செவ்வாய், 30 மார்ச், 2010

அங்காடி தெரு - என் பார்வையில்


பண்டிகைக் காலங்களில் எத்தனயோ கடைகள் ஏறியிறங்கி இருப்போம். எத்தனையோ ஆடைகள் இருந்தாலும் நமக்கேனோ மடித்து வைக்கப்பட்டிருக்கும் துணிகளுக்குள் கடைசியாய் இருப்பதுதான் பிடிக்கும். அதையும் புரட்டிப் பார்த்தப் பின் உதடு பிதுக்கி நகர்வோம். சில சமயங்களில் கடையில் ஆண் பெண் பணியாளர்கள் ஜோடியாய் இருந்து தமக்குள் சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்தால் "ஆட்டக்காரி எப்படி பல்லக் காட்டுதுன்னுப் பாரு" என வெறுப்பை உமிழ்வோம். தம் பணியில் கொஞ்சம் அசிரத்தையாய் இருந்தால் "இதுகளுக்கு இதுக்குத்தானே சம்பளம் கொடுக்குறாங்க, திமிரப் பாரு " என முணுமுணுப்போம். முடிந்தால் கடை முதலாளியிடம் "இனிமேல் உங்க கடைக்கே வரமாட்டோம் ஒரு மரியாதையே இல்ல" என பந்தம் வைத்து விட்டு அடுத்த கடைக்கு நகர்வோம். என்றாவது எந்த தொழிலாளர் நல விதிமுறைகளுக்கும் அமையாது முதலாளிகளின் சுரண்டலுக்கு ஆளாகும் அந்த அப்பாவி பணியாளர்களைப் பற்றி யோசித்திருப்போமா? இவங்களைப் பற்றியும் யோசிங்கடா என செவிட்டில் அறைந்து சொல்லியிருக்கும் படம்தான் வசந்தபாலனின் அங்காடித் தெரு.

இலங்கையில் உள்ளோரும் ரங்கநாதன் தெரு பற்றி கேள்விப்பட்டிருப்போம். எப்போதும் கல கலவென இருக்கும் கடைத் தெரு என்பதாகவே நமக்கு ஒரு சித்திரம் காட்டப்பட்டிருக்கிறது. இயக்குனர் ஷங்கருக்கு ஆண்டிகளை சாணைப் பிடிக்க தோதான இடமாகப் பட்ட ரங்கநாதன் தெரு அவரது சிஷ்யன் வசந்தபாலனுக்கோ அடி மாடாய் உழைக்க மட்டுமே பிறந்த ஒரு கூட்டத்தின் வலிகளைப் பதிவு செய்ய உகந்தக் களமாகப் பட்டிருக்கிறது.வசந்தபாலன், நான் பார்த்த இவரின் முதற்படம் வெயில்.
தன் கனவான நாட்டியத்திலும் பெரிதாக வர முடியாமல், காதலிலும் வெற்றிப் பெற முடியாது குடிபழக்கத்திற்கு அடிமையாகி மற்றவர்களை விமர்சித்தேனும் தன் சுயத்தை நிறுவ முயலும் ஈற்றில் அங்கீகரிக்கப்படாது போன தன் திறமையை தன் காதலியின் மகளின் நாட்டியத்தின் மூலம் மீட்டெடுத்து அக்கைத்தட்டல் தந்த திருப்தியில் உயிர் விடும் பாலக்ருஷ்ணன் பாத்திரத்திற்கு பின் அலட்சியமும் நிராகரிப்பும் தனிமையும் சூழ்ந்த ஒரு வாழ்வின் கொடுமையை நம்முன் நிகழ்த்திக் காட்டியப் படம் வெயில். முருகேசின் தம்பி தன் தாயிடம் அம்மா அண்ணா எங்கே போனான் எனப் பேசிக் கொண்டிருக்கும் போது உக்கிரமான வெயிலின் தகிப்பில் முருகேசின் பயணம் தொடர்கையில் A film by vasanthabalan என முடித்திருக்கலாமே என யோசித்ததுண்டு.
அதை பார்த்தப் பிறகுத்தான் ஒருநாள் டிவியில் போடும்போது அட வசந்தபாலன் படம் என ஒரு ஆர்வத்தில் இவரது முதற்படம் ஆல்பம் பார்த்தேன். பெருத்த ஏமாற்றம் அதுவும் படம் தந்த தீர்வில் எனக்கு சற்றும் உடன்பாடில்லை. எல்லாவற்றுக்கும் சேர்த்து தனது முந்தைய அத்தனைப் படங்களையும் விஞ்சியிருக்கிறார் அங்காடித் தெருவில்.

படம் பார்த்து விட்டு வருகையில் எதிர்ப்பட்ட நண்பன் என்னப் படம்டா இது மாடிப்படி மாது கஷ்டப்பட்டு படிச்சு நல்ல நிலைக்கு வர்றதுதான் எதிர்நீச்சலிலேயே பார்த்துட்டோமே என்கிறான். அய்யய்யோ படம் இயல்பா இல்லையோ? என என் ரசனையை நொந்தவாறே வீட்டிற்கு வந்து மீண்டும் மீண்டும் காட்சிகளை அசைப் போட்டுப் பார்த்தேன். ம்ஹ்ம் எனக்கேதோ படத்தைப் பற்றி புத்தகமே எழுதலாம் எனத் தோன்றியது.

நாயகன் தொடங்கி இயக்குனர் .வெங்கடேஷ்,பாண்டி,சோபியா மேரி, செல்வராணி என எல்லோருமே பாத்திரங்களாகவே வாழ நடிப்பில் அசத்தியிருக்கிறார் அஞ்சலி. இவரப் பற்றி நா. முத்துகுமாரின் அதே வார்த்தைகளில் சொல்வதென்றால் "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை ஆனால் அவளுக்கு நிகரில்லை, அவள் அப்படி ஒன்றும் கலரில்லை ஆனால் அது ஒரு குறையில்லை.
கற்றது தமிழில் ஆனந்தியாக கண்ணால் அதிகம் பேசியவர் கனியாக இதில் வாயாலும் நிறையவே பேசுகிறார்.

அந்த சாப்பாட்டுக் கூடத்தையும் காவலாளி காவலிருக்க ஒடுங்கிப் படுக்கும் இடத்தையும் பார்க்கும் போது சற்றே மிகையாய்க் காட்டி விட்டாரோ எனத் தோன்றினாலும் உண்மை இவர் காட்டியதற்கு சற்றும் குறைவில்லாதது என அறிந்த போது அதிர்ச்சியாய் இருந்தது. மனிதர்களை நம்பி வியாபராம் செய்யும் முஸ்லிம் பெரியவர், குள்ளனைத் திருமணம் செய்து அவனைப் போலவே பிள்ளை பெற நினைக்கும் பாலியல் தொழில் செய்யும் பெண், பொதுக் கழிப்பிடத்தை சுத்தம் செய்து தனக்கான வாழ்வைத் தேடிக் கொள்பவன், கடையில் காதல் செய்ததற்காய் தண்டிக்கப் பட்டு உயிர் துறக்கும் பெண்,அவளது காதலன் என இயல்பு மாறாமல் படைக்கப் பட்டிருக்கும் பாத்திரங்களும் அவர்களின் பின்னணியாய் சொல்லப்படும் கதைகளும் வசந்தபாலன் மீது பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.

ஆனால் இத்தனை யோசித்த வசந்தபாலன் தொழிநுட்ப ரீதியில் ஏன் இத்தனைக் குறைகளை விட்டார் எனத் தெரியவில்லை. அட ஒவ்வொரு பிரேமும் ஒரு ஓவியம் போலத் தோன்றும் தனியே துருத்தி தெரியும் ஒளிப்பதிவு தேவையில்லைத்தான். ஆனால் அதற்காக இப்படியா? டெக்னிக்கல் சமாசாரங்களில் ரொம்பவும் அசிரத்தையாய் இருந்திருக்கிறார். பின்னணி இசை உட்பட. இத்தனைக்கும் படம் ஐங்கரன் போன்ற ஒரு பெரிய நிறுவனத்தின் தயாரிப்பு. குறித்த தெருவில் இத்தனை துணை நடிகர் கூட்டத்தைக் கொண்டு எடுப்பதன் சிரமம் பற்றி எல்லாம் அவர் சொல்லத் தேவையில்லை. ஏனெறால் இதை விஞ்சி சிரமம் தரக்கூடிய ஒருப் படைப்பை பாலா சாத்தியப்படுத்தியிருக்கிறார்.அத்தோடு
அப்பா செத்துப் போவது தொடங்கி காதலிக்கு கால் போவது வரையான சம்பவங்கள் பிரதான பாத்திரங்களின் மீது அனுதாபத்தை ஏற்படுத்தவெனவே வலிந்து சேர்க்கப்பட்ட காட்சிகளோ எனவும் எண்ணத் தோன்றுகிறது. பார்த்து வசந்தபாலன் இன்னுமொரு சேரனாக மாறும் அபாயம் தெரிகிறது.

விஜய் அந்தோனி, ஜி .வி.பிரகாஷ் என இரண்டு இசையமைப்பாளர்கள் இசைத்திருக்கிறார்கள். அவள் அப்படி ஒன்றும்,உன் பேரைச் சொல்லும் போதே,கதைகளில் ஆகிய மூன்று தேறுகிறது.

ஜெயமோகனின் கதைகளைப் படிப்பது போலவே இருக்கிறது வசனங்கள். ஒவ்வோர் இடத்தில் தனித்துத் தெரிந்தாலும் பெரும்பாலும் காட்சிகளுக்கு பொருத்தமாக அதற்குள்ளேயே கரைந்து விடுகிறது. நகர்ப்புற மத்திமர்களின் காதல் கதைகளுக்கு எஸ். ரா(உன்னாலே உன்னாலே) என்றால் விளிம்பு நிலை மனிதரின் வாழ்க்கையை அதன் அவலம் குன்றாமல் வார்த்தைகளில் தருகிறார் ஜெமோ.

மொத்தத் தேசிய உற்பத்தி, தனி நபர் தலா வருமானம் என சுட்டிகளைக் கொண்டு காட்டப்படுகின்ற பொருளாதார முன்னேற்றம் எல்லாம் பொருள் ஒரு குறித்த இடத்தில் மட்டும் குவிவதையே காட்டுகின்றதேயன்றி அது உண்மையான சமூகப் பொருளாதார முன்னேற்றம் அல்ல. மாறாக அரசு உள்ளிட்ட அதிகார சக்திகளின் உதவியுடன் தம்மை வலுவாய் நிலை நிறுத்திக் கொண்ட முதலாளியத்தின் கோரப்பிடியில் சிக்கி சக்கையாய் பிழியப்படும் பாட்டாளி வர்க்கத்தினரின் சர்வாதிகாரம் மலரும் நாளிலேயே உண்மையான பொருளாதார முன்னேற்றம் சாத்தியமாகும். அதுவரை லிங்குகளும் கனிகளும் நம் சமூகத்தில் இருந்து குறையப் போவதில்லை.

திங்கள், 22 மார்ச், 2010

என்னா கொடுமை இளையத் தளபதி இதெல்லாம்

You are the bows from which your children as living arrows are sent forth. என்றார் கலீல் கிப்ரான். ஆனால் நம் பெற்றோருக்கு இன்னமும் புரியாதது இதுதான். அவர்கள் தமது குழந்தைகளை அப்படியே தனது பிரதிகளாக வார்த்தெடுக்கவோ அல்லது பொருளாதார போட்டிகளில் தப்பிப் பிழைக்கத் தக்க எந்திரங்களாகத் தயார் செய்யவோதான் பிரியப்படுகின்றனர்.

ஏகாதிபத்திய வல்லரசுகள் உலகமயமாக்கம் எனும் பெயரால் இன்று மூன்றாம் உலக நாடுகளில் வாழும் மக்களின் மூளைவளத்தையும் தமக்கேற்றாற் போல் சுரண்ட வசதியாகவே இந்நாடுகளின் கல்வித் திட்டமும் அமைந்துள்ளது. நம் குழந்தைகள் தாங்கும் சுமை குறித்து எவரும் பெரிதாக கவலைக் கொள்வதில்லை. இதைப் பற்றி எல்லாம் பேசியோ எழுதியோ தீர்த்தவற்றைப் பற்றி யாரும் பெரிதாக அக்கறை படவில்லை.

இதைப் பற்றி மக்களுக்கு பிடிக்கும் விதத்தில் நிறைய மசாலா சேர்த்து ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் வந்தப் படம் த்ரீ இடியட்ஸ். அமீர்,கரீனா,போமன் ஹிரானி ஆகியோருடன் நம்ம மேடி நடித்தது.

ஆனால் அந்தப் படத்துக்கு வந்த சோதனையைப் பாருங்கள் படத்தை ரீமேக் செய்து நடிக்கப் போகின்றாராம் நம்ம இளையத் தளபதி. வழமையாக அவருக்குத் தோதான கதைகள் ஆந்திராவில்தான் அகப்படும் பெரும்பாலும் மகேஷ் பாபு நடித்தது. இம்முறை இவரிடம் மாட்டியிருப்பது அமீர் கான்.

இயக்குனர்
விஷ்ணுவர்தனாம் சோ அது பிரச்சினையில்லை டெக்னிக்கலி படம் நன்றாகவே இருக்கும் ஒரு ரிச்சான கலரில். அனுவர்தன் விஜயை அழகாக ஒரு காலேஜ் மாணவன் போல நிச்சயம் காட்டி விடுவார் தனது அழகழகான ஆடைத் தெரிவுகளின் மூலம். எல்லாவற்றையும் விட டைட்டிலும் தளபதிக்கு அத்தனை அழகாய் பொருந்துகிறது.

ஆனால்
படத்தில் அவர் அறிவுரை சொல்ல வாய்ப்பு அதிகம் அம்மாதிரியான காட்சிகளில் அவரது ரசிக சிகாமணிகளை திருப்தியுறச் செய்யவென எழுதப்படக் கூடிய வசனங்களையும் அப்போது அவரது நடிப்பையும் கொஞ்சம் கண்ணை மூடி கற்பனை செய்து பாருங்கள். ப்ளீஸ் விஜய் எங்களை விட்டு விடுங்கள். Roland emmerich படக் காட்சிகள் நிஜத்தில் நிகழ்வதை நாம் விரும்பவில்லை. தமிழ் கூறும் நல்லுலகு பிழைத்துப் போகட்டும்.

செவ்வாய், 9 மார்ச், 2010

எந்நன்றி கொன்றார்க்கும்

"அண்ணே என் பேர் பத்திரிகையில் வரணும்னா என்னனே செய்யணும்?" என்று கேட்கும் செந்திலிடம் கவுண்டமணி " ஓன் வீட்டுக்கு பக்கத்துல சின்னக் குழந்த இருக்கா? அதப் புடிச்சி கடிச்சி வச்சிரு" எனச் சொல்வார். இப்படி அசாதாரணமாக ஏதும் செய்தால்தான் என் பெயரும் பத்திரிகையில் வரும் என நினைத்திருந்தேன். ஆனால் யாழ்தேவி புண்ணியத்தில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்த நானும் இணையத்தில் எழுதும் இலங்கைப் பதிவர்களில் ஒருவன் என்ற வகையில் கடந்த வார நட்ச்ச்திரமாக தினக்குரல் வாரமஞ்சரியில் இணையத்தில் எம்மவர் பக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறேன். தினக்குரலுக்கும் யாழ்தேவி தள நிர்வாகிகளுக்கும் நன்றிகள். மிகவும் காலந்தாழ்த்தி நன்றி தெரிவிப்பது பற்றிய நிறைய வருத்தத்துடன். கூடவே இந்த விடயத்தை முதலில் அறியத் தந்த சகோதரப் பதிவர் கனககோபிக்கும் அத்தோடு உடன் பின்னூட்டம் மூலம் வாழ்த்து சொன்ன தங்க முகுந்தன், மதுரகன் ஆகியோருக்கும்.

விருப்பமென்றால் படத்தை கிளிக்கி பெரிதாய் பாருங்கள்

சரி இதற்கான எதிர்வினை ஊரில் எப்படி இருந்தது தெரியுமா? என்னிடம் Individual ஆக கற்கும் மாணவிகள் சிலர் தவிர இதுவரை ஒருவரும் என்னிடம் இதுப்பற்றி கதைக்கவில்லை. அட நம்ம வீட்டில் கூட. நானும் யாரிடமும் சென்று இந்த சண்டே தினக்குரல் பாருங்கள் என்னைப் பத்தி வந்திருக்கு என சொல்லும் ரகம் இல்லையாதலால் இது பற்றி யாருக்கும் தெரியாமலே போய் விட்டது. அதுவும் தினக்குரல் விரைவில் விற்றுத் தீரும் ஒரு பத்திரிகை. எல்லாப் பயலும் வாங்கியிருக்கான் ஆனா வாசிக்கத்தான் இல்ல. எனினும் பண்டாரவளையிலிருந்து ஒரு நண்பன் அலைபேசி வாழ்த்து சொன்னான். மகிழ்வாய் உணர்ந்தேன். எல்லாமே இம்மாதிரியான ஒரு அங்கீகாரத்திற்குதானே
மீள ஒருமுறை நன்றிகள்


சனி, 6 மார்ச், 2010

நித்தியை ஞாயப்படுத்தும் பதிவர்கள்

பல தெய்வ வழிபாடும் அபத்தமான புராண கதைகளும் மூடத்தனமான வழிபாட்டு முறைகளும் நிறைந்த ஒரு குறித்த சாராரின் மேலாதிக்கத்தை எவ்வித கேள்வியுமின்றி நிலைத்திருக்கச் செய்ய அயராது பாடுபடும் மார்க்கம் ஹிந்து மதம். ஒரு குறித்த பிரிவினருக்கு மட்டும் பிறப்பின் பெயரால் அதீத சலுகைகள் கிடைக்குமாறான ஒருதலைபட்சமானதும் ஏனையோரை மிகவும் துன்புறச் செய்வதும் உலகில் நடக்கும் அக்கிரமங்களை ஆண்டவனின் திருவிளையாடல் என்ற பெயரில் சகிக்கச் சொல்லும் ஒரு sadist மதம்.

எவ்வித விஞ்ஞான ஆதாரங்களும் அற்ற கட்டுக்கதைகளை நம்புவதைப் பற்றிய எவ்வித கூச்சமுமின்றிய ஒரு முட்டாள் கூட்டத்தை தன பக்தர்களாகக் கொண்டது. பிரபஞ்சத்தின் தோற்றம், உயிரின் தோற்றம், அதன் கூர்ப்பு என்ற சகலதுக்கும் ஓரளவு அறிவியல் பூர்வமாக விளக்கம் கூறக்கூடியதாக உள்ள இன்றைய நிலையிலும் தீ மிதித்தல், பறவை காவடி என காட்டு மிராண்டித் தனங்களில் ஈடுபட பக்தரை ஊக்குவிக்கும் ஒரு பிற்போக்கான மதமாகும்.

வர்ணாசிரம தர்மத்தை முக்கிய கோட்பாடாக கொண்டு அதன் வழி இன்றும் சாதியக் கொடுமைகள் எல்லா இடங்களிலும் நடைபெற காரணமாக உள்ளது இந்து தர்மம்.

1930 களில் முதலாளியம் சரிவை சந்தித்த போது ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் லத்தின் அமெரிக்காவிலும் மக்கள் பட்டினியில் இருந்த போது தாம் மிகையாய் உற்பத்தி செய்த உணவுப் பண்டங்களை மண் தோண்டி புதைக்கும், கடலில் கொட்டவும் செய்தனர் முதலாளித்துவ நாடுகள். அதற்கு சற்றும் குறையாத விதத்தில் இன்று போர்களாலும், பஞ்சத்தாலும் மக்கள் சொல்லன்னா துயரங்களை அனுபவிக்கையில் கோயில் திருவிழாக்களிலும் காணிக்கையாகவும் பெருந்தொகைப் பணமும் ,நேரமும், மனித உழைப்பும் கொட்டப்படும் அவலம் நிறைந்த மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கையை வாழப் போதிப்பது இந்து மதம்.

இத்தனை அவலங்களும் தலை விரித்தாடும் ஒரு மார்க்கத்தில் மனிதனுக்கு எவ்வித நிம்மதியும் கிட்டாது என்பது வெளிப்படையானதால்தான் பெரியார் துவங்கி பல பகுத்தறிவாளர்கள் நம் சமூகத்துக்கு ஒவ்வாத இம்மார்க்கத்தை தூக்கியெறியும் பணியில் ஈடுப்பட்டிருந்தனர். ஏன் அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே சிவவாக்கியர் போன்ற சித்தர்களும் நட்ட கல்லை சுற்றி வரும் அபத்தத்தை பற்றியும் பறைச்சி , பனத்தி என சாதி பார்க்கும் வழக்கத்தையும் கண்டித்தே இருந்தனர்.

இத்தனை அநியாயங்களும் அவலங்களும் மூட நம்பிக்கைகளும் நிறைந்த ஒரு சமயத்தில் நித்தியானந்தன்கள் தவிர்ந்த வேறு எதை எதிர்ப்பார்க்க முடியும். ஆக ஆச்சரியமில்லைதான் புலனடக்கம் பற்றி போதித்த ஒருவன் கதவை திறந்து வைத்துக் கொண்டு காம லீலையில் ஈடுபட்டது.

ஏன் அவனுக்கு உணர்ச்சி இல்லையா? அவன் பாவம் இல்லையா? என்ற கேள்விகளெல்லாம் சிலர் கேட்டிருந்தனர். காமம் என்பது இயற்கையின் நியதி. பெண்களை சுகிப்பதற்கு ஆர்வமும் விருப்பமும் அனைவருக்கும் இருக்கும் அது தவறுமில்லை. ஆனால் தன குடும்பத்திற்காக 35 வயது மட்டிலேனும் திருமணமே செய்யாமல் கழிப்பறையிலே கைமைதுனம் செய்தே காலம் கழிக்கும் எண்ணற்ற இளைஞர்களுக்கு இருக்கும் புலனடக்கம் கூடவா இல்லாமற் போனது மற்றவனுக்கு புலனடக்கத்தை போதிக்கும், மிகையான காம உணர்ச்சியால் வெதும்பிக் கொண்டிருந்த ஒரு ஏழை எழுத்தாளனின் உணர்ச்சி பெருக்கை ஒரு தொடுகையால் அற்றுப் போகச் செய்த பரமஹம்சனுக்கு. ஆக இயற்கை உந்துதல் என்றெல்லாம் சாட்டு சொல்வது இந்த நாயின் செயலை பொறுத்தவரை பொருத்தமே அற்றது.

தன மதம் இப்படி வெட்ட வெளியில் கற்பழிக்கப் பட்டதை பார்த்த பின் இவன் எங்கள் மதத்தின் பிரதிநிதி அல்லன் என்ற கோஷம் அம்மதத்தின் காவலர்களிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது. அப்படியானால் எது இந்து மதம்? அதன் தத்துவம், தாற்பரியங்கள் என்ன? எவனெல்லாம் போலி என்று விளக்கி முறைப்படுத்த வேண்டியதுதானே.

இன்னும் சில பேர் ஊடக தர்மம் பற்றி பேசுகிறார்கள். குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கக் கூடியவாறு இத ஒளிபரப்பியது தவறென்றாலும் அவ்வாறு செய்யாவிடில் இதையே கிராபிக் என்பவர்கள் நம்பியே இருக்க மாட்டனர். ஆனாலும் திரும்ப திரும்ப ஒளிபரப்பியது தவறே. இருந்தாலும் இதோடு ஒப்பிடும் பொது நித்தி செய்தது ஒன்றுமே இல்லை என்பது எல்லாம் கொஞ்சம் ஓவர்.

அடுத்து சில பேர் உங்களுக்கு எங்கேயடா போச்சு அறிவு? அவன் பிரமச்சாரி என்றானா? என எதிர் கேள்வி கேட்டு அவனை ஞாயப்படுத்துகின்றனர். அவன் மற்றவனுக்கு யோகமும், தியானமும் , பிராமச்சாரியமும் கற்பிக்கிறேன் என காசு பறிக்க கிளம்பாத வரையில் அவன் என்ன செய்தாலும் எனக்குப் பிரச்சினையில்லை. தான் பிரமச்சாரி அல்ல என்று சொல்லாத இந்த சத்தியவான் " நான் இப்படித்தான் இருப்பேன் போங்கடா" என சொல்ல வேண்டியதுதானே ஏன் ஓடி ஒளிந்தான்.


இன்னுமொரு சாரார் செயற்பட்ட முறைதான் ரொம்பவும் அருவருக்கத் தக்கதாய் போய்விட்டது. அதாவது இவனை ஞாயப்படுத்துவதற்காய் தன தொன்னூறு வயதிலும் மூத்திர சட்டியை சுமந்துக் கொண்டு கொண்டு ஊருராய் சென்று பிரசாரம் செய்தவரை இழுத்திருக்கிறார்கள். அவர் அந்திமக் காலத்தில் செய்த பொருந்தாத் திருமணம் சரி என்றால் இதுவும் சரியாம். தன் கட்சியினரிடம் நம்பிக்கை அற்ற ஒரு நிலையில் பார்ப்பனிய இந்து மதத்தின் கொடுமைகளில் இருந்து தன் மக்களை மீட்கும் அரும்பணிக்கு தான் உயிருடன் இருக்க வேண்டிய அவசியத்தை மணியம்மையே உணர்த்தி அவரை கவனித்துக் கொள்வதற்காக மட்டுமே செய்த திருமணமே இது. இத்தனைக்கும் மணியம்மை அவரை அப்பா எனத்தான் அழைப்பார். வளர்ப்பு மகளுக்கு சொத்து சேர முடியாது என்ற நிலையில் வாரிசுரிமைக்காக இதை செய்தார் என்றும் சொல்வார்கள்.
நம்மூரில் சொல்வார்கள் "கந்தனுக்கு புத்தி கவட்டிக்குல்லன்னு " பாருங்கள் பெரியார் மணியம்மைக்கு என்ன சுகம் கொடுத்திருக்க முடியுமென புலம்புகிறார். இவருக்கு எது பிரதானமாய் பட்டிருகிறது பார்த்திர்களா? ஆன்மீகப்பணி புரியும் இந்து மதத் தலைவர்கள்ளான பிரேமானந்தா தொடங்கி நித்யானந்தா (பட்டியல் பெரிதென்பதால் பெயர் தனித் தனியே பெயர் போட முடியவில்லை) வரையிலானவர்களுக்கு வேண்டுமென்றால் செக்ஸ் பெரிதாய் இருக்கலாம். ஆனால் மக்கள் விடுதலை என்ற பெரும்பணியில் ஈடுப்பட்டிருந்த பெரியாருக்கும் மணியம்மைக்கு அந்த எண்ணமே வந்திருக்காது. என்ன செய்வது இவங்க சாமி பிள்ளையாரே இங்கே பிரமச்சாரி என படம் காட்டி விட்டு வடக்கில் ரெண்டு சின்ன வீடு வைத்திருக்கையில் நித்தியும் அதைத்தான் செய்திருக்கிறார்.

என்னைப் பொறுத்தவரை இப்பிரச்சினைகள் களையப்பட வேண்டுமெனின் கொடியவர்களின் கூடாரமாய் போய் விட்ட சகல மடங்களும் அரச கண்காணிப்பின் கீழ் வர வேண்டும். அவர்களது கணக்கு வழக்குகள் பரீட்சிக்கப் பட வேண்டும் . அவர்கள் ஆன்மீக வழி பெற்ற சித்திகள் என்ன மக்களுக்கு அதில் எதை வழங்குகிறார்கள் என்பவற்றில் ஒரு வெளிப்படையான தன்மை இருக்க வேண்டும். ஜோதிடம், சாஸ்திரங்கள் என்பவற்றில் உள்ள விஞ்ஞான உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும். அவை அவ்வாறான உண்மைகளை கொண்டிராவிடின் அவை மக்களை ஏமாற்றும் பிராடுத் தனங்களாகக் கருதி தடை செய்யப்பட வேண்டும். அப்புறம் இவ்வாறான ஏமாற்றுத் தனங்களில் ஈடுபட்டோரை கடுமையாய் தண்டிக்க வேண்டும். இவையெல்லாம் என் ஆசைகளான போதும் இவற்றின் நடைமுறை சாத்தியமின்மை தொடர்பில் அறிகிறேன். இவ்வளவு ஏன் நித்தியே இப்போது கோர்ட்டுக்கு கொண்டு போகப்பட்டால் விடுவிக்கப்படவே வாய்ப்பு அதிகம். ஆகவே ஒரே ஒரு ஆசை இவன் கோபம் கொண்ட பக்தர்களின் கும்பலுக்கிடையில் மாட்டிப்பட்டால் நினைத்தாலே இனிக்கிறதுRelated Posts with Thumbnails