தனுஷ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தனுஷ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 மே, 2013

மரியான் பாடல்கள் என் பார்வையில்





மரியான்  பாடல்கள் "கடல்" படப் பாடல்கள் போல சட்டென ஒட்டிக் கொள்ளும் ரகம் இல்லை என்ற  போதும் கேட்க கேட்க பிடிக்கும் ரஹ்மான் மாஜிக் இருக்கிறது.

இன்னும்  கொஞ்ச நேரம்

நீண்ட நாட்களுக்கு பிறகு நாட்டுப்புற ஸ்டைலை டச் செய்திருக்கிறார்  “இன்னும்  கொஞ்ச நேரம்”  பாடலில், விஜய் பிரகாஷ் வெஸ்டர்ன், க்ளாசிக் என இரண்டிலும் ஸ்கோர் செய்பவர் இங்கு போல்க்கிலும்.  ஏடி கள்ளச்சியிலேயே அசத்தியவர்தான் . கூடவே அவரது அம்மா  போலவே கொஞ்சுகிறார் ஸ்வேதா மோகன் .

சோனாபாரீயா

சென்யோரீட்டா, லோலிட்டா போல ஒரு புதுவார்த்தை  “சோனாபாரீயா”,  ரொம்பவும் எனர்ஜட்டிக்கான பாடல். கேட்பவரை துள்ளாட்டம் போட வைக்கிறது. ப்ரீலியுட் வாத்திய இசையே கொண்டாட்டமான உலகுக்கு கொண்டு செல்கிறது. ஆமா  சோனாபாரீயா என்றால் என்ன?

நேற்று அவள் இருந்தாள்

குறைவான இசைக் கருவிகளுடன் ரொம்பவே மெதுவான ஒரு மெலடி. கொஞ்சம் எங்கோ கேட்ட சாயலும். அசத்துகிறார்கள் விஜய் பிரகாஷும் சின்மயியும்.

I Love my Africa

தமிழுக்கு முற்று முழுதான புது இசை. கண்ணை மூடிக் கேட்டால் நாமும் ஆபிரிக்காவில் இருப்பதை போன்ற உணர்வு. பாடல் முழுதும் தொடரும் தாள வாத்திய இசையே பாட்டின் ப்ரெஷ்னசுக்கு காரணமாய் இருக்கும்.

எங்க போன ராசா


சக்தி ஸ்ரீகோபாலன் என்றவுடன் நெஞ்சுக்குள்ள ரேஞ்சுல எதிர்பார்த்தால் ஒரு மாற்று குறைவுதான் என்ற போதும் மோசமில்லை. பல்லவியில் கேட்பவர்களுக்கு (அது நாந்தேன்) ஒரு அயர்ச்சி இருந்தாலும் சரணத்தில் சரியாகிவிடுகிறது.

நெஞ்சே எழு

பாட்டுக்கு  மெட்டாயிருக்கக் கூடும். ரஹ்மான் குரலே பிரதானம். குட்டி ரேவதிக்கு நல்வரவு


கடல் ராசா

நனவிடைத் தோய்தல் நம்ம பாசையில் சொன்னால் Nostalgia அட யுவன் நல்லா பாடியிருக்காரே எனத் தோணுவது பாடலின் முதல் வெற்றி, பாடலாசிரியராக நன்றாகவே செயற்படுகிறார் பொயெட்டு தனுஷ்

வெள்ளி, 2 டிசம்பர், 2011

கார்த்திக் ஸ்வாமிநாதன் அலையஸ் ஜீனியஸ்



“Behind the success of every man there is women” என்பதை ஏற்கனவே காது புளிக்குமளவு பலமுறை கேட்டிருப்போம். ஆனால் அதையே தன் திறமைக்கான அங்கீகாரமின்மையால் தவிப்பவனின் மனப்போராட்டங்கள், மரபுகளின் கட்டுப்பாட்டினின்று விடுபட்டு தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காய் எதிர்கொள்ளும் சவால்கள், துரோகங்கள், அவனின் காதல், நட்பு, காமம், தோல்வி, கோபம், உளச்சிதைவு  என பல்வேறு உணர்ச்சிக் கொந்தளிப்புகளின் தொகுப்பாக செல்வராகவன் எழுதியிருக்கும் செல்லுலாய்ட் கவிதை “மயக்கம் என்ன”.
படத்தின் கதை இதுதான் என்று அறுதியிட்டு சொல்ல முடியாது. முழு படமுமே யதார்த்ததிற்கு ஓரளவேனும் அருகிலிருக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு.

கார்த்திக் ஸ்வாமிநாதன், சர்வைவலுக்காக ஏதோ ஒரு வேலையில் ஒட்டிக்கொண்டு சலிப்போடு நாட்களை கடத்தும் சராசரி அல்ல. ”பிடிச்ச வேலைய செய்ய முடியல்லன்னா செத்துடனும்” என்று சொல்பவன். அவனைப் போலவே கலாச்சாரத்தின் பெயரால் உள்ள கட்டுபெட்டித்தனங்களின் அபத்தங்களில் சிக்கிக் கொள்ளாத ஒரு நண்பர் குழாமில் அவனும் ஒரு அங்கம். அதில் ஒருவன் திருமணம் செய்ய விரும்பும் பெண்ணாக வந்து சேர்கிறாள் யாமினி. சமரசமே செய்து கொள்ளாமல் தானாக வாழும் கார்த்திக்கின் போக்கு யாமினிக்கு அவன் மேல் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. அது புரிந்து ஆரம்பத்தில் விலகிப் போனாலும் சில நிராகரிப்புகளின் போது அவளிடமிருந்து கிடைக்கும் ஆறுதல் கார்த்திக்கையும் அவளிடம் நெருங்கச் செய்ய அது காதலாகிறது. சில சச்சரவுகளுக்கு பின் யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளும் நண்பனும் விட்டுக் கொடுக்க காதல் கல்யாணத்தில் முடிகிறது. இதற்கிடையில் போட்டோகிராபியில் சாதிக்க துடிக்கும் கார்த்திக் அங்கு தான் ஆதர்ஷமாக நினைத்தவரே தனக்கிழைத்த துரோகத்தை தாங்க முடியாமல் மனச்சிதைவுக்கு உள்ளாகிறான். அதற்கு பின் கார்த்திக், யாமினி வாழ்க்கை என்னவானது என்பது மீதி கதை.

புதுப்பேட்டையிலிருந்தே
கமலுக்கு பிறகு தமிழில் வந்த தலைசிறந்த நடிகர் தனுஸ்தான் என்ற எண்ணம் இருந்தது, “மயக்கம் என்னவில் சந்தேகத்திற்கிடமின்றி அதை உறுதிப்படுத்தியிருக்கிறார். ரிச்சா தன்னை விரும்புவது புரிந்து விலகிச் செல்வது, ”எனக்கு இத தவிர எதுவும் தெரியாது யாமினி, அதயும் ஆய்ன்னு சொல்லிட்டான்” என்று புலம்புவது, கொஞ்சம் செயற்கையாய் இருந்தாலும் நாய் போல் வேலை செய்வது, குடிப்பதை தடுக்கும் மனைவியை பார்வையாலேயே வெருட்டுவது, கருச்சிதைவுற்ற மனைவியிடம் குற்றவுணர்வு நிறைந்த கண்களோடு மன்னிப்பு கேட்பது எனப் பல காட்சிகளில் அசத்துகிறார் தனுஷ்.

செல்வாவின் திவ்யாவினதும் அனிதாவினதும் இன்னுமொரு வடிவம்தான் யாமினி. கார்த்திக் ஸ்வாமினாதனின் வார்த்தைகளில் சொல்வதாயிருந்தால் இரும்பு மனுஷி. அந்த இரும்பு மனுஷி பாத்திரத்தை தனுஷுக்கு இணையாக செய்ய முயன்று அதில் ஒரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் புதுமுக நாயகியான ரிச்சா.

செல்வராகவனின் கதாநாயகர்கள் ஏன் மறை கழண்டவர்களாக இருக்கிறார்கள் எனப் பலர் விசனப்படுகின்றனர். அழகான பெண்களால் துரத்தி துரத்தி காதலிக்கப்பட்டு, 100 அடியாட்களை ஒரே அடியால் துவம்சம் செய்து, எல்லோரையும் ரட்சிக்கும் சூப்பர் ஹீரோக்களை எல்லா இயக்குனர்களும் படைப்பதில் இவர் இப்படி எடுத்து விட்டு போகட்டுமே. செல்வா நல்லதொரு திரைக்கதாசிரியர் என்பது தெரிந்ததுதான். ”Bad photographs” என தன் புகைப்படங்கள் நிராகரிக்கப்பட அந்த வலியுடன் வரும் கார்த்திக் தெருவிலுள்ள பாட்டியை புகைப்படமெடுக்கும் காட்சி, பறவைகளை படமெடுக்க போய் இயற்கையில் மனதை பறிக்கொடுப்பது, என் திறமையை நீங்கள் அங்கீகரிக்க வில்லையா? என் பக்கமே எட்டிப் பார்க்காதீர்கள் என்பதாய் “கார்த்திக் ஜாக்கிரதை” என போர்ட் மாட்டுவது எல்லாம் விசுவல் ட்ரீட்.

காட்சிகள் மெதுவாகத்தான் நகர்கின்றன. காட்சிகளின் கதாபாத்திரங்களின் வலியை பார்ப்பவர்களுக்கும் கடத்த காட்சிகள் அவ்வாறு அமைய வேண்டியது அவசியமே.

ராம்ஜியின் கமரா ஒவ்வொரு ப்ரேமையும் ஓர் அழகான ஓவியமாக செதுக்கிக் காட்டுகிறது. முதற் பாதியில் மெளனமாகவும், இரண்டாம் பாதியில் சப்தமாகவும் பின்னணி இசையில் தன் இருப்பை வெளிப்படுத்துகிறார் ஜிவிபி.


ஒன்று மட்டு உறுதி. “வறுமையின் நிறம் சிவப்பு” ரங்கன், “சலங்கை ஒலி” பாலகிருஷ்ணன், “வெயில்” முருகேஷன், “முள்ளும் மலரும்” காளி போல 
கார்த்திக் ஸ்வாமிநாதனும் என்னை வெகு காலத்திற்கு துரத்த போகிறான்

வழமையாய் ஒரு கலைப்படைப்பில் தென்படும் குறைகள் இருந்தாலும் அவற்றைக் கடந்து பார்க்க வேண்டிய, ஆதரிக்க வேண்டிய ஒரு படம் “மயக்கம் என்ன”. 

புதன், 19 ஜனவரி, 2011

ஆடுகளம் - என் பார்வையில்

 சினிமாக்களில் காட்டப்படுவது போல யதார்த்தத்தில் முழுமையான நல்லவர்களோ கெட்டவர்களோ கிடையாது. சந்தர்ப்பமும் சூழ்நிலைகளுமே ஓர் மனிதனின் நடத்தையை தீர்மானிக்கிறது. அவ்வகையில் தன்னிடம் வித்தை பயின்றவன் தன்னை மீறிச் செல்வதை தாங்க முடியாத ஒருவன் வன்மத்தினால் தன் சிஷ்யனின்  வாழ்வில் ஆடும்  சதியாட்டமே வெற்றிமாறனின் "ஆடுகளம்".  நீண்ட நாட்களுக்கு  பிறகு தமிழில் ஒரு அருமையான  படம்.  

சேவற் சண்டையை பற்றிய விவரணத்தோடு ஆரம்பிக்கின்றது படம். துரை(கிஷோர்),கருப்பு(தனுஷ்) ஆகியோரின் துணையுடன் உள்ளூரில் சேவற் சண்டையில் தோற்கடிகப்பட முடியாதவராக இருக்கிறார் பேட்டைக்காரன்(. செ. ‌.ஜெயபாலன்). அவரை தோற்கடிப்பதையே தனது லட்சியமாக கொண்டிருக்கும் அதிகாரி ஒருவருடன் இடம்பெறும் சேவற்சண்டையின் போது முன்பொருமுறை பேட்டைக்காரனால் அறுத்து விட சொல்லியிருந்த சேவலை வைத்து மூன்று லட்சம் பணத்தை ஜெயிக்கிறான் கருப்பு. தனது கணிப்பு தவறியமையும் தனது சிஷ்யன் மேல் படும் பெரும் புகழ் வெளிச்சமும் பேட்டைக்காரனுக்கு பொறாமையை தூண்டிவிட கருப்பின் வாழ்வை சீர்குலைக்க அவர் ஆடும் ஆட்டமும் அதிலிருந்து கருப்பு எவ்வாறு மீண்டானென்பதும் படத்தின் கதை.

 தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிய களத்தை முயன்றிருக்கிறார் இயக்குனர் வெற்றி. சேவற் சண்டையின் நுட்பங்கள், பேட்டைகாரனுக்கும் ரத்னசாமிக்கும் இடையிலான பகை, பேட்டைக்காரனின் சிஷ்ய கோடிகளுக்கு அவரில் இருக்கும்  விஷ்வாசம், கருப்புக்கு ஆங்கீலோ இந்திய பெண்ணான ஐரீன் மேல் வரும் காதல் என சுவாரசியமாக செல்கிறது முதற்பாதி. இரண்டாம் பாதி  கருப்பே அறியாமல் கொஞ்சம் கொஞ்சமாய் அவனை பலி தீர்க்கும் பேட்டைகாரனின் சதி. படமே அதுதான். காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் பார்வையாளனை அசர விடாமல் உள்ளீர்த்துக் கொள்வதில் இருக்கிறது வெற்றியின் வெற்றியின் ரகசியம். 

வெற்றிமாறனின் இயக்கத்தின் பின் படத்தில் பாராட்ட வேண்டியது பாத்திரத் தேர்வு. ஒவ்வோர் பாத்திரத்திற்குமான நடிகர் தேர்வும் அவர்களின் நடிப்பும் அருமை. தனுஷ் ஆச்சரியத்திற்குரிய ஒரு நடிகர். டிஷர்ட் ஜீன்ஸில் நகரத்து இளைஞனாக நடிக்க வேண்டுமா அல்லது சாரத்தை கட்டி பட்டிக் காட்டானாக மாறவேண்டுமா? இரண்டுக்கும் தயாராக இருக்கிறார். கொஞ்ச காலம் ஒரே மாதிரியான படங்களில் நடித்து சலிப்பூட்டி வந்தவர் இதோ மீண்டும் நான் விரும்பும் தனுஷாக மறுப்பிரவேசம்  செய்திருக்கிறார்.
அதேபோல் படத்தின் பிரதான பாத்திரம் பேட்டைக்காரனாக இலங்கைக் கவிஞர் .செ..ஜெயபாலன் அசத்துகிறார். அவரது பார்வையே அவருக்கு ஒரு ப்ளஸ் ஆக அமைந்துள்ளது. அவரது நடிப்பின் சிறப்புக்கு ராதாரவியின் குரலும் ஒரு பிரதான காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. கிஷோர் எப்போதும் ஹாலிவுட் action படங்களின் கதாநாயகர்கள் போல் இறுக்கமான முகத்துடன் வருபவர் இதிலும் அப்படியே. டாப்சி படத்தின் முன்னோட்டம் பார்த்த போது பெரிதாக கவரவில்லை எனினும் படத்தின் கதைப்படி அவரது கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தெரிவு.

. ஆர். ரஹ்மானின் இலக்கு வேறு. ஹாரிஸ் பெரிய ஹீரோக்களின் வர்த்தகப் படங்களில் காதுக்கு இனிமையாய் இரண்டு பாடல்களை போடுவதோடு நின்று விடுவார். ஆக கதைக்கு முக்கியம் தரும் புதிய அலை இயக்குனர்களுக்கு பொருத்தமானவர்கள் ஜிவிபியும் யுவனும்தான். அவ்வகையில் தனக்கிடப்பட்ட பணியை சிறப்பாய் செய்திருக்கிறார் ஜிவிபி.

ஆக இம்முறை வெளியான பொங்கல் படங்களில் என்னளவில் ஆகச் சிறந்தது ஆடுகளம்தான். ஆனால் அனைத்து தரப்பு ரசிகரையும் கவருமா என்பதை சொல்வது கடினம். பெரும்பாலும் குடும்பமாய் படத்திற்கு செல்பவர்கள் காவலனுக்கோ சிறுத்தைக்கோ தான் செல்ல விரும்புவர்.
ஆடுகளம் - அதகளம் 
Related Posts with Thumbnails