திங்கள், 9 நவம்பர், 2009
சச்சின் முதல் சரத் பொன்சேகா வரை
Form is temporary, Class is permanent என்று சொல்வார்கள். அதுதான் ஞாபகம் வந்தது அன்று சச்சினின் அதிரடியைப் பார்த்த போது சச்சினின் துடுப்பாட்டம் எப்போதும் பலரால் சிலாகித்து பேசப்படும் ஒன்று என்றாலும் அழுத்தங்களின் போதோ முக்கியமான போட்டிகளிலோ பிரகாசிப்பதில்லை என்பது
அவர் மீது வைக்கப்படும் பொதுவான குற்றச்சாட்டு .எனினும் அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும் விதமான அந்த அதிரடி சதம் அவரால் மட்டுமே சாத்தியம். சச்சினை தாத்தா என்று சொன்ன யுவராஜ் சிங்கிலிருந்து காம்பிர்,டோனி அனைவரும் ஏமாற்றியதுதான் வருத்தமாய் போய் விட்டது. ம்ம் ஆனால் இந்த சதத்தையும் ஏதோ வெறும் இரண்டாம் நிலை பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவே பெற்றார் என்று அலம்பவும் நிறைய பேர்.
கமல்ஹாசனின் 50 வருட கலைச்சேவையை நினைவு கூறும் விதமாக இங்கு இலங்கையிலும் புத்தகம் வெளியிட்டுக் கொண்டாடி இருக்கிறார்கள். ( பதிவர் வந்தியதேவனுக்கு தெரியுமோ தெரியாது) . இவரது 50 வருட கலைப் பணியை முன்னிட்டு "50 ஆண்டுகள் சினிமாக் கலையில் பத்மஸ்ரீ கமல்ஹாசன்'' என்ற சாந்திலால் டேனியல் தொகுத்த நூல் கடந்த 25/10/2009 அன்று சுகததாஸ ஸ்போர்ட்ஸ் ஹோட்டலில் வெளியிட்டு வைக்கப்பட்டதாம். எனக்கு இருந்த ஒரே சந்தேகம் இந்த விடயம் கமலுக்கு தெரியுமா?
வாழத் தகுதியில்லாதவர்களுக்கு மரணம் ஒரு வரம் என்று பாலா ஒரு தீர்வை சொன்னாலும் சொன்னார் இங்கு நம்மூரிலும் நான்தான் கடவுள் என்ற மப்பில் திரியும் பொலிசாரின் அதிகாரம் தூள் பறக்கிறது. பம்பலப்பிட்டிக் கடலில் தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கேள்விப்பட்டிருப்பீர்கள். பொல்லால் அடிவாங்கி கடலில் மூழ்கி உயிரிழக்கும் அளவுக்கு அந்த இளைஞன் செய்த பாவம் என்ன தெரியுமா? காதல் தோல்வியால் மனச்சிதைவுக்குள்ளாகி இருந்தவன் பாதையில் போகும் வாகனங்களுக்கு கல்லெறிந்துள்ளான்.
சம்பவத்தை முழுவதுமாய் ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளரின் தொழில் நேர்த்தியையும் வேடிக்கை பார்த்த மக்களின் மனிதாபிமானத்தையும் எப்படி சொல்வதென்றே தெரியவில்லை
வேலையற்ற பட்டதாரிகள் இணைந்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் பொலிசாரின் தடியடி+கண்ணீர் புகைகுண்டு வீச்சோடு இனிதே நிறைவுற்றது. பாவம் அதன் ஏற்பாட்டாளர் இப்போதே முன்னால் நெற்றியில் முடியெல்லாம் போய் பரிதாபமாக இருந்தார்(நிச்சயம் இளம் வழுக்கை இல்லை). " பைத்தியக்கரனுகளா இருக்கானுங்க இப்பெல்லாம் எத்தனை வாய்ப்புகள் எது தேவையோ அதை கொஞ்சம் காசை வீசி படிச்சிட்டு வேலைகளை பார்க்கப் போகாம" சலித்துக் கொண்ட நண்பனுக்கு தெரியவில்லை இன்னமும் உலகமயமாக்கலின் சாத்தியங்கள் இலங்கையின் கிராமங்களுக்கு எட்டாதது. பிள்ளை பல்கலைகழகம் போவதாலேயே கை நிறைய சம்பாதிக்கப் போகிறான் என்ற எதிர்பார்ப்பிலிருந்த பெற்றோருக்கும், தான் படிக்கும் காலத்தில் தன்னோடு படித்த அரைகுறை மாணவன் IT அல்லது Marketing fieldஇல கை நிறைய சம்பாதிப்பதை பார்க்கும் இளைஞனுக்கும் எப்படி இருக்கும். இங்கே இப்படி நடந்தாலும் நம்ம ஜனாதிபதி ஹுகோ சாவேசுடன் கை குலுக்குகிறார், அகமது நிஜாமுதீனை அணைக்கிறார், வியட்நாம், நேபாளம் என்று பயணிக்கிறார் சீனாவுடன் சேர்ந்து அமெரிக்காவை மிரட்டுகிறார். என்ன அழகான முரண்பாடு.
சிங்கள மக்கள் மத்தியில் காணப்பட்ட மகிந்த அலை குறைந்து வருவதாய் காட்ட பகீரத பிரயத்தனங்களை மேற்கொள்கின்றன எதிர்கட்சிகள். அமேரிக்கா சென்ற சரத் பொன்சேகா விசாரணைக்கு முகம்கொடுக்காமல் திரும்பி வந்தமையால் சிங்களவர் மத்தியில் ஒரு ஹீரோ ஆகி உள்ளார். அவரை சதி வலையில் சிக்க வைக்க அரசே முயன்றது என UNP யும் JVP யும் குற்றஞ்சாட்டும் அதேவேளை அவரை பத்திரமாய் நாடு சேர்த்தது நாமே என வெளியுறவு அமைச்சர் கூறுகிறார். முன்னால் இராணுவத்தளபதி முகங்கொடுக்க மறுத்த விசாரணைக்கு இரு மாதங்களுக்கு முன்னமே பாதுகாப்பு செயலர் முகங்கொடுத்திருப்பதாய் வந்துள்ள தகவல்கள் நிச்சயம் அரசு தரப்புக்கு ஒரு பின்னடைவுதான். இலங்கையின் பிரதான தொலைகாட்சி ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் கூட்டமைப்பின் போதுவேட்பாளர் யார் என்பது தொடர்பில் SMS போட்டியை ஏன் இன்னும் ஏற்பாடு செய்யவில்லை என்பதே என் யோசனை. ( நமக்கென்ன " ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை")
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக