புதன், 25 பிப்ரவரி, 2009

கவிதை போல ஏதோ ஒன்று
கவிதை என label குத்தியிருந்தாலும் இதை புத்திசாலித்தனமான ம்ஹ்ம் அதுவுமில்லை அலங்காரமான வார்த்தை கோலங்களாகவே பதிந்துள்ளேன்.
இணையத்தில் இது என் முதல் முயற்சி
இவ்வலங்காரங்களுக்கு பின் இருக்கும் அவலங்கள் உணரப்படின் அது பற்றிய கருத்துக்களை பகிருங்கள்உலகப் பொருளாதார நெருக்கடி
தெரியுமா இவனுக்கு
சம்பள உயர்வு கேட்கிறான்
சொன்னவனுக்கு தெரியாது
அவன் சுமையும் எங்கள்
முதுகுகளில் கனப்பது
சாதிக்கொரு சாமிகள்
வைத்துக் கொண்டோம்
நம் லயங்களுகிடையே போலவே
இடைவெளி நம் மனதிலும்
எதிரெதிரே காணநேர்ந்தால்
முகம் திருப்பிக் கொண்டோம்
முறுகல் இறுகி நேற்று
நாம் வெட்டிக் கொண்டபோது
வெளியே பேசிக் கொண்டார்கள்
தோட்டக் காட்டான்களுக்குள்
ஏதோ சண்டையாம்திங்கள், 23 பிப்ரவரி, 2009

எல்லாப் புகழும் ரஹ்மானுக்கே


'ஸ்ளம் டோக் மில்லியனியர்'
. ஆர். ரஹ்மான் கோல்டன் க்ளோப் விருதுக்கு பரிந்துரைக்கப் படும் வரை இப்படி ஒரு படம் வந்ததே எனக்கு தெரியாது. அவருக்கு விருதும் கிடைத்தப் பின் நடந்தேறிய சம்பவங்கள் படத்தையும் எப்படியாவது பார்த்து விடும் ஆசையை ஏற்படுத்தியது. அதன் பின்தான் ஒரு மாதிரி படத்தை தேடிப் பார்த்து முடித்தேன்.(DVD
இல்தான் )

படத்தை பார்க்க முன்பே படத்தின் விமர்சனமொன்றில் படத்தின் கதை சுருக்கத்தை படித்த போது குப்பத்து சிறுவன் போட்டி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கோடிஸ்வரன் ஆகிறான் என ஏதோ கோகுலத்தில் வரும் சிறுவர் கதை போல உள்ளதே என யோசித்தேன். ம்ஹ்ம்.. படம் பார்த்த போது அங்கேதான் ஏமாந்து போனேன். போட்டி நிகழ்ச்சியும் அதையொட்டிய அவனது வாழ்க்கை சம்பவங்களும் சலிப்பூட்டதவாறு படமாக்கப் பட்டிருந்த விதம் அவார்ட் தரப்பட்டிராவிட்டால்தான் ஆச்சரியம். நம் தமிழ் இயக்குனர்கள் இரு வேறு கதைக்களங்களில் பயணிக்கும் கதையை தொடர்பு படுத்த திணறுவதை பார்க்கும் போது ( விருமாண்டி விதி விலக்கு) இதை இத்தனை லாவகமாய் சாத்தியப் படுத்தியிருக்கும் இயக்குனர் நிச்சயம் பாராட்டுக்குரியவர்.

அமிதாப்
பச்சனை பார்க்கவென மலத்தில் குதித்தெழுவது, தாஜ்மகால் பார்க்க வரும் உல்லாசப் பயணிகளுக்கு வழிக்காட்டுவது போன்ற கலகலப்பான காட்சிகளினூடே சேரி வாழ்வின் அவலங்களையும் வாழ்க்கை போராட்டத்தில் தமது சிறுபிள்ளைதனத்தை தொலைத்து விட்ட சிறார்களின் துயர் நிறைந்த காட்சிகளும் நம் மனதை சற்றே கலங்கச் செய்ய வல்லன .
ஜமால் போட்டியில் கலந்து கொள்வது தன் காதலி லத்திகாவையும் அடையும் நோக்கோடுதானாம் ஆனால் ஏனோ அவர்கள் சேர்வதைப் பற்றி மனம் அவ்வளவாய் அக்கறை கொள்ளவில்லை.

பிரதான
நடிகர்கள் பெரிதும் அறிமுகமற்றவர்கள் அனில் கபூர் இருக்கிறார் என் சிறு வயதில் தொலைக்காட்சியில் இவர் மாதுரி டிக்சித்தோடோ ஸ்ரிதேவியோடோ கட்டிப் பிடித்து ஆடுவதை கொட்டக் கொட்ட விழித்துப் பார்த்திருக்கிறேன் இதில் இவர் நடிக்கவும் செய்கிறார். குறிப்பாக
ஜமால் jack hops விடையாக சொல்லும் போது காட்டும் முகபாவனை. இர்பான் கான் பில்லு பார்பரில் பசுபதியின் பாத்திரம் செய்பவர் மற்றவர்கள் யாரையும் எனக்கு தெரியாது.

சரி
படம் தொடர்பான விமர்சனங்கள் இந்தியர்களுக்கு உள்ள கவலையே தமது பிச்சைக்காரத்தனத்தை யாரோ ஒரு வெள்ளைக்காரன் படமா எடுத்து உலகம் பூரா ஓட்டிட்டானே என்பதுதான் இது ஒரு இந்தியப் படமாயிருந்து அங்கு மட்டும் ஓடியிருந்தால் அவ்வளவு தூரம் கவலைப் பட்டிருக்க மாட்டனர். இங்கு சிங்களவனிடம் இத்தனைப் பட்டும் மக்கள் டிவியில் ஒரு முறை தமிழக மக்கள் இலங்கை தேசியக் கொடியை எரித்தப் போது மனம் இலேசாக வலித்தது. இவ்வகையில் இந்தியரின் கோபம் உணரத்தக்கதே.


ஆனால்
படம் சேரி வாழ்க்கையை மாத்திரம் கூறவில்லை இந்தியாவின் செழிப்பான ஒரு பக்கமும் காட்டப் படுகிறது. ஏழைகளின் பொருளாதாரத்தையும் சிந்தனையையும் சேர்த்தே சுரண்டும் மிகையான கதாநாயகத்துவதோடு வரும் சினிமாக்கள், இன்று இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணம் நாம்தான் என கூறும் மேல்தட்டு வர்க்கத்தின் வாழ்க்கை முறை என்பவற்றையும் கூறுகிறது.
படம் பார்ப்பவருக்கு மும்பையின் வறுமை மட்டுமின்றி வறுமைக்கு காரணமும் தெரிந்து விடும்.

இதன்
பின்னணியில் படத்திற்கெதிராய் வெகுண்டெழுந்து கருத்துக் கூறிய அமிதாப் வகையறாக்களின் சமூக் அக்கறை உணரக்கூடியதே. இதன் போது தானும் ஒரு super star ஆய் இருந்தும் படத்தை ஆதரித்த ஷாருக்கான் பிக் பியை எதிர்க்க வேண்டும் என்றில்லாமல் உண்மையில் செய்திருந்தால் பாராட்டுக்குரியவர்.


அடுத்து
நம்ம ஹீரோ

ரஹ்மான்
முன்ன போல் இல்லை இப்பெலாம் பாட்டு முன்ன மாதிரி ரசிக்க
முடியிறது இல்ல என் பலர் புலம்புகின்றனர். உண்மையில் அவர் இப்போதெல்லாம் உலக ரேஞ்சில் இசையமைக்கிறார் நமக்குத்தான் ஞானம் இல்லை அதுதான் உண்மையையும் இருக்க கூடும். முன்பே வா என் அன்பே வா, நியூயார்க் நகரம், சகானா சாரல் தூவுதோ பாடல்கள் சமீபத்தில் வந்தவைதான்.எப்படியோ தமிழில் அவரை விட்டால் ஒஸ்கார் எடுக்க எவருமில்லை
படத்தில் பாடல் கேட்ட போதும் படம் பார்த்த போதும் எனக்கு வழக்கமான ரஹ்மான்தான் தெரிந்தார். ஆனால் இன்று ஒஸ்காருக்குப பின் இதே இசையை கேட்ட போது ஏனோ புல்லரித்தது.

சனி, 21 பிப்ரவரி, 2009

அம்மா தமிழனக் காப்பாத்தும்மாநம்மவர்களில் எனக்கு எப்போதும் கோபம் அதிகம் இருப்பதுண்டு.
ரோம் பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம் அதை மிஞ்சுவதற்கு நம்மவரை விட்டால் ஆளில்லை.
அதனால் வந்த நியாயமான ஆதங்கம் என் கோபம்
மலையகத்தின் லயத்துக் காம்பராக்களில் மண்ணெண்ணெய் விலைக் கருதி படிப்பதைத் தவிர்த்து நேரத்தோடு படுக்கைக்கு செல்லும் பிள்ளைகள் மத்தியில்
ஈழத்தில் எம் சொந்தங்கள் செத்துக் கொண்டிருக்கும் நிலையில்


மின் வெளிச்சத்தில் ஜெகஜ் ஜோதியாக அம்மன் அருள் பாலிக்கிறராம்.


தமிழனின் நிலைக் கண்டு முத்துக் குமார்கள் நெருப்புக்கு தம்மை தின்னக் கொடுத்து தம்மையே எரித்துக்கொள்ளும் போது இப்படியும் ஒரு கூட்டம் தம் நிலை மறந்து ஆன்மீக அபத்தங்களில் சிக்கித் திளைக்கிறது.

பாவம் பெரியார் தான் தன் காலத்திற்குள்ளேயே நிறைய செய்து விட்டதாய் நினைத்திருப்பார்
ம்ஹ்ம்... விவேக் சொல்வது போல " டேய் ஒங்கள எல்லாம் இன்னும் ஹண்ட்ரட் பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடா................"

வெள்ளி, 20 பிப்ரவரி, 2009

தமிழா தமிழா

அரச சேவையில் இருப்பதில் ஒரு நன்மை மாதா மாதம் சம்பளம் வாங்குவதோடு நில்லாமல் அவ்வப்போது மேலதிக வரும்படிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். இப்படித்தான் கடைசியாய் நடந்த மத்திய மாகாண சபை தேர்தல் கடமைக்கென சென்ற போது பல சுவாரசியமான அனுபவங்கள் கிடைத்தன.

தம்புள்ள சரித்திர பிரசித்தி பெற்ற இடம் சிங்களவருக்கு இது புனித பிரதேசமும் கூட ரங்கிரி தம்புள்ள விகாரை, சர்வதேச கிரிகெட் மைதானம் என்பவற்றை கொண்ட இப்பிரதேசத்தில் தமிழர்கள் குறைவு என்றே நினைத்திருந்தேன். வாக்காளர் இடாப்பை பார்த்த போது என் எண்ணம் பிழை என்பதை தெரிந்துக் கொண்டேன்.

கிட்டத் தட்ட நூற்றுக்கு பத்து பேர் தமிழ் வாக்காளர்கள். ஏனைய பிரதேசங்களில் தமிழரின் எண்ணிக்கை இதை விட அதிகம் எனினும் தம்புள்ள போன்ற ஒரு பிரதேசத்தில் இவ்வளவு பேர் இருப்பது வரவேற்புக்குரியது.

என்னை தவிர பணியாற்றிய ஏனைய அனைவரும் சிங்களவர் எனினும் அனைவரும் சகசமாகவே பழகினர் . வாக்காளர் பட்டியலை நுணுகிப் பார்த்தவனுக்கு இன்னுமொரு அதிர்ச்சி அங்கே ஒரு தமிழ் பெயர் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.
வள்ளியம்மா சின்னசாமிலாகே வள்ளியம்மா கிட்டத்தட்ட சிங்கள பெயர்களில் வாசகம(பரம்பரை பெயர்) என்று ஒன்று இருக்குமே அதுபோல் இடாப்பை திருப்பி திருப்பி பார்க்க இது போல பல பெயர்கள் வெறுத்துப் போனவன் மெல்ல எழுந்து தலைமை அதிகாரியிடம் சென்று தமிழர் இவ்வாறு தம் பெயரை எழுதவது இல்லை எனவும் இது கிராம சேவகரின் பொறுப்பற்ற தனத்தால் வந்ததெனவும் கூறினேன். கவனமாக கேட்டவர் வாக்களரின் வாக்காளர் அட்டையை கிழிக்காது அவரது பெயரை சரியான முறையில் எழுதித் தரும் படியும் அடுத்த முறை பெயர் சரியாக வர ஆவன செய்வதாகவும் கூறினார்.

தமிழர்கள் தமது பெயரை எழுதும் முறையைக் கேட்ட சக ஊழியர்களிடம் நான் நாம் எழுதும் முறையை கூறிய போது ஏன் எம்மைப் போல் எழுதினால் தமது பரம்பரையை தொடர்ந்தும் கொண்டு செல்லலாம்தானே என்றவர்களிடம் அவர்களது பெயரைக்கொண்டே அவர்களின் சாதியை அறியக் கூடியதாயிருப்பதை சுட்டிக் காட்டி நாம் இவ்வாறு பிறப்பினால் தோன்றும் ஏற்றத்தாழ்வுகளை களைய விரும்புகிறோம் எனக் கதை விட்டேன்.

அப்போது ஒரு கூட்டம் அவர்கள் தமிழர்கள் என்பதை முகம் சொல்லியது திராவிடக் களையுடன் இருந்தனர். நம்மூர் கிரிக்கெட் வீரர் பெயர்களை சொல்லத் திணறும் வெளிநாட்டு அறிவிப்பாளர் போல இதுவரை சிங்களத்தோடு போராடிக்கொண்டிருந்த எனக்கு பெரிய மகிழ்ச்சி.

அடையாள அட்டையை வாங்கிப்பார்த்தவன் சிரித்தவாறே

" பேரை சொல்லுங்க? "

" மாத்தையா(ஐயா)"

"தமிழ்தானே நீங்க பேரை சொல்லுங்க"

" தெமல தமா மாத்தையா நமுத் தெமல கதா கரன்ன பே (தமிழ்தான் ஐயா தமிழ் பேச வராது) "

ஏன் அருகில் இருந்த சிங்கள பெண்மணி லேசாக புன்னகைத்தார்.

" சரி உங்க பெயர் பிழையா இருக்கில்ல மாத்திரலமா "

" இல்ல இதுதான் வசதி இப்படியே இருக்கட்டும் "

வேறெதுவும் பேசாது தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் வேலை செய்யும் கூலித் தொழிலாளிக்கான அடையாள அட்டையை திருப்பிக் கொடுத்தேன். அவரும் அவர் கூட இருந்தோரும் சரளமான சிங்களத்தில் உரையாடியவாறே வெளியேறினர். அதன் பின் நான் யாரோடும் ஏதும் பேசவில்லை.


திங்கள், 16 பிப்ரவரி, 2009

பாப் மார்லி

இலங்கையர்களுக்கு தெரிந்திருக்கும் இன்று இலங்கையிலுள்ள பல இளைஞர்களின் முன்மாதிரி இவர்தான் ஆட்டோ ஓட்டுனர்கள் தமது வாகனத்தில் இவரது பாடல்களை அலற விட்டுக்கொண்டு போவதும் தெருவோரக்கடைகளில் இவரது படம் போட்ட கைக்குட்டைகள் அதிகமாக விற்பனையாவதையும் கண்ட போதே இவர் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் உண்டானது.

அதுவும் நான் பிறக்க இரு வருடங்களுக்கு முன்னமே இறந்து போனவர் இன்றைய இளைஞர்களை இவ்வளவு தூரம் ஆக்கிரமித்திருக்கிறார் என்றால் அவரிடம் ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என நினைத்து ஒரு சிலரிடம்

" யாருயா இவன் பரட்டை தலையோடு பிச்சை காரன் மாதிரி"

என்ற போது கடவுளையே பார்த்தது போல் பதறி கன்னத்தில் போட்டுக்கொண்டவர்கள்

"இவரைத் தெரியாதா? மிக புகழ்பெற்ற ரெகே இசைக் கலைஞர் கறுப்பினத்தவர்களின் வலியையும் வேதனையையும் தனது பாடல்களில் பதிவு செய்தவர்" என்று கூறினர்.

சரி நம்ம இளைஞர்களுக்குத்தான் நம்ம இனத்தவரை பற்றியே அக்கறை இல்லை கறுப்பினத்தவரை பற்றி என்ன வந்தது என அவர்களிடம் வினவ

" போப் மார்லிக்கு கஞ்சா புகைக்க லைசன்ஸ் தெரியுமா?"

என்றனர். என்னடா இது ஒன்றிற்கொன்று தொடர்பில்லாத இரு வேறு முரண்பாடான கருத்துக்கள் ஒருவரை பற்றி என்று யோசித்த போதுதான் சுவாரசியமான விடயமொன்றை காண நேர்ந்தது.

அண்மையில் மத்திய மாகாண சபை தேர்தல் கடமைகளுக்காக சென்றிருந்த போது அடையாள அட்டைகளை பரீட்சித்துக்கொண்டிருந்த போது போப் மார்லி தனது அடையாள அட்டை, வாக்காளர் அட்டை சகிதம் வந்து வாக்களித்து விட்டு போனார். அதாவது அவரை போலவே ஒருவர் அட ஒருவன் தனது தோற்றத்தையே ஒருவரை போல மாற்றி கொள்(ல்லு)கிறான் என்றால் எவ்வளவு அபிமானம் அவன் பேரில் இருக்கும் என்று யோசித்தேன் உடனே அவர் பற்றிய விடயங்களை தேடத்துவங்கினேன்.

அவற்றுள் பல உண்மையிலேயே சுவாரஷ்யமானவை
போப் மார்லி ஜமைக்க நாட்டு ரெக்கே இசை கலைஞர் பிரித்தானிய வெள்ளை இனத்தந்தைக்கும், கறுப்பின ஜமைக்க தாய்க்கும் பிறந்தவர். 1981இல் தனது முப்பத்தாறாவது வயதில் இறந்தார்.

சரி அவரது வரலாறை விடுத்து அவர் பற்றிய செய்திகள் நிஜமா என்று பார்த்தால் அவர் பற்றிய இரு வகையான தவல்களிலும் உண்மை உண்டு.
எதியோப்பிய மன்னராக இருந்த Hailie selassie என்பவரை கடவுளின் அவதாரமாக கருதி வழிபடும் Rasta fari இயக்கத்தை சேர்ந்த இவர் தனது பாடல்களை அன்பினால் ஒரே உலகம் செய்வோம் என்ற தொனிப்பொருளில் அமைத்தார். இதனாலேயே பாடல்களின் மூலம் சமூக மாற்றமொன்றை செய்ய விளைந்த ஒரு போராளியாக இவரை கருதுகின்றனர்.

அதிலும் போப் மார்லி நமக்கு(மலையகத்தவர்) மேலும் நெருக்கமானவர் பிரித்தானிய ஆட்சி ஜமைக்காவில் நிலவிய போது அங்கு அடிமைகளாக கரும்புத்தோட்டத்தில் வேலை செய்த கறுப்பர்களின் ஏக்கங்களை வெளிக்கொணரும் விதமாக வந்ததே ரெகே இசை. அவ்வகையில் அவ்விசையின் முடிசூடா மன்னன் போப் மார்லி உலகெங்கும் உள்ள ஒடுக்கப்பட்டுள்ள மக்களின் குறியீடாக கொள்ளப்பட வேண்டியவன்.

ஆனால் இன்றைய இளைஞர்களை போப் கவர்ந்திருப்பதற்கு காரணம் இதுவல்ல. Rasta fari இயக்கத்தினர் தாம் இயல்பாய் வாழ்வதாய் கூறிக்கொண்டு தலை வாருவதையும் குளிப்பதையும் கூடத் தவிர்த்தனர். உடல் நலத்திற்கு மிகவும் ஏற்றது எனக்கூறிக்கொண்டு கணக்கு வழக்கிலாமல் கஞ்சா புகைத்தனர். இம்மித மிஞ்சிய கஞ்சாவே இவரது அற்ப ஆயுளுக்கும் காரணமாக அமைந்தது. ஆனால் மேம்போக்காக கேள்வியுற்ற இவ்வாறான தகவல்களே இலங்கை இளைஞர்களிடம் அவரது திடீர் புகழுக்கு காரணம் என நினைக்கிறேன்.
நான் பேசிய சிலர் தமது எண்ணம் போல் வாழ்வுக்கு ரஸ்தா என பெயர் வைத்துக்கொண்டதை பார்த்த போது நான் நினைத்தது சரியெனவே தோன்றியது.
இன்னுமொன்று ஜிம்பாப்வே சுதந்திரம் பெற்ற போது அங்கு பாடி அதிபர் முகாபேவை தேசிய வீரர் எனப்புகழ்ந்தவர் மார்லி. இன்று இருந்திருந்தால் அவரை பற்றி என்ன சொல்வரோ தெரியாது.

தமிழ் திரையுலகுக்கும் இவர் நிறைய செய்துள்ளார். அதாவது இவரது பல பாடல்கள் நகலெடுக்கபட்டுள்ளன. சந்தேகமென்றால் இவரது Buffelo soldier பாடலை கேட்டு விட்டு நேருக்கு நேர் படத்தில் வரும் "அகிலா அகிலா " பாடலை கேட்டுப் பாருங்கள்


வியாழன், 12 பிப்ரவரி, 2009

என் முதல் பதிவு

அனைவருக்கும் வணக்கம்
இணையத்தில் உலாவிய பொது பார்த்த, ரசித்த பல வலைப்பூக்கள் ஏற்படுத்திய பாதிப்பின் காரணமாக அவசர அவசரமாகவே வலைப்பூவொன்றை ஆரம்பித்தேன். முதற்பதிவாக எதை பதிவிடலாம் கதை, கவிதை, பத்திகள் (ஐயாவிடம் அவ்வளவு சரக்குகள் ????) அல்லது ஏதேனும் copy past சமாசாரம் என பலதையும் தலை வலிக்க யோசித்துதான் மிச்சம் எவையும் சிக்காத போதுதான் புரிந்தது வலைப்பதிவர்கள் படும் கஷ்டம்.
பல வலைப்பூக்கள் மாதக்கணக்கில் இற்றைப்படுத்த படாமல் இருக்கும் நிலையில் நாள் தவறாமல் பதிவிடும் வலைப்பதிவர்கள் ஆச்சரியத்துக்குரியவர்கள் அதிலும் சீரியசான விடயங்களையும் ஹாஷ்யம் ததும்ப பதிவிடுபவர்களே காலையில் நான் பஸ்ஸை தவற விட காரணகர்த்தாக்கள்.
ஏதோ ஆர்வக்கோளாரில் எழுத வந்திருக்கும் என் பதிவுகளும் அதிகம் பேரால் பார்க்கப்படும் என் எழுத்துக்களை திருத்தும் விதமாக சிறப்பான பின்னூட்டங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு எழுத ஆரம்பிக்கிறேன்.
வாழ்த்துவீர் வரவேற்பீர்
Related Posts with Thumbnails