வியாழன், 25 பிப்ரவரி, 2010

இப்படியும் ஒரு தமிழினம் 2


முதல் முறை இந்தப் பதிவைப் பார்ப்பவர்கள் அப்படியே இதன் முதற் பாகத்தையும் இங்கே சென்று படித்து விடுங்கள்.

மலையகத் தமிழர்களுக்கு இலங்கையில் நீண்ட வரலாறு இல்லை என்று சொல்லியிருந்தேன். ம்ம் ஆமாம் 19 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் அவர்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டார்கள். மன்னாரிலே இறங்கி அங்கிருந்து மலைநாடு நோக்கித் தமது நடைப்பயணத்தை ஆரம்பித்தவர்களில் பலர் தொற்று நோய்களுக்கும், காட்டு விலங்குகளுக்கும் பலியாக எஞ்சியோர் மலையகத்தை வந்தடைந்தனர். மாத்தளை,கண்டி,நுவர எளிய பகுதிகளில் உள்ள உயர்ந்த நிலங்களிலுள்ள அடர்ந்த காடுகளை தம் இரத்தம் சிந்திய விலைமதிப்பற்ற உழைப்பின் மூலம் இலங்கைக்கு பெரும் அந்நிய செலாவணியை இன்றும் ஈட்டித் தரும் பெருந்தோட்டங்களாக மாற்றிய பெருமை இவர்களையே சார்ந்தது.

உங்கள் வீட்டுக்கு வரும் ஒருவர் உங்கள் வீட்டின் முன்னேற்றத்திற்கு பாடுப்பட்டு உழைக்கிறார். அவரது தேவை இனி அத்தனை தூரம் அவசியமில்லை எனும் நிலை வரும் போது அவரை வீட்டை விட்டு விரட்டி விடுவீர்களா? அப்படித்தான் செய்தது அன்றைய இலங்கை அரசு. ஆம் பிரித்தானிய ஆட்சியில் இலங்கைப் பிரஜைகளாகவே கருதப்பட்ட இந்திய வம்சாவளியினருக்கு ஓட்டுரிமையும் இருந்தது. தேர்தல்களிலும் அவர்கள் இடதுசாரிகளையே ஆதரித்திருந்தனர். இதைக் கருத்திற்கொண்ட முதலாளித்துவ ஐக்கிய தேசியக் கட்சி சுதந்திரம் கிடைத்ததும் இலங்கை பிரஜாவுரிமை சட்டத்தைக் கொண்டு வந்தது.

சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க

அதாவது இலங்கையில் பிறந்த ஒருவருடைய தகப்பன் இலங்கையில் பிறந்தவராக இருக்க வேண்டும் அல்லது அவருடைய தந்தை வழிப் பேரனும், தந்தை வழிப்பாட்டனும் இலங்கையிற் பிறந்தவர்களாக இருந்தால், அவர் இலங்கைப் பிரஜையாகவே கருதப்படுவர்.
அல்லது இலங்கைக்கு வெளியே பிறந்தவர் இலங்கைப் பிரஜையாக கருதப்பட அவருடைய தந்தையும், தந்தை வழிப் பேரனும் இலங்கையிற் பிறந்திருத்தல் வேண்டும், அல்லது, அவரின் தந்தை வழிப்பேரனும், பாட்டனும், இலங்கையில் பிறந்திருத்தல் வேண்டும்.
இந்த சட்டத்தினால் அன்று இலங்கையில் இருந்த ஏழரை லட்சம் இந்திய தமிழர்களும் நாடற்றவர்களானார்கள்.

ஜி.ஜி.பொன்னம்பலம்

அப்போதுதான் எதிர்பார்த்திராத இடத்திலுருந்து மலையகத் தமிழருக்கு எதிரான துரோகம் ஒன்று நடந்தேறியது. அக்காலத்தில் இலங்கை அரசியலில் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்த தமிழ் கட்சி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ். அதன் தலைவர் அமரர் ஜி.ஜி . பொன்னம்பலம் அவர்கள் ஆவார். இச்சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டப் போது ஒப்புக்கு அதை எதிர்த்தவர் பின் கதவு வழியாக ஐக்கிய தேசியக் கட்சியோடு செய்திருந்த ஒப்பந்தத்திற்கு அமைவாக சட்டமூலத்தை எதிர்த்தோ ஆதரித்தோ வாக்களிக்காது நடுநிலை வகித்தார். பின் அப்படியே அரசோடு இணைந்தவர் அங்கு அமைச்சுப் பதவியைப் பெற்று தனது பிரதேசத்தில் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை, வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை என பல அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டார். இதனால் மனம் நொந்த அதே கட்சியை சேர்ந்த தமிழர்களால் இன்றளவும் தந்தை செல்வா என அழைக்கப்படும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் உள்ளிட்ட சிலர் பிரிந்து சென்று தமிழரசு கட்சியை ஆரம்பித்தமையும் வரலாறு. இச்செயற்பாடானது மலையக மக்களுக்கு ஈழத் தமிழர் மீது நிரந்தரமாய் ஏற்பட இருந்த வெறுப்பைத் தனித்தது எனலாம்.

தந்தை செல்வா

ஜி.ஜி.பி எதிர்த்து வாக்களித்தாரென்றும், இல்லை அவர் ஆதரித்து அவரும் அவர் சார்ந்த கட்சியினரும் வாக்களிக்காது விலகி நின்றனர் எனவும் பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றனர். ஆக இங்கு நான் எழுதியிருப்பது பெரும்பான்மையானோரின் வாய் வழி கேட்டக் கருத்துக்களே. அகில இலங்கைத் தமிழ் காங்கிரசும் அப்பாத்துரை வினாயகமூர்த்தியும் இன்று வரையிலும் அவர் எதிர்த்து வாக்களித்தாரென்று அவரை ஞாயப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுப்பட்டுள்ளனர். அண்மையில் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் இது தொடர்பில் அப்பாத்துரை வினாயகமூர்த்தி மலையகத்தைச் சேர்ந்த பிரதியமைச்சர் புத்திரசிகாமணியுடன் காரசாரமான விவாதங்களில் ஈடுப்பட்டார். எனினும் ஜி.ஜி.பி அரசுடன் சேர்ந்தமை அவர் தரப்பை சந்தேகத்துடனே பார்க்கச் செய்தது எனலாம்.

தொடரும்.......

8 கருத்துகள்:

தங்க முகுந்தன் சொன்னது…

தொடரட்டும் உமது பணி. நிறைய விடயங்கள் நானும் எழுதியிருக்கிறேன். வடக்கு கிழக்கு வாழ் தமிழ்மக்கள் இருந்த இருப்பை இப்போது கைவிட்டு நடுத்தெருவில் நிற்கிறார்கள். உண்மையிலேயே அடிப்படை உரிமையிலிருந்து அரசியல் உரிமைவரை போராட வேண்டிய கட்டாயத்திலிருப்பவர்கள் மலையக மக்களே! ஆனால் அங்கு கோலோச்சுபவர்களின் வண்டவாளங்களையும் நீங்களே சொல்வதுதான் நல்லது. தொடருங்கள்!

PPattian சொன்னது…

//மன்னாரிலே இறங்கி அங்கிருந்து மலைநாடு நோக்கித் தமது நடைப்பயணத்தை ஆரம்பித்தவர்களில் பலர் தொற்று நோய்களுக்கும், காட்டு விலங்குகளுக்கும் பலியாக எஞ்சியோர் மலையகத்தை வந்தடைந்தனர்//

இதை ஒரு திரைப்படமாக எடுத்தால் எப்படி இருக்கும்.. டைட்டானிக் போல..

தொடரட்டும் உங்கள் பணி

தர்ஷன் சொன்னது…

நன்றி தங்கமுகுந்தன்
நிச்சயம் தொடரும் பதிவுகளில் அவற்றையும் தொட்டுச் செல்கிறேன்

நன்றி ப்புட்டியன்
Titanic போலவா நானும் ஆயிரத்தில் ஒருவன் போல இருக்கே என யோசித்தேன்

இலங்கன் சொன்னது…

அண்ணா தர்சன் அண்ணா நானும் மலையகத்தில் அதிக காலம் வாழந்தவன். மலையகம் சார்ந்த சில பிரச்சனைகளை நானும் அறிவேன்... நல்ல பதிவு தொடருங்கள்....

Unknown சொன்னது…

நல்ல பகிர்வு தர்ஷன். தொடருங்கள்.

இலங்கையில் மூன்று விதமான குடியுரிமை இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். கடவுச்சீட்டில் (பாஸ்போர்ட்) கூட பிரித்துத்தான் போடுவார்கள் என்று. உண்மையா?

தர்ஷன் சொன்னது…

நன்றி முகிலன்
நன்றி இலங்கன்

ஆராய்வு சொன்னது…

தற்செயலாக உங்களது இந்த பதிவை பார்க்க நேரிட்டது. பதிவு சிறப்பாக இருந்தது. நான் இலங்கையில் தொலைக்காட்சி ஊடகவியலாளனாக பணியாற்றிய போது மலையகத்தமிழர்கள் குறித்து பல விவரணங்களை தயாரித்து வெளியிட்டவன் என்ற முறையில் மலையகத்தமிழர்கள் தொடர்பில் அதிகம் ஆர்வம் கொண்டவனாக உள்ளேன். எனது 'ஆராய்வு' தளத்தில் இலங்கை இந்திய அரசியல் தொடர்பில் எழுதி வருகிறேன். ஆனால் இன்னும் மலையக மக்கள் தொடர்பில் எழுதவில்லை. இலங்கையிலிருந்து வெளியேறிய பிறகு மலையக தொடர்புகள் குறைந்து விட்டமையே அதற்கு காரணம். உங்களைபோன்றவர்களினூடாக அந்த குறை தீர்க்கப்படும் என நினைக்கிறேன். எனது வலைத்தளத்தை பாருங்கள், தொடர்பு கொள்ளுங்கள். ( http://jeevendran.blogspot.com/ )
நன்றி- ஜீவேந்திரன்

செல்வராஜா மதுரகன் சொன்னது…

குடியுரிமைப் பிரச்சினையின் பொது சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் படி மானிடப்பங்கீடு நடந்தது எப்போது நினைத்தாலும் மெய் சிலிர்க்க வைக்கின்ற விடயம், தொடர்ந்து எழுதுங்கள் காத்து இருக்கிறோம்...

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails