செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

அடித்து துவைக்கவேனும் ஒரு காதலி - My sassy girl


காதலித்திருக்கிறீர்களா? இல்லையென்று சொல்லும் வெகு சொற்பமானவர்கள் இங்கேயே கழண்டுக் கொள்ளுவது உத்தமம். எஞ்சியவர்களில் சில பேர் காதலை ப்ரொபோஸ் செய்யும் முயற்சியில் இருந்த போது காதலி லேசாக முறைத்ததற்கே "போடி நீயும் உன் முகரையும்" என்று இந்தப் பழம் புளிக்கும் கதையாய் திரும்பி நடையைக் கட்டியவர்களா? இந்தப் படம் உங்களுக்குப் பைத்தியக்காரத்தனமாய் தோன்றலாம் (அதுதான் உண்மையும் கூட).

இப்போது எஞ்சியிருப்போரைப் பற்றிதான் எனக்குத் தெரியுமே. ஒரு நாள் சிரித்து இனிக்கப் பேசும் காதலி (அதாவது நீங்களாக சொல்லிக் கொள்வது) மறுநாள் நீங்கள் யாரென்றே தெரியாதது போல இருக்கும் பார்வையின் மர்மம் புரியாமல் தலையைப் பிய்த்துக் கொள்வீர்கள். அவளது குறைந்த பட்ச அங்கீகாரத்துக்காக நீங்கள் செய்யும் காரியங்கள் அவளால் வெகு எளிதாக அலட்சியப் படுத்தப்படும் போது சொரணை என்பது கொஞ்சமாவது எட்டிப்பார்க்க வேண்டுமே ம்ஹ்ம் அசடு வழிய மறு நாளும் தொடர்வீர்கள். திடிரென I LOVE YOU என SMS வரும் அவளோடு செட்டில் ஆகும் வாழ்க்கைப் பற்றி கலர் கலராய் கனவுகள் கண்டு விட்டு அவளிடம் செல்லும் போது "அய்யய்யோ இது அவருக்கு அனுப்ப வேண்டியது சொறி" என ஒற்றை வார்த்தையில் முடிப்பாள். இத்தனைக்குப் பிறகும் குடித்தழிவதும் புகை வளையங்களாய் ஊதித் தள்ளுவதும் நீங்கள்தானே ஒழிய அவளை வெறுக்கவே முடியாது. ஏன் என்று மனதிற்குள் கேட்டுப் பார்த்தால் காரணம் காதல் என்றுதான் தோன்றும் இதையும் " இல்லப்பா காதலை எல்லாம் உணர நீ இன்னும் வளரனும் இது வெறும் Infatuation " என்று சொல்லி விட்டு அவளுக்கு சரியான காலத்தில் வந்தக் காதலை கொண்டாடிக் கொண்டிருப்பாள். இத்தனைக்கும் பிறகு அவளை என்ன செய்ய தோன்றும்????? வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் அதிகமாய்க் காதலிக்கலாம்.

இதேதான் நடக்கிறது நம்ம ஹீரோ Gyeon-woo வுக்கும். பெற்றோருக்கு கட்டுப்பட்ட அமைதியான சுபாவம் கொண்ட அப்பாவியான இளைஞன். ரயில் நிலையமொன்றின் platform இல் நன்றாக குடித்து விட்டு தள்ளாடிய படி ரயிலில் அடிபடப் போகும் இளம்பெண்ணை தெரியாத்தனமாய் காப்பாற்றுகிறான். ரயிலுக்குள்ளும் அடாவடியாய் நடப்பவளிடமிருந்து தள்ளியே நிற்கிறான். இருந்தாலும் விதி விளையாடுகிறது. இவனைப் பார்த்து Honey என சொல்லி விட்டு மயக்கமாகிறாள். பிடித்தது ஏழரை சனி எல்லோரும் இவனை அவளது காதலன் என நினைப்பதால் உப்புமூட்டை தூக்கி கொண்டு போய் ஒரு லொட்ஜில் அவளுடன் தங்குகிறான். அத்தோடு விட்டால் பரவாயில்லை.

அடுத்தடுத்த
நாட்களில் இவனை தேடி வந்து இம்சிக்கிறாள். அவள் எழுதிய திரைக்கதைகளை கஷ்டப்பட்டாவது வாசிக்க வைப்பது. அவளது வகுப்பறைக்கு வந்து பூ கொடுக்கச் சொல்வது இப்படி கட்டாயப் படுத்தி செய்ய வைக்கிறாள். மறுத்தால் ரொம்ப சிம்பிள் அடி உதை துவைத்தெடுத்து விடுவாள். அவளது ஹை ஹீல்ஸ் காலனியை இவனை அணியச் செய்து நடு ரோட்டில் தன்னைத் துரத்திப் பிடிக்கச் சொல்கிறாள். அடிப்பதை பந்தயமாக கொண்டு ஒரு போட்டி. முதலில் அவள் தோற்க செல்லமாய் நெற்றியில் சுண்டுகிறான். அடுத்து இவன் தோற்க அத்தனை பேர் முன்னிலையிலும் இவன் காலரைப் பிடித்து இரண்டு கன்னத்திலும் மாறி மாறி பளார் பளார். பேசாமல் விட்டுத் தொலையலாம்தானே நம்மைப் போலவே அவனும் நினைத்தாலும் முடியவில்லை காரணம் நான் மேலே சொன்ன அந்தப் பாழாய்ப் போனக் காதல்.

பிறிதொரு நாளில் பெற்றோர் அவளுக்கு பார்த்து வைத்திருப்பவனோடு Dating சென்ற இடத்தில் இவனும் வர அவள் பாத்ரூம் போன நேரம் பார்த்து இவனிடம் அவளைப் பற்றிக் கேட்கும் மாப்பிளையிடம் அவளுக்குப் பிடித்தமானவனாய் இருக்க 10 Rule களை சொல்கிறான். அடி வாங்கினாலும் வலிப்பதை காட்டிக் கொள்ளாதே, வலிக்கா விட்டால் வலிப்பதை போல நடி இத்யாதி இத்யாதிகள் அதைக் கேட்டு உருகிப் போகின்றவள் இவனைத் தேடி ஓடுகிறாள்.(பார்த்தது போல் இருக்கா இதைத்தான் SMS இல் சுட்டு இருந்தார்கள்). இவன் மேல் தனக்கும் பீலிங்க்ஸ் இருக்கா என குழப்பமாய் இருப்பதாய் சொல்பவள் தான் அவனுக்கு சொல்ல விரும்புவதையும் அவன் தனக்கு சொல்ல விரும்புவதையும் கடிதமாய் எழுதி ஒரு முட்டை வடிவ போத்தலில் இட்டு மலையுச்சி ஒன்றின் மேலிருக்கும் மரத்தின் கீழ் புதைக்கிறார்கள். இரண்டு வருடம் கழித்து வந்து வாசிப்பதாயும் அப்போதும் ஏதேனும் பீலிங்க்ஸ் மிச்சமிருந்தால் காதலிப்பதாயும் ஏற்பாடு. இரண்டு வருடம் கழித்து பார்த்தால் ஹீரோ மட்டும் வந்திருக்க அவளைக் காணோம். பொறுமையிழப்பவன் கடித்தத்தை எடுத்துப் படித்தால் இறந்துப் போன அவளது முன்னாள் காதலன் போல இவன் இருந்ததால்தான் Honey என்றாளாம். அவனுக்கு கொடுத்த இம்சைகளெல்லாம் தன பழைய காதல் ஞாபகங்களை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ளத்தானாம். அவன் அப்படி எல்லாம்தான் அவர்கள் காதலிக்கும் காலத்தில் செய்தானாம். "என்னா கொடுமை சரவணன் இதெல்லாம்" என நாம் சந்திரமுகி பிரபு கணக்காய் தலையிலடித்துக் கொள்ள அதற்கப்புறம் அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதை Youtube இலோ வேறேதும் தளத்திலேயோ 2001 ஆம் ஆண்டு வெளிவந்த My sassy girl கொரியத் திரைப்படத்தைப் பார்த்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஹாலிவுட்,பாலிவுட் அட நம்ம தமிழ்ப்படம் அளவுக்கு கூட ஒரு ரிச்னெஸ் இருக்காது. ரொம்ப யதார்த்தமான கதையோ அல்லது உயர்ந்த கலானுபூர்வ அனுபவத்தைத் தரும் படைப்போக் கிடையாது. புனிதமெனக் கூறப்படும் காதலின் மகத்துவம் கூறி பார்வையாளர்களை உணர்ச்சிவசப் படச் செய்யும் இன்னுமொரு மெலோட்ராமா. மிகையுணர்வை வெளிக்காட்டும் நடிப்பு, கொஞ்சமும் யதார்த்தமற்ற காட்சிகள், பார்வையாளனை திருப்திப் படுத்தவெனவே திணிக்கப் பட்ட திருப்பங்கள், இறுதியில் சுபம் என ரொம்பவும் வழமையான படமாயிருந்தாலும் அதெல்லாம் படம் பார்த்து முடிந்து யோசித்தால் மட்டுமே உறுத்துகிறது. மற்றும் படி படம் ஆரம்பித்து முடியும் வரை உதட்டோரம் சிரிப்போடு பார்த்து கொண்டிருந்த எனக்கு இறுதியில் தோன்றியது ச்சே இப்படி அடித்து துவைக்கவேனும் ஒரு காதலி இருந்திருக்கலாம். ஒருவேளை படத்தின் வெற்றியும் இதுவாய் இருக்கலாம்.

படம் பார்க்க விரும்புவோர் கட்டாயம் பாருங்கள் ஒரு நல்ல டைம் பாஸ் படம். அய்யய்யோ கொரியன் படமா எனக்கு அவங்க மூஞ்சே பிடிக்காது, சப் டைட்டில் படிக்கிறதா, படம் பார்க்கிறதா எனவெல்லாம் அங்கலாய்ப்போர் 2008 இல் வந்த இதன் ஆங்கில ரீமேக் பார்க்கலாம். Elisha cuthbert நடித்தது நான் பார்த்ததில்லை இருந்தாலும் ஒரிஜினல் அளவு இல்லை என்பது நண்பர்கள் கருத்து.

7 கருத்துகள்:

nnm vijay சொன்னது…

நான் மூன்று முறை பார்த்துவிட்டேன் . அலுக்கவில்லை. அருமையான படம் .

அண்ணாமலையான் சொன்னது…

நல்லா அழகா இருக்கு அந்த பொண்ணு... படம் பாத்துர வேண்டியதுதான்...

Jackiesekar சொன்னது…

எற்க்கனஅவ இந்த படத்தை பற்றி நான் எழுதி விட்டேன் விருப்பம் இருந்தால் வாசித்து பார்க்கவும்..
http://jackiesekar.blogspot.com/2009/11/my-sassy-girl.html

தர்ஷன் சொன்னது…

நன்றி விஜய்
நன்றி அண்ணாமலையான் அந்தப் பேன் மட்டுமல்ல படமும் ரொம்ப அழகானப் படம்
நன்றி ஜாக்கி சேகர் உங்களுடையதை வாசிக்காமல் இருந்திருப்போமா? தங்கள் முதல் வருகை ரொம்பவும் நன்றி

பெயரில்லா சொன்னது…

Hi , I saw both the korean and english version of my sassy girl, Korean version really good.

Tamilan சொன்னது…

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.tamildaily.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.tamildaily.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

உங்கள் நண்பர்களுக்கும் இத் தளத்தை அறிமுகம் செய்து வையுங்களேன்...

Kumaran சொன்னது…

இவ்வளவு நாட்களாக தங்கள் பதிவுகளை எப்படி மிஸ் பண்னேன் என்று தெரியவில்லை.அதுக்கு முதலில் மன்னிப்பு,
படத்தை இன்னும் பார்க்கவில்லை.கண்டிப்பாக பார்க்க முயற்சி செய்கிறேன்..
நல்ல விமர்சனம்.நன்றி மற்றும் வாழ்த்துக்கள்,

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails