விஜய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஜய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 அக்டோபர், 2011

அட்டு ஃபிகர் 7ம் அறிவும் சுமார் ஃபிகர் வேலாயுதமும்



ஒவ்வொரு படம் பார்ப்பதற்கும் ஒவ்வோர் மனநிலையில் செல்வோம். அது அந்த படம் சம்பந்தப்பட்டவர்களின் முந்தைய படங்களை வைத்து நாமாக எடுத்துகொண்ட முன்முடிவுகளின் அடிப்படையிலோ அல்லது அதன் படைப்பாளிகள் ஊடகங்களில் சொல்லும் கருத்துக்களின் அடிப்படையிலோ அமையும். 

விஜய் படம் பார்ப்பவர்கள் யாரும் ஒரு அலாதியான கலையனுபவத்தை பெற வேண்டி திரையரங்கிற்கு செல்வதில்லை. கலகலவென நகைச்சுவை, அசத்தல் நடனத்துடன் அருமையாய் 5 பாட்டு, சண்டை காட்சிகள் என ஒரு ரெண்டரை மணி நேர பொழுதை போக்குவதே பிரதான நோக்கம். அதை சரியாய் பொதி செய்து தரத் தெரியாத இயக்குனர்களிடம் மாட்டி அவரும் கஷ்டப்பட்டு நம்மையும் இம்சைப்படுத்தியதே தன் தோல்விகளுக்கு காரணம் எனத் தெரிந்து கொண்டார் போலிருக்கிறது. அவர் ரசிகர்கள் அல்லாதவர்களும் ரசிக்கும் வகையில் சுமாராய் ஒரு படம் விஜயிடமிருந்து.

கதையெல்லாம் சொல்லி அலுப்படிக்க போவதில்லை. 7ம் அறிவு அளவுக்கு புதிதாக, நல்ல முடிச்சுள்ள கதையல்ல. ஒரு 100 படங்களிலாவது பார்த்திருக்க கூடிய தீவிரவாதிகளிடமிருந்து நாட்டைக் காக்க சூப்பர் ஹீரோ அவதாரம் எடுக்கும் சாமான்யனின் கதை. ஆனால் ரசிக்கும் விதமாக அதை கொடுத்த விதத்தில் ஏ.ஆர். முருகதாஸை பல மடங்கு விஞ்சியிருக்கிறார் ராஜா.

விஜய் வழமையான ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் இவற்றோடு நகைச்சுவையும் இயல்பாக வருகிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் வேகம். அவரது ரசிகர்களுக்கு இது தாராளம். நமக்கும் பெரிதாய் அலுக்கவில்லை(சில இடங்கள் தவிர்த்து). சலிப்பூட்டும் அவரது முந்தைய சாகசங்களை ஓரளவு தவிர்த்திருக்கிறார். பாராட்டுக்கள். 

ரெண்டு ஹீரோயினும் சும்மா. ஜெனிலியா ம்ம் பெரிதாய் இம்ப்ரெஸ் செய்யவில்லை. தங்கை கல்யாணத்திற்கு வந்த தேங்காய்கள் சிறுத்திருப்பதாய் விஜய் ஆதங்கப்படும் போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் குலுங்கி குலுங்கி வரும்போதும், விஜய்க்கு ஏதோ மருந்து கொடுத்து மேட்டர் பண்ண பார்க்கும் போதும் ஹன்சிகா வசீகரிக்கிறார்.


சந்தானம் எனக்கு பெரிய ஏமாற்றம் அவரை விட பராட்டா சூரி இதில் கவர்கிறார். எம்.எஸ். பாஸ்கர் அவ்வப்போது சொல்லும் ஒன்லைனர்களால் ரசிக்க வைக்கிறார். வில்லன்களுக்கு விஜய்யிடம் அடி வாங்குவது தவிர பெரிதாய் வேலையில்லை.

விஜய் ஆண்டனி பாடல்கள் கேட்கலாம் ரகம். அங்க இங்க சுட்டாலும் அனைவரும் ரசிக்கும் விதமாக படத்தை தந்திருக்கிறார் ஜெயம் ராஜா. இரண்டாம் பாகம் ரொம்பவும் போரடித்தது உண்மை ஆனால் தியேட்டரில் கேட்ட கைதட்டல்களும் விசில் சத்தங்களும் எல்லோருக்கும் அப்படியல்ல என்பதை புரிய வைத்தது. இருந்தாலும் சண்டைக் காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாமே ராஜா. விஜய் தூக்குடுவை ரீமேக்குவதாக இருந்தால் பிரபுதேவாவை விட ராஜாவை நம்பி கொடுக்கலாம். 


அப்புறம் இந்த படத்தை சலிப்பில்லாமல் என்னைப் பார்க்கச் செய்த ஏ.ஆர்.முருகதாஸுக்கு நன்றி. பிறகு அட்டு ஃபிகரை பார்த்துட்டு பார்த்தா சுமாரான ஃபிகரும் பேரழகியா தெரிவது போலத்தான் இதுவும். 

திங்கள், 22 மார்ச், 2010

என்னா கொடுமை இளையத் தளபதி இதெல்லாம்

You are the bows from which your children as living arrows are sent forth. என்றார் கலீல் கிப்ரான். ஆனால் நம் பெற்றோருக்கு இன்னமும் புரியாதது இதுதான். அவர்கள் தமது குழந்தைகளை அப்படியே தனது பிரதிகளாக வார்த்தெடுக்கவோ அல்லது பொருளாதார போட்டிகளில் தப்பிப் பிழைக்கத் தக்க எந்திரங்களாகத் தயார் செய்யவோதான் பிரியப்படுகின்றனர்.

ஏகாதிபத்திய வல்லரசுகள் உலகமயமாக்கம் எனும் பெயரால் இன்று மூன்றாம் உலக நாடுகளில் வாழும் மக்களின் மூளைவளத்தையும் தமக்கேற்றாற் போல் சுரண்ட வசதியாகவே இந்நாடுகளின் கல்வித் திட்டமும் அமைந்துள்ளது. நம் குழந்தைகள் தாங்கும் சுமை குறித்து எவரும் பெரிதாக கவலைக் கொள்வதில்லை. இதைப் பற்றி எல்லாம் பேசியோ எழுதியோ தீர்த்தவற்றைப் பற்றி யாரும் பெரிதாக அக்கறை படவில்லை.

இதைப் பற்றி மக்களுக்கு பிடிக்கும் விதத்தில் நிறைய மசாலா சேர்த்து ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் வந்தப் படம் த்ரீ இடியட்ஸ். அமீர்,கரீனா,போமன் ஹிரானி ஆகியோருடன் நம்ம மேடி நடித்தது.

ஆனால் அந்தப் படத்துக்கு வந்த சோதனையைப் பாருங்கள் படத்தை ரீமேக் செய்து நடிக்கப் போகின்றாராம் நம்ம இளையத் தளபதி. வழமையாக அவருக்குத் தோதான கதைகள் ஆந்திராவில்தான் அகப்படும் பெரும்பாலும் மகேஷ் பாபு நடித்தது. இம்முறை இவரிடம் மாட்டியிருப்பது அமீர் கான்.

இயக்குனர்
விஷ்ணுவர்தனாம் சோ அது பிரச்சினையில்லை டெக்னிக்கலி படம் நன்றாகவே இருக்கும் ஒரு ரிச்சான கலரில். அனுவர்தன் விஜயை அழகாக ஒரு காலேஜ் மாணவன் போல நிச்சயம் காட்டி விடுவார் தனது அழகழகான ஆடைத் தெரிவுகளின் மூலம். எல்லாவற்றையும் விட டைட்டிலும் தளபதிக்கு அத்தனை அழகாய் பொருந்துகிறது.

ஆனால்
படத்தில் அவர் அறிவுரை சொல்ல வாய்ப்பு அதிகம் அம்மாதிரியான காட்சிகளில் அவரது ரசிக சிகாமணிகளை திருப்தியுறச் செய்யவென எழுதப்படக் கூடிய வசனங்களையும் அப்போது அவரது நடிப்பையும் கொஞ்சம் கண்ணை மூடி கற்பனை செய்து பாருங்கள். ப்ளீஸ் விஜய் எங்களை விட்டு விடுங்கள். Roland emmerich படக் காட்சிகள் நிஜத்தில் நிகழ்வதை நாம் விரும்பவில்லை. தமிழ் கூறும் நல்லுலகு பிழைத்துப் போகட்டும்.

திங்கள், 14 டிசம்பர், 2009

வேட்டைக்காரனை எதிர்க்கத்தான் வேண்டுமா?


இலங்கை திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவர் ஜேக்சன் என்தனி இயக்குனர் ,மேடை நாடக நெறியாளர்,தொலைகாட்சி அறிவிப்பாளர் எனப் பன்முகங்களையும் கொண்டவர். ஒருமுறை நேத்ரா டிவியின் நான்காம் பரிமாணம் நிகழ்ச்சியில் கேள்வியொன்றுக்கு தான் உலகிலேயே சிறந்த நடிகர் என்று கருதுபவரும் சிறந்த இயக்குனர் என்று கருதுபவரும் தமிழ்நாட்டிலேயே உள்ளனர் என்றார். அவ்வாறு அவரால் சுட்டப்பட்டவர்கள் கமல் மற்றும் மணிரத்னம்.


ரஞ்சன் ராமநாயக்க சிங்கள சினியுலகின் சூப்பர் ஸ்டார், சப்ரகமுவ மாகாண எதிர்க்கட்சி தலைவர் ஒவ்வொரு முறை ரஜினி படங்களை ரீமேக்கி என்னைப் போன்றவர்களின் வயிற்றெரிச்சலுக்கு ஆளாகுபவர். ஒருமுறை அவரது பிரபலம் தொடர்பிலான கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் அவர் சொன்னது Popularity என்றால் என்னவென்று ரஜினி படங்களைத் திரையரங்கில் பாருங்கள் தெரியும் என்பதாக இருந்தது. இன்னொருமுறை தமிழகத்தில் ஏதோ ஷூட்டிங்கில் பங்குபற்றிய அவர் ரஜினி நடிக்கும் மண்ணில் நான் நடித்தேன் என்பதே பெருமை என இங்கு நெகிழ்ந்திருந்தார்.
இவ்வளவு ஏன் நாம் பெரிதாக Mind பண்ணாத சப்பை பிகர்களான பூஜா,மோனிகா போன்றோருக்கு எல்லாம் இங்குள்ளப் படங்களில் எல்லாம் Title role.


இராஜ் வீரரத்ன என்பவர் இங்குள்ள இளம் தலைமுறை இசைக்கலைஞர். ஒரு பாடகர்,Composer என்பதையும் தாண்டி நல்லதொரு Sound engineer இவரது mixing இல் வரும் பாடல்கள் அவற்றின் தொழிநுட்பநேர்த்திக்காகவே ரசிக்கப்படுபவை. ஒருமுறை சிங்கள டிவி நிகழ்ச்சியில் W.D. அமரதேவவுக்கான பாராட்டு விழா, ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்வு எதற்கு போவீர்கள் என்ற கேள்விக்கு இவர் சற்றும் யோசிக்காமல் தந்த பதில் ரஹ்மானின் இசை கச்சேரிக்கு. அமரதேவ லேசுப்பட்ட ஆளில்லை இலங்கையின் மிக மூத்த முதிர்ந்த இசைக்கலைஞர். இந்திய மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுப் பெற்ற ஒரே ஒரு இலங்கையர். ஆனால் இராஜின் பதிலால் இங்கு எவரும் உணர்ச்சி வசப்பட்டு பேசவில்லை. கலை அரசியல் இரண்டையும் வேறுப்படுத்தி பார்க்கும் மன முதிர்ச்சி அவர்களுக்குஇருக்கிறது.

ஆனால் இராஜ விஜய் ஆண்டனியோடு சேர்ந்து பங்காற்றுகின்றார் என்றவுடனே ஏராளம் எதிர்ப்புகள் இவ்விதமான எதிர்ப்புகளுக்கு எல்லாம் அஞ்சி நம் சமூகம் படம் பார்க்காமல் இருக்காது. ஏன் இலங்கையில் மட்டும் அறியப்பட்டிருந்த இராஜுக்கு இது நல்லதொரு விளம்பரமும் கூட . நான் மேற்சொன்ன சிங்களவருக்கு இருக்கும் பெருந்தன்மை ஏன் இல்லாமல் போனது நமக்கு? அதுவும் இது தொடர்பான பதிவுகளில் உள்ள வாசகங்களைப் பாருங்களேன் எத்தனை துவேசம். அவர் ராணுவ வீரர்களை பாராட்டி பாடல் பாடி விட்டாராம். தீர்க்கமான சந்தர்ப்பமொன்றில் தான் சார்ந்த தேசத்துக்கு அவர் செய்தது அது. நாமும்தான் அப்படியான விடயங்களைச் செய்தோம். இராஜ் வேண்டாம் என்கிறார்களே. சீமான் கூடத்தான் இரட்டை அர்த்தப்பட தம்பி எனப் பெயரிட்டு படமெடுத்தார். மாதவனும் புலியும் ஒன்றாய் உறுமுவது போல பானருடன் படம் இலங்கையிலும் திரையிடப்பட்டதுதானே. அதில் நடித்த பூஜா பின் சிங்களப் படங்கள் நடிக்க வில்லையா?


தமிழருக்காய் மேடைகளில் மௌன விரதமிருந்த பாரதிராஜா "கண்களால் கைது செய்" படமெடுத்த பின் படப்பிடிப்பில் தந்த ஒத்துழைப்புக்காக அரசு சார்பு அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுக்கும் ஏனையோருக்கும் நன்றி எல்லாம் தெரிவிக்கவில்லையா. அந்த படத்தில் சனத் குணத்திலக்க நடிக்க வில்லையா? என் ஞாபகம் சரியாக இருந்தால் பதிவர் லோஷன் அண்ணா அந்நேரம் பாரதிராஜாவை பேட்டிக் கண்டிருந்தார்.

இது எல்லாம் கலை ஐயா தயவு செய்து இதை அரசியலாக்காதீர்கள் நாம் தமிழர்கள் வெறுப்பு என்றால் மிக ஆக்ரோஷமாகக் காட்டுகின்றோம். சில நேரங்களில் ரொம்பவும் குழைந்து உணர்வு ரீதியான அடிமைகளாய் மாறி விடுகிறோம். இது மட்டுமில்லாமல் கல் தோன்றி மண் தோன்றா என்கிற உயர் மனோபாவமும் இருக்கின்றது ( அல்லது இது மித மிஞ்சிய தாழ்வுச் சிக்கலின் பிரிதொரு வகையான வெளிப்பாடு) . தனியே தமிழரின் வரலாறு,சாதனைகள், என்பவற்றை அவர்களது உயர் மனோபாவத்தொடு ஒப்பிட்டு ஆய்வுக்குட்படுத்தினால் நகைப்புக்குரியதாக இருக்கும் என்பது என் எண்ணம்.

வேட்டைக்காரன் பிடிக்கவில்லையா அதை நிராகரிக்க அவரவருக்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கும். பார்க்காமல் விடுங்கள். இவ்வாறான பிரசுரங்கள் எனக்கென்றால் உடன்பாடில்லை. கருத்து திணிப்புகள் நம் நிலைக்கு பிரதான காரணங்களில் ஒன்று. கிட்டத் தட்ட சுயச் சிந்தனையே மறந்து விட்ட நிலையில் இனியேனும் அவனை சிந்திக்க விடுங்கள் ஐயா. இதை விடுங்க சின்ன விடயம் அடுத்து ஜனாதிபதி தேர்தலில் பாருங்களேன் அவனுக்கு போடு இவனுக்கு போடுன்னு ஏக களேபரமாக இருக்கும்

அப்புறம் ஒன்று நானும் இராஜின் ரசிகன்தான் எனக்கு பிடித்த சிலப் பாடல்களின் தொடுப்பு. கீழே பாடல் மட்டுமல்ல காட்சியமைப்புகளைப் பாருங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறும்படம் போல அத்தனை அழகு. வரிகள் புரியா விட்டாலும் இசை மற்றும் காட்சிகள் பொருளுணர்த்தும். அதிலும் அந்த மூன்றாவது பாடலின் காட்சிகளை பாருங்களேன் எனக்கு ரொம்பப்பிடிக்கும். நான்காவது பாடல்தான் தங்கத் தாமரை ஆனது. இதிலே தினேஷ் கனகரத்தினம் அமைச்சர் புத்திரசிகாமணியின் மகன் Bone killer ஆகியோரும்தான் இதில் பங்கேற்றுள்ளனர் அப்ப அவர்களுக்கும் ஆப்பா?


http://www.youtube.com/watch?v=y7Rin2vAzSM

http://www.youtube.com/watch?v=oeOGAiz24RU

http://www.youtube.com/watch?v=TLigScK6C3g

http://www.youtube.com/watch?v=jHWlRsIKnv8

வியாழன், 26 மார்ச், 2009

படமெடுப்பது எப்படி Dr.விஜய் கௌதம் மேனனுக்கு ஆலோசனை




திரும்ப திரும்ப எத்தனை முறைப் பார்த்தாலும் சலிக்காத படங்களின் பட்டியலில் மின்னலே திரைப்படத்திற்கு உண்டு. படம் வெளிவந்த காலத்தில் தியேட்டரில் பிறகு டிவியில் என கணக்கு வழக்கில்லாமல் அப்படத்தை பார்த்திருக்கறேன். அதுவும் இலங்கை தேசிய தொலைக்காட்சி நேத்ரா டிவியில் வார இறுதி நாட்களில் அதிகம் போடப்படும் படம் இதுவாகத்தான் இருக்கும்.

காக்க காக்க பார்த்த போது இவர் எனக்கு ஒரு குட்டி மணிரத்னமாகத் தெரிந்தார். குட்டி குட்டி வசனங்கள் காரணமாக இருக்கலாம். ஐரோப்பிய வன்முறையை தமிழில் வழங்குபவர் என்ற குற்றச்சாட்டு இவர் மீது எழுந்தாலும் அந்த Hollywood பாணி விறு விறு திரைக்கதை என்னை வெகுவாய்க் கவர்ந்ததென்னவோ உண்மை.

வேட்டையாடு விளையாடுவில் தன் மனைவியின் சடலத்தைப் பார்த்து கமல் வழமைப் போல் "ஹா ஹா ............" எனக் கதறப் போகிறார் என எதிர்ப்பார்க்கையில் ஒரு வசனமும் கதறலும் இன்றி அவரை நடிக்க வைத்திருப்பாரே

வாரணம் ஆயிரம் ஒரு Biography அதுவும் ரொம்ப நீளம் ஆனால் எங்கேயாவது சலிப்புத் தட்டியதா. அது கௌதம் மேனன்.


அண்மையில் மாபெரும் இயக்குனரும் action நடிகர், " அப்பன் பண்ண தப்புல ஆத்தா பெத்த வெத்தல " போன்ற கலைத்துவமான பாடல்களை யாத்த பாடலாசிரியர், தற்போது இசையமைப்பாளர் என்ற பன்முகங்களையும் கொண்டவருமான இயக்குனர் பேரரசுவின் பேட்டி ஒன்றைக் காண நேர்ந்தது.

அதில் விஜய் பற்றி அவர் குறிப்பிட்டதுதான் ரொம்பக் கஷ்டமாய் போய்விட்டது. ஏற்கனவே அவரை அனைவரும் ஒரு கேலிப் பொருளாய் பார்க்கும் நிலையில் இவருக்கு தளபதி மேல் என்ன கோபமோ இதை வெளியில் எல்லாம் சொல்லி டாக்டரை பெருமைப் படுத்துவதாய் நினைத்து சிறுமை படுத்தியிருக்கிறார். அவரது punch dialog போலவே அவர் சீரியசாய் சொன்ன விஷயம் எனக்கு சிரிப்பாய் இருந்தது. உங்களுக்கு எப்படியோ படித்து பாருங்களேன்

கமர்ஷியல் பஞ்சாமிர்தம் கலக்கிக் கொடுத்தேன். அடுத்து ஆக்ஷன் ஜோதி ஏத்திட்டோம்ல...‘ காற்றில் கத்தி வீசிச் சிரிக்கிறார் டைரக்டர் பேரரசு. ஊர் பேரில் டைட்டில் வைத்து உறியடிக்கும் ஊரரசுவான பேரரசு, இப்போ டிக்கெட் எடுத்திருப்பது திருவண்ணாமலைக்கு. திரையில் கிரிவலம் வந்து கொண்டிருக்கும் திருவண்ணாமலை இயக்குநர் பேரரசுவுடன் ஒரு மினி பேட்டி.

இந்த மசாலாவை விட்டு வெளியே வரவே மாட்டீங்களா?

மசாலா பிடிக்காதவங்க யாராவது இருந்தா சொல்லுங்க... டைரக்டர் கௌதம் மேனன்கிட்ட திருப்பாச்சி, சிவகாசி டிவிடியைக் கொடுத்து இந்த மாதிரி கமர்ஷியலா படம் எடுங்கன்னு சொல்லியிருக்கிறார் விஜய். இதுக்காக கௌதம் மேனன் வருத்தப்பட்டிருக்கார் சார்.

நான் பக்கா லோக்கல் ஆளு. முழு டைரக்டர்ன்னு என்னைச் சொல்லிக்க மாட்டேன். இங்கிலிஷ் படம் இரான் படம்லாம் பார்க்க மாட்டேன். நான் எடுக்கிறது கொடுக்கிறது எல்லாமே அக்மார்க் உள்ளூர் லோக்கல் சரக்குதான். ‘இனிமேலாவது தமிழ் படம் எடுக்கட்டும்‘ங்கிற நல்ல எண்ணத்தில விஜய் என் பட டிவிடியைக் கொடுத்திருக்கிறார். உண்மையிலேயே இது எனக்குப் பெருமையான விஷயம். சொன்ன டயத்துக்குள்ளே படம் தயாரிப்பாளர் லாபம் பார்த்து சந்தோஷப்படணும் இதுதான் சார் என்னோட டார்க்கெட். நான் நல்லாயிருக்கேன்... தயாரிப்பாளர்கள் சந்தோஷமா இருக்காங்க... எனக்கு இது போதும். கை கூப்பி வழி அனுப்புகிறார் பேரரசு.

கௌதமுக்கு எப்படி இருந்திருக்கும்
ஒரு நல்ல எழுத்தாளரிடம் போய் " யோவ் என்னய்யா எழுதுற இந்த blog எல்லாம் வாசிச்சு எழுதக் கத்துக்கோ" என்று சொன்னது போலிருந்திருக்குமா




Related Posts with Thumbnails