புதன், 11 நவம்பர், 2009

100 பெரியார் வந்தாலும்


பாடசாலை நூலகத்தில் புத்தக அலுமாரியை புரட்டி கொண்டிருந்தேன். ஆன்மீக புத்தகங்கள் அடுக்கப் பட்டிருந்த பகுதியில் இருந்த ஒரு புத்தகத்தின் அட்டையில் பெரியார். இலேசாக அதிர்ந்தவன் யாரேனும் கவனயீனமாய் மாற்றி வைத்திருக்கக் கூடும் என்ற எண்ணத்தில் புத்தகத்தை எடுத்து புரட்டினேன். அதிலோ அழகாக புத்தக இலக்கம், புத்தகம் அடங்கும் பிரிவு என்பன விரிவாக எழுதப்பட்டிருந்தது.

"Teacher இந்த Book ஏன் இதுல வச்சிருக்கீங்க "

"ஏன் அப்ப எதுல வரும்?"

"ஐயோ Teacher பெரியார் கடவுள் நம்பிக்கையையே தீவிரமா எதிர்த்தவர்"

"அய்யய்யோ தாடி வச்சிருக்கவும் சாமியார்னு நினைச்சிட்டேன்" என்றவாறே தன அசட்டுத் தனத்தை பெரியதோர் நகைச்சுவையாக நினைத்து சிரித்தார். இன்னும் இரண்டு பெண்ணாசிரியர்களும் அவரோடு சிரிப்பில் கலந்து கொண்டனர்.

"இல்ல தர்ஷன் அத திருப்பி மாத்தி எழுதி பதிஞ்சிக்கிட்டு இருக்க ஏலாது, அதுலேயே இருக்கட்டும் யாருக்கு தெரியும்" என்றார்.

ஒரு சிந்தனாவாதியாக தன் சமூகத்தில் புரையோடியிருந்த அபத்தங்களை களைய எண்ணத்தாலும் சொல்லாலும் செயலாலும் இறுதி மூச்சுள்ளவரை உழைத்த ஒரு சமூகப்போராளி. பின்நவீனத்துவவாதிகளின் வார்த்தையில் சொல்வதாய் இருந்தால் சராசரிகளின் பொதுப்புத்தியில் உறைந்து போயிருந்த அபத்தங்களை கட்டுடைத்தவர். அப்படிப்பட்டவரை எத்தனை தூரம் நம் ஆசிரியர்களே அறிந்து வைத்துள்ளனர் என எண்ணியபோது வேதனையாக இருந்தது. மெல்ல பெரியார் தொடர்பில் நானறிந்து அவரது கருத்துக்களை உள்ளத்தில் வரித்துக் கொண்ட காலப்பகுதியை மனதுள் அசைப் போட்டு பார்த்தேன்.

சுயச் சிந்தனையை மழுங்கடிக்கச் செய்வதில் இலங்கையின் கல்வி முறைக்கு பெரும் பங்கு உண்டு. குழந்தைகளில் நல்ல விழுமியங்களை ஆன்மிகக் கல்வியின் வாயிலாக மட்டுமே ஏற்படுத்த முடியும் என்று சொல்லி சிறு வயதிலிருந்தே சிறுவர்களின் மனதில் மதத்துவேசத்தை வளர்ப்பதில் முன்னிற்பவை இவை. அவ்வகையில் என் சிறு பராயத்தில் ஆழ்ந்த மத நம்பிக்கைகளை கொண்ட ஒருவனாக இருந்த போது ஒரு முறை பெரியாரின் நூலொன்றை படித்து விட்டு பெரும் அதிர்ச்சியுற்றேன். ஹிந்து மதம் ஏனைய மதங்களை விட உயர்ந்ததாயும் அதன் புராணங்கள் சொல்லும் கதைகள் உயர்ந்த உள்ளார்த்தங்களை கொண்டதாயுமே எனக்கு கற்பிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் எவ்வித தயவுத் தாட்சன்யமுமின்றி ஹிந்து மத புராணங்களளில் இருந்த ஆபாசங்களை எள்ளி நகையாடிய அவர் கருத்துக்கள் எனக்கு பெரும் அதிர்ச்சியை தந்தன. எனினும் என் பதின்ம வயதுகளில் சற்றே முதிர்ச்சியுடன் சமூகத்தை அணுகிய போது மதத்தின் பெயரால் நிகழும் மூட பழக்க வழக்கங்களும் ஏற்றத் தாழ்வுகளும் மதத்தின் மீதான தீவிர பற்றை இல்லாமற் செய்திருக்க நான் இலகுவாகவே பெரியார் வசமானேன். அன்றிலுருந்து இன்று வரை தொடர்ந்தும் பெரியாரைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். அவரின் கருத்துக்கள் எத்தனை தூரம் இன்றும் சமூகத்திற்கு அவசியப்படுகிறது என்ற வியப்பு எனக்கு அவரை வாசிக்கும் ஒவ்வோர் சந்தர்ப்பத்திலும் ஏற்படுகிறது.

ஒரு ஆசிரியனுக்கு பாடத்தையும் தாண்டி பலதையும் மாணவனுக்கு கொடுக்க வேண்டிய கடமை இருப்பதாய் நம்புபவன் நான். எனினும் என் மாணவர்களுக்கு கடவுள் நம்பிக்கை தொடர்பான தனிப்பட்ட கருத்துக்களை திணிக்க நான் முற்பட்டதில்லை. அப்படியிருந்தும் அன்றொரு நாள் O/L வகுப்புக்கு Darwin's theory படிப்பிக்கும் போது சிறப்பு படைப்புக் கொள்கை தவறு என விளக்க வேண்டியிருந்தது. Theory of Natural selection பற்றி கற்பிக்கையில் கடவுள் என்ற ஒருவரால் உயிரிகள் படைக்கப்பட்டமைக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என்று ஒரு வார்த்தைதான் சொன்னேன். இதற்கே எனக்கு அடிக்கப்போவதாயும் கொல்லப்போவதாயும் பாடசாலைக்கு மொட்டைக்கடதாசி அனுப்பி என்னை அசிங்கமாய் தூற்றி எழுதி ஆன்மிகம் வழி தாம் பெற்ற விழுமியப் பண்புகளை காட்டியிருக்கின்றனர் நம்மவர்கள்.
ம்ம் "இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் "


7 கருத்துகள்:

பரணீதரன் சொன்னது…

பூமி உருண்டை என்றும் பூமிதான் சூரியனை சுதிவருகிறது என்ற உண்மையை கண்டறிந்து சொல்லிய கலிலியோவை இந்த நாட்டு மதபோதகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை("the LORD set the earth on its foundations; it can never be moved."). அவருக்கு தண்டனை தான் கொடுத்தார்கள். அப்படிப்பட்ட உலகம் இது இதில் நம் கருத்துகளை ஆதரிப்பவர்களை விட எதிர்ப்பவர்கள் அதிகம். இதெல்லாம் சகசம். நாம் நம் வேலையே தொடர்ந்து செய்வோம். உங்களின் இந்த பதிவிற்கு மிக்க நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

//பாடசாலைக்கு மொட்டைக்கடதாசி அனுப்பியதோடு Toilet இலும் என்னை அசிங்கமாய் தூற்றி எழுதி ஆன்மிகம் வழி தாம் பெற்ற விழுமியப் பண்புகளை காட்டியிருக்கின்றனர் நம்மவர்கள்.
ம்ம் "இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் "//

நீங்கள் அடிமடியில் கைவைத்து அவர்கள் பிழைப்பில் மண்போடுகிறீர்கள். பொங்காமல் விடுவார்களா?
ஆனாலும் உங்களைப் போன்ற இளஞர்களில் ஏற்படும் மாற்றமே; காலஓட்டத்தில் பெரும் அதிர்வுகளை
ஏற்படுத்தும்; அதற்கு காலம் எடுக்கலாம்; ஆனால் பயன் இருக்கும்.
நல்ல எழுத்து...தொடரவும்.

தர்ஷன் சொன்னது…

நன்றி மானமுள்ள சுயமரியாதைக்காரன்
தங்கள் பின்னூட்டம் ஊக்கமளிக்கிறது நன்றி

தர்ஷன் சொன்னது…

அன்பின் நண்பர் யோகன் பாரிசுக்கு
நன்றி தொடர்ந்தும் தங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்

வனம் சொன்னது…

வணக்கம் தர்ஷன்

நமது குடிமை(social) அமைப்பு முறையின் பயன் இது. இங்கு மற்றவர்கள் சரியாக இருக்கின்றார்களா என பார்ப்பது இல்லை மற்றவர் நம் சொல் கேட்டு நடக்கின்றார்களா என பார்ப்பதுதான் இருக்கின்றது.

அதில் மற்றவரை எளிமையாக நம் வார்த்தைகளை கேட்க வைப்பதற்கு இந்த மதம், கடவுள் நம்பிக்கைகள் மிகவும் உதவுகின்றன.

ஏனேனில் அவைதான் கேள்வி கேட்காதே சொன்னபடி செய் என கற்பிக்கின்றன.

இராஜராஜன்

தர்ஷன் சொன்னது…

நன்றி ராஜராஜன்
சரியாய் சொல்லியிருக்கீர்கள் பெரியார் தான் சொன்னதையே அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டாமெனச் சொல்லியவர். அவர் எங்கே இந்த ஆன்மீக வாதிகள் எங்கே

ஷஹி சொன்னது…

NICE....

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails