செவ்வாய், 30 மார்ச், 2010

அங்காடி தெரு - என் பார்வையில்


பண்டிகைக் காலங்களில் எத்தனயோ கடைகள் ஏறியிறங்கி இருப்போம். எத்தனையோ ஆடைகள் இருந்தாலும் நமக்கேனோ மடித்து வைக்கப்பட்டிருக்கும் துணிகளுக்குள் கடைசியாய் இருப்பதுதான் பிடிக்கும். அதையும் புரட்டிப் பார்த்தப் பின் உதடு பிதுக்கி நகர்வோம். சில சமயங்களில் கடையில் ஆண் பெண் பணியாளர்கள் ஜோடியாய் இருந்து தமக்குள் சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்தால் "ஆட்டக்காரி எப்படி பல்லக் காட்டுதுன்னுப் பாரு" என வெறுப்பை உமிழ்வோம். தம் பணியில் கொஞ்சம் அசிரத்தையாய் இருந்தால் "இதுகளுக்கு இதுக்குத்தானே சம்பளம் கொடுக்குறாங்க, திமிரப் பாரு " என முணுமுணுப்போம். முடிந்தால் கடை முதலாளியிடம் "இனிமேல் உங்க கடைக்கே வரமாட்டோம் ஒரு மரியாதையே இல்ல" என பந்தம் வைத்து விட்டு அடுத்த கடைக்கு நகர்வோம். என்றாவது எந்த தொழிலாளர் நல விதிமுறைகளுக்கும் அமையாது முதலாளிகளின் சுரண்டலுக்கு ஆளாகும் அந்த அப்பாவி பணியாளர்களைப் பற்றி யோசித்திருப்போமா? இவங்களைப் பற்றியும் யோசிங்கடா என செவிட்டில் அறைந்து சொல்லியிருக்கும் படம்தான் வசந்தபாலனின் அங்காடித் தெரு.

இலங்கையில் உள்ளோரும் ரங்கநாதன் தெரு பற்றி கேள்விப்பட்டிருப்போம். எப்போதும் கல கலவென இருக்கும் கடைத் தெரு என்பதாகவே நமக்கு ஒரு சித்திரம் காட்டப்பட்டிருக்கிறது. இயக்குனர் ஷங்கருக்கு ஆண்டிகளை சாணைப் பிடிக்க தோதான இடமாகப் பட்ட ரங்கநாதன் தெரு அவரது சிஷ்யன் வசந்தபாலனுக்கோ அடி மாடாய் உழைக்க மட்டுமே பிறந்த ஒரு கூட்டத்தின் வலிகளைப் பதிவு செய்ய உகந்தக் களமாகப் பட்டிருக்கிறது.வசந்தபாலன், நான் பார்த்த இவரின் முதற்படம் வெயில்.
தன் கனவான நாட்டியத்திலும் பெரிதாக வர முடியாமல், காதலிலும் வெற்றிப் பெற முடியாது குடிபழக்கத்திற்கு அடிமையாகி மற்றவர்களை விமர்சித்தேனும் தன் சுயத்தை நிறுவ முயலும் ஈற்றில் அங்கீகரிக்கப்படாது போன தன் திறமையை தன் காதலியின் மகளின் நாட்டியத்தின் மூலம் மீட்டெடுத்து அக்கைத்தட்டல் தந்த திருப்தியில் உயிர் விடும் பாலக்ருஷ்ணன் பாத்திரத்திற்கு பின் அலட்சியமும் நிராகரிப்பும் தனிமையும் சூழ்ந்த ஒரு வாழ்வின் கொடுமையை நம்முன் நிகழ்த்திக் காட்டியப் படம் வெயில். முருகேசின் தம்பி தன் தாயிடம் அம்மா அண்ணா எங்கே போனான் எனப் பேசிக் கொண்டிருக்கும் போது உக்கிரமான வெயிலின் தகிப்பில் முருகேசின் பயணம் தொடர்கையில் A film by vasanthabalan என முடித்திருக்கலாமே என யோசித்ததுண்டு.
அதை பார்த்தப் பிறகுத்தான் ஒருநாள் டிவியில் போடும்போது அட வசந்தபாலன் படம் என ஒரு ஆர்வத்தில் இவரது முதற்படம் ஆல்பம் பார்த்தேன். பெருத்த ஏமாற்றம் அதுவும் படம் தந்த தீர்வில் எனக்கு சற்றும் உடன்பாடில்லை. எல்லாவற்றுக்கும் சேர்த்து தனது முந்தைய அத்தனைப் படங்களையும் விஞ்சியிருக்கிறார் அங்காடித் தெருவில்.

படம் பார்த்து விட்டு வருகையில் எதிர்ப்பட்ட நண்பன் என்னப் படம்டா இது மாடிப்படி மாது கஷ்டப்பட்டு படிச்சு நல்ல நிலைக்கு வர்றதுதான் எதிர்நீச்சலிலேயே பார்த்துட்டோமே என்கிறான். அய்யய்யோ படம் இயல்பா இல்லையோ? என என் ரசனையை நொந்தவாறே வீட்டிற்கு வந்து மீண்டும் மீண்டும் காட்சிகளை அசைப் போட்டுப் பார்த்தேன். ம்ஹ்ம் எனக்கேதோ படத்தைப் பற்றி புத்தகமே எழுதலாம் எனத் தோன்றியது.

நாயகன் தொடங்கி இயக்குனர் .வெங்கடேஷ்,பாண்டி,சோபியா மேரி, செல்வராணி என எல்லோருமே பாத்திரங்களாகவே வாழ நடிப்பில் அசத்தியிருக்கிறார் அஞ்சலி. இவரப் பற்றி நா. முத்துகுமாரின் அதே வார்த்தைகளில் சொல்வதென்றால் "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை ஆனால் அவளுக்கு நிகரில்லை, அவள் அப்படி ஒன்றும் கலரில்லை ஆனால் அது ஒரு குறையில்லை.
கற்றது தமிழில் ஆனந்தியாக கண்ணால் அதிகம் பேசியவர் கனியாக இதில் வாயாலும் நிறையவே பேசுகிறார்.

அந்த சாப்பாட்டுக் கூடத்தையும் காவலாளி காவலிருக்க ஒடுங்கிப் படுக்கும் இடத்தையும் பார்க்கும் போது சற்றே மிகையாய்க் காட்டி விட்டாரோ எனத் தோன்றினாலும் உண்மை இவர் காட்டியதற்கு சற்றும் குறைவில்லாதது என அறிந்த போது அதிர்ச்சியாய் இருந்தது. மனிதர்களை நம்பி வியாபராம் செய்யும் முஸ்லிம் பெரியவர், குள்ளனைத் திருமணம் செய்து அவனைப் போலவே பிள்ளை பெற நினைக்கும் பாலியல் தொழில் செய்யும் பெண், பொதுக் கழிப்பிடத்தை சுத்தம் செய்து தனக்கான வாழ்வைத் தேடிக் கொள்பவன், கடையில் காதல் செய்ததற்காய் தண்டிக்கப் பட்டு உயிர் துறக்கும் பெண்,அவளது காதலன் என இயல்பு மாறாமல் படைக்கப் பட்டிருக்கும் பாத்திரங்களும் அவர்களின் பின்னணியாய் சொல்லப்படும் கதைகளும் வசந்தபாலன் மீது பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.

ஆனால் இத்தனை யோசித்த வசந்தபாலன் தொழிநுட்ப ரீதியில் ஏன் இத்தனைக் குறைகளை விட்டார் எனத் தெரியவில்லை. அட ஒவ்வொரு பிரேமும் ஒரு ஓவியம் போலத் தோன்றும் தனியே துருத்தி தெரியும் ஒளிப்பதிவு தேவையில்லைத்தான். ஆனால் அதற்காக இப்படியா? டெக்னிக்கல் சமாசாரங்களில் ரொம்பவும் அசிரத்தையாய் இருந்திருக்கிறார். பின்னணி இசை உட்பட. இத்தனைக்கும் படம் ஐங்கரன் போன்ற ஒரு பெரிய நிறுவனத்தின் தயாரிப்பு. குறித்த தெருவில் இத்தனை துணை நடிகர் கூட்டத்தைக் கொண்டு எடுப்பதன் சிரமம் பற்றி எல்லாம் அவர் சொல்லத் தேவையில்லை. ஏனெறால் இதை விஞ்சி சிரமம் தரக்கூடிய ஒருப் படைப்பை பாலா சாத்தியப்படுத்தியிருக்கிறார்.அத்தோடு
அப்பா செத்துப் போவது தொடங்கி காதலிக்கு கால் போவது வரையான சம்பவங்கள் பிரதான பாத்திரங்களின் மீது அனுதாபத்தை ஏற்படுத்தவெனவே வலிந்து சேர்க்கப்பட்ட காட்சிகளோ எனவும் எண்ணத் தோன்றுகிறது. பார்த்து வசந்தபாலன் இன்னுமொரு சேரனாக மாறும் அபாயம் தெரிகிறது.

விஜய் அந்தோனி, ஜி .வி.பிரகாஷ் என இரண்டு இசையமைப்பாளர்கள் இசைத்திருக்கிறார்கள். அவள் அப்படி ஒன்றும்,உன் பேரைச் சொல்லும் போதே,கதைகளில் ஆகிய மூன்று தேறுகிறது.

ஜெயமோகனின் கதைகளைப் படிப்பது போலவே இருக்கிறது வசனங்கள். ஒவ்வோர் இடத்தில் தனித்துத் தெரிந்தாலும் பெரும்பாலும் காட்சிகளுக்கு பொருத்தமாக அதற்குள்ளேயே கரைந்து விடுகிறது. நகர்ப்புற மத்திமர்களின் காதல் கதைகளுக்கு எஸ். ரா(உன்னாலே உன்னாலே) என்றால் விளிம்பு நிலை மனிதரின் வாழ்க்கையை அதன் அவலம் குன்றாமல் வார்த்தைகளில் தருகிறார் ஜெமோ.

மொத்தத் தேசிய உற்பத்தி, தனி நபர் தலா வருமானம் என சுட்டிகளைக் கொண்டு காட்டப்படுகின்ற பொருளாதார முன்னேற்றம் எல்லாம் பொருள் ஒரு குறித்த இடத்தில் மட்டும் குவிவதையே காட்டுகின்றதேயன்றி அது உண்மையான சமூகப் பொருளாதார முன்னேற்றம் அல்ல. மாறாக அரசு உள்ளிட்ட அதிகார சக்திகளின் உதவியுடன் தம்மை வலுவாய் நிலை நிறுத்திக் கொண்ட முதலாளியத்தின் கோரப்பிடியில் சிக்கி சக்கையாய் பிழியப்படும் பாட்டாளி வர்க்கத்தினரின் சர்வாதிகாரம் மலரும் நாளிலேயே உண்மையான பொருளாதார முன்னேற்றம் சாத்தியமாகும். அதுவரை லிங்குகளும் கனிகளும் நம் சமூகத்தில் இருந்து குறையப் போவதில்லை.

6 கருத்துகள்:

Subankan சொன்னது…

படம் பார்த்தாகவேண்டும் என்ற ஆவல் அதிகரிகின்றது. எனக்கு என்னவோ, இப்படியான படங்களை உடனடியாகப் பார்த்துவிடும் வாய்ப்புக் கிடைப்பதில்லை.

KANA VARO சொன்னது…

நல்ல யதார்த்த படமாக இருக்கும் எண்டு நம்புகிறேன். சன் டீ வி இல் விமர்சனம் பார்த்த பிறகு படம் பார்க்கும் எண்ணம் அதிகரித்திருக்கிறது.

Krishna Raj சொன்னது…

அருமை நண்பரே

Prasanna சொன்னது…

Good one :)

தர்ஷன் சொன்னது…

நன்றி Subankan
நன்றி வரோ
நன்றி கிருஷ்ணராஜ்
நன்றி பிரசன்னா

ஷஹி சொன்னது…

GOOD REVIEW....
'ஊமைச்செந்நாய்' படித்திருகிறீர்களா?

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails