின் அகராதியில் வியாபர நுணுக்கம் என்ற அர்த்தம் இருக்கக்கூடும்.
”முன்னேற்றம் உன் குறிக்கோளாயின் நீ மற்றவர்களைப் பற்றி சிந்திப்பதை விட்டுவிடு” என்ற பில்லா அஜித் பாணியிலான இவரது மேற்கோள் உலகப் பிரசித்தம்.

தரமான பொருட்கள் மலிவான விலையில் இது ஸ்டீவின் தாரக மந்திரம். இதன் மூலம் அதிகமான வாடிக்கையளர்களை கவர்ந்த இவர் பெற்ற லாபமும் பல மில்லியன் டாலர்கள் இருக்கும். ஆனால் அதற்காக உலகெங்கும் இருந்த ஆப்பிள் தொழிற்சாலை பணியாளரகள் அனுபவித்த துன்பம் சொல்லி மாளாது. சீனாவில் ஐபாட் தொழிற்சாலை ஒன்றில் தங்கியிருந்து வாரத்திற்கு 60 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்து மாதமொன்றிற்கு 100 டொலர் அளவில் மட்டுமே சம்பளம் பெற்ற 200,000 ற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வருவாயில் பாதிக்கு மேல் உணவு மற்றும் வதிவிடத்திற்காக பிடித்தம் செய்யப் பட்டது, எல்சிடி திரைகளை சுத்தம் செய்யப் பயன்படும் இரசாயனப் பொருளால் பல தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டது என்பனவெல்லாம் வண்ணமயமான ஆப்பிளின் சரித்திரத்தின் கறுப்பு அத்தியாயங்கள்.
நம்மை ஒரு நவீன உலகுக்கு வழிநடத்தியவராக ஸ்டீவை கெளரவிக்கும் நாம் அந்த தொழிலாளர்களையும் என்றென்றும் நினைவு கூறுதலே ஞாயமாகும்.


டிஸ்கி:- ஆப்பிளின் லேட்டஸ்ட் தயாரிப்பான ஐஃபோன் 4s எதிர்பார்த்த வர்த்தக வெற்றியைப் பெற தவறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Posts with Thumbnails