அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 ஜனவரி, 2011

சிறிலங்காவின் தேசியத் தற்கொலை- ஒரு பார்வை



விமலாதித்த மாமல்லன் தனது தளத்தில் பகிர்ந்திருந்த பிரமிள் எழுதிய "சிறிலங்காவின் தேசியத் தற்கொலை" புத்தகத்தை ஒரே மூச்சாக படித்து முடித்தேன். ஒரே மூச்சாக படித்து முடிக்குமளவிற்கு புத்தகம் சுவாரசியமாக இருந்தது பிரதான காரணம். 1984 இல் வெளிவந்த இப்புத்தகம் வரலாற்றுக் காலத்திலிருந்து 83 ஜூலை கலவரம்  வரை  இலங்கையின் பிரதான இனங்களுக்கிடையே முறுகல் தோற்றம் பெற்று வளர்ந்த விதம் பற்றி விபரிக்கிறது.

சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையின் நிலைமை, தமிழர்-சிங்களவர் விரோதம் முளைகொண்ட விதம், தீர்க்கதரிசனம் அற்ற தமிழ் தலைமைகளின் செயல்பாடுகள், சில தமிழ் அரசியல்வாதிகள் தமது மேட்டுக் குடி சிந்தனையால் மலையகத் தமிழரின் இருப்புக்கு குழி பறித்தமை, தனி நாட்டு கோரிக்கையில் பிடிப்பின்றி இருந்த வடக்கிற்கு வெளியே வதியும் தமிழரையும் தமிழீழத்தை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளிய சிங்கள தேசியவாதம்ஜே ஆரின் திறந்த பொருளாதாரக் கொள்கை முறுகலை தீவிரமாக்கும்  ஒரு காரணியாக இருந்தமை, ஜேவிபியினர் எழுபதுகளில் இடது சாரி சித்தாந்தங்களுடன் தமிழருக்கு எதிரான இனவாதத்தையும் தமது கோசமாக கொண்டமை என சுதந்திரம் பெற்றதிலிருந்து இனப்பிரச்சினை உக்கிரம் பெற்ற 83 கலவரம் வரையான காலத்தை எவ்விதப் பாரபட்சமுமின்றி தமிழ்-சிங்கள இரு தரப்பினரும் விட்ட வரலாற்றுத் தவறுகளை சுட்டிக் காட்டி மிகச்  சிறப்பாக அலசி ஆராய்ந்திருக்கிறார் நூலாசிரியர்.

இருந்தாலும் வரலாறு  கொஞ்சம்  தவறான தகவல்களுடன், சிங்களவர்-தமிழர் ஆகிய இருசாராரும் திராவிடர்களே ஒரே பிராந்தியத்திலிருந்து வந்து குடியேறியவர்களான இவர்களுள் தமிழருக்கே இலங்கையில் அதிக பாத்யதை உண்டு என நிறுவ முற்படுவதைப் போல் தோன்றியது. இவ்வாறன  கல் தோன்றி மண் தோன்றா கற்பிதங்களே  நம் இன்றைய நிலைக்கு காரணம் என் நம்புபவனாதலால் அதை என்னால் ஏற்க  இயலவில்லை.

அப்படி என் கண்ணுக்குத் தட்டுப் பட்டவை. தேவநம்பிய தீசனின் பெயர் காரணம் பற்றிக் கூறுகையில் அதில் வரும் நம்பி என்பது இன்றும் கேரளத்தில் வழங்கி வரும் நம்பூதிரி போன்றவற்றின் மரூஉ எனக்  கூறுகிறார். ஆனால் அதை தேவநாம் (தேவனின்) பிய(பிரியத்துக்குரிய) தீசன் என்றே படித்திருக்கிறேன்.
இலங்கையின் பூர்விகக் குடிகள் பற்றி பேசும் போது குவேனி என்பது தமிழ் பெயர் எனவும் எனவே அவளும் அவளைச்  சார்ந்த ஏனைய இயக்கர்களும் ஆதி திராவிடர்களாகவே இருக்கவேண்டுமெனக் கூறுகிறார். விஜயன் வருகைக்கு  முன்னர் இலங்கையில் இருந்ததாக  சொல்லப்படுபவர்கள் இயக்கரும் நாகர்களும் ஆவர். ஆனால் அவர்கள் தமிழை பேசிய திராவிடர்கள் என்பதற்கோ இந்து சமய வழிபாடு இருந்தது என்பதற்கோ எவ்வித சான்றுகளும் இல்லை.  
அடுத்து விஜயன் சிங்கத்திற்கு பிறக்கவில்லை. இளவரசி ஒருத்திக்கும் சிங்கத்திற்கும் பிறந்த சிங்கபாகூ மற்றும் அவனது சகோதரி சிங்கசீவலிக்கும் பிறந்தவனே விஜயன். அவன் தந்து 700  தோழர்களுடன் நாடு கடத்தப்பட்டான். 200 அல்ல. இலங்கையின் முதற் தலைநகரம் அனுராதபுரமே அன்றி பொலன்னறுவை அல்ல.சரி அதை விடுவோம் புத்தகத்தில் இருந்த வேறு சில சுவாரசியத் தகவல்கள்.

விஜயன் - குவேனியின் காதல் கதை ஒடிஸ்ஸியஸ் மற்றும் ஸரஸ் இன் கதை போலிருப்பதாகவும் மகாவம்சம் இவ்வாறன பல தேச காவியங்களில் இருந்தும் உருவி பிசைந்த  கற்பனையான கலவை என்றும் சொல்லியிருந்தது நூற்றுக்கு நூறு உண்மை. அதைப் படித்த போது எனக்கு மேலும் சில கதைகள் ஞாபகம் வந்தது. பண்டுகபாயனின் கதை (இக்கதை "அபா" என்ற பெயரில் சினிமாவாகவும் உண்டுஅப்படியே கிருஷ்ணன் கதையையும், எல்லாளன் மாட்டுக்கும் நீதி வழங்கிய கதை அப்படியே மனு நீதிச் சோழன் கதையையும் , தீசன் மகிந்தரின் கேள்விகளுக்கு பதிலளிப்பது யுதிஷ்டிரர் யட்சனின் கேள்விகளுக்கு பதிலளிப்பதையும் , தீசனுகும் அசோகச் சக்கரவர்த்திக்கும் இடையில் நிலவியதாய் சொல்லப்படும் நட்பு  கோப்பெருஞ்சோழன்,பிசிராந்தையார் நட்பையும் ஞாபகப்படுத்தியது.

1970 சே குவேரா குழுவினர் என்ற பெயரில் அரசுக்கு எதிராக செய்த கிளர்ச்சியின் போது வர்க்க உணர்வை வெளிப்படுத்துவதற்கு பதிலாக இன வாத கோசத்தையே முன்வைத்தனர் என்பது ஜேவிபியினர் அப்போதே இப்படித்தான் என்பதற்கு நல்லதொரு உதாரணம். இங்கே நம்மவர்கள் ஏதோ ரோகன விஜேவீர அந்நாட்களில் தமிழரின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டதாக கதைப்பதுண்டு.

அடுத்து அரச மரங்களின் மீதான தமிழர்களின் அச்சம் இன்னமும் தமிழர் மத்தியிலே அரச மரமும் புத்தர் சிலையுமே சிங்கள விரிவாக்கத்தின் ஆரம்பப் படிகளாக பார்க்கப்படுகிறது.
ஆக சிங்கள-தமிழ் இனப் பிரச்சினையின் தோற்றம், இருதரப்பு தலைமைகளின் தவறுகள் ஒரு நாட்டையே போர்ச்சூழலுக்குள் தள்ளியமை என்பன பற்றி சிறப்பாய் அலசுகிறது இந்நூல். அதன்பின்னர் இயக்கங்களுக்கிடையிலான சகோதர படுகொலைகள், இந்திய - இலங்கை ஒப்பந்தம், ராஜீவ் மறைவு, சந்திரிகா அரசு, யாழ் வீழ்ச்சி, ரணில்-பிரபா ஒப்பந்தம், ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு, மகிந்த பதவியேற்பு என அதன் பின்னரான இன்றைய நிலை வரையிலான  தமிழ் தேசியத்தின் தற்கொலையை எவ்வித சார்புத் தன்மைகளும் இல்லாமற் அலசும் நூல் இன்றைய நிலையில் சாத்தியமா


வியாழன், 13 ஜனவரி, 2011

பெருமழைக்காலம்


கிட்டத் தட்ட 20 வருடங்களில்  இல்லாத அளவு அடிக்கும் குளிரில் முழு நாடுமே உறைந்து போயுள்ளது. கொழும்பே 20 பாகை செல்சியசிலும் குறைவான வெப்பநிலையை எட்டி நுவரலிய போல குளிர்கையில் நுவர எளிய என்னவாகி இருக்கும் என ஊகிக்கலாம். இங்கே மாத்தளையில் நானெல்லாம் விறைத்திருக்கும் விரல்களை  கொண்டு ரோபோ போல இந்த பதிவை டைப் பண்ணிக் கொண்டிருக்கிறேன். இந்தக் குளிர் பெப்ரவரி வரை தொடரும் என்பதால் அதற்கேற்ற ஆயத்தங்களை செய்வது நல்லது.   

ஊரில் சில பெருசுகள் கலிகாலம் என்று அலுத்துக் கொண்டதோடு எல்லாமே அழிவுக்குத்தான் என்றும் 2012 இல் எல்லாம் முடிந்தது என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்ஆனால் வழமையான வடகீழ் பருவப் பெயர்ச்சி மழையே இவ்வாறு பெய்வதாக வளிமண்டலவியற் திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் சிலர்  இது ஏதோ லா நினோ என்கிறார்கள். தென் பசிபிக் சமுத்திரத்தின் வெப்பநிலை 3 பாகை செல்சியசிலும்  குறைவதால் ஏற்படும் நிலைமை. லா நினோ என்றால் ஸ்பானிஷ் மன்னிக்கவும்  எஸ்பஞோல்  மொழியில் குட்டிப் பெண் என்று அர்த்தமாம் பெண் என்றாலே பிரச்சினைத்தான் போல இருக்கிறது

நாலு  ஐந்து நாட்களாக காட்டு காட்டென்று காட்டிய மழையில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடிழந்தும், 21  பேர் உயிரையே இழந்தும் இருப்பதோடு கிட்டத்தட்ட 1 மில்லியனை அண்மித்தவர்கள் மழையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆக நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று பாதிக்கப்பட்டோருக்கு இந்நேரத்தில் அவசியப்படும் உலர் உணவுப் பொருட்கள், மருந்து வகைகள் போன்றவற்றை உங்களுக்கு இயன்றளவில் வாங்கி இம்மனிதாபிமான பணியில் ஈடுபட்டிருப்போரிடம் சேர்த்து விடுங்கள். இதுவே நம்மிடம் கொஞ்சமேனும் எஞ்சியிருக்கும் மனிதத்துக்கு சான்றாய் அமையும். அப்புறம்  தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளான .தே. கூ வினர் இதற்கும் தமிழீழத்தை எதிர்ப்பார்த்தது போல இந்தியாவை எதிர்பார்த்திருப்பதாக அறிந்தேன்.


புதன், 11 ஆகஸ்ட், 2010

என் டைரியிலிருந்து


ஒருவாறாக பூனைக்கு மணி கட்டியாகியாயிற்று. நவீன துட்டகைமுனுவை அரசு கட்சியிலிருந்தும் இடைநிறுத்தும் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். மேர்வின் சில்வா இலங்கை அரசியலின் சாரு நிவேதிதா. அவர்  மகாராஜா நிறுவனத்திற்கே சென்று அதன் தலைவரை ஏசுகிறேன் என்ற பெயரில் ஒட்டுமொத்த தமிழர்களையும் இந்தியானு பற தெமலோ( இந்தியப் பறத்தமிழர்கள்) எனத் தூற்றிய போதும், ரூபவாஹினிக்குள் குண்டர்கள் சகிதம் போய் குழப்பம் விளைவித்து பின் மண்டை உடைந்து வெளியேறிய போதும் வாளாவிருந்த அரசு இப்போதாவது விழித்துக் கொண்டது ஆச்சரியம். இதை விட ஆச்சரியம் இம்முறை தேர்தலில் இவரைப் பெருவாரியான வாக்குகளால் வெல்ல வைத்த மக்கள். முன்னாள் அமைச்சரால் மரத்தில் கட்டப்பட்ட அந்த சமுர்த்தி உத்தியோகத்தர்தான் இனிமேல் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.


பிரபா கணேசனும் திகாம்பரமும் எதிர்த்தரப்பிலிருந்து மக்களுக்கு சேவை செய்ய முடியாமலிருக்கும் அவல நிலையை எண்ணி அரசுடன் இணைந்து விட்டார்கள். திகா அரசுடன் சேர்வது ஆச்சரியம் தராத நிலையில் தம்மை ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைத்து விட்டு சகோதரனுக்கும்,கட்சிக்கும், தமிழர்களுக்கும் துரோகம் செய்த பிரபா கணேசனின் செயல் அருவருக்கத்தக்கது.

முரளிதரன் ஒய்வு பெற்ற போது காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வோமென அவசர அவசரமாக பதிவொன்றை எழுதியிருந்தேன். ரெண்டே பந்திகளில் ரொம்பவும் சுமாரான பதிவு. விகடனின் குட ப்ளொக்ஸ் பகுதியில் கூட அந்த பதிவு வந்திருந்தது. அண்மையில் சக பதிவர் யோகா (யோ வாய்ஸ் ) மூஞ்சி புத்தகத்தினூடு ஒரு தகவல் அனுப்பியிருந்தார். அதாவது அந்தப் பதிவு அப்படியே இலங்கையில் வெளிவரும் நியூஸ் வியூ எனும் சஞ்சிகையில் வந்திருந்ததாம். இன்னார் எழுதியது இன்ன வலைப்பூவிலிருந்து எடுக்கப்பட்டது என்ற எந்தத் தகவலும் இன்றி. மாத்தளையில் எந்தக் கடையிலும் இச்சஞ்சிகை கிடைக்காததால் நான் பார்க்கவில்லை. நன்றி இணையம் என்று போட்டால் சரி என நினைக்கிறார்கள். இணையத்திற்கு இந்தப் பதிவை காக்காவா தூக்கி  கொண்டு வந்து போட்டது. எவனோ ஒருவன் கொஞ்சமேனும் கஷ்டப்பட்டு எழுதியதை லவட்டத் தெரிகின்றவர்களுக்கு எதற்கும் எழுதியவனுக்கு நன்றியேனும் சொல்லுவோம் என்ற குறைந்த பட்ச நாகரிகமும் தெரியாமற் போவது வருத்தமாய் உள்ளது.  பதிவர்களை கிள்ளுக் கீரையாக நினைத்து விட்டனரா? என நண்பர் கண்கோன் கோபியும் குழுமத்தில் மடலிட்டுக் கொந்தளித்திருந்தார். அவர் அன்பிற்கு நன்றி. ஆசிரியப் பீடத்திடம் தொடர்பு கொண்டு கேட்கத்தான் வேண்டுமா என விட்டு விட்டேன்.


திங்கள், 12 ஏப்ரல், 2010

பாராளுமன்ற தேர்தலில் நட்சத்திரங்கள்



இருக்
கட்சிகளின் சார்பிலும் நிறைய சினிமா,விளையாட்டுத் துறை நட்சத்திரங்கள் போட்டியிட்ட தேர்தல் இதுவாகத்தான் இருக்கும். ஆளுங்கூட்டணி சார்பில் விளயாட்டுத் துறை பிரபலங்களாக போட்டியிட்ட சனத், சுசந்திகா ஆகியோரில் சனத் மாத்தறை மாவட்டத்தில் முதலாவதாய் வந்திருக்கும் நிலையில் சுசந்திக்கா கேகாலையில் தோல்வியடைந்துள்ளார். சினிமா பிரபலங்களைப் பொறுத்தவரை காலியில் கீதா குமாரசிங்க தோல்வியடைந்த போதும் தேசியப்பட்டியலில் மாலினி பொன்சேகாவுக்கு இடம் கிடைக்கும் என நம்பலாம்.
தோல்வியுற்றோர்

சுசந்திகா ஜெயசிங்க

கீதா குமாரசிங்க

ஆளுங் கட்சி சார்பில் வென்ற ஒரே நட்சத்திரம்

ஐக்கியத் தேசியக் கட்சியைப் பொறுத்த வரை முன்னாள் Mrs World மற்றும் தற்போதைய மேல்மாகாண எதிர்க்கட்சி தலைவி ரோசி சேனநாயக்க, நடிகரும் சப்ரகமுவ மாகாண எதிர்க்கட்சி தலைவருமான ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் வெற்றிப் பெற்றுள்ளனர். இவர்கள் நீண்டகாலமாக தீவிர அரசியலில் தாம் சார்ந்த கட்சியில் பற்றுறுதியோடு தோல்வியின் போதும் இருந்தவர்கள். ஆக இவர்களின் தெரிவு பொருத்தமானதே.

ரோசி சேனநாயக்க

ரஞ்சன் ராமநாயக்க

எனினும் நடிகை உபேக்ஷா ஸ்வர்ணமாளிக்கு எல்லாம் என்னத் தெரியும். இவரும் வென்றிருக்கிறார் அதுவும் ஐக்கியத் தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவை விட அதிகமான வாக்குகளுடன் இவருக்கு வாக்களித்த மக்களின் மன நிலை கொஞ்சமும் புரியவே இல்லை. இதே உடையோடு பாராளுமன்றம் செல்லாமல் இருந்தால் சரி. இவரது "சன்ச்சலா" பாடல் எனக்கு ரொம்பவும் பிடித்த ஒன்று.

உபேக்ஷா
சரத் + ஜேவிபி + அர்ஜுன கூட்டில் போட்டியிட்டு வென்ற ஒரே நட்சத்திரம் அர்ஜுன ரணதுங்க. அவரது தைரியமான அரசியல் முடிவுகள் நிச்சயமாக பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

இவர்கள் என்றில்லை டிவியில் வருவதால் ஊடகவியலாளர்களான ஸ்ரீரங்கா, புத்திக்க பத்திரன, மனுஷ்ய நாணயக்கார, சுசில் கிண்டேல்பிட்டிய, சுதர்மன் போன்றோரும் நமக்கு நட்சத்திரங்கள்தான். இவர்களில் முதல் மூவர் மட்டுமே வென்றிருக்கின்றனர்.

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

புதிய பாராளுமன்றத்தில் மலையகம்


இனி இந்த பாழாய்ப் போன அரசியற் கணிப்புகளை எல்லாம் சொல்லக் கூடாது. பிறகு நம்ம மக்களைப் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. எத்தனை அழகாகக் கவிழ்க்கிறார்கள். போட்டிக் கொஞ்சம் கடுமையாக இருக்கும் என்ற என் அடிமன ஆசை எல்லாம் நிறைவேறாமல் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது ஆளும் கூட்டமைப்பு அரசாங்கம்.

மாத்தளையில் நான் கணித்ததுப் போல மூன்றுக்கு இரண்டு என்பதாக இல்லாமல் நான்குக்கு ஒன்று என்ற ரீதியில் மாபெரும் வெற்றிப் பெற்றிருக்கிறது அரசு. கூட்டமைப்பின் சார்பில் நான் எதிர்வு கூறிய நால்வரே வென்றிருக்கின்றனர். எனினும் மூன்றாமிடத்திற்கு போட்டியிடுவார் என நான் கருதிய லக்ஷ்மன் வசந்த ஆகக்கூடிய விருப்பு வாக்குகளை பெற்று முதலாமிடத்திற்கு வந்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பத்து வருடங்களாக பாராளுமன்றில் இருக்கும் ரஞ்சித் அலுவிஹார தோல்வியுற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கண்டியைப் பொறுத்தவரை நாவலப்பிட்டியில் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேயின் அட்டகாசத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முடிவுகள் இருபதாம் தேதி சில நிலையங்களில் நடைபெறும் மறு வாக்களிப்புக்குப் பின்னர் பெரும் மாற்றங்கள் இன்றி வெளிவரும் என நினைக்கிறேன். அது பெரும்பாலும் ஏழு , ஐந்தாக இருக்கலாம். எனினும் மனோ கணேசன் தெரிவாக மாட்டார் என்றே அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுவர எளிய வாக்காளர்கள்தான் என்னை அப்படியே கவிழ்த்து விட்டனர். உண்மையில் இது அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் அரசியல் சாணக்கியத்திற்கு கிடைத்த வெற்றி. ஆளுங் கூட்டமைப்புக்கு கிடைத்த ஐந்து உறுப்பினர்களில் முதல் மூவர் தொழிலாளர் காங்கிரசை சேர்ந்தவர்கள் தலைவர் ஆறுமுகம் தொண்டமானுடன், முன்னாள் மத்திய மாகாண கல்வியமைச்சர் ராதாக்ருஷ்ணன், ராஜதுரை ஆகியோரோடு அடுத்த இரு இடங்களில் சி.பி ரத்னாயக்க, நவீன் திசாநாயக்க ஆகியோர் தெரிவாகி உள்ளனர். ஐக்கியத் தேசியக் கட்சியைப் பொறுத்தவரை பாராளுமன்றிற்கு முதன்முறையாக இளைஞர்களான திகாம்பரம், ஜே.ஸ்ரீரங்கா ஆகியோர் தெரிவாகியுள்ளனர். எழுவரில் ஐவர் தமிழர்கள்.மகிழ்ச்சி.


தொழிலாளர் காங்கிரசில் போட்டியிட்டு தெரிவானவர்கள் மூவர் தேசியப்பட்டியலில் இருவர் என ஐவர் பாராளுமன்றத்திற்கு செல்லப் போகின்றனர். இரண்டு அமைச்சுப் பதவிகள் கிடைக்கலாம். (தொண்டா குடும்பத்தினர் பங்களிப்பின்றி ஒரு அமைச்சரவை இலங்கையில் இருந்ததுதான் உண்டா 77 க்குப் பின்) . செயற்றிறன் மிக்கவர்கள் எனக் கருதப்படும் எதிர்கட்சியைச் சேர்ந்த இருவரும் நம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றில் நிறையவே குரலெழுப்புவர் என நம்பலாம்.

அப்புறம் பதுளையில் இருந்த இரண்டு தமிழர் பிரதிநிதித்துவத்தையும் வெற்றிக்கரமாய் இழந்திருக்கிறோம்.
இதுதான் புதிய பாராளுமன்றில் மலையகத்தின் நிலைமை.

வியாழன், 8 ஏப்ரல், 2010

2010 பொதுத்தேர்தலில் மலையகம்



இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் இன்றைய தினம் நடைபெறுகிறது. ஆளுங்கட்சியின் வெற்றி உறுதியாகி இருக்கும் நிலையில் அது எதிர்பார்க்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிட்டாது என்பதே என் எண்ணம். முழு இலங்கையினதும் நிலவரம் தொடர்பில் ஆராயாது கருத்து சொல்லல் பொருத்தமாக இராது என்பதால் மலையகத்தின் மூன்று மாவட்டங்களிலும் பெறப்படக்கூடிய பெறுபேறு தொடர்பில் நான் அவதானித்த அறிந்த விடயங்களின் அடிப்படையிலமைந்த சிறு கணிப்பே இப்பதிவு.

முதலில் மாத்தளை மாவட்டம். நான் வாழும் மாவட்டம். 80 % சதவீதம் பெரும்பான்மையினரையும் 10 % சதவீதம் தமிழரையும் 8 % முஸ்லிம்களையும் வாக்காளர் இடாப்பில் கொண்ட இம்மாவட்டத்தில் 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படப் போகின்றனர். எனது கணிப்பின் படி இங்கு மேற்படி ஐந்து ஆசனங்கள் ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு மூன்றும் பிரதான எதிர்கட்சியாக வரப்போகும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இரண்டுமாக பிரியப்போகின்றது. ஆளுங் கட்சி சார்பில் தெரிவாகப் போகும் மூவரில் ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன் ஒரு சிறிய நகரமாக மட்டுமே இருந்த தம்புள்ளவை தூங்கா நகரமாக மாற்றிய அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன், முன்னால் அமைச்சரும் மத்திய மாகாண முதலமைச்சருமான நந்திமித்ரா ஏக்கநாயக்க ஆகியோரின் வெற்றி நிச்சயமான நிலையில் மூன்றாவது இடத்திற்கு தெரிவாவது அமைச்சர் ரோகன திசாநாயக்கவா இல்லை புதுமுகம் லக்ஸ்மன் வசந்த பெரேராவா என்பதே கேள்விக்கிடமாகி உள்ளது. ரோகன ஏலவே மாவட்டத்திற்கு நிறைய சேவைகள் செய்துள்ள போதும் லக்ஷ்மன் வாரியிறைக்கும் பணம் அவருக்கு சாதகமாக உள்ளது.

ஐக்கியத் தேசியக் கட்சியின் சார்பில் பாரம்பரியமாகவே எப்போதும் நிகழ்வது போல முன்னால் அமைச்சர் அலிக் அலுவிகாரவின் இரு புதல்வர்களான முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மற்றும் முன்னாள் மத்திய மாகாண சபை முதல்வர் ,தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் வசந்த ஆகியோரே தெரிவாகப் போகின்றனர். சஞ்சீவ கவிரத்ன, ரோகன பண்டாரநாயக்க ஆகியோர் கணிசமான வாக்குகளைப் பெறலாம்.

ஜேவிபி சரத் பொன்சேகா கூட்டான ஜனநாயக முன்னணி ஆசனம் எதையும் கைப்பற்ற போவதில்லை. அதன் படி சென்ற முறை ஜேவிபி சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வென்று இம்முறை ஜனநாயக முன்னணியில் போட்டியிடும் சுஜாதா அழகக்கோனின் வெற்றி உறுதி.

இங்கு சிறும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவாக வாய்ப்பில்லை என்பது வெள்ளிடைமலை. இருப்பினும் விகிதாசார தேர்தல் முறையின் அனுகூலமான பக்கத்தை சரியாகப் பயன்படுத்தினால் அது சாத்தியமே. அதாவது மாவட்டத்தில் அதிக ஆசனங்களை பெறும் என நிச்சயமாக நம்பப்படும் கட்சியில் உள்ள சிறும்பான்மை வேட்பாளர் இருவருக்கு அனைத்து சிறும்பான்மையினரும் திரண்டு தமது வாக்குகளை அளிப்பதோடு மூன்றாவது விருப்பு வாக்கை எந்த ஒரு பெரும்பான்மை வாக்காளருக்கும் அளிக்காது விடல். எனினும் அத்தனை தீர்க்கதரிசனம் நம் மக்களுக்கு இல்லையாதலால் அது இன்னும் பல வருடங்களுக்கு சாத்தியப்படப் போவதில்லை.


அடுத்து கண்டி மாவட்டம். மத்திய மாகாண தலைநகரம். அதிகமான உறுப்பினர்களாக 12 உறுப்பினர்கள் இங்கே தேர்ந்தெடுக்கப்படப் போகின்றனர். 14 சதவீத முஸ்லிம்களும் 13 சதவீத தமிழர்களும் 70 சதவீத சிங்களவர்களும் வாக்களிக்க உள்ளனர். ஐக்கய தேசியக் கட்சியின் கொட்டைகளில் ஒன்று. இப்போதெல்லாம் நிலைமை அப்படி இல்லை ஆக இங்கும் ஆளும் கூட்டணியே வெற்றிப் பெறப் போகிறது. எனது கணிப்பின் பிரகாரம் ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆறு, ஐக்கிய தேசியக் கட்சி ஐந்து, ஜனநாயக முன்னணி ஒன்று என்ற ரீதியில் ஆசனங்கள் பிரியலாம். ஆளுங் கூட்டணியின் அறுவர் கெஹெலிய ரம்புக்வெல்ல, மகிந்தானத அலுத்கமகே, சரத் அமுனுகம , எஸ். பி. திசாநாயக்க என்பதெல்லாம் நிச்சயமான நிலையில் எஞ்சியிருக்கும் இரு இடங்களுக்கு லோகன் ரத்வத்த, திலும் அமுனுகம, பைசர் முஸ்தபா என்போரிடையே பாரியப் போட்டி நிலவக்கூடும். முஸ்லிம்கள் பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கே வாக்களிப்பர் என்ற போதிலும் அமைச்சர் பைசர் ஹாரிச்பத்துவ தொகுதியில் செய்துள்ள சேவைகளைக் கருதுமிடத்து அவருக்கான வாய்ப்புகளும் பிரகாசமாகவே உள்ளன. மிகுந்த ஆளுமையுள்ளவர். தமிழர்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஆளுங் கட்சி சார்பில் போட்டியிடும் துரை மதியுகராஜாவின் தோல்வி நிச்சயம்.

ஐக்கியத் தேசியக் கட்சியில் தெரிவாகும் ஐவரை எதிர்வு கூறல் சற்றுக் கடினம்தாம். சென்றமுறை பெருவாரியான வாக்குகளால் வென்றவர்கள் எல்லாம் இம்முறை ஆளுந்தரப்பில் பைசர் முஸ்தபா,கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோர். திஸ்ஸ அத்தநாயக்க தேசியப்பட்டியலில் எனவே லக்ஷ்மன் கிரியெல்ல, அப்துல் காதர் தவிர ஏனையோர் புதுமுகங்களாய் இருக்கப் போகின்றனர். சென்றமுறை திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்டு வென்று இம்முறை மீண்டும் தன் பிறந்தகத்தில் களமிறங்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களின் வெற்றியும் ஏலவே நிச்சயிக்கப்பட்ட ஒன்று. ஆக அடுத்த இரண்டு இடத்திற்கு பலத்தப் போட்டி நிலவப் போகிறது. இப்போட்டியில் சென்ற முறை வென்ற ஹலீம் அவர்களின் வெற்றி சற்றேக் கேள்விக்குறியாக உள்ளது. அந்த இரண்டு இடங்கள் ஹலீம்,மனோ கணேஷன், சித்ரா மண்திலக்க, லக்கி ஜெயவர்தன ஆகியோரில் இருவருககே செல்லக்கூடிய வாய்ப்புண்டு. மனோ கணேசனின் கண்டி மாவட்டத்திற்கான பிரவேசமானது 16 வருடங்களுக்குப் பின் தமிழ் பிரதிநிதித்துவத்தை பெறும் வாய்ப்பை பிரகாசமாக்கி உள்ளது எனினும் அது அத்தனை எளிதில் கிட்டி விடப் போவதில்லை. தமிழர்கள் அனைவரும் சிந்தித்து முறையாக தமது வாக்கை பயன்படுத்தினால் மட்டுமே அது சாத்தியம். ஐக்கிய தேசியக் கட்சி வெறுமனே நான்கு ஆசனங்களை மட்டுமே வென்றால் அதுவும் கேள்விக் குறியாகும்.
சரத் ஜேவிபி கூட்டுக்கு 1 ஆசனம் கிடைக்கலாம்.


நுவரஎளிய மாவட்டம் 7 பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்யவென 56 % தமிழர்களும் 40 % சிங்களவர்களும் 3 % முஸ்லிம்களும் வாக்களிக்க உள்ளனர். மலையகத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வெல்லப் போகும் ஒரே மாவட்டம் இதுதான். ஏழு ஆசனங்களும் என் கணிப்பின் படி ஐக்கிய தேசியக் கட்சிக்கு நான்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு இரண்டு மலையக மக்கள் முன்னணிக்கு ஒன்று என்ற ரீதியில் பிரியலாம். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதிக வாக்குகளை சந்தேகத்துக்கு இடமின்றி பழனி திகாம்பரம் பெறுவார். சதாசிவம், உதயகுமார், ஸ்ரீரங்கா, பியதாச ஆகியோர் மற்றைய மூன்று ஆசனங்களுக்கும் போட்டியிடுவர். ரேணுகா ஹேரத் கணிசமான வாக்குகளை பெறலாம். பாரம்பரியமாய் தொண்டா குடும்பத்தினர் கைக்காட்டிய திசைக்கு வாக்களித்த மக்களின் மனநிலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருப்பது தெளிவாகிறது. இம்முறைத் தெரிவாகக் கூடியோரில் பெரும்பான்மையினர் பாராளுமன்றத்திற்கு புதியவர்கள். ஸ்ரீரங்கா ஊடகவியலாளராக மலையக மக்களின் பிரச்சினைகளை வெளிக்காட்டியிருப்பது உண்மை என்ற போதும் ஒரு ஈழத்தமிழர் மலையகத்தில் வாக்கு கேட்பது தொடர்பில் படித்த இளைஞர் மத்தியில் பெறும் அதிருப்தி நிலவுகிறது. ஆக அவரது தெரிவு ஒன்றும் அத்தனை சுலபமில்லை.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பொறுத்தவரை தெரிவாகப் போகும் இருவரில் ஒருவர் அமைச்சர் C .B. ரத்னாயக்க மற்றையவர் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானா? அல்லது நவீன் திசானாயக்கவா என்பதுதான் தெரியவில்லை. மலையகத்தின் ஏகபோகத் தலைவனாக இருந்த தனக்கு இப்படி ஒரு நிலை வரும் என ஜூனியர் தொண்டா கனவிலும் நினைத்திருக்க மாட்டார். இதுவரை பாராளுமன்றை அலங்கரித்த அவரது கட்சியினரான முத்து சிவலிங்கம், ஜெகதீஸ்வரன் போன்றோர் இம்முறை தோல்விக்குப் பயந்து பாதுகாப்பாக தேசியப்பட்டியலில் புகலிடம் தேடிக்கொண்டனர். எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பே மீள ஆட்சியமைக்கப் போகும் நிலையில் தான் எதிர் கட்சியில் இருப்பதில் பிரயோசனமில்லை என்ற அடிப்படையில் அவர் இம்முடிவை எடுத்திருப்பின் அது பாராட்டத் தக்கதே. எது எப்படியானாலும் நாம் தொழிலாளர் காங்கிரசுக்கே என்ற நிலையுள்ளவர்களின் வாக்குகளால் எப்படியும் ஆறுமுகம் தொண்டமான் தப்பிப் பிழைப்பார் என்றே நம்புகிறேன்.
மற்றும் படி புத்திரசிகாமணி, அருள்சாமி எல்லாம் தோல்வி நிச்சயமானவர்கள். அருள்சாமி மத்திய மாகாண கல்வி அமைச்சராக இருந்த காலக் கட்டத்தில் அவர் கொடுத்த ஆசிரிய நியமனம் தொடர்பில் எல்லாம் எனக்கு கடுமையான விமர்சனம் உண்டு.
மலையக மக்கள் முன்னணியில் மறைந்த அமைச்சர் சந்திரசேகரனின் துணைவியார் தெரிவாவார் என நினைக்கிறேன்.

பார்ப்போம் தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் என் கணிப்புகள் எத்தனைத் தூரம் சரியாக இருக்கிறது என.
Related Posts with Thumbnails