ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

புதிய பாராளுமன்றத்தில் மலையகம்


இனி இந்த பாழாய்ப் போன அரசியற் கணிப்புகளை எல்லாம் சொல்லக் கூடாது. பிறகு நம்ம மக்களைப் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. எத்தனை அழகாகக் கவிழ்க்கிறார்கள். போட்டிக் கொஞ்சம் கடுமையாக இருக்கும் என்ற என் அடிமன ஆசை எல்லாம் நிறைவேறாமல் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது ஆளும் கூட்டமைப்பு அரசாங்கம்.

மாத்தளையில் நான் கணித்ததுப் போல மூன்றுக்கு இரண்டு என்பதாக இல்லாமல் நான்குக்கு ஒன்று என்ற ரீதியில் மாபெரும் வெற்றிப் பெற்றிருக்கிறது அரசு. கூட்டமைப்பின் சார்பில் நான் எதிர்வு கூறிய நால்வரே வென்றிருக்கின்றனர். எனினும் மூன்றாமிடத்திற்கு போட்டியிடுவார் என நான் கருதிய லக்ஷ்மன் வசந்த ஆகக்கூடிய விருப்பு வாக்குகளை பெற்று முதலாமிடத்திற்கு வந்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பத்து வருடங்களாக பாராளுமன்றில் இருக்கும் ரஞ்சித் அலுவிஹார தோல்வியுற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கண்டியைப் பொறுத்தவரை நாவலப்பிட்டியில் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேயின் அட்டகாசத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முடிவுகள் இருபதாம் தேதி சில நிலையங்களில் நடைபெறும் மறு வாக்களிப்புக்குப் பின்னர் பெரும் மாற்றங்கள் இன்றி வெளிவரும் என நினைக்கிறேன். அது பெரும்பாலும் ஏழு , ஐந்தாக இருக்கலாம். எனினும் மனோ கணேசன் தெரிவாக மாட்டார் என்றே அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுவர எளிய வாக்காளர்கள்தான் என்னை அப்படியே கவிழ்த்து விட்டனர். உண்மையில் இது அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் அரசியல் சாணக்கியத்திற்கு கிடைத்த வெற்றி. ஆளுங் கூட்டமைப்புக்கு கிடைத்த ஐந்து உறுப்பினர்களில் முதல் மூவர் தொழிலாளர் காங்கிரசை சேர்ந்தவர்கள் தலைவர் ஆறுமுகம் தொண்டமானுடன், முன்னாள் மத்திய மாகாண கல்வியமைச்சர் ராதாக்ருஷ்ணன், ராஜதுரை ஆகியோரோடு அடுத்த இரு இடங்களில் சி.பி ரத்னாயக்க, நவீன் திசாநாயக்க ஆகியோர் தெரிவாகி உள்ளனர். ஐக்கியத் தேசியக் கட்சியைப் பொறுத்தவரை பாராளுமன்றிற்கு முதன்முறையாக இளைஞர்களான திகாம்பரம், ஜே.ஸ்ரீரங்கா ஆகியோர் தெரிவாகியுள்ளனர். எழுவரில் ஐவர் தமிழர்கள்.மகிழ்ச்சி.


தொழிலாளர் காங்கிரசில் போட்டியிட்டு தெரிவானவர்கள் மூவர் தேசியப்பட்டியலில் இருவர் என ஐவர் பாராளுமன்றத்திற்கு செல்லப் போகின்றனர். இரண்டு அமைச்சுப் பதவிகள் கிடைக்கலாம். (தொண்டா குடும்பத்தினர் பங்களிப்பின்றி ஒரு அமைச்சரவை இலங்கையில் இருந்ததுதான் உண்டா 77 க்குப் பின்) . செயற்றிறன் மிக்கவர்கள் எனக் கருதப்படும் எதிர்கட்சியைச் சேர்ந்த இருவரும் நம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றில் நிறையவே குரலெழுப்புவர் என நம்பலாம்.

அப்புறம் பதுளையில் இருந்த இரண்டு தமிழர் பிரதிநிதித்துவத்தையும் வெற்றிக்கரமாய் இழந்திருக்கிறோம்.
இதுதான் புதிய பாராளுமன்றில் மலையகத்தின் நிலைமை.

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

ஏழு பேரில் தமிழர் ஐவர் என்பதற்கு வாழ்த்துவதா, அவர்கள் ஆளும் கூட்டமைப்பில் தெரிவானதற்காக வருந்துவதா தெரியவில்லை.. :((

தர்ஷன் சொன்னது…

இல்லை முகிலன் என்னைக் கேட்டால் இதுதான் சரியானதெனச் சொல்வேன். இன்றைய நிலையில் எமது அன்றாட தேவைகள் ஏனும் நிறைவேற வேண்டுமெனின் அரசுடன் இணைந்திருப்பதே சரி. இம்முறை நாடு தழுவிய ரீதியில் கணிசமான தமிழர்கள் அரசுக்கும் வாக்களித்திருப்பதால் தமிழர்களுக்கு நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளிலிருந்து தட்டிக் கழிக்க முடியாது.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails