வியாழன், 8 ஏப்ரல், 2010

2010 பொதுத்தேர்தலில் மலையகம்



இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் இன்றைய தினம் நடைபெறுகிறது. ஆளுங்கட்சியின் வெற்றி உறுதியாகி இருக்கும் நிலையில் அது எதிர்பார்க்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிட்டாது என்பதே என் எண்ணம். முழு இலங்கையினதும் நிலவரம் தொடர்பில் ஆராயாது கருத்து சொல்லல் பொருத்தமாக இராது என்பதால் மலையகத்தின் மூன்று மாவட்டங்களிலும் பெறப்படக்கூடிய பெறுபேறு தொடர்பில் நான் அவதானித்த அறிந்த விடயங்களின் அடிப்படையிலமைந்த சிறு கணிப்பே இப்பதிவு.

முதலில் மாத்தளை மாவட்டம். நான் வாழும் மாவட்டம். 80 % சதவீதம் பெரும்பான்மையினரையும் 10 % சதவீதம் தமிழரையும் 8 % முஸ்லிம்களையும் வாக்காளர் இடாப்பில் கொண்ட இம்மாவட்டத்தில் 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படப் போகின்றனர். எனது கணிப்பின் படி இங்கு மேற்படி ஐந்து ஆசனங்கள் ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு மூன்றும் பிரதான எதிர்கட்சியாக வரப்போகும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இரண்டுமாக பிரியப்போகின்றது. ஆளுங் கட்சி சார்பில் தெரிவாகப் போகும் மூவரில் ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன் ஒரு சிறிய நகரமாக மட்டுமே இருந்த தம்புள்ளவை தூங்கா நகரமாக மாற்றிய அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன், முன்னால் அமைச்சரும் மத்திய மாகாண முதலமைச்சருமான நந்திமித்ரா ஏக்கநாயக்க ஆகியோரின் வெற்றி நிச்சயமான நிலையில் மூன்றாவது இடத்திற்கு தெரிவாவது அமைச்சர் ரோகன திசாநாயக்கவா இல்லை புதுமுகம் லக்ஸ்மன் வசந்த பெரேராவா என்பதே கேள்விக்கிடமாகி உள்ளது. ரோகன ஏலவே மாவட்டத்திற்கு நிறைய சேவைகள் செய்துள்ள போதும் லக்ஷ்மன் வாரியிறைக்கும் பணம் அவருக்கு சாதகமாக உள்ளது.

ஐக்கியத் தேசியக் கட்சியின் சார்பில் பாரம்பரியமாகவே எப்போதும் நிகழ்வது போல முன்னால் அமைச்சர் அலிக் அலுவிகாரவின் இரு புதல்வர்களான முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மற்றும் முன்னாள் மத்திய மாகாண சபை முதல்வர் ,தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் வசந்த ஆகியோரே தெரிவாகப் போகின்றனர். சஞ்சீவ கவிரத்ன, ரோகன பண்டாரநாயக்க ஆகியோர் கணிசமான வாக்குகளைப் பெறலாம்.

ஜேவிபி சரத் பொன்சேகா கூட்டான ஜனநாயக முன்னணி ஆசனம் எதையும் கைப்பற்ற போவதில்லை. அதன் படி சென்ற முறை ஜேவிபி சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வென்று இம்முறை ஜனநாயக முன்னணியில் போட்டியிடும் சுஜாதா அழகக்கோனின் வெற்றி உறுதி.

இங்கு சிறும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவாக வாய்ப்பில்லை என்பது வெள்ளிடைமலை. இருப்பினும் விகிதாசார தேர்தல் முறையின் அனுகூலமான பக்கத்தை சரியாகப் பயன்படுத்தினால் அது சாத்தியமே. அதாவது மாவட்டத்தில் அதிக ஆசனங்களை பெறும் என நிச்சயமாக நம்பப்படும் கட்சியில் உள்ள சிறும்பான்மை வேட்பாளர் இருவருக்கு அனைத்து சிறும்பான்மையினரும் திரண்டு தமது வாக்குகளை அளிப்பதோடு மூன்றாவது விருப்பு வாக்கை எந்த ஒரு பெரும்பான்மை வாக்காளருக்கும் அளிக்காது விடல். எனினும் அத்தனை தீர்க்கதரிசனம் நம் மக்களுக்கு இல்லையாதலால் அது இன்னும் பல வருடங்களுக்கு சாத்தியப்படப் போவதில்லை.


அடுத்து கண்டி மாவட்டம். மத்திய மாகாண தலைநகரம். அதிகமான உறுப்பினர்களாக 12 உறுப்பினர்கள் இங்கே தேர்ந்தெடுக்கப்படப் போகின்றனர். 14 சதவீத முஸ்லிம்களும் 13 சதவீத தமிழர்களும் 70 சதவீத சிங்களவர்களும் வாக்களிக்க உள்ளனர். ஐக்கய தேசியக் கட்சியின் கொட்டைகளில் ஒன்று. இப்போதெல்லாம் நிலைமை அப்படி இல்லை ஆக இங்கும் ஆளும் கூட்டணியே வெற்றிப் பெறப் போகிறது. எனது கணிப்பின் பிரகாரம் ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆறு, ஐக்கிய தேசியக் கட்சி ஐந்து, ஜனநாயக முன்னணி ஒன்று என்ற ரீதியில் ஆசனங்கள் பிரியலாம். ஆளுங் கூட்டணியின் அறுவர் கெஹெலிய ரம்புக்வெல்ல, மகிந்தானத அலுத்கமகே, சரத் அமுனுகம , எஸ். பி. திசாநாயக்க என்பதெல்லாம் நிச்சயமான நிலையில் எஞ்சியிருக்கும் இரு இடங்களுக்கு லோகன் ரத்வத்த, திலும் அமுனுகம, பைசர் முஸ்தபா என்போரிடையே பாரியப் போட்டி நிலவக்கூடும். முஸ்லிம்கள் பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கே வாக்களிப்பர் என்ற போதிலும் அமைச்சர் பைசர் ஹாரிச்பத்துவ தொகுதியில் செய்துள்ள சேவைகளைக் கருதுமிடத்து அவருக்கான வாய்ப்புகளும் பிரகாசமாகவே உள்ளன. மிகுந்த ஆளுமையுள்ளவர். தமிழர்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஆளுங் கட்சி சார்பில் போட்டியிடும் துரை மதியுகராஜாவின் தோல்வி நிச்சயம்.

ஐக்கியத் தேசியக் கட்சியில் தெரிவாகும் ஐவரை எதிர்வு கூறல் சற்றுக் கடினம்தாம். சென்றமுறை பெருவாரியான வாக்குகளால் வென்றவர்கள் எல்லாம் இம்முறை ஆளுந்தரப்பில் பைசர் முஸ்தபா,கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோர். திஸ்ஸ அத்தநாயக்க தேசியப்பட்டியலில் எனவே லக்ஷ்மன் கிரியெல்ல, அப்துல் காதர் தவிர ஏனையோர் புதுமுகங்களாய் இருக்கப் போகின்றனர். சென்றமுறை திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்டு வென்று இம்முறை மீண்டும் தன் பிறந்தகத்தில் களமிறங்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களின் வெற்றியும் ஏலவே நிச்சயிக்கப்பட்ட ஒன்று. ஆக அடுத்த இரண்டு இடத்திற்கு பலத்தப் போட்டி நிலவப் போகிறது. இப்போட்டியில் சென்ற முறை வென்ற ஹலீம் அவர்களின் வெற்றி சற்றேக் கேள்விக்குறியாக உள்ளது. அந்த இரண்டு இடங்கள் ஹலீம்,மனோ கணேஷன், சித்ரா மண்திலக்க, லக்கி ஜெயவர்தன ஆகியோரில் இருவருககே செல்லக்கூடிய வாய்ப்புண்டு. மனோ கணேசனின் கண்டி மாவட்டத்திற்கான பிரவேசமானது 16 வருடங்களுக்குப் பின் தமிழ் பிரதிநிதித்துவத்தை பெறும் வாய்ப்பை பிரகாசமாக்கி உள்ளது எனினும் அது அத்தனை எளிதில் கிட்டி விடப் போவதில்லை. தமிழர்கள் அனைவரும் சிந்தித்து முறையாக தமது வாக்கை பயன்படுத்தினால் மட்டுமே அது சாத்தியம். ஐக்கிய தேசியக் கட்சி வெறுமனே நான்கு ஆசனங்களை மட்டுமே வென்றால் அதுவும் கேள்விக் குறியாகும்.
சரத் ஜேவிபி கூட்டுக்கு 1 ஆசனம் கிடைக்கலாம்.


நுவரஎளிய மாவட்டம் 7 பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்யவென 56 % தமிழர்களும் 40 % சிங்களவர்களும் 3 % முஸ்லிம்களும் வாக்களிக்க உள்ளனர். மலையகத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வெல்லப் போகும் ஒரே மாவட்டம் இதுதான். ஏழு ஆசனங்களும் என் கணிப்பின் படி ஐக்கிய தேசியக் கட்சிக்கு நான்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு இரண்டு மலையக மக்கள் முன்னணிக்கு ஒன்று என்ற ரீதியில் பிரியலாம். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதிக வாக்குகளை சந்தேகத்துக்கு இடமின்றி பழனி திகாம்பரம் பெறுவார். சதாசிவம், உதயகுமார், ஸ்ரீரங்கா, பியதாச ஆகியோர் மற்றைய மூன்று ஆசனங்களுக்கும் போட்டியிடுவர். ரேணுகா ஹேரத் கணிசமான வாக்குகளை பெறலாம். பாரம்பரியமாய் தொண்டா குடும்பத்தினர் கைக்காட்டிய திசைக்கு வாக்களித்த மக்களின் மனநிலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருப்பது தெளிவாகிறது. இம்முறைத் தெரிவாகக் கூடியோரில் பெரும்பான்மையினர் பாராளுமன்றத்திற்கு புதியவர்கள். ஸ்ரீரங்கா ஊடகவியலாளராக மலையக மக்களின் பிரச்சினைகளை வெளிக்காட்டியிருப்பது உண்மை என்ற போதும் ஒரு ஈழத்தமிழர் மலையகத்தில் வாக்கு கேட்பது தொடர்பில் படித்த இளைஞர் மத்தியில் பெறும் அதிருப்தி நிலவுகிறது. ஆக அவரது தெரிவு ஒன்றும் அத்தனை சுலபமில்லை.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பொறுத்தவரை தெரிவாகப் போகும் இருவரில் ஒருவர் அமைச்சர் C .B. ரத்னாயக்க மற்றையவர் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானா? அல்லது நவீன் திசானாயக்கவா என்பதுதான் தெரியவில்லை. மலையகத்தின் ஏகபோகத் தலைவனாக இருந்த தனக்கு இப்படி ஒரு நிலை வரும் என ஜூனியர் தொண்டா கனவிலும் நினைத்திருக்க மாட்டார். இதுவரை பாராளுமன்றை அலங்கரித்த அவரது கட்சியினரான முத்து சிவலிங்கம், ஜெகதீஸ்வரன் போன்றோர் இம்முறை தோல்விக்குப் பயந்து பாதுகாப்பாக தேசியப்பட்டியலில் புகலிடம் தேடிக்கொண்டனர். எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பே மீள ஆட்சியமைக்கப் போகும் நிலையில் தான் எதிர் கட்சியில் இருப்பதில் பிரயோசனமில்லை என்ற அடிப்படையில் அவர் இம்முடிவை எடுத்திருப்பின் அது பாராட்டத் தக்கதே. எது எப்படியானாலும் நாம் தொழிலாளர் காங்கிரசுக்கே என்ற நிலையுள்ளவர்களின் வாக்குகளால் எப்படியும் ஆறுமுகம் தொண்டமான் தப்பிப் பிழைப்பார் என்றே நம்புகிறேன்.
மற்றும் படி புத்திரசிகாமணி, அருள்சாமி எல்லாம் தோல்வி நிச்சயமானவர்கள். அருள்சாமி மத்திய மாகாண கல்வி அமைச்சராக இருந்த காலக் கட்டத்தில் அவர் கொடுத்த ஆசிரிய நியமனம் தொடர்பில் எல்லாம் எனக்கு கடுமையான விமர்சனம் உண்டு.
மலையக மக்கள் முன்னணியில் மறைந்த அமைச்சர் சந்திரசேகரனின் துணைவியார் தெரிவாவார் என நினைக்கிறேன்.

பார்ப்போம் தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் என் கணிப்புகள் எத்தனைத் தூரம் சரியாக இருக்கிறது என.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails