காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 அக்டோபர், 2011

சுவரில் கிறுக்கியவை

சும்மா இருக்க முடியாமல் என் ஃபேஸ்புக் சுவரில் அவ்வப்போது கிறுக்கியவை



உனக்கு புரியாதென்றப் போதும்
தொடர்கிறேன்
கவிதை எழுதுவதையும்
உன்னைக் காதல்
செய்வதையும்……..

தண்ணீருக்கு பதிலாய்
கண்ணீரால் துவைக்கிறேன்
நீ வாங்கித் தந்த
ஆடையை

கொடுத்ததெல்லாம்
திரும்பக் கேட்டவள்
மறந்து விட்டாள்,
அவள் நினைவுகளையும்
தந்த முத்தங்களையும்
திரும்பப் பெற

உன்னால்
இழப்புகளேதுமில்லை
வரவுதான்
இன்னமும் மிச்சமிருக்கிறது
உன் நினைவுகளேனும்


உன்னிடம் பேசிக்களித்த
நீண்ட இரவுகள்
இன்னமும் தொடர்கின்றன
என்ன? சம்பாஷணையெல்லாம்
என் தலையணையுடன்தான்

இப்போதுதான் புரிகிறது
எப்போதும் உடனிருப்பேன்
என நீ சொன்னதன் அர்த்தம்
அழகாய் எதைப்பார்த்தாலும்
உன் ஞாபகம்

காம்ப்ளான் அருந்தாமலே
தினம் வளர்கிறது
 உன் மீதான என் காதல்

வியாழன், 6 ஜனவரி, 2011

லவ் மூடில் ட்வீட்டியவை

ஏனோத் தெரியவில்லை சில நாட்களாகவே இப்படித்தான். போனைத் தவிர யாருடனும் பேசப் பிடிக்கவில்லை. சாப்பாடெல்லாம் அரையுங் குறையுமாய், பகல் நேரத்தில் கூட வெளியே மின்குமிழை ஒளிர விடுகிறேன், குறுந்தொகை, குறளில் குறிப்பாய் மூன்றாம் பால், கண்ணம்மா பாடல்கள் எல்லாம் மீள்வாசிப்பு செய்கிறேன். சினிமாக் காதல் பாடல் வரிகளை facebook இல் Status ஆக இடுகிறேன். விட்டால் தபூ ஷங்கர்தான் தமிழின் ஆகச் சிறந்தக் கவி எனச் சொன்னாலும் சொல்வேன். அப்படியான ஒரு பொழுதில் எக்கச்சக்க லவ் மூடில் ட்வீட்டியவை

துணிக்கடைகளில் தொங்கும் அழகற்ற ஆடைகள் கூட உன் உடல் தழுவிய அடுத்தக் கணமே அழகாகிவிடுகின்றன சீக்கிரம் சொல் நான் எப்போது அழகாவதாம்

காலை எழுந்ததும் யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொள்கிறேன். நேற்றிரவு அலைபேசி வழியே நீ கொடுத்த முத்தத்தின் ஈரத்தை

வழமையிலும் குளிர்வதாய் அங்கலாய்த்தாய் போர்வையால் போர்த்துகிறேன் நீ அணைக்கச் சொல்வது புரியாமல்

கவிதைகளுக்கும் உனக்கும் காததூரமென்றாய் அப்படியென்றால் குறுந்தகவல் எனும் பெயரால் நீ அனுப்புபவைகளுக்கு பெயர் என்ன

ஏதேனும் பரிசாய் தர பிடித்ததைக் கேட்டால் குழந்தைகள் என்கிறாய் நேரில் பார்க்கையில் ஒதுங்கிச் சென்றால் எப்படித் தருவதாம்

கட்டிப்பிடித்துறங்கும் தலையணைக்கு உன் பெயர் வைத்தது தப்பாய் போயிற்று. உறை மாற்றும் போது செல்லமாய் சிணுங்குகிறது

அப்படியே நண்பர்கள் ட்வீட்டரில் என்னைத் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் இந்த லிங்கை க்ளிக்கி

ஞாயிறு, 25 ஜூலை, 2010

டேய் என்னை அனத்த விடுங்கடா 5


தேவதைகள்
இமைப்பதில்லைதான்
அதற்காக
விருப்பம் கேட்டாலும்
சரி என கண்சிமிட்டாமல்
இல்லை
எனத் தலையையா
ஆட்டுவது

உன் அப்பாவும் கவிதை
எழுதியிருக்கிறாராமே
தரச் சொல்
படித்துவிட்டு நானே
வைத்துக் கொள்கிறேன்

கோயிலைக் கடக்கும்
பக்தனைப் போல்
அனிச்சையாகவே
எழுந்துக் கொள்கிறேன்
பேருந்து
உன் வீட்டைக்
கடக்கும் போது

புதன், 23 ஜூன், 2010

டேய் என்னை அனத்த விடுங்கடா 4


உன்னைப்
பார்க்கும் போதெல்லாம்
செத்துப் போகிறேன்
தகிக்கும் உன் கண்களில்
எரிந்தோ
உன் கன்னக்குழியில்
புதைந்தோ

என்னைப் பார்த்தால்
கண்சிமிட்டுகிறாய்
அழகாக
நானோ எனக்கு
இமைகள் இருப்பதையே
மறந்துபோகிறேன்

கவிதைகளுடன் கடந்து
போகிறது வாழ்வு
உன் நினைவுகள்
மட்டும் உடனிருப்பதால்
கவிதையாகவே இருந்திருக்கும்
நீயும் உடனிருந்திருந்தால்

பேசாமல் கடவுளை
நம்பித் தொலைக்கலாம்
போலிருக்கிறது
நீ மறுத்ததற்கான
பலியை தூக்கி
அவர் மேல்
போட்டு விடலாம்

சனி, 29 மே, 2010

டேய் என்னை அனத்த விடுங்கடா 3


தயவு செய்து நீ வாய் வைத்து
அருந்திய போத்தலில்
எனக்கு தண்ணீர் தராதே
இத்தனை தித்திப்பாய்
நான் டீ கூட குடிப்பதில்லை

இரண்டு நிறுத்தங்கள்
தாண்டிய பின் பேரூந்திலிருந்து
இறங்குகிறேன்
உன் நினைவுகள்
தடைப்பட்டு விடாமல்

கணநேர தனிமையையும்
நீதான் நிரப்புகிறாய்
உன் நினைவுகளால்
அதற்காக கழிப்பறைக்குள்ளுமா
மணிக்கணக்காய் அமரச்செய்வது

புதன், 19 மே, 2010

டேய் என்னை அனத்த விடுங்கடா 2


குன்றும் குழியுமான
பாதைகளில் கூட
பிரயாணிக்க
பிரியப்படுகிறேன்
உன் கன்னக் குழியில்
விழுந்தெழுந்தப் பின்


உன்னுடன் பேசுகையில்
உன் தோள்களுக்குப் பின்
சிறகுகள் இல்லையென்பதை
நிச்சயித்துக் கொள்கிறேன்
இல்லையென்றால்
ஒரு தேவதையுடன்
பேசுகிறோமோ என
சந்தேகமாய் உள்ளது


மனசாட்சி கேள்வி
கேட்கிறது
ச்சே!
நீயெல்லாம் நாத்திகனா
ஒரு தேவதையை நோக்கி
தவமிருக்கிறாய்


எவ்வளவு வேகமாய்
புரண்டாலும்
விரைவில் விடிவதேயில்லை
உன் நினைவுகளுடன்
நத்தையாய் நகர்கிறது
இரவு



வெள்ளி, 7 மே, 2010

டேய் என்னை அனத்த விடுங்கடா


தேவதைகள் வெண்ணுடையில்
இருந்திருக்கலாம்
சிறகுகள் சகிதம்
கிரேக்க புராணங்களிலும்
பாரதிராஜா படங்களிலும்

நான் பார்த்தவளோ அப்படியில்லை
பின்னாமல் விட்டக் கூந்தல்
நெற்றியில் குங்குமக் கீற்றுடன்
பல நேரம் சல்வாரிலும்
சில நேரம் skirt and blouse இலும்தான்

என்ன
சமயங்களில் ராட்சசியாகிறாள்
குழி விழச் சிரித்து
கொலை செய்தே

அவ்வப்போது சாபமுமிடுகிறாள்
இரவுத் தூக்கம்
இல்லாமற் போகக்கடவதென

அவசரமாய் அவள் நிழற்படம் தேவை
தேவதை என்பது கற்பனையாம்
சொல்லும் என் நண்பர்களிடம்
காட்ட வேண்டும்


இனி அவ்வப்போது இப்படி புலம்பும் வாய்ப்புகள் அதிகம் சகித்துக் கொள்ளுங்கள் நண்பர்களே

சனி, 27 பிப்ரவரி, 2010

விண்ணை தாண்டி வருவாயா = இசை + இளமை + காதல்

வெகு அன்னியோன்னியமான ஒரு காதல் ஜோடியின் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்தது போன்ற ஒரு அருமையான இயல்பான படம். கெளதம் வாசுதேவ் மேனனிடமிருந்து. ம்ம் காதல் ததும்பி நிரம்பி வழிகிறது படம் முழுவதும். காதல்,காதல்,காதல் படம் முழுக்க இது மட்டுமே.

அது பாட்டில் போய் கொண்டிருக்கும் வாழ்வில் தன பாட்டில் வருவது காதல். காதலை அடையும் முயற்சியில் வரும் இம்சைகள்தான் எத்தனை அப்படியான சந்தர்ப்பங்களில் ஊரில் எத்தனையோ பெண்கள் இருக்கையில் ஏன் இவளைக் காதலித்தோம் எனத் தோன்றுமல்லவா? அப்படி ஒரு மலையாள கிறித்தவ குடும்பத்தில் பிறந்த ஜெஸ்சியை காதலிக்கும் ஹிந்து இளைஞன் கார்த்திக் தனக்குத்தானே கேட்டுக் கொள்ளும் கேள்விதான் படமே


ம்ம் படத்தின் கதை ரொம்ப சிம்பிள் உங்களனைவருக்கும் தெரிந்ததுதான் வழமையான கெளதம் படங்களை போன்றே த்ரிஷாவை முதன் முதலாய் பார்க்கும் சந்தர்ப்பத்திலேயே காதலில் விழுகிறார் சிம்பு. சில பல முயற்சிகளின் பின் முதலில் மறுத்த த்ரிஷா பின் கௌதமின் சரித்திர பிரசித்திப் பெற்ற " I Think I'm in love with you" சொல்கிறார். பின் வீட்டார் எதிர்க்க கதை கெளதம் மேனனின் இஷ்ட Location அமெரிக்காவுக்கு எல்லாம் பயணித்து கடைசியில் சேர்ந்தார்களா? இல்லையா என்பது கிளைமாக்ஸ்.

சிம்புவைப் பார்க்க ஆச்சரியம் எல்லாம் எழவில்லை. அவர் திறமையாளர் என்பது தெரிந்ததுதான். ஆனால் இந்த படம் தரப்போகும் வெற்றியின் மிதப்பில் பழைய குருடி கதவைத் திறடி என விரல் சுத்தாமல் இருக்க வேண்டும். முதன் முதலில் காதல் வயப்படும் போது காட்டும் பரவசம், த்ரிஷாவை impress செய்வதற்காக எடுக்கும் முயற்சிகள், முதன் முதலில் பேசும்போதுக் காட்டும் தயக்கம், அரிதாகத் தலைக்காட்டும் கோபம், மெல்லிய சோகம் அனைத்தையும் முகத்திலேயே கொண்டு வந்திருக்கிறார். இதுவெல்லாம் இல்லாமல் அநியாயத்திற்கு அழகாய் வேறு இருக்கிறார். அதிலும் கணேஷ் வீட்டில் இவர் த்ரிஷாவுடன் பேசும் காட்சியில் கொஞ்சம் தாடி வளர்ந்திருக்கும். அப்படியே அவர் அப்பாவைப் போல் அத்தனை அழகு

த்ரிஷா ம்ம் ஓகே. எனக்கு ரொம்பவும் பிடித்த நடிகையில்லை. இந்தப் படத்திலும் பிடிக்குமளவு ஏதும் செய்து விடவில்லை. ஆனால் கொடுத்த வேலையைக் குறைவில்லாமல் செய்திருக்கிறார். ரொம்பவும் மெலிந்து கண்ணுக்கு கீழான கன்ன எலும்புகள் காலர் எலும்புகள் எல்லாம் தெரிய அதற்கு கீழும் ஏது சொல்லிக் கொள்ளும் படி பெரிதாய் இல்லை. இதனால்தானோ என்னவோ கௌதமும் நான் அவள் Front ஐப் பார்த்ததை விட back ஐப் பார்த்ததுதான் அதிகம் என வசனம் வேறு வைத்திருக்கிறார்.

இவர்கள் தவிர படத்தில் சொல்லும்படியான பாத்திரம் சிம்புவின் வயதான நண்பராக வரும் கணேஷ் என்றப் பாத்திரம். இவரை காக்க காக்கப் படத்தின் கமராமேன் என்கிறார்கள். எனக்குத் தெரிந்து காக்க காக்க படத்தின் கமராமேன் R . D . ராஜசேகர். படத்தில் timing ஆக இவர் அடிக்கும் comment க்கள் சிறப்பை உள்ளன. சிம்புவும் இவரும் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் போது சிம்பு அடிக்கடி கேட்கும் கேள்வியை இவரே சிம்புவிடம் " இவ்ளோ பொண்ணுங்க இருக்கும் போது நீ ஏண்டா ஜெஸ்ஸிய லவ் பண்ணுன? " எனக் கேட்கும் போது அரங்கமே சிரித்தது.

கமரா மனோஜ் பரமஹம்சா இப்போதுதான் இவர் பெயரை கேள்விப் படுகிறேன். கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் எனும் அளவுக்கு காட்சிகள் அவ்வளவு அழகு. என்ன close up காட்சிகளில் த்ரிஷாவை கொஞ்சமேனும் மெனக்கெட்டு இளமையாய் காட்டியிருக்கலாம். எடிட்டிங் வழமைப் போல அன்டனி. குறையேதும் எனக்குத் தெரியவில்லை. நிறையப் பார்வையாளர்கள் இரண்டாம் பாதியில் சத்தமிட்டாலும் எதையும் வெட்டத் தேவையில்லை என்பது என் கருத்து.

நம்பி வந்தால் இரண்டரை மணி நேர entertainment க்குத் தான் உத்தரவாதம் என்பதை மீள ஒருமுறை நிருபித்திருக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன். ரெண்டு வருடமா தமிழ் படத்தை இங்கிலிஷில் எடுப்பாரே அவரா? என தன்னையே கிண்டலடித்துக் கொள்ளும் அவர் ராஜபார்வையில்ருந்து இவரது மின்னலே வரை வழக்கிலிருக்கும் சர்ச் வெடிங் கிளைமாக்ஸ், தற்கொலை செய்துக் கொள்வதாய் மிரட்டும் தந்தை போன்றவற்றையும் பகடி பண்ணியவாறே தன படத்தில் சேர்த்திருக்கிறார். வழமையான அவரது கதை சொல்லும் பாணியிலான narrative ஸ்டைலிலேயே கதை நகர்கிறது. சிம்பு த்ரிஷாவைத் தான் காதலிப்பதற்கான காரணத்தைக் கேட்கும் போது முதல் படம் வரும் சொல்கிறேன் என்பார். பிறகு த்ரிஷாவிடமே சிலம்பரசன் த்ரிஷாவை பற்றி சொல்வதும் அது சொல்லப் படுவது எதில் என்பதும் புத்திசாலித்தனமான சுவாரசியம். சிம்பு கதை சொல்ல ஆரம்பிக்கும் அதே வசனங்களில் படம் முடியும் படியான வட்டமான திரைக்கதையும் அருமையாயத்தான் இருக்கிறது.

வழமையாக டைரக்டர் பற்றி இறுதியில்தான் சொல்வார்கள். நான் அவரைப் பற்றி முதலில் சொல்லி விட்டு இறுதியில் இவரைப் பற்றி சொல்லக் காரணம். இவரது இசையத் தவிர்த்து விட்டு இந்தப் படத்தைக் கற்பனை செய்தும் பார்க்க முடியாது. ச்சும்மா புகுந்து விளையாடியிருக்கிறார் இசைப் புயல்.
காதலில் விழுந்த கணத்தின் பரவசம் ஒரு கொண்டாட்டமான துள்ளாட்டமாக ஹோசன்னவில் ஆரம்பிக்க அவள் அழகை பிரமிக்கும் ஓமனப் பெண்ணே ஒரு கனவை போல் மிதக்கச் செய்கிறது. காதலியை உடன்பட வைக்கும் போராட்டம் தட தட என கண்ணில் கண்ணை பாட்டில். அடுத்து ஸ்ரேயா கோஷலும் இசைப்புயலும் பிரிவையும் ஏக்கத்தையும் உணர்த்தும் மன்னிப்பாயாவில் உருக பின் சர்ச் கல்யாணங்களில் வரும் இசை, நாதஸ்வர இசை எல்லாம் கோர்த்த ஒரு கல்யாண பரவசம் அன்பில் அவன் பாடலில். பாடல்களைத் தவிர்த்து விட்டு படம் எடுக்கலாமே என்ற வாதத்தை எல்லாம் தவிடு பொடியாக்கியிருக்கிறார் இசைப் புயல். படம் பார்த்தவர்கள் மனதை விட்டு சொல்லுங்கள் இவரைத் தவிர்த்து இன்னுமொருவர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்க முடியுமா?

படத்தில் குறைகள் பெரிதாய் இல்லை. என்ன சிம்பு படத்தில் சண்டை வேண்டுமென்பதற்காகவோ என்னவோ த்ரிஷாவின் அண்ணன் கூட்டி வரும் நான்கு ரௌடிகளுடன் சண்டையிடுகிறார். வாரணம் ஆயிரத்தில் கதையைக் கொண்டு செல்ல திடீரென சூர்யாவுக்கு ராணுவத்தில் சேரும் ஆசை வந்தது போல யதார்த்தமான படத்தில் சிம்பு பத்து பேரை அடிப்பதை ஞாயப்படுத்த அவர் boxer என்று சொல்வது (லாஜிக்காமாம் ) மட்டும் கொஞ்சமாய் இடித்தது. கேரளாவில் நாலு நாளாய் சுற்றிய பின் கொஞ்சம் மூளையைப் பாவித்துதான் சர்ச்சில் த்ரிஷாவைக் காண்கிறார். ஆனால் அமெரிக்காவில் படம் எடுக்கப் போனவர் அங்கு அவரை சந்திப்பதை Just coincident என ஒத்துக் கொள்ள முடியவில்லை.

படம் கட்டாயம் பார்க்கலாம். எனக்குப் பிடித்தது. மனதை என்னவோ செய்தது. காரணம் அது என் கதை. கெளதம் மேனன் End card போடும் போது அது தன்னுடைய கதை என்பது போல முடிக்கிறார். படம் பார்த்த என் நண்பர்கள் பலர் தம் கதை என்கிறார்கள். so படத்தைப் பாருங்கள் இது உங்கள் கதையாகவும் இருக்கலாம்.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

அடித்து துவைக்கவேனும் ஒரு காதலி - My sassy girl


காதலித்திருக்கிறீர்களா? இல்லையென்று சொல்லும் வெகு சொற்பமானவர்கள் இங்கேயே கழண்டுக் கொள்ளுவது உத்தமம். எஞ்சியவர்களில் சில பேர் காதலை ப்ரொபோஸ் செய்யும் முயற்சியில் இருந்த போது காதலி லேசாக முறைத்ததற்கே "போடி நீயும் உன் முகரையும்" என்று இந்தப் பழம் புளிக்கும் கதையாய் திரும்பி நடையைக் கட்டியவர்களா? இந்தப் படம் உங்களுக்குப் பைத்தியக்காரத்தனமாய் தோன்றலாம் (அதுதான் உண்மையும் கூட).

இப்போது எஞ்சியிருப்போரைப் பற்றிதான் எனக்குத் தெரியுமே. ஒரு நாள் சிரித்து இனிக்கப் பேசும் காதலி (அதாவது நீங்களாக சொல்லிக் கொள்வது) மறுநாள் நீங்கள் யாரென்றே தெரியாதது போல இருக்கும் பார்வையின் மர்மம் புரியாமல் தலையைப் பிய்த்துக் கொள்வீர்கள். அவளது குறைந்த பட்ச அங்கீகாரத்துக்காக நீங்கள் செய்யும் காரியங்கள் அவளால் வெகு எளிதாக அலட்சியப் படுத்தப்படும் போது சொரணை என்பது கொஞ்சமாவது எட்டிப்பார்க்க வேண்டுமே ம்ஹ்ம் அசடு வழிய மறு நாளும் தொடர்வீர்கள். திடிரென I LOVE YOU என SMS வரும் அவளோடு செட்டில் ஆகும் வாழ்க்கைப் பற்றி கலர் கலராய் கனவுகள் கண்டு விட்டு அவளிடம் செல்லும் போது "அய்யய்யோ இது அவருக்கு அனுப்ப வேண்டியது சொறி" என ஒற்றை வார்த்தையில் முடிப்பாள். இத்தனைக்குப் பிறகும் குடித்தழிவதும் புகை வளையங்களாய் ஊதித் தள்ளுவதும் நீங்கள்தானே ஒழிய அவளை வெறுக்கவே முடியாது. ஏன் என்று மனதிற்குள் கேட்டுப் பார்த்தால் காரணம் காதல் என்றுதான் தோன்றும் இதையும் " இல்லப்பா காதலை எல்லாம் உணர நீ இன்னும் வளரனும் இது வெறும் Infatuation " என்று சொல்லி விட்டு அவளுக்கு சரியான காலத்தில் வந்தக் காதலை கொண்டாடிக் கொண்டிருப்பாள். இத்தனைக்கும் பிறகு அவளை என்ன செய்ய தோன்றும்????? வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் அதிகமாய்க் காதலிக்கலாம்.

இதேதான் நடக்கிறது நம்ம ஹீரோ Gyeon-woo வுக்கும். பெற்றோருக்கு கட்டுப்பட்ட அமைதியான சுபாவம் கொண்ட அப்பாவியான இளைஞன். ரயில் நிலையமொன்றின் platform இல் நன்றாக குடித்து விட்டு தள்ளாடிய படி ரயிலில் அடிபடப் போகும் இளம்பெண்ணை தெரியாத்தனமாய் காப்பாற்றுகிறான். ரயிலுக்குள்ளும் அடாவடியாய் நடப்பவளிடமிருந்து தள்ளியே நிற்கிறான். இருந்தாலும் விதி விளையாடுகிறது. இவனைப் பார்த்து Honey என சொல்லி விட்டு மயக்கமாகிறாள். பிடித்தது ஏழரை சனி எல்லோரும் இவனை அவளது காதலன் என நினைப்பதால் உப்புமூட்டை தூக்கி கொண்டு போய் ஒரு லொட்ஜில் அவளுடன் தங்குகிறான். அத்தோடு விட்டால் பரவாயில்லை.

அடுத்தடுத்த
நாட்களில் இவனை தேடி வந்து இம்சிக்கிறாள். அவள் எழுதிய திரைக்கதைகளை கஷ்டப்பட்டாவது வாசிக்க வைப்பது. அவளது வகுப்பறைக்கு வந்து பூ கொடுக்கச் சொல்வது இப்படி கட்டாயப் படுத்தி செய்ய வைக்கிறாள். மறுத்தால் ரொம்ப சிம்பிள் அடி உதை துவைத்தெடுத்து விடுவாள். அவளது ஹை ஹீல்ஸ் காலனியை இவனை அணியச் செய்து நடு ரோட்டில் தன்னைத் துரத்திப் பிடிக்கச் சொல்கிறாள். அடிப்பதை பந்தயமாக கொண்டு ஒரு போட்டி. முதலில் அவள் தோற்க செல்லமாய் நெற்றியில் சுண்டுகிறான். அடுத்து இவன் தோற்க அத்தனை பேர் முன்னிலையிலும் இவன் காலரைப் பிடித்து இரண்டு கன்னத்திலும் மாறி மாறி பளார் பளார். பேசாமல் விட்டுத் தொலையலாம்தானே நம்மைப் போலவே அவனும் நினைத்தாலும் முடியவில்லை காரணம் நான் மேலே சொன்ன அந்தப் பாழாய்ப் போனக் காதல்.

பிறிதொரு நாளில் பெற்றோர் அவளுக்கு பார்த்து வைத்திருப்பவனோடு Dating சென்ற இடத்தில் இவனும் வர அவள் பாத்ரூம் போன நேரம் பார்த்து இவனிடம் அவளைப் பற்றிக் கேட்கும் மாப்பிளையிடம் அவளுக்குப் பிடித்தமானவனாய் இருக்க 10 Rule களை சொல்கிறான். அடி வாங்கினாலும் வலிப்பதை காட்டிக் கொள்ளாதே, வலிக்கா விட்டால் வலிப்பதை போல நடி இத்யாதி இத்யாதிகள் அதைக் கேட்டு உருகிப் போகின்றவள் இவனைத் தேடி ஓடுகிறாள்.(பார்த்தது போல் இருக்கா இதைத்தான் SMS இல் சுட்டு இருந்தார்கள்). இவன் மேல் தனக்கும் பீலிங்க்ஸ் இருக்கா என குழப்பமாய் இருப்பதாய் சொல்பவள் தான் அவனுக்கு சொல்ல விரும்புவதையும் அவன் தனக்கு சொல்ல விரும்புவதையும் கடிதமாய் எழுதி ஒரு முட்டை வடிவ போத்தலில் இட்டு மலையுச்சி ஒன்றின் மேலிருக்கும் மரத்தின் கீழ் புதைக்கிறார்கள். இரண்டு வருடம் கழித்து வந்து வாசிப்பதாயும் அப்போதும் ஏதேனும் பீலிங்க்ஸ் மிச்சமிருந்தால் காதலிப்பதாயும் ஏற்பாடு. இரண்டு வருடம் கழித்து பார்த்தால் ஹீரோ மட்டும் வந்திருக்க அவளைக் காணோம். பொறுமையிழப்பவன் கடித்தத்தை எடுத்துப் படித்தால் இறந்துப் போன அவளது முன்னாள் காதலன் போல இவன் இருந்ததால்தான் Honey என்றாளாம். அவனுக்கு கொடுத்த இம்சைகளெல்லாம் தன பழைய காதல் ஞாபகங்களை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ளத்தானாம். அவன் அப்படி எல்லாம்தான் அவர்கள் காதலிக்கும் காலத்தில் செய்தானாம். "என்னா கொடுமை சரவணன் இதெல்லாம்" என நாம் சந்திரமுகி பிரபு கணக்காய் தலையிலடித்துக் கொள்ள அதற்கப்புறம் அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதை Youtube இலோ வேறேதும் தளத்திலேயோ 2001 ஆம் ஆண்டு வெளிவந்த My sassy girl கொரியத் திரைப்படத்தைப் பார்த்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஹாலிவுட்,பாலிவுட் அட நம்ம தமிழ்ப்படம் அளவுக்கு கூட ஒரு ரிச்னெஸ் இருக்காது. ரொம்ப யதார்த்தமான கதையோ அல்லது உயர்ந்த கலானுபூர்வ அனுபவத்தைத் தரும் படைப்போக் கிடையாது. புனிதமெனக் கூறப்படும் காதலின் மகத்துவம் கூறி பார்வையாளர்களை உணர்ச்சிவசப் படச் செய்யும் இன்னுமொரு மெலோட்ராமா. மிகையுணர்வை வெளிக்காட்டும் நடிப்பு, கொஞ்சமும் யதார்த்தமற்ற காட்சிகள், பார்வையாளனை திருப்திப் படுத்தவெனவே திணிக்கப் பட்ட திருப்பங்கள், இறுதியில் சுபம் என ரொம்பவும் வழமையான படமாயிருந்தாலும் அதெல்லாம் படம் பார்த்து முடிந்து யோசித்தால் மட்டுமே உறுத்துகிறது. மற்றும் படி படம் ஆரம்பித்து முடியும் வரை உதட்டோரம் சிரிப்போடு பார்த்து கொண்டிருந்த எனக்கு இறுதியில் தோன்றியது ச்சே இப்படி அடித்து துவைக்கவேனும் ஒரு காதலி இருந்திருக்கலாம். ஒருவேளை படத்தின் வெற்றியும் இதுவாய் இருக்கலாம்.

படம் பார்க்க விரும்புவோர் கட்டாயம் பாருங்கள் ஒரு நல்ல டைம் பாஸ் படம். அய்யய்யோ கொரியன் படமா எனக்கு அவங்க மூஞ்சே பிடிக்காது, சப் டைட்டில் படிக்கிறதா, படம் பார்க்கிறதா எனவெல்லாம் அங்கலாய்ப்போர் 2008 இல் வந்த இதன் ஆங்கில ரீமேக் பார்க்கலாம். Elisha cuthbert நடித்தது நான் பார்த்ததில்லை இருந்தாலும் ஒரிஜினல் அளவு இல்லை என்பது நண்பர்கள் கருத்து.
Related Posts with Thumbnails