பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 ஆகஸ்ட், 2010

என் டைரியிலிருந்து


ஒருவாறாக பூனைக்கு மணி கட்டியாகியாயிற்று. நவீன துட்டகைமுனுவை அரசு கட்சியிலிருந்தும் இடைநிறுத்தும் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். மேர்வின் சில்வா இலங்கை அரசியலின் சாரு நிவேதிதா. அவர்  மகாராஜா நிறுவனத்திற்கே சென்று அதன் தலைவரை ஏசுகிறேன் என்ற பெயரில் ஒட்டுமொத்த தமிழர்களையும் இந்தியானு பற தெமலோ( இந்தியப் பறத்தமிழர்கள்) எனத் தூற்றிய போதும், ரூபவாஹினிக்குள் குண்டர்கள் சகிதம் போய் குழப்பம் விளைவித்து பின் மண்டை உடைந்து வெளியேறிய போதும் வாளாவிருந்த அரசு இப்போதாவது விழித்துக் கொண்டது ஆச்சரியம். இதை விட ஆச்சரியம் இம்முறை தேர்தலில் இவரைப் பெருவாரியான வாக்குகளால் வெல்ல வைத்த மக்கள். முன்னாள் அமைச்சரால் மரத்தில் கட்டப்பட்ட அந்த சமுர்த்தி உத்தியோகத்தர்தான் இனிமேல் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.


பிரபா கணேசனும் திகாம்பரமும் எதிர்த்தரப்பிலிருந்து மக்களுக்கு சேவை செய்ய முடியாமலிருக்கும் அவல நிலையை எண்ணி அரசுடன் இணைந்து விட்டார்கள். திகா அரசுடன் சேர்வது ஆச்சரியம் தராத நிலையில் தம்மை ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைத்து விட்டு சகோதரனுக்கும்,கட்சிக்கும், தமிழர்களுக்கும் துரோகம் செய்த பிரபா கணேசனின் செயல் அருவருக்கத்தக்கது.

முரளிதரன் ஒய்வு பெற்ற போது காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வோமென அவசர அவசரமாக பதிவொன்றை எழுதியிருந்தேன். ரெண்டே பந்திகளில் ரொம்பவும் சுமாரான பதிவு. விகடனின் குட ப்ளொக்ஸ் பகுதியில் கூட அந்த பதிவு வந்திருந்தது. அண்மையில் சக பதிவர் யோகா (யோ வாய்ஸ் ) மூஞ்சி புத்தகத்தினூடு ஒரு தகவல் அனுப்பியிருந்தார். அதாவது அந்தப் பதிவு அப்படியே இலங்கையில் வெளிவரும் நியூஸ் வியூ எனும் சஞ்சிகையில் வந்திருந்ததாம். இன்னார் எழுதியது இன்ன வலைப்பூவிலிருந்து எடுக்கப்பட்டது என்ற எந்தத் தகவலும் இன்றி. மாத்தளையில் எந்தக் கடையிலும் இச்சஞ்சிகை கிடைக்காததால் நான் பார்க்கவில்லை. நன்றி இணையம் என்று போட்டால் சரி என நினைக்கிறார்கள். இணையத்திற்கு இந்தப் பதிவை காக்காவா தூக்கி  கொண்டு வந்து போட்டது. எவனோ ஒருவன் கொஞ்சமேனும் கஷ்டப்பட்டு எழுதியதை லவட்டத் தெரிகின்றவர்களுக்கு எதற்கும் எழுதியவனுக்கு நன்றியேனும் சொல்லுவோம் என்ற குறைந்த பட்ச நாகரிகமும் தெரியாமற் போவது வருத்தமாய் உள்ளது.  பதிவர்களை கிள்ளுக் கீரையாக நினைத்து விட்டனரா? என நண்பர் கண்கோன் கோபியும் குழுமத்தில் மடலிட்டுக் கொந்தளித்திருந்தார். அவர் அன்பிற்கு நன்றி. ஆசிரியப் பீடத்திடம் தொடர்பு கொண்டு கேட்கத்தான் வேண்டுமா என விட்டு விட்டேன்.


ஞாயிறு, 29 மார்ச், 2009

பட்டாம்பூச்சி என் தோட்டத்திலும்


"ஊக்குவிக்க ஆள் இருந்தால் ஊக்கு விப்பவனும் தேக்கு விப்பான்" என்று சொல்வார்கள். பாடசாலைக் காலங்களிலேயே எழுத்தார்வம் இருந்தாலும் பெரிதாக அந்த முயற்சிகளில் ஈடுபடவில்லை. பலரிடம் எழுத்துக்களை கொண்டு சேர்க்க வழியில்லை. பார்ப்போரும் பெரிதாய் கருத்து சொல்வதில்லை என்ற நிலையில் இணையம் உண்மையில் ஒரு வரப்ரசாதமகவே அமைந்தது. சற்றே என் எழுத்துத் தினவை தனித்துக் கொள்ளும் நோக்கில் வலைப்பதிவுகள் பக்கம் ஒதுங்கியவனுக்கு விருது தந்து சந்தோஷப் படுத்தியிருக்கிறார் நண்பர் கலை.

பட்டாம் பூச்சி விருதின் நோக்கம் புதிய பதிவர்கள் மீது வெளிச்சம் விழ வேண்டுமென்பதுதான் என்றாலும் இது சற்று முன்னாலேயே எனக்கு கிடைத்து விட்டதோ என்று ஒரு சிறு சங்கடம். ஏலவே பல ஞானச் சிங்கங்களின் வலைப்பக்கத்தை அலங்கரிக்கும் இப்பட்டாம் பூச்சி இந்த சிற்றெரும்பின் வலைப்பூவிலும் பறப்பது ஆச்சரியமான ஒன்று. என்னோடு சேர்த்து விருது பெற்றோர் நிஜமாகவே அசாத்திய திறமையாளர்கள்.

இன்னமும் சிரத்தையெடுத்து பதிவிட வேண்டுமென்ற எண்ணம் வந்துள்ளது. நேரம்தான் பிரச்சினை.
எல்லாம் சரி நானும் இப்பதிவை மூன்று பேருக்கு கொடுக்க வேண்டுமாம். please கொஞ்சம் அவகாசம் கிடைக்குமா

வியாழன், 26 மார்ச், 2009

விகடனில் என் பதிவு


இதில் நிரம்பவே சந்தோஷப் பட ஏதும் இருக்கிறதா தெரியவில்லை.
"சொதப்புவாரா கமல்" என்ற தலைப்பில் A Wednesday திரைப்படம் தொடர்பிலான எனது கருத்துகள் அடங்கிய பதிவு youthful விகடனில் good blogs பகுதியில் வெளிவந்துள்ளது.

இன்னமும் பதிவுலகம் தொடர்பில் பூரண தெளிவு ஏற்ப்பட்டிராத நிலையில் இது சற்றே தெம்பை அளித்துள்ளது. இன்னமும் எழுதலாம் என நினைக்கிறேன்.
இது தொடர்பில் எனக்கு அறியத் தந்ததுடன் நான் பதிவிடத் தொடங்கிய நாளிலுருந்து தொடர்ந்து பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப் படுத்தி வரும் நண்பர் கலை அவர்களுக்கு ஒரு Special Thanks
Related Posts with Thumbnails