Tuesday, February 23, 2010

இப்படியும் ஒரு தமிழினம் 1தமிழனுக்கென்று ஒரு தேசம் இல்லையாயினும் இன்று உலகெங்கும் அவனில்லாத நாடே இல்லை எனுமளவுக்கு பரந்து வாழ்வது நம்மெல்லோருக்கும் தெரியும். தமிழகம் உலகத் தமிழரனைவரதும் தாயகம். பக்கத்திலேயே ஈழத்தில் தமிழர் நிலை எல்லோரும் அறிந்தது. ஆங்கிலேய ஆட்சியில் கரையோரங்களை அண்டி அமைந்த கிறிஸ்தவ மிஷனரிகளின் கல்விக்கூடங்களை சரியாகப் பயன்படுத்தி கல்வியின் மூலம் உயர்நிலைக்கு வந்து இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் உயர் நிலையில் இருந்தவர்கள் சுதந்திரத்தின் போது சரியாக தமக்குரியதைப் பெற்றுக் கொள்ளாமல் தவற விட்டு பின் பெரும்பான்மையினரின் சதி புரிந்து, விட்ட தவறை திருத்த முயன்றாலும் முடியாது, முதலில் அகிம்சை வழியிலும் பின் ஆயுதப் போராட்டம் மூலமாகவும் ஞாயமாய் தமக்குரிய அதிகாரத்தை பெற முயன்று, இயலாமல் இன்று நேர்ந்திருக்கும் அவலம் உங்களெல்லோருக்கும் தெரியும்.

ஆனால் அதிகாரத்திற்காய் போராடிய ஈழத் தமிழர் அல்லாது இதே இலங்கையில் வாழும் அதிகாரத்திற்காய் அல்லாது அன்றாடம் சோற்றுக்கே அல்லாடும் மலையகத் தமிழினம் பற்றி எந்தளவு அறிந்துள்ளீர்கள். 90 வீதத்திற்கும் மேல் எழுத்தறிவுள்ள தேசத்தில் தற்குறிகள் அதிகம் உள்ள பிரிவினர் என புள்ளி விபரங்கள் சொல்லும் பிரிவைச் சார்ந்த ஒருவன் என்ற முறையில் எங்களைப் பற்றியும் கொஞ்சம் சொல்லலாம் என விழைகிறேன்.

ஈழத் தமிழர் போல் எமக்கு இலங்கையில் நூறாண்டுகளாய் நீடித்த நெடிய வரலாறு இல்லை. ஒரு இருநூறு வருடங்களுக்கு முன்னர் ஆங்கிலேயரால் இங்கு கோப்பி,தேயிலை என்பன பயிரிடப்பட்ட போது கூலியாட்களாய் தமிழகத்தின் தென் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள். இவர்களை இங்கு கொணர்ந்த விதம் பற்றி ஒரு கதை சொல்வர் தேயிலைத் தூரின் கீழே மாசியும் தேங்காயும் இருக்கின்றதெனக் கூறியே இவர்கள் இங்கே வரவழைக்கப் பட்டர்களாம். இதன் உண்மைத்தன்மை எப்படியானதாயிருந்தாலும் சற்று மிகைப்படுத்தியேனும் அவர்களது அப்பாவித் தனத்தையே இது சொல்கின்றது எனலாம்.

மலையகத்தவரின் வாழிடம் உங்களுக்கு ஆச்சரியமளிக்கலாம். வெள்ளைக்கார துரைமார் குதிரைகளைக் கட்டப் பயன்படுத்திய குதிரை லாயத்தில் நம் மக்கள் ஒடுங்கிப் படுப்பதைக் கண்டு இதையே அவர்களின் குடியிருப்பாக்கி விட்டனர் என்றும் ஒரு கதையுண்டு. இந்த லயன் காம்பராக்கள் என்று அழைக்கப் படும் இக்குடியிருப்புகள் ஏதோ சில தசாப்தங்களுக்கு முந்தியதல்ல. பெரும்பான்மையானோரின் வாழ்க்கை இன்னும் இந்த லயன்களில்தான்.

இந்த ஹைக்கூவை வாசித்துப் பாருங்கள் மலையகத்தின் பிரபல கவிஞர்களில் ஒருவரான சு.முரளிதரன் எழுதியது நான் ஆசிரியப் பயிற்சி பெற்றக் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி. சுஜாதா கூட கற்றதும் பெற்றதுமில் இவரது கவிதையொன்றை குறிப்பிட்டிருப்பார்.
இதுதான் லயன்களில் நம்மக்களின் வாழ்க்கை

போதுமான ஆட்களேறியும்
புறப்படவில்லையே
புகையிரதம்!

லயன்கள்
.


நேற்றைய என் பதிவுக்கு அனானியாக வந்து பின்னூட்டமிட்டவருக்கே நன்றி சொல்ல வேண்டும். நீங்கள் ஏன் உங்கள் மக்களின் அரசியல் அபிலாஷைகள்,வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், கல்வி போன்றவை பற்றி பதிவிடக் கூடாது என ஞாயமாக கேட்டிருந்தார். அதைப் படித்தப் பின் சொரணை வந்து அவசரமாய் டைப்பியது. ஆக இந்த வாரம் மட்டுமில்லாமல் தொடர்ந்தும் நம் மக்களின் வாழ்வாதரப் பிரச்சினைகளை பதிவுகள் வாயிலாக வெளிக்கொணர எண்ணியுள்ளேன். வந்துப் பார்ப்பதோடு நில்லாமல் மலையகத் தமிழர் பற்றி அறிந்திராத உங்கள் நண்பர்களுக்கும் அறியத் தந்தால் மகிழ்வேன்.

14 comments:

புல்லட் said...

நல்ல உருக்கமான பதிவு.. நட்சத்திர பதிவரானமைக்கு வாழ்த்துக்கள்..

முகிலன் said...

மலையகத்தவரா நீங்கள்?

எனக்கு பல ஈழத்தமிழர் பழக்கம் உண்டு. அவர்களில் பலரிடம் மலையகத்தைப் பற்றிய நல்ல அபிப்ராயம் இல்லையே ஏன்? எனக்குப் புரியாத புதிர் இது. யாராவது மலையகத்தவரைப் பார்த்தால் கேட்க வேண்டும் என்று நினைத்தேன். கேட்டுவிட்டேன்.

பதில் சொல்வீர்களா?

PPattian : புபட்டியன் said...

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.. தொடர்ந்து படிப்பேன்..

தர்ஷன் said...

நன்றி புல்லட் உங்கள் மோதல் வரிகை என நினைக்கிறேன்

நன்றி ப்புட்டியன்

நன்றி முகிலன்
காரணம் சரியாக சொல்லத் தெரியவில்லை. அவர்கள் போரில் பாதிக்கப்படுகையில் போதுமான கரிசனம் எமதுப் பக்கத்தில் காட்டப்படவில்லை என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கலாம். மலையகம் புவியியல் ரீதியிலும் கலாச்சார, பழக்க வழக்கங்கள், மொழி என சகலதிலும் ஈழத்திலிருந்து வேறுப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. படிக்கும் காலத்தில் என் நண்பர்கள் பலர் யாழிலிருந்து வந்தவர்களே அவர்கள் ஒருநாளும் நீங்கள் சொன்னது போல் நடந்ததில்லை.

முகிலன் said...

தர்ஷன், நான் ஒரு முக்கியமான விசயத்தைச் சொல்ல விட்டு விட்டேன்..

எனக்குப் பல “புலம்பெயர்ந்த” ஈழத்தமிழர் பழக்கம் உண்டு. இவர்களில் பெரும்பான்மையோர் போர் துவங்கும் முன்பே - 70-80 வருடங்களில் புலம்பெயர்ந்தவர்கள்.

தர்ஷன் said...

ம்ம் முகிலன் அடுத்தடுத்த பாகங்களை படியுங்கள் உங்கள் சந்தேகத்திற்கு ஏதேனும் விடை கிடைக்கலாம்.

Karthikeyan G said...

too good article.. Thnx..

முகிலன் said...

காத்துக் கொண்டிருக்கிறேன்... :)

இலங்கையில் உள்ள பல்வேறு இனத்தவருக்கு குடியுரிமையிலேயே வித்தியாசங்கள் உண்டாமே? அதைப் பற்றியும் எழுதுங்கள்.

தங்க முகுந்தன் said...

எங்கள் தலைவர் தந்தை செல்வா மலையக மக்களின் குடியுரிமை பிரச்சனை வரும்போதுதான் தனியாக ஒரு கட்சியையே தொடக்கினார். இன்றுவரை இம்மக்களுக்காக உருப்படியாக எவரும் எதுவும் செய்ததாக அறியமுடியவில்லை. இத்தகவலில் பிழையிருந்தால் மன்னிக்கவும்.

தர்ஷன் said...

முயல்கிறேன் முகிலன்

நன்றி தங்கமுகுந்தன்

செல்வராஜா மதுரகன் said...

அருமையான பணி தர்சன், முதலாவது விடயம் இலங்கையில் தமிழரை இரு பகுதிகளாக பிரித்தது அவர்களாக விரும்பி ஏற்றுக்கொண்ட ஒன்றல்ல என்னதான் பேச்சு வழக்கு மற்றும் கலாச்சாரம் குறிப்பிட்ட அளவு மாறுபட்டாலும் அவர்கள் பெரும்பான்மை இனவாதிகளால் திட்டமிட்டு எம்மிடமிருந்து பிரிக்கப்பட்டவர்கள், மேலும் யுத்தம் வலுத்த பிற்காலத்தில் மலையகத்தைச் சேர்ந்த தமிழர்களின் அபிலாசைகள் பல மறக்கப்பட்டுப் போனதும் உண்மைதான். ஆனால் தென்னிலங்கை கலவரங்களினால் இடம்பெயர்ந்து எமது பகுதிக்கு (வவுனியா) வந்த பெரும்பங்கு மலையகத் தமிழர்கள் இன்று எங்களில் ஒருவராக வாழ்ந்து கொண்டிருப்பதையும் நான் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

கலையரசன் said...

மலையகத் தமிழர் பற்றி எழுதத் தொடங்கியமைக்கு பாராட்டுகள். மலையகத்தை சேர்ந்த முன்னாள் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் நித்தியானந்தன் சில ஆய்வுகளை செய்துள்ளார். அவர் இங்கு புலம்பெயர்ந்த நாடுகளில் இடம்பெறும் கலந்துரையாடல்களில் தவறாமல் மலையகத்தைப் பற்றி நாம் அறியாத பல தகவல்களை வழங்குவார்.
முகிலன் கூறுவதில் சில கசப்பான உண்மைகள் மறைந்துள்ளன. யாழ் மையவாத சிந்தைக்குட்பட்ட யாழ்ப்பாண தமிழர்கள் மலையகத்தவரை தாழ்வாக கருதுவதுண்டு. அண்மையில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட "மண்" திரைப்படம் இந்த உண்மையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. http://www.youtube.com/watch?v=oEt3QSXlrQc தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பமாகிய காலத்தில் இருந்து, ஈழத்தமிழர்கள் தமக்குள் இருக்கும் பிரிவினைகளை வெளியே காட்டிக் கொள்வதில்லை. இதைப் பற்றி பேச நிறைய உள்ளன.

செல்வராஜா மதுரகன் said...

நிச்சயமாக யாழ் மைய வாதம் தமிழர்களுக்குள் எத்தனையோ பிரச்சனைகளை தோற்றுவித்துள்ளது என்பதை மறுக்க முடியாது

palaniswamy said...

unmail enakku pidithirukiradhu.

Post a Comment

Related Posts with Thumbnails