திங்கள், 18 ஜனவரி, 2010

என்னைப் பாதித்த சினிமா Forest Gump

மிகத் தாமதமாக எழுதும் Forest gump படத்தைப் பற்றிய என் கருத்துக்களின் இரண்டாம் பாகம் இது. இப்போது முதலில் வாசிப்பவர்கள் இதன் முதற்பாகத்தையும் அப்படியே வாசித்து விடுங்கள்.


ஹாலிவுட் நடிகர்கள் எனும் போது நமக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த ரசிகர்களில் ஒரு சாரார் சீன் கானரி யை சிலாகிக்கும் அதேவேளை நடிப்பில் இவர்களை விஞ்ச யாருமில்லை என மார்லன் பிராண்டோ,ராபர்ட் டீ நீரோ, அல்பசினோ ஆகியோரைப் போற்றும் பிறிதொரு கூட்டத்தினரும் இருப்பார். மேற்சொன்ன ஒருவருக்கும் சற்றும் குறையாத நடிகர்களில் ஒருவராகவே நான் டோம் ஹான்க்சை காண்கிறேன். மேற்சொன்னவர்களின் பெரும்பாலான படங்களை நான் பார்த்ததில்லை. படத்தில் பாத்திரமாகவே மாறி விட்டார் என்று சொல்வதன் முழுமையான அர்த்தம் எனக்கு அப்போதுதான் புரிந்தது. இத்திரைப்படம் வெளிவந்த அதே வருடத்தில்தான் The shawshank redemption,Pulp fiction போன்ற படங்கள் வெளிவந்தது. இம்மூன்று படங்களில் எனக்குப் பிடித்த படம் The shawshank redemption. Pulp fiction முதற்றடவை புரியவில்லை. அண்மையில் பார்த்த போதும் அந்த கதை சொன்ன உத்தி அடடா என்ற பரவசத்தை படம் பார்த்து முடிந்த அந்தக்கணத்தில் ஏற்படுத்தியதே தவிர மனதை எல்லாம் தொடவில்லை. சில நேரம் எனது ரசனையின் போதாமையால் இருக்கலாம். எனினும் அம்மூன்று படங்களிலும் நடிப்பில் கவர்ந்தவர் Tom hanks தான். சின்ன சின்ன அசைவுகளிலே ஒரு அபார நடிப்பை அவர் வழங்கியிருந்தார்.பொருத்தமாக அந்த வருடத்திற்கான அகாடமி விருதும் அவருக்கே தரப்பட்டதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.


ஏலவே இறந்துப் போயிருந்த அமெரிக்க அதிபர்கள் மூவர் இந்தப் படத்தில் தம் நடிப்பு பங்களிப்பை வழங்கியிருந்தனர். கணணி வரைகலை நிபுணர்களின் உதவியோடு. இதே நுட்பம்தான் இந்தியன் படத்தில் நேதாஜி கமலுக்கு பதக்கம் அணிவிப்பதாக வரும் காட்சியில் பயன்பட்டது என நினைக்கிறேன். ஹாலிவுட் இலும் அந்நாட்களில் அது பெரிய தொழிநுட்ப வளர்ச்சியாக கருதப்பட்டிருக்கும்.

படத்தின் கதை நிகழ்வதாக காட்டப்படும் காலத்தில் நிகழ்ந்த முக்கியத்துவமிக்க சில சம்பவங்கள் படத்தின் கதையோட்டத்தில் வந்து செல்வது சிறப்பாக இருக்கும். சிறு வயதில் Forrest இன் வீட்டுக்கு வரும் விருந்தினர் எல்விஸ் ப்ரெஸ்லி ஆக இருப்பார். பின்னாளில் தாம் வாழும் காலக்கட்டங்களில் பதவியில் இருந்த அதிபர்களை எதேச்சையாக சந்திப்பார். அமெரிக்கா வியட்நாம் போரில் ஈடுபடுவதும் பின் போருக்கு எதிரான உணர்வு அமெரிக்காவிலேயே உருவாவது, சீனாவுடன் உறவைவலுப்படுத்த ராஜதந்திர நடவடிக்கையாக ping pong ஆட்டக் குழு சீன செல்வது. அமெரிக்காவையே ஆட்டிப் படைத்த ஹிப்பி கலாச்சாரம், ஆப்பிள் கம்பனியின் வளர்ச்சி, AIDS என்பன அவற்றுள் சில.


படம் பாரம்பரியமாய் தொடரும் மரபுகளுக்கும் அதற்கெதிரான எதிர் பண்பாட்டு வாழ்க்கை முறைக்கும் இடையிலான முரண்களைக் கூறி மரபுகளின் பெருமையையும் அவ்வாறான வாழ்க்கை முறையின் அவசியத்தையும் கூறுகின்றது எனலாம். இவ்வாறன புனிதக் கற்பிதங்களின் மீது நம்பிக்கையற்ற இப்படித்தான் வாழ வேண்டுமென்ற வரையறைகளை எல்லாம் மீறுதலே வாழ்க்கை என்ற எண்ணம் கொண்ட எனக்கு இந்தப் படம் பிடித்ததற்கான காரணம் எனக்கு இன்னமும் புரியவே இல்லை.

படத்தை பார்த்த போது எப்படி இந்தப் படத்தை கமல் தவற விட்டார். நிச்சயம் அவர் Remake செய்திருக்கக் கூடிய படம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதுவும் இந்தியனில் சந்துரு பாத்திரம் இந்த forrest பாத்திரத்தின் தோற்றத்திற்கு பொருத்தமான ஒன்றும் கூட. ஆனால் கமல் சொன்ன விடயம் இன்னமும் ஆச்சரியமான ஒன்று. அதாவது Forrest gump படத்திற்கு எதிராக அவர் வழக்கு கூட போட்டிருக்க முடியுமாம். அவர் நடித்த "சுவாதி முத்யம்" படத்திற்கும் அதற்கும் தொடர்புண்டாம் என்று சொல்லியிருக்கிறார். நான் அந்தப் படத்தை பார்த்ததில்லை. இப்போது ஷாருக்கின் My Name is Khan Trailer பார்த்த போது பாதிப்பில் எடுத்திருப்பதாகவே தோன்றியது. ம்ம் பெப்ரவரியில் பார்ப்போம் நான் நினைத்தது சரியா என.

வியாழன், 14 ஜனவரி, 2010

ஆயிரத்தில் ஒருவன்- என் பார்வையில்

கதையை நான் சொல்லப் போவதில்லை So பயமில்லாமல் படியுங்கள்


செல்வராகவன் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களை வரிசைப்படுத்தினால் நிச்சயம் அவருக்கு இடமுண்டு. துள்ளவதோ இளமை பாடல்களைக் கேட்டு விட்டு அதை டிவியில் பார்த்த போது எரிச்சலாக இருந்தது இவனெல்லாம் ஒரு ஹீரோ என சலிப்பு வேறு. அந்தக் கடுப்பில் படமே பார்க்கவில்லை. 2003 ஆம் வருடம் அதே ஹீரோ நடித்து ஒரு படம் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. நண்பர்களின் வற்புறுத்தலுக்காக அந்தப் படத்தைப் போய் பார்த்தேன் பார்த்த நாளில் இருந்து தனுஷ் என் விருப்பத்துக்குரிய நடிகர்களில் ஒருவராகி விட்டார். இவனைப் பிடிக்காது என்ற முன் முடிவுடன் படம் பார்க்கச் சென்றவனைஅவரது ரசிகனாக்கிய திறமைக்கு சொந்தக்காரர் செல்வராகவனே.


இதோ கிட்டத் தட்ட மூன்று வருடங்களாக இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என போக்குக் காட்டிய செல்வராகவனின் புதியப் படைப்பு ஆயிரத்தில் ஒருவன். நிச்சயமாக தமிழிலே இது ஒரு புதிய முயற்சி. செல்வராகவன் படங்களில் என்னவெல்லாம் நாம் எதிர்ப்பார்ப்போமோ, என்னவெல்லாம் இருக்குமோ அத்தனையும் இருக்கிறது ஆனால் முற்றிலும் புதிய களத்தில்.
கிபி 13 ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது கதை. சோழ பாண்டிய மன்னரிடையே ஏற்படும் போர் உக்கிரமடைய சோழ இளவரசன் பெரும் படை புடைசூழ குறித்த சிலரோடு பெயரறியா தீவொன்றைச் சென்றடைகிறான். அவனைப் பின்தொடரும் ஒரு பாண்டிய நாட்டவனின் குறிப்புக்கள் அடங்கிய ஓலைச் சுவடிகளின் ஆதாரத்தோடு அந்த சோழன் தஞ்சமடைந்த இடத்தை கண்டறிய முயலும் ஒரு தொல்பொருள் ஆய்வுக் குழுவின் முயற்சியே ஆயிரத்தில் ஒருவன்.
தொல்பொருள் ஆய்வுக்குழுவின் தலைவி ரீமா சென், ஏலவே இப்பணியில் ஈடுப்பட்ட தன தந்தையைப் பறிக்கொடுத்த அண்ட்ரியா, இராணுவ உதவி வழங்கும் அழகம் பெருமாள் இவர்களோடு தன குழுவினருடன் பயணத்தில் இணைந்துக் கொள்ளும் போர்ட்டர் கார்த்தி. இவர்களே பிரதானப் பாத்திரங்கள்.


கார்த்தி நன்றாக நடித்திருக்கிறார். என்ன இன்னமும் பருத்தி வீரன் தாக்கம் இவரை விட்டுப் போகவில்லை என நினைக்கிறேன். கொஞ்சம் ஸ்டைலை மாற்றுங்கள் கார்த்தி. செல்வராகவன் படங்களில் வழமையாக கதாநாயகி சோகம் ததும்ப வலம் வருவார். இதிலே அண்ட்ரியா அந்த வேலையைக் கச்சிதமாக செய்கிறார். அழகம் பெருமாள் வழமைப் போலவே சிறப்பாகச் செய்திருக்கிறார். பார்த்திபன் சஸ்பென்சில் வைக்கப்பட்டிருந்த பாத்திரம் படம் வெளிவரும் வரை ஸ்டில் ஒன்று கூட வெளியிடப்படவில்லை. நானும் சஸ்பென்சை உடைக்க விரும்பவில்லை ஆடியோ ரிலீசில் பார்த்திபன் பேசிய அதே வார்த்தைகளில் சொல்வதென்றால் ஒரு ராஜ வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் பார்த்திபன்.


அடுத்தது ரீமா சென் பார்க்க அத்தனை அழகாய் இருக்க மாட்டார். முதிர்ச்சி தட்டிய முகம். ஒரு ஆண் போன்ற பாவனைகள் இவரா கிடைத்தார் செல்வராகவனுக்கு என நானும் யோசித்தேன். இதற்கெல்லாம் தன நடிப்பால் பதில் சொல்லியிருக்கிறார் ரீமா. முதல் படத்திலேயே தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப் பட்ட கார்த்தி, 25 வருடத்திற்கு மேலே நடிப்பனுபவம் கொண்ட பார்த்திபன் எல்லாமே இவர் நடிப்புக்கு முன்னாள் ஒன்றுமே இல்லை என்னுமளவுக்கு அசத்துகிறார் ரீமா சென். ரீமா தவிர்ந்து இன்னுமொருவரை அந்தப் பாத்திரத்தில் நினைத்தும் பார்க்க முடியவில்லை. விடுங்கள் விட்டால் ரீமா சென்னுக்கு ரசிகர் மன்றமே ஆரம்பித்து விடுவேன். உண்மையை சொன்னால் சிம்ரனுக்கு பிறகு எந்தப் பாத்திரம் என்றாலும் செய்யக் கூடியவர் இவராயத்தான் இருக்கும்.


இசை ஜி.வி.பிரகாஷ் பாடல்கள் ஏலவே ஹிட் ஆயிற்றே. பின்னணி இசையிலும் பெரிதாக குறை வைக்கவில்லை. பார்த்திபனும் ரீமா சென்னும் ஆவேசமாய் சண்டையிடுவார்கள் திடிரென ரீமா அவரை வேறு விதமாக சீண்ட அது ஒரு சிருங்கார விளையாட்டாக மாறும் அவ்விடத்தில் பிரகாஷின் இசை அருமை மாமாவின் பெயரைக் காப்பாற்றி விடுவார். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு மிக முக்கியமானதொன்று. அமெச்சூர் தனமான சில கிராபிக் காட்சிகளின் குறையை மறைப்பதிலும் சோழப் பேரரசு தொடர்பான காட்சிகளிலும் ஒளிப்பதிவு அருமை. செல்வாவுக்கு தன மேல் நம்பிக்கையும் தன படைப்புக்களில் காதலும் அதிகம் என நினைக்கிறேன். அதனால்தானோ என்னவோ எடிட்டருக்கு வேலையே வைக்கவில்லை. சில இடங்களில் கத்தரி வைத்திருந்தாள் கச்சிதமாய் இருந்திருக்கும்.


தான் ஒரு நல்ல இயக்குனரா என்று தனக்குத் தெரியவில்லை எனினும் தான் ஒரு சிறந்த திரைக்கதாசிரியர் எனவும் செல்வா ஒரு முறை பேட்டியளித்திருந்தார். ஆனால் இங்கே திரைக்கதை அத்தனை நேர்த்தியாய் இல்லை. சில வேளை இவர் நினைத்ததைப் படமாக்க சிரமமாய் இருந்திருக்கலாம். படத்தில் இவர்கள் பட்ட சிரமம் ஒவ்வொருக் காட்சியிலும் தெரிகிறது. தான் ஆத்ம நண்பர்கள் யுவன்,அர்விந்த் கிருஷ்ணா உடனான பிரிவு,சோனியாவுடன் விவாகரத்து இத்தனைக்கிடையிலும் இந்தப் படத்தோடு அவர் நடாத்தியிருக்கும் போராட்டம் ம்ம் கலையைக் காதலிப்பவனால் மட்டுமே அது முடியும். ஆக சில குறைகள் இருந்தாலும் தமிழின் புதிய முயற்சி என்ற வகையில் இதற்கு கொடுக்கப்படும் ஆதரவு அவரை மேலும் ஊக்கப்படுத்தும் என நம்புகிறேன்.


படத்தின் இடைவேளையில் அடடா என ரசிகர்கள் கொஞ்சம் பரவசமான மூடில் இருந்தார்கள். எனினும் கிளைமாக்ஸ் நெருங்கும் போது "எப்பையா முடியும்?" என்ற நிலைமைக்கு கொண்டுப் போயிருக்க வேண்டாமே. படத்தில் எதையோ ஞாபகப்படுத்தும் விதமான சில அரசியல் உள்குத்துக்கள் உண்டு. படம் பார்த்தோருக்குப் புரிந்திருக்கும். அதை இங்கே விளக்கினால் சுவாரசியம் கேட்டு விடுமென்பதால் விட்டு விடுகிறேன். நான் மேலே சொன்ன கதை சுருக்கத்தை வைத்து நீங்கள் ஒரு கதையை ஊகித்திருப்பினும் இடைவேளைக்குப் பின் வரும் ட்விஸ்ட் நான் சற்றும் எதிர்பாராதது. உங்களுக்கும் அப்படியே இருக்கும். சோ தயவு செய்து தியேட்டரில் போய்ப் பார்த்து இந்தப் புதிய முயற்சிக்கு ஆதரவு கொடுங்கள். போகும் போது குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு போதல் நலம். என்னை கேட்டால் 14 வயதுக்கு மேலுள்ளோர் பார்க்கலாம் என்பேன்.

ஆயிரத்தில் ஒருவன் - ஆயிரத்தில் ஒரு படம்

தல போல் நடக்கும் தளபதிநண்பர்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.
அடுத்தடுத்து தான் ஆடிய பத்தாவது இறுதிப் போட்டியிலும் தோற்றிருக்கிறது இந்தியா. முதலில் 150 ஓட்டங்களுக்கு சுருட்டி விடலாம் என நினைத்தாலும் ரைனாவின் அபாரமான ஆட்டத் திறமையால் 246 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி எப்போது சொதப்புவார்கள் எனத் தெரியாததால் மிகுந்த அவநம்பிக்கையுடன்தான் டிவி முன் அமர்ந்தேன். நல்லவேளை சங்கக்கார அன் கோ என்னை ஏமாற்றவில்லை. ஆனாலும் 48 ஆவது ஓவர் வரை கடும் போட்டியைக் கொடுத்த இந்திய அணியை பாராட்டத்தான் வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் போட்டியைக் கைவிட வில்லை இந்தியா. இந்திய அணியின் பழைய போட்டிகளை நினைத்துப் பார்த்தேன். இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் அவர்களது Body Language ஏ எதிரணியினருக்கு உதிரி உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்து விடும். தோனியின் தலைமையில் ஏற்பட்ட நல்லதொரு முன்னேற்றம் இது. இலங்கையைப் பொறுத்தவரை புதுமுகங்களுடனான அணியின் வெற்றி இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு நல்லதொரு அறிகுறி. வாசுக்கு சொல்லாமலே கல்தா கொடுத்தாயிற்று. சனத்,முரளி போன்ற ஏனைய கிழடுக் கட்டைகள் கௌரவமாய் ஓய்வுப் பெறுதல் உத்தமம்.

ஜனாதிபதித் தேர்தல் நாளொரு கொலையும் பொழுதொரு சச்சரவுமாய் உச்சக் கட்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. ஆளும் கட்சியின் பிரச்சாரம் சப்பென இருக்கிறது. போர் வெற்றி ஒன்றைத் தவிர வேறெதுவும் சொல்ல முடியாத நிலை அவர்களுக்கு. இதில் ஆளுங்கட்சி தொ(கு)ண்டர்கள் பாவம் பிரியாணிக்கும் அன்றைக்குத் தரப்போகும் காசுக்கும் ஆசைப்பட்டு ஐதேகவின் பிரச்சாரத்திற்கு போகவென வண்டியேறிய ஐந்துப் பிள்ளைகளின் ஏழைத் தாயை போட்டுத் தள்ளியிருக்கிறார்கள். முன்பு ஐதேக ஆட்சியில் இருந்தக் காலத்தில் தேர்தல் வன்முறைகள் அதிகமாகவே இருக்கும். பின் சந்திரிக்கா அரசில் ஒப்பிட்டளவில் வன்முறைகள் குறைந்தாலும் மகிந்த மீண்டும் பழைய கலாசாரத்தை கொண்டு வர முயல்கிறார். மகிந்தவின் பிரசாரம் வேடிக்கையாக இருக்கிறது. போரை வென்ற நன்றிக் கடனாக அவருக்கு வாக்களிக்கவாம். பிரித்தானியாவில் உலகப் போரை வென்ற சர்ச்சிலுக்கே அடுத்த தேர்தலில் கிடைத்தது தோல்விதான். ஜெனரலின் விளம்பரம் ஒன்றில் முதலில் வீரத்தளபதி (அப்படித்தான் போடுகிறார்கள்) சீருடையில் வருகிறார் பின் தேசிய உடைக்கு மாறுகிறார். நடக்கிறார் நடக்கிறார் விளம்பரம் முடியும் வரையில் நடக்கிறார். தளபதி தலயின் படம் ஏதும் பார்த்தாரோ தெரியாது.


நல்லப் பாடல்கள் எல்லாம் வெளியாகி இருக்கின்றன. சந்தேகமில்லாமல் முதலிடம் விண்ணைத் தாண்டி வருவாயாவுக்குத்தான். "ஹோசானா" பச்சக் என மனதில் ஒட்டிக் கொண்டு போக மறுப்பதில் மற்ற பாடல்களை அடிக்கடி கேட்க முடியவில்லை. "மன்னிப்பாயா" பாடலில் ஸ்ரேயா கோஷலின்(இன்னுமொரு முன்பே வா ஸ்ரேயாவுக்கு) குரல் இனிமை. கூடவே ஈடு கொடுத்திருக்கிறார் இசைப்புயல்.
கோவாவில் ஏழேழுத் தலைமுறைக்கும் பாடல் கேட்டப் போது பழைய ஈஸ்ட்மன் கலரும் தொடர்ந்து மக்கள் நாயகன் ராமராஜன், கௌண்டமணி,செந்தில் என டைட்டில் போடுவதுமாக எல்லாம் ஒரு பிரமை. அதில் எனக்குப் பிடித்தது "இதுவரை" பாடல் அன்றியாவின் குரலில்.


ம்ம் இதை இப்போது பதிவிட்டப் பின் ஆயிரத்தில் ஒருவன் பார்க்கப் போவதாய் ஒரு ஐடியா. போய் பார்த்து விட்டு மாலை என் கருத்துக்களைப் பதிவிடுகிறேன்.

வெள்ளி, 8 ஜனவரி, 2010

ஜனாதிபதி தேர்தலும் சிறும்பான்மை வாக்குகளும்

நன்றி வந்தியத்தேவன்

சென்ற வருடத்தில் தாம் படித்த பதிவுகளில் பிடித்த ஒன்றாக என் பதிவையும் குறிப்பிட்டிருக்கிறார். பதிவர் வந்தியத்தேவன் அவருக்கு எனது நன்றிகள். ஆனால் கொஞ்சம் அதிகமாகவே ஆணி பிடுங்க வேண்டியிருப்பதால் இந்த வருடம் எத்தனை பதிவுகள் இட முடியுமென்பது சந்தேகம்தான். ஆனால் நேரத்தை சரியாக முகாமைப் படுத்த முடிந்தால் நிறைய பதிவிடல் சாத்தியமே. முயற்சிப்போம்.

தீர்க்கமான கட்டத்தை எட்டியிருக்கிறது இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் சச்சி,யோகராஜை தொடர்ந்து மூத்த அரசியல்வாதி எம்.எஸ்.செல்லச்சாமியும் சரத் பொன்சேகாவை ஆதரிக்கத் தயாராகி விட்டார். எனக்குத் தெரிய இப்போது CWC இல் ஜூனியர் தொண்டாவுடன் முத்து சிவலிங்கம் மட்டுமே இருக்கிறார் என நினைக்கிறேன். மலையக வாக்குகள் அதிகமாக எந்தப் பக்கம் போகும் என்பது தொடர்பில் இப்போது ஒரு முடிவுக்கு வரக்கூடியதாகவே உள்ளது.

சமாதனம் பேசிய காலத்தில்

யாழ் வன்னி வாக்குகளும் தமிழ் கூட்டமைப்பின் முடிவின் படியே இடப்படும் என நினைக்கிறேன். கிழக்கு தமிழ் வாக்குகள் மட்டுமே மற்றப் பக்கம் போகும் வாய்ப்புண்டு. மட்டக்களப்பு மேயர் சிவகீதாவின் மாற்றம் ஏதும் தாக்கம் விளைவிக்குமா என்பது தெரியவில்லை.


முஸ்லிம் மக்களின் வாக்குகள் தொடர்பில் என்னால் எதிர்வு கூற முடியவில்லை. வடக்கு கிழக்கு பிரிந்ததில் பெரும் பங்காற்றிய ஜேவிபி மற்றும் இத்தீர்ப்பை வழங்கிய சரத் என் சில்வா போன்றோர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிப்பது, முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் எவ்வித முன்னேற்றங்களும் இன்மை என்பன எவ்வாறானத் தாக்கங்களை உருவாக்கும் என்பது தெரியவில்லை.
சிங்களர்களில் நகர்புறத்தினர் மாற்றம் ஒன்றை எதிர்ப்பார்க்கினும் கிராம மக்கள் இன்னமும் ஜனாதிபதியை ராஜாதி ராஜனாகவே பார்க்கின்றனர். எப்படியோ தேர்தல் மிகுந்த பரபரப்பான ஒன்றாக இருக்கும்.
Related Posts with Thumbnails