Wednesday, August 11, 2010

என் டைரியிலிருந்து


ஒருவாறாக பூனைக்கு மணி கட்டியாகியாயிற்று. நவீன துட்டகைமுனுவை அரசு கட்சியிலிருந்தும் இடைநிறுத்தும் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். மேர்வின் சில்வா இலங்கை அரசியலின் சாரு நிவேதிதா. அவர்  மகாராஜா நிறுவனத்திற்கே சென்று அதன் தலைவரை ஏசுகிறேன் என்ற பெயரில் ஒட்டுமொத்த தமிழர்களையும் இந்தியானு பற தெமலோ( இந்தியப் பறத்தமிழர்கள்) எனத் தூற்றிய போதும், ரூபவாஹினிக்குள் குண்டர்கள் சகிதம் போய் குழப்பம் விளைவித்து பின் மண்டை உடைந்து வெளியேறிய போதும் வாளாவிருந்த அரசு இப்போதாவது விழித்துக் கொண்டது ஆச்சரியம். இதை விட ஆச்சரியம் இம்முறை தேர்தலில் இவரைப் பெருவாரியான வாக்குகளால் வெல்ல வைத்த மக்கள். முன்னாள் அமைச்சரால் மரத்தில் கட்டப்பட்ட அந்த சமுர்த்தி உத்தியோகத்தர்தான் இனிமேல் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.


பிரபா கணேசனும் திகாம்பரமும் எதிர்த்தரப்பிலிருந்து மக்களுக்கு சேவை செய்ய முடியாமலிருக்கும் அவல நிலையை எண்ணி அரசுடன் இணைந்து விட்டார்கள். திகா அரசுடன் சேர்வது ஆச்சரியம் தராத நிலையில் தம்மை ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைத்து விட்டு சகோதரனுக்கும்,கட்சிக்கும், தமிழர்களுக்கும் துரோகம் செய்த பிரபா கணேசனின் செயல் அருவருக்கத்தக்கது.

முரளிதரன் ஒய்வு பெற்ற போது காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வோமென அவசர அவசரமாக பதிவொன்றை எழுதியிருந்தேன். ரெண்டே பந்திகளில் ரொம்பவும் சுமாரான பதிவு. விகடனின் குட ப்ளொக்ஸ் பகுதியில் கூட அந்த பதிவு வந்திருந்தது. அண்மையில் சக பதிவர் யோகா (யோ வாய்ஸ் ) மூஞ்சி புத்தகத்தினூடு ஒரு தகவல் அனுப்பியிருந்தார். அதாவது அந்தப் பதிவு அப்படியே இலங்கையில் வெளிவரும் நியூஸ் வியூ எனும் சஞ்சிகையில் வந்திருந்ததாம். இன்னார் எழுதியது இன்ன வலைப்பூவிலிருந்து எடுக்கப்பட்டது என்ற எந்தத் தகவலும் இன்றி. மாத்தளையில் எந்தக் கடையிலும் இச்சஞ்சிகை கிடைக்காததால் நான் பார்க்கவில்லை. நன்றி இணையம் என்று போட்டால் சரி என நினைக்கிறார்கள். இணையத்திற்கு இந்தப் பதிவை காக்காவா தூக்கி  கொண்டு வந்து போட்டது. எவனோ ஒருவன் கொஞ்சமேனும் கஷ்டப்பட்டு எழுதியதை லவட்டத் தெரிகின்றவர்களுக்கு எதற்கும் எழுதியவனுக்கு நன்றியேனும் சொல்லுவோம் என்ற குறைந்த பட்ச நாகரிகமும் தெரியாமற் போவது வருத்தமாய் உள்ளது.  பதிவர்களை கிள்ளுக் கீரையாக நினைத்து விட்டனரா? என நண்பர் கண்கோன் கோபியும் குழுமத்தில் மடலிட்டுக் கொந்தளித்திருந்தார். அவர் அன்பிற்கு நன்றி. ஆசிரியப் பீடத்திடம் தொடர்பு கொண்டு கேட்கத்தான் வேண்டுமா என விட்டு விட்டேன்.


5 comments:

கன்கொன் || Kangon said...

மேர்வின் - திடீரென ஞானம் வந்தது எனக்கு பெரிய ஆச்சரியம்.
ஆனால் மேர்வின் திரும்ப ஏதோ சொல்லிக்கொண்டு வர வாய்ப்புகள் அதிகம் என்று நினைக்கிறேன்.
பார்ப்போம்.

பிரபா - ஆமாம். யாருமே எதிர்பார்க்காதது. மனோ கணேசனுக்காக விழுந்த வாக்குகளைக் கொண்டு மனோவிற்கே ஆப்பு.
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே... ம்....

உங்கள் பதிவுக்கு நீங்கள் ஆசிரியர் பீடத்துடன் தொடர்புகொள்ளுங்கள்.
அவர்களொன்றும் சஞ்சிகைகளை இலவசமாக விநியோகிப்பதில்லை.
ஆகக்குறைந்தது தொலைபேசியூடாகவாவது தொடர்புகொள்ளுங்கள்.

தர்ஷன் said...

Thanks gopi

Jana said...

இப்பொழுது சரியாகிவிட்டது என நினைக்கின்றேன். முன்னர் பின்னூட்டம் இடமுடியவில்லை. என்ன திடீர் என்று அரசியல் எல்லாம்?

தர்ஷன் said...

நன்றி ஜனா
முன்பும் அரசியல் எல்லாம் எழுதினதுதான் இப்பத்தான் கொஞ்ச நல்லா விட்டிருந்தேன்.

ஷஹி said...

தர்ஷன்...வணக்கம்..உங்கள் blog அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்..'தாய்'பிடிக்கும் என்று நீங்கள் குறிப்பிட்டதிலிருந்தே எழுத்தார்வம் இருக்குமென எதிர்பார்த்தேன். எனக்கெல்லாம் அந்திரேய் ஒரு ஹீரோ!என் பதிவு பார்த்து பின்னூட்டம் இட்டதற்கு நன்றி. ஒருcoincidence என்னுடைய blog இலும் இதே background தான்.do visit more often...

Post a Comment

Related Posts with Thumbnails