Tuesday, March 31, 2009

இலங்கையில் போர் நிறுத்தம் கருணாநிதி புளங்காகிதம்


போர் நிறுத்தத்திற்கு இலங்கை ஜனாதிபதி அழைப்பு
இன்று இலங்கை ஊடகங்களை அதிர வைத்துக் கொண்டிருக்கும் செய்தி இதுதான். மாவிலாறு அணைக்கட்டை விடுதலைப் புலிகள் மூடிய போது அதை மீட்க்கும் விதமாக ஆரம்பிக்கப்பட்ட போர் கிட்டத்தட்ட மூன்றாண்டுகளை கடந்து இறுதித் தருவாயை எட்டியிருக்கும் நிலையில் ஜனாதிபதி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

மேற்படி அழைப்பை சாதகமான முறையில் பரிசீலிப்பதாக விடுதலைப் புலிகளின் தலைமையும் அறிவித்துள்ளது மகிழ்வளிப்பதாய் உள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி சமாதானத்தை ஏற்படுத்த பாடுபட்ட கட்சி என்ற வகையில் தாம் இதை வரவேற்பதாகவும் இருப்பினும் இறுதி நேரத்தில் படையினரின் மனவலிமையை தகர்க்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இம்முடிவு ஏலவே ஜனாதிபதி தேர்தலில் புலிகள் மகிந்தவை வெல்லச் செய்வதெற்கென தேர்தலை புறக்கணிக்கச் செய்ததற்கான கைம்மாறாகவே கொள்ள முடியும் எனவும் தெரிவுத்துள்ளது.

இதே நேரம் இடதுசாரி(?) கட்சியான மக்கள் விடுதலை முன்னணியும் பிக்குகளின் ஜாதிக ஹெல உறுமயவும் இதற்கெதிராக மக்களை அணி திரட்டி போராடவுள்ளதாக தெரிவித்துள்ளது.

e.p.d.p, t.m.v.p போன்ற தமிழ்க்கட்சிகள் கருத்து தெரிவித்திராத நிலையில் தமிழ்க்கூட்டமைப்பு இதை வரவேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதே வேலை இது தான் இந்திய மத்திய அரசுக்கு கொடுத்த அழுத்தங்களினாலேயே சாத்தியமானதாக தமிழக முதல்வர் கலைஞர் தெரிவித்தார்.

இப்படியெல்லாம் எழுத ஆசைதான் ஆனால் பாவப்பட்ட தமிழர்களாக பிறந்தபின் என்ன செய்ய உண்மையில் இவ்வாறான ஒரு செய்தி கிடைக்கும் வரை அனைவரும் இப்படி எழுதிப் படித்து நம்மை நாமே ஏமாற்றி காதில் பூ சுத்திக் கொள்ள வேண்டியதுதான். அது வரை முன்கூட்டியே முட்டாள் தின வாழ்த்துக்கள்
BE COOL

Monday, March 30, 2009

அண்டப் புளுகன் கோயபல்ஸ்


அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதையெல்லாம் தாண்டி வரையறையின்றி புளுகி ஈற்றில் அழிந்துப் போனவர்தான் கோயபல்ஸ். ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்ற கூற்றின் நிதர்சனமாக வாழ்ந்தவர்.

பாசிசம் என்பது முதலாளித்துவ சர்வாதிகாரம் கம்யூனிசம் என்பது சோஷலிச சர்வாதிகாரம் என்று எங்கேயோ படித்த ஞாபகம். இதில் ஹிட்லரின் நாஜிசம் எதில் வருகிறது தெரியவில்லை அவர் கட்சியின் பெயரில் சோஷலிசம் (National Socialist German Worker's Party) வருகிறது. ஆனால் அது உண்மையில் சோஷலிச கொள்கைகளைக் கொண்டதுதானா என யாரேனும் தெளிவுப் படுத்துங்கள்.

என்ன இசமோ என்ன இழவோ எது எப்படியிருந்தாலும் ஒன்று மட்டும் நிஜம் நாஜிக்கள் பக்கா இனவாதிகள். ஜெர்மானியரே சுத்தமான ஆரியர் எனக் கூறிக் கொண்டு சரித்திரக் காலந் தொட்டு அலையோ அலையை அலைந்து கஷ்ட்டப் பட்ட யூதர்களுக்கு இவர்கள் கொடுத்த கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை.(இன்றைக்கு இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தனிக் கதை)

1921 இல் நாசிக் கட்சியின் தலைமைப் பொறுப்பேற்ற ஹிட்லர் ஜெர்மானியரின் கஷ்டமெல்லாம் யூதர்களால்தான் என்றுக் கூறிக் கொண்டு பாரிய இன அழிப்பு நடவடிக்கையை முன்னெடுத்தப் போது மீள மீள பொய்யுரைக்கும் மேற்கூறிய உத்தியால் ஹிட்லர் செய்ததற்கெல்லாம் சப்பைக் கட்டுக் கட்டியவர்தான் கோயபல்ஸ்.ஜெர்மனியின் பிரச்சார அமைச்சர் (கொ.ப.செ என்று சொல்லலாமா)

தாம் வாழும் இடமெல்லாம் அடிப் பட்டு அலைந்து திரிந்த யூதர்கள் ஜெர்மனியில் அடிபடும் போது அது அவர்களின் உள்நாட்டுப் பிரச்சினை என்ற ரீதியில் வல்லரசுகளும் அமைதியாகத்தான் இருந்தன வேடிக்கைப் பார்த்துக் கொண்டு.
கோயபல்ஸ் மக்கள் மத்தியில் தன் பிரச்சாரப் பலத்தால் விதைத்த அகன்ற ஜேர்மனியை நிர்மாணிக்கும் கனவை ஹிட்லர் நனவாக்க முற்பட்டபோதுதான் விபரீதம் புரிந்து வல்லரசுகளும் முழித்துக் கொண்டன தமது இருப்புக்கு ஆபத்து வரப்போவதால்.

இறுதியில் அமெரிக்க,பிரித்தானிய,ரசிய தலைமையிலான நேச நாட்டுப் படையினருடனான போரில் ஆரம்பத்தில் வெற்றி மேல் வெற்றியும் பின் படுதோல்வியும் அடைந்து சின்னாபின்னமானது நாஜிக்களின் கனவு. தோல்வியின் விளிம்பில் நின்ற போது கூட இதோ மாஸ்கோவில் நுழைந்து விட்டோம் பிடித்து விடுவோம் என்று சின்னப் பிள்ளைத் தனமாய் சொல்லிக் கொண்டிருந்தானாம் கோயபல்ஸ்.

கொயபல்சிடமும் ஒரு நல்ல குணம் மரணத் தருவாயிலும் தன் தலைவன் மீதிருந்த விசுவாசத்தினை அவன் கை விடவில்லை. தளபதி சூர்யா தேவா போல் அப்படி ஒரு நட்பு.


இந்த பதிவை எழுதி விட்டு கோயபல்ஸ் படத்தை தேடிப் பார்த்தேன் கிடைக்க வில்லை.
நண்பரொருவர் இந்தப் படத்தை தந்து போடச் சொன்னார். மேற்படி பதிவிற்கும் படத்திற்கும் உள்ள சம்பந்தம் பற்றி சத்தியமாய் தெரியாது. பதிவைப் படிப்பவர்கள் படத்தோடு ஒப்பிட்டு வேறேதும் கற்பனை செய்தால் நான் பொறுப்பல்ல.

Sunday, March 29, 2009

பட்டாம்பூச்சி என் தோட்டத்திலும்


"ஊக்குவிக்க ஆள் இருந்தால் ஊக்கு விப்பவனும் தேக்கு விப்பான்" என்று சொல்வார்கள். பாடசாலைக் காலங்களிலேயே எழுத்தார்வம் இருந்தாலும் பெரிதாக அந்த முயற்சிகளில் ஈடுபடவில்லை. பலரிடம் எழுத்துக்களை கொண்டு சேர்க்க வழியில்லை. பார்ப்போரும் பெரிதாய் கருத்து சொல்வதில்லை என்ற நிலையில் இணையம் உண்மையில் ஒரு வரப்ரசாதமகவே அமைந்தது. சற்றே என் எழுத்துத் தினவை தனித்துக் கொள்ளும் நோக்கில் வலைப்பதிவுகள் பக்கம் ஒதுங்கியவனுக்கு விருது தந்து சந்தோஷப் படுத்தியிருக்கிறார் நண்பர் கலை.

பட்டாம் பூச்சி விருதின் நோக்கம் புதிய பதிவர்கள் மீது வெளிச்சம் விழ வேண்டுமென்பதுதான் என்றாலும் இது சற்று முன்னாலேயே எனக்கு கிடைத்து விட்டதோ என்று ஒரு சிறு சங்கடம். ஏலவே பல ஞானச் சிங்கங்களின் வலைப்பக்கத்தை அலங்கரிக்கும் இப்பட்டாம் பூச்சி இந்த சிற்றெரும்பின் வலைப்பூவிலும் பறப்பது ஆச்சரியமான ஒன்று. என்னோடு சேர்த்து விருது பெற்றோர் நிஜமாகவே அசாத்திய திறமையாளர்கள்.

இன்னமும் சிரத்தையெடுத்து பதிவிட வேண்டுமென்ற எண்ணம் வந்துள்ளது. நேரம்தான் பிரச்சினை.
எல்லாம் சரி நானும் இப்பதிவை மூன்று பேருக்கு கொடுக்க வேண்டுமாம். please கொஞ்சம் அவகாசம் கிடைக்குமா

Thursday, March 26, 2009

படமெடுப்பது எப்படி Dr.விஜய் கௌதம் மேனனுக்கு ஆலோசனை
திரும்ப திரும்ப எத்தனை முறைப் பார்த்தாலும் சலிக்காத படங்களின் பட்டியலில் மின்னலே திரைப்படத்திற்கு உண்டு. படம் வெளிவந்த காலத்தில் தியேட்டரில் பிறகு டிவியில் என கணக்கு வழக்கில்லாமல் அப்படத்தை பார்த்திருக்கறேன். அதுவும் இலங்கை தேசிய தொலைக்காட்சி நேத்ரா டிவியில் வார இறுதி நாட்களில் அதிகம் போடப்படும் படம் இதுவாகத்தான் இருக்கும்.

காக்க காக்க பார்த்த போது இவர் எனக்கு ஒரு குட்டி மணிரத்னமாகத் தெரிந்தார். குட்டி குட்டி வசனங்கள் காரணமாக இருக்கலாம். ஐரோப்பிய வன்முறையை தமிழில் வழங்குபவர் என்ற குற்றச்சாட்டு இவர் மீது எழுந்தாலும் அந்த Hollywood பாணி விறு விறு திரைக்கதை என்னை வெகுவாய்க் கவர்ந்ததென்னவோ உண்மை.

வேட்டையாடு விளையாடுவில் தன் மனைவியின் சடலத்தைப் பார்த்து கமல் வழமைப் போல் "ஹா ஹா ............" எனக் கதறப் போகிறார் என எதிர்ப்பார்க்கையில் ஒரு வசனமும் கதறலும் இன்றி அவரை நடிக்க வைத்திருப்பாரே

வாரணம் ஆயிரம் ஒரு Biography அதுவும் ரொம்ப நீளம் ஆனால் எங்கேயாவது சலிப்புத் தட்டியதா. அது கௌதம் மேனன்.


அண்மையில் மாபெரும் இயக்குனரும் action நடிகர், " அப்பன் பண்ண தப்புல ஆத்தா பெத்த வெத்தல " போன்ற கலைத்துவமான பாடல்களை யாத்த பாடலாசிரியர், தற்போது இசையமைப்பாளர் என்ற பன்முகங்களையும் கொண்டவருமான இயக்குனர் பேரரசுவின் பேட்டி ஒன்றைக் காண நேர்ந்தது.

அதில் விஜய் பற்றி அவர் குறிப்பிட்டதுதான் ரொம்பக் கஷ்டமாய் போய்விட்டது. ஏற்கனவே அவரை அனைவரும் ஒரு கேலிப் பொருளாய் பார்க்கும் நிலையில் இவருக்கு தளபதி மேல் என்ன கோபமோ இதை வெளியில் எல்லாம் சொல்லி டாக்டரை பெருமைப் படுத்துவதாய் நினைத்து சிறுமை படுத்தியிருக்கிறார். அவரது punch dialog போலவே அவர் சீரியசாய் சொன்ன விஷயம் எனக்கு சிரிப்பாய் இருந்தது. உங்களுக்கு எப்படியோ படித்து பாருங்களேன்

கமர்ஷியல் பஞ்சாமிர்தம் கலக்கிக் கொடுத்தேன். அடுத்து ஆக்ஷன் ஜோதி ஏத்திட்டோம்ல...‘ காற்றில் கத்தி வீசிச் சிரிக்கிறார் டைரக்டர் பேரரசு. ஊர் பேரில் டைட்டில் வைத்து உறியடிக்கும் ஊரரசுவான பேரரசு, இப்போ டிக்கெட் எடுத்திருப்பது திருவண்ணாமலைக்கு. திரையில் கிரிவலம் வந்து கொண்டிருக்கும் திருவண்ணாமலை இயக்குநர் பேரரசுவுடன் ஒரு மினி பேட்டி.

இந்த மசாலாவை விட்டு வெளியே வரவே மாட்டீங்களா?

மசாலா பிடிக்காதவங்க யாராவது இருந்தா சொல்லுங்க... டைரக்டர் கௌதம் மேனன்கிட்ட திருப்பாச்சி, சிவகாசி டிவிடியைக் கொடுத்து இந்த மாதிரி கமர்ஷியலா படம் எடுங்கன்னு சொல்லியிருக்கிறார் விஜய். இதுக்காக கௌதம் மேனன் வருத்தப்பட்டிருக்கார் சார்.

நான் பக்கா லோக்கல் ஆளு. முழு டைரக்டர்ன்னு என்னைச் சொல்லிக்க மாட்டேன். இங்கிலிஷ் படம் இரான் படம்லாம் பார்க்க மாட்டேன். நான் எடுக்கிறது கொடுக்கிறது எல்லாமே அக்மார்க் உள்ளூர் லோக்கல் சரக்குதான். ‘இனிமேலாவது தமிழ் படம் எடுக்கட்டும்‘ங்கிற நல்ல எண்ணத்தில விஜய் என் பட டிவிடியைக் கொடுத்திருக்கிறார். உண்மையிலேயே இது எனக்குப் பெருமையான விஷயம். சொன்ன டயத்துக்குள்ளே படம் தயாரிப்பாளர் லாபம் பார்த்து சந்தோஷப்படணும் இதுதான் சார் என்னோட டார்க்கெட். நான் நல்லாயிருக்கேன்... தயாரிப்பாளர்கள் சந்தோஷமா இருக்காங்க... எனக்கு இது போதும். கை கூப்பி வழி அனுப்புகிறார் பேரரசு.

கௌதமுக்கு எப்படி இருந்திருக்கும்
ஒரு நல்ல எழுத்தாளரிடம் போய் " யோவ் என்னய்யா எழுதுற இந்த blog எல்லாம் வாசிச்சு எழுதக் கத்துக்கோ" என்று சொன்னது போலிருந்திருக்குமா
விகடனில் என் பதிவு


இதில் நிரம்பவே சந்தோஷப் பட ஏதும் இருக்கிறதா தெரியவில்லை.
"சொதப்புவாரா கமல்" என்ற தலைப்பில் A Wednesday திரைப்படம் தொடர்பிலான எனது கருத்துகள் அடங்கிய பதிவு youthful விகடனில் good blogs பகுதியில் வெளிவந்துள்ளது.

இன்னமும் பதிவுலகம் தொடர்பில் பூரண தெளிவு ஏற்ப்பட்டிராத நிலையில் இது சற்றே தெம்பை அளித்துள்ளது. இன்னமும் எழுதலாம் என நினைக்கிறேன்.
இது தொடர்பில் எனக்கு அறியத் தந்ததுடன் நான் பதிவிடத் தொடங்கிய நாளிலுருந்து தொடர்ந்து பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப் படுத்தி வரும் நண்பர் கலை அவர்களுக்கு ஒரு Special Thanks

பழசுக்கு வந்த மதிப்பு

"அரசர் அந்த புலவனுக்கு ஆயிரம் வராகன்களை பரிசாக வழங்கினார்" என அம்புலிமாமாவில் படித்திருப்போம். எதனை பேருக்கு வராகன் என்றால் என்ன அது எவ்விதமான கொடுக்கல் வாங்கலுக்கு உகந்தது எனத் தெரிந்திருக்கும். இது போன்ற பல விடயங்களை அறிந்துக் கொள்ளும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது.

இலங்கை மத்திய வங்கியின் மாத்தளை கிளையில் பணம் மற்றும் அதன் வரலாறு தொடர்பான கண்காட்சி நடைப் பெற்றது.

எவ்வளவுதான் theory ஆக படித்தாலும் நேரடியாக பார்ப்பது போல் வராது என்பார்கள். அந்த வகையில் அங்கே நான் பார்த்தவை படங்களாகWednesday, March 25, 2009

பூஜாவின் ஹீரோ மீது கொலை முயற்சிஇலங்கையின் இளம் அரசியல்வாதியும் பிரபல வழக்குரைஞரும் வரும் மாகாண சபை தேர்தல் ஐ .தே.கவின் வேட்பாளருமான சுஜீவ சேனசிங்கவின் அலுவலகம் மீது இன்று காலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் சுஜீவ சேனசிங்கவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அட இதற்கேன் மேற்படி தலைப்பு என யோசிக்கின்றீர்களா "யாழுவோ" என்ற சிங்களப் படத்தில் இருவரும் வெவ்வேறு இனங்களை சேர்ந்த தம்பதியராக நடித்திருந்தனர். (பூஜா தமிழராகவும் சுஜீவா சிங்களவராகவும்)

Tuesday, March 24, 2009

சொதப்புவரா கமல்


அபத்தமான அற்ப விடயங்களை தனது கொள்கைகளாக வரித்துக் கொண்டு அதற்காக ஆயிரக்கணக்கான உயிர்களை உலகளாவிய ரீதியில் காவுக் கொண்டு வருவது தீவிரவாதம்.

அவர்களின் கொள்கைகளில் நம்பிக்கையோ, அபிமானமோ இன்றி பத்திரிகைகளோடு தமது அரசியல் அறிவையும் மடித்து வைத்து விட்டு அன்றாட கடமைகளில் மூழ்கிப் போகும் சாதாரணர்களே அதிகம்.
ஆனால் தமக்கு கிஞ்சித்தும் நிறைவையோ, திருப்தியையோ தராத கொள்கைகளுக்காக தன்னை ஒத்த இன்னும் பல்லாயிரம் சாதாரணர்கள் பாதிப்புறுவதைப் பார்த்த ஒரு சாதாரணன் அசாதாரணமாக செய்யும் ஒரு காரியத்தின் தொகுப்புத்தான் " A Wednesday".

நஸ்ருதீன் ஷாவின் அலட்டலே இல்லாத அருமையான நடிப்பில் வந்துள்ள திரைப்படம். நடிப்பில் அவருக்கு இணையாக கரம் கோர்த்துள்ளார் அனுபம் கேர். கதாநாயகனாக அல்லாமல் கதையின் நாயகனாக வருகிறேன் என்ற வார்த்தையை தமிழ் நட்சத்திரங்களின் பேட்டிகளில் கேட்டிருப்போம். அவ்வார்த்தையின் அர்த்தம் எனக்கு சரியாக புரிந்தது இப்படத்தைப் பார்த்த போதுதான்.

போலிஸ் அதிகாரியான அனுபம் கேர் தான் கையாண்ட ஒரு சுவாரசியமான கேசைப் பற்றி பகிர்வதில் ஆரம்பிக்கின்றது படம். நடுத்தர வயது தாண்டி வயோதிபத்திற்குள் பிரவேசித்துக் கொண்டிருக்கும் சாதாரண ஊழியர் நஸ்ருதீன் ஷா. தினம் ரயிலில் கடமைக்கு சென்று வரும் இவர் ஒரு நாள் காவல் நிலையத்தில் தனது பர்ஸ் தொலைந்ததைப பற்றி புகார் கொடுக்க வருகிறார். தான் கொண்டு வந்த பையோடு பாத்ரூம் போகும் இவர் அதை அங்கேயே விட்டு விட்டு வெளியே வரும்போது சூடு பிடிக்கிறது படம்.

ஒரு சுமையான பையைத் தூக்கி கொண்டு மூச்சிரைக்க ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடியில் ஏறும் ஷா அங்கிருந்து போலிசுக்கு போன் போடுகிறார் . மும்பையின் பல முக்கிய இடங்களில் தான் குண்டு வைத்திருப்பதாகவும் அவை இருக்கும் இடங்களை தான் சொல்ல வேண்டுமெனில் தான் பெயர் குறிப்பிடும் நான்கு தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டுமெனவும் குறிப்பிடுகிறார்.
அதே நேரம் ஆர்வக் கோளாறான ஒரு இளம் பெண் ஊடகவியலாளரையும் தொடர்புக் கொண்டு ஒரு சுவாரசியமான செய்தி போலிஸ் தலைமையகத்தில் கிடைக்கும் எனக் கூறுகிறார்.(அங்கு நடப்பவற்றை உடனுக்குடன் அறிய).
இவரைப் பிடிக்க முடியாததால் இவரது கோரிக்கைக்கு உடன் படுகிறது போலிஸ். வாட்டசாட்டமான, கோபக்கார ஒரு அதிகாரியோடு அனுப்பி வைக்கப்படும் நான்கு தீவிரவாதிகளில் ஒருவனை அவ்வதிகாரி தடுத்து வைத்து மற்றைய மூவரையும் நஸ்ருதீன் ஷா சொல்லும் இடத்தில் விடுகிறார். நம் அனைவரினதும் எதிர்ப்பார்ப்புக்கு மாறாக அங்கே அவர்கள் கொல்லப்படுகின்றனர்.

இதற்கிடையில் கம்பியூட்டர் தொழிநுட்பம் அறிந்த ஒரு டீன் ஏஜ் இளைஞன், நஸ்ருதீன் ஷாவின் கேசை பதிவு செய்த போலிஸ் அதிகாரி, ஷாவுக்கு வெடி மருந்து தந்தவர்களின் உதவியோடு போலிஸ் இவரை நெருங்குகிறது.
நஸ்ருதீன் ஷா யார்? அவரது நோக்கம் என்ன? அவரை போலிஸ் என்ன செய்தது? போன்ற பல கேள்விகளுக்கு உருக்கமும் விறு விறுப்புமாய் அடுத்தடுத்த காட்சிகளில் பதில் சொல்லியிருக்கும் படம்தான் A Wednesday

அட இதெல்லாம் ஒரு நடிப்பா? நவீன தொழிநுட்பங்களும் அதீத புத்திசாலித் தனங்களும் கொண்ட ஒருவனுக்கு அவனது புகழ் கூறும் ஒரு intro பாடல் கூட இல்லை. சரி பாடல்தான் இல்லை அட்லீஸ்ட் அவர் தீவிரவாதிகளுக்கும் போலீசுக்கும் சவால் இடும் காட்சிகளில் கமராவைப் பார்த்து கைகளை ஆட்டி விரல் சொடுக்கி பேச வேண்டாம். எதுவுமில்லாமல் ஏதோ நம்ம பக்கத்து வீட்டு பெருசு போல புலம்புகிறார். தன்னை முபையையே காக்க வந்த ஆபத்பாந்தவனாக சொல்லக் கூடாதா தன்னை common stupid man என்று சொல்கிறார். அனுபம் கேரும் அப்படியே


கமலாவது இக்குறையை தீர்த்து வைப்பாரா பார்ப்போம். எது எப்படியோ நிச்சயமாய் வயதான பாத்திரத்தில் கமல் அவ்வப்போது தன் உச்சந்த்தலையை சொரிவார் என நினைக்கிறேன்.( கடல் மீன்கள், நாயகன் என எத்தனை கமல் படம் பார்த்திருப்போம்.)
கமல் தமிழின் தலை சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லையென்ற போதும் அவரது அவ்வைச்சன்முகி, வசூல் ராஜா போன்றவற்றில் நடிப்பை ராபின் வில்லியம்ஸ் உடனோ சஞ்சய் தத்துடனோ ஒப்பிட்டிப் பார்த்தால் சொதப்பலாகவே தெரிந்தது. இதிலாவது நஸ்ருதீன் ஷாவை மிஞ்ச வாழ்த்துக்கள்.

Monday, March 23, 2009

அவசரமாய் தேவை ஒரு பெரியார்


எனது சக ஆசிரியர் ஒருவர், அத்தனை கல கல பேர்வழி இல்லையென்றாலும் கடு கடுவென இருக்கும் ரகமும் இல்லை. ஆனால் அன்றொரு நாள் அவரைப் பார்த்த போது இஞ்சி தின்ற ஏதோ போல் வழமையை விடவும் அகோரமாய் இருந்தார்.

சரி வீட்டில் ஏதோ உள்நாட்டு கலவரம் போலும் என எண்ணியவாறே அவரைப் பார்த்து சிரித்து வைத்தேன். பதிலுக்கு சிரிக்க மறுத்தவர் ஆவேசமாக
" பாருங்க sir அநியாயத்த" என்றார்.

இலங்கையில் அநியாயத்துக்கா பஞ்சம் அதில் ஏதோதான் இவர் மனதை வாட்டியிருக்கக் கூடும் என்ற எண்ணத்தோடு
" என்ன sir ஏதும் பிரச்சினையா? " என்றேன்.

" பாருங்க sir இந்த லயத்தான்களே இப்படித்தான் காசு கொடுத்தா பொண்டாட்டிய கூட கூட்டிக் கொடுப்பாங்க போல"
ஆஹா ஆள் ஆவேசப்படுவதைப் பார்த்தால் மேட்டர் பெருசா இருக்கும் போல என எண்ணியவாறே

"என்ன sir" என்றேன்.

" கொஞ்ச நாளா ஏதோ ஒரு கிருத்துவ அமைப்பால இங்க வந்து போதனை எல்லாம் பண்ணுனாங்க இல்ல இப்ப கொத்தா ஒரு இருபது குடும்பம் அப்படியே மதம் மாறிட்டாங்க"
என தலையில் கை வைத்தார்.

அட இதுக்கா இந்த ஆள் ஏதோ தன் வீட்டில் எழவு விழுந்தது போல் பதறினார் என நினைத்த போது சிரிப்புத்தான் வந்தது. உதட்டோரம் அரும்பிய புன்னகையோடு
" இவ்வளவுதானா இதுக்கு போய் நீங்க ஏன் இவ்வளவு கவலைப் படுறீங்க நானும் ஏதோ உங்களோடுதான் ஏதோ பிரச்சினைன்னு நினைத்தேன்"

"என்ன sir கொஞ்சமும் பொறுப்பில்லாம பேசுறீங்க நீங்க எல்லாம் ஒரு ஹிந்துவா எங்கட கலாச்சாரம் என்ன ஆகுறது"

பாவம் ஆரியர் எம்முள் புகுத்திய இந்த மதம்தான் திராவிடராகிய நம் கலாசாரத்தின் அடிப்படை என்ற கருத்தில் அவர் இருந்தார். எங்கே தமிழர்கள் எல்லாம் மதம் மாறி கோடு சூட்டும் நுனி நாக்கு ஆங்கிலமுமாக தேவாலயங்களுக்கு செல்லத் தொடங்கி விடுவரோ என்ற ரீதியில் அதீதமாய் கற்பனை செய்து பயந்தார்.

திடீரென கசிப்பு அடித்தவரை போல் தகாத வார்த்தைகளால் தோட்ட மக்களையும் ஏனைய மதங்களையும் தூஷிக்க தொடங்கினார்.
எப்போதும் தனது மதம் தனக்கு நல்ல விழுமியங்களை கற்றுத் தந்திருக்கிறது என்று பிதற்றும் அவருக்கு சகிப்புத்தன்மை என்று ஒன்று இருப்பது தெரியாமல் போனது எனக்கு ஆச்சரியத்தை தந்தது.

மதம் இத்தனை sensitiveவான விடயமா? அவரது ஆவேசம் சிவசேனா போன்ற கட்சியினரையும் தோற்கடிக்கும் விதத்தில் இருந்தது. ஒரு கணம் பால் தாக்கரே உடன் பேசுவதாகவே உணர்ந்தேன். இவர் என்ன வேதங்களையும் உபநிஷதங்களையும் புராணங்களையும் கரைத்துக் குடித்து அனுபவ வாயிலாக கடவுளை உணர்ந்து அக்கடவுளின் அருட்கடாட்சம் உலக ஜீவராசிகள் அனைத்துக்கும் பாரபட்சமின்றி வழங்கப்படும் அற்புதத்தை உணர்ந்தவர் போல் பேசுகிறாரே என நினைத்த போது கோபம்தான் வந்தது.

" ஏன் அவர்கள் செய்ததில் என்ன தப்பு தனக்கு நிம்மதியை தரவல்லதை கடவுள் என்கிறார்கள். தான் சார்ந்த மதத்தில் அது கிடைக்காத போது மதம் மாறுகிறார்கள். மதங்களால் அழிவுகளேயல்லாமல் ஏதேனும் உபயோகமாய் நடந்ததாய் கேள்விப்பட்டிருப்போமா. அப்படியிருக்க இதை ஏன் இத்தனை பெரிது படுத்த வேண்டும். அதுவும் ஒரு ஆசிரியர் இந்த மாதிரி super natural powerஐ நம்பி சக மனிதர்களை தூஷிப்பது சரியா?"
என்றேன்.

" science teachersஏ இப்படித்தான் சாமியை கிண்டல் பண்றதுல ஒரு பெருமை போங்க sir உங்க விஞ்ஞானத்தால எல்லாம் கடவுளை உணர முடியாது"

" சரி அப்படியே வைத்துக் கொள்வோம் எம்மால் உணர முடியாத கடவுள் பெயரால் சதுர்வர்ணங்கள் ஏற்படுத்தப் பட்டு அதன் பெயரால் இழிநிலைக்கு உள்ளாக்கப்பட்டோர் அதை மீறத் துணிவதில் என்ன குறையைக் கண்டீர்கள். கஷ்ட படுபவனை கைத் தூக்கி விடாது விதி, சஞ்சிதம், ப்ராப்தம், ஆகாமியம் என அவன் துயரத்தை ஞாயப் படுத்துவீர்கள். எங்கேயடா கடவுள் என்றால் இது கலியுகம் வரமாட்டார் அது இது என மழுப்புவீர்கள். ஏதோ ஒரு காட்டுமிராண்டி காலத்தில் சொல்லப்பட்ட படு பிற்போக்கான சாத்திரங்கள் எல்லாவற்றையும் ஆதி அந்தம் இல்லா ஆண்டவன் அருளியது என தலையில் வைத்து கொண்டாடுவீர்கள். அர்த்தமே தெரியாத மொழியில் யாரோ அர்ச்சிக்க தட்சனை மட்டும் போட்டுவிட்டு வருவீர்கள்.
குறைந்த பட்சம் அங்கே ஞான ஸ்நானம் செய்வித்து தன் மதத்திலாவது சேர்த்துக் கொள்கிறான். நீ சூத்திரன் ஒரு பிறப்பாளன் தீட்சை எல்லாம் பெற முடியாது என சொல்லும் மதத்தில் என்னா மயிருக்கு sir இருக்கணும்."

இத்தனை ஆவேசத்தை அவர் என்னிடம் எதிர்பார்க்க வில்லை. என்னை மிக வெறுப்பாய் பார்த்தவர் சொன்னார்.

" நம்ம அம்மா ஒரு ****** ஆகவே இருந்தாலும் அம்மா அம்மாதானே"
இதனை கேவலமாய் ஒரு உவமை சொல்லவும் அவருக்கு மதம்தான் கற்றுக் கொடுத்திருக்கிறது போல. இதற்கு மேல் அவருக்கு விளக்கம் சொல்ல என் மனம் இடம் கொடுக்கவில்லை. எனக்கென்றால் புரியவில்லை இதற்கெல்லாம் ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்று. என் மனம் சொன்னது இங்கேயும் தேவை உடனடியாய் ஒரு பெரியார்

Wednesday, March 18, 2009

" என்னா கொடுமை மென்டிஸ் இதெல்லாம்"


cricket பற்றி பேசும் காலமா இது என பலரும் முகம் சுளிக்கக் கூடும். பாரதியே ODI விளையாடு பாப்பா என்று பாடி இருக்கிறாரே என மனதை தேற்றிக் கொண்டேன்.
ஒருநாள் போட்டி முடிவுகள்தான் சுவாரசியமாயிருக்கும் என்பது தெரிந்தது ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியலும் ஆச்சரியத்தை தரும் என நேற்றுதான் தெரிந்தது.

அட ஒருநாள் பந்து வீச்சாளர் தரவரிசையில் நம்ம நுவன் குலசேகர முதலிடம். M & M magic தான் இலங்கை அணியின் பலம் எனத் தெரியும். அட இதற்கிடையில் இவர் எப்படி என்று தேடிய போதுதான் தெரிந்தது. ஐயாவும் லேசுப்பட்ட ஆளில்லை என்பது

தரவரிசைக்குட் படுத்திய குறித்த காலப்பகுதியில் இவர் அதாவது இவர் மீள அணிக்குத்திரும்பிய 2008 ஏப்ரல் தொடக்கம் இன்று வரை 29 போட்டிகளில் 47 விக்கெட்டுகளை 20.97 என்ற சராசரியுடனும் கிட்டத்தட்ட ஓவருக்கு 4.45 என்ற வகையில் சிக்கனமாகவும் ( economy rateஐ வேறெப்படி தமிழ் படுத்தலாம்) பந்து வீசி கொய்திருக்கிறார்.

இதைப் பற்றி இவரிடம் கேட்டால்
இது தனக்கு மிக மகிழ்ச்சி அளிப்பதாகவும் தான் சென்ற வருடத்தில் அதிக சிரத்தை எடுத்து பந்து வீசியதாகவும் இருப்பினும் வெறும் இருபத்தாறே வயதான தான் கிரிக்கெட்டில் இன்னமும் கற்றுக் கொண்டிருப்பதாகவும் நல்லதொரு பந்துவீச்ச்சாளராக வர உறுதிப் பூண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
(அட என்னவொரு அவையடக்கம்)

இது பரவாயில்லை 8ஆம் இழக்க துடுப்பாட்ட வீரராக ஆடி வரும் இவர் கடந்த 12 மாதங்களாக தான் பேணி வந்துள்ள 20.36 என்ற துடுப்பாட்ட சராசரியை 25 ஆக மாற்றுவதன் மூலம் அணிக்கு ஒரு ஸ்திர தன்மையை கொடுப்பது தனது நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டுக்கு துடுப்பாட்டத்தில் பல புதிய நுணுக்கங்களை கற்றுத்தந்த ( பந்து எங்கே வருகிறது எனப் பார்க்காமலே ஆறு ஓட்டங்கள் பெறுவது எப்படி போன்ற) முரளி இதை கேள்விப்பட்டு மென்டிசிடம் இப்படி சொன்னாராம்.
" என்னா கொடுமை மென்டிஸ் இதெல்லாம்"

Tuesday, March 17, 2009

தமிழகச் சொந்தங்களுக்கு மலையகத்திலிருந்து ஓர் விண்ணப்பம்பெருமையாக இருக்கிறது
நாங்கள் செய்ய வேண்டியதை எங்களால் செய்ய முடியாததை நீங்கள் செய்யும் போது
வெட்கத்தோடு ஒத்துக் கொள்கிறோம் நாங்கள் கோழைகள்

நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் ஆப்பு என்று சர்வ நிச்சயமாய் தெரிந்தும் அவசரக் காலச் சட்டத்துக்கு ஆதரவாய் கையுயர்த்தியவர்களை தலைவர்களை கொண்டவர்களில் நானும் ஒருவன்.

95 சதவீதம் எழுத்தறிவுள்ள தேசத்தில் தற்குறிகள் அதிகம் எனக் கூறப்படும் பிரிவினரில் நானும் ஒருவன்.

எமக்கான உரிமைகள் என்னவென்றே அறியாமல் அற்ப சலுகைகளில் திருப்தியுறும் கையாலகாதவர்களில் நானும் ஒருவன்.

ஏதோ இப்போதுதான் எம்மை இத்தனைக் காலமாய் ஏய்த்த தலைமைகளை நிராகரிக்கும் துணிவே தட்டு தடுமாறி எட்டிப் பார்த்திருக்கிறது

தமிழகத்தில் இது தேர்தல் காலம் கூட்டணி அமைக்கும் முயற்சியில் கட்சிகள் மும்முரமாய் உள்ளன. கூட்டணிகள் அமைந்த பின் வாக்குறுதிகளும் இலவசங்களும் அள்ளி வீசப்படலாம்.

ஒன்று செய்வீர்களா
வெளியில் மட்டும் தீரமாய் திராவிடம் பேசி தமிழன் கொல்லப்படும் போது மௌனமாவோரையும் அவரோடு கூட்டுச் சேரும் மதச் சார்பின்மையும் தேசியமும் பேசும் பார்ப்பனிய கட்சிகளையும் நிராகரித்து தேசம் மாறினாலும் தமிழுணர்வால் நாம் ஒன்றுப் பட்டவர்கள் என்பதை உலகுக்கு காட்டுவீர்களா?


என்ன செய்வது வலிமை குறைந்த சின்னத் தம்பிகள் மூத்த சகோதரனிடம்தானே உதவிக்கு இறைஞ்ச முடியும்.

பிக்குவின் ஆசை

எவனொருவன் ஆசையை அழிக்கிறானோ அவன் எல்லா துன்பங்களிலிருந்தும் விடுபடுகிறான்

என்று புத்தர் தம்மா பதத்தில் சொல்கிறார் புத்தர் கூறிய படி ஆசையை துறந்த இந்த பிக்குவால் செல்போன் மீதுள்ள பிடிப்பை மட்டும் விட முடியவில்லைப் போலும்

Thursday, March 12, 2009

ரஜினி


ரஜினி
என்னதான் பதிவர்கள் வருத்தெடுத்தாலும் தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் இவர்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் தேவையில்லை. சினிமா பற்றிய தீவிரமான பிரக்ஞை இல்லாத காலத்தில் திரைப்படங்கள் எனக்கு அறிமுகமான ஆரம்ப கால கட்டத்தில் அப்பாவின் மடியிலமர்ந்து நான் திரைக்கூடங்களில் பார்த்த பல படங்களில் இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கும் பல படங்கள் இவர் நடித்தது. என் தந்தை காலமான பின் தியேட்டர் சென்று படம் பார்க்கும் வழக்கம் குறைந்து போனாலும் நான் வளர்ந்து நண்பர்களோடு மீண்டும் திரையரங்குகளுக்கு செல்லும் காலம் வந்த போது(கிட்ட தட்ட பத்து வருடங்களுக்கு பின்) பலரின் ஏகோபித்த தெரிவாக அதே பொலிவோடு அவரே திரையை நிறைத்திருந்தார்.

எல்லோரையும் போல ஆரம்ப கலக் கட்டங்களில் அவரது ஸ்டைல் நடிப்புக்கும் சண்டை காட்சிகளுக்கும் மட்டுமே நானும் ரசிகனாயிருந்தேன். இவரது படம் பார்த்து நண்பர்களுக்கு கதை சொல்வது அலாதியான சந்தோஷத்தை தருவதாக இருந்தது. சற்றே வளர்ந்து நடிகர்களின் உடல் மொழியையும் வசன வெளிப்படுத்துகையையும் ஊன்றி கவனிக்க தொடங்கிய காலத்திலும் ரஜினி எனக்கு ஒரு நல்ல நடிகராகவே காட்சி தந்தார்.

முக்கியமாக முள்ளும் மலரும் படத்தின் உச்சக் காட்சியில் அனைவரும் இவரை நிராகரித்து அவரது தங்கையின் திருமணத்தை நடத்த முயலும் போது தனித்து ஒதுங்கியிருப்பதும் தங்கையோ அனைவரையும் புறந்த்தள்ளி விட்டு இவரை நாடி வரும் போது கம்பீரமாக தங்கையை இவரே அவளது காதலனோடு சேர்த்து வைக்கும் காட்சியில் இவரது நடிப்பு

தில்லு முல்லு திரைப்படத்தின் அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரனை அத்தனை எளிதாய் மறக்க முடியுமா? ஒரு காட்சியில் தன் தங்கையிடம் சொல்வார் " அம்மா இனிமே நா காதலிக்கவே மாட்டேம்மா அப்படியே காதலித்தாலும் கல்யாணமாகாத பொண்ணை காதலிக்கவே மாடேம்மா" என்பார். படத்தில் இவ்வசனம் வரும் கட்டத்தில் அவர் இதை கூறும் விதம் எளிதில் சிரிப்பை ஏற்படுத்துவதாக அமையும்.


நம்பியார், P.S. வீரப்பா என் ரசிகர்கள் வில்லனைக் கண்டு பயந்திருந்த சந்தர்ப்பத்தில் மிக ஸ்டைலிஷாக அவர்கள் திரைப்படத்தில் குத்தல் பேச்சுக்களால் சுஜாதாவையும் மூன்று முடிச்சில் ஸ்ரீதேவியையும் மிரட்டி ரசிகர் மனங்களை கொள்ளைக் கொண்ட முதல் வில்லன் இவராய்தானிருக்கும்.

suppose கமலும் இவரும் எழுபதுகளின் இறுதியில் தமிழ் திரையுலகம் வராதிருந்தால் அப்படியே சிவாஜியை அடியொட்டி நடித்த தமிழ் நடிகர்கள் சினிமாவை எங்கு கொண்டு சென்றிருப்பர். நினைக்கவே பயமாயில்லை. அது காலத்தின் தேவை என்பவர்கள் அதே காலக் கட்டத்தில் வந்த சிங்களப் படங்களையோ திலிப் குமாரின் ஹிந்திப் படங்களையோ பாருங்கள் இப்படியெல்லாம் உதடு துடிக்க பாடல்களுக்கு வாயசைத்து, வாய் பொத்தி ஆச்சர்யப்பட்டு, தூண்களில் சாய்ந்து கதறி, கன்னச் சதைகளைஎல்லாம் ஆட்டி இப்படி தம்மையும் நம்மையும் ஒரு சேர வருத்தியிருக்க மாட்டார்கள். எனக்கு தெரிந்து ரஜினி படையப்பாவில் இப்படி நடித்து பார்த்திருக்கிறேன். நடிப்புலக மேதையை மிஞ்சும் ஆவேசம் போலும்.
சிவகுமார் கூட ரஜினி,கமலின் வருகையின் பின்தான் அக்னி சாட்சி, சிந்து பைரவி போன்ற படங்களில் நடித்தார். மற்றவர்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை.

ரஜினியைப் பற்றிய பிரதான குற்றச்சாட்டு மசாலாப் படங்களில் மட்டும் நடிப்பது. அவரது படங்கள் யதார்த்த பூர்வமற்றவையாக இருப்பினும் அவரது நடிப்பு அதில் சோடை போனதில்லை என்பது என் அபிப்பிராயம்

நடிகர் என்பது தவிர்ந்து அவரது ஏனைய முகங்களும் ரசனைக்குரியவை. அவரது ஆன்மீகத் தேடல் பலரின் கேலிக்கு உள்ளானாலும் பாபா படத்தின் படு மசாலாவான அந்த அரசியல் காட்சிகள் தவிர்ந்து ஏனைய காட்சிகளும் திரைக்கதையோட்டமும் ராமநாராயணன் வகையறாக்களின் போலல்லாது ஒரு தத்துவ விசாரணம் போல் அமைந்திருந்தமை அவரது ஆன்மீக அறிவை பறை சாற்றுகிறது எனலாம். என் கணிப்பு சரியாயிருந்தால் படத்தையும் magical realism என்ற வகைக்குள் உள்ளடக்கலாம் என நினைக்கிறேன்.சரி இதுவெல்லாம் நான் சொல்ல வந்த விஷயத்துக்கான முன்னோட்டம் மட்டுமே

விஷயம் என்னவென்றால் இத்தனை தூரம் ரஜினி ரசிகரை இருந்தாலும் அவர் அரசியலுக்கு வருவதை மட்டும் மனம் ஒப்புக் கொள்ளாமல் இருந்தது. இதற்கு பிரதான காரணம் தமிழின எதிர்ப்பாளரான சோ அவரோடு ஒட்டியிருந்ததுதான். எங்கே அவர் அரசியலுக்கு வந்தால் ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழ் தேசியத்திற்கு எதிராய் குரல் எழுப்புவாரோ என்ற பயம் இருந்தது.
ஆனால் நடிகர்கள் உண்ணாவிரதம் இருந்த போது ஆவேசமாய் மஹிந்தவை நோக்கி குரல் எழுப்பியவர் பின்பு தன் பிறந்த நாள் கொண்டாட்டங்களையும் நிறுத்த சொல்லி இலங்கை தமிழர் மத்தியில் தமக்கிருக்கும் இடத்தை மேலும் வலுவாக்கிக் கொண்டார். இத்தனையும் போதாதென்று நேற்று வீரகேசரியின் இணையத்தளத்தில் பார்த்த செய்தி ஒன்று மனதை பேருவகைக் கொள்ள செய்தது.

அச் செய்தி

தமிழர்களுக்கு ஆதரவாக கர்நாடக ரஜினி ரசிகர்கள் அமைதிப் போராட்டம் நடத்தினர். இலங்கைப் பிரச்சினை முன்னெப்போதும் இல்லாத உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தங்களையும் அதில் ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். கர்நாடக மாநில ரஜினி சேவா சங்கத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் மகாத்மா காந்தி சாலையில் உள்ள காந்தி சிலை அருகே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து அமைதிப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ரஜினி ரசிகர்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி(அட !!!!) உலகத் தமிழ் கழகம், அகில இந்திய மனித உரிமைக் கழகம், திராவிடர் கழகம், கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றவர்கள்.

தலைவர் படத்தை பார்ப்பது போல விசிலடித்துக் கொண்டேதான் செய்தியை ரசித்தேன்.
கலக்குங்க தலைவாTuesday, March 10, 2009

எங்கள் ஊர் திருவிழா

எங்கள் ஊரில் தேர்த் திருவிழா மிகப் பிரசித்தம்.
திருவிழா ஆரம்பமானால் அன்றாடம் மகேஸ்வர பூஜை முடிய நடைபெறும் அன்னதானத்தின் போது நம்மவர்கள் டார்வினின் survival of fittest ஐப் பரீட்சித்துப் பார்ப்பது தனிச்சிறப்பு.

ஊரில் திருவிழா என்றால் ஒரு மாதம் பிள்ளைகள் பள்ளிப் பக்கமே செல்ல மாட்டார்கள்.( அட எதுக்கு போகணும் அதான் சாமி பார்த்துக்குமில்லசரணாகதி தத்துவமாம்)

இதற்கெல்லாம் சிகரம் வைத்தார் போல் நம் மாகாண தமிழ் கல்வி அமைச்சர் தான் பதவியேற்றவுடன் செய்த பெரிய சாதனையாக நேற்று பாடசாலைகளுக்கு விடுமுறை வாங்கி கொடுத்ததை பற்றி நாளேடுகளில் அறிக்கை விட்டிருந்தார். (இன்னும் என்னெல்லாம் சாதிப்பாரோ)

இலங்கையில் வேறெங்கும் சென்று மாத்தளைக்காரர் என்றால் கோயில் பற்றித்தான் விசாரிப்பார்.
ஒரு மாதத்திற்கு முன் ஆரம்பித்த திருவிழாவின் உச்சக்கட்டமான தேர் பவனி நேற்று ஆரம்பித்து நான் இதை பதிவிடும் இக்கணம் வரை விமர்சையாக நடைபெற்று வருகிறது.

அட இதே ஊரில் இருந்து போகல்லேன்னா எப்படி என்று நானும் நேற்றிரவு கொஞ்ச நேரம் போனேன் எதையாவது பார்த்து எழுதி பதிவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்ற நப்பாசைதான்.
பெருசா எதுவும் தேறவில்லை
சரி பார்த்து ரசிக்க சில படங்கள்

கடைசியாக ஒன்று காலம் காலமாகவே நம்ம ஊர் ஆன்மிகம்பால் ஆழ்ந்த பற்றுக் கொண்டது அட ஆமாங்க ஒரு காலத்தில் தமிழ்நாட்டையே கலக்கிய சுவாமி பிரேமானந்தா நம்மூர் காரர்தான் இங்கே ஆசிரமம் வைத்திருந்தவர் சிங்களவன் புண்ணியத்தில் 83 வன்செயலோடு தமிழகம் ஓடி விட்டார்


Related Posts with Thumbnails