வெள்ளி, 2 டிசம்பர், 2011

கார்த்திக் ஸ்வாமிநாதன் அலையஸ் ஜீனியஸ்“Behind the success of every man there is women” என்பதை ஏற்கனவே காது புளிக்குமளவு பலமுறை கேட்டிருப்போம். ஆனால் அதையே தன் திறமைக்கான அங்கீகாரமின்மையால் தவிப்பவனின் மனப்போராட்டங்கள், மரபுகளின் கட்டுப்பாட்டினின்று விடுபட்டு தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காய் எதிர்கொள்ளும் சவால்கள், துரோகங்கள், அவனின் காதல், நட்பு, காமம், தோல்வி, கோபம், உளச்சிதைவு  என பல்வேறு உணர்ச்சிக் கொந்தளிப்புகளின் தொகுப்பாக செல்வராகவன் எழுதியிருக்கும் செல்லுலாய்ட் கவிதை “மயக்கம் என்ன”.
படத்தின் கதை இதுதான் என்று அறுதியிட்டு சொல்ல முடியாது. முழு படமுமே யதார்த்ததிற்கு ஓரளவேனும் அருகிலிருக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு.

கார்த்திக் ஸ்வாமிநாதன், சர்வைவலுக்காக ஏதோ ஒரு வேலையில் ஒட்டிக்கொண்டு சலிப்போடு நாட்களை கடத்தும் சராசரி அல்ல. ”பிடிச்ச வேலைய செய்ய முடியல்லன்னா செத்துடனும்” என்று சொல்பவன். அவனைப் போலவே கலாச்சாரத்தின் பெயரால் உள்ள கட்டுபெட்டித்தனங்களின் அபத்தங்களில் சிக்கிக் கொள்ளாத ஒரு நண்பர் குழாமில் அவனும் ஒரு அங்கம். அதில் ஒருவன் திருமணம் செய்ய விரும்பும் பெண்ணாக வந்து சேர்கிறாள் யாமினி. சமரசமே செய்து கொள்ளாமல் தானாக வாழும் கார்த்திக்கின் போக்கு யாமினிக்கு அவன் மேல் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. அது புரிந்து ஆரம்பத்தில் விலகிப் போனாலும் சில நிராகரிப்புகளின் போது அவளிடமிருந்து கிடைக்கும் ஆறுதல் கார்த்திக்கையும் அவளிடம் நெருங்கச் செய்ய அது காதலாகிறது. சில சச்சரவுகளுக்கு பின் யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளும் நண்பனும் விட்டுக் கொடுக்க காதல் கல்யாணத்தில் முடிகிறது. இதற்கிடையில் போட்டோகிராபியில் சாதிக்க துடிக்கும் கார்த்திக் அங்கு தான் ஆதர்ஷமாக நினைத்தவரே தனக்கிழைத்த துரோகத்தை தாங்க முடியாமல் மனச்சிதைவுக்கு உள்ளாகிறான். அதற்கு பின் கார்த்திக், யாமினி வாழ்க்கை என்னவானது என்பது மீதி கதை.

புதுப்பேட்டையிலிருந்தே
கமலுக்கு பிறகு தமிழில் வந்த தலைசிறந்த நடிகர் தனுஸ்தான் என்ற எண்ணம் இருந்தது, “மயக்கம் என்னவில் சந்தேகத்திற்கிடமின்றி அதை உறுதிப்படுத்தியிருக்கிறார். ரிச்சா தன்னை விரும்புவது புரிந்து விலகிச் செல்வது, ”எனக்கு இத தவிர எதுவும் தெரியாது யாமினி, அதயும் ஆய்ன்னு சொல்லிட்டான்” என்று புலம்புவது, கொஞ்சம் செயற்கையாய் இருந்தாலும் நாய் போல் வேலை செய்வது, குடிப்பதை தடுக்கும் மனைவியை பார்வையாலேயே வெருட்டுவது, கருச்சிதைவுற்ற மனைவியிடம் குற்றவுணர்வு நிறைந்த கண்களோடு மன்னிப்பு கேட்பது எனப் பல காட்சிகளில் அசத்துகிறார் தனுஷ்.

செல்வாவின் திவ்யாவினதும் அனிதாவினதும் இன்னுமொரு வடிவம்தான் யாமினி. கார்த்திக் ஸ்வாமினாதனின் வார்த்தைகளில் சொல்வதாயிருந்தால் இரும்பு மனுஷி. அந்த இரும்பு மனுஷி பாத்திரத்தை தனுஷுக்கு இணையாக செய்ய முயன்று அதில் ஒரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் புதுமுக நாயகியான ரிச்சா.

செல்வராகவனின் கதாநாயகர்கள் ஏன் மறை கழண்டவர்களாக இருக்கிறார்கள் எனப் பலர் விசனப்படுகின்றனர். அழகான பெண்களால் துரத்தி துரத்தி காதலிக்கப்பட்டு, 100 அடியாட்களை ஒரே அடியால் துவம்சம் செய்து, எல்லோரையும் ரட்சிக்கும் சூப்பர் ஹீரோக்களை எல்லா இயக்குனர்களும் படைப்பதில் இவர் இப்படி எடுத்து விட்டு போகட்டுமே. செல்வா நல்லதொரு திரைக்கதாசிரியர் என்பது தெரிந்ததுதான். ”Bad photographs” என தன் புகைப்படங்கள் நிராகரிக்கப்பட அந்த வலியுடன் வரும் கார்த்திக் தெருவிலுள்ள பாட்டியை புகைப்படமெடுக்கும் காட்சி, பறவைகளை படமெடுக்க போய் இயற்கையில் மனதை பறிக்கொடுப்பது, என் திறமையை நீங்கள் அங்கீகரிக்க வில்லையா? என் பக்கமே எட்டிப் பார்க்காதீர்கள் என்பதாய் “கார்த்திக் ஜாக்கிரதை” என போர்ட் மாட்டுவது எல்லாம் விசுவல் ட்ரீட்.

காட்சிகள் மெதுவாகத்தான் நகர்கின்றன. காட்சிகளின் கதாபாத்திரங்களின் வலியை பார்ப்பவர்களுக்கும் கடத்த காட்சிகள் அவ்வாறு அமைய வேண்டியது அவசியமே.

ராம்ஜியின் கமரா ஒவ்வொரு ப்ரேமையும் ஓர் அழகான ஓவியமாக செதுக்கிக் காட்டுகிறது. முதற் பாதியில் மெளனமாகவும், இரண்டாம் பாதியில் சப்தமாகவும் பின்னணி இசையில் தன் இருப்பை வெளிப்படுத்துகிறார் ஜிவிபி.


ஒன்று மட்டு உறுதி. “வறுமையின் நிறம் சிவப்பு” ரங்கன், “சலங்கை ஒலி” பாலகிருஷ்ணன், “வெயில்” முருகேஷன், “முள்ளும் மலரும்” காளி போல 
கார்த்திக் ஸ்வாமிநாதனும் என்னை வெகு காலத்திற்கு துரத்த போகிறான்

வழமையாய் ஒரு கலைப்படைப்பில் தென்படும் குறைகள் இருந்தாலும் அவற்றைக் கடந்து பார்க்க வேண்டிய, ஆதரிக்க வேண்டிய ஒரு படம் “மயக்கம் என்ன”. 

11 கருத்துகள்:

ம.தி.சுதா சொன்னது…

எப்போதும் தங்களின் நடுநிலமையான ரசனை எனக்கு ரொம்பவே பிடிக்கும்....

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)

srpjagan சொன்னது…

மிகவும் அருமையான விமர்சனம்
நன்றி நண்பரா

Unknown சொன்னது…

///செல்வராகவனின் கதாநாயகர்கள் ஏன் மறை கழண்டவர்களாக இருக்கிறார்கள் எனப் பலர் விசனப்படுகின்றனர்///

பிரச்சினை என்னவென்றால் அப்படி மறை கழன்றவர்களாக அவர் நாயகர்களைக் காட்டிய மூன்று படங்களுமே (காதல் கொண்டேன் 7ஜீ ரெயின்போ காலனி, மயக்கம் என்ன) மிகவும் பலமான பெண் பாத்திரங்களைக் கொண்டவையாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் மறை கழன்ற பாத்திரங்களைக் காப்பாற்றுகிற அல்லது காப்பாற்ற முயல்கிற பாத்திரமாக பெண் பாத்திரங்களைப் படைத்திருப்பார். இது பொதுவில் ஒத்துப்போவதில்லை. காலாகாலமாக ஆண் பாத்திரங்கள் பெண் பாத்திரங்களுக்கு எல்லாமுமாக இருப்பதான படங்களைப் பார்த்து வந்தவர்கள் என்பதால் செல்வராகவன் படங்கள் தமிழகச் சினிமாத்தளத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதில் சிக்கல் இருக்கிறது. ஆனால் தமிழகச் சினிமா வரலாற்றில் `பெருந்தலைகள் எனப்பட்ட பல இயக்குனர்களை செல்வராகவன் தாண்டிப் போய் நெடுநாட்களாகிவிட்டது

maruthamooran சொன்னது…

ஒரு படைப்பின் பாதிப்பை சரியாக எழுதியிருக்கிறீர்கள்.

“மயக்கம் என்ன“ என்னையும் ரசிக்க வைத்தது.

Darren சொன்னது…

//கலாச்சாரத்தின் பெயரால் உள்ள கட்டுபெட்டித்தனங்களின் அபத்தங்களில்//

Nice

Unknown சொன்னது…

//காட்சிகள் மெதுவாகத்தான் நகர்கின்றன. காட்சிகளின் கதாபாத்திரங்களின் வலியை பார்ப்பவர்களுக்கும் கடத்த காட்சிகள் அவ்வாறு அமைய வேண்டியது அவசியமே//

உண்மை!
அதென்னவோ காட்சிகள் விரைவாக நகரவில்லை என்று ஒரு ஸ்டாண்டர்டாக ஒரு குறை சொல்லும் முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள். படத்தின் தன்மையைப் பொறுத்தே அது அமைய வேண்டும் இல்லையா?
வழக்கம்போல உங்க ஸ்டைல்ல அருமையான பதிவு!

Unknown சொன்னது…

எதிர்பார்த்திருந்தேன்..நேற்று பார்க்கமுடியவில்லை...
ம்ம்ம் விமர்சனம் கலக்கல் தான்!!தனுஷ் மீதான மதிப்பு மற்றும் எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது,
அவரின் உடல் சைஸ்'ஐ தவிர மிகுதி அனைத்துமே ப்ளஸ் தான்!!

கார்த்தி சொன்னது…

எனக்கு படம்பிடிச்சிருந்திச்சு! ஆன இன்னும் படத்தை வேகமாக்கியிருக்கலாமோ எண்ணு தோணுது!
// னுஷுக்கு இணையாக செய்ய முயன்று அதில் ஒரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் புதுமுக நாயகியான ரிச்சா.

என்ன சார் ரிச்சா சுப்பரா நடிச்சிருந்தாவே? ஓரளவு வெற்றியல்ல. நல்ல வெற்றியென்றே எனக்கு தோன்றுது.

பெயரில்லா சொன்னது…

tamil kalaasaara serkeedu inatha movie. thanush sirantha nadikara ...kodumai

பெயரில்லா சொன்னது…

அருமையான விமர்சனம்
நன்றி

ARV Loshan சொன்னது…

//புதுப்பேட்டையிலிருந்தே கமலுக்கு பிறகு தமிழில் வந்த தலைசிறந்த நடிகர் தனுஸ்தான் என்ற எண்ணம் இருந்தது, “மயக்கம் என்ன” வில் சந்தேகத்திற்கிடமின்றி அதை உறுதிப்படுத்தியிருக்கிறார்//
இப் பதிவில் இது மட்டுமே பெரிதாக ஒத்துக்கொள்ள முடியாத ஒரே விடயம்.. நானும் தனுஷையும் ஒரு சிறந்த நடிகராக ஏற்றுக் கொண்டாலும் :)

படத்தோடு ஒன்றித்துப் போயுள்ள இன்னொருவரை சந்திப்பதில் மகிழ்ச்சி
பி.கு- அன்றே பதிவை வாசித்திருந்தும் பின்னூட்டம் தாமதமாக :)

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails