வெள்ளி, 20 பிப்ரவரி, 2009

தமிழா தமிழா

அரச சேவையில் இருப்பதில் ஒரு நன்மை மாதா மாதம் சம்பளம் வாங்குவதோடு நில்லாமல் அவ்வப்போது மேலதிக வரும்படிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். இப்படித்தான் கடைசியாய் நடந்த மத்திய மாகாண சபை தேர்தல் கடமைக்கென சென்ற போது பல சுவாரசியமான அனுபவங்கள் கிடைத்தன.

தம்புள்ள சரித்திர பிரசித்தி பெற்ற இடம் சிங்களவருக்கு இது புனித பிரதேசமும் கூட ரங்கிரி தம்புள்ள விகாரை, சர்வதேச கிரிகெட் மைதானம் என்பவற்றை கொண்ட இப்பிரதேசத்தில் தமிழர்கள் குறைவு என்றே நினைத்திருந்தேன். வாக்காளர் இடாப்பை பார்த்த போது என் எண்ணம் பிழை என்பதை தெரிந்துக் கொண்டேன்.

கிட்டத் தட்ட நூற்றுக்கு பத்து பேர் தமிழ் வாக்காளர்கள். ஏனைய பிரதேசங்களில் தமிழரின் எண்ணிக்கை இதை விட அதிகம் எனினும் தம்புள்ள போன்ற ஒரு பிரதேசத்தில் இவ்வளவு பேர் இருப்பது வரவேற்புக்குரியது.

என்னை தவிர பணியாற்றிய ஏனைய அனைவரும் சிங்களவர் எனினும் அனைவரும் சகசமாகவே பழகினர் . வாக்காளர் பட்டியலை நுணுகிப் பார்த்தவனுக்கு இன்னுமொரு அதிர்ச்சி அங்கே ஒரு தமிழ் பெயர் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.
வள்ளியம்மா சின்னசாமிலாகே வள்ளியம்மா கிட்டத்தட்ட சிங்கள பெயர்களில் வாசகம(பரம்பரை பெயர்) என்று ஒன்று இருக்குமே அதுபோல் இடாப்பை திருப்பி திருப்பி பார்க்க இது போல பல பெயர்கள் வெறுத்துப் போனவன் மெல்ல எழுந்து தலைமை அதிகாரியிடம் சென்று தமிழர் இவ்வாறு தம் பெயரை எழுதவது இல்லை எனவும் இது கிராம சேவகரின் பொறுப்பற்ற தனத்தால் வந்ததெனவும் கூறினேன். கவனமாக கேட்டவர் வாக்களரின் வாக்காளர் அட்டையை கிழிக்காது அவரது பெயரை சரியான முறையில் எழுதித் தரும் படியும் அடுத்த முறை பெயர் சரியாக வர ஆவன செய்வதாகவும் கூறினார்.

தமிழர்கள் தமது பெயரை எழுதும் முறையைக் கேட்ட சக ஊழியர்களிடம் நான் நாம் எழுதும் முறையை கூறிய போது ஏன் எம்மைப் போல் எழுதினால் தமது பரம்பரையை தொடர்ந்தும் கொண்டு செல்லலாம்தானே என்றவர்களிடம் அவர்களது பெயரைக்கொண்டே அவர்களின் சாதியை அறியக் கூடியதாயிருப்பதை சுட்டிக் காட்டி நாம் இவ்வாறு பிறப்பினால் தோன்றும் ஏற்றத்தாழ்வுகளை களைய விரும்புகிறோம் எனக் கதை விட்டேன்.

அப்போது ஒரு கூட்டம் அவர்கள் தமிழர்கள் என்பதை முகம் சொல்லியது திராவிடக் களையுடன் இருந்தனர். நம்மூர் கிரிக்கெட் வீரர் பெயர்களை சொல்லத் திணறும் வெளிநாட்டு அறிவிப்பாளர் போல இதுவரை சிங்களத்தோடு போராடிக்கொண்டிருந்த எனக்கு பெரிய மகிழ்ச்சி.

அடையாள அட்டையை வாங்கிப்பார்த்தவன் சிரித்தவாறே

" பேரை சொல்லுங்க? "

" மாத்தையா(ஐயா)"

"தமிழ்தானே நீங்க பேரை சொல்லுங்க"

" தெமல தமா மாத்தையா நமுத் தெமல கதா கரன்ன பே (தமிழ்தான் ஐயா தமிழ் பேச வராது) "

ஏன் அருகில் இருந்த சிங்கள பெண்மணி லேசாக புன்னகைத்தார்.

" சரி உங்க பெயர் பிழையா இருக்கில்ல மாத்திரலமா "

" இல்ல இதுதான் வசதி இப்படியே இருக்கட்டும் "

வேறெதுவும் பேசாது தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் வேலை செய்யும் கூலித் தொழிலாளிக்கான அடையாள அட்டையை திருப்பிக் கொடுத்தேன். அவரும் அவர் கூட இருந்தோரும் சரளமான சிங்களத்தில் உரையாடியவாறே வெளியேறினர். அதன் பின் நான் யாரோடும் ஏதும் பேசவில்லை.


2 கருத்துகள்:

kuma36 சொன்னது…

//வள்ளியம்மா சின்னசாமிலாகே வள்ளியம்மா ///

எவ்வள்வோ எழுத்துக்களை பார்திருந்தாலும் இது சற்று ஆச்சிரியமாகவே இருக்கு. அதே போல் இன்று சிங்கள பிரதேசத்தில் வாழும் தமிழர்கள் இப்படிப்பட்ட நிலைக்கு சொல்வது கவலைக்குரியதாகவும் காலத்தின் தேவையாகவும் உள்ளது வேதனையான விடயமே. பகிர்விற்க்கு நன்றி.

தர்ஷன் சொன்னது…

நன்றி எல்லாம் எதுக்குங்க
நம்மள பத்தி நாம பேசாம யாரு பேசுவா

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails