Sunday, March 8, 2009

பெண்ணியமும் பெரியாரும்


இன்று மார்ச் 08 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம்
உண்மையில் பெரும்பான்மை பெண்கள் இன்றும் பெண்ணியம் என்ற பதத்தினை தமக்கு மிகவும் அந்நியமானதாகவே கருதுகின்றனர். மகளிர் தினங்களில் மாத்திரமே ஊடகங்களில் அதுவும் பெரும்பான்மையாக ஆண்களாலேயே இதுதான் பெண்ணியம் என்ற ரீதியில் வழங்கப்படும் விடயங்களை மேலோட்டமாக அறிவதோடு சரி மீள அடுக்களையிலேயே தமது வாழ்வினை தொலைத்து விடுகிறார்கள்.

காலத்திற்கு காலம் பெண்ணியம் தொடர்பில் பல்வேறு விளக்கங்களை நாம் அறிந்திருக்கிறோம். பெண்ணியச் சிந்தனையானது முதலாளியத்திற்கு எதிரான வர்க்கப் போர் தீவீரம் பெற்ற காலங்களில் முதலாளியத்தில் காணப்பட்ட பெண்ணடிமைத் தனத்தை எதிர்த்த மார்க்சிய சிந்தனையாளர்களாலேயே முதன்முதலில் முன்வைக்கப் பட்டது எனலாம்.

பெண்ணியம் தொடர்பில் மேன்னாட்டு அறிஞர்கள் கூறிய சில கூற்றுக்களை எடுத்து பார்க்கும் போது கார்டன் என்ற அறிஞர் " பெண்ணின் தாழ்நிலையை ஆராய்ந்து, அதை மாற்ற எடுக்கும் வழிமுறைகள் பெண்ணியம் எனப்படும்." என்றார். ஜெயின் என்பவர் " பெண்கள் தன்மையில் ஆண்களில் இருந்து வேறுபடினும் அவர்களும் தமக்குள் இணைந்து தாம் ஆணுக்கு நிகரானவர்கள் என்பதை உறுதிப்படுத்தலே பெண்ணியம்" என்பார். புட்சர் என்பவரோ " பாலினப் பாகுபாட்டால் பெண்களை எதிர்த்து இடம்பெறும் கொடுமைகளை எதிர்த்து மேற்கொள்ளப்படும் இயக்கம்" என்றார். பார்பரா ஸ்மித் மிக எளிமையாக "எல்லாத் தரப்பு பெண்களுக்கும் உரிமை பெற்றுத் தருவது பெண்ணியம்" என்றார்.

மேன்னாட்டு அறிஞர் கூற்று எவ்வாறு அமையினும் எம் பெண்களுக்கு பொருத்தமான எம் பெண்களுக்கு தேவையான சீரிய கருத்துக்களை தெளிவாக எடுத்துரைத்தவர் தந்தை பெரியார் என்று கூறினால் அது மிகையாகாது.
தமிழரிடையே பெண்ணடிமைத்தனம் பரவக் காரணமே இந்த கற்பு என்கிற கருமாந்திரம்தான். ஆண் மிகத் தந்திரமாக இயற்கையாக உடற்கூறியல் ரீதியில் தனக்கு இருந்த பலத்தினால் பெண்ணை அடிமை படுத்தியதோடு நில்லாமல் கற்பு என்றும் உயிரைக் கொடுத்தேனும் அதனைக் காக்கவேண்டும் என்றும் ஏற்பாடுகள் செய்து பெண் எப்போதும் தன்னை சார்ந்து தனக்கு அடிமையாய் இருக்கும்படியான நிலையை ஏற்படுத்தினான்.

இதை கடுமையாய் சாடும் பெரியார் "ஆண்-பெண் இருபாலாரும் சரி சமமமான சுதந்திரத்துடன் வாழவேண்டும் என்ற நிலைமை ஏற்பட வேண்டுமென்றால் கற்பு என்பதன் அடிப்படை இலட்சியமும் கொள்கையும் மாற்றப்பட்டு ஆண்-பெண் அனைவருக்கும் ஒரே நீதி ஏற்பட வேண்டும்" என்றார்.

இத்துடன் நில்லாது பெண்ணின் இந்நிலையை ஞாயப்படுத்தும் புராணங்களையும் இலக்கியங்களையும் எள்ளலுடன் விமர்சித்தார்.
மேல்சாதிக்காரன் கீழ்ச்சாதிக்காரனை நடத்துவதைவிட, ஆண்டான் தனது அடிமையை நடத்துவதைவிட மோசமாக ஆண்கள் பெண்களை நடத்துவதாக கூறி மனம் வெதும்பிய அவர் இதை உணராது ஆணுக்கு சேவகம் செய்யும் அடிமை வாழ்விலும் அலங்காரங்களிலும மாத்திரம் திருப்தி அடையும் பெண்களை பார்த்து மிகுந்த வருத்தமுற்றார்.

பால்ய விவாகம், தேவதாசி முறைமை, என்பன ஒழிய வேண்டுமெனவும் விதவை மணம், கலப்பு மணம், என்பன ஊக்குவிக்கப் பட வேண்டுமென்பதிலும் தீவிரமாய் அவருக்கு ஆர்வமிருந்தது.

அவர் இறந்து இத்தனை வருடங்களின் பின் அவரது அயராத முயற்சியின் பலன் இன்றைய பெண்களுக்கு கிட்டியுல்லாத எனப் பார்த்தால் ம்ஹ்ம் ஒரு சில விடயங்கள் தவிர்ந்து ஏமாற்றமே மிச்சமுள்ளது. 21 ஆம் நூற்றாண்டான இன்றும் பெண்கள் தம்மடிமைத் தனத்திற்கு காரணமான கொள்கைகளை வகுத்த பார்ப்பனனின் சாமிகளை பயபக்தியோடு பட்டுச் சேலை சர சரக்க சென்று கும்பிடுவதிலும் திருமணம் செய்து குழந்தை குட்டிகள் பெற்று கணவனை குஷிப் படுத்துவதிலுமே மிகுந்த திருப்தி கொள்கின்றனர்.
சினிமாக்களிலும் விளம்பரங்களிலும் ஆண்களுக்கு போகமூட்ட என உருவான அற்ப பிண்டங்களாகவே பெண்கள் சித்தரிக்கப் படுகின்றனர்.

இன்று உண்மையான பெண் விடுதலை உள்ள ஒரே இடம் தமிழீழம். ஆணுக்கு பெண் சரி நிகராய் ஆயுதம் தூக்கி தன் நிலத்தை மீட்டெடுக்க சமர் செய்யும் புனிதக் களம். அதை விடுத்துப் பார்த்தால் நம் தமிழ்ப் பெண்கள் இன்னமும் அடிமைகளாகவே இருக்கிறார்கள்.

அதிலும் மலையகத்தில் பெண்களின் நிலை இன்னும் ஒரு படி கீழே தேயிலைச் செடியினிலே தன் வாழ்வினைத் தொலைத்து விட்டு தன் சுயம் இழந்து வாழ்கிறாள்.

பெண்கள் தினம் கொண்டாடப்படும் இன்றைய நாளிலாவது அவர்தம் நிலை தொடர்பில் எண்ணிப் பார்ப்பது அவசியமாகும்.
பெண்களுக்கான விடுதலை பெண்களாலேயே அடையப்பட வேண்டும். tv searial பார்ப்பதும் நேரத்திற்கு உண்டு உறங்குவதும் தன்னை அலங்கரித்துக் கொள்வதுமே விடுதலை என அவர்கள் கருதினால் அது பெரும் பிழையாகவே முடியும்.
பெண்கள் சமுகத்தில் தங்கள் நிலை, அதற்கான காரணம் என்பவற்றை அறிந்து அதை நிவர்த்திக்க்க முன்வர வேண்டும்.
பெரியார் பாதையில் பெண்கள் உரிமை பெற வாழ்த்துவோம்.
"போற்றித தாயென்று தாளங்கள் கொட்டடா
போற்றித தாயென்று பொற்குழல் ஊதடா"

2 comments:

கலை - இராகலை said...

அருமையான கருத்துக்கள்!!!!!

//அதிலும் மலையகத்தில் பெண்களின் நிலை இன்னும் ஒரு படி கீழே தேயிலைச் செடியினிலே தன் வாழ்வினைத் தொலைத்து விட்டு தன் சுயம் இழந்து வாழ்கிறாள்.//

யார் இதற்கு விடையளிப்பார்?

தர்ஷன் said...

நன்றி கலை நீங்கள் தொடர்ந்து என் பதிவுகளை படிப்பது உற்சாகமூட்டுகிறது. அதிகம் பாராட்டவே செய்கிறீர்கள். உங்கள் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன்
நன்றி

Post a Comment

Related Posts with Thumbnails