மகிந்த லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகிந்த லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 ஜனவரி, 2010

ஜனாதிபதி தேர்தலும் சிறும்பான்மை வாக்குகளும்

நன்றி வந்தியத்தேவன்

சென்ற வருடத்தில் தாம் படித்த பதிவுகளில் பிடித்த ஒன்றாக என் பதிவையும் குறிப்பிட்டிருக்கிறார். பதிவர் வந்தியத்தேவன் அவருக்கு எனது நன்றிகள். ஆனால் கொஞ்சம் அதிகமாகவே ஆணி பிடுங்க வேண்டியிருப்பதால் இந்த வருடம் எத்தனை பதிவுகள் இட முடியுமென்பது சந்தேகம்தான். ஆனால் நேரத்தை சரியாக முகாமைப் படுத்த முடிந்தால் நிறைய பதிவிடல் சாத்தியமே. முயற்சிப்போம்.

தீர்க்கமான கட்டத்தை எட்டியிருக்கிறது இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் சச்சி,யோகராஜை தொடர்ந்து மூத்த அரசியல்வாதி எம்.எஸ்.செல்லச்சாமியும் சரத் பொன்சேகாவை ஆதரிக்கத் தயாராகி விட்டார். எனக்குத் தெரிய இப்போது CWC இல் ஜூனியர் தொண்டாவுடன் முத்து சிவலிங்கம் மட்டுமே இருக்கிறார் என நினைக்கிறேன். மலையக வாக்குகள் அதிகமாக எந்தப் பக்கம் போகும் என்பது தொடர்பில் இப்போது ஒரு முடிவுக்கு வரக்கூடியதாகவே உள்ளது.

சமாதனம் பேசிய காலத்தில்

யாழ் வன்னி வாக்குகளும் தமிழ் கூட்டமைப்பின் முடிவின் படியே இடப்படும் என நினைக்கிறேன். கிழக்கு தமிழ் வாக்குகள் மட்டுமே மற்றப் பக்கம் போகும் வாய்ப்புண்டு. மட்டக்களப்பு மேயர் சிவகீதாவின் மாற்றம் ஏதும் தாக்கம் விளைவிக்குமா என்பது தெரியவில்லை.


முஸ்லிம் மக்களின் வாக்குகள் தொடர்பில் என்னால் எதிர்வு கூற முடியவில்லை. வடக்கு கிழக்கு பிரிந்ததில் பெரும் பங்காற்றிய ஜேவிபி மற்றும் இத்தீர்ப்பை வழங்கிய சரத் என் சில்வா போன்றோர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிப்பது, முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் எவ்வித முன்னேற்றங்களும் இன்மை என்பன எவ்வாறானத் தாக்கங்களை உருவாக்கும் என்பது தெரியவில்லை.
சிங்களர்களில் நகர்புறத்தினர் மாற்றம் ஒன்றை எதிர்ப்பார்க்கினும் கிராம மக்கள் இன்னமும் ஜனாதிபதியை ராஜாதி ராஜனாகவே பார்க்கின்றனர். எப்படியோ தேர்தல் மிகுந்த பரபரப்பான ஒன்றாக இருக்கும்.

புதன், 25 நவம்பர், 2009

சரத் பொன்சேகாவின் பஞ்ச் டயலாக்


இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் அடுத்த வருடம் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. போர் வெற்றிக்கு காரணமாக சிங்கள மக்கள் மத்தியில் தன்னை வெளிக் காட்டிக் கொண்ட மகிந்த எவ்வித தடைகளும் இன்றி அனைத்து மக்களினதும் ஏகோபித்த தெரிவாக மீளவும் தெரிவாவார் என்ற நிலை இருந்த போதுதான் அவரே எதிர்பார்க்காத இந்த மாற்றம் வந்து சேர்ந்தது. போர் வெற்றியில் தன்னோடு சேர்ந்து பங்காற்றிய இராணுவத் தளபதியை ஊடங்களில் முன்னிறுத்தாது தவிர்த்ததும் , சந்தேகக் கண் கொண்டு பார்த்ததும், அவரை அரவணைத்துச் செல்ல தவறியதும் இன்று இவருக்கே வினையாகஅமைந்துள்ளது.



சற்றுத் திரும்பிப் பார்த்தோமானால் போர் வெற்றி மகிந்த முனைந்து மக்கள் முன் காட்டுவது போல அவரது தனிப்பட்ட வெற்றி கிடையாது. ரணில் விக்கரமசிங்க அவர் காலத்திலேயே புலிகளை ஒடுக்குவதற்கான வலுவான அடித்தளத்தை இராஜதந்திர ரீதியில் இட்டிருந்தார். பேச்சுவார்த்தையை இழுத்தடித்து இடைப்பட்ட காலப்பகுதியில் வன்னியினுள் இருந்த அமைதியான நிலைமையை போராளிகளிடமும்,மக்களிடமும் காணப்பட்ட போருக்கு ஆதரவான மனநிலையை சிதைக்கப் பயன்படுத்தியது, கருணாவை பிரித்தெடுத்து கிழக்கு மாகாணத்தை கை நழுவி போகச் செய்தது என்பன இவற்றுள்சில.

இலங்கையில் UNP அரசு அமைந்தால் அமெரிக்கா உள்ளிட்ட மேலைத்தேயங்களின் ஆதரவுடனும் , சுதந்திரக்கட்சி ஆட்சி அமைகையில் இந்திய,ரஷ்ய,சீன ஆதரவுடனும் புலிகளுக்கெதிரான போர் எப்பொழுதும் முனைப்பாக முன்னெடுக்கப்பட்டது. ஆனால் தமிழர் தரப்பு இவ்வாறான நேசத்தரப்புகளை கொண்டிருக்காமையால் தனியாகவே போராடும் நிலையிலேயே இருந்தது. ஓரளவேனும் வெளிநாட்டு தொடர்புகளை சிறப்பாக பேண வல்ல பாலசிங்கம் அவர்கள் இயற்கை எய்தியமையும் அதைத் தொடர்ந்த முக்கிய தளபதிகளின் மறைவும் மேலும் இயக்கத்தை பலவீனப்படுத்த அதன் பின் தமிழர் தலைமை தீர்க்கதரிசனமின்றி தேர்தலைப் புறக்கணிக்க ம்ம் இந்த நிலைமை. ஆக செத்த பாம்பை அடித்திருக்கிறார் மகிந்த

ரணில் வந்திருந்தால் பிரச்சினை தீர்ந்திருக்குமா என்பவர்களுக்கு பிரச்சினை தீர்ந்திருக்குமோ இல்லையோ இங்கே JVP கொடிப் பிடித்து ஆர்ப்பாட்டம் செய்துக் கொண்டிருந்தாலும் உயிரிழப்பின்றி ஐரோப்பிய நாடுகளில் சமாதானமாவது பேசிக் கொண்டிருந்திருக்கலாம்.

ஆனாலும் மகிந்த வந்த ஆரம்பக் காலப்பகுதியில் அப்போது இருந்த நிலையில் போருக்கு செல்ல முடியாத நிலையிலேயே இருந்தார். எனினும் அதையும் கெடுத்து யானை மன்னிக்கவும் புலி மாவிலாறு அணைக்கட்டை மூடி தன தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டது. தம் மீது இருந்த அதீத நம்பிக்கையா? அல்லது எதிரி மீதிருந்த தவறான கணிப்பா? இன்று வரை புரியவில்லை. என் பழைய பதிவொன்றைப் பார்த்தேன் கோயபல்சை நம்மூர் கெஹலிய ரம்புக்வேள்ளவுடன் ஒப்பிட்டு எழுதியது. அத்தனை தூரம் நம்பிக்கையுடன் தோற்கவே மாட்டார்கள் இவர்கள் சொல்வதுதான் பொய் என்ற சராசரி தமிழரின் மனநிலையில்தான் நானும்இருந்திருக்கிறேன்.



ஆனால் இன்றைக்கும் அதே மாதிரி வருவார், போராடுவோம், வெல்வோம் என்ற ரீதியில் கதைப்பது யாரை ஏமாற்றவெனத்தான் தெரியவில்லை. கதைப்போர் பெரும்பாலும் புலம்பெயர்ந்தோர் அல்லது தமிழகத்தைச் சேர்ந்தோர். புலம்பெயர்ந்தோருக்கு தமது இத்தனை வருடக் கனவு தகர்ந்து போனதில் உள்ள ஏமாற்றம் புரியக்கூடியதே. ஆனால் தமிழகம்! இங்கே தமிழர் தரப்பு பலமாய் இருந்த போதெல்லாம் வாய் பொத்தி சினிமா பார்த்து காலம் கழித்து விட்டு இப்போது பேசுவதில் யாதொரு பயனுமில்லை. அதுவும் கடைசி தேர்தலில் கூட வைகோவைத் தோற்கச் செய்தீர்கள், காங்கிரசை ஆட்சிப் பீடம் ஏற்றினீர்கள். சீமான் வகையறாக்களுக்கு வேறு தேவைகள் உண்டு. அவரது நாம் தமிழர் இயக்கமும் பிரபாகரன் பிறந்ததின வாழ்த்துப் போஸ்டர்களும் அதைத்தான் காட்டுகின்றன. தமிழகத்தில் தமிழ், இனம்,மானம்,தமிழ்நாடு எனப் பேசுவது அரசியல் வெற்றிக்கான ஒரு வழி அவ்வளவே. நாம் தமிழர்கள் உணர்ச்சித் ததும்ப இனம் பற்றிக் கதைப்போம் ஆனால் இனத்திற்காக ஒரு மயிரும் புடுங்க மாட்டோம் (நான் உட்பட).

ஆக இன்றைய நிலையில் விரும்பியோ விரும்பாமலோ தேர்தலொன்று நம் மீது திணிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சிறும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் அரசத் தலைவராக வரமுடியாத நிலையில் இரு பெரும் கட்சிகளில் ஒருவரையே நாம் தெரிவு செய்ய வேண்டியுள்ளது. இம்முறையும் தேர்தலைப் புறக்கணிப்பதால் யாதொரு பயனும் கிட்டுமென நான் கருதவில்ல்லை. ஆக இரண்டில் எது ஆகக் குறைந்த பாதகத்தை தருமென்பதே நம்முன் இருக்கும் தெரிவு. சரி எதுவாக அமைய வேண்டுமென்பது தொடர்பாக விவாதிக்க வேண்டியதில்லை. இலங்கையில் இருப்போர் இன்றைய நிலைமையை நன்கு அவதானிபபின் அவர்களாகவே ஒரு முடிவுக்கு வரக்கூடியதாய் இருக்கும்.
ம்ம் நிறைய எழுதியதில் தலைப்போடு தொடர்பான விஷயத்தை பேசவே முடியவில்லை. பொது வேட்பாளர் பொன்சேகா தான் என்பது கிட்டத்தட்ட முடிவான மாதிரிதான். அனுரா குமார திசாநாயக்க(JVP) நேற்று தமது பொது வேட்பாளர் இவர் என அறிவித்தார். லக்ஸ்மன் கிரியெல்ல(UNP) வேட்பாளர் பெயரை சொல்ல விலை எனினும் மக்கள் வாக்களிப்பது போரை வென்றவர்களுக்கா? விற்றவர்களுக்கா? என்ற தீர்க்கமான முடிவெடுக்கும் காலத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் எனக் கூறினார். ஆக இவை அவர்தான் போதுவேட்பாளர் என்பதை ஊர்ஜிதப் படுத்துவதாகவே உள்ளது.
நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னாள் ராணுவத் தளபதி சொன்னதுதான் சுவாரசியம். நீங்கள் அதிபர் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் வெல்வீர்களா? என்ற ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு ஒரு Hero பாணியில் அவர் சொன்ன பதில்
I have never lost in my life

திங்கள், 23 நவம்பர், 2009

மகேலவின் இரட்டைச்சதமும் சுவிஸ் சந்திப்பும்

முதன் முதலில் இந்தியாவில் சரித்திர வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்புகளை எல்லாம் ஏமாற்றி விட்டு Draw இல் முடிந்திருக்கிறது இந்தியாவிற்கெதிரான முதல் டெஸ்ட். பார்ப்போம் நாளைய கான்பூர் போட்டியில் என்ன செய்கிறார்கள் என்று

முரளியின் திறமை மங்கி விட்டதாக கருத்துரைத்தார் சிவராமகிருஷ்ணன். முரளி சாதித்திருப்பவையோடு ஒப்பிட்டால் இவரெல்லாம் ஒரு சுழற் பந்துவீச்சாளராக என்ன செய்திருக்கிறாரோ தெரியவில்லை.

2003 உலகக் கிண்ணத்தோடு அரவிந்த ஒய்வு பெற்றப் போது இனி கிரிக்கெட் பார்ப்பேனா என்றே சந்தேகமாய் இருந்தது. அப்போதெல்லாம் இலங்கையில் உலகத்தரத்தில் மதிக்கக்கூடிய ஒரே துடுப்பாட்டவீரர் அரவிந்த மாத்திரமே என்ற எண்ணம் சற்று அழுத்தமாகவே இருந்தது. ஆனால் அதே two Down position இல் அரவிந்தவை மிஞ்சி சாதனைகள் செய்கிறார் மஹேல. (பதிவுகள் என்ன சொன்னாலும் அரவிந்தவை மிஞ்சியவராக என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பது வேறு விடயம்.)
97 இல் சனத் முச்சதம் பெற்ற போட்டியிலே அறிமுகமான மஹேல அதிலேயே ரொம்பவும் risk எடுத்து பந்தை விக்கெட் வரை வரவிட்டு மிகத் தாமதித்து இலாவகமாய் அடித்த late cut களை பார்த்த போதே மிகுந்த தன்னம்பிக்கையானவராக தோன்றினார். அன்றிலுருந்து இன்று வரை அவர் வந்திருக்கும் பாதை நிச்சயம் மலைப்புக்குரியது. என்றாலும் மேற்கத்தேய ஊடகங்கள் இவரை விட சங்காவையே தூக்கிப் பிடிக்கும் மர்மம்தான் பிடிபடவில்லை. மஹேல இன்னும் கொஞ்சம் Fluent ஆக சங்கா போல English பேசிவிட்டால் சரி என நினைக்கிறேன்.
எல்லாமும் முடிந்த பின் எதைப் பற்றியோ பேச இலங்கையின் முக்கிய தமிழ் பேசும் அரசியற் கட்சி பிரதிநிதிகள் எல்லாம் சுவிஸின் ரைன் நதிக்கரையில் அமைந்திருக்கும் ஓரிடத்தில் கூடியுள்ளனர்.சிங்கள் பேரினவாதத்திற்கெதிரான வலுவான எதிர்த்தரப்பினை விமர்சித்தோ ஆதரித்தோ அதன் வாயிலாக பதவிகளைப் பெற்றோர் இன்றைய நிலையில் தமது பாராளுமன்ற கதிரைகளை எப்படித் தக்க வைப்பது என உரையாடுவார்கள் என்பதுதான் கசப்பானாலும் உண்மை. எப்படியோ பராசக்தி சிவாஜி சொல்வது போல அவர்கள் சுயநலத்தில் ஏதேனும் பொதுநலமும் கலந்திருந்தால் சந்தோஷம்.

ஒரு வழியாக இன்று ஐக்கிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுடனான கூட்டத்தில் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடாத்தி முடிக்க தீர்மானித்துள்ளதாய் ஜனாதிபதி கூறியிருக்கிறார். ஆக பொதுத்தேர்தலா ஜனாதிபதித் தேர்தலா என்ற குழப்பத்தில் இருந்த எதிர்க்கட்சிகளுக்கு குழப்பம் தீர்ந்திருக்கும். இனி என்ன தேர்தல் முடியும் வரை பரஸ்பர தூற்றல்களை ஒரு மசாலா படம் பார்க்கும் மகிழ்வுடன் பார்த்து மகிழ வேண்டியதுதான்.

திங்கள், 9 நவம்பர், 2009

சச்சின் முதல் சரத் பொன்சேகா வரை


Form is temporary, Class is permanent என்று சொல்வார்கள். அதுதான் ஞாபகம் வந்தது அன்று சச்சினின் அதிரடியைப் பார்த்த போது சச்சினின் துடுப்பாட்டம் எப்போதும் பலரால் சிலாகித்து பேசப்படும் ஒன்று என்றாலும் அழுத்தங்களின் போதோ முக்கியமான போட்டிகளிலோ பிரகாசிப்பதில்லை என்பது
அவர் மீது வைக்கப்படும் பொதுவான குற்றச்சாட்டு .எனினும் அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும் விதமான அந்த அதிரடி சதம் அவரால் மட்டுமே சாத்தியம். சச்சினை தாத்தா என்று சொன்ன யுவராஜ் சிங்கிலிருந்து காம்பிர்,டோனி அனைவரும் ஏமாற்றியதுதான் வருத்தமாய் போய் விட்டது. ம்ம் ஆனால் இந்த சதத்தையும் ஏதோ வெறும் இரண்டாம் நிலை பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவே பெற்றார் என்று அலம்பவும் நிறைய பேர்.



கமல்ஹாசனின் 50 வருட கலைச்சேவையை நினைவு கூறும் விதமாக இங்கு இலங்கையிலும் புத்தகம் வெளியிட்டுக் கொண்டாடி இருக்கிறார்கள். ( பதிவர் வந்தியதேவனுக்கு தெரியுமோ தெரியாது) . இவரது 50 வருட கலைப் பணியை முன்னிட்டு "50 ஆண்டுகள் சினிமாக் கலையில் பத்மஸ்ரீ கமல்ஹாசன்'' என்ற சாந்திலால் டேனியல் தொகுத்த நூல் கடந்த 25/10/2009 அன்று சுகததாஸ ஸ்போர்ட்ஸ் ஹோட்டலில் வெளியிட்டு வைக்கப்பட்டதாம். எனக்கு இருந்த ஒரே சந்தேகம் இந்த விடயம் கமலுக்கு தெரியுமா?

வாழத் தகுதியில்லாதவர்களுக்கு மரணம் ஒரு வரம் என்று பாலா ஒரு தீர்வை சொன்னாலும் சொன்னார் இங்கு நம்மூரிலும் நான்தான் கடவுள் என்ற மப்பில் திரியும் பொலிசாரின் அதிகாரம் தூள் பறக்கிறது. பம்பலப்பிட்டிக் கடலில் தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கேள்விப்பட்டிருப்பீர்கள். பொல்லால் அடிவாங்கி கடலில் மூழ்கி உயிரிழக்கும் அளவுக்கு அந்த இளைஞன் செய்த பாவம் என்ன தெரியுமா? காதல் தோல்வியால் மனச்சிதைவுக்குள்ளாகி இருந்தவன் பாதையில் போகும் வாகனங்களுக்கு கல்லெறிந்துள்ளான்.
சம்பவத்தை முழுவதுமாய் ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளரின் தொழில் நேர்த்தியையும் வேடிக்கை பார்த்த மக்களின் மனிதாபிமானத்தையும் எப்படி சொல்வதென்றே தெரியவில்லை



வேலையற்ற பட்டதாரிகள் இணைந்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் பொலிசாரின் தடியடி+கண்ணீர் புகைகுண்டு வீச்சோடு இனிதே நிறைவுற்றது. பாவம் அதன் ஏற்பாட்டாளர் இப்போதே முன்னால் நெற்றியில் முடியெல்லாம் போய் பரிதாபமாக இருந்தார்(நிச்சயம் இளம் வழுக்கை இல்லை). " பைத்தியக்கரனுகளா இருக்கானுங்க இப்பெல்லாம் எத்தனை வாய்ப்புகள் எது தேவையோ அதை கொஞ்சம் காசை வீசி படிச்சிட்டு வேலைகளை பார்க்கப் போகாம" சலித்துக் கொண்ட நண்பனுக்கு தெரியவில்லை இன்னமும் உலகமயமாக்கலின் சாத்தியங்கள் இலங்கையின் கிராமங்களுக்கு எட்டாதது. பிள்ளை பல்கலைகழகம் போவதாலேயே கை நிறைய சம்பாதிக்கப் போகிறான் என்ற எதிர்பார்ப்பிலிருந்த பெற்றோருக்கும், தான் படிக்கும் காலத்தில் தன்னோடு படித்த அரைகுறை மாணவன் IT அல்லது Marketing fieldஇல கை நிறைய சம்பாதிப்பதை பார்க்கும் இளைஞனுக்கும் எப்படி இருக்கும். இங்கே இப்படி நடந்தாலும் நம்ம ஜனாதிபதி ஹுகோ சாவேசுடன் கை குலுக்குகிறார், அகமது நிஜாமுதீனை அணைக்கிறார், வியட்நாம், நேபாளம் என்று பயணிக்கிறார் சீனாவுடன் சேர்ந்து அமெரிக்காவை மிரட்டுகிறார். என்ன அழகான முரண்பாடு.



சிங்கள மக்கள் மத்தியில் காணப்பட்ட மகிந்த அலை குறைந்து வருவதாய் காட்ட பகீரத பிரயத்தனங்களை மேற்கொள்கின்றன எதிர்கட்சிகள். அமேரிக்கா சென்ற சரத் பொன்சேகா விசாரணைக்கு முகம்கொடுக்காமல் திரும்பி வந்தமையால் சிங்களவர் மத்தியில் ஒரு ஹீரோ ஆகி உள்ளார். அவரை சதி வலையில் சிக்க வைக்க அரசே முயன்றது என UNP யும் JVP யும் குற்றஞ்சாட்டும் அதேவேளை அவரை பத்திரமாய் நாடு சேர்த்தது நாமே என வெளியுறவு அமைச்சர் கூறுகிறார். முன்னால் இராணுவத்தளபதி முகங்கொடுக்க மறுத்த விசாரணைக்கு இரு மாதங்களுக்கு முன்னமே பாதுகாப்பு செயலர் முகங்கொடுத்திருப்பதாய் வந்துள்ள தகவல்கள் நிச்சயம் அரசு தரப்புக்கு ஒரு பின்னடைவுதான். இலங்கையின் பிரதான தொலைகாட்சி ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் கூட்டமைப்பின் போதுவேட்பாளர் யார் என்பது தொடர்பில் SMS போட்டியை ஏன் இன்னும் ஏற்பாடு செய்யவில்லை என்பதே என் யோசனை. ( நமக்கென்ன " ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை")
Related Posts with Thumbnails