ஏ. ஆர்.ரஹ்மான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏ. ஆர்.ரஹ்மான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 பிப்ரவரி, 2013

கடல் - என் பார்வையில்


நம்மெல்லோர் முன்னும் இரண்டு பாதைகள் இருக்கின்றன. ஒன்று இலகுவாக சுகபோகங்களை அள்ளித்தரும் சாத்தான் வழிநடத்தும் தீய பாதை. மற்றையது அளவில்லா சோதனைகளை தந்தாலும் இறுதியில் ஒரு ஆத்ம திருப்தியையேனும் தரும் தேவனின் புனித பாதை. துரதிஷ்டவசமாக மனிதன் முதலாவதையே தெரிவு செய்கிறான். அந்தப் பாதையில் செல்பவன் சிறிது தூரம் கடந்ததும் விபரீதம் புரிந்து திரும்ப எத்தனித்தாலும் அது அத்தனை இலகுவில்லை. ஏன் அந்த தேவனாலேயே கூட அவனை ரட்சித்து மீளக் கொணர்வது கடினம். ஆனால் மனிதத்தின் உயரிய பண்பு அன்பு. சாத்தானுக்குள் கூட மிச்சமிருக்கும் ஒரு துளி வெளிச்சம் அது. அதனால் எதுவும் சாத்தியம். வழி தவறியவனை மீட்கும். தேவனே வழி மாறினாலும் தடுக்கும். அவ்வளவு ஏன் அந்த சாத்தானையே தோற்கடிக்கும். ஆம் அன்பு ஒன்றே இவ்வுலகில் சாஸ்வதமானது. மேற்படி கருத்தை ஒரு மீனவக் கிராமப் பின்னணியில் மணிரத்தினம்- ஜெயமோகன் கூட்டணி சொல்லியிருக்கும் படமே கடல்.

 எத்தனை அழகான ஒரு கரு படம் பார்த்த ஒவ்வொருத்தனும் மனம் முழுதும் தேவ குணங்கள் அரும்ப நெகிழ்ச்சியாய் வரவேண்டியவன்,  கொலைவெறியேறி  சாத்தான்களாக வரும் வகையில் படமாக்கியிருக்கிறார் மணி.

மணிரத்னம் என் பிரிய இயக்குனர்களில் இவருக்குத்தான் முதலிடம். மணிரத்தினம் மேக்கிங் என்று வாய் பிளந்த காலமொன்றுண்டு. நல்ல தொழினுட்ப கலைஞர்களின்  கூட்டு இருந்தால் துண்டு துக்கடா இயக்குனர்களும் மேக்கிங்கில் அதகளம் பண்ணலாம் என்ற நிலையில் திறமையான திரைக்கதையின் மூலமே தன நிலையை தொடர்ந்து தக்க வைக்கலாம் என்பதை மணி மறந்து விட்டார். "ராக்கம்மா கையத் தட்டு" போன்ற ஒரு பாட்டை படமாக்கியவர் இந்த படத்தில் "அடியே " படமாக்கி இருக்கும் விதத்தை பார்த்தால் எதால் சிரிப்பது என்றே தெரியவில்லை மொண்டேஜ் ஷாட்களின் பின்னணியில் துண்டு துண்டாக நகரும் பாட்டாக இருக்கும் எனப் பார்த்தால் பாசி மாலைகள் சகிதம் 50, 60 க்ரூப் டான்சர்ஸ் புடை சூழ மானாட மயிலாட காம்படிஷனுக்கு வந்தது போல ஆடுகின்றனர் கவுதம் அண்ட் கோ. என்னை கடைசியாக திருப்தி படுத்திய படம் அலை பாயுதே மட்டுமே. அதற்கு முன்னும் ரோஜா முழுப் படமாக என்னை கவர்ந்ததை விட மதுபாலா,அரவிந்த சாமி காதல் காட்சிகளே கவர்ந்தது. பம்பாய், இருவர் ஓகே. அலைபாயுதேக்கு பிறகு கன்னத்தில் முத்தமிட்டால்  கொஞ்சமே கொஞ்சம் இம்ப்ரஸ் செய்தது. மற்றும்படி இன்னமும் நான் மணியின் படங்களில் தேடிப்பார்ப்பது மௌன ராகத்தின் கச்சிதத்தை, நாயகனின் பிரமாண்டத்தை, தளபதி தந்த நெகிழ்ச்சியை துரதிஷ்டவசமாக மேற்கூறிய எதுவும் கடலில் இல்லை.

கதை ஜெயமோகன். குறை சொல்ல ஏதுமில்லை. இந்த அழகான கதையை திரைக்கதையாக்கி படமாக்குவதில் மணிரத்னமே கோட்டை விட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. வசனங்களும் அருமை. ஆரம்பத்திலேயே அர்ஜுன் எனக்கு "பசியும் தெரியும், பைபிளும் தெரியும்" என்று சொல்ல அர்விந்த் ஸ்வாமி "எனக்கு பைபிள் மட்டும்தான் தெரியும்" என்கிறார். இருவரினதும் பாத்திரங்களின் இயல்புகளை தெளிவாக அந்த வசனமே சொல்லி விடுகிறது. சின்னவன் தொம்மனை மீனவர்களோடு அனுப்பும் போது "ஒரு வேளை கடலுக்கு இவனை தெரிஞ்சிருக்கலாம்" என்பது "எல்லாமே க்றித்தவங்கத்தான் ஆனா விசுவாசிகள்" இவையெல்லாம் பதம் பார்க்க சில சோற்றுப் பருக்கைகள். அத்தோடு கடினமான வட்டார வழக்கு என்றும் சொல்ல முடியாது. நானெல்லாம் ஏழாம் உலகத்தின் ஒரு இருவது பக்கத்து அப்புறம் அந்த மொழிக்கு நன்கு பரிச்சயப்பட்டு படித்து முடித்த பின் இருடே, நிப்பாட்டுடே, வாலே, போலேன்னு தூத்துக்குடி பாஷையவே பேசுனவன். அதோடு எல்லாம் ஒப்பிடும் போது வசனங்கள் எளிமையாகவே இருந்தது.

நடிகர்களில் முதலிடத்தை சந்தேகமின்றி தட்டிச் செல்கிறார் பாதர் சாம் ஆக அரவிந்த் சுவாமி அன்றைய கார்த்திக் போல பிறகு வந்த மாதவனைப் போல அலட்டலில்லாத அற்புதமான நடிப்பு.

பெர்க்ஸ்மான் அலையஸ் மேசைக்காரன் அலையஸ் சாத்தானாக அக்ஷன் கிங். அடிதடிதான் ஆண்மையின் இலக்கணம் என நம்பிய பதின்மங்களில் நானும் அர்ஜுன் ரசிகன்தான். அங்கே இங்கே தாவுவது, ஒன்றுக்கு ரெண்டு கதாநாயகிகளோடு குத்தாட்டம் போடுவது, கவுண்டர் அல்லது வடிவேலுவோடு நகைச்சுவை என்ற பெயரில் ஏதேனும் மொக்கை போடுவது என இருந்தவரை காலம் போன காலத்தில் திடிரென நடிக்கச் சொன்னால் என்ன செய்வார். ஆனால் கொஞ்சம் கஷ்டப்பட்டு நடிக்க முயற்சித்திருக்கிறார்.

பிரபு விக்ரம், அதரவா முரளி, சுருதி ஹாசன், வரு சரத், ஐஸ்வர்யா அர்ஜுன் நாளைக்கே வரக்கூடிய சின்ன கேப்டன் என்ற வாரிசு நடிகர்கள் யாரையும் விட கவுதம் கார்த்திக்கை அதிகம் எதிர்ப்பார்த்தேன். காரணம் அவர் பெயருக்கு பின்னாலிருக்கும் கார்த்திக். ம்ஹ்ம் முதற்படம் என்றளவிற்கு ஓக்கே மன்னிப்போம்.


அப்புறம் அந்த உலகத்திலேயே இல்லாத ரெண்டு பேரழகிகளை பெத்திருக்கிற ராதாவை அவர் பொண்ணுங்களோடு சேர்த்து எங்காவது நாடு கடத்திட்டா தேவலாம். கடுப்பேத்துறாங்க மை லார்ட். பின்ன தேவனாலேயே ரட்சிக்க முடியாதவனை மீட்கும், சாத்தானையே அன்பினால் தோற்கடிக்கும் தேவதை எப்பேர்பட்டவளாய் இருக்க வேண்டும். சகிக்கல.

பாரதிராஜா தாஜ்மஹால் என்று ஒரு படம் எடுத்தார் இன்று பலருக்கு அந்த படம் நினைவில் இருக்க காரணம் இசைப்புயல். அது போல காலம் கடந்தாலும் நிற்கும் இசையை படத்துக்கு வழங்கியிருக்கிறார் படத்தின் நிஜ ஹீரோ ஏ. ஆர். ரஹ்மான். மண்வாசனை மண்ணாங்கட்டி வாசனை எல்லாம் விட்டு விடுவோம். படத்தில் பாடல்கள் என்பதே யதார்த்ததிற்கு அப்பாற்பட்டதுதான் எனும்போது அலைகள் ஓய்வதில்லையில் இருந்து கடலுக்குண்டான இந்த 30 வருடத்தில் கடற்கரையோர கிராமங்களில் இசையில் ஒரு இவாலுவேஷன் நடந்திருக்காதா?

ராஜீவ் மேனன் ஒளிப்பதிவை தனியே சிலாகித்தால் அது சூரியனுக்கே டார்ச் அடிப்பது போல விட்டு விடுவோம். மணிக்கு அப்புறம் படத்தின் மிகப் பெரிய சொதப்பல் ஸ்ரீகர் பிரசாத் தேசிய விருது பெற்ற எடிட்டர். சம்பந்தா சம்பந்தமில்லாது  கோர்வைவையில்லாது தாவி செல்லும் காட்சிகளின் தொகுப்பு. தலைவலிக்கு அதுதான் பிரதான காரணம்.

குப்பையில் கிடைத்த கோமேதகம் போல படத்தில் நெகிழ வைத்த ஒரு காட்சி.  துளசியிடம் தான் ஒரு பாவி என கவுதம் சொல்ல அவ்ளோதானே இதோட எல்லாம் போச்சு இனி எல்லாத்தையும் விட்டுறு என்னா என அசால்ட்டாக பாவ மன்னிப்பு அளிப்பார் துளசி தண்டனையிலும் கொடிய அந்த மன்னிப்பின் கனம்  தாங்காத கவுதமின் கதறல் அதைத் தொடர்ந்து  மன்னிக்கப்பட்டதால் பாவங்களிலிருந்து விட்டு விடுதலையான பரவசத்துடன் அப்படியே அவர் துளசியிடம் சரண்டர் ஆவதை காட்டும் "மூங்கில் தோட்டம்" பாடல். இது போல இன்னும் 5 சீன் இருந்திருந்தா?

 படத்தை ஒரேயடியாய் நிராகரிப்பதில் எனக்கு உடன்பாடில்லைத்தான். பார்க்காலாம். ஆனால் நாம் மணியிடம் எதிர்பார்ப்பது இதை அல்ல. அவரின் திறமை நீர்த்து போயிருப்பது அவருக்கே புரிந்தால் செய்ய வேண்டியது பேசாமல் படம் எடுப்பதை நிறுத்தி விட்டு மெட்ராஸ் டாக்கிஸ் மூலம் புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதுதான். நாம் மவுன ராகத்தையும் நாயகனையும் தளபதியையும் காலம் பூரா சிலாகித்துக் கொண்டிருக்கலாம்.

வெள்ளி, 6 ஜனவரி, 2012

ஏக் தீவானா தா - இசைப் பார்வை




இசைப்புயலின் பிறந்தநாளில்ஏக் தீவானா தாபாடல்களில் மூழ்கியிருந்தேன். பாடல் பற்றிய கருத்துக்களை நண்பர்களோடு ஃபேஸ்புக்கில் ஷேர் பண்ணலாம் என எழுதியது நீண்டு விட்டதால் பதிவாக .

ஹோஸன்னா” Leon D'Souza & Suzanne பாடியிருக்கிறார்கள். விஜய் ப்ரகாஷை விடவும் ஒரு மென்மையை பாடல் பூராவும் குழைத்து  விட்டிருக்கிறார்கள். காது வழியே தேன் பருகும் உணர்வு. மொத்தத்தில் தமிழை விட பெட்டர்.


ஷர்மிந்தா ஹூன்மன்னிப்பாயாவின் தமிழ் வடிவம், ஹிந்தி வார்த்தைகள் இசையோடு பொருந்திப் போக மறுப்பது ஹிந்தி தெரியாத எனக்கே புரிகிறது. அதையும் விட தமிழ் மன்னிப்பாயாவின் ஜீவனான ஷ்ரேயா கோஷல் இல்லாதது பெரிய குறை. இசைப்புயலோடு இணைந்திருப்பவர் மதுஸ்ரீ.

மலையாள ஆரோமலே ஹிந்தியில் உருமாறியிருக்கிறது. விடிவியில் இந்த பாடலை கேட்ட போது இருந்த பிரமிப்பு நிச்சயமாக இல்லை.

”தோஸ்த் ஹை ஹம் தோ” கண்ணில் கண்ணை ஒட்டிக் கொண்டே பாடலின் ஹிந்தி வடிவம். மிக்ஸிங்கில் சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள். ஒரு காதலனின் போராட்டத்தின் பதட்டம் தடதடக்கும் ரயிலின் பக்கத்தில் நிற்கும் நம்மையும் தொற்றிக் கொள்வதான அந்த பரபர உணர்வை ஹிந்திப் பாடல் தரவில்லை.

”க்யா ஹை மொஹாபத்” தமிழில் இல்லாத பாடல் . ஹிந்தி ரசிகர்களுக்கான இசை. எளிமையான இசை போலத் தோன்றினாலும் இசைப்புயலின் குரலின் வசீகரம் பாடலுக்கு ஒரு தனி அந்தஸ்தை தருகிறது. சொல்லி ஹிட் அடிக்கப் போகும் ஒரு பாடல்.

பதிவில் திருப்தியுறாதவர்களுக்காக எமியின் சிறப்பு உம்மா படம் 

”பூலோன் ஜைஸி” ஓமணப் பெண்ணேவின் இந்தி வடிவம். இசையை விட்டு ஓடும் வரிகளை வலுக்கட்டாயமாக சிறை பிடித்திருக்கிறார்கள். இது ஹிந்தி ரசிகர்களுக்கான பாடல் இல்லை. அங்கு ஹிட்டடிப்பது கடினம்.


”சுன்லோ சரா” குரலில் தேன் தடவி பாடுபவர் ஷ்ரேயா கோஷல். இசையிலும் ஆங்காங்கே ரசிக்கச் செய்யும் சில மாற்றங்கள்.

“சோஹ்ரா ஜபின்” விண்ணைத் தாண்டி வருவாயாவின் ஹிந்தி வடிவம்.இசைப்புயலுக்கு பதில் ஜவேட் அலி பாடியிருக்கிறார். சென்னையின் மொசார்ட் அளவுக்கு இல்லை.

மொத்தத்தில் தமிழளவிற்கு ஹிட் அடிக்க வாய்ப்பில்லாத ரஹ்மானின் சராசரியான இசைத் தொகுப்புகளில் ஒன்று. இரண்டாம் முறை செய்யும் போது மெருகேறும் என்பதெல்லாம் சும்மா. எப்போதும் முதலில் செய்வதே பெஸ்ட் என்பதை நிரூபித்திருக்கிறது. 


வெள்ளி, 31 டிசம்பர், 2010

2010 இல் நான் ரசித்த திரைப்படங்கள்

2010 தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை சிறப்பாய் இருந்ததாக பேசிக் கொள்கிறார்கள். அதுவரை தமிழ் சினிமா கட்டிக் காத்த பாரம்பரியங்களை உடைத்த நந்தலாலா போன்ற படங்களும், உலக அரங்கிற்கு தமிழ் சினிமாவை இட்டுச் சென்ற எந்திரன் போன்ற படங்களும் இந்த வருடத்திலேயே வெளியாகின. கிட்டதட்ட 120 சென்ற வருடத்தில் வெளியானதாம். அதில் நான் பார்த்தது வெறும் 16 படங்கள் மாத்திரமே இந்தப் பதினாறில் எனக்கு ஏதோ ஒரு வகையில் பிடித்தது ஒரு 6 படங்கள் மட்டுமே. அவை கீழே

6 பாஸ் என்கிற பாஸ்கரன் 
சினிமாக்கள் ஒரு தர்க்கனூபூர்வமாய் ஏற்றுக் கொள்ளப்படத்தக்க களத்தில் மட்டுமே இயங்க வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் எனக்கு கிடையாது. பார்க்கும் இரண்டரை மணி நேரத்தில் அது என்னை உள்ளீர்த்துக் கொண்டால் போதும். அவ்வகையில் இந்த வருடத்தின் சிறந்த சிரிப்புத் தோரணம் "பாஸ் என்கிற பாஸ்கரன்". சந்தானத்தப் பற்றி சொல்லத் தேவையில்லை. ஆர்யாவுக்கும் அருமையாக டைமிங் காமெடி வருவது சிறப்பு.

5 அங்காடித் தெரு 
வலிந்து திணிக்கப்பட்ட சோகம், ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் அஞ்சலியின் மிகை நடிப்பு, மகேஷின் கொஞ்சமும் உணர்ச்சியற்ற நடிப்பு என்பவற்றை தவிர்த்துப் பார்த்தால் அருமையான படம். "கண்ணெதிரே தோன்றினாள்" படத்தில் "பட்டாம்பூச்சி உன் தோளில் இருந்துச்சு உனக்கு வலிக்குமேன்னுதான் " என வசனம் கேட்டப் போது சுஜாதாவா இப்படி என நொந்து போனேன். கிட்டத்தட்ட அதே உணர்வு "எறும்பு வாழும் காட்டில்தான் யானையும் வாழுது " என ஜெமோ வசனம் கேட்கையில். முழுமையான பார்வை

4 ஆயிரத்தில் ஒருவன் 

நிறையப் பேருக்கு படம் பிடிக்கவில்லை. அரசுரிமையை தியாகம்  செய்து உத்தமசோழருக்கு முடிசூட்டி வைத்த அருள்மொழிவர்மனின் (ராஜ ராஜா சோழன்) தியாகத்தையும்  கடல் தாண்டி சென்று படைத்த வீர வரலாறுகளையும் இன்றளவும் சிலாகிப்பவர்களால் சோழர்களை காட்டுமிராண்டியாக நரமாமிசம் உண்பவர்களாக காட்டியதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. சிலருக்கு ஆங்கிலப்படத்தை நிகர்த்த கணினி வரைகலை உத்திகள் இருக்கவில்லையே என்ற வருத்தம் இருந்தது. ஆனால் என்னளவில் இது தமிழின் ஆகச் சிறந்த முயற்சி. சென்ற வாரம் பார்த்தப் போதும் எனக்குப் பிடித்தே இருந்தது. திரைக்கதை இரண்டாம் பாதியில் நிலையில்லாமல் அலைவதொன்றே எனக்கு இருந்த ஒரே குறை.அப்புறம் வலிந்து திணிக்கப்பட்ட அந்த இந்திய ராணுவத்தின் காட்சிகள். மற்றும்படி செல்வாவிடம் இருந்து இன்னமும் எதிர்பார்க்கிறேன். என்னளவில் மணிரத்தினம்,பாலாவுக்குப் பிறகு தனக்கென ஒரு திரைமொழியைக் கொண்டிருப்பவர் செல்வராகவனே. முழுமையான பார்வை

3 . எந்திரன்

இந்தப் படம் எப்பேர்ப்பட்ட மொக்கையாக இருந்தாலும் கொண்டாடி இருப்பேன். ஆனால் சிறப்பாக அமைந்தது மகிழ்ச்சி. மற்றைய படங்களைப் போலல்லாமல் ஏதோ எங்கள் வீட்டு விசேடம் போல எதிர்பார்த்துக் கொண்டாடி மகிழ்ந்த ஒரு திருவிழா. 

2 . நந்தலாலா 
பாரதி வரிகளோடு மிஷ்கினின் இன்னுமொரு படைப்பு. "சித்திரம் பேசுதடி" பார்த்தப் போது மிஷ்கின் பற்றி எந்த ஒரு அபிப்பிராயமும் இல்லை. அஞ்சாதே பார்த்தப் பின்தான் எனக்கு மிஷ்கின் மிக முக்கியமானவராக தெரிந்தார். பலக் காட்சிகளில் நின்று  விளக்கமளிக்காமல் எம்மை யூகிக்க விட்டது பிடித்திருந்தது. ஆக நந்தலாலாவை அதிகம் எதிர்பார்த்தேன். ஆனால் படம் இலங்கையில் திரையிடப்படவே இல்லை. பிறகு DVD இல்தான் பார்த்தேன். குறைந்த வசனங்களும்  நிறைவான காட்சிகளுமாய் ஒரு அருமையான படம். கலைப் படங்கள் என்ற லேபிளோடு வருபவற்றில் பெரும்பாலானவை பொறுமையைச் சோதிப்பவை. ஆனால் சுவாரசியமான ஒரு சிறுகதைத் தொகுப்பை ஒரே மூச்சில் படித்து முடித்தது போன்ற ஒரு அலாதியான அனுபவத்தை தந்ததற்காகவே மிஷ்கினைப் பாராட்டலாம். ம்ம் படம் நிச்சயமாக ஒரு உள்ளார்ந்த சிலிர்ப்பைத் தரும் அழகியல் அனுபவம். எங்கே சுட்டால் என்ன மனதைத் தொட்டால் சரி என்ற எண்ணம் எண்ணம் கொண்டவன் என்பதால் கிக்குஜிரோவின் தழுவல் என்பது படத்தை ரசிக்க இடையூறாய் இல்லை.

1 . விண்ணைத் தாண்டி வருவாயா 

இந்த வருடத்தில் என்னை மிகக் கவர்ந்த படம். மைனா மைனா என்றொருப் படத்தை நிறையப் பேர் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். டிவி யில் ஒரிருக் காட்சிகள் பார்த்த போது வெகு அபத்தமாய் இருந்தது. அப்படியெல்லாமா  காதலிப்பார்கள். ஆனால் நான் பார்த்த அனுபவித்த காதல் விண்ணைத் தாண்டி வருவாயாவில் இருந்தது. அது பாட்டில் போய் கொண்டிருக்கும் வாழ்வில் தன பாட்டில் வருவது காதல். வெகு அன்னியோன்னியமான ஒரு காதல் ஜோடியின் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்தது போன்ற ஒரு அருமையான இயல்பான படம். கெளதம் வாசுதேவ் மேனனிடமிருந்து. ம்ம் காதல் ததும்பி நிரம்பி வழிகிறது படம் முழுவதும். காதல்,காதல்,காதல் படம் முழுக்க இது மட்டுமே.சின்ன சின்னக் காட்சிகளும் ரொம்பவே சுவாரசியம்.

"இதெல்லாம் விடு பொண்ணு எப்படி வோர்த்தா? "
"உயிரக் கொடுக்கலாம் சார்"
"சியர்ஸ்"

"நீ இருபத்தொரு வருஷமா வாழ்ந்த ஊர்ல நான் இருபத்து மூணு வருஷம் வாழ்ந்திருக்கேன் Which means நான் உன்னை விட ரெண்டு வயசு பெரியவ"

"சொத்தை கூட எழுதிக் கொடுப்பாரு ஆனா என்னை கட்டித்  தர மாட்டாரு "
"அப்ப எழுதித் தரச் சொல்லு"

"சார் Love favor the brave ன்னு சொன்னீங்க இல்ல ஒரு சின்ன correction,  love favor the intelligence"

இப்படி  சின்ன  சின்னதாய் அழகான வசனங்கள் எல்லாம் முன்பு மணி படங்களில் மட்டுமே பார்த்தது.  படம் பூராகவும் தன் இசையால் ஆக்கிரமித்திருந்தார் இசைப்புயல். முழுமையான பார்வை இங்கே 

குட்டி,தமிழ்ப்படம்,மதராசபட்டினம்,கோவா, சிங்கம், ராவணன், வ குவார்டர் கட்டிங், உத்தமபுத்திரன், மன்மதன் அம்பு என்பன நான் பார்த்த ஏனைய படங்கள். மதராசப் பட்டினம் ஓரளவு நல்லப் படமே ஆனால் டைட்டானிக் கையும் லகானையும் காட்சிக்கு காட்சி ஞாபகப்படுத்தியது பலவீனம்.  குட்டி தனுஷ் மற்றும் பாடல்களுக்காகவும் தமிழ்ப்படம் லொள்ளு சபா பார்ப்பது போல சிரிப்புக்ககவும் பார்க்கக் கூடிய ரகம். சிங்கம் திரையரங்குக்கு சென்றதால் கடனே எனப் பார்த்து தொலைக்கலாம். கோவா, குவார்ட்டர் கட்டிங் ரொம்பவும் சுமார். உத்தமப்புத்திரன் எழுந்து ஓடி விடலாம்  என்ற உணர்வு இரண்டாம் பாதியில் விவேக் வந்ததால் இல்லாமல் போனது.



எதிர்பார்த்து சென்றவனை ஏமாற்றியவர்கள் என்றால் இவர்கள்தான். ராவணனில்  மணி  தவிர மற்ற எல்லாமே இருந்தது. மன்மதன் அம்பில் கொஞ்சம் அளவுக்கதிகமாகவே கமல் இருந்தது என்பதே குறை. ராவணனில் இசை,ஒளிப்பதிவு,நடிப்பு என்பனவும் மன்மதன் அம்பில் மாதவன் நடிப்பு, வசனங்கள் என்பனவும் ரசிக்கக்கூடியவை. ராவணனில் கார்த்திக் அனுமானாம் அதை காடுகிறேன் பேர்வழி என மணி கொஞ்சம் குரங்கு சேட்டை செய்திருக்க கமலும் போனில் ஏதேனும் வழிக் கிடைக்கும் என பேசிக்கொண்டே செல்கையில் முட்டுச் சந்தில் முட்டிக் கொண்டு நிற்பதாயும்  நடுத்தெருவில் நிற்பதாயும் பாலச்சந்தர் பாணி குறியீடுகள் எல்லாம் வைத்திருந்தார். நீங்களுமா கமல்?


வியாழன், 6 மே, 2010

ராவணன் பாடல்கள் - என் பார்வையில்





பால் வேண்டுமானால் பழகப் பழகப் புளிக்கலாம். ஆனால் வைன் பழசாகத்தான் ருசியும் போதையும் அதிகம் என்பர். வைனைப் போலத்தான் நம் இசைப்புயலின் இசையும் கேட்க கேட்க புதிதாய் பாடலில் பொத்தி வைக்கப்பட்ட சூட்சுமங்கள் எல்லாம் பிடிப்பட்டு அப்படியே அந்தப் போதையில் திளைத்து அதன் வசமாகி விடுவோம். முதற்றடவை ராவணன் பாடல்கள் கொஞ்சம் ஏமாற்றத்தை தந்தாலும் போக போகப் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பினாலேயே மேற்கண்ட வரிகள்.

"வீரா" பாடல் ஒரு ஹீரோ புகழ் பாடும் பாடல் முதற்றடவையாக மணி படத்தில். ஒரு தனிப்பாடலாக அல்லாமல் அவ்வப்போது வந்து செல்லும் என நினைக்கிறேன். பாடலில் ஒலிக்கும் சில வரிகள் சத்தியமாய் புரியவில்லை. அது தமிழா என்பதும் சந்தேகமாகவே இருக்கிறது.

"கள்வரே" பாடல் என்னுடைய விருப்பப் பாடகி ஸ்ரேயா கோஷல் பாடியது என்றாலும் ஹிந்தியில் ரீனா பரத்வாஜ் உருகியிருப்பதோடு ஒப்பிட்டால் ஒன்றுமே இல்லை. வலி மிகும் இடங்கள் வலி மிகா இடங்கள் தமிழுக்கு தெரிந்திருப்பது ஸ்ரேயாவுக்கு தெரியாததாலோ என்னவோ சுரத்தேயில்லாமல் இருக்கிறது பல இடங்களில்.

"கெடா கறி" பாடல் ஒரு கல்யாண வீட்டில் பாடப்படும் போல் இருக்கிறது. மிக உன்னிப்பாக கேட்டால் மட்டும் வரிகள் காதில் விழுகிறது.
"இவ கண்ணால பார்த்தா ஜானகி அம்சம் ,
கட்டில் மேல பார்த்தால் சூர்ப்பனகை வம்சம்"

என்ற வரிகள் கல்கியில் பிரகாஷ்ராஜ் சொல்லும் ஒரு வசனத்தை ஞாபகப்படுத்திகிறது.

"கோடு போட்டா" பென்னி தயாள் பாடியிருக்கிறார்.
"வத்திப் போன உசுரோட வாழ்வானே சம்சாரி சப்பாத்திக் கள்ளி வாழ வேணாமே மும்மாரி"
ஆக்ரோஷமான பாடல் வரிகள். ஆனால் பென்னி தயாளின் குரலில் அந்த ஆக்ரோஷம் சுத்தமாய் தவறியிருக்கிறது.

கார்த்திக் பாடியுள்ள "உசுரே போகுதே" இந்தப் படத்தில் தமிழுக்கென்றே எடுத்தது போல பாடல் வரிகளும் இசையும் பொருந்திப் போகும் ஒரேப் பாடல். தன மோகித்தப் பெண்ணை அக்கினிப் பழம் என உருவகித்திருப்பது அருமை. அது எப்படி மணி படங்களில் மட்டும் வைரமுத்தால் இப்படி எல்லாம் எழுத முடிகிறது.


"காட்டுச் சிறுக்கி" என்னைக் கேட்டால் ஆல்பத்தின் ஆகச் சிறந்தப் பாடல் இதுதான் என்பேன். நீண்ட நாட்களுக்கு பிறகு அனுராதா ஸ்ரீராம் வழமை போல் பாடலை வளைத்துக் குழைத்து ஏதேதோ செய்கிறார். கூடவே ஷங்கர் மகாதேவன். இசைப்புயலுக்கு இணையாக வைரமுத்தின் பேனாவும் தாண்டவமாடி இருக்கிறது. வெறுமையும் தனிமையுமாய் கணக்கும் மனதின் வலியை
"பாறாங்கல்லை சுமந்து வழி மறந்து ஒரு நத்தைக் குட்டி நகருதடி"
என எழுதியிருப்பது எனக்கு ரொம்பவும் பிடித்தது.

என்னளவில் பாடல்கள் மோசமில்லை ஆனால் ஆஹா ஓஹோ எனப் புகழும் ரகமுமில்லை. வைரமுத்து மினக்கெட்டு எழுதியிருப்பது தெரிகிறது ஆனால் வார்த்தைகளை கருவிகள் ஆக்கிரமித்து அமுக்கி விடுவது கவலை. எளிதில் மனதில் ஓட்டும் ரகமான இசை இல்லையாதலால் விண்ணைத் தாண்டி வருவாயா போல் ஹிட்டடிக்க போவதில்லை. அடுத்தி ஹிந்தியில் போல் இல்லாமல் தமிழில் வரிகள் குறித்த இசைக்குள் வலிந்து திணிக்கப்பட்டதைப் போல் தோன்றுகிறது. மணிரத்னம் ஹிந்திக்குத் தரும் அதே முக்கியத்துவத்தை தமிழுக்கும் தந்தால் தேவலாம். எப்படியும் பாடல்கள் நிச்சயமாக மணிரத்னத்தின் காட்சியமைப்புகளுடன் பார்க்கும் போது ஒரு புதுவிதமான பரவசத்தைத் தரும் என்பது திண்ணம். அதுவரை எதிர்பார்த்திருப்போம் ஜூன் பதினெட்டை

இதெல்லாம் இசையை ரசிக்க மட்டுமே தெரிந்த ஒரு பாமரனின் பார்வை. யாரேனும் விவரமறிந்தவர்கள் பாடல்களை நுணுகி ஆராய்ந்து விமர்சனம் எழுதுங்கள். படிக்க ஆவலாயுள்ளோம்.

திங்கள், 19 அக்டோபர், 2009

A.R.R முதல் தமிழக M.P க்களின் வருகை வரை

ஏலவே எழுதியது சில பல பிரச்சினைகளால் தாமதமாக So matter பழசாய் இருக்கலாம் ஆனால் படித்து பின்னூட்டமிடுங்கள்



தேமதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவச் செய்வோம் என்றான் பாரதி யார் செய்தார்களோ என்னவோ ஏ.ஆர். ரஹ்மான் செய்திருக்கிறார். எவ்வித இந்திய தாக்கங்களும் கலப்புமில்லாது அவர் பணியாற்றும் முதல் Hollywood படமான Couples retreat வெளியாகி இருக்கிறது. படத்தை பார்த்தால் ஒரு Sex comedy போல தெரிகிறது. Hancock இல் கதாநாயகியின் கணவராக வருவாரே(பெயர் தெரியவில்லை) அவரும் Melrose place, Beverly Hills 90210 போன்ற சிரச மற்றும் ITN தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான தொடர்களில் நடித்த Kristin Davisஉம எனக்கு தெரிந்த முகங்கள்.
படத்தில் குறிப்பிட்டாக வேண்டிய அம்சம் படத்தின் sound track Albumத்தில் இடம்பெற்றுள்ள குறு குறு கண் என்ற குறும்பாடல எனக்கு பிடித்தது நீங்களும் இங்கே சென்று கேட்டுப் பாருங்கள்.
பின் குறிப்பு:- இதனால் தமிழருக்கு என்ன ஆதாயம் இலங்கை பிரச்சினையில் ஏதேனும் தீர்வேற்படுமா, தமிழ் உலக அங்கீகாரம் பெறுமா, அண்டை மாநிலங்களுடனான தண்ணீர் பிரச்சினைகள் தீருமா என வாதம் புரிபவர்கள் கவனத்திற்கு.
ஒரு இசை கலைஞ்ன் ஏதோ ஆர்வத்தில் தான் பணியாற்றும் பிறமொழி படமொன்றில் தன தாய்மொழி பாடலொன்றை சேர்த்துள்ளார். கேட்டு ரசித்து விட்டு போவோமே.

தினமலருக்கும் நடிகர் சங்கத்துக்குமான பிரச்சினை சற்று பூதகரமாகியுள்ளதாக தெரிகிறது. விவேக், சத்யராஜ் போன்றோரின் பேச்சுகள் மிகுந்த அநாகரிகமாக இருந்தது உண்மை. சத்யராஜ் அவ்வாறு பேசுவது வழமை என்ற போதும் விவேக்கின் பேச்சு அநாகரிகத்தின் உச்சம் ஜனங்களின் கலைஞனிடம் நான் இதை எதிர் பார்க்கவேயில்லை.
ரஜினியின் பேச்சு ஏற்றுக்கொள்ளக் கூடியது, அதிலுருந்து குறித்த சில வார்த்தைகளை மட்டும் தேர்ந்தெடுத்து அதற்கு பல்வேறு அர்த்தம் தொனிக்கும் விதமாக ரஜினிக்கு சார்பாகவும் எதிராகவும் மீடியாக்களில் வியாபாரத்துக்காகவும் , வலைப்பதிவுகளில் ஹிட்சுக்காகவும் பல்வேறு கருத்தாடல்கள் இடம்பெறுகின்றன. அட்டையில் நடிகைகளின் படம், நடுப்பக்கம் கவர்ச்சி படங்கள், நட்சத்திரங்களின் exclusive பேட்டிகள், சினிமா விமர்சனம், கிசு கிசுக்கள் என மனிதனுள் இருக்கும் வக்கிரமான உணர்வுகளை மேலும் கிளர்த்தி அதன் மூலம் காசு பண்ணும் பத்திரிகைகள் விபச்சார செய்தி போட்டதும் தம் வியாபரத்துக்காகவே அன்றி சமூகப் பிரக்ஞையினால் அல்ல என்பது வெளிப்படை. எப்படியோ பத்திரிகைகள் இனிமேல் சினிமா செய்திகளை வெளியிடுவதில் கட்டுப்பாடு கொண்டு வர உத்தேசித்துள்ளதாக தெரிகிறது. தமிழரிடம் புரையோடிப்போயுள்ள தனி மனித பூஜனையையும், சினிமா நடிகைகளை தம் காம வடிகாலாக எண்ணுவதையும் ஊக்குவித்த பத்திரிகைகளின் இம்முடிவு மாற்றத்தைக் கொண்டு வருமா?




2009 ஆம் வருடத்துக்கான நோபெல் பரிசுகளில் இராசயனவியலுக்கான பரிசை பகிர்ந்த மூவருள் ஒருவர் தமிழர். ராமகிருஷ்ணன் அமெரிக்க வாழ் தமிழர். இங்கு Advanced level Bio science செய்தவர்கள் Ribosome பற்றி அறிந்திருப்போம். புரததொகுப்புக்கென கலங்களில் காணப்படும் மிக நுண்ணிய் அமைப்பு. ரைபோசோம்கள் கலத்தினுள் புரததொகுப்பு நிகழ்த்தும் செயன்முறை பற்றிய ஆய்வுக்காக இப்பரிசு. இவ்வாய்வு எதிர்காலத்தில் வினைத்திறனான புதிய வகை antibiotics இன் உருவாக்கத்திற்கு உதவும் என நம்பப்படுகிறது.
அடுத்தவர் ரட்சகர் Obama பாவம் அவரே அதிர்ந்து போய் தர்ம சங்கடமாய் பேசியிருக்கிறார் விட்டுவிடுவோம். ஒரு வேளை அந்த beer party க்காக கொடுத்திருப்பார்களோ. நண்பன் சொல்கிறான் தமக்குள் அடித்துக் கொண்டாலும் ஒரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினையை தீர்க்க ஒன்று பட்டு பாடுபட்ட ஆசியாவின் அந்த மூன்று அணு சக்தி நாடுகளின் தலைவர்களுக்கும் பகிர்ந்தளித்து இருக்கலாமாம்.

இலங்கையின் தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. எதிர்பார்த்தபடியே ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டணி பாரிய வெற்றியை பெற்றுள்ளது. போகிற போக்கை பார்த்தால் இனி இலங்கையில் ஒரு எதிர்க்கட்சி தலைதூக்கவே முடியாது எனத் தோன்றுகிறது.



ஒருவன் சாகத் துடிக்கும் போது தன வேலையை பார்த்துக் கொண்டிருந்து விட்டு பின் இழவு வீட்டுக்கு வந்து மாலை சாத்துவதை போல இலங்கைக்கு சுற்றுபயணம் வந்திருக்கும் வீரத் தமிழச்சி கவிதாயினி கனிமொழி உள்ளிட்ட இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கிறோம்.
ஆச்சரியம் குள்ளநரிக் கூட்டத்தில் சிறுத்தை ஒன்றும் இருக்கிறது.
Related Posts with Thumbnails