ஞாயிறு, 11 டிசம்பர், 2011

பாரதியும் பெண்ணியமும்“இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி” அதாவது இலக்கியம் என்பது தான் ஆக்கப்பட்ட காலப்பகுதியில் இருந்த சமூகத்தையும் அதன் பண்புகளையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.அவ்வாறன இலக்கியங்கள் சமூகத்தில் புரையோடியிருக்கும் அவலங்களையும் பிற்போக்கான நம்பிக்கைகளையும் சாடும் போது அவை இச்சமூகத்தை விட்டு அகலக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. இவ்வகையில் தாம் வாழ்ந்த காலத்தில் சமூகத்தில் சமூகத்தில் காணப்பட்ட அவலங்களை சாடியதோடு நாளைய சமூகம் அமைந்திருக்க வேண்டிய விதம் தொடர்பிலும் தீர்க்கதரிசனத்தோடு சொல்லிச் சென்றவர் என்ற வகையில் மகாகவி பாரதி முக்கியத்துவமுடையவனாகின்றான்.

பாரதி வாழ்ந்த காலப்பகுதியில் இந்தியா முழுமையும் அந்நியர் ஆட்சியில் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் சொல்லனாத் துன்பங்களை அனுபவித்து வந்த மக்களுக்கு தேசிய உணர்வை ஊட்டும் முகமாக அவர் பாடிய தேசிய எழுச்சிப் பாடல்கள் ஆங்கிலேய ஏகாதிபத்திய எரிமலையை சுட்டெரித்தது. அத்தோடு நில்லாமல் சக மனிதனை மதிக்காது ஜாதி வேறுபாடு பாராட்டும் இழிவான மக்கட் கூட்டத்தை தன் பாடல்களால் சாடியதோடு நில்லாமல் நாளைய சமூகம் அவ்வாறான இழிசெயல்களை செய்யாமல் இருக்கும் பொருட்டு குழந்தைகளுக்காக பாடிய பாப்பா பாட்டில் கூட ஜாதி வேற்றுமை கூடாதென்பதை வலியுறுத்தினார்.

இலக்கணக் கட்டுக்குள் சிறைப்பட்டிருந்த தமிழ்க் கவிதைகளை வசனக்கவிதை எனும் புதுப்பாதை காட்டி அழைத்து வந்து மெருகேற்றிய பாரதி அன்றைக்கு தமிழுக்கு புதுவரவாயிருந்த சிறுகதையை கையாண்டு பார்த்தவர்களிலும் முக்கியமான ஒருவர் . பாரதி தமிழர்களுக்கு தேசிய உணர்வை ஊட்டியதற்காகவும், ஜாதிக் கொடுமைகள் பற்றிப் பாடியதற்காகவும், தமிழைப் புதியப் பாதையில் பயணிக்கச் செய்ததற்காககவும் மட்டும் ஒரு புதுமைக்கவியாகவோ மகாகவியாகவோ போற்றப் படுவதில்லை. மாறாக அவர் பெண்மையைப் போற்றும் பெண்ணியப் பாடல்களே அவரை புதுமைக்கவியாகவும், தீர்க்கதரிசியாகவும், தத்துவவியலாளராகவும், மகாகவியாகவும் கொண்டாடச் செய்கின்றது என்று கூறினால் அது மிகையல்ல.

காலத்திற்கு காலம் பெண்ணியம் தொடர்பில் பல்வேறு விளக்கங்களை நாம் அறிந்திருக்கிறோம். பெண்ணியச் சிந்தனையானது முதலாளியத்திற்கு எதிரான வர்க்கப் போர் தீவீரம் பெற்ற காலங்களில் முதலாளியத்தில் காணப்பட்ட பெண்ணடிமைத் தனத்தை எதிர்த்த மார்க்சிய சிந்தனையாளர்களாலேயே முதன்முதலில் முன்வைக்கப் பட்டது எனலாம்.

பெண்ணியம் தொடர்பில் மேன்னாட்டு அறிஞர்கள் கூறிய சில கூற்றுக்களை எடுத்து பார்க்கும்  போது கார்டன் என்ற அறிஞர் " பெண்ணின் தாழ்நிலையை ஆராய்ந்து, அதை மாற்ற எடுக்கும் வழிமுறைகள் பெண்ணியம் எனப்படும்." என்றார். ஜெயின் என்பவர் " பெண்கள் தன்மையில் ஆண்களில் இருந்து வேறுபடினும் அவர்களும் தமக்குள் இணைந்து தாம் ஆணுக்கு நிகரானவர்கள் என்பதை உறுதிப்படுத்தலே பெண்ணியம்" என்பார். புட்சர் என்பவரோ " பாலினப் பாகுபாட்டால் பெண்களை எதிர்த்து இடம்பெறும் கொடுமைகளை எதிர்த்து மேற்கொள்ளப்படும் இயக்கம்" என்றார். பார்பரா ஸ்மித் மிக எளிமையாக "எல்லாத் தரப்பு பெண்களுக்கும் உரிமை பெற்றுத் தருவது பெண்ணியம்" என்றார்.

மேன்னாட்டு அறிஞர் கூற்று எவ்வாறு அமையினும் எம் பெண்களுக்கு பொருத்தமான எம் பெண்களுக்கு தேவையான சீரிய கருத்துக்களை தெளிவாக எடுத்துரைத்தவர் தந்தை பெரியார் என்று கூறினால் அது மிகையாகாது.

பெண்ணியம் தொடர்பில் மேல்நாட்டு அறிஞர்கள் கூறியக் கருத்துக்கள் இவ்வாறு கிடக்க பாரதியின் பெண்ணியச் சிந்தனை தொடர்பில் அடுத்த பதிவில் பார்க்கலாம். 
(தொடரும்.........)பின்குறிப்பு - நான் சாதாரண தரம் கற்கும் போது கிட்டத் தட்ட 12 வருடங்களுக்கு முன் தமிழ் பாடத்தில் ஒரு ஒப்படைக்காக எழுதியது. அமேச்சூர் தனமாக இருக்கலாம். மன்னிக்க.........

4 கருத்துகள்:

Ramesh சொன்னது…

ரசனை பிடிச்சிருக்கு :)

ARV Loshan சொன்னது…

தெளிந்த பார்வை.. அடுத்த முக்கிய பாகத்துக்காக காத்திருக்கிறேன்

தர்ஷன் சொன்னது…

ம்ம் இன்றே பதிவிடலாம் என்று நினைக்கிறேன் லோஷன் அண்ணா

என்றும் இனியவன் சொன்னது…

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails