திங்கள், 14 டிசம்பர், 2009

வேட்டைக்காரனை எதிர்க்கத்தான் வேண்டுமா?


இலங்கை திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவர் ஜேக்சன் என்தனி இயக்குனர் ,மேடை நாடக நெறியாளர்,தொலைகாட்சி அறிவிப்பாளர் எனப் பன்முகங்களையும் கொண்டவர். ஒருமுறை நேத்ரா டிவியின் நான்காம் பரிமாணம் நிகழ்ச்சியில் கேள்வியொன்றுக்கு தான் உலகிலேயே சிறந்த நடிகர் என்று கருதுபவரும் சிறந்த இயக்குனர் என்று கருதுபவரும் தமிழ்நாட்டிலேயே உள்ளனர் என்றார். அவ்வாறு அவரால் சுட்டப்பட்டவர்கள் கமல் மற்றும் மணிரத்னம்.


ரஞ்சன் ராமநாயக்க சிங்கள சினியுலகின் சூப்பர் ஸ்டார், சப்ரகமுவ மாகாண எதிர்க்கட்சி தலைவர் ஒவ்வொரு முறை ரஜினி படங்களை ரீமேக்கி என்னைப் போன்றவர்களின் வயிற்றெரிச்சலுக்கு ஆளாகுபவர். ஒருமுறை அவரது பிரபலம் தொடர்பிலான கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் அவர் சொன்னது Popularity என்றால் என்னவென்று ரஜினி படங்களைத் திரையரங்கில் பாருங்கள் தெரியும் என்பதாக இருந்தது. இன்னொருமுறை தமிழகத்தில் ஏதோ ஷூட்டிங்கில் பங்குபற்றிய அவர் ரஜினி நடிக்கும் மண்ணில் நான் நடித்தேன் என்பதே பெருமை என இங்கு நெகிழ்ந்திருந்தார்.
இவ்வளவு ஏன் நாம் பெரிதாக Mind பண்ணாத சப்பை பிகர்களான பூஜா,மோனிகா போன்றோருக்கு எல்லாம் இங்குள்ளப் படங்களில் எல்லாம் Title role.


இராஜ் வீரரத்ன என்பவர் இங்குள்ள இளம் தலைமுறை இசைக்கலைஞர். ஒரு பாடகர்,Composer என்பதையும் தாண்டி நல்லதொரு Sound engineer இவரது mixing இல் வரும் பாடல்கள் அவற்றின் தொழிநுட்பநேர்த்திக்காகவே ரசிக்கப்படுபவை. ஒருமுறை சிங்கள டிவி நிகழ்ச்சியில் W.D. அமரதேவவுக்கான பாராட்டு விழா, ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்வு எதற்கு போவீர்கள் என்ற கேள்விக்கு இவர் சற்றும் யோசிக்காமல் தந்த பதில் ரஹ்மானின் இசை கச்சேரிக்கு. அமரதேவ லேசுப்பட்ட ஆளில்லை இலங்கையின் மிக மூத்த முதிர்ந்த இசைக்கலைஞர். இந்திய மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுப் பெற்ற ஒரே ஒரு இலங்கையர். ஆனால் இராஜின் பதிலால் இங்கு எவரும் உணர்ச்சி வசப்பட்டு பேசவில்லை. கலை அரசியல் இரண்டையும் வேறுப்படுத்தி பார்க்கும் மன முதிர்ச்சி அவர்களுக்குஇருக்கிறது.

ஆனால் இராஜ விஜய் ஆண்டனியோடு சேர்ந்து பங்காற்றுகின்றார் என்றவுடனே ஏராளம் எதிர்ப்புகள் இவ்விதமான எதிர்ப்புகளுக்கு எல்லாம் அஞ்சி நம் சமூகம் படம் பார்க்காமல் இருக்காது. ஏன் இலங்கையில் மட்டும் அறியப்பட்டிருந்த இராஜுக்கு இது நல்லதொரு விளம்பரமும் கூட . நான் மேற்சொன்ன சிங்களவருக்கு இருக்கும் பெருந்தன்மை ஏன் இல்லாமல் போனது நமக்கு? அதுவும் இது தொடர்பான பதிவுகளில் உள்ள வாசகங்களைப் பாருங்களேன் எத்தனை துவேசம். அவர் ராணுவ வீரர்களை பாராட்டி பாடல் பாடி விட்டாராம். தீர்க்கமான சந்தர்ப்பமொன்றில் தான் சார்ந்த தேசத்துக்கு அவர் செய்தது அது. நாமும்தான் அப்படியான விடயங்களைச் செய்தோம். இராஜ் வேண்டாம் என்கிறார்களே. சீமான் கூடத்தான் இரட்டை அர்த்தப்பட தம்பி எனப் பெயரிட்டு படமெடுத்தார். மாதவனும் புலியும் ஒன்றாய் உறுமுவது போல பானருடன் படம் இலங்கையிலும் திரையிடப்பட்டதுதானே. அதில் நடித்த பூஜா பின் சிங்களப் படங்கள் நடிக்க வில்லையா?


தமிழருக்காய் மேடைகளில் மௌன விரதமிருந்த பாரதிராஜா "கண்களால் கைது செய்" படமெடுத்த பின் படப்பிடிப்பில் தந்த ஒத்துழைப்புக்காக அரசு சார்பு அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுக்கும் ஏனையோருக்கும் நன்றி எல்லாம் தெரிவிக்கவில்லையா. அந்த படத்தில் சனத் குணத்திலக்க நடிக்க வில்லையா? என் ஞாபகம் சரியாக இருந்தால் பதிவர் லோஷன் அண்ணா அந்நேரம் பாரதிராஜாவை பேட்டிக் கண்டிருந்தார்.

இது எல்லாம் கலை ஐயா தயவு செய்து இதை அரசியலாக்காதீர்கள் நாம் தமிழர்கள் வெறுப்பு என்றால் மிக ஆக்ரோஷமாகக் காட்டுகின்றோம். சில நேரங்களில் ரொம்பவும் குழைந்து உணர்வு ரீதியான அடிமைகளாய் மாறி விடுகிறோம். இது மட்டுமில்லாமல் கல் தோன்றி மண் தோன்றா என்கிற உயர் மனோபாவமும் இருக்கின்றது ( அல்லது இது மித மிஞ்சிய தாழ்வுச் சிக்கலின் பிரிதொரு வகையான வெளிப்பாடு) . தனியே தமிழரின் வரலாறு,சாதனைகள், என்பவற்றை அவர்களது உயர் மனோபாவத்தொடு ஒப்பிட்டு ஆய்வுக்குட்படுத்தினால் நகைப்புக்குரியதாக இருக்கும் என்பது என் எண்ணம்.

வேட்டைக்காரன் பிடிக்கவில்லையா அதை நிராகரிக்க அவரவருக்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கும். பார்க்காமல் விடுங்கள். இவ்வாறான பிரசுரங்கள் எனக்கென்றால் உடன்பாடில்லை. கருத்து திணிப்புகள் நம் நிலைக்கு பிரதான காரணங்களில் ஒன்று. கிட்டத் தட்ட சுயச் சிந்தனையே மறந்து விட்ட நிலையில் இனியேனும் அவனை சிந்திக்க விடுங்கள் ஐயா. இதை விடுங்க சின்ன விடயம் அடுத்து ஜனாதிபதி தேர்தலில் பாருங்களேன் அவனுக்கு போடு இவனுக்கு போடுன்னு ஏக களேபரமாக இருக்கும்

அப்புறம் ஒன்று நானும் இராஜின் ரசிகன்தான் எனக்கு பிடித்த சிலப் பாடல்களின் தொடுப்பு. கீழே பாடல் மட்டுமல்ல காட்சியமைப்புகளைப் பாருங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறும்படம் போல அத்தனை அழகு. வரிகள் புரியா விட்டாலும் இசை மற்றும் காட்சிகள் பொருளுணர்த்தும். அதிலும் அந்த மூன்றாவது பாடலின் காட்சிகளை பாருங்களேன் எனக்கு ரொம்பப்பிடிக்கும். நான்காவது பாடல்தான் தங்கத் தாமரை ஆனது. இதிலே தினேஷ் கனகரத்தினம் அமைச்சர் புத்திரசிகாமணியின் மகன் Bone killer ஆகியோரும்தான் இதில் பங்கேற்றுள்ளனர் அப்ப அவர்களுக்கும் ஆப்பா?


http://www.youtube.com/watch?v=y7Rin2vAzSM

http://www.youtube.com/watch?v=oeOGAiz24RU

http://www.youtube.com/watch?v=TLigScK6C3g

http://www.youtube.com/watch?v=jHWlRsIKnv8

26 கருத்துகள்:

கார்க்கிபவா சொன்னது…

:)

maruthamooran சொன்னது…

வணக்கம் தர்ஷன்,

இலங்கை, இந்திய மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களில் அனேகர் தேவையற்ற இடங்களில் இன அடையாளத்தினை தூக்கிப் பிடித்து எதிர்ப்பையும், அச்சுறுத்தலையும் விடுக்கின்றனர். கலையை கலையாக பார்க்கின்ற நிலையில் நம்மில் பலர் இல்லை.

அதுவும், இந்திய மற்றும் புலம்பெயர்ந்திருக்கும் தமிழர்கள் எதில் அரசியலும், உரிமையும் பேசப்பட வேண்டுமோ அதையெல்லாம் விட்டுவிட்டு தேவையற்ற விடயங்களில் அதை தேடுகின்றனர்.

இதற்கு சிறிய உதாரணமொன்று…. ஓஸ்கார் விருதினை கையில் வைத்து கொண்டு ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என்று கருத்து தெரிவித்த ரஹ்மானை தமிழன், தமிழ்மொழியை உலக அரங்கில் பேசி பெருமை கொள்ள வைத்தவன் என்று கூறிய நம்மில் பலர்.

இங்கிலாந்தில் நடந்து முடிந்த இருபதுக்கு-20 கிரிக்கட் இறுதியாட்டத்தின் பரிசளிப்பில் குமார் சங்ககார, வருகை தந்திருந்த இலங்கை ரசிகர்களுக்கு சிங்களத்தில் நன்றி தெரிவித்ததை இனச்சாயம் பூசிப்பார்த்தவர்கள்.

இவ்வாறு இரட்டை வேடம் போடுபவர்கள் ஒருநாளும் திருந்தமாட்டார்கள். இவர்களை கவனத்தில் கொள்ளக்கூடாது.

PPattian சொன்னது…

சரியாய்ச் சொன்னீர்கள்.. நாம் தேவையில்லாதவற்கு உண்ர்ச்சி வசமும், தேவையான இடத்தில் பாராமுகமும் கொண்டிருப்பதை

பெயரில்லா சொன்னது…

எதைச் சொல்லிறதுக்கும் ஒரு இது இருக்க வேண்டும்.

பெயரில்லா சொன்னது…

kalaiyai kalaiyaaka paarkalam
koalayai???

Bala சொன்னது…

கலையை கலையாக நினைப்பதற்கு நாங்கள் தயார்.. ஆனால் தமிழ் ரசிகர்களின் ஆதரவை ராகுலிடம் விலை பேசிய விஜய் போன்ற வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகர்களை ஒதுக்குவதற்கு இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது..

priyamudanprabu சொன்னது…

இவ்வளவு ஏன் நாம் பெரிதாக Mind பண்ணாத சப்பை பிகர்களான பூஜா,மோனிகா போன்றோருக்கு எல்லாம் இங்குள்ளப் படங்களில் எல்லாம் Title role.

////

மோனிக்கா சரி
ஆனால் பூஜாவை சப்பை பிகர் என்று சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன்

தர்ஷன் சொன்னது…

நன்றி சகா வருகைக்கு

நன்றி மருதமூரான் ஒருவேளை நாம் இப்படி சிந்திக்கக் காரணம் இலங்கையில் இருப்பதாலா

நன்றி புட்டியன் சரியாய் சொன்னீர்கள் சுஜாதா இந்தியனில் எழுதியிருப்பார் "புத்திக்கு தெரியுது மனசுக்கு தெரியல்லையே " என நெடுங்காலமாகி விட்டது நாம் புத்தியை அடகு வைத்து, இப்போதெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு மனதால்தான்முடிவெடுக்கிறோம்.

மன்னிக்கவும் புகழினி நீங்கள் சொல்லும் இது எது எனப் புரியவில்லை, என்னிடம் இல்லாததாய்த்தான் இருக்கும். வளர்த்துக் கொள்ள முயல்கிறேன். வருகைக்கு நன்றி

கொலையை கொலையாகத்தான் பார்க்க வேண்டும். சந்தேகமே இல்லை.

தர்ஷன் சொன்னது…

//Bala said...

கலையை கலையாக நினைப்பதற்கு நாங்கள் தயார்.. ஆனால் தமிழ் ரசிகர்களின் ஆதரவை ராகுலிடம் விலை பேசிய விஜய் போன்ற வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகர்களை ஒதுக்குவதற்கு இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது..//


அய்யய்யோ பாலா என்னப் பேசுகிறீர்கள். விஜய் சொல்கிறார் என்பதற்காகவா அவர்கள் காங்கிரசுக்கு போட வேண்டும். அவர்கள் எப்படியும் மதச் சார்பற்ற காங்கிரஸ் TMK கூட்டணிக்கு ஆதரவானவர்கள்தானே. இல்லையென்றால் தம் தேசத்தின் இறையாண்மைக்கு குந்தகமாய் பேசும் வைகோவை தோற்கடித்திருப்பரா?
எனக்கேதோ விஜய் ராகுலிடம் பேசியது தமிழக மக்கள் எடுத்த முடிவுகளை பார்த்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து என நினைக்கிறேன்.
தமிழகத்தோர் என்னளவில் ஆச்சரியத்துக்குரியவர்கள் நதிநீர் இணைப்புத் திட்டம்,காவேரி பிரச்சினை,கன்னட வெறியர்களின் இனவெறித் தாக்குதல்கள் போன்றவற்றுக்கு ரஜினியிடமும் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு விஜயிடமும் தீர்விருப்பதாய் நம்புகிறார்கள். ஆவேசமான பதிவுகள், தீக்குளிப்புகள்,சொற்பொழிவுகள், கண்ணீரில் நனைந்த அறிக்கைகள் எல்லாம் உண்டு. நாமும் நம்பி விடுகின்றோம். ஆனால் தேர்தலில் வாரி விடுகின்றனர்.
புலம் பெயர் தமிழர்கள் நிலை இன்றைய இளம் தலைமுறைக்கு ஆண்டாண்டு காலமாய் நம் ஜீனில் உள்ள அந்த மறத்தமிழன் கற்பிதங்கள் மிகையாக புகட்டப் பட்டுள்ளன போலும். போராட்டத்தில் இருந்து தம்மை தவிர்த்து புலம் பெயர்ந்த அவர்களின் பெற்றோரின் குற்றவுணர்வாலும் இது நிகழ்ந்திருக்கலாம். விஜய் படத்தை புறக்கணிக்கும் தலையாய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இங்கே ஈழத்திற்கு வந்து தாம் வாழ்ந்த மண்ணில் முதலிட்டு மண்ணை வளப்படுத்தட்டும். கனவிலும் செய்ய மாட்டார்கள்.
அண்மையில் அகதி முகாமில் இருந்து வெளியில் வந்த ஒரு சில குடும்பங்கள் இங்கே தமது உறவினர் தயவு நாடி வந்திருந்தனர். அவர்களை சந்தித்து கதைத்தேன். கண்ணீர் வருகின்றதையா சத்தியமாய் வீரம் பேசி போரிடும் நிலையில் அவர்கள் இல்லை
அவர்களின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப் பட வேண்டிய இன்றைய நிலையில் விசையோ,வேட்டைகாரனோ அத்தனை முக்கியமில்லை ஐயா.

தர்ஷன் சொன்னது…

மன்னியுங்கள் பிரபு
நீங்கள் சொலவது சரி பூஜாவும் கொஞ்சம் சுமாரான பிகர்தான்

Santhappanசாந்தப்பன் சொன்னது…

அருமையான விளக்கங்கள்! உங்கள் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன்!

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் விளையாடிய போதும், தற்போது, இலங்கை அணி இந்தியாவில் விளையாடும் போதும் பார்த்து ரசிக்கும் நாம், இதற்கு மட்டும் உணர்ச்சி வசப்பட்டு பேசுவது சரியாக இருக்காது.

பெயரில்லா சொன்னது…

நாம் கலையை கலையாகவும் கொலையை கலையாகவும் நினைக்க வேண்டும். ஏனேனில் வாழ்வது மானம் கெட்ட வாழ்வு தானே. விளையாட்டை விளையாட்டாகப் பார்த்தோம் வருடம் தோறும் நாற்பதினாயிரத்துக்கு மேற்பட்ட டொலர்களை வருமானமாக பெற்ற சிறிலங்காவிற்கு கைதட்டி ஆரவாரித்து ஊக்கப்படுத்தியதால் தமிழர் வளம் பெற்ற வாழ்வையா வாழ்ந்தார்கள். அந்த பணம் இங்கு வந்ததோ தமிழனை அழிக்கும் ஆயுதங்களாக,. அதே போலத்தான் இதுவும். சிங்களவன் என்ன கூத்தையும் சுரணை கெட்ட தமிழருடன் சேர்ந்து செய்யட்டும் நாம் எமது பணத்தைக் கொடுத்து எமது இனத்தையே அழித்துக் கொண்டு அழிவோம். அதற்கான எதிர்ப்பினை தெரிவிக்கும் போது சில சுரணை கெட்ட கேடுகெட்ட தமிழனுக்கு தேசிய உணர்வு பொங்கிப் புரிக்கும். எதிர்ப்பினை தெரிவிப்பவர்கள் வேலை வெட்டியில்லாதவர்களாக சித்தரிக்கப்படுவர். எதிர்ப்பை தெரிவிப்பவர் புலம் பெயர்ந்தவர்கள். தமது கையையும் இரத்தம் தோய்ந்த கொலை வெறி கைகளை பற்றிப்பிடிக்காமல் இருக்க அவர்கள் தமது எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். இதில் என்ன தவறு. எம்மை அழிக்க நினைப்பவரை புறக்கணிப்போம்.
ஜனா

பெயரில்லா சொன்னது…

சிறிலங்காவில் இருந்துகொண்டு வேற என்னத்தை உங்களால் எழுதமுடியும்?
சினிமாவும் அரசியலும் வேறுவேறு அல்ல... சினிமாவை மையமாகக் கொண்டே அரசியலில் குதிப்பவர்கள் பலர்.
அப்படியானால் ஏன் சில படங்களுக்கு தடை விதிக்கிறார்கள். 'கலை' என்று சொல்லி விட்டுவிடாமல் தடுக்கிறார்களே ஏன்??!

மரமண்டையன் சொன்னது…

தம்பிகளா, மும்பையில் மராத்தியர்கள் (சிவ சேனா) தமிழர்களை முன்பெல்லாம் தாக்கினார்கள்.ஆனால் மராத்தியனான ரஜினியை நாம் சூப்பர் ஸ்டாராக்க வில்லையா. சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பா.....

amalan A சொன்னது…

makkalukka porada vendiya nerathil, oru poluthupokku padathai nokki porattathai thiruppi, kavanam sithaikka kudathu

பெயரில்லா சொன்னது…

What else can he write sitting in srilanka?
Thanks dharshan for your advise, we can take it as given that you are a proud srilankan now that the terrorism has been rooted out from your country. Please feel free to worto build a united srilanka. However the guilt ridden eelam tamils and their next generation would work only for the establishment of tamil eelam !

தர்ஷன் சொன்னது…

உணர்ச்சி வசப்பட்ட நிலையில் கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி. மாற்றுக் கருத்துக்கக்ளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே அனைத்து கருத்துக்களையும் வெளியிட்டுள்ளேன்.
மக்களின் நிலை மிகுந்த கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் அற்ப சினிமாவை நிராகரிக்கும் போராட்டமெல்லாம் சிறுபிள்ளைத்தனமாய் தோன்றியதாலேயே இந்த பதிவு.
அதையும் விட நிராகரிப்புக்காக வெளியிட்ட பிரசுரங்களிலோ ஆதரித்து வெளியிடப்பட்ட பதிவுகளிலோ வார்த்தைகளில் நிதானம் இருக்கவில்லை.
இப்போராட்டத்தால் மக்கள் வாழ்வில் எதுவும் மாறப் போவதில்லை எனப் பட்டதாலேயே இப்பதிவு. இதைவிட மக்களின் மீள்குடியேற்றம்,துரித அபிவிருத்தி,ஏற்கத் தக்க அரசியல் தீர்வு என்பவற்றை விரைவுப் படுத்தக்கூடிய முனைப்பான அரசியல் போராட்டங்களையே நான் எதிர்பார்க்கிறேன். அதற்காகவே என் தனிப்பட்டக் கருத்தாக இதை முன்வைத்தேன்.
எவ்வாறிருப்பினும் உங்கள் கருத்துக்களை அறியத் தந்தமைக்கு நன்றி

புரட்சிகர தமிழ்தேசியன் சொன்னது…

தோழர் ..கலையை கலையாக பார்க்கவேண்டும் என்ற தங்கள் கருத்து ஏற்புடையதே.. அது நாகரீகமான மக்களுக்கு..வங்காளியோ..மலையாளியோடு எடுத்து கொள்ளுங்கள் சினிமாவை ரசித்துவிட்டு போய்விடுவார்கள்..எவனும் முதலமைச்சர் ஆவதில்லை..ஆனால் இங்கு நான் வாழும் தமிங்கில நாட்டில் அப்படியா உள்ளது நிலைமை..அந்த அந்த படத்தின் ஹிரோயினை அண்ணி அண்ணி என்று அன்போடு அழைக்கிறார்கள்.. இப்படி ஒரு கேடு கெட்ட நிலைமை..நான் அடித்து சொல்லுவேன் அடுத்த முதல்வர் கேடு கெட்ட அந்த சினிமா துறையில் இருந்துதான் வர போகிறார்.. இன்னோரு பச்சோந்தி கருணாகமோ அல்லது கர்நாடக மாமியோ இங்கு இருந்துதான் வருகிறார்கள்..குறைந்த பட்சம் அவர்களுக்கு நாம் இதை செய்யகூடாது என்ற பயத்தை உருவாக்கவேண்டாமா? ஆட்சி அரியணையில் ஏறிய பிறகு இனத்திற்கு எதிராக இதை செய்ய கூடாது என்ற பயத்தை உருவாக்கவேண்டும்...

Karthikeyan G சொன்னது…

//மக்களின் நிலை மிகுந்த கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் அற்ப சினிமாவை நிராகரிக்கும் போராட்டமெல்லாம் சிறுபிள்ளைத்தனமாய்//

100 % Agreed with you sir..

பெயரில்லா சொன்னது…

சினிமா வேறு கலை வேறா ?உண்மைதான் ஆனாலும் இலங்கை அரசோ இறையாண்மை உள்ள இந்திய அரசோ அப்படி நினைக்கவில்லையே ,அந்த அரசுகள் பல படங்களை அரசியல் காரணங்களுக்காக தடை செய்தனவே .
வேட்டைக்காரன் படத்தின் இசையமைப்பில் பங்கு கொண்ட அந்த சிங்கள இசை அமைப்பாளரை எதிர்ப்பது அவர் சிங்களவர் என்பதற்காக அல்ல.
பல்லாயிரகணக்கான தமிழர்களை ரசாயான ஆயுதங்களையும் குண்டுகளையும் வீசி படுகொலை செய்த மனிதத்துக்கு
எதிரான கொடுமை செய்த சிங்கள ராணுவத்தை புகழ்ந்து பாட்டுக்கள் பாடியவரைக் கொண்டுவந்து தனது படத்துக்கு இசையமைக்க வைத்த அந்த ஆணவத்திற்கு எதிரான எமது சிறிய எதிர்ப்புத்தான் இது.
ராணுவத்துக்கு ஆதரவான பாட்டுக்கள் பாடியது என்ன
தவறு என்று கேட்கிறீர்களே அவர்கள் தங்கள் நாட்டிற்கு எதிராக படை எடுத்தவர்களையா கொன்றார்கள் தங்கள் நாட்டு மக்களைத்தானே கொன்றார்கள் .உண்மையானா கலைஞன்
அநியாயம் யார் செய்தாலும் தட்டிக் கேட்பான் .
மற்ற இனத்தவரைப் போற்றும் பெருந்தன்மையான
பரந்த மனம் பற்றி நீங்கள் தமிழ் நாட்டு மக்களுக்கு பாடம் படிப்பிக்கத் தேவையில்லை .
சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி தமிழரில்லாத பலரை உச்சத்தில் வைத்துக் கொண்டாடுவதில் தமிழருக்கு நிகர் தமிழரேதான் .
சினிமாவில் உச்சத்தில் அன்று எம்ஜிஆர்-மலையாளம் இன்று ரஜினி-கர்நாடக மராத்தி
சினிமாவில் இன்று முன்னணியில் இருக்கும் அஜித் -மலையாள சிந்தி கலப்பு , விஷால் -தெலுங்கு ,ஜெயம் ரவி -தெலுங்கு ,ஜீவா - வட இந்தியர் ,ஆர்யா-மலையாளம்
அரசியலில் முதலமைச்சர் அன்று மலையாள எம்ஜிஆர் ,பின்பு கன்னட ஜெயலலிதா இன்று மூன்றாவது சக்தியாக தெலுங்கு விஜயகாந்த் என்று மற்ற மாநிலங்களில் காண முடியாத பெருந்தன்மையை அவர்கள் காட்டியுள்ளார்கள் ,
ஆறுமாதங்களுக்கு முன்பு வன்னியில் நடந்த கொடுமையும் பல்லாயிரக்கான உயிர்களும் உங்களுக்கு சாதாரண விஷயமாக இருக்கலாம் அதைப் பற்றி பேசுவது ஏதோ உணர்ச்சிவசப்படுவது என்று கூறி நீங்கள் எள்ளி நகையாடலாம் ,போரின் போது பெற்ற வெற்றி சிங்கள அரசுக்கு பெரியதல்ல ஆனால் போரின்போது செய்த மனிதப் படுகொலைகளை நியாயப் படுத்தி உங்களைப் போன்ற தமிழர்களை பேச வைத்ததுதான் அவர்களின் பெரிய வெற்றி .

தர்ஷன் சொன்னது…

அபிப்பிராயங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக இருக்கலாம். இது இது இப்படித்தான், இதுதான் சரி என்றி வாதிட்டு நிறுவுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆக என் பதிவுக்கு வந்த ஆதரவான எதிரான இரு வகையான கருத்துக்களையும் அவரவரது தனிப்பட்ட கருத்துக்கள் என்ற வகையில் மதிக்கிறேன். அனைவருக்கும்நன்றி

Feros சொன்னது…

சரியாய்ச் சொன்னீர்கள்..

priyamudanprabu சொன்னது…

பூஜாவும் கொஞ்சம் சுமாரான பிகர்தான்
////////
aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
a
a
a
a
a
a

டவுசர் பாண்டி... சொன்னது…

இந்த பதிவ படிச்சு மெய்யாலுமா அளுவாச்சியா வந்துருச்சி...விசய் இம்புட்டு பெரிய ஆளான்னு...

பொறக்கனிக்க சொல்ற பயபுள்ளைக எல்லாம் விசய் ஆளா இருக்குமோன்னு ஒரு டவுட்டு, இங்கன வந்து கூவீட்டு வூட்ல டிவிடி ல படத்த சத்தங்காட்டாம பார்த்து பல்ல காட்ற பயபுள்ளைகதான் இங்கன வந்து படங்காட்றாங்கன்னு தோனுது.

என்னவோ போங்க விசய்ய இம்புட்டு பெரிய ஆளாக்னதுல எனக்கெல்லாம் நெம்ப வருத்தமுங்னா....

Unknown சொன்னது…

//இவ்வளவு ஏன் நாம் பெரிதாக Mind பண்ணாத சப்பை பிகர்களான பூஜா,மோனிகா போன்றோருக்கு எல்லாம் இங்குள்ளப் படங்களில் எல்லாம் Title role.//

ஹா ஹா.... இதை நகைச்சுவையாக இரசித்தேன்....


மற்றும்படி உங்கள் கருத்தோடு முற்றுமுழுதாக நான் ஒத்துப் போகிறேன்...

நானும் இராஜின் பாடல்களைக் கேட்கிறேன், அப்போ என்னை தமிழரில்லை என்பீர்களா?
என்ன கொடுமை சேர் இது...

படம் பிடிச்சிருந்தா போய்ப் பாருங்கோ, பிடிக்காட்டி போய்ப் பாக்க வேணாம்...

எல்லாவற்றையும் அரசியலாக்காதீர்கள்...

வேட்டைக்காரனை புறக்கணிக்கச் சொல்லிவந்த அறிவித்தலில் அறிவித்தலை வெளியிட்டவர்கள் 'ஈழத்தமிழர்கள்' குறிப்பிடப் பட்டிருந்தது,.. அப்போ நான் இந்தியத் தமிழனா?
நீங்கள் இந்தியத் தமிழனா?

எதற்கும் தொட்டவுடன் ஈழத்தமிழ், தமிழர் என்று இனவாத்தைத் தொட்டுப் பிடிக்காதீர்கள்....

இவர்களது கருத்துப்படி சிங்களவர்கள் அனைவரையும் எதிர்க்கச் சொல்கிறார்கள் போல?

vasi சொன்னது…

அவன் எமது விடுதலை இயக்கத்தை நக்கல் செய்யுமாறு ஒரு பாடல் எடுத்துள்ளான்.
அதனால் அந்த படத்தை மானமுள்ள தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.
அந்த பாடல் ஐ காண்பதற்கு கீள் வரும் link ஐ அழுத்துங்கள்.
http://www.youtube.com/watch?v=6HMvPHCupgY
after u click the link forward the song to 3:14/04:06

after that tamil,(not only eelam tamils)
cn decide!

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails