ஞாயிறு, 25 ஜூலை, 2010

டேய் என்னை அனத்த விடுங்கடா 5


தேவதைகள்
இமைப்பதில்லைதான்
அதற்காக
விருப்பம் கேட்டாலும்
சரி என கண்சிமிட்டாமல்
இல்லை
எனத் தலையையா
ஆட்டுவது

உன் அப்பாவும் கவிதை
எழுதியிருக்கிறாராமே
தரச் சொல்
படித்துவிட்டு நானே
வைத்துக் கொள்கிறேன்

கோயிலைக் கடக்கும்
பக்தனைப் போல்
அனிச்சையாகவே
எழுந்துக் கொள்கிறேன்
பேருந்து
உன் வீட்டைக்
கடக்கும் போது

வியாழன், 22 ஜூலை, 2010

முரளி = தன்னம்பிக்கை + விடாமுயற்சி


இன்று முக்கியமான தினங்களில் ஒன்று.

இனிமேல் இடக்கை துடுப்பாட்ட வீரர் ஒருவர் லெக் ஸ்டாம்பில் இருந்து மிக அகலமாக விழுந்த பந்தை லீவ் செய்ய அது அசாதாரணமாக திரும்பி லெக் ஸ்டாம்பை பதம் பார்ப்பதையோ, வலக்கை துடுப்பாட்ட வீரர் ஒருவர் பந்தை டிரைவ் செய்ய முயல்கையில் காலுக்கும் துடுப்புக்கும் இடையில் பந்து மாயமாக உள்நுழைவதையோ, வலக்கை வீரர் ஒருவர் லெக் ஸ்டாம்பில் விழுந்த பந்தை ஒன் திசையில் அடிக்க back foot செல்லும் போது எதிர்பாராமல் பந்து மறுபுறத்தே விரைந்து திரும்பி சந்தேகத்திற்கிடமின்றிய LBW ஆட்டமிழப்புகளை ஏற்படுத்தும் டூஸ்ராக்களையோ இனிமேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்ப்பது கடினம். ஆம் உலகக் கிரிக்கெட்டில் இதுவரை தோற்றம் பெற்ற மிகச் சிறந்த புறச்சுழற்பந்து வீச்சாளர் இன்றோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுகிறார்.

ஐந்து நாள் தொடர்ந்தும் பெரும்பாலும் முடிவுகள் எட்டப்படாத போட்டிகள் என டெஸ்ட் போட்டிகள் எனக்கும் அயர்ச்சியைத் தருபவையாகத்தான் இருந்தன இவர் அசத்த துவங்கும் வரை.

தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் இன்னுமொரு பெயர் முரளி என்றால் அது மிகையில்லை. நிறவெறியின் காரணமாக மேற்கத்தைய ஊடகங்கள், டேரல் ஹேர், ரோஸ் எமர்சன் போன்ற நடுவர்கள், முன்னாள் ஆஸ்திரேலியா பிரதமர், இன்னும் சில வீரர்கள் இவ்வளவு ஏன் உபகண்டத்திலேயே பிஷன் சிங் பேடி என இவரது பந்துவீச்சில் குறை சொன்னவர்தான் எத்தனை பேர். ஆனால் இத்தனைக்குப் பின்னும் தளராமல் ஆய்வு கூடங்களில் எல்லாம் ஏதோ கினி பிக் போல ஆய்வுக்குட்பட்டு தன்னை நிரூபித்து இன்று சாதனைகளின் சிகரம் தொட்டிருக்கிறார் முரளி.


தனக்கெதிரான சதிகளை வெற்றிக் கொண்டதில் மட்டுமல்ல இவர் ஒய்வு பெற்றதிலும் மற்றவருக்கு முன்மாதிரிதான். கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் போதும் நிலைக்கதவைப் பிடித்துக் கொண்டு போக மறுத்து அடம் பிடிப்பவர்களை போன்ற வீரர்களுக்கு மத்தியில் தனக்குரிய, தனது சாதனைகளுக்குரிய உச்சபட்ச கௌரவங்களுடன் ஒய்வு பெறுகிறார் முரளி.
எத்தனை பேருக்கு கிடைக்கும் இப்படி ஒரு பேறு ஒரு தேசமே திரண்டு விடைத்தருகிறது.


அட இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்த மலையகத் தோட்டத் தொழிலாளி தன உதிரத்தையும் வியர்வையையும் தேயிலைக்காடுகளுக்கு உரமாக்கினால் இலங்கையின் பெயர் விளையாட்டுலகில் ஜொலிக்கவும் ஒரு மலையகத் தமிழன்தான் தன் உழைப்பால் காரணமாகி உள்ளான்.

Related Posts with Thumbnails