திங்கள், 18 ஜனவரி, 2010

என்னைப் பாதித்த சினிமா Forest Gump

மிகத் தாமதமாக எழுதும் Forest gump படத்தைப் பற்றிய என் கருத்துக்களின் இரண்டாம் பாகம் இது. இப்போது முதலில் வாசிப்பவர்கள் இதன் முதற்பாகத்தையும் அப்படியே வாசித்து விடுங்கள்.


ஹாலிவுட் நடிகர்கள் எனும் போது நமக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த ரசிகர்களில் ஒரு சாரார் சீன் கானரி யை சிலாகிக்கும் அதேவேளை நடிப்பில் இவர்களை விஞ்ச யாருமில்லை என மார்லன் பிராண்டோ,ராபர்ட் டீ நீரோ, அல்பசினோ ஆகியோரைப் போற்றும் பிறிதொரு கூட்டத்தினரும் இருப்பார். மேற்சொன்ன ஒருவருக்கும் சற்றும் குறையாத நடிகர்களில் ஒருவராகவே நான் டோம் ஹான்க்சை காண்கிறேன். மேற்சொன்னவர்களின் பெரும்பாலான படங்களை நான் பார்த்ததில்லை. படத்தில் பாத்திரமாகவே மாறி விட்டார் என்று சொல்வதன் முழுமையான அர்த்தம் எனக்கு அப்போதுதான் புரிந்தது. இத்திரைப்படம் வெளிவந்த அதே வருடத்தில்தான் The shawshank redemption,Pulp fiction போன்ற படங்கள் வெளிவந்தது. இம்மூன்று படங்களில் எனக்குப் பிடித்த படம் The shawshank redemption. Pulp fiction முதற்றடவை புரியவில்லை. அண்மையில் பார்த்த போதும் அந்த கதை சொன்ன உத்தி அடடா என்ற பரவசத்தை படம் பார்த்து முடிந்த அந்தக்கணத்தில் ஏற்படுத்தியதே தவிர மனதை எல்லாம் தொடவில்லை. சில நேரம் எனது ரசனையின் போதாமையால் இருக்கலாம். எனினும் அம்மூன்று படங்களிலும் நடிப்பில் கவர்ந்தவர் Tom hanks தான். சின்ன சின்ன அசைவுகளிலே ஒரு அபார நடிப்பை அவர் வழங்கியிருந்தார்.பொருத்தமாக அந்த வருடத்திற்கான அகாடமி விருதும் அவருக்கே தரப்பட்டதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.


ஏலவே இறந்துப் போயிருந்த அமெரிக்க அதிபர்கள் மூவர் இந்தப் படத்தில் தம் நடிப்பு பங்களிப்பை வழங்கியிருந்தனர். கணணி வரைகலை நிபுணர்களின் உதவியோடு. இதே நுட்பம்தான் இந்தியன் படத்தில் நேதாஜி கமலுக்கு பதக்கம் அணிவிப்பதாக வரும் காட்சியில் பயன்பட்டது என நினைக்கிறேன். ஹாலிவுட் இலும் அந்நாட்களில் அது பெரிய தொழிநுட்ப வளர்ச்சியாக கருதப்பட்டிருக்கும்.

படத்தின் கதை நிகழ்வதாக காட்டப்படும் காலத்தில் நிகழ்ந்த முக்கியத்துவமிக்க சில சம்பவங்கள் படத்தின் கதையோட்டத்தில் வந்து செல்வது சிறப்பாக இருக்கும். சிறு வயதில் Forrest இன் வீட்டுக்கு வரும் விருந்தினர் எல்விஸ் ப்ரெஸ்லி ஆக இருப்பார். பின்னாளில் தாம் வாழும் காலக்கட்டங்களில் பதவியில் இருந்த அதிபர்களை எதேச்சையாக சந்திப்பார். அமெரிக்கா வியட்நாம் போரில் ஈடுபடுவதும் பின் போருக்கு எதிரான உணர்வு அமெரிக்காவிலேயே உருவாவது, சீனாவுடன் உறவைவலுப்படுத்த ராஜதந்திர நடவடிக்கையாக ping pong ஆட்டக் குழு சீன செல்வது. அமெரிக்காவையே ஆட்டிப் படைத்த ஹிப்பி கலாச்சாரம், ஆப்பிள் கம்பனியின் வளர்ச்சி, AIDS என்பன அவற்றுள் சில.


படம் பாரம்பரியமாய் தொடரும் மரபுகளுக்கும் அதற்கெதிரான எதிர் பண்பாட்டு வாழ்க்கை முறைக்கும் இடையிலான முரண்களைக் கூறி மரபுகளின் பெருமையையும் அவ்வாறான வாழ்க்கை முறையின் அவசியத்தையும் கூறுகின்றது எனலாம். இவ்வாறன புனிதக் கற்பிதங்களின் மீது நம்பிக்கையற்ற இப்படித்தான் வாழ வேண்டுமென்ற வரையறைகளை எல்லாம் மீறுதலே வாழ்க்கை என்ற எண்ணம் கொண்ட எனக்கு இந்தப் படம் பிடித்ததற்கான காரணம் எனக்கு இன்னமும் புரியவே இல்லை.

படத்தை பார்த்த போது எப்படி இந்தப் படத்தை கமல் தவற விட்டார். நிச்சயம் அவர் Remake செய்திருக்கக் கூடிய படம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதுவும் இந்தியனில் சந்துரு பாத்திரம் இந்த forrest பாத்திரத்தின் தோற்றத்திற்கு பொருத்தமான ஒன்றும் கூட. ஆனால் கமல் சொன்ன விடயம் இன்னமும் ஆச்சரியமான ஒன்று. அதாவது Forrest gump படத்திற்கு எதிராக அவர் வழக்கு கூட போட்டிருக்க முடியுமாம். அவர் நடித்த "சுவாதி முத்யம்" படத்திற்கும் அதற்கும் தொடர்புண்டாம் என்று சொல்லியிருக்கிறார். நான் அந்தப் படத்தை பார்த்ததில்லை. இப்போது ஷாருக்கின் My Name is Khan Trailer பார்த்த போது பாதிப்பில் எடுத்திருப்பதாகவே தோன்றியது. ம்ம் பெப்ரவரியில் பார்ப்போம் நான் நினைத்தது சரியா என.

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

கமல் ஃபாரஸ்ட் கம்ப்பின் மேல் வழக்குப் போட்டால், கமல் மீது எத்தனை வழக்குகள் போடுவது?

நாயகன் - God Father
அவ்வை சண்முகி - Mrs.DoubtFire
தெனாலி - What about Bob
அன்பே சிவம் - Planes, Trains and Automobiles
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

நீங்கள் டாம் ஹாங்க்ஸ் நடித்த டெர்மினல் பார்த்திருக்கிறீர்களா? நான் டாம் ஹாங்க்ஸின் ரசிகன். ஆமிர்கான் டாம்ஹாங்க்ஸை பின்பற்றி நடிப்பவர். ஆமிர்கானிடம் டாம்ஹாங்க்ஸ் பாதிப்பு நிறையவே தெரியும்.

பெயரில்லா சொன்னது…

I enjoyed Tom Hanks movies like Cast away, Forrest . Gump, Philadelphia, ..... Seattle (dont remember). Now I am living in SC, USA, Hampton. Forrest Gump shooting had been done here and still I enjoy the shot where the small boy and his mom just walking on a pavement. I walked on the same place many times and u find a brick-building at the background. The building is 'market square' which is now not a busy spot.
I still feel kamal has extra-ordinary talent like 'making you to cry' by involving in heart touching scenes and expressing all sadness and crying close to the camera for minutes. No hollywood actors can reach his acting. Try to compare such scenes of Kamal with others.

PPattian சொன்னது…

சிப்பிக்குள் முத்து என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வந்த படம்தான் தெலுங்கு சுவாதி முத்யம் (கமல், ராதிகா.. லாலி லாலி..)

ரெண்டுக்கும் ஓற்றுமை என்று ஏதாவது இருக்குமானால் அது அந்த விவரம் புரியாத நாயகன் கேரக்டர்தான்.. மற்றபடி ஃபாரஸ்ட் கம்ப் எங்கே.. சுவாதி எங்கே..

சுமார் பதிமூன்று வருடங்களுக்கு முன் பார்த்த படம் கம்ப். அந்த TT ஆடும் வேகமும், அமெரிக்கன் ஃபுட்பாலில் அவர் ஓடும் ஓட்டமும், போதைக்கு அடிமையாகி திரும்பி வரும் நாயகிகை ஏற்பதும் மறக்கமுடியாது..

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails