வெள்ளி, 31 டிசம்பர், 2010

2010 இல் நான் ரசித்த திரைப்படங்கள்

2010 தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை சிறப்பாய் இருந்ததாக பேசிக் கொள்கிறார்கள். அதுவரை தமிழ் சினிமா கட்டிக் காத்த பாரம்பரியங்களை உடைத்த நந்தலாலா போன்ற படங்களும், உலக அரங்கிற்கு தமிழ் சினிமாவை இட்டுச் சென்ற எந்திரன் போன்ற படங்களும் இந்த வருடத்திலேயே வெளியாகின. கிட்டதட்ட 120 சென்ற வருடத்தில் வெளியானதாம். அதில் நான் பார்த்தது வெறும் 16 படங்கள் மாத்திரமே இந்தப் பதினாறில் எனக்கு ஏதோ ஒரு வகையில் பிடித்தது ஒரு 6 படங்கள் மட்டுமே. அவை கீழே

6 பாஸ் என்கிற பாஸ்கரன் 
சினிமாக்கள் ஒரு தர்க்கனூபூர்வமாய் ஏற்றுக் கொள்ளப்படத்தக்க களத்தில் மட்டுமே இயங்க வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் எனக்கு கிடையாது. பார்க்கும் இரண்டரை மணி நேரத்தில் அது என்னை உள்ளீர்த்துக் கொண்டால் போதும். அவ்வகையில் இந்த வருடத்தின் சிறந்த சிரிப்புத் தோரணம் "பாஸ் என்கிற பாஸ்கரன்". சந்தானத்தப் பற்றி சொல்லத் தேவையில்லை. ஆர்யாவுக்கும் அருமையாக டைமிங் காமெடி வருவது சிறப்பு.

5 அங்காடித் தெரு 
வலிந்து திணிக்கப்பட்ட சோகம், ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் அஞ்சலியின் மிகை நடிப்பு, மகேஷின் கொஞ்சமும் உணர்ச்சியற்ற நடிப்பு என்பவற்றை தவிர்த்துப் பார்த்தால் அருமையான படம். "கண்ணெதிரே தோன்றினாள்" படத்தில் "பட்டாம்பூச்சி உன் தோளில் இருந்துச்சு உனக்கு வலிக்குமேன்னுதான் " என வசனம் கேட்டப் போது சுஜாதாவா இப்படி என நொந்து போனேன். கிட்டத்தட்ட அதே உணர்வு "எறும்பு வாழும் காட்டில்தான் யானையும் வாழுது " என ஜெமோ வசனம் கேட்கையில். முழுமையான பார்வை

4 ஆயிரத்தில் ஒருவன் 

நிறையப் பேருக்கு படம் பிடிக்கவில்லை. அரசுரிமையை தியாகம்  செய்து உத்தமசோழருக்கு முடிசூட்டி வைத்த அருள்மொழிவர்மனின் (ராஜ ராஜா சோழன்) தியாகத்தையும்  கடல் தாண்டி சென்று படைத்த வீர வரலாறுகளையும் இன்றளவும் சிலாகிப்பவர்களால் சோழர்களை காட்டுமிராண்டியாக நரமாமிசம் உண்பவர்களாக காட்டியதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. சிலருக்கு ஆங்கிலப்படத்தை நிகர்த்த கணினி வரைகலை உத்திகள் இருக்கவில்லையே என்ற வருத்தம் இருந்தது. ஆனால் என்னளவில் இது தமிழின் ஆகச் சிறந்த முயற்சி. சென்ற வாரம் பார்த்தப் போதும் எனக்குப் பிடித்தே இருந்தது. திரைக்கதை இரண்டாம் பாதியில் நிலையில்லாமல் அலைவதொன்றே எனக்கு இருந்த ஒரே குறை.அப்புறம் வலிந்து திணிக்கப்பட்ட அந்த இந்திய ராணுவத்தின் காட்சிகள். மற்றும்படி செல்வாவிடம் இருந்து இன்னமும் எதிர்பார்க்கிறேன். என்னளவில் மணிரத்தினம்,பாலாவுக்குப் பிறகு தனக்கென ஒரு திரைமொழியைக் கொண்டிருப்பவர் செல்வராகவனே. முழுமையான பார்வை

3 . எந்திரன்

இந்தப் படம் எப்பேர்ப்பட்ட மொக்கையாக இருந்தாலும் கொண்டாடி இருப்பேன். ஆனால் சிறப்பாக அமைந்தது மகிழ்ச்சி. மற்றைய படங்களைப் போலல்லாமல் ஏதோ எங்கள் வீட்டு விசேடம் போல எதிர்பார்த்துக் கொண்டாடி மகிழ்ந்த ஒரு திருவிழா. 

2 . நந்தலாலா 
பாரதி வரிகளோடு மிஷ்கினின் இன்னுமொரு படைப்பு. "சித்திரம் பேசுதடி" பார்த்தப் போது மிஷ்கின் பற்றி எந்த ஒரு அபிப்பிராயமும் இல்லை. அஞ்சாதே பார்த்தப் பின்தான் எனக்கு மிஷ்கின் மிக முக்கியமானவராக தெரிந்தார். பலக் காட்சிகளில் நின்று  விளக்கமளிக்காமல் எம்மை யூகிக்க விட்டது பிடித்திருந்தது. ஆக நந்தலாலாவை அதிகம் எதிர்பார்த்தேன். ஆனால் படம் இலங்கையில் திரையிடப்படவே இல்லை. பிறகு DVD இல்தான் பார்த்தேன். குறைந்த வசனங்களும்  நிறைவான காட்சிகளுமாய் ஒரு அருமையான படம். கலைப் படங்கள் என்ற லேபிளோடு வருபவற்றில் பெரும்பாலானவை பொறுமையைச் சோதிப்பவை. ஆனால் சுவாரசியமான ஒரு சிறுகதைத் தொகுப்பை ஒரே மூச்சில் படித்து முடித்தது போன்ற ஒரு அலாதியான அனுபவத்தை தந்ததற்காகவே மிஷ்கினைப் பாராட்டலாம். ம்ம் படம் நிச்சயமாக ஒரு உள்ளார்ந்த சிலிர்ப்பைத் தரும் அழகியல் அனுபவம். எங்கே சுட்டால் என்ன மனதைத் தொட்டால் சரி என்ற எண்ணம் எண்ணம் கொண்டவன் என்பதால் கிக்குஜிரோவின் தழுவல் என்பது படத்தை ரசிக்க இடையூறாய் இல்லை.

1 . விண்ணைத் தாண்டி வருவாயா 

இந்த வருடத்தில் என்னை மிகக் கவர்ந்த படம். மைனா மைனா என்றொருப் படத்தை நிறையப் பேர் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். டிவி யில் ஒரிருக் காட்சிகள் பார்த்த போது வெகு அபத்தமாய் இருந்தது. அப்படியெல்லாமா  காதலிப்பார்கள். ஆனால் நான் பார்த்த அனுபவித்த காதல் விண்ணைத் தாண்டி வருவாயாவில் இருந்தது. அது பாட்டில் போய் கொண்டிருக்கும் வாழ்வில் தன பாட்டில் வருவது காதல். வெகு அன்னியோன்னியமான ஒரு காதல் ஜோடியின் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்தது போன்ற ஒரு அருமையான இயல்பான படம். கெளதம் வாசுதேவ் மேனனிடமிருந்து. ம்ம் காதல் ததும்பி நிரம்பி வழிகிறது படம் முழுவதும். காதல்,காதல்,காதல் படம் முழுக்க இது மட்டுமே.சின்ன சின்னக் காட்சிகளும் ரொம்பவே சுவாரசியம்.

"இதெல்லாம் விடு பொண்ணு எப்படி வோர்த்தா? "
"உயிரக் கொடுக்கலாம் சார்"
"சியர்ஸ்"

"நீ இருபத்தொரு வருஷமா வாழ்ந்த ஊர்ல நான் இருபத்து மூணு வருஷம் வாழ்ந்திருக்கேன் Which means நான் உன்னை விட ரெண்டு வயசு பெரியவ"

"சொத்தை கூட எழுதிக் கொடுப்பாரு ஆனா என்னை கட்டித்  தர மாட்டாரு "
"அப்ப எழுதித் தரச் சொல்லு"

"சார் Love favor the brave ன்னு சொன்னீங்க இல்ல ஒரு சின்ன correction,  love favor the intelligence"

இப்படி  சின்ன  சின்னதாய் அழகான வசனங்கள் எல்லாம் முன்பு மணி படங்களில் மட்டுமே பார்த்தது.  படம் பூராகவும் தன் இசையால் ஆக்கிரமித்திருந்தார் இசைப்புயல். முழுமையான பார்வை இங்கே 

குட்டி,தமிழ்ப்படம்,மதராசபட்டினம்,கோவா, சிங்கம், ராவணன், வ குவார்டர் கட்டிங், உத்தமபுத்திரன், மன்மதன் அம்பு என்பன நான் பார்த்த ஏனைய படங்கள். மதராசப் பட்டினம் ஓரளவு நல்லப் படமே ஆனால் டைட்டானிக் கையும் லகானையும் காட்சிக்கு காட்சி ஞாபகப்படுத்தியது பலவீனம்.  குட்டி தனுஷ் மற்றும் பாடல்களுக்காகவும் தமிழ்ப்படம் லொள்ளு சபா பார்ப்பது போல சிரிப்புக்ககவும் பார்க்கக் கூடிய ரகம். சிங்கம் திரையரங்குக்கு சென்றதால் கடனே எனப் பார்த்து தொலைக்கலாம். கோவா, குவார்ட்டர் கட்டிங் ரொம்பவும் சுமார். உத்தமப்புத்திரன் எழுந்து ஓடி விடலாம்  என்ற உணர்வு இரண்டாம் பாதியில் விவேக் வந்ததால் இல்லாமல் போனது.எதிர்பார்த்து சென்றவனை ஏமாற்றியவர்கள் என்றால் இவர்கள்தான். ராவணனில்  மணி  தவிர மற்ற எல்லாமே இருந்தது. மன்மதன் அம்பில் கொஞ்சம் அளவுக்கதிகமாகவே கமல் இருந்தது என்பதே குறை. ராவணனில் இசை,ஒளிப்பதிவு,நடிப்பு என்பனவும் மன்மதன் அம்பில் மாதவன் நடிப்பு, வசனங்கள் என்பனவும் ரசிக்கக்கூடியவை. ராவணனில் கார்த்திக் அனுமானாம் அதை காடுகிறேன் பேர்வழி என மணி கொஞ்சம் குரங்கு சேட்டை செய்திருக்க கமலும் போனில் ஏதேனும் வழிக் கிடைக்கும் என பேசிக்கொண்டே செல்கையில் முட்டுச் சந்தில் முட்டிக் கொண்டு நிற்பதாயும்  நடுத்தெருவில் நிற்பதாயும் பாலச்சந்தர் பாணி குறியீடுகள் எல்லாம் வைத்திருந்தார். நீங்களுமா கமல்?


Related Posts with Thumbnails