ரஜினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரஜினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 15 ஜனவரி, 2011

சிறுத்தை - என் பார்வையில்


"அன்புக்கு நான் அடிமை" என்று பல வருடம் முன்பு தலைவர் நடித்த படம் ஒன்று பார்த்திருக்கிறேன். சிறுவயதில் தன் குடும்பத்தை பிரிந்து திருடர்களிடம் வளரும் பலே திருடனான ரஜினி ஒரு சந்தர்ப்பத்தில் தெரியாத்தனமாக  போலீஸ் அதிகாரியான தன் அண்ணனையே  கொலை செய்து விட்டு அந்த போலிஸ் வேடத்தில் அண்ணன் செல்ல வேண்டிய இடத்திற்கு அவர் செல்கிறார். அங்கே அராஜகம் செய்து வரும் கராத்தே மணி உள்ளிட்டோரின் கொட்டத்தை அடக்கும் ரஜினியை ஊரே கொண்டாடுகிறது. ஊருக்கு நல்லது செய்வதால் போலிசும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது. இறுதியில் சாகாமல் இருக்கும் அண்ணன் விஜயனும் தலைவரும் உண்மை உணர்ந்து சேர்வார்கள் சுபம்.


"சிறுத்தை " கிட்டத்தட்ட அதேதான். திருடனான ராக்கெட் ராஜா தன்னை போலவே உருவ ஒற்றுமை கொண்ட ஞானவேல் பாண்டியனின் மரணத்தின் பின்  அவனது இரு பெரும் பொறுப்புக்களான ஊராரை வில்லனிடம்ருந்து காத்தல், அவனது மகளுக்கு தந்தையாதல் ஆகிய இரு பொறுப்புக்களையும் சிரமேற் கொண்டு நிறைவேற்றி முடிப்பதே படத்தின் கதை. ஆனால் இதெல்லாம் நடப்பது படத்தின் இரண்டாம் பாதியில் . முதற் பாதியில் சந்தானத்தோடு சேர்ந்து திருடுவதும், தமன்னா இடுப்பைக் கிள்ளுவதுமாக கலகலப்பாக படம் நகர்கிறது. படத்தின் முதற்பாதி கலகப்பு என்றால் இரண்டாம் பாதி வேகம்.

படத்தை தனியொருவராய் தாங்குகிறார் கார்த்தி. இவ்வளவு காலமும் அலட்சியமான போக்குடைய ஒரு அழுக்குப் பையனாக மட்டுமே இருந்த கார்த்தி முதற்றடவையாக ஒரு கம்பீரமான போலிஸ் அதிகாரி வேடத்தில் அவரது மிடுக்கான நடிப்பிற்கு ஒரு சால்யூட். பருத்தி வீரனில் அமீர் சொல்லிக் கொடுத்ததை கப்பெனப் பிடித்து அதையே ரிப்பீட் பண்ணிக் கொண்டிருக்கிறார் என்ற என் எண்ணத்திற்கும் வேட்டு வைத்திருக்கிறார். ராக்கெட் ராஜா வழமையான கார்த்தி. ஆனால் ராக்கெட் ராஜா  ஞானவேல் பாண்டியனாக வருகையில் கலக்கலாக இருப்பதும் உண்மை. சந்தானம் முதற்பாதி கலகலப்புக்கு கார்த்தியோடு துணை நிற்கிறார். தமன்னாவின் இடுப்பும் ஆங்காங்கே நடிக்கிறது.


பாடல்கள் பெரிதாய் சொல்லுமளவுக்கு இல்லை. பின்னணி இசையும் அவ்வளவே. படத்தில் மசாலா நெடி ரொம்பவே தூக்கல். மூளையை கழட்டி வைத்து விட்டுத்தான் படம் பார்க்கவே ஆரம்பிக்க வேண்டும். ரெண்டரை மணி நேரம் டைம் பாஸ் பண்ண நினைப்பவர்கள் மட்டும் பார்ப்பதற்கு பொருத்தமான படம் சிறுத்தை.

வெள்ளி, 31 டிசம்பர், 2010

2010 இல் நான் ரசித்த திரைப்படங்கள்

2010 தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை சிறப்பாய் இருந்ததாக பேசிக் கொள்கிறார்கள். அதுவரை தமிழ் சினிமா கட்டிக் காத்த பாரம்பரியங்களை உடைத்த நந்தலாலா போன்ற படங்களும், உலக அரங்கிற்கு தமிழ் சினிமாவை இட்டுச் சென்ற எந்திரன் போன்ற படங்களும் இந்த வருடத்திலேயே வெளியாகின. கிட்டதட்ட 120 சென்ற வருடத்தில் வெளியானதாம். அதில் நான் பார்த்தது வெறும் 16 படங்கள் மாத்திரமே இந்தப் பதினாறில் எனக்கு ஏதோ ஒரு வகையில் பிடித்தது ஒரு 6 படங்கள் மட்டுமே. அவை கீழே

6 பாஸ் என்கிற பாஸ்கரன் 
சினிமாக்கள் ஒரு தர்க்கனூபூர்வமாய் ஏற்றுக் கொள்ளப்படத்தக்க களத்தில் மட்டுமே இயங்க வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் எனக்கு கிடையாது. பார்க்கும் இரண்டரை மணி நேரத்தில் அது என்னை உள்ளீர்த்துக் கொண்டால் போதும். அவ்வகையில் இந்த வருடத்தின் சிறந்த சிரிப்புத் தோரணம் "பாஸ் என்கிற பாஸ்கரன்". சந்தானத்தப் பற்றி சொல்லத் தேவையில்லை. ஆர்யாவுக்கும் அருமையாக டைமிங் காமெடி வருவது சிறப்பு.

5 அங்காடித் தெரு 
வலிந்து திணிக்கப்பட்ட சோகம், ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் அஞ்சலியின் மிகை நடிப்பு, மகேஷின் கொஞ்சமும் உணர்ச்சியற்ற நடிப்பு என்பவற்றை தவிர்த்துப் பார்த்தால் அருமையான படம். "கண்ணெதிரே தோன்றினாள்" படத்தில் "பட்டாம்பூச்சி உன் தோளில் இருந்துச்சு உனக்கு வலிக்குமேன்னுதான் " என வசனம் கேட்டப் போது சுஜாதாவா இப்படி என நொந்து போனேன். கிட்டத்தட்ட அதே உணர்வு "எறும்பு வாழும் காட்டில்தான் யானையும் வாழுது " என ஜெமோ வசனம் கேட்கையில். முழுமையான பார்வை

4 ஆயிரத்தில் ஒருவன் 

நிறையப் பேருக்கு படம் பிடிக்கவில்லை. அரசுரிமையை தியாகம்  செய்து உத்தமசோழருக்கு முடிசூட்டி வைத்த அருள்மொழிவர்மனின் (ராஜ ராஜா சோழன்) தியாகத்தையும்  கடல் தாண்டி சென்று படைத்த வீர வரலாறுகளையும் இன்றளவும் சிலாகிப்பவர்களால் சோழர்களை காட்டுமிராண்டியாக நரமாமிசம் உண்பவர்களாக காட்டியதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. சிலருக்கு ஆங்கிலப்படத்தை நிகர்த்த கணினி வரைகலை உத்திகள் இருக்கவில்லையே என்ற வருத்தம் இருந்தது. ஆனால் என்னளவில் இது தமிழின் ஆகச் சிறந்த முயற்சி. சென்ற வாரம் பார்த்தப் போதும் எனக்குப் பிடித்தே இருந்தது. திரைக்கதை இரண்டாம் பாதியில் நிலையில்லாமல் அலைவதொன்றே எனக்கு இருந்த ஒரே குறை.அப்புறம் வலிந்து திணிக்கப்பட்ட அந்த இந்திய ராணுவத்தின் காட்சிகள். மற்றும்படி செல்வாவிடம் இருந்து இன்னமும் எதிர்பார்க்கிறேன். என்னளவில் மணிரத்தினம்,பாலாவுக்குப் பிறகு தனக்கென ஒரு திரைமொழியைக் கொண்டிருப்பவர் செல்வராகவனே. முழுமையான பார்வை

3 . எந்திரன்

இந்தப் படம் எப்பேர்ப்பட்ட மொக்கையாக இருந்தாலும் கொண்டாடி இருப்பேன். ஆனால் சிறப்பாக அமைந்தது மகிழ்ச்சி. மற்றைய படங்களைப் போலல்லாமல் ஏதோ எங்கள் வீட்டு விசேடம் போல எதிர்பார்த்துக் கொண்டாடி மகிழ்ந்த ஒரு திருவிழா. 

2 . நந்தலாலா 
பாரதி வரிகளோடு மிஷ்கினின் இன்னுமொரு படைப்பு. "சித்திரம் பேசுதடி" பார்த்தப் போது மிஷ்கின் பற்றி எந்த ஒரு அபிப்பிராயமும் இல்லை. அஞ்சாதே பார்த்தப் பின்தான் எனக்கு மிஷ்கின் மிக முக்கியமானவராக தெரிந்தார். பலக் காட்சிகளில் நின்று  விளக்கமளிக்காமல் எம்மை யூகிக்க விட்டது பிடித்திருந்தது. ஆக நந்தலாலாவை அதிகம் எதிர்பார்த்தேன். ஆனால் படம் இலங்கையில் திரையிடப்படவே இல்லை. பிறகு DVD இல்தான் பார்த்தேன். குறைந்த வசனங்களும்  நிறைவான காட்சிகளுமாய் ஒரு அருமையான படம். கலைப் படங்கள் என்ற லேபிளோடு வருபவற்றில் பெரும்பாலானவை பொறுமையைச் சோதிப்பவை. ஆனால் சுவாரசியமான ஒரு சிறுகதைத் தொகுப்பை ஒரே மூச்சில் படித்து முடித்தது போன்ற ஒரு அலாதியான அனுபவத்தை தந்ததற்காகவே மிஷ்கினைப் பாராட்டலாம். ம்ம் படம் நிச்சயமாக ஒரு உள்ளார்ந்த சிலிர்ப்பைத் தரும் அழகியல் அனுபவம். எங்கே சுட்டால் என்ன மனதைத் தொட்டால் சரி என்ற எண்ணம் எண்ணம் கொண்டவன் என்பதால் கிக்குஜிரோவின் தழுவல் என்பது படத்தை ரசிக்க இடையூறாய் இல்லை.

1 . விண்ணைத் தாண்டி வருவாயா 

இந்த வருடத்தில் என்னை மிகக் கவர்ந்த படம். மைனா மைனா என்றொருப் படத்தை நிறையப் பேர் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். டிவி யில் ஒரிருக் காட்சிகள் பார்த்த போது வெகு அபத்தமாய் இருந்தது. அப்படியெல்லாமா  காதலிப்பார்கள். ஆனால் நான் பார்த்த அனுபவித்த காதல் விண்ணைத் தாண்டி வருவாயாவில் இருந்தது. அது பாட்டில் போய் கொண்டிருக்கும் வாழ்வில் தன பாட்டில் வருவது காதல். வெகு அன்னியோன்னியமான ஒரு காதல் ஜோடியின் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்தது போன்ற ஒரு அருமையான இயல்பான படம். கெளதம் வாசுதேவ் மேனனிடமிருந்து. ம்ம் காதல் ததும்பி நிரம்பி வழிகிறது படம் முழுவதும். காதல்,காதல்,காதல் படம் முழுக்க இது மட்டுமே.சின்ன சின்னக் காட்சிகளும் ரொம்பவே சுவாரசியம்.

"இதெல்லாம் விடு பொண்ணு எப்படி வோர்த்தா? "
"உயிரக் கொடுக்கலாம் சார்"
"சியர்ஸ்"

"நீ இருபத்தொரு வருஷமா வாழ்ந்த ஊர்ல நான் இருபத்து மூணு வருஷம் வாழ்ந்திருக்கேன் Which means நான் உன்னை விட ரெண்டு வயசு பெரியவ"

"சொத்தை கூட எழுதிக் கொடுப்பாரு ஆனா என்னை கட்டித்  தர மாட்டாரு "
"அப்ப எழுதித் தரச் சொல்லு"

"சார் Love favor the brave ன்னு சொன்னீங்க இல்ல ஒரு சின்ன correction,  love favor the intelligence"

இப்படி  சின்ன  சின்னதாய் அழகான வசனங்கள் எல்லாம் முன்பு மணி படங்களில் மட்டுமே பார்த்தது.  படம் பூராகவும் தன் இசையால் ஆக்கிரமித்திருந்தார் இசைப்புயல். முழுமையான பார்வை இங்கே 

குட்டி,தமிழ்ப்படம்,மதராசபட்டினம்,கோவா, சிங்கம், ராவணன், வ குவார்டர் கட்டிங், உத்தமபுத்திரன், மன்மதன் அம்பு என்பன நான் பார்த்த ஏனைய படங்கள். மதராசப் பட்டினம் ஓரளவு நல்லப் படமே ஆனால் டைட்டானிக் கையும் லகானையும் காட்சிக்கு காட்சி ஞாபகப்படுத்தியது பலவீனம்.  குட்டி தனுஷ் மற்றும் பாடல்களுக்காகவும் தமிழ்ப்படம் லொள்ளு சபா பார்ப்பது போல சிரிப்புக்ககவும் பார்க்கக் கூடிய ரகம். சிங்கம் திரையரங்குக்கு சென்றதால் கடனே எனப் பார்த்து தொலைக்கலாம். கோவா, குவார்ட்டர் கட்டிங் ரொம்பவும் சுமார். உத்தமப்புத்திரன் எழுந்து ஓடி விடலாம்  என்ற உணர்வு இரண்டாம் பாதியில் விவேக் வந்ததால் இல்லாமல் போனது.



எதிர்பார்த்து சென்றவனை ஏமாற்றியவர்கள் என்றால் இவர்கள்தான். ராவணனில்  மணி  தவிர மற்ற எல்லாமே இருந்தது. மன்மதன் அம்பில் கொஞ்சம் அளவுக்கதிகமாகவே கமல் இருந்தது என்பதே குறை. ராவணனில் இசை,ஒளிப்பதிவு,நடிப்பு என்பனவும் மன்மதன் அம்பில் மாதவன் நடிப்பு, வசனங்கள் என்பனவும் ரசிக்கக்கூடியவை. ராவணனில் கார்த்திக் அனுமானாம் அதை காடுகிறேன் பேர்வழி என மணி கொஞ்சம் குரங்கு சேட்டை செய்திருக்க கமலும் போனில் ஏதேனும் வழிக் கிடைக்கும் என பேசிக்கொண்டே செல்கையில் முட்டுச் சந்தில் முட்டிக் கொண்டு நிற்பதாயும்  நடுத்தெருவில் நிற்பதாயும் பாலச்சந்தர் பாணி குறியீடுகள் எல்லாம் வைத்திருந்தார். நீங்களுமா கமல்?


ஞாயிறு, 7 நவம்பர், 2010

ஒரு ரஜினி ரசிகனின் பார்வையில் கமலின் சிறந்த 10 படங்கள்

கமல், உலகின் ஆகச் சிறந்த நடிகர் எனவும் இவர் மட்டும் ஹோலிவூட்டில் பிறந்திருந்தால் டேவிட் ஹோப்மன், அல் பசினோ, டோம் ஹான்க்ஸ் வகையறாக்கள் வீட்டுக்கு மூட்டை கட்டியிருக்க வேண்டுமெனவும் அவர்தம் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். அது சற்று மிகைப்படுத்தப் பட்ட கூற்று எனினும் இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் அவரும் ஒருவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

மிகச் சிறு வயதில் நான் பார்த்த கமல் படங்கள் எல்லாம் அருமையான மசாலாக்கள். உயர்ந்த உள்ளமும் தூங்காதே தம்பி தூங்காதேயும் மறக்க இயலாத படங்கள். உயர்ந்த உள்ளத்தில் அந்த ஆட்டோ சேசிங் காட்சி இன்னமும் கண்முன் நிழலாடுகிறது. அப்போது ரஜினி கமல் பேதம் எல்லாம் கிடையாது. தொன்னூறுகளில் ரஜினி பித்து தலைக்கடித்திருந்த நேரம் கமல் படங்கள் எப்போதும் தோல்வியுற வேண்டுமென நினைப்பேன். ஆனால் இப்போதெல்லாம் அப்படியில்லை.ரஜினி- கமல் என்ற வரிசை இனி ஒரு போதும் கமல்- ரஜினி என மாறி விடாது என்ற நம்பிக்கையினாலிருக்கலாம்.
உலக நாயகன், கலைஞானி, சூப்பர் ஆக்டர் எனப் பல பட்டங்கள் இவருக்கு வழங்கப் பட்டாலும் எனக்குப் பிடித்ததென்னவோ காதல் இளவரசன்தான். சத்யாவில் வரும் "வளையோசை" பாடல் போதும். இவர்தான் என்றென்றைக்குமான காதல் இளவரசன் எனச் சொல்ல.

சரி இனி என் பார்வையில் கமலின் சிறந்தப் பத்து படங்கள் எனக் கருதுபவற்றை வரிசைப்படுத்தியுள்ளேன்இது என் தனிப்பட்ட விருப்பம் மட்டுமே. உங்கள் கருத்துகளையும் கீழே பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்

10. மும்பை எக்ஸ்பிரஸ்

கமல் என்ற நடிகனை விட்டு விடுங்கள். ஒரு திரைக்கதாசிரியராகவும்  வசனகர்த்தாவாகவும் கமல் என்னைப் பெரிதும் ஈர்த்தப் படம் இது. வாத்தியார் சுஜாதா சொன்னது போல முதல் காட்சியிலேயே கதை ஆரம்பித்து விடும். கதாப்பாத்திரங்களுக்கிடையே நிலவும் குழப்பங்கள், கிரேசி மோகன் பாணியில் வசனங்கள் என இந்த ஸ்டைலில் அவர் நிறையப் படங்கள் எடுத்திருந்தாலும் இது அவை அனைத்தையும் விட நேர்த்தி மிக்கது என்பது என் கருத்து. பசுபதிக்குள் இருந்த நகைச்சுவை நடிகனை வெளிக்கொணர்ந்த படம். கட்டுகோப்பான திரைக்கதை என்பதாலேயே என்னை ஈர்த்தது. இது நிச்சயம் எங்கும் சுட்டப் படம் அல்ல என்று நம்புகிறேன். ஆனால் தாராளமாக ஹோலிவூட்டிலும் முயன்று பார்க்ககூடிய கதை.


9. வேட்டையாடு விளையாடு

 
கமல் அற்புதமானதொரு நடிகர். என்ன சில நேரங்களில் நன்றாக நடிப்பதோடு கொஞ்சம் அதிகமாகவும் நடித்து விடுவார். நஸ்ருதீன் ஷா அலட்டாமல் செய்த common man பாத்திரத்தை வலிந்து உருவாக்கிக் கொண்ட ஒரு செயற்கை தனத்தோடு செய்தது ஒரு உதாரணம். ஆனால் கமல் வெகு இயல்பாக நடித்த பாத்திரம் வேட்டையாடு விளையாடின் ராகவன் பாத்திரம். பெரும்பாலும் கமல் தன்னை முழுமையாக கெளதம் மேனனிடம் ஒப்படைத்திருப்பார் என நினைக்கிறேன்.

8. ஹேராம்

சில காட்சியமைப்புகளில் இயக்குனர் கமலும் பல காட்சிகளில் நடிகர் கமலும் தனித்து தெரிந்தாலும் திரைக்கதை கொஞ்சம் பலவீனமானதாக இருந்ததாக உணர்வு. கல்கத்தாக் காட்சிகளில் தெரியும் குறும்புத்தனம், வன்செயல்களின் போது கண்களில் காட்டும் பயமும் பதட்டமும், இரண்டாம் முறை பெண் பார்க்கையில் மெல்லிய சலனம் எட்டிப் பார்த்தாலும் அதை மறைக்கும் அலை பாயும் மனம், காந்தியை கொல்லக் கிளம்புகையில் கண்களில் காட்டும் வன்மம்(இதில் அதுல் குல்கர்னி கமலையும் மிஞ்சியிருப்பார்என அசத்தியிருப்பார். கற்றது தமிழில் தன் கொலைகளைப் பற்றிச் சொல்லும் ஜீவா அது புணர்ச்சியை ஒத்த மகிழ்வைத் தரக் கூடியது எனப் பொருள் பட ஒரு வசனம் பேசுவார். கமல் ஹேராமில் வசுந்தராதாசை துப்பாக்கியாக நினைத்துப் புணரும் காட்சி எத்தனை அழகான ஒரு குறியீடு. முத்தக் காட்சிகள் கூட கவிதையாகவே இருக்கும்.

7. குணா


stockholm syndrome சுவீடனின் ஸ்டொக்ஹோல்மில் உள்ள ஒரு வங்கியை கொள்ளையடிக்கச் சென்ற கொள்ளையர்கள் பிணைக்கைதிகளாக பிடித்திருந்தவர்களுக்கு சில நாட்களின் பின் அக்கொள்ளையர்கள் மீது ஏற்பட்ட பிடிப்பினை வைத்து உளவியலில் பாவிக்கப் பட்டு வரும் பதம். கிட்டத்தட்ட இதே கதைதான் குணாவும். விபச்சாரியான  தாய்க்குப்  பிறந்து அச்சூழலிலேயே வளரும் மனநலம் பிறழ்ந்த குணசேகரன் தன்னை சிவமாக எண்ணுவதோடு  தன்னை அபிராமி ஆகிய சக்தி வந்தடைவாள் எனவும் நம்புகிறான். அபிராமி என அவனால் கடத்தப் படும் பெண்ணுக்கு காலவோட்டத்தில் குணா மீது வரும் காதலே திரைப்படம். படம் நிச்சயமாக  ஒரு கிளாசிக்  இன்னமும் 20 வருடங்களுக்கு பின் பார்த்தாலும் நிச்சயம் பேசப்படும்.

6. மூன்றாம் பிறை 

 
ஷோபாவின் பிரிவு தனக்கு ஏற்படுத்திய துயரத்தை திரையில் கொண்டு வர பாலு மகேந்திரா எடுத்த திரைப்படம். நன்கு பக்குவப்பட்ட ஒரு பாத்திரம் கமலுக்கு, ஆசிரியர் பாத்திரம் அல்லவா. ஸ்ரீதேவியை வெகு சிரத்தையோடு பார்த்துக் கொள்வதும், ஒரு கணம் கோபம் கொண்டு பின் சமாதானம் செய்வதும் வெகு அருமையாக நடித்திருப்பார். கிளைமாக்ஸ் இல் கமலுக்கு ஏற்படும் வலியை நம்மையும் உணரச் செய்வது படத்துக்கு கிடைத்த வெற்றி. சிறு வயதில் தம்பியையும் பிறகு எங்கள் சித்தியின் மகளையும் தூங்கச்  செய்ய இந்தப் படத்தில் வரும் கண்ணே கலைமானே பாடலைத்தான் பாடுவேன். நாளை என் பிள்ளைகளுக்கும் இதைப் பாடலாம். காலத்தை வென்ற அருமையான தாலாட்டுப் பாடல்

சனி, 2 அக்டோபர், 2010

எந்திரன் என் பார்வையில்


 ஒரு பத்து வருடங்களுக்கு முன் "ஷங்கர்- கமல் - ஏ.ஆர்.ரஹ்மான்-சுஜாதா,  மீண்டும் இணையும்  இந்தியன் கூட்டணி " எனப் பத்திரிகையொன்றின் சினிமாப் பகுதியில் ஒரு ஓரமாக அறிவிப்பை பார்த்ததிலிருந்தே இப்படத்தை எதிர்ப்பார்த்திருந்தேன்.. கமல் நடிக்கவில்லை என்ற போதே சப்பென ஆனது. பிறகு அந்நியன் ஆரம்பித்த காலத்தில் அந்த கதைதான் இது என தகவல் வர விக்ரமும் பரவாயில்லை என்றுதான் நினைத்தேன். பிறகு அஜித், ஷாருக் எனப் பயணித்த இக்கதை கடைசியாக வந்துச் சேர்ந்திருப்பது இக்கதைக்கு மிக மிகப் பொருத்தமானவரிடம். பத்து வருடங்களுக்கு முந்தைய கதை இன்று எப்படி ரசிகர்களை கவரப் போகின்றது என்பதையெல்லாம் தகர்த்திருக்கின்றது எந்திரன். படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை அதகளப்படுத்தியிருக்கிறார்  ரஜினிகாந்த். 

ஷங்கர் பிரமாண்ட இயக்குனர் என மக்கள் அவருக்களித்த அங்கீகாரமும்  சுஜாதா என்ற விஞ்ஞானம் அறிந்த சுவாரசிய(பரப்பிலக்கிய)  எழுத்தாளரின் நட்பும் தமிழில் ஒரு sci-fi   திரைப்படத்தை எடுக்க வேண்டுமென்ற கனவை தூண்டி விட்டிருக்க வேண்டும். நிறைய  சுஜாதா  பாதிப்போடு  இன்று திரையில் விரிந்திருக்கிறது ஷங்கரின் பத்து வருட உழைப்பு.
படம் வர முன்னரே பல தளங்களிலும் பேசப்பட்ட அதே கதைதான். ஆனால் கடைசி வரை அதை சலிப்புத் தட்டாமல் கொண்டு  சென்றதில்தான் இருக்கிறது ஷங்கரின் வெற்றி. நிச்சயமாய் இந்தப் படத்தின் காட்சியமைப்புகளுக்காகவும் அனைவரையும் ஒருங்கிணைத்து நெறிப்படுத்துவதற்காகவும் ஷங்கர் உழைத்திருக்கக் கூடிய உழைப்பு படத்தில் Dr.வசீகரனின் உழைப்புக்கு இணையானதாய் இருக்கும். 

ஷங்கருக்கு என் இனிய இயந்திராவும் மீண்டும் ஜீனோவும் ரொம்பப் பிடிக்குமென நினைக்கிறேன். பல இடங்களில் இவ்விரு நாவல்களும் எட்டிப் பார்க்கிறது. சிட்டி அப்படியே ஜீனோவின் மனித வடிவம். உணர்வுகளற்ற இயந்திர அறிவு ஜீவி. சனா கிட்டத்தட்ட நிலா விகல்பமில்லாத அழகி, பல சந்தர்ப்பங்களில் எதிர்க்கும் திராணியற்று சுயநலமாய் முடிவெடுக்கும் சிபி போல டாக்டர் வசீ.  கண்களிலே ப்ரொஜெக்டர், ஹோலோ விம்பங்கள், புத்தகங்களை நொடியில் ஸ்கேன் செய்து மெமரியில் பதிந்து பின் விடை சொல்லி அசத்துதல் இன்னும் பல அதில் இருந்ததுதான். அதுவும் கிளைமாக்ஸ் அப்படியே மீண்டும் ஜீனோ. 

ஐஷை ஓவியமாய்த் தீட்டும் காட்சியும் ரோபோக் கூட்டத்துக்குள் கருப்பாடைக் கண்டுப் பிடிக்கும் காட்சியும் ஐ ரோபோட்டில் பார்த்தது.  Bicentennial Man போல என்று சொல்பவர்களுக்கு ரோபோ மனித உணர்வு பெறுதல் என்ற ஒரு ஒற்றுமையைத்  தவிர இரண்டுக்கும் ஒரு தொடர்பும்  இல்லை. அதிலும் ராபின் வில்லியம்ஸ் போன்ற ஒரு கலகலப்பான நடிகரை வைத்துக் கொண்டு அந்தப் படத்தை பெரும் இழுவையாக இழுத்திருப்பார் இயக்குனர் க்றிஸ் கொலம்பஸ். அவ்வகையில் ரஜினியை எப்படி முடியுமோ அப்படி அட்டகாசமாக காட்டியிருக்கிறார் ஷங்கர். 

ரஜினி மிக இயல்பாக நடிக்கக்கூடிய தேர்ந்த நடிகர். கூடவே படத்தில் அவரது பாத்திரப்  பெயருக்கேற்ப எளிதில் எவரையும் வசீகரிக்கக் கூடியவர். கண்களில் பயம்,காதல்,அர்ப்பணிப்பு,கோபம் போன்றவற்றை எல்லாம் காட்டும் இயல்பான மனிதனாக வசீ, கலகலப்பும் நகைச்சுவையுமாய் சிட்டி I , நக்கலும் நையாண்டியும் நிறைந்த வில்லத்தனத்துடன்  சிட்டி II என மூன்று வெவ்வேறு பரிமாணங்களில் கலக்கி இருக்கிறார் தலைவர். நிச்சயம் விருதுக்கு தகுதியானது எனினும் மசாலா படம் என்பது இடிக்கிறது. சரி இந்தியனில் கமலுக்கு கொடுத்தார்கள் அதற்கு எள்ளளவும் குறையாத நடிப்பு கிடைக்குமென நம்புவோம். ரஜினியை தவிர்த்து இன்னுமொருவர் இதை இதனிலும் சிறப்பாகச் செய்ய முடியுமெனச் சொன்னால் சிரிக்க வேண்டியதுதான். இதுவல்லாமல் சிட்டி தன்னை போல சிலரை உருவாக்கி விட கடைசி 40 நிமிடங்களில் திரையெங்கும் பல நூறு ரஜினிக்கள். ரஜினி ரசிகனுக்கு அற்புதமானதொரு முன்கூட்டிய தீபாவளி விருந்து. 

ஐஸ்வர்யா ராவணை விட வயது குறைவாகத் தெரிந்தாலும் பல காட்சிகளில் தலைவருக்கு அக்கா போல் இருக்கிறார். ரஜினியே வில்லனாய், காமெடியனாய் பிரகாசிப்பதில் டேனி,கருணாஸ்,சந்தானம் எல்லாம் காணாமல் போகின்றார்கள். ஒவ்வோர் காட்சியில் மறைந்த நடிகர் கொச்சின் ஹனிபா மற்றும் கலாபவன் மணி வருகின்றார்கள்.

வசனங்கள் படத்துக்கு பெரிய பலம்.
"உயிரோட இருக்காருல்ல?   வயரோடு இருக்கார்"
" அவ உடம்புல உடை இல்ல , ஆனா உயிர் இருக்கு"
கொச்சின் ஹனிபாவுடன் வரும் காட்சியில் உள்ள வசனங்கள்
"உன்னோட பாய் பிரண்டா இல்ல, டோய் பிரண்டா"
"காதலிச்சா நட்டு கழண்டுடும் "
மேற்சொன்னவை ரொம்பவும் நான் ரசித்தவை, மூவரில் எதை எதை யாரெல்லாம் எழுதினார்கள் எனத் தெரியாத நிலையில் சுஜாதா டச் இருப்பதாகப் பட்டது ஆனால் இவை கார்க்கியின் வசனங்கள் என நினைக்கிறேன் (அவரது ட்வீட்டில் கிடைத்த தகவல்) அட்டகாசம் கார்க்கி.

ஷங்கர் படத்தில் கலை, ஒளிப்பதிவு, இசை எல்லாம் உயர் தரத்தில் இல்லாவிட்டால் தான் ஆச்சரியம். ஆக இவை வழமைப் போலவே அசத்துகிறது. பின்னணி இசை அமைக்கும் காலங்களில் இரண்டு மணி நேரம்தான் தூங்கினேன் என்ற ரஹ்மானின் கூற்றில் கொஞ்சமும் மிகையில்லை. கலக்குகிறார் இசைப் புயல்.

இடைவேளைக்கு பின் படத்தின் ஆரம்பக் காட்சிகளில் ஏற்படும் சிறு தொய்வும், ரங்குஸ்கி கொசுக் காட்சியும் கிலிமாஞ்சாரோ பாடலை நுழைக்கவென வைத்த கலாபவன் மணி  காட்சியும் திருஷ்டிகள்.

மற்றும் படி நீண்ட நாட்களுக்கு அப்புறம் ஒரு மகிழ்வான திரையனுபவம். கட்டாயம் திரையரங்கு சென்று பார்க்கலாம். செல்லும் போது குழந்தைகளுடன் செல்வது அல்லது நாமே குழந்தைகளாய் செல்வது படத்தை இன்னமும் ரசிக்கச் செய்யும். Dot

சனி, 12 டிசம்பர், 2009

ரஜினி என் பார்வையில் சிறந்த 10 படங்கள் பாகம் 2

நெற்றிக்கண்


சிவப்பு ரோஜாக்கள், சொல்லத்தான் நினைக்கிறேன் போன்ற படங்களில் கமல், மன்மதனில் சிம்பு என பல play boy பாத்திரங்கள் பார்த்திருப்போம். அவர்கள் இளமையும் சில அசாத்திய திறமைகளும் கொண்டவர்களாக அதில் சித்தரிக்கப் பட்டிருப்பார்கள். ஆனால் அறுபதைக் கடந்த ஒருவர் இளம்பெண்களை எல்லாம் மடக்குகிறார் என்ற கதைக்கு நம்பகத் தன்மையை ஏற்படுத்த வேண்டுமென்றால் அவர் எத்தனை அசாதாரணமான கவர்ச்சியைக் கொண்டிருக்க வேண்டும். அதற்கு நம்ம தலைவரை விட்டால் பொருந்திப் போகக் கூடிய இன்னொருவர் இருந்தால் சொல்லுங்கள்


நல்லவனுக்கு நல்லவன்


அதிரடி நாயகன் ரஜினி கொஞ்சம் அமைதியாகவும் நடித்திருப்பார். தலைவருக்கு வயதான வேடமும் கோட் சூட்டும் போட்டு விட்டால் ஒரு தனி மிடுக்கு வந்து விடும் அதற்கு இந்தப் படமும் விதி விலக்கல்ல. எதிர் நாயகனாக கார்த்திக். முத்துராமனும் போக்கிரி ராஜாவில் வில்லனாய் நடித்திருப்பார் அப்பா,மகன் இருவருமே ரஜினிக்கு வில்லனாகி இருக்கிறார்கள். தலைவருக்கு சிறந்த
நடிகருக்கான Film fair விருது கிடைத்த படம்.

தளபதி


தனிப்பட்ட ரீதியில் எனக்கு பிடித்த ரஜினிப் படம். பல ரஜினி படங்கள் அவருக்காக மட்டுமே பார்க்கத்தக்கது. இதிலோ மம்முட்டி,இளையராஜா,சந்தோஷ்சிவன்,மணிரத்னம் எனப் பெரும் படை. தலைவர் அதற்கு தளபதி. சினிமா ஒரு Visual media வசனங்கள் அல்லாமல் பல விடயங்கள் காட்சிகளிலேயே சொல்லப் பட வேண்டியது அவசியம். சிவாஜி காலத்தில் மேடை நாடகங்கள் அப்படியே எடுக்கப் பட்டாலும் அவ்வாறில்லாமல் ஒரு சினிமா பார்க்கும் உணர்வைத் தந்த தமிழ்ப் படம். பல காட்சிகளில் வசனமே இல்லாமல் Close up ஷாட்களில் வேறு தலைவர் நடித்திருப்பார்.சின்ன சின்ன முகப்பாவனைகளால் மட்டும். இந்த நடிகரை சரியில்லை என்று சொல்பவர்கள் மேலும் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.

அண்ணாமலை


இப்போது பார்த்தாலும் Fresh ஆகா இருக்கும் படம். எப்படியும் முப்பது தடவைகளுக்கு மேல் பார்த்திருப்பேன். ஒரு commercial படம் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு சிறந்த உதாரணம். ஜிப்பா அணிந்து பட்டை அடித்த அந்த கெட் அப்பை எத்தனை பேர் கொலை வெறியோடு மீள போட்டு சந்தோஷப் பட்டிருக்கிறார்கள். 96 தேர்தலிலே தமிழ் நாட்டையே கலக்கிய கெட் அப் அல்லவா? சுரேஷ் கிருஷ்ணாவின் சிறந்தப் படைப்புகளில் ஒன்று. முதல் பாதி நகைச்சுவை பின்பாதி அதிரடி என சிறப்பாய் போகும். படத்தில் எதுவும் அவசியமின்றி எதுவும் இருக்காது. படத்தின் வேகத்திற்கு தடை ஏற்படுத்தக் கூடிய ரஜினி குஷ்பூ காதல் காட்சிகளை நகைச்சுவையாய் ஒரு சில காட்சிகளிலே சாமர்த்தியமாய் முடித்திருப்பார் இயக்குனர். அது எப்படி கல கலவென பேசும் அப்பாவித் தனத்தையும் பிறகு ஒரு சீரியசான முகத்தையும் இவரால் மட்டும் இத்தனை இலகுவாய் கொண்டு வர முடிகிறது. இந்த ரகசியத்தைப் பிடிக்கத்தானே பல வான்கோழிகள் சிறகு விரித்து ஆடுகின்றன. இதை எல்லாம் உணராதவர் போல பரத்தை வைத்து சுரேஷ் கிருஷ்ணா தன் படத்தை தானே கொலை செய்தது ம்ம்.

பாட்ஷா

Same Suresh krishna இப்போதெல்லாம் நிறைய நடிகர்கள் இந்தப் படப் பாதிப்பில் நடிப்பை மறந்து விட்டு கூட்டமாய் நடப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். அண்ணாமலைக்கு சொன்னவை நிறைய இந்தப் படத்திற்கும் பொருந்தும். நிறைய பேரின் All time favourite இல் இந்தப் படம் கட்டாயம் இருக்கும். "ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி" காலத்தை வென்ற பஞ்ச். ரகுவரன்,ரஜினி compination இல் காட்சிகள் அசத்தல் ரகம். ரஜினியை தெரியாத ஒரு குழந்தை படத்தைப் பார்த்தால் அடுத்த நாள் அதன் வாயில் ஆட்டோக்காரன் பாடல்தான்.

முதல் பாகம் கிளாஸ் என்றால் இரண்டாம் பாகம் மாஸ் என்று நினைக்கிறேன். இவ்வாறான கலவையான ரசனைகள் ஒவ்வொருவருக்கும் தேவைதான். ரஜினி ஒரு சிறந்த பூரணமான நடிகர் இன்றைய பிறந்த நாளில் அவரிடம் ஒரே விண்ணப்பம்.
மசாலாவையும் தாண்டி அற்புதமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தக் கூடியவர் ரஜினிகாந்த். ஆரம்பத்தில் மசாலாப் படங்களிலேயே நடித்த அமிதாப் சூர்யவம்சத்துக்கு பிறகு தன் பாதையை மாற்றியது போல தலைவரிடம் இருந்தும் அவர் விருதுகளை வாங்கிக் குவிக்கும் அந்த அற்புதமான Second innings ஆரம்பிக்க வேண்டும்அவ்வளவே.

ரஜினி என் பார்வையில் சிறந்த 10 படங்கள்

ரஜினி


என்னதான் பதிவர்கள் வருத்தெடுத்தாலும் தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் இவர்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் தேவையில்லை. சினிமா பற்றிய தீவிரமான பிரக்ஞை இல்லாத காலத்தில் திரைப்படங்கள் எனக்கு அறிமுகமான ஆரம்ப கால கட்டத்தில் அப்பாவின் மடியிலமர்ந்து நான் திரைக்கூடங்களில் பார்த்த பல படங்களில் இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கும் பல படங்கள் இவர் நடித்தது. என் தந்தை காலமான பின் தியேட்டர் சென்று படம் பார்க்கும் வழக்கம் குறைந்து போனாலும் நான் வளர்ந்து நண்பர்களோடு மீண்டும் திரையரங்குகளுக்கு செல்லும் காலம் வந்த போது(கிட்ட தட்ட பத்து வருடங்களுக்கு பின்) பலரின் ஏகோபித்த தெரிவாக அதே பொலிவோடு அவரே திரையை நிறைத்திருந்தார்.

எல்லோரையும் போல ஆரம்ப காலக் கட்டங்களில் அவரது ஸ்டைல் நடிப்புக்கும் சண்டை காட்சிகளுக்கும் மட்டுமே நானும் ரசிகனாயிருந்தேன். இவரது படம் பார்த்து நண்பர்களுக்கு கதை சொல்வது அலாதியான சந்தோஷத்தை தருவதாக இருந்தது. சற்றே வளர்ந்து நடிகர்களின் உடல் மொழியையும் வசன வெளிப்படுத்துகையையும் ஊன்றி கவனிக்க தொடங்கிய காலத்திலும் ரஜினி எனக்கு ஒரு நல்ல நடிகராகவே காட்சி தந்தார்.

அப்படி அவர் நடிப்பால் என்னைக் கவர்ந்தப் பத்துப் படங்கள். படங்கள் வெளிவந்த கால வரிசைப்படி பிறகு தரத்தை வைத்து எல்லாம் தலைவர் படங்களை வரிசைப்படுத்த இயலுமா

மூன்று முடிச்சு


நம்பியார், P.S. வீரப்பா என் ரசிகர்கள் வில்லனைக் கண்டு பயந்திருந்த சந்தர்ப்பத்தில் மிக ஸ்டைலிஷாக குத்தல் பேச்சுக்களால் மூன்று முடிச்சில் ஸ்ரீதேவியையும் மிரட்டி ரசிகர் மனங்களை கொள்ளைக் கொண்ட முதல் வில்லன் இவராய்தானிருக்கும்.கொஞ்சம் வன்மம்,காமம்,பொறாமை,குற்றவுணர்வு,எப்போதாவது தலைதூக்கும் கொஞ்சமே கொஞ்சம் மனிதாபிமானம் எனக் கலவையான உணர்வுகளை கலந்துக் கட்டிஅடித்திருப்பார்


புவனா ஒரு கேள்விக்குறி


படமே நாம் எதிர்பார்க்காததுதான்
பிறகு பால் வடியும் முகமுடைய சிவகுமார் வில்லன் அதுவரை பெண்களை மிரட்டிய கருப்பு ரஜினி நல்லவர் படம் ஆரம்பிக்கும் போது ரஜினிதான் சிவகுமார் வேடம் செய்வதாக இருந்ததாம் அப்போது பெரிய நடிகரான சிவகுமார் சொன்னாராம் வில்லன் வேடமென்றால் இந்த மனுஷன் ஸ்கோர் செய்து விடுவார். அதை நான் செய்கிறேன் என. ஆனால் எல்லாம் எதிர்மாறாய் நடந்து விட்டது.

முள்ளும் மலரும்


இதுவும் தங்கைப் பாசத்தைப் பற்றிய படம்தான். ஆனால் பாசமலர் அபத்தங்கள் இதிலில்லை. இன்றளவும் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனராக கருதப்படும் மகேந்திரனின் படம். படம் வெளிவந்தக் காலத்தில் மகேந்திரன் சொன்னது ரஜினி அளவு இயல்பாக நடிக்கக் கூடிய நடிகர் இந்தியாவிலேயே கிடையாது. கையிழந்த ரஜினியை சரத்பாபு வேலையை விட்டு நிறுத்தும் போது கண் கலங்க குரல் பிசிற ஆனாலும் ஈகோவை விட்டுக் கொடுக்காமல் " ஒரு கையும் ஒரு காலும் இல்லனாலும் இந்த காளி பொழச்சுக்குவான் கெட்டப் பய சார் அவன்" என்பாரே இன்று ரஜினி வழியில் சூப்பர் ஸ்டார் ஆகிறோம் என்று சொல்லும் நடிகர்களில் யாரேனும் ஒருவர் இதைப் போல நடித்தால் ம்ம் வாய்ப்பிருப்பதாய் எனக்குப்படவில்லை

ஜானி


இதுவும் மகேந்திரன் படம்தான். ஆனால் முள்ளும் மலரும் போல் அல்லாமல் சில வர்த்தக சமரசங்கள் உண்டு. தன் தாய்க்காக சட்டத்துக்கு புறம்பாக,மனசாட்சிக்கு விரோதமாக காரியமாற்றும்,தன்னை ஒத்த ரசனைகளைக் கொண்ட ஸ்ரீதேவியை காதலிக்கும் மென்னுனர்வுகளைக் கொண்ட இளைஞன் ஜானியாகவும்
தனிமையில் உழலும், சுயநலம் மிகுந்த,கஞ்சத்தனமான, பெண்களை வெறுக்கும் வித்தியாசாகராகவும் தலைவர் இரு வேடங்களில் நுணுக்கமான வேறுபாடுகள் காட்டிநடித்திருப்பார்.
படத்தின் உச்சக்காட்சியில் ஸ்ரீதேவிக்கு தன் திருட்டுத் தனம் தெரியும் என்பதால் அவரை பார்க்கையில் வெட்கம் கலந்து சிரிப்போடு குனிந்துக் கொள்வார். ரிஷியில் சரத் இதை கொப்பி செய்ய முயன்றிருப்பார் அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ் வெறுத்துப்போய்விடும்.

தில்லு முல்லு


இந்தப் படம் பார்க்க பிரத்தியேகமான மனநிலை எல்லாம் தேவையில்லை. எப்போது பார்த்தாலும் மனதில் குதுகலம் ஒட்டிக் கொள்ளும். இன்று வரை வெளியான மிகச் சிறந்த காமெடி படங்களில் இதுவும் ஒன்று. வசனங்கள் படத்தின் பெரிய பலம் கூடவே தேங்காய் ஸ்ரீனிவாசன். தலைவரின் Dialogue delivery மிகச் சிறப்பாய் இருக்கும்.அங்கங்கே மிகை நடிப்பு எட்டிப் பார்த்தாலும் comedy படத்தில் அதை தவிர்க்க முடியாது பலதடவை சலிக்காமற் பார்க்கச் செய்யும் படம்


ஒரு ஐந்து இதோ இருக்கிறது டைப் செய்து முடித்து அடுத்த பதிவாக இன்னும் சற்று நேரத்தில் பாகம் ரெண்டு
Related Posts with Thumbnails