"விஷயம் கேள்விப் பட்டீர்களா? இந்தியாவில் பிள்ளையார் பால் குடிககீராறாம் tv இல காட்டினார்கள்" என்று போகிற போக்கில் ஒருவர் சொல்லிப்போனதுதான் தாமதம் அனைவரும் தெரிந்த இடத்திலெல்லாம் பால் வாங்கிக் கொண்டு வழிப் பிள்ளையார்களுக்கு கொடுக்கத் துவங்கினார்கள். எத்தனை இடத்தில் பிள்ளையார் பால் குடித்தார்? எத்தனை லீட்டர் குடித்தார் என்ற புள்ளி விவரங்கள் தெரியவில்லை. ஆனாலும் போனவர்களில் அநேகமானோர் பரவசம் ததும்பிய முகத்துடன் வந்தனர்.
அப்போதுதான் எனக்கு நந்தனாரும், தின்னனாரும் ஞாபகத்துக்கு வந்தனர் அவர்களை விட பக்தியில் குறைந்தவனா நான் என்ற எண்ணத்தோடு திட்டம் ஒன்றை தீட்டினேன். எனது மச்சானும் என்னோடு இந்த செயற்றிட்டத்தில் இணைந்துக் கொண்டான். பூஜையறை சென்று அங்கிருந்த சிறிய பிள்ளையார் சிலையை வெளியே கடத்திக் கொண்டு வந்தேன். வீட்டுக் கொல்லைப் புறத்திலே கம்புகளை ஊன்றி கோயில் போல் அமைத்து அதற்கு யூரியா உரப்பையினால் கூரை அமைத்தோம். உள்ளே களிமண்ணை குழைத்து மேடை போல் அமைத்து விட்டு அதில் விநாயகரை வைத்தோம். பிறகு கிடைத்த பூக்களை எல்லாம் பறித்து அவர் மேல் தூவி விட்டு "ஐந்து கரத்தனை ஆனை முகத்தினை" எல்லாம் பாடி விட்டு பார்த்தால் அவருக்கு கொடுக்க பால் இல்லை. பூஜையறையில் இருந்து விநாயகரை கடத்தியது போல் சமையலறையில் இருந்து பாலை கடத்துவது அவ்வளவு எளிதான ஒரு விடயமாய் இருக்க வில்லை. என்ன கொடுமை கடவுளே இது என்று நொந்தவன் பின் மெல்ல மனதை தேற்றிக் கொண்டு அடியேனின் அன்பை அறியாதவரா கடவுள் கொடுப்பதை மனமுவந்து ஏற்பார் என்ற நம்பிக்கையுடன் spoon ஒன்றை கொண்டு வந்து எங்கள் வீட்டில் toilet போகும் போது தண்ணீர் அள்ள பீப்பாய் ஒன்று வைத்திருந்தனர். அதிலிருந்து சிறிது தண்ணீர் அள்ளி பிள்ளையாருக்கு கொடுக்க என்ன ஆச்சரியம் ஒரு சொட்டு விடாமல் அவ்வளவையும் உறிஞ்சிக் குடித்தார் பிள்ளையார்.

அன்று முழுவதும் எல்லையில்லா ஆனந்தத்துடன்தான் இருந்தேன். பிறவிப் பெருங்கடலை கடந்து விட்டதாயும் இறைவனுடன் விரைவிலேயே நான் இரண்டறக் கலக்கும் நாள் வரப் போவதாயும் எண்ணிக் கொண்டேன்.
அப்போதுதான் இடியென தாக்கும் அந்த செய்திக் கிடைத்தது. அதாவது சில விஞ்ஞானிகள் ஏதோ நிறமூட்டிய பாலை கொடுத்த போது பால் சிலையில் துளியாக இருந்ததைக் கொண்டு மயிர்துளைவிளைவு மற்றும் மேற்பரப்பு இழுவிசை என்பவற்றின் ஊடாக ஏதோ விளக்கமளித்து விட்டனராம். திரவ மூலக்கூறுகளை பிணைத்திருக்கும் மேற்பரப்பிழுவிசையினால்(surface tension) புவிஈர்ப்பினையும் மீறி பால் மேலேத் தள்ளப் பட அங்கிருந்து மயிர்த்துளை விளைவினால்(capillary action) பால் தொடர்ந்தும் உள்ளே செல்கின்றது என்பதே இவ்விளக்கமாகும்.
விண்வெளியில் புவியீர்ப்பு புறக்கணிக்கத் தக்க அளவில் தொழிற்படும் இடத்தில் திரவப் பானங்களை பருக மேற்படி மேற்பரப்பிழுவிசையை அவர்கள் பயன்படுத்த நாம் பிள்ளையாரைப் பால் குடிக்க வைக்க பயன் படுத்துகிறோம் இன்னதென்று தெரியாமலே.
தாவரங்களில் காழ் இழையம் வழியே தொடர்ச்சியாய் நீர் உட்செல்வதிலும்
(சாற்றேறம்) மேற்படி விடயங்கள் பங்களிக்கின்றன.
விடுவோம் விரைவிலேயே கண்களில் இரத்தம் வழிதல், வீபுதி, குங்குமம், தேன் வடிதல் போன்ற ஏதாவது செய்து பிள்ளையார் தன்னை நிருபிக்காமலா போகப் போகிறார்.
6 கருத்துகள்:
பகடியாக மூடநம்பிக்கையை உடைக்கும் உங்கள் எழுத்து அருமை...
//விடுவோம் விரைவிலேயே கண்களில் இரத்தம் வழிதல், வீபுதி, குங்குமம், தேன் வடிதல் போன்ற ஏதாவது செய்து பிள்ளையார் தன்னை நிருபிக்காமலா போகப் போகிறார்.
//
இதை நிரம்பவே ரசித்தேன்..
நன்றி முகிலன்
இனிமையான அனுபவம். நானும் இந்த பால்குடி ரகளையைப் பார்த்து ரசித்தவன்.. :)
//பிறவிப் பெருங்கடலை கடந்து விட்டதாயும் இறைவனுடன் விரைவிலேயே நான் இரண்டறக் கலக்கும் நாள் வரப் போவதாயும் எண்ணிக் கொண்டேன்.
//
சிறுவயதில் நானும் இப்படி ஆனந்தப்பட்ட தருணங்கள் நிறைய... :)
நன்றி ப்புட்டியன்
சாமி கண்ணை குத்திட போகுது... :-)))
ஐய்யோ கடவுளே!!!
கருத்துரையிடுக