“Behind the success of every man there
is women” என்பதை ஏற்கனவே காது புளிக்குமளவு பலமுறை கேட்டிருப்போம். ஆனால் அதையே தன்
திறமைக்கான அங்கீகாரமின்மையால் தவிப்பவனின் மனப்போராட்டங்கள், மரபுகளின் கட்டுப்பாட்டினின்று
விடுபட்டு தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காய் எதிர்கொள்ளும் சவால்கள், துரோகங்கள்,
அவனின் காதல், நட்பு, காமம், தோல்வி, கோபம், உளச்சிதைவு என பல்வேறு உணர்ச்சிக் கொந்தளிப்புகளின் தொகுப்பாக
செல்வராகவன் எழுதியிருக்கும் செல்லுலாய்ட் கவிதை “மயக்கம் என்ன”.
படத்தின் கதை இதுதான் என்று அறுதியிட்டு
சொல்ல முடியாது. முழு படமுமே யதார்த்ததிற்கு ஓரளவேனும் அருகிலிருக்கும் நிகழ்வுகளின்
தொகுப்பு.
கார்த்திக் ஸ்வாமிநாதன், சர்வைவலுக்காக ஏதோ
ஒரு வேலையில் ஒட்டிக்கொண்டு சலிப்போடு நாட்களை கடத்தும் சராசரி அல்ல. ”பிடிச்ச வேலைய
செய்ய முடியல்லன்னா செத்துடனும்” என்று சொல்பவன். அவனைப் போலவே கலாச்சாரத்தின் பெயரால்
உள்ள கட்டுபெட்டித்தனங்களின் அபத்தங்களில் சிக்கிக் கொள்ளாத ஒரு நண்பர் குழாமில் அவனும்
ஒரு அங்கம். அதில் ஒருவன் திருமணம் செய்ய விரும்பும் பெண்ணாக வந்து சேர்கிறாள் யாமினி.
சமரசமே செய்து கொள்ளாமல் தானாக வாழும் கார்த்திக்கின் போக்கு யாமினிக்கு அவன் மேல்
ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. அது புரிந்து ஆரம்பத்தில் விலகிப் போனாலும் சில நிராகரிப்புகளின்
போது அவளிடமிருந்து கிடைக்கும் ஆறுதல் கார்த்திக்கையும் அவளிடம் நெருங்கச் செய்ய அது
காதலாகிறது. சில சச்சரவுகளுக்கு பின் யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளும் நண்பனும் விட்டுக்
கொடுக்க காதல் கல்யாணத்தில் முடிகிறது. இதற்கிடையில் போட்டோகிராபியில் சாதிக்க துடிக்கும்
கார்த்திக் அங்கு தான் ஆதர்ஷமாக நினைத்தவரே தனக்கிழைத்த துரோகத்தை தாங்க முடியாமல்
மனச்சிதைவுக்கு உள்ளாகிறான். அதற்கு பின் கார்த்திக், யாமினி வாழ்க்கை என்னவானது என்பது
மீதி கதை.
புதுப்பேட்டையிலிருந்தே கமலுக்கு பிறகு தமிழில் வந்த தலைசிறந்த நடிகர் தனுஸ்தான் என்ற எண்ணம் இருந்தது, “மயக்கம் என்ன” வில் சந்தேகத்திற்கிடமின்றி அதை உறுதிப்படுத்தியிருக்கிறார். ரிச்சா தன்னை விரும்புவது புரிந்து விலகிச் செல்வது, ”எனக்கு இத தவிர எதுவும் தெரியாது யாமினி, அதயும் ஆய்ன்னு சொல்லிட்டான்” என்று புலம்புவது, கொஞ்சம் செயற்கையாய் இருந்தாலும் நாய் போல் வேலை செய்வது, குடிப்பதை தடுக்கும் மனைவியை பார்வையாலேயே வெருட்டுவது, கருச்சிதைவுற்ற மனைவியிடம் குற்றவுணர்வு நிறைந்த கண்களோடு மன்னிப்பு கேட்பது எனப் பல காட்சிகளில் அசத்துகிறார் தனுஷ்.
செல்வாவின் திவ்யாவினதும் அனிதாவினதும் இன்னுமொரு
வடிவம்தான் யாமினி. கார்த்திக் ஸ்வாமினாதனின் வார்த்தைகளில் சொல்வதாயிருந்தால் இரும்பு
மனுஷி. அந்த இரும்பு மனுஷி பாத்திரத்தை தனுஷுக்கு இணையாக செய்ய முயன்று அதில் ஒரளவு
வெற்றியும் பெற்றிருக்கிறார் புதுமுக நாயகியான ரிச்சா.
செல்வராகவனின் கதாநாயகர்கள் ஏன் மறை கழண்டவர்களாக
இருக்கிறார்கள் எனப் பலர் விசனப்படுகின்றனர். அழகான பெண்களால் துரத்தி துரத்தி காதலிக்கப்பட்டு,
100 அடியாட்களை ஒரே அடியால் துவம்சம் செய்து, எல்லோரையும் ரட்சிக்கும் சூப்பர் ஹீரோக்களை
எல்லா இயக்குனர்களும் படைப்பதில் இவர் இப்படி எடுத்து விட்டு போகட்டுமே. செல்வா நல்லதொரு
திரைக்கதாசிரியர் என்பது தெரிந்ததுதான். ”Bad photographs” என தன் புகைப்படங்கள் நிராகரிக்கப்பட
அந்த வலியுடன் வரும் கார்த்திக் தெருவிலுள்ள பாட்டியை புகைப்படமெடுக்கும் காட்சி, பறவைகளை
படமெடுக்க போய் இயற்கையில் மனதை பறிக்கொடுப்பது, என் திறமையை நீங்கள் அங்கீகரிக்க வில்லையா?
என் பக்கமே எட்டிப் பார்க்காதீர்கள் என்பதாய் “கார்த்திக் ஜாக்கிரதை” என போர்ட் மாட்டுவது
எல்லாம் விசுவல் ட்ரீட்.
காட்சிகள் மெதுவாகத்தான் நகர்கின்றன. காட்சிகளின் கதாபாத்திரங்களின் வலியை பார்ப்பவர்களுக்கும் கடத்த காட்சிகள் அவ்வாறு அமைய வேண்டியது அவசியமே.
ராம்ஜியின் கமரா ஒவ்வொரு ப்ரேமையும் ஓர்
அழகான ஓவியமாக செதுக்கிக் காட்டுகிறது. முதற் பாதியில் மெளனமாகவும், இரண்டாம் பாதியில்
சப்தமாகவும் பின்னணி இசையில் தன் இருப்பை வெளிப்படுத்துகிறார் ஜிவிபி.
ஒன்று மட்டு உறுதி. “வறுமையின் நிறம் சிவப்பு” ரங்கன், “சலங்கை ஒலி” பாலகிருஷ்ணன், “வெயில்” முருகேஷன், “முள்ளும் மலரும்” காளி போல
கார்த்திக் ஸ்வாமிநாதனும் என்னை வெகு காலத்திற்கு துரத்த போகிறான்
ஒன்று மட்டு உறுதி. “வறுமையின் நிறம் சிவப்பு” ரங்கன், “சலங்கை ஒலி” பாலகிருஷ்ணன், “வெயில்” முருகேஷன், “முள்ளும் மலரும்” காளி போல
கார்த்திக் ஸ்வாமிநாதனும் என்னை வெகு காலத்திற்கு துரத்த போகிறான்
வழமையாய் ஒரு கலைப்படைப்பில் தென்படும் குறைகள் இருந்தாலும் அவற்றைக் கடந்து பார்க்க வேண்டிய, ஆதரிக்க வேண்டிய ஒரு படம் “மயக்கம் என்ன”.







