வெள்ளி, 31 டிசம்பர், 2010

2010 இல் நான் ரசித்த திரைப்படங்கள்

2010 தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை சிறப்பாய் இருந்ததாக பேசிக் கொள்கிறார்கள். அதுவரை தமிழ் சினிமா கட்டிக் காத்த பாரம்பரியங்களை உடைத்த நந்தலாலா போன்ற படங்களும், உலக அரங்கிற்கு தமிழ் சினிமாவை இட்டுச் சென்ற எந்திரன் போன்ற படங்களும் இந்த வருடத்திலேயே வெளியாகின. கிட்டதட்ட 120 சென்ற வருடத்தில் வெளியானதாம். அதில் நான் பார்த்தது வெறும் 16 படங்கள் மாத்திரமே இந்தப் பதினாறில் எனக்கு ஏதோ ஒரு வகையில் பிடித்தது ஒரு 6 படங்கள் மட்டுமே. அவை கீழே

6 பாஸ் என்கிற பாஸ்கரன் 
சினிமாக்கள் ஒரு தர்க்கனூபூர்வமாய் ஏற்றுக் கொள்ளப்படத்தக்க களத்தில் மட்டுமே இயங்க வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் எனக்கு கிடையாது. பார்க்கும் இரண்டரை மணி நேரத்தில் அது என்னை உள்ளீர்த்துக் கொண்டால் போதும். அவ்வகையில் இந்த வருடத்தின் சிறந்த சிரிப்புத் தோரணம் "பாஸ் என்கிற பாஸ்கரன்". சந்தானத்தப் பற்றி சொல்லத் தேவையில்லை. ஆர்யாவுக்கும் அருமையாக டைமிங் காமெடி வருவது சிறப்பு.

5 அங்காடித் தெரு 
வலிந்து திணிக்கப்பட்ட சோகம், ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் அஞ்சலியின் மிகை நடிப்பு, மகேஷின் கொஞ்சமும் உணர்ச்சியற்ற நடிப்பு என்பவற்றை தவிர்த்துப் பார்த்தால் அருமையான படம். "கண்ணெதிரே தோன்றினாள்" படத்தில் "பட்டாம்பூச்சி உன் தோளில் இருந்துச்சு உனக்கு வலிக்குமேன்னுதான் " என வசனம் கேட்டப் போது சுஜாதாவா இப்படி என நொந்து போனேன். கிட்டத்தட்ட அதே உணர்வு "எறும்பு வாழும் காட்டில்தான் யானையும் வாழுது " என ஜெமோ வசனம் கேட்கையில். முழுமையான பார்வை

4 ஆயிரத்தில் ஒருவன் 

நிறையப் பேருக்கு படம் பிடிக்கவில்லை. அரசுரிமையை தியாகம்  செய்து உத்தமசோழருக்கு முடிசூட்டி வைத்த அருள்மொழிவர்மனின் (ராஜ ராஜா சோழன்) தியாகத்தையும்  கடல் தாண்டி சென்று படைத்த வீர வரலாறுகளையும் இன்றளவும் சிலாகிப்பவர்களால் சோழர்களை காட்டுமிராண்டியாக நரமாமிசம் உண்பவர்களாக காட்டியதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. சிலருக்கு ஆங்கிலப்படத்தை நிகர்த்த கணினி வரைகலை உத்திகள் இருக்கவில்லையே என்ற வருத்தம் இருந்தது. ஆனால் என்னளவில் இது தமிழின் ஆகச் சிறந்த முயற்சி. சென்ற வாரம் பார்த்தப் போதும் எனக்குப் பிடித்தே இருந்தது. திரைக்கதை இரண்டாம் பாதியில் நிலையில்லாமல் அலைவதொன்றே எனக்கு இருந்த ஒரே குறை.அப்புறம் வலிந்து திணிக்கப்பட்ட அந்த இந்திய ராணுவத்தின் காட்சிகள். மற்றும்படி செல்வாவிடம் இருந்து இன்னமும் எதிர்பார்க்கிறேன். என்னளவில் மணிரத்தினம்,பாலாவுக்குப் பிறகு தனக்கென ஒரு திரைமொழியைக் கொண்டிருப்பவர் செல்வராகவனே. முழுமையான பார்வை

3 . எந்திரன்

இந்தப் படம் எப்பேர்ப்பட்ட மொக்கையாக இருந்தாலும் கொண்டாடி இருப்பேன். ஆனால் சிறப்பாக அமைந்தது மகிழ்ச்சி. மற்றைய படங்களைப் போலல்லாமல் ஏதோ எங்கள் வீட்டு விசேடம் போல எதிர்பார்த்துக் கொண்டாடி மகிழ்ந்த ஒரு திருவிழா. 

2 . நந்தலாலா 
பாரதி வரிகளோடு மிஷ்கினின் இன்னுமொரு படைப்பு. "சித்திரம் பேசுதடி" பார்த்தப் போது மிஷ்கின் பற்றி எந்த ஒரு அபிப்பிராயமும் இல்லை. அஞ்சாதே பார்த்தப் பின்தான் எனக்கு மிஷ்கின் மிக முக்கியமானவராக தெரிந்தார். பலக் காட்சிகளில் நின்று  விளக்கமளிக்காமல் எம்மை யூகிக்க விட்டது பிடித்திருந்தது. ஆக நந்தலாலாவை அதிகம் எதிர்பார்த்தேன். ஆனால் படம் இலங்கையில் திரையிடப்படவே இல்லை. பிறகு DVD இல்தான் பார்த்தேன். குறைந்த வசனங்களும்  நிறைவான காட்சிகளுமாய் ஒரு அருமையான படம். கலைப் படங்கள் என்ற லேபிளோடு வருபவற்றில் பெரும்பாலானவை பொறுமையைச் சோதிப்பவை. ஆனால் சுவாரசியமான ஒரு சிறுகதைத் தொகுப்பை ஒரே மூச்சில் படித்து முடித்தது போன்ற ஒரு அலாதியான அனுபவத்தை தந்ததற்காகவே மிஷ்கினைப் பாராட்டலாம். ம்ம் படம் நிச்சயமாக ஒரு உள்ளார்ந்த சிலிர்ப்பைத் தரும் அழகியல் அனுபவம். எங்கே சுட்டால் என்ன மனதைத் தொட்டால் சரி என்ற எண்ணம் எண்ணம் கொண்டவன் என்பதால் கிக்குஜிரோவின் தழுவல் என்பது படத்தை ரசிக்க இடையூறாய் இல்லை.

1 . விண்ணைத் தாண்டி வருவாயா 

இந்த வருடத்தில் என்னை மிகக் கவர்ந்த படம். மைனா மைனா என்றொருப் படத்தை நிறையப் பேர் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். டிவி யில் ஒரிருக் காட்சிகள் பார்த்த போது வெகு அபத்தமாய் இருந்தது. அப்படியெல்லாமா  காதலிப்பார்கள். ஆனால் நான் பார்த்த அனுபவித்த காதல் விண்ணைத் தாண்டி வருவாயாவில் இருந்தது. அது பாட்டில் போய் கொண்டிருக்கும் வாழ்வில் தன பாட்டில் வருவது காதல். வெகு அன்னியோன்னியமான ஒரு காதல் ஜோடியின் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்தது போன்ற ஒரு அருமையான இயல்பான படம். கெளதம் வாசுதேவ் மேனனிடமிருந்து. ம்ம் காதல் ததும்பி நிரம்பி வழிகிறது படம் முழுவதும். காதல்,காதல்,காதல் படம் முழுக்க இது மட்டுமே.சின்ன சின்னக் காட்சிகளும் ரொம்பவே சுவாரசியம்.

"இதெல்லாம் விடு பொண்ணு எப்படி வோர்த்தா? "
"உயிரக் கொடுக்கலாம் சார்"
"சியர்ஸ்"

"நீ இருபத்தொரு வருஷமா வாழ்ந்த ஊர்ல நான் இருபத்து மூணு வருஷம் வாழ்ந்திருக்கேன் Which means நான் உன்னை விட ரெண்டு வயசு பெரியவ"

"சொத்தை கூட எழுதிக் கொடுப்பாரு ஆனா என்னை கட்டித்  தர மாட்டாரு "
"அப்ப எழுதித் தரச் சொல்லு"

"சார் Love favor the brave ன்னு சொன்னீங்க இல்ல ஒரு சின்ன correction,  love favor the intelligence"

இப்படி  சின்ன  சின்னதாய் அழகான வசனங்கள் எல்லாம் முன்பு மணி படங்களில் மட்டுமே பார்த்தது.  படம் பூராகவும் தன் இசையால் ஆக்கிரமித்திருந்தார் இசைப்புயல். முழுமையான பார்வை இங்கே 

குட்டி,தமிழ்ப்படம்,மதராசபட்டினம்,கோவா, சிங்கம், ராவணன், வ குவார்டர் கட்டிங், உத்தமபுத்திரன், மன்மதன் அம்பு என்பன நான் பார்த்த ஏனைய படங்கள். மதராசப் பட்டினம் ஓரளவு நல்லப் படமே ஆனால் டைட்டானிக் கையும் லகானையும் காட்சிக்கு காட்சி ஞாபகப்படுத்தியது பலவீனம்.  குட்டி தனுஷ் மற்றும் பாடல்களுக்காகவும் தமிழ்ப்படம் லொள்ளு சபா பார்ப்பது போல சிரிப்புக்ககவும் பார்க்கக் கூடிய ரகம். சிங்கம் திரையரங்குக்கு சென்றதால் கடனே எனப் பார்த்து தொலைக்கலாம். கோவா, குவார்ட்டர் கட்டிங் ரொம்பவும் சுமார். உத்தமப்புத்திரன் எழுந்து ஓடி விடலாம்  என்ற உணர்வு இரண்டாம் பாதியில் விவேக் வந்ததால் இல்லாமல் போனது.



எதிர்பார்த்து சென்றவனை ஏமாற்றியவர்கள் என்றால் இவர்கள்தான். ராவணனில்  மணி  தவிர மற்ற எல்லாமே இருந்தது. மன்மதன் அம்பில் கொஞ்சம் அளவுக்கதிகமாகவே கமல் இருந்தது என்பதே குறை. ராவணனில் இசை,ஒளிப்பதிவு,நடிப்பு என்பனவும் மன்மதன் அம்பில் மாதவன் நடிப்பு, வசனங்கள் என்பனவும் ரசிக்கக்கூடியவை. ராவணனில் கார்த்திக் அனுமானாம் அதை காடுகிறேன் பேர்வழி என மணி கொஞ்சம் குரங்கு சேட்டை செய்திருக்க கமலும் போனில் ஏதேனும் வழிக் கிடைக்கும் என பேசிக்கொண்டே செல்கையில் முட்டுச் சந்தில் முட்டிக் கொண்டு நிற்பதாயும்  நடுத்தெருவில் நிற்பதாயும் பாலச்சந்தர் பாணி குறியீடுகள் எல்லாம் வைத்திருந்தார். நீங்களுமா கமல்?


ஞாயிறு, 7 நவம்பர், 2010

ஒரு ரஜினி ரசிகனின் பார்வையில் கமலின் சிறந்த 10 படங்கள் பாகம் II




 பாகம்  I
5 . நாயகன் 

டைம்ஸ் சஞ்சிகையினால் எப்போதைக்குமான சிறந்த 100  படங்களில் ஒன்றாக தெரிவானது. பம்பாயில் தாதாவாக கோலோச்சிய தமிழர் வரதராஜ முதலியாரின் கதையையே எடுத்ததாக மணிரத்னம் சொன்னாலும், The God father படத்தின் இரு பாகங்களினதும் பாதிப்பு படம் பூராகவே தெரியும். படத்தைப் பார்த்த போது பிரமித்துப் போயிருந்தாலும் பிறகு The God father பார்த்த போது நொந்து போனதும் உண்மை. ஆனாலும் படத்தை சிறப்பாக தமிழ் படுத்திய வகையில் மணிரத்னம் நிச்சயம் பாராட்டுக்குரியவரே. இதே படத்தின் ஹிந்தி ரீமேக் "தயாவான்" பார்த்தால் மணியின் அருமை புரியும். பின்னணி இசை, ஒளிப்பதிவு, நடிப்பு என எல்லாமே ஒரு படத்துக்கு சிறப்பாக அமைந்தது இந்தப் படத்திற்காய்த்தான் இருக்கும். 

4. மகாநதி 


கமலின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்று. குழந்தை பாலியல் தொழிலாளர்கள் பற்றி உருக்கமாக சொன்ன திரைப்படம். சிறைச்சாலை சென்ற அனுபவம் பெற விரும்பினால் நான் தாராளமாய் பரிந்துரைக்கும் படம் the sawshank redemption . அதற்கு கொஞ்சமும் குறையாத வகையில் தமிழில் இயல்பான சிறைச்சாலைக் காட்சிகள் இடம் பெற்ற படம் என மகாநதியைக் கூறலாம். சலனமற்று  ஓடும் நதியைப் போல தன் போக்கில் இயல்பாய் வாழும் கிருஷ்ணஸ்வாமி பணத்தாசையால் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அதன் விளைவாக அவன் சந்திக்கும் இழப்புகளையும் அடுத்து, தேடிச் சோறு  நிதந்தின்று வாழும் சின்னத்தனமான வாழ்க்கையை விடுத்து கட்டற்ற காட்டாறாய் மாறி அதற்கு காரணமானவர்களை பலி தீர்ப்பதே கதை. நுணுக்கமான நடிப்பு என்பார்களே அப்படி என்றால் என்னவென கமலின் இந்தப் படத்தில் பார்க்கலாம். 

3.  அன்பே சிவம் 


கமல் என் பிரிய நடிகர்களில் ஒருவரான மாதவனுடன் சேர்ந்து நடித்தப் படம். எப்போதும் ஆள் மாறாட்ட குழப்பங்களை வைத்து நகைச்சுவையாய் கதை சொல்லும் சுந்தர் c படம் என்பதால் அன்பு ,சிவம் என இருவர் அவர்களிடையே ஏற்படும் ஆள்மாறாட்ட குழப்பம் என எதிர்பார்த்தால் சுந்தரிடமிருந்து இப்படி ஒரு படமா என வியக்க வைத்தப் படம். நல்லசிவம்  அதீத புத்திசாலித்தனத்தையும், வர்க்க உணர்வையும் தன சோடாப் புட்டி கண்ணாடிக்குள் மறைத்துக் கொண்டு கலகலப்பாய் வாழும் ஒரு போராளி. முதலாளித்துவத்தின் பிரதி நிதியாக அன்பரசு என இரண்டே பாத்திரங்கள் அவர்களுக்கிடையிலான உரையாடல் என் செல்லும் படத்தை போரடிக்காமல் கொண்டு சென்றது சுந்தரின் சாமர்த்தியம்.ஒரு கம்யுனிஸ்டுக்கு இருக்க வேண்டிய தீவிரம் கமலிடம் இருக்காது. அத்தோடு  படத்தை ஆழமாகப் பார்த்தால் பாட்டாளிகளின் எதிரிகளான  பூர்ஷ்வாக்களையும்  அரவணைத்துச் செல்வதே பொதுவுடமைக்கான வழி என்ற ஒரு போலியான தீர்வைக் காட்டுவதாக வேறு தோன்றும்.எனினும் ஆங்காங்கே வரும் அழகான வசனங்களுக்காகவே படத்தைப் பார்க்கலாம். 

2. வறுமையின் நிறம் சிவப்பு 

 என்னை அதிகம் பாதித்த சினிமா பாத்திரம் எது எனக் கேட்டால் Forrest gump க்கு பிறகு இதைத்தான் சொல்வேன். இளந்தாடியும் புத்திசாலித்தனமும் சுயாபிமானமும் எல்லாவற்றுக்கும் மேலாக அறச்சீற்றமும் மிகுந்த கோபக்கார இளைஞன் ரங்கன். காதலுக்காக கூட தன சுயத்தை விட்டுத் தராத அளவுக்கு கர்வம் மிகுந்தவன்.  இந்தப் பாத்திரம் தந்த பாதிப்பில் நானும் முகச் சவரம் பற்றிய கவலை எல்லாம் மறந்து திரிந்த நாட்கள் உண்டு. 

1. சலங்கை ஒலி

 நிராகரிப்பை போன்று வலி தரக்கூடியது வேறெதுவுமில்லை. சலங்கை ஒலி  அப்படி தன் கனவான நாட்டியத்திலும் சரியான அங்கீகாரமின்றி, காதலிலும் வெற்றிப் பெற முடியாது குடிபழக்கத்திற்கு அடிமையாகி மற்றவர்களை விமர்சித்தேனும் தன் சுயத்தை நிறுவ முயலும் ஒருவனின் கதை. 
ஈற்றில் அங்கீகரிக்கப்படாது போன தன் திறமையை தன் காதலியின் மகளின் நாட்டியத்தின் மூலம் மீட்டெடுத்து அக்கைத்தட்டல் தந்த திருப்தியில் உயிர் விடும் பாலக்ருஷ்ணன் பாத்திரம் அலட்சியமும் நிராகரிப்பும் தனிமையும் சூழ்ந்த ஒரு வாழ்வின் கொடுமையை நம்முன் நிகழ்த்திக் காட்டியப் படம். எத்தனை முறை பார்த்தாலும் படம் தரும் பாதிப்பு ஒரு போதும் குறைவதில்லை. என்னளவில் கமலின் ஆகச் சிறந்தப் படம் இதுவே. 



ஒரு ரஜினி ரசிகனின் பார்வையில் கமலின் சிறந்த 10 படங்கள்

கமல், உலகின் ஆகச் சிறந்த நடிகர் எனவும் இவர் மட்டும் ஹோலிவூட்டில் பிறந்திருந்தால் டேவிட் ஹோப்மன், அல் பசினோ, டோம் ஹான்க்ஸ் வகையறாக்கள் வீட்டுக்கு மூட்டை கட்டியிருக்க வேண்டுமெனவும் அவர்தம் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். அது சற்று மிகைப்படுத்தப் பட்ட கூற்று எனினும் இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் அவரும் ஒருவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

மிகச் சிறு வயதில் நான் பார்த்த கமல் படங்கள் எல்லாம் அருமையான மசாலாக்கள். உயர்ந்த உள்ளமும் தூங்காதே தம்பி தூங்காதேயும் மறக்க இயலாத படங்கள். உயர்ந்த உள்ளத்தில் அந்த ஆட்டோ சேசிங் காட்சி இன்னமும் கண்முன் நிழலாடுகிறது. அப்போது ரஜினி கமல் பேதம் எல்லாம் கிடையாது. தொன்னூறுகளில் ரஜினி பித்து தலைக்கடித்திருந்த நேரம் கமல் படங்கள் எப்போதும் தோல்வியுற வேண்டுமென நினைப்பேன். ஆனால் இப்போதெல்லாம் அப்படியில்லை.ரஜினி- கமல் என்ற வரிசை இனி ஒரு போதும் கமல்- ரஜினி என மாறி விடாது என்ற நம்பிக்கையினாலிருக்கலாம்.
உலக நாயகன், கலைஞானி, சூப்பர் ஆக்டர் எனப் பல பட்டங்கள் இவருக்கு வழங்கப் பட்டாலும் எனக்குப் பிடித்ததென்னவோ காதல் இளவரசன்தான். சத்யாவில் வரும் "வளையோசை" பாடல் போதும். இவர்தான் என்றென்றைக்குமான காதல் இளவரசன் எனச் சொல்ல.

சரி இனி என் பார்வையில் கமலின் சிறந்தப் பத்து படங்கள் எனக் கருதுபவற்றை வரிசைப்படுத்தியுள்ளேன்இது என் தனிப்பட்ட விருப்பம் மட்டுமே. உங்கள் கருத்துகளையும் கீழே பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்

10. மும்பை எக்ஸ்பிரஸ்

கமல் என்ற நடிகனை விட்டு விடுங்கள். ஒரு திரைக்கதாசிரியராகவும்  வசனகர்த்தாவாகவும் கமல் என்னைப் பெரிதும் ஈர்த்தப் படம் இது. வாத்தியார் சுஜாதா சொன்னது போல முதல் காட்சியிலேயே கதை ஆரம்பித்து விடும். கதாப்பாத்திரங்களுக்கிடையே நிலவும் குழப்பங்கள், கிரேசி மோகன் பாணியில் வசனங்கள் என இந்த ஸ்டைலில் அவர் நிறையப் படங்கள் எடுத்திருந்தாலும் இது அவை அனைத்தையும் விட நேர்த்தி மிக்கது என்பது என் கருத்து. பசுபதிக்குள் இருந்த நகைச்சுவை நடிகனை வெளிக்கொணர்ந்த படம். கட்டுகோப்பான திரைக்கதை என்பதாலேயே என்னை ஈர்த்தது. இது நிச்சயம் எங்கும் சுட்டப் படம் அல்ல என்று நம்புகிறேன். ஆனால் தாராளமாக ஹோலிவூட்டிலும் முயன்று பார்க்ககூடிய கதை.


9. வேட்டையாடு விளையாடு

 
கமல் அற்புதமானதொரு நடிகர். என்ன சில நேரங்களில் நன்றாக நடிப்பதோடு கொஞ்சம் அதிகமாகவும் நடித்து விடுவார். நஸ்ருதீன் ஷா அலட்டாமல் செய்த common man பாத்திரத்தை வலிந்து உருவாக்கிக் கொண்ட ஒரு செயற்கை தனத்தோடு செய்தது ஒரு உதாரணம். ஆனால் கமல் வெகு இயல்பாக நடித்த பாத்திரம் வேட்டையாடு விளையாடின் ராகவன் பாத்திரம். பெரும்பாலும் கமல் தன்னை முழுமையாக கெளதம் மேனனிடம் ஒப்படைத்திருப்பார் என நினைக்கிறேன்.

8. ஹேராம்

சில காட்சியமைப்புகளில் இயக்குனர் கமலும் பல காட்சிகளில் நடிகர் கமலும் தனித்து தெரிந்தாலும் திரைக்கதை கொஞ்சம் பலவீனமானதாக இருந்ததாக உணர்வு. கல்கத்தாக் காட்சிகளில் தெரியும் குறும்புத்தனம், வன்செயல்களின் போது கண்களில் காட்டும் பயமும் பதட்டமும், இரண்டாம் முறை பெண் பார்க்கையில் மெல்லிய சலனம் எட்டிப் பார்த்தாலும் அதை மறைக்கும் அலை பாயும் மனம், காந்தியை கொல்லக் கிளம்புகையில் கண்களில் காட்டும் வன்மம்(இதில் அதுல் குல்கர்னி கமலையும் மிஞ்சியிருப்பார்என அசத்தியிருப்பார். கற்றது தமிழில் தன் கொலைகளைப் பற்றிச் சொல்லும் ஜீவா அது புணர்ச்சியை ஒத்த மகிழ்வைத் தரக் கூடியது எனப் பொருள் பட ஒரு வசனம் பேசுவார். கமல் ஹேராமில் வசுந்தராதாசை துப்பாக்கியாக நினைத்துப் புணரும் காட்சி எத்தனை அழகான ஒரு குறியீடு. முத்தக் காட்சிகள் கூட கவிதையாகவே இருக்கும்.

7. குணா


stockholm syndrome சுவீடனின் ஸ்டொக்ஹோல்மில் உள்ள ஒரு வங்கியை கொள்ளையடிக்கச் சென்ற கொள்ளையர்கள் பிணைக்கைதிகளாக பிடித்திருந்தவர்களுக்கு சில நாட்களின் பின் அக்கொள்ளையர்கள் மீது ஏற்பட்ட பிடிப்பினை வைத்து உளவியலில் பாவிக்கப் பட்டு வரும் பதம். கிட்டத்தட்ட இதே கதைதான் குணாவும். விபச்சாரியான  தாய்க்குப்  பிறந்து அச்சூழலிலேயே வளரும் மனநலம் பிறழ்ந்த குணசேகரன் தன்னை சிவமாக எண்ணுவதோடு  தன்னை அபிராமி ஆகிய சக்தி வந்தடைவாள் எனவும் நம்புகிறான். அபிராமி என அவனால் கடத்தப் படும் பெண்ணுக்கு காலவோட்டத்தில் குணா மீது வரும் காதலே திரைப்படம். படம் நிச்சயமாக  ஒரு கிளாசிக்  இன்னமும் 20 வருடங்களுக்கு பின் பார்த்தாலும் நிச்சயம் பேசப்படும்.

6. மூன்றாம் பிறை 

 
ஷோபாவின் பிரிவு தனக்கு ஏற்படுத்திய துயரத்தை திரையில் கொண்டு வர பாலு மகேந்திரா எடுத்த திரைப்படம். நன்கு பக்குவப்பட்ட ஒரு பாத்திரம் கமலுக்கு, ஆசிரியர் பாத்திரம் அல்லவா. ஸ்ரீதேவியை வெகு சிரத்தையோடு பார்த்துக் கொள்வதும், ஒரு கணம் கோபம் கொண்டு பின் சமாதானம் செய்வதும் வெகு அருமையாக நடித்திருப்பார். கிளைமாக்ஸ் இல் கமலுக்கு ஏற்படும் வலியை நம்மையும் உணரச் செய்வது படத்துக்கு கிடைத்த வெற்றி. சிறு வயதில் தம்பியையும் பிறகு எங்கள் சித்தியின் மகளையும் தூங்கச்  செய்ய இந்தப் படத்தில் வரும் கண்ணே கலைமானே பாடலைத்தான் பாடுவேன். நாளை என் பிள்ளைகளுக்கும் இதைப் பாடலாம். காலத்தை வென்ற அருமையான தாலாட்டுப் பாடல்

சனி, 2 அக்டோபர், 2010

எந்திரன் என் பார்வையில்


 ஒரு பத்து வருடங்களுக்கு முன் "ஷங்கர்- கமல் - ஏ.ஆர்.ரஹ்மான்-சுஜாதா,  மீண்டும் இணையும்  இந்தியன் கூட்டணி " எனப் பத்திரிகையொன்றின் சினிமாப் பகுதியில் ஒரு ஓரமாக அறிவிப்பை பார்த்ததிலிருந்தே இப்படத்தை எதிர்ப்பார்த்திருந்தேன்.. கமல் நடிக்கவில்லை என்ற போதே சப்பென ஆனது. பிறகு அந்நியன் ஆரம்பித்த காலத்தில் அந்த கதைதான் இது என தகவல் வர விக்ரமும் பரவாயில்லை என்றுதான் நினைத்தேன். பிறகு அஜித், ஷாருக் எனப் பயணித்த இக்கதை கடைசியாக வந்துச் சேர்ந்திருப்பது இக்கதைக்கு மிக மிகப் பொருத்தமானவரிடம். பத்து வருடங்களுக்கு முந்தைய கதை இன்று எப்படி ரசிகர்களை கவரப் போகின்றது என்பதையெல்லாம் தகர்த்திருக்கின்றது எந்திரன். படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை அதகளப்படுத்தியிருக்கிறார்  ரஜினிகாந்த். 

ஷங்கர் பிரமாண்ட இயக்குனர் என மக்கள் அவருக்களித்த அங்கீகாரமும்  சுஜாதா என்ற விஞ்ஞானம் அறிந்த சுவாரசிய(பரப்பிலக்கிய)  எழுத்தாளரின் நட்பும் தமிழில் ஒரு sci-fi   திரைப்படத்தை எடுக்க வேண்டுமென்ற கனவை தூண்டி விட்டிருக்க வேண்டும். நிறைய  சுஜாதா  பாதிப்போடு  இன்று திரையில் விரிந்திருக்கிறது ஷங்கரின் பத்து வருட உழைப்பு.
படம் வர முன்னரே பல தளங்களிலும் பேசப்பட்ட அதே கதைதான். ஆனால் கடைசி வரை அதை சலிப்புத் தட்டாமல் கொண்டு  சென்றதில்தான் இருக்கிறது ஷங்கரின் வெற்றி. நிச்சயமாய் இந்தப் படத்தின் காட்சியமைப்புகளுக்காகவும் அனைவரையும் ஒருங்கிணைத்து நெறிப்படுத்துவதற்காகவும் ஷங்கர் உழைத்திருக்கக் கூடிய உழைப்பு படத்தில் Dr.வசீகரனின் உழைப்புக்கு இணையானதாய் இருக்கும். 

ஷங்கருக்கு என் இனிய இயந்திராவும் மீண்டும் ஜீனோவும் ரொம்பப் பிடிக்குமென நினைக்கிறேன். பல இடங்களில் இவ்விரு நாவல்களும் எட்டிப் பார்க்கிறது. சிட்டி அப்படியே ஜீனோவின் மனித வடிவம். உணர்வுகளற்ற இயந்திர அறிவு ஜீவி. சனா கிட்டத்தட்ட நிலா விகல்பமில்லாத அழகி, பல சந்தர்ப்பங்களில் எதிர்க்கும் திராணியற்று சுயநலமாய் முடிவெடுக்கும் சிபி போல டாக்டர் வசீ.  கண்களிலே ப்ரொஜெக்டர், ஹோலோ விம்பங்கள், புத்தகங்களை நொடியில் ஸ்கேன் செய்து மெமரியில் பதிந்து பின் விடை சொல்லி அசத்துதல் இன்னும் பல அதில் இருந்ததுதான். அதுவும் கிளைமாக்ஸ் அப்படியே மீண்டும் ஜீனோ. 

ஐஷை ஓவியமாய்த் தீட்டும் காட்சியும் ரோபோக் கூட்டத்துக்குள் கருப்பாடைக் கண்டுப் பிடிக்கும் காட்சியும் ஐ ரோபோட்டில் பார்த்தது.  Bicentennial Man போல என்று சொல்பவர்களுக்கு ரோபோ மனித உணர்வு பெறுதல் என்ற ஒரு ஒற்றுமையைத்  தவிர இரண்டுக்கும் ஒரு தொடர்பும்  இல்லை. அதிலும் ராபின் வில்லியம்ஸ் போன்ற ஒரு கலகலப்பான நடிகரை வைத்துக் கொண்டு அந்தப் படத்தை பெரும் இழுவையாக இழுத்திருப்பார் இயக்குனர் க்றிஸ் கொலம்பஸ். அவ்வகையில் ரஜினியை எப்படி முடியுமோ அப்படி அட்டகாசமாக காட்டியிருக்கிறார் ஷங்கர். 

ரஜினி மிக இயல்பாக நடிக்கக்கூடிய தேர்ந்த நடிகர். கூடவே படத்தில் அவரது பாத்திரப்  பெயருக்கேற்ப எளிதில் எவரையும் வசீகரிக்கக் கூடியவர். கண்களில் பயம்,காதல்,அர்ப்பணிப்பு,கோபம் போன்றவற்றை எல்லாம் காட்டும் இயல்பான மனிதனாக வசீ, கலகலப்பும் நகைச்சுவையுமாய் சிட்டி I , நக்கலும் நையாண்டியும் நிறைந்த வில்லத்தனத்துடன்  சிட்டி II என மூன்று வெவ்வேறு பரிமாணங்களில் கலக்கி இருக்கிறார் தலைவர். நிச்சயம் விருதுக்கு தகுதியானது எனினும் மசாலா படம் என்பது இடிக்கிறது. சரி இந்தியனில் கமலுக்கு கொடுத்தார்கள் அதற்கு எள்ளளவும் குறையாத நடிப்பு கிடைக்குமென நம்புவோம். ரஜினியை தவிர்த்து இன்னுமொருவர் இதை இதனிலும் சிறப்பாகச் செய்ய முடியுமெனச் சொன்னால் சிரிக்க வேண்டியதுதான். இதுவல்லாமல் சிட்டி தன்னை போல சிலரை உருவாக்கி விட கடைசி 40 நிமிடங்களில் திரையெங்கும் பல நூறு ரஜினிக்கள். ரஜினி ரசிகனுக்கு அற்புதமானதொரு முன்கூட்டிய தீபாவளி விருந்து. 

ஐஸ்வர்யா ராவணை விட வயது குறைவாகத் தெரிந்தாலும் பல காட்சிகளில் தலைவருக்கு அக்கா போல் இருக்கிறார். ரஜினியே வில்லனாய், காமெடியனாய் பிரகாசிப்பதில் டேனி,கருணாஸ்,சந்தானம் எல்லாம் காணாமல் போகின்றார்கள். ஒவ்வோர் காட்சியில் மறைந்த நடிகர் கொச்சின் ஹனிபா மற்றும் கலாபவன் மணி வருகின்றார்கள்.

வசனங்கள் படத்துக்கு பெரிய பலம்.
"உயிரோட இருக்காருல்ல?   வயரோடு இருக்கார்"
" அவ உடம்புல உடை இல்ல , ஆனா உயிர் இருக்கு"
கொச்சின் ஹனிபாவுடன் வரும் காட்சியில் உள்ள வசனங்கள்
"உன்னோட பாய் பிரண்டா இல்ல, டோய் பிரண்டா"
"காதலிச்சா நட்டு கழண்டுடும் "
மேற்சொன்னவை ரொம்பவும் நான் ரசித்தவை, மூவரில் எதை எதை யாரெல்லாம் எழுதினார்கள் எனத் தெரியாத நிலையில் சுஜாதா டச் இருப்பதாகப் பட்டது ஆனால் இவை கார்க்கியின் வசனங்கள் என நினைக்கிறேன் (அவரது ட்வீட்டில் கிடைத்த தகவல்) அட்டகாசம் கார்க்கி.

ஷங்கர் படத்தில் கலை, ஒளிப்பதிவு, இசை எல்லாம் உயர் தரத்தில் இல்லாவிட்டால் தான் ஆச்சரியம். ஆக இவை வழமைப் போலவே அசத்துகிறது. பின்னணி இசை அமைக்கும் காலங்களில் இரண்டு மணி நேரம்தான் தூங்கினேன் என்ற ரஹ்மானின் கூற்றில் கொஞ்சமும் மிகையில்லை. கலக்குகிறார் இசைப் புயல்.

இடைவேளைக்கு பின் படத்தின் ஆரம்பக் காட்சிகளில் ஏற்படும் சிறு தொய்வும், ரங்குஸ்கி கொசுக் காட்சியும் கிலிமாஞ்சாரோ பாடலை நுழைக்கவென வைத்த கலாபவன் மணி  காட்சியும் திருஷ்டிகள்.

மற்றும் படி நீண்ட நாட்களுக்கு அப்புறம் ஒரு மகிழ்வான திரையனுபவம். கட்டாயம் திரையரங்கு சென்று பார்க்கலாம். செல்லும் போது குழந்தைகளுடன் செல்வது அல்லது நாமே குழந்தைகளாய் செல்வது படத்தை இன்னமும் ரசிக்கச் செய்யும். Dot

புதன், 11 ஆகஸ்ட், 2010

என் டைரியிலிருந்து


ஒருவாறாக பூனைக்கு மணி கட்டியாகியாயிற்று. நவீன துட்டகைமுனுவை அரசு கட்சியிலிருந்தும் இடைநிறுத்தும் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். மேர்வின் சில்வா இலங்கை அரசியலின் சாரு நிவேதிதா. அவர்  மகாராஜா நிறுவனத்திற்கே சென்று அதன் தலைவரை ஏசுகிறேன் என்ற பெயரில் ஒட்டுமொத்த தமிழர்களையும் இந்தியானு பற தெமலோ( இந்தியப் பறத்தமிழர்கள்) எனத் தூற்றிய போதும், ரூபவாஹினிக்குள் குண்டர்கள் சகிதம் போய் குழப்பம் விளைவித்து பின் மண்டை உடைந்து வெளியேறிய போதும் வாளாவிருந்த அரசு இப்போதாவது விழித்துக் கொண்டது ஆச்சரியம். இதை விட ஆச்சரியம் இம்முறை தேர்தலில் இவரைப் பெருவாரியான வாக்குகளால் வெல்ல வைத்த மக்கள். முன்னாள் அமைச்சரால் மரத்தில் கட்டப்பட்ட அந்த சமுர்த்தி உத்தியோகத்தர்தான் இனிமேல் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.


பிரபா கணேசனும் திகாம்பரமும் எதிர்த்தரப்பிலிருந்து மக்களுக்கு சேவை செய்ய முடியாமலிருக்கும் அவல நிலையை எண்ணி அரசுடன் இணைந்து விட்டார்கள். திகா அரசுடன் சேர்வது ஆச்சரியம் தராத நிலையில் தம்மை ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைத்து விட்டு சகோதரனுக்கும்,கட்சிக்கும், தமிழர்களுக்கும் துரோகம் செய்த பிரபா கணேசனின் செயல் அருவருக்கத்தக்கது.

முரளிதரன் ஒய்வு பெற்ற போது காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வோமென அவசர அவசரமாக பதிவொன்றை எழுதியிருந்தேன். ரெண்டே பந்திகளில் ரொம்பவும் சுமாரான பதிவு. விகடனின் குட ப்ளொக்ஸ் பகுதியில் கூட அந்த பதிவு வந்திருந்தது. அண்மையில் சக பதிவர் யோகா (யோ வாய்ஸ் ) மூஞ்சி புத்தகத்தினூடு ஒரு தகவல் அனுப்பியிருந்தார். அதாவது அந்தப் பதிவு அப்படியே இலங்கையில் வெளிவரும் நியூஸ் வியூ எனும் சஞ்சிகையில் வந்திருந்ததாம். இன்னார் எழுதியது இன்ன வலைப்பூவிலிருந்து எடுக்கப்பட்டது என்ற எந்தத் தகவலும் இன்றி. மாத்தளையில் எந்தக் கடையிலும் இச்சஞ்சிகை கிடைக்காததால் நான் பார்க்கவில்லை. நன்றி இணையம் என்று போட்டால் சரி என நினைக்கிறார்கள். இணையத்திற்கு இந்தப் பதிவை காக்காவா தூக்கி  கொண்டு வந்து போட்டது. எவனோ ஒருவன் கொஞ்சமேனும் கஷ்டப்பட்டு எழுதியதை லவட்டத் தெரிகின்றவர்களுக்கு எதற்கும் எழுதியவனுக்கு நன்றியேனும் சொல்லுவோம் என்ற குறைந்த பட்ச நாகரிகமும் தெரியாமற் போவது வருத்தமாய் உள்ளது.  பதிவர்களை கிள்ளுக் கீரையாக நினைத்து விட்டனரா? என நண்பர் கண்கோன் கோபியும் குழுமத்தில் மடலிட்டுக் கொந்தளித்திருந்தார். அவர் அன்பிற்கு நன்றி. ஆசிரியப் பீடத்திடம் தொடர்பு கொண்டு கேட்கத்தான் வேண்டுமா என விட்டு விட்டேன்.


Related Posts with Thumbnails