புதன், 19 ஜனவரி, 2011

ஆடுகளம் - என் பார்வையில்

 சினிமாக்களில் காட்டப்படுவது போல யதார்த்தத்தில் முழுமையான நல்லவர்களோ கெட்டவர்களோ கிடையாது. சந்தர்ப்பமும் சூழ்நிலைகளுமே ஓர் மனிதனின் நடத்தையை தீர்மானிக்கிறது. அவ்வகையில் தன்னிடம் வித்தை பயின்றவன் தன்னை மீறிச் செல்வதை தாங்க முடியாத ஒருவன் வன்மத்தினால் தன் சிஷ்யனின்  வாழ்வில் ஆடும்  சதியாட்டமே வெற்றிமாறனின் "ஆடுகளம்".  நீண்ட நாட்களுக்கு  பிறகு தமிழில் ஒரு அருமையான  படம்.  

சேவற் சண்டையை பற்றிய விவரணத்தோடு ஆரம்பிக்கின்றது படம். துரை(கிஷோர்),கருப்பு(தனுஷ்) ஆகியோரின் துணையுடன் உள்ளூரில் சேவற் சண்டையில் தோற்கடிகப்பட முடியாதவராக இருக்கிறார் பேட்டைக்காரன்(. செ. ‌.ஜெயபாலன்). அவரை தோற்கடிப்பதையே தனது லட்சியமாக கொண்டிருக்கும் அதிகாரி ஒருவருடன் இடம்பெறும் சேவற்சண்டையின் போது முன்பொருமுறை பேட்டைக்காரனால் அறுத்து விட சொல்லியிருந்த சேவலை வைத்து மூன்று லட்சம் பணத்தை ஜெயிக்கிறான் கருப்பு. தனது கணிப்பு தவறியமையும் தனது சிஷ்யன் மேல் படும் பெரும் புகழ் வெளிச்சமும் பேட்டைக்காரனுக்கு பொறாமையை தூண்டிவிட கருப்பின் வாழ்வை சீர்குலைக்க அவர் ஆடும் ஆட்டமும் அதிலிருந்து கருப்பு எவ்வாறு மீண்டானென்பதும் படத்தின் கதை.

 தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிய களத்தை முயன்றிருக்கிறார் இயக்குனர் வெற்றி. சேவற் சண்டையின் நுட்பங்கள், பேட்டைகாரனுக்கும் ரத்னசாமிக்கும் இடையிலான பகை, பேட்டைக்காரனின் சிஷ்ய கோடிகளுக்கு அவரில் இருக்கும்  விஷ்வாசம், கருப்புக்கு ஆங்கீலோ இந்திய பெண்ணான ஐரீன் மேல் வரும் காதல் என சுவாரசியமாக செல்கிறது முதற்பாதி. இரண்டாம் பாதி  கருப்பே அறியாமல் கொஞ்சம் கொஞ்சமாய் அவனை பலி தீர்க்கும் பேட்டைகாரனின் சதி. படமே அதுதான். காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் பார்வையாளனை அசர விடாமல் உள்ளீர்த்துக் கொள்வதில் இருக்கிறது வெற்றியின் வெற்றியின் ரகசியம். 

வெற்றிமாறனின் இயக்கத்தின் பின் படத்தில் பாராட்ட வேண்டியது பாத்திரத் தேர்வு. ஒவ்வோர் பாத்திரத்திற்குமான நடிகர் தேர்வும் அவர்களின் நடிப்பும் அருமை. தனுஷ் ஆச்சரியத்திற்குரிய ஒரு நடிகர். டிஷர்ட் ஜீன்ஸில் நகரத்து இளைஞனாக நடிக்க வேண்டுமா அல்லது சாரத்தை கட்டி பட்டிக் காட்டானாக மாறவேண்டுமா? இரண்டுக்கும் தயாராக இருக்கிறார். கொஞ்ச காலம் ஒரே மாதிரியான படங்களில் நடித்து சலிப்பூட்டி வந்தவர் இதோ மீண்டும் நான் விரும்பும் தனுஷாக மறுப்பிரவேசம்  செய்திருக்கிறார்.
அதேபோல் படத்தின் பிரதான பாத்திரம் பேட்டைக்காரனாக இலங்கைக் கவிஞர் .செ..ஜெயபாலன் அசத்துகிறார். அவரது பார்வையே அவருக்கு ஒரு ப்ளஸ் ஆக அமைந்துள்ளது. அவரது நடிப்பின் சிறப்புக்கு ராதாரவியின் குரலும் ஒரு பிரதான காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. கிஷோர் எப்போதும் ஹாலிவுட் action படங்களின் கதாநாயகர்கள் போல் இறுக்கமான முகத்துடன் வருபவர் இதிலும் அப்படியே. டாப்சி படத்தின் முன்னோட்டம் பார்த்த போது பெரிதாக கவரவில்லை எனினும் படத்தின் கதைப்படி அவரது கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தெரிவு.

. ஆர். ரஹ்மானின் இலக்கு வேறு. ஹாரிஸ் பெரிய ஹீரோக்களின் வர்த்தகப் படங்களில் காதுக்கு இனிமையாய் இரண்டு பாடல்களை போடுவதோடு நின்று விடுவார். ஆக கதைக்கு முக்கியம் தரும் புதிய அலை இயக்குனர்களுக்கு பொருத்தமானவர்கள் ஜிவிபியும் யுவனும்தான். அவ்வகையில் தனக்கிடப்பட்ட பணியை சிறப்பாய் செய்திருக்கிறார் ஜிவிபி.

ஆக இம்முறை வெளியான பொங்கல் படங்களில் என்னளவில் ஆகச் சிறந்தது ஆடுகளம்தான். ஆனால் அனைத்து தரப்பு ரசிகரையும் கவருமா என்பதை சொல்வது கடினம். பெரும்பாலும் குடும்பமாய் படத்திற்கு செல்பவர்கள் காவலனுக்கோ சிறுத்தைக்கோ தான் செல்ல விரும்புவர்.
ஆடுகளம் - அதகளம் 

திங்கள், 17 ஜனவரி, 2011

சிறிலங்காவின் தேசியத் தற்கொலை- ஒரு பார்வைவிமலாதித்த மாமல்லன் தனது தளத்தில் பகிர்ந்திருந்த பிரமிள் எழுதிய "சிறிலங்காவின் தேசியத் தற்கொலை" புத்தகத்தை ஒரே மூச்சாக படித்து முடித்தேன். ஒரே மூச்சாக படித்து முடிக்குமளவிற்கு புத்தகம் சுவாரசியமாக இருந்தது பிரதான காரணம். 1984 இல் வெளிவந்த இப்புத்தகம் வரலாற்றுக் காலத்திலிருந்து 83 ஜூலை கலவரம்  வரை  இலங்கையின் பிரதான இனங்களுக்கிடையே முறுகல் தோற்றம் பெற்று வளர்ந்த விதம் பற்றி விபரிக்கிறது.

சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையின் நிலைமை, தமிழர்-சிங்களவர் விரோதம் முளைகொண்ட விதம், தீர்க்கதரிசனம் அற்ற தமிழ் தலைமைகளின் செயல்பாடுகள், சில தமிழ் அரசியல்வாதிகள் தமது மேட்டுக் குடி சிந்தனையால் மலையகத் தமிழரின் இருப்புக்கு குழி பறித்தமை, தனி நாட்டு கோரிக்கையில் பிடிப்பின்றி இருந்த வடக்கிற்கு வெளியே வதியும் தமிழரையும் தமிழீழத்தை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளிய சிங்கள தேசியவாதம்ஜே ஆரின் திறந்த பொருளாதாரக் கொள்கை முறுகலை தீவிரமாக்கும்  ஒரு காரணியாக இருந்தமை, ஜேவிபியினர் எழுபதுகளில் இடது சாரி சித்தாந்தங்களுடன் தமிழருக்கு எதிரான இனவாதத்தையும் தமது கோசமாக கொண்டமை என சுதந்திரம் பெற்றதிலிருந்து இனப்பிரச்சினை உக்கிரம் பெற்ற 83 கலவரம் வரையான காலத்தை எவ்விதப் பாரபட்சமுமின்றி தமிழ்-சிங்கள இரு தரப்பினரும் விட்ட வரலாற்றுத் தவறுகளை சுட்டிக் காட்டி மிகச்  சிறப்பாக அலசி ஆராய்ந்திருக்கிறார் நூலாசிரியர்.

இருந்தாலும் வரலாறு  கொஞ்சம்  தவறான தகவல்களுடன், சிங்களவர்-தமிழர் ஆகிய இருசாராரும் திராவிடர்களே ஒரே பிராந்தியத்திலிருந்து வந்து குடியேறியவர்களான இவர்களுள் தமிழருக்கே இலங்கையில் அதிக பாத்யதை உண்டு என நிறுவ முற்படுவதைப் போல் தோன்றியது. இவ்வாறன  கல் தோன்றி மண் தோன்றா கற்பிதங்களே  நம் இன்றைய நிலைக்கு காரணம் என் நம்புபவனாதலால் அதை என்னால் ஏற்க  இயலவில்லை.

அப்படி என் கண்ணுக்குத் தட்டுப் பட்டவை. தேவநம்பிய தீசனின் பெயர் காரணம் பற்றிக் கூறுகையில் அதில் வரும் நம்பி என்பது இன்றும் கேரளத்தில் வழங்கி வரும் நம்பூதிரி போன்றவற்றின் மரூஉ எனக்  கூறுகிறார். ஆனால் அதை தேவநாம் (தேவனின்) பிய(பிரியத்துக்குரிய) தீசன் என்றே படித்திருக்கிறேன்.
இலங்கையின் பூர்விகக் குடிகள் பற்றி பேசும் போது குவேனி என்பது தமிழ் பெயர் எனவும் எனவே அவளும் அவளைச்  சார்ந்த ஏனைய இயக்கர்களும் ஆதி திராவிடர்களாகவே இருக்கவேண்டுமெனக் கூறுகிறார். விஜயன் வருகைக்கு  முன்னர் இலங்கையில் இருந்ததாக  சொல்லப்படுபவர்கள் இயக்கரும் நாகர்களும் ஆவர். ஆனால் அவர்கள் தமிழை பேசிய திராவிடர்கள் என்பதற்கோ இந்து சமய வழிபாடு இருந்தது என்பதற்கோ எவ்வித சான்றுகளும் இல்லை.  
அடுத்து விஜயன் சிங்கத்திற்கு பிறக்கவில்லை. இளவரசி ஒருத்திக்கும் சிங்கத்திற்கும் பிறந்த சிங்கபாகூ மற்றும் அவனது சகோதரி சிங்கசீவலிக்கும் பிறந்தவனே விஜயன். அவன் தந்து 700  தோழர்களுடன் நாடு கடத்தப்பட்டான். 200 அல்ல. இலங்கையின் முதற் தலைநகரம் அனுராதபுரமே அன்றி பொலன்னறுவை அல்ல.சரி அதை விடுவோம் புத்தகத்தில் இருந்த வேறு சில சுவாரசியத் தகவல்கள்.

விஜயன் - குவேனியின் காதல் கதை ஒடிஸ்ஸியஸ் மற்றும் ஸரஸ் இன் கதை போலிருப்பதாகவும் மகாவம்சம் இவ்வாறன பல தேச காவியங்களில் இருந்தும் உருவி பிசைந்த  கற்பனையான கலவை என்றும் சொல்லியிருந்தது நூற்றுக்கு நூறு உண்மை. அதைப் படித்த போது எனக்கு மேலும் சில கதைகள் ஞாபகம் வந்தது. பண்டுகபாயனின் கதை (இக்கதை "அபா" என்ற பெயரில் சினிமாவாகவும் உண்டுஅப்படியே கிருஷ்ணன் கதையையும், எல்லாளன் மாட்டுக்கும் நீதி வழங்கிய கதை அப்படியே மனு நீதிச் சோழன் கதையையும் , தீசன் மகிந்தரின் கேள்விகளுக்கு பதிலளிப்பது யுதிஷ்டிரர் யட்சனின் கேள்விகளுக்கு பதிலளிப்பதையும் , தீசனுகும் அசோகச் சக்கரவர்த்திக்கும் இடையில் நிலவியதாய் சொல்லப்படும் நட்பு  கோப்பெருஞ்சோழன்,பிசிராந்தையார் நட்பையும் ஞாபகப்படுத்தியது.

1970 சே குவேரா குழுவினர் என்ற பெயரில் அரசுக்கு எதிராக செய்த கிளர்ச்சியின் போது வர்க்க உணர்வை வெளிப்படுத்துவதற்கு பதிலாக இன வாத கோசத்தையே முன்வைத்தனர் என்பது ஜேவிபியினர் அப்போதே இப்படித்தான் என்பதற்கு நல்லதொரு உதாரணம். இங்கே நம்மவர்கள் ஏதோ ரோகன விஜேவீர அந்நாட்களில் தமிழரின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டதாக கதைப்பதுண்டு.

அடுத்து அரச மரங்களின் மீதான தமிழர்களின் அச்சம் இன்னமும் தமிழர் மத்தியிலே அரச மரமும் புத்தர் சிலையுமே சிங்கள விரிவாக்கத்தின் ஆரம்பப் படிகளாக பார்க்கப்படுகிறது.
ஆக சிங்கள-தமிழ் இனப் பிரச்சினையின் தோற்றம், இருதரப்பு தலைமைகளின் தவறுகள் ஒரு நாட்டையே போர்ச்சூழலுக்குள் தள்ளியமை என்பன பற்றி சிறப்பாய் அலசுகிறது இந்நூல். அதன்பின்னர் இயக்கங்களுக்கிடையிலான சகோதர படுகொலைகள், இந்திய - இலங்கை ஒப்பந்தம், ராஜீவ் மறைவு, சந்திரிகா அரசு, யாழ் வீழ்ச்சி, ரணில்-பிரபா ஒப்பந்தம், ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு, மகிந்த பதவியேற்பு என அதன் பின்னரான இன்றைய நிலை வரையிலான  தமிழ் தேசியத்தின் தற்கொலையை எவ்வித சார்புத் தன்மைகளும் இல்லாமற் அலசும் நூல் இன்றைய நிலையில் சாத்தியமா


சனி, 15 ஜனவரி, 2011

சிறுத்தை - என் பார்வையில்


"அன்புக்கு நான் அடிமை" என்று பல வருடம் முன்பு தலைவர் நடித்த படம் ஒன்று பார்த்திருக்கிறேன். சிறுவயதில் தன் குடும்பத்தை பிரிந்து திருடர்களிடம் வளரும் பலே திருடனான ரஜினி ஒரு சந்தர்ப்பத்தில் தெரியாத்தனமாக  போலீஸ் அதிகாரியான தன் அண்ணனையே  கொலை செய்து விட்டு அந்த போலிஸ் வேடத்தில் அண்ணன் செல்ல வேண்டிய இடத்திற்கு அவர் செல்கிறார். அங்கே அராஜகம் செய்து வரும் கராத்தே மணி உள்ளிட்டோரின் கொட்டத்தை அடக்கும் ரஜினியை ஊரே கொண்டாடுகிறது. ஊருக்கு நல்லது செய்வதால் போலிசும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது. இறுதியில் சாகாமல் இருக்கும் அண்ணன் விஜயனும் தலைவரும் உண்மை உணர்ந்து சேர்வார்கள் சுபம்.


"சிறுத்தை " கிட்டத்தட்ட அதேதான். திருடனான ராக்கெட் ராஜா தன்னை போலவே உருவ ஒற்றுமை கொண்ட ஞானவேல் பாண்டியனின் மரணத்தின் பின்  அவனது இரு பெரும் பொறுப்புக்களான ஊராரை வில்லனிடம்ருந்து காத்தல், அவனது மகளுக்கு தந்தையாதல் ஆகிய இரு பொறுப்புக்களையும் சிரமேற் கொண்டு நிறைவேற்றி முடிப்பதே படத்தின் கதை. ஆனால் இதெல்லாம் நடப்பது படத்தின் இரண்டாம் பாதியில் . முதற் பாதியில் சந்தானத்தோடு சேர்ந்து திருடுவதும், தமன்னா இடுப்பைக் கிள்ளுவதுமாக கலகலப்பாக படம் நகர்கிறது. படத்தின் முதற்பாதி கலகப்பு என்றால் இரண்டாம் பாதி வேகம்.

படத்தை தனியொருவராய் தாங்குகிறார் கார்த்தி. இவ்வளவு காலமும் அலட்சியமான போக்குடைய ஒரு அழுக்குப் பையனாக மட்டுமே இருந்த கார்த்தி முதற்றடவையாக ஒரு கம்பீரமான போலிஸ் அதிகாரி வேடத்தில் அவரது மிடுக்கான நடிப்பிற்கு ஒரு சால்யூட். பருத்தி வீரனில் அமீர் சொல்லிக் கொடுத்ததை கப்பெனப் பிடித்து அதையே ரிப்பீட் பண்ணிக் கொண்டிருக்கிறார் என்ற என் எண்ணத்திற்கும் வேட்டு வைத்திருக்கிறார். ராக்கெட் ராஜா வழமையான கார்த்தி. ஆனால் ராக்கெட் ராஜா  ஞானவேல் பாண்டியனாக வருகையில் கலக்கலாக இருப்பதும் உண்மை. சந்தானம் முதற்பாதி கலகலப்புக்கு கார்த்தியோடு துணை நிற்கிறார். தமன்னாவின் இடுப்பும் ஆங்காங்கே நடிக்கிறது.


பாடல்கள் பெரிதாய் சொல்லுமளவுக்கு இல்லை. பின்னணி இசையும் அவ்வளவே. படத்தில் மசாலா நெடி ரொம்பவே தூக்கல். மூளையை கழட்டி வைத்து விட்டுத்தான் படம் பார்க்கவே ஆரம்பிக்க வேண்டும். ரெண்டரை மணி நேரம் டைம் பாஸ் பண்ண நினைப்பவர்கள் மட்டும் பார்ப்பதற்கு பொருத்தமான படம் சிறுத்தை.

வியாழன், 13 ஜனவரி, 2011

பெருமழைக்காலம்


கிட்டத் தட்ட 20 வருடங்களில்  இல்லாத அளவு அடிக்கும் குளிரில் முழு நாடுமே உறைந்து போயுள்ளது. கொழும்பே 20 பாகை செல்சியசிலும் குறைவான வெப்பநிலையை எட்டி நுவரலிய போல குளிர்கையில் நுவர எளிய என்னவாகி இருக்கும் என ஊகிக்கலாம். இங்கே மாத்தளையில் நானெல்லாம் விறைத்திருக்கும் விரல்களை  கொண்டு ரோபோ போல இந்த பதிவை டைப் பண்ணிக் கொண்டிருக்கிறேன். இந்தக் குளிர் பெப்ரவரி வரை தொடரும் என்பதால் அதற்கேற்ற ஆயத்தங்களை செய்வது நல்லது.   

ஊரில் சில பெருசுகள் கலிகாலம் என்று அலுத்துக் கொண்டதோடு எல்லாமே அழிவுக்குத்தான் என்றும் 2012 இல் எல்லாம் முடிந்தது என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்ஆனால் வழமையான வடகீழ் பருவப் பெயர்ச்சி மழையே இவ்வாறு பெய்வதாக வளிமண்டலவியற் திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் சிலர்  இது ஏதோ லா நினோ என்கிறார்கள். தென் பசிபிக் சமுத்திரத்தின் வெப்பநிலை 3 பாகை செல்சியசிலும்  குறைவதால் ஏற்படும் நிலைமை. லா நினோ என்றால் ஸ்பானிஷ் மன்னிக்கவும்  எஸ்பஞோல்  மொழியில் குட்டிப் பெண் என்று அர்த்தமாம் பெண் என்றாலே பிரச்சினைத்தான் போல இருக்கிறது

நாலு  ஐந்து நாட்களாக காட்டு காட்டென்று காட்டிய மழையில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடிழந்தும், 21  பேர் உயிரையே இழந்தும் இருப்பதோடு கிட்டத்தட்ட 1 மில்லியனை அண்மித்தவர்கள் மழையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆக நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று பாதிக்கப்பட்டோருக்கு இந்நேரத்தில் அவசியப்படும் உலர் உணவுப் பொருட்கள், மருந்து வகைகள் போன்றவற்றை உங்களுக்கு இயன்றளவில் வாங்கி இம்மனிதாபிமான பணியில் ஈடுபட்டிருப்போரிடம் சேர்த்து விடுங்கள். இதுவே நம்மிடம் கொஞ்சமேனும் எஞ்சியிருக்கும் மனிதத்துக்கு சான்றாய் அமையும். அப்புறம்  தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளான .தே. கூ வினர் இதற்கும் தமிழீழத்தை எதிர்ப்பார்த்தது போல இந்தியாவை எதிர்பார்த்திருப்பதாக அறிந்தேன்.


Related Posts with Thumbnails