கிரிக்கெட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிரிக்கெட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 22 ஜூலை, 2010

முரளி = தன்னம்பிக்கை + விடாமுயற்சி


இன்று முக்கியமான தினங்களில் ஒன்று.

இனிமேல் இடக்கை துடுப்பாட்ட வீரர் ஒருவர் லெக் ஸ்டாம்பில் இருந்து மிக அகலமாக விழுந்த பந்தை லீவ் செய்ய அது அசாதாரணமாக திரும்பி லெக் ஸ்டாம்பை பதம் பார்ப்பதையோ, வலக்கை துடுப்பாட்ட வீரர் ஒருவர் பந்தை டிரைவ் செய்ய முயல்கையில் காலுக்கும் துடுப்புக்கும் இடையில் பந்து மாயமாக உள்நுழைவதையோ, வலக்கை வீரர் ஒருவர் லெக் ஸ்டாம்பில் விழுந்த பந்தை ஒன் திசையில் அடிக்க back foot செல்லும் போது எதிர்பாராமல் பந்து மறுபுறத்தே விரைந்து திரும்பி சந்தேகத்திற்கிடமின்றிய LBW ஆட்டமிழப்புகளை ஏற்படுத்தும் டூஸ்ராக்களையோ இனிமேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்ப்பது கடினம். ஆம் உலகக் கிரிக்கெட்டில் இதுவரை தோற்றம் பெற்ற மிகச் சிறந்த புறச்சுழற்பந்து வீச்சாளர் இன்றோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுகிறார்.

ஐந்து நாள் தொடர்ந்தும் பெரும்பாலும் முடிவுகள் எட்டப்படாத போட்டிகள் என டெஸ்ட் போட்டிகள் எனக்கும் அயர்ச்சியைத் தருபவையாகத்தான் இருந்தன இவர் அசத்த துவங்கும் வரை.

தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் இன்னுமொரு பெயர் முரளி என்றால் அது மிகையில்லை. நிறவெறியின் காரணமாக மேற்கத்தைய ஊடகங்கள், டேரல் ஹேர், ரோஸ் எமர்சன் போன்ற நடுவர்கள், முன்னாள் ஆஸ்திரேலியா பிரதமர், இன்னும் சில வீரர்கள் இவ்வளவு ஏன் உபகண்டத்திலேயே பிஷன் சிங் பேடி என இவரது பந்துவீச்சில் குறை சொன்னவர்தான் எத்தனை பேர். ஆனால் இத்தனைக்குப் பின்னும் தளராமல் ஆய்வு கூடங்களில் எல்லாம் ஏதோ கினி பிக் போல ஆய்வுக்குட்பட்டு தன்னை நிரூபித்து இன்று சாதனைகளின் சிகரம் தொட்டிருக்கிறார் முரளி.


தனக்கெதிரான சதிகளை வெற்றிக் கொண்டதில் மட்டுமல்ல இவர் ஒய்வு பெற்றதிலும் மற்றவருக்கு முன்மாதிரிதான். கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் போதும் நிலைக்கதவைப் பிடித்துக் கொண்டு போக மறுத்து அடம் பிடிப்பவர்களை போன்ற வீரர்களுக்கு மத்தியில் தனக்குரிய, தனது சாதனைகளுக்குரிய உச்சபட்ச கௌரவங்களுடன் ஒய்வு பெறுகிறார் முரளி.
எத்தனை பேருக்கு கிடைக்கும் இப்படி ஒரு பேறு ஒரு தேசமே திரண்டு விடைத்தருகிறது.


அட இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்த மலையகத் தோட்டத் தொழிலாளி தன உதிரத்தையும் வியர்வையையும் தேயிலைக்காடுகளுக்கு உரமாக்கினால் இலங்கையின் பெயர் விளையாட்டுலகில் ஜொலிக்கவும் ஒரு மலையகத் தமிழன்தான் தன் உழைப்பால் காரணமாகி உள்ளான்.





திங்கள், 12 ஏப்ரல், 2010

பாராளுமன்ற தேர்தலில் நட்சத்திரங்கள்



இருக்
கட்சிகளின் சார்பிலும் நிறைய சினிமா,விளையாட்டுத் துறை நட்சத்திரங்கள் போட்டியிட்ட தேர்தல் இதுவாகத்தான் இருக்கும். ஆளுங்கூட்டணி சார்பில் விளயாட்டுத் துறை பிரபலங்களாக போட்டியிட்ட சனத், சுசந்திகா ஆகியோரில் சனத் மாத்தறை மாவட்டத்தில் முதலாவதாய் வந்திருக்கும் நிலையில் சுசந்திக்கா கேகாலையில் தோல்வியடைந்துள்ளார். சினிமா பிரபலங்களைப் பொறுத்தவரை காலியில் கீதா குமாரசிங்க தோல்வியடைந்த போதும் தேசியப்பட்டியலில் மாலினி பொன்சேகாவுக்கு இடம் கிடைக்கும் என நம்பலாம்.
தோல்வியுற்றோர்

சுசந்திகா ஜெயசிங்க

கீதா குமாரசிங்க

ஆளுங் கட்சி சார்பில் வென்ற ஒரே நட்சத்திரம்

ஐக்கியத் தேசியக் கட்சியைப் பொறுத்த வரை முன்னாள் Mrs World மற்றும் தற்போதைய மேல்மாகாண எதிர்க்கட்சி தலைவி ரோசி சேனநாயக்க, நடிகரும் சப்ரகமுவ மாகாண எதிர்க்கட்சி தலைவருமான ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் வெற்றிப் பெற்றுள்ளனர். இவர்கள் நீண்டகாலமாக தீவிர அரசியலில் தாம் சார்ந்த கட்சியில் பற்றுறுதியோடு தோல்வியின் போதும் இருந்தவர்கள். ஆக இவர்களின் தெரிவு பொருத்தமானதே.

ரோசி சேனநாயக்க

ரஞ்சன் ராமநாயக்க

எனினும் நடிகை உபேக்ஷா ஸ்வர்ணமாளிக்கு எல்லாம் என்னத் தெரியும். இவரும் வென்றிருக்கிறார் அதுவும் ஐக்கியத் தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவை விட அதிகமான வாக்குகளுடன் இவருக்கு வாக்களித்த மக்களின் மன நிலை கொஞ்சமும் புரியவே இல்லை. இதே உடையோடு பாராளுமன்றம் செல்லாமல் இருந்தால் சரி. இவரது "சன்ச்சலா" பாடல் எனக்கு ரொம்பவும் பிடித்த ஒன்று.

உபேக்ஷா
சரத் + ஜேவிபி + அர்ஜுன கூட்டில் போட்டியிட்டு வென்ற ஒரே நட்சத்திரம் அர்ஜுன ரணதுங்க. அவரது தைரியமான அரசியல் முடிவுகள் நிச்சயமாக பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

இவர்கள் என்றில்லை டிவியில் வருவதால் ஊடகவியலாளர்களான ஸ்ரீரங்கா, புத்திக்க பத்திரன, மனுஷ்ய நாணயக்கார, சுசில் கிண்டேல்பிட்டிய, சுதர்மன் போன்றோரும் நமக்கு நட்சத்திரங்கள்தான். இவர்களில் முதல் மூவர் மட்டுமே வென்றிருக்கின்றனர்.

புதன், 24 பிப்ரவரி, 2010

கிரிக்கெட்டுக்கு வாழ்த்துக்கள்


All good things must come to end at some point என்று சொல்வார்கள் அது எல்லாவற்றுக்கும் பொருந்தாது என நிரூபித்திருக்கிறார் சச்சின். சகாப்தம், சரித்திரம் இன்னும் அகராதியில் உள்ள என்ன வார்த்தைகளை தேடிப்பார்த்தாலும் அவை இந்த வீரனின் சாதனைகளை சொல்ல போதா.

சச்சினின் திறமைக்கு முன் இது ஆச்சரியமில்லைத்தான். நிச்சயம் இதுவும் எனக்கு ஒரு செய்தியாக இருந்திருக்கும் சற்று முன்கூட்டியே கிடைத்த தலைமைத்துவம் தந்த அழுத்தத்தினால் துடுப்பாட்டத்தில் சோபையிழந்து பின் அதிலிருந்து விடுப்பட்டதும் காட்டினாரே ஒரு விஸ்வரூபம் தொண்ணூறுகளின் இறுதியில் அப்போது அடித்திருந்தார் என்றால் .

அவர் விளையாடிய காலத்தில் விரல் சூப்பிய பயல்களெல்லாம் அவரோடு ஆடும் இக்காலத்தில் முதன்நிலை அணிகளில் ஒன்றான தென்னாபிரிக்காவுக்கு அடித்தது உச்சப்பட்ச மகிழ்ச்சி.

ஆனால் அது என்ன அந்த 195 ஆவது ஓட்டத்தை அப்படித்தான் எடுத்திருக்க வேண்டுமா. இதயத் துடிப்பே ஒருகணம் நின்றுப் போனது. எப்படியோ இன்றிரவு தூங்கப் போவதில்லை. அப்படியே மாட்சை வெத்திருங்கப்பா இந்த டிவிலியர்ஸ் அடிப்பதைப் பார்த்தால் பயமா இருக்கு 7 விக்கெட் போன பின்னும்.

வாழ்த்துக்கள் சச்சின்







வியாழன், 14 ஜனவரி, 2010

தல போல் நடக்கும் தளபதி



நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.




அடுத்தடுத்து தான் ஆடிய பத்தாவது இறுதிப் போட்டியிலும் தோற்றிருக்கிறது இந்தியா. முதலில் 150 ஓட்டங்களுக்கு சுருட்டி விடலாம் என நினைத்தாலும் ரைனாவின் அபாரமான ஆட்டத் திறமையால் 246 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி எப்போது சொதப்புவார்கள் எனத் தெரியாததால் மிகுந்த அவநம்பிக்கையுடன்தான் டிவி முன் அமர்ந்தேன். நல்லவேளை சங்கக்கார அன் கோ என்னை ஏமாற்றவில்லை. ஆனாலும் 48 ஆவது ஓவர் வரை கடும் போட்டியைக் கொடுத்த இந்திய அணியை பாராட்டத்தான் வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் போட்டியைக் கைவிட வில்லை இந்தியா. இந்திய அணியின் பழைய போட்டிகளை நினைத்துப் பார்த்தேன். இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் அவர்களது Body Language ஏ எதிரணியினருக்கு உதிரி உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்து விடும். தோனியின் தலைமையில் ஏற்பட்ட நல்லதொரு முன்னேற்றம் இது. இலங்கையைப் பொறுத்தவரை புதுமுகங்களுடனான அணியின் வெற்றி இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு நல்லதொரு அறிகுறி. வாசுக்கு சொல்லாமலே கல்தா கொடுத்தாயிற்று. சனத்,முரளி போன்ற ஏனைய கிழடுக் கட்டைகள் கௌரவமாய் ஓய்வுப் பெறுதல் உத்தமம்.

ஜனாதிபதித் தேர்தல் நாளொரு கொலையும் பொழுதொரு சச்சரவுமாய் உச்சக் கட்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. ஆளும் கட்சியின் பிரச்சாரம் சப்பென இருக்கிறது. போர் வெற்றி ஒன்றைத் தவிர வேறெதுவும் சொல்ல முடியாத நிலை அவர்களுக்கு. இதில் ஆளுங்கட்சி தொ(கு)ண்டர்கள் பாவம் பிரியாணிக்கும் அன்றைக்குத் தரப்போகும் காசுக்கும் ஆசைப்பட்டு ஐதேகவின் பிரச்சாரத்திற்கு போகவென வண்டியேறிய ஐந்துப் பிள்ளைகளின் ஏழைத் தாயை போட்டுத் தள்ளியிருக்கிறார்கள். முன்பு ஐதேக ஆட்சியில் இருந்தக் காலத்தில் தேர்தல் வன்முறைகள் அதிகமாகவே இருக்கும். பின் சந்திரிக்கா அரசில் ஒப்பிட்டளவில் வன்முறைகள் குறைந்தாலும் மகிந்த மீண்டும் பழைய கலாசாரத்தை கொண்டு வர முயல்கிறார். மகிந்தவின் பிரசாரம் வேடிக்கையாக இருக்கிறது. போரை வென்ற நன்றிக் கடனாக அவருக்கு வாக்களிக்கவாம். பிரித்தானியாவில் உலகப் போரை வென்ற சர்ச்சிலுக்கே அடுத்த தேர்தலில் கிடைத்தது தோல்விதான். ஜெனரலின் விளம்பரம் ஒன்றில் முதலில் வீரத்தளபதி (அப்படித்தான் போடுகிறார்கள்) சீருடையில் வருகிறார் பின் தேசிய உடைக்கு மாறுகிறார். நடக்கிறார் நடக்கிறார் விளம்பரம் முடியும் வரையில் நடக்கிறார். தளபதி தலயின் படம் ஏதும் பார்த்தாரோ தெரியாது.


நல்லப் பாடல்கள் எல்லாம் வெளியாகி இருக்கின்றன. சந்தேகமில்லாமல் முதலிடம் விண்ணைத் தாண்டி வருவாயாவுக்குத்தான். "ஹோசானா" பச்சக் என மனதில் ஒட்டிக் கொண்டு போக மறுப்பதில் மற்ற பாடல்களை அடிக்கடி கேட்க முடியவில்லை. "மன்னிப்பாயா" பாடலில் ஸ்ரேயா கோஷலின்(இன்னுமொரு முன்பே வா ஸ்ரேயாவுக்கு) குரல் இனிமை. கூடவே ஈடு கொடுத்திருக்கிறார் இசைப்புயல்.
கோவாவில் ஏழேழுத் தலைமுறைக்கும் பாடல் கேட்டப் போது பழைய ஈஸ்ட்மன் கலரும் தொடர்ந்து மக்கள் நாயகன் ராமராஜன், கௌண்டமணி,செந்தில் என டைட்டில் போடுவதுமாக எல்லாம் ஒரு பிரமை. அதில் எனக்குப் பிடித்தது "இதுவரை" பாடல் அன்றியாவின் குரலில்.


ம்ம் இதை இப்போது பதிவிட்டப் பின் ஆயிரத்தில் ஒருவன் பார்க்கப் போவதாய் ஒரு ஐடியா. போய் பார்த்து விட்டு மாலை என் கருத்துக்களைப் பதிவிடுகிறேன்.

திங்கள், 21 டிசம்பர், 2009

காலை வாரிய இலங்கை அணியின் நடு மற்றும் பின்வரிசை

எதிர்பார்த்ததுதான். இந்தியாவில் ஒருநாள் தொடர்களை அது வேறு அணிகளிடம் இழப்பது மிக அரிதாக நடக்கும் ஒரு விடயம். இருந்தாலும் தோனி இல்லாத இந்திய அணியுடன் ஏதேனும் வாய்ப்புகள் இருக்கும் என நம்பினேன். ம்ம் நான் போன பதிவில் குறிப்பிட்டது போலவே மிகப் பலவீனமான இலங்கை அணியின் பின்வரிசை காலை வாரி விட்டது.

முன்பு சனத்தை நம்பியது போல இப்போதெல்லாம் டில்ஷான் அவர் அடிக்கா விட்டால் அவ்வளவுதான் என்ற நிலைமை. டில்ஷான் நுட்பத்திலோ அல்லது ஒவ்வோர் பந்துக்குமான ஆட்டத் தெரிவுகளிலோ பிழை விடாதவர் ஏன் அவ்வளவு அவசரப்படுகிறார் எனத் தெரியவில்லை. தினேஷ் கார்த்திக் வழங்கிய அருமையான வாய்ப்பை அடுத்த ஓவரிலேயே அநியாயமாக்கி விட்டார்.

உபுல் தரங்க நன்றாக ஆடுகிறார் எனினும் மெதுவாக வரும் பந்துகளை கணிக்கத் தவறுகிறார் leading edge பட்டு ஆட்டமிழக்கும் வாய்ப்புகள் உண்டு.
டெஸ்ட் போட்டிகளில் அத்தனை சாதித்த மகேலவா அது ஒரு நாள் போட்டிகள் என்றால் பெட்டிப் பாம்பாய்மாறி விடுகிறார் . மாத்யூஸ் இருந்திருந்தால் இறுதி நேரத்தில் பொறுப்பாய் ஆடியிருப்பார் என நினைக்கிறேன்.மற்றவர்களைப் பற்றி சொல்லி என்ன ஆகப் போகிறது. சரி அடுத்த போட்டியிலாவது ஏதாவது நடக்கின்றதா எனப் பார்ப்போம்.

பலரும் கிசுகிசுப்பது போல தில்ஷன்,தரங்க பிரச்சினை உண்மைதான் போலிருக்கிறது. களத்தில் அவர்கள் ஆடும் போது அது வெளிப்படையாக தெரிகிறது.லோஷன் அண்ணா பதிவிட்டு தெளிவுப் படுத்துவார் என நம்புகிறேன்.


துடுப்பாட்ட வீரர்களுக்கு மட்டுமேயானதாக ஒருநாள் போட்டிகளின் விதிமுறைகள் மாற்றப்பட்டதன் பின்னர் பந்துவீச்சாளர்களின் Economy rate ரொம்பவும் அதிகரித்து விட்டது. கிரிக்கெட் என்றால் ஒருவர் பந்து வீச வேண்டுமென்பதற்காக மட்டுமே இப்போதெல்லாம் பந்துவீச்சாளர்களோ எனத் தோன்றுகிறது. இப்படியே போனால் அணியொன்று வெறும் துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பகுதி நேரப் பந்துவீச்சாளர்களோடு களமிறங்கும் எனத் தோன்றுகிறது. இந்நிலையில் நம் வீரர்கள் பயன் படுத்திக் கொள்ளவில்லை எனினும் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான இன்னுமொரு ஆடுகளம்தான் இன்றும். எனினும் இன்றைய போட்டியில் சகல சுழற்பந்து வீச்சாளர்களின் முயற்சியும் பாராட்டத் தக்கதே. ரவீந்திர ஜடேஜா,சுராஜ் ரண்டீவ் என புதிய இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களின் வருகையை கட்டியம் கூறியிருக்கிறது இத்தொடர்.

வழமைக்கு மாறாக இன்று Score board இல் தென்பட்ட ஆச்சரியமான ஒன்று சச்சின் ஆட்டமிழக்காமல் 96

வெள்ளி, 18 டிசம்பர், 2009

சாகிர் கானுக்கு நன்றி


அன்றைய ராஜ் கொட்டி போட்டி அனுபவங்களை பாடமாகக் கொண்டு இன்றையப் போட்டியில் அபார வெற்றியை இலங்கைப் பெற்றுள்ளது. முன்வரிசையில் அபாரமாக டில்ஷான் ஆடியப் பின்னும் பின்னாலே பொறுப்பின்றி சொதப்புவதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் இன்று அவ்விதம் செய்யாதது மகிழ்ச்சி.


என்னை கேட்டால் கிரிக்கெட் போட்டிகளில் களத் தடுப்பின் முக்கியம் உணரச் செய்த போட்டிகளில் ஒன்று இது. இலங்கை அணி களத் தடுப்பில் விட்ட சில குறைகள் களையப் பட்டிருந்தால் கணிசமான ஓட்ட எண்ணிக்கையை குறைத்திருக்க முடியும். இறுதி ஓவர்களில் இந்திய அணியின் விளாசல் அதனாலேயே நிகழ்ந்தது. இது போன்ற ஒரு அணி தன்னிடமிருந்தால் உலகக்கிண்ணம் வெல்வது பெரிதில்லை என்று இம்ரான் கான் சொன்ன இலங்கை அணியா இப்படி என்று என்னும் அளவில் களத் தடுப்பு இருப்பது கவலையளிக்கிறது.


அதே போல் விக்கேட்டுகளுக்கிடையிலான ஓட்டமும். வீரகளிடையே புரிந்துணர்வு குறைந்து வருகிறது. சரியான Communication இல்லை.

திலஷானின் ஆட்டம் அருமை. நாளுக்கு நாள் அவரது ஆட்டம் மெருகேறி வருவது உண்மை. அஞ்சலோ மாத்யூஸ் அணியின் தவிர்க்க முடியாத வீரராகி விட்டார். எது எப்படியிருப்பினும் அடுத்த உலகக் கிண்ணத்திற்குள் அணியின் பின் வரிசையை வலுப்படுத்த வேண்டியது முக்கியம். ஒன்று மட்டும் தெளிவாக சொல்லாம் அடுத்த உலகக்கிண்ணம் இதே போன்ற ஆடுகளங்களில் நடைபெறும் பட்சத்தில் கிண்ணத்தை வெல்வதற்கான வாய்ப்பு இவ்விரு அணிகளில் ஒன்றுக்கேஉண்டு.



இறுதி வரை நகம் கடித்து விரலே புண்ணாக நெஞ்சம் பதைத்து பார்த்த போட்டியில் இறுதியில் சொதப்பி விடுவார்களோ என நினைத்த போது ஆபத்பாந்தவனாக காப்பாற்றிய இன்றைய போட்டியின் ஆட்ட நாயகன் சாகிர் கானுக்கு ஞானி பாணியில் இலங்கை ரசிகர்கள் சார்பில் பூச்செண்டு இந்திய ரசிகர்கள் குட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

செவ்வாய், 15 டிசம்பர், 2009

ஏமாற்றமளித்த கிரிக்கெட் போட்டி


அப்படி இப்படி பெரும் ஏமாற்றங்களுடன் ஒரு போட்டி முடிவுக்கு வந்துவிட்டது. சங்கக்காரவின் இலங்கை சாதனைக்குரிய மிக வேகமான சதம், தில்ஷானின் இரட்டைச் சதம்,குறைந்தபட்சம் வெற்றி என எதிர்பார்த்த எதுவுமே நிறைவேற வில்லை.

தம்பி சொன்னான் கம்ப்யூட்டரில் கிரிக்கெட் கேம் விளையாடுவது போல சேவ் செய்து விட்ட இடத்திலருந்து விளையாடினால் எப்படி இருக்கும். நன்றாய்த்தான் இருக்கும். டில்ஷான் ஆட்டமிழந்தவுடன் Undo செய்யச் சொல்கிறான். சரி பரவாயில்லை போராடித்தானே தோற்றோம் என அவனைச் சமாதானம் செய்வது பெரும்பாடாய் போய்விட்டது.
எனக்கு இன்னும் புரியவில்லை இந்தியாவில் ஆடுகளங்களை எதற்காக தயார் செய்கிறார்கள் என

திங்கள், 23 நவம்பர், 2009

மகேலவின் இரட்டைச்சதமும் சுவிஸ் சந்திப்பும்

முதன் முதலில் இந்தியாவில் சரித்திர வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்புகளை எல்லாம் ஏமாற்றி விட்டு Draw இல் முடிந்திருக்கிறது இந்தியாவிற்கெதிரான முதல் டெஸ்ட். பார்ப்போம் நாளைய கான்பூர் போட்டியில் என்ன செய்கிறார்கள் என்று

முரளியின் திறமை மங்கி விட்டதாக கருத்துரைத்தார் சிவராமகிருஷ்ணன். முரளி சாதித்திருப்பவையோடு ஒப்பிட்டால் இவரெல்லாம் ஒரு சுழற் பந்துவீச்சாளராக என்ன செய்திருக்கிறாரோ தெரியவில்லை.

2003 உலகக் கிண்ணத்தோடு அரவிந்த ஒய்வு பெற்றப் போது இனி கிரிக்கெட் பார்ப்பேனா என்றே சந்தேகமாய் இருந்தது. அப்போதெல்லாம் இலங்கையில் உலகத்தரத்தில் மதிக்கக்கூடிய ஒரே துடுப்பாட்டவீரர் அரவிந்த மாத்திரமே என்ற எண்ணம் சற்று அழுத்தமாகவே இருந்தது. ஆனால் அதே two Down position இல் அரவிந்தவை மிஞ்சி சாதனைகள் செய்கிறார் மஹேல. (பதிவுகள் என்ன சொன்னாலும் அரவிந்தவை மிஞ்சியவராக என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பது வேறு விடயம்.)
97 இல் சனத் முச்சதம் பெற்ற போட்டியிலே அறிமுகமான மஹேல அதிலேயே ரொம்பவும் risk எடுத்து பந்தை விக்கெட் வரை வரவிட்டு மிகத் தாமதித்து இலாவகமாய் அடித்த late cut களை பார்த்த போதே மிகுந்த தன்னம்பிக்கையானவராக தோன்றினார். அன்றிலுருந்து இன்று வரை அவர் வந்திருக்கும் பாதை நிச்சயம் மலைப்புக்குரியது. என்றாலும் மேற்கத்தேய ஊடகங்கள் இவரை விட சங்காவையே தூக்கிப் பிடிக்கும் மர்மம்தான் பிடிபடவில்லை. மஹேல இன்னும் கொஞ்சம் Fluent ஆக சங்கா போல English பேசிவிட்டால் சரி என நினைக்கிறேன்.
எல்லாமும் முடிந்த பின் எதைப் பற்றியோ பேச இலங்கையின் முக்கிய தமிழ் பேசும் அரசியற் கட்சி பிரதிநிதிகள் எல்லாம் சுவிஸின் ரைன் நதிக்கரையில் அமைந்திருக்கும் ஓரிடத்தில் கூடியுள்ளனர்.சிங்கள் பேரினவாதத்திற்கெதிரான வலுவான எதிர்த்தரப்பினை விமர்சித்தோ ஆதரித்தோ அதன் வாயிலாக பதவிகளைப் பெற்றோர் இன்றைய நிலையில் தமது பாராளுமன்ற கதிரைகளை எப்படித் தக்க வைப்பது என உரையாடுவார்கள் என்பதுதான் கசப்பானாலும் உண்மை. எப்படியோ பராசக்தி சிவாஜி சொல்வது போல அவர்கள் சுயநலத்தில் ஏதேனும் பொதுநலமும் கலந்திருந்தால் சந்தோஷம்.

ஒரு வழியாக இன்று ஐக்கிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுடனான கூட்டத்தில் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடாத்தி முடிக்க தீர்மானித்துள்ளதாய் ஜனாதிபதி கூறியிருக்கிறார். ஆக பொதுத்தேர்தலா ஜனாதிபதித் தேர்தலா என்ற குழப்பத்தில் இருந்த எதிர்க்கட்சிகளுக்கு குழப்பம் தீர்ந்திருக்கும். இனி என்ன தேர்தல் முடியும் வரை பரஸ்பர தூற்றல்களை ஒரு மசாலா படம் பார்க்கும் மகிழ்வுடன் பார்த்து மகிழ வேண்டியதுதான்.

திங்கள், 3 ஆகஸ்ட், 2009

முரளி ஒய்வு ஏன்



All good things must come to end at some point என்று சொல்லப்படுவதை அறிந்திருப்பீர்கள். ஆனாலும் அவ்வாறன முடிவுகளை சீரணித்துக் கொள்வதென்பது மிகுந்த சிரமமான காரியமாகும். அவ்வகையில் சடுதியான முடிவுகளால் அதிர்வுற்று அவற்றை ஏற்க தயங்குபவரை தயார் படுத்தவோ என்னவோ முன்கூட்டியே தன ஒய்வு முடிவை வெளியிட்டிருக்கிறார் இலங்கயின் சுழற்பந்து நட்ச்சத்திரம் முரளி

முரளி என்ற பெயர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு புதிதாய் அறிமுகப்படுத்த வேண்டிய பெயரில்லை. டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட்டுகள் எடுக்கப்படுவதெல்லாம் பெரும் சாதனைகளாகக் கருதப்பட்ட காலத்தில் முரளி இதை அவரது வழமையாய் கொண்டவர். 92 இல அறிமுகமானவர் 95 ற்கு பிறகு சாதனைகள் நிகழ்த்தவெனவே கிரிக்கெட் ஆடியவர். இவருக்கு இணையான புறச்சூழல் பந்து வீச்சாளர் இதுவரை தோன்றியதில்லை எனக் கூறினால் அது மிகையில்லை.

இந்த சாதனையாளர் டெஸ்ட் போட்டிகளில் முதற்றடவையாக 1000 விக்கெட்டுகள் பெறப்பட்ட சாதனையை நிகழ்த்துவார் என எதிர்பார்த்திருக்கையில்தான் முரளியிடமிருந்து வந்திருக்கிறது இந்த செய்தி. யாரும் எதிர்பாராத இந்த நேரத்தில் ஏன் முரளி இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கக் கூடும்.

உண்மையாகவே முரளி கூறுவதை போல அவர் ஒய்வு பெற பொருத்தமான வயதை அடைந்திருப்பதாலா?

அல்லது முரளியின் துணையின்றி இலங்கை அணி போட்டிகளை வெல்லக் கூடிய நிலையை அடைந்திருக்கக் கூடிய திருப்தியினாலா?

மென்டிஸ், ஹேரத் போன்ற புதுப் புயல்களின் வருகை எதிர்காலத்தில் தன்னை அணியிலுருந்து ஓரங்கட்டக்கூடிய நிலைமையை உருவாக்கக் கூடிய சாத்தியதினாலா?

அல்லது 20twenty போன்ற பணக்கொழிக்கும் போட்டிகளால் டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை குறைவடைந்து தனது இலக்கான 1000 விக்கெட்டுகள் என்ற சாதனையை அடைய மேலும் காலம் நீடிக்கும் என்பதை உணர்ந்ததால் எடுத்த யதார்த்த பூர்வமான முடிவா?

அல்லது முரளி இங்கிலாந்திலோ இந்தியாவிலோ திரைமறைவில் மேற்கொண்டிருக்கக்கூடிய ஏதேனும் வியாபார ரீதியிலான பேரங்களின் அடிப்படையிலானதா?

எதுவாயிருந்தாலும் இன்னமும் ஒரு வருடத்தில் இம்முடிவு மறு பரிசீலனை செய்யப் படும் வாய்ப்பு உள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.


ஒன்று கவனித்தீர்களா shane warne தும்மினாலும் செய்தியாக்கும் மேற்கத்தைய ஊடகங்கள் இந்த அசாத்திய திறமையாளனின் முடிவைப் பற்றி அத்தனை தூரம் அலட்டிக் கொள்ளவில்லை.

புதன், 18 மார்ச், 2009

" என்னா கொடுமை மென்டிஸ் இதெல்லாம்"


cricket பற்றி பேசும் காலமா இது என பலரும் முகம் சுளிக்கக் கூடும். பாரதியே ODI விளையாடு பாப்பா என்று பாடி இருக்கிறாரே என மனதை தேற்றிக் கொண்டேன்.
ஒருநாள் போட்டி முடிவுகள்தான் சுவாரசியமாயிருக்கும் என்பது தெரிந்தது ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியலும் ஆச்சரியத்தை தரும் என நேற்றுதான் தெரிந்தது.

அட ஒருநாள் பந்து வீச்சாளர் தரவரிசையில் நம்ம நுவன் குலசேகர முதலிடம். M & M magic தான் இலங்கை அணியின் பலம் எனத் தெரியும். அட இதற்கிடையில் இவர் எப்படி என்று தேடிய போதுதான் தெரிந்தது. ஐயாவும் லேசுப்பட்ட ஆளில்லை என்பது

தரவரிசைக்குட் படுத்திய குறித்த காலப்பகுதியில் இவர் அதாவது இவர் மீள அணிக்குத்திரும்பிய 2008 ஏப்ரல் தொடக்கம் இன்று வரை 29 போட்டிகளில் 47 விக்கெட்டுகளை 20.97 என்ற சராசரியுடனும் கிட்டத்தட்ட ஓவருக்கு 4.45 என்ற வகையில் சிக்கனமாகவும் ( economy rateஐ வேறெப்படி தமிழ் படுத்தலாம்) பந்து வீசி கொய்திருக்கிறார்.

இதைப் பற்றி இவரிடம் கேட்டால்
இது தனக்கு மிக மகிழ்ச்சி அளிப்பதாகவும் தான் சென்ற வருடத்தில் அதிக சிரத்தை எடுத்து பந்து வீசியதாகவும் இருப்பினும் வெறும் இருபத்தாறே வயதான தான் கிரிக்கெட்டில் இன்னமும் கற்றுக் கொண்டிருப்பதாகவும் நல்லதொரு பந்துவீச்ச்சாளராக வர உறுதிப் பூண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
(அட என்னவொரு அவையடக்கம்)

இது பரவாயில்லை 8ஆம் இழக்க துடுப்பாட்ட வீரராக ஆடி வரும் இவர் கடந்த 12 மாதங்களாக தான் பேணி வந்துள்ள 20.36 என்ற துடுப்பாட்ட சராசரியை 25 ஆக மாற்றுவதன் மூலம் அணிக்கு ஒரு ஸ்திர தன்மையை கொடுப்பது தனது நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டுக்கு துடுப்பாட்டத்தில் பல புதிய நுணுக்கங்களை கற்றுத்தந்த ( பந்து எங்கே வருகிறது எனப் பார்க்காமலே ஆறு ஓட்டங்கள் பெறுவது எப்படி போன்ற) முரளி இதை கேள்விப்பட்டு மென்டிசிடம் இப்படி சொன்னாராம்.
" என்னா கொடுமை மென்டிஸ் இதெல்லாம்"

புதன், 4 மார்ச், 2009

வினையான விளையாட்டு


பாகிஸ்தானில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி கை விடப்பட்டுள்ளது. போட்டிகள் கைவிடப் படுவது இயல்பு எனினும் இப்போட்டி கைவிடப்படுவதற்கான காரணம் சற்று வித்தியாசமானது.

பலஸ்தீன விடுதலை போராளிகளால் Munich ஒலிம்பிக் போட்டியின் போது நடத்தப் பட்ட black september தாக்குதல் உட்பட விளையாட்டு வீரர்கள் மீது நடத்தப் பட்ட பல தாக்குதல்கள் தொடர்பில் நாம் கேள்வியுற்றிருந்தாலும் கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல்கள் நமக்கு புதிய விடயமாகும்.

தங்களுடையது மட்டும்தான் உயிரு மத்ததெல்லாம் ***** என்ற எண்ணமுள்ள ஆஸ்திரேலியா அணி பாதுகாப்பின்மையையும் மும்பை தாக்குதலை காரணம் காட்டி இந்தியாவும் பாக் வர மறுத்த நிலையில் பாக் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுக்கவும் முன்னரே தங்களை அழைத்தால் பரிசீலிக்க தயார் என முந்திரி கொட்டை தனமாய் அறிக்கை விட்டார் முன்னால் Srilankan cricket இன் தலைவர் அர்ஜுன

பின் இது மேலிடத்திற்கு போனாலும் பாகிஸ்தான் மூலம் கிடைக்கும் பல ஆதாயங்கள் காரணமாக இலங்கை அணியை பாகிஸ்தான் அனுப்பியது இலங்கை கிரிக்கெட் நிர்வாகம். இன்று அதற்கான பலன் கிட்டியுள்ளது. பாவம் இலங்கை அரசின் சுயநல அரசியலுக்கு பலியானது என்னவோ அப்பாவி இலங்கை கிரிக்கெட் வீரர்கள்தான்.



















பொதுவில் மேலைதேயத்திற்கும் இஸ்லாமிய உலகுக்கும் இருக்கும் முறுகலின் வெளிப்பாடு என இந்நிகழ்வு கருதப்பட்டாலும் இச்சம்பவம் அதற்கு சற்றேனும் தொடர்புறாத இலங்கை மீது ஏன் பாய்ந்திருக்க வேண்டுமென்பதே எமது கவலையாகும்.

பெரும்பாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு குடை பிடிக்கும் பாகிஸ்தான் அரசை பயமுறுத்தி அடிபணியச் செய்யும் நோக்கோடு தீவிரவாதிகளால் இத்தாக்குதல் இடம் பெற்றிருக்கலாம்.

அல்லது சிலர் சொல்வது போல இது Raw இன் கைங்காரியம் என்றால் வெட்கப்பட வேண்டியது உலகின் மிகப்பெரிய ஜனநாயகமே. இந்தியா என்று இம்மாதிரியான தன்னலம் சார்ந்த செயற்பாடுகளை மாத்திரம் செய்வதை நிறுத்துமோ.

வட கிழக்கு தமிழர்கள் தம்மை தமிழீழத்தவர்கள் எனக் கூறிக் கொள்கின்றனர். தமிழீழத்திற்கும் உரித்தில்லாது தம்மை இலங்கயராயும் உணர முடியாது மீள இந்தியாவிற்கும் செல்ல முடியாது தவிக்கும் மலையகத்தவர் இது நம்ம நாடுடா என சந்தோஷப் படும் தருணங்களில் இலங்கை கிரிக்கெட் போட்டிகளில் வெல்லும் சந்தர்ப்பங்களும் உண்டு. அதற்காக அவர்கள் தமிழுணர்வு அற்றவர்கள் என கூறுவது அபத்தமான வாதமாகும்.

நேற்றைய சம்பவத்தை தமிழ் தேசியத்தின் வெற்றியாகவும் ஏதோ கடவுளின் செயலாகவும் வர்ணித்த சில பதிவுகளை பார்த்த போது உண்மையில் எரிச்சலாக இருந்தது. இச்சம்பவத்திற்காக நாம் வருந்தவில்லையெனில் சகோதரர் கம்பெனிக்கும் எமக்கும் பெரிய வித்தியாசமில்லை.

இத்தனை போர் நடந்தும் கட்டுநாயக வரை வந்து தாக்கி விட்டு போன புலிகள் ஒரு முறையும் இவ்வாறான பேடித் தனமான தாக்குதல்களில் ஈடுப்பட்டதில்லை. இது கொஞ்சமாவது சிந்தனையாளரின் சிந்தையை கிளரியிருக்கும் என்றே நம்புகிறேன். அதை விடுத்தது இதற்கும் புலிகளுக்கும் தொடர்புண்டு என பழைய பல்லவியையே பாடினால் ம்ஹ்ம் இது என்ன சினப்புள்ளத் தனமா என சிரித்து விட்டு இருக்க வேண்டியதுதான்
Related Posts with Thumbnails