தீவிரவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீவிரவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 செப்டம்பர், 2009

உன்னைப் போல் ஒருவன் பல நிறைகளும் சில சந்தேகங்களும்


மனிதம், மனிதனை மற்றைய விலங்குகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் அம்சம். வவுனியாவின் முகாம்களில் முள்வேலிகளுக்குள் அடைப்பட்ட மூன்று இலட்சம் பேருக்காக வருத்தப்படும் நான் கேப்பட்டிபோல்லாவில் பேருந்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பால் இறந்த சிங்கள குழந்தைகளுக்காகவும் கலங்க வேண்டும். அதை விடுத்து "செத்தான் சிங்களவன்" என்ற பாணியில் மகிழ்வது எவ்விதத்திலும் பொருத்தமாய் இராது.சாமான்ய மனிதனை காவுகொள்ளும் தீவிரவாதத்தை எதிர்த்து தன வீட்டை தானே சுத்தம் செய்ய தீவிரவாதியாகும் ஒரு சாமான்யனின் ஒரு நாளைய வாழ்க்கை பதிவுதான் உன்னைப் போல் ஒருவன்.

படத்தின் கதை ஏற்கனவே A Wednesday பற்றிய பதிவில் சொல்லியிருப்பதால் படத்தை பற்றிய சில அலசல்கள் மட்டுமே.
படத்தில் பாராட்ட வேண்டிய முதல் அம்சம் சந்தேகத்திற்கிடமின்றி பாத்திரங்களோடு கச்சிதமாய் பொருந்திப் போகும் நடிகர்களும் அவர்களின் மிகையற்ற நடிப்பும்தான்.நஸ்ருதீன் ஷாவுடன் ஒப்பிட்டால் குறைவுதான் என்றாலும் கமல் சிறப்பாகவே நடித்துள்ளார். தன்னை stupid common man என்று கமல் சொன்னாலும் படத்தை பார்க்கும் நம்மால் அவ்வாறு உணர முடியவில்லை என்ன செய்வது அவரை ஒரு நட்சத்திரமாகவே பார்த்து பழகி விட்டோம். மோகன்லால் நடித்திருப்பதாய் தோன்றவில்லை வாழ்ந்திருக்கிறார். மூன்று முறை தேசிய விருது பெற்ற இரண்டு பேர் நடிக்கும் படத்தில் இது ஆச்சரியமில்லைதான். ஆனால் கமல்,மோகன்லால் ஆகியோரையும் தாண்டி படத்தில் பங்கேற்ற அனைவருமே சிறப்பாய் நடித்திருப்பது பாராட்ட தக்கது.

கமல் இந்த படத்தில் நடிக்கப் போகின்றார் என்றவுடனே எனக்கு ஏற்பட சந்தேகம் கமலே சொல்வது போல் அமைதிப் பூங்காவான தமிழகத்தில் நடப்பது போல இந்த கதையை எப்படி தமிழாக்கப் போகின்றார் என்பதுதான். ஆனால் திறமையாகவே முயன்றிருக்கிறார் கமல்.

ஆரம்பம் முதல் இறுதி வரை எள்ளல் இழையோடும் இரா. முருகனின் வசனங்கள் அருமை. ஆனால் பல இடங்களில் ஆதிக்கத் திமிர். இவர் பார்ப்பனரா என்ன?
( கமலுடனான அனுபவங்கள் பற்றி எழுதுறேன் என வாய்ப்புக்காக முகஸ்துதி செய்த கட்டுரை இன்னும் சிறப்பாய் இருந்தது. கிட்டத்தட்ட இதே தரத்தில் மனுஷ்ய புத்திரனும் எழுதியிருந்தார். ஜெயமோகன் கூட தான் கிள்ளிக் கொடுத்த சினிமா தனக்கு அள்ளிக் கொடுத்திருக்கின்றதென எழுதியிருந்ததாய் ஞாபகம் . சாருவும் விரைவில் சினிமாவில் எழுதட்டும்.)

ஹிந்தியில் பாடல்களே இல்லாத இந்த படத்துக்கு தமிழில் இத்தனை பாடல்களா என பயந்திருந்தேன். ஆனால் நல்ல வேளையாக படத்தில் அந்த பாடல்கள் இல்லை. எனினும் பின்னணி இசையில் சிறப்பாகவே செயற் பட்டுள்ளார் சுருதி. பல இடங்களில் அவரது இசை மௌனம் காப்பது காட்சிகளுக்குள் எம்மை ஈர்த்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.

இவை படத்தின் நிறைகள் என்றால் எனக்கிருந்த சில சந்தேகங்கள் உங்களுக்கு விடை தெரிந்தால் பகிர்ந்துக் கொள்ளுங்களேன்.

கமலை போலி பகுத்தறிவுவாதி என பலர் சொல்கிறார்கள். அது உண்மைதானோ என எனக்கு இந்த படத்தை பார்த்த போதுதான் சந்தேகம் வந்தது.
தீவிரவாதி தனக்கேற்பட்ட அவலத்தை தன் மனைவி கொல்லப்பட்டதை சொல்லும் போது அவனது மதம் சார்ந்த வழக்கத்தை முன்னிறுத்திய நையாண்டி அவசியமா? தீவிர இந்துத்துவாக்கள் கூட இவ்வாறு செய்ய தயங்குவரே. (அவரது gene களில் இருக்கும் ஏதோ ஒன்று காரணமாயிருக்கும்.)

திருமணமே காலாவதியான ஒரு விடயம் என பேட்டிக் கொடுப்பவர் அரதைப் பழசான தேசபக்தி எனும் அபத்தத்தை தூக்கிப் பிடிப்பதேன்?

நடிகரான ஸ்ரீமன் தன்னை டாக்டர் என சொல்லிக் கொள்கிறார்.இது யாரையேனும் சுட்டுகிறதா?

வோட்டர் லிஸ்ட்டில் தன் பெயர் இல்லாததால் தன்னை invisible man ஆகவே கருதுவதாக சொல்லும் கமல் அடுத்தாய் நாட்டுக்கு super man ஒருவர் அல்லாமல் தன்னை போல common invisible man தான் அவசியம் எனக் கூறுவதில் ஏதும் அர்த்தம் இருக்குமா?

மும்பை குண்டுவெடிப்பை தமிழர்கள் கண்டுகொள்ளவில்லை என ஆவேசப்படும் கமல் ஈழத்தமிழரின் அவலம் கண்டு தீக்குளித்த தமிழகத்தவரை பார்த்து கலங்கிய வட நாட்டவரின் மனிதாபிமானம் பற்றியும் ஓரிரு வார்த்தைகள் கூறியிருக்கலாம்.

எது எப்படியோ படம் பார்க்க வேண்டிய படம். ரசிகர்களிடத்தில் ஏற்பட்டிருக்கும் இரசனை மாற்றத்தை கமல் சிறப்பாக உள்வாங்கியிருக்கிறார். இப்போதெல்லாம் ரசிகர்கள் சசிகுமார்,செல்வராகவன்,அமீரின் அடுத்தப் படம் தொடர்பில் ஆர்வம் காட்டுகின்றனரே ஒழிய ஹீரோக்களின் படங்கள் தொடர்பில் அல்ல. அதுவும் விஜய் பெயரை சொன்னால் சற்று பயப்படவும் செய்கின்றனர். இம்மாதிரியான படங்களுக்கு தரப்படும் ஆதரவு குப்பைகளின் வருகையைக் குறைக்கும்.

செவ்வாய், 24 மார்ச், 2009

சொதப்புவரா கமல்


அபத்தமான அற்ப விடயங்களை தனது கொள்கைகளாக வரித்துக் கொண்டு அதற்காக ஆயிரக்கணக்கான உயிர்களை உலகளாவிய ரீதியில் காவுக் கொண்டு வருவது தீவிரவாதம்.

அவர்களின் கொள்கைகளில் நம்பிக்கையோ, அபிமானமோ இன்றி பத்திரிகைகளோடு தமது அரசியல் அறிவையும் மடித்து வைத்து விட்டு அன்றாட கடமைகளில் மூழ்கிப் போகும் சாதாரணர்களே அதிகம்.
ஆனால் தமக்கு கிஞ்சித்தும் நிறைவையோ, திருப்தியையோ தராத கொள்கைகளுக்காக தன்னை ஒத்த இன்னும் பல்லாயிரம் சாதாரணர்கள் பாதிப்புறுவதைப் பார்த்த ஒரு சாதாரணன் அசாதாரணமாக செய்யும் ஒரு காரியத்தின் தொகுப்புத்தான் " A Wednesday".

நஸ்ருதீன் ஷாவின் அலட்டலே இல்லாத அருமையான நடிப்பில் வந்துள்ள திரைப்படம். நடிப்பில் அவருக்கு இணையாக கரம் கோர்த்துள்ளார் அனுபம் கேர். கதாநாயகனாக அல்லாமல் கதையின் நாயகனாக வருகிறேன் என்ற வார்த்தையை தமிழ் நட்சத்திரங்களின் பேட்டிகளில் கேட்டிருப்போம். அவ்வார்த்தையின் அர்த்தம் எனக்கு சரியாக புரிந்தது இப்படத்தைப் பார்த்த போதுதான்.

போலிஸ் அதிகாரியான அனுபம் கேர் தான் கையாண்ட ஒரு சுவாரசியமான கேசைப் பற்றி பகிர்வதில் ஆரம்பிக்கின்றது படம். நடுத்தர வயது தாண்டி வயோதிபத்திற்குள் பிரவேசித்துக் கொண்டிருக்கும் சாதாரண ஊழியர் நஸ்ருதீன் ஷா. தினம் ரயிலில் கடமைக்கு சென்று வரும் இவர் ஒரு நாள் காவல் நிலையத்தில் தனது பர்ஸ் தொலைந்ததைப பற்றி புகார் கொடுக்க வருகிறார். தான் கொண்டு வந்த பையோடு பாத்ரூம் போகும் இவர் அதை அங்கேயே விட்டு விட்டு வெளியே வரும்போது சூடு பிடிக்கிறது படம்.

ஒரு சுமையான பையைத் தூக்கி கொண்டு மூச்சிரைக்க ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடியில் ஏறும் ஷா அங்கிருந்து போலிசுக்கு போன் போடுகிறார் . மும்பையின் பல முக்கிய இடங்களில் தான் குண்டு வைத்திருப்பதாகவும் அவை இருக்கும் இடங்களை தான் சொல்ல வேண்டுமெனில் தான் பெயர் குறிப்பிடும் நான்கு தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டுமெனவும் குறிப்பிடுகிறார்.
அதே நேரம் ஆர்வக் கோளாறான ஒரு இளம் பெண் ஊடகவியலாளரையும் தொடர்புக் கொண்டு ஒரு சுவாரசியமான செய்தி போலிஸ் தலைமையகத்தில் கிடைக்கும் எனக் கூறுகிறார்.(அங்கு நடப்பவற்றை உடனுக்குடன் அறிய).
இவரைப் பிடிக்க முடியாததால் இவரது கோரிக்கைக்கு உடன் படுகிறது போலிஸ். வாட்டசாட்டமான, கோபக்கார ஒரு அதிகாரியோடு அனுப்பி வைக்கப்படும் நான்கு தீவிரவாதிகளில் ஒருவனை அவ்வதிகாரி தடுத்து வைத்து மற்றைய மூவரையும் நஸ்ருதீன் ஷா சொல்லும் இடத்தில் விடுகிறார். நம் அனைவரினதும் எதிர்ப்பார்ப்புக்கு மாறாக அங்கே அவர்கள் கொல்லப்படுகின்றனர்.

இதற்கிடையில் கம்பியூட்டர் தொழிநுட்பம் அறிந்த ஒரு டீன் ஏஜ் இளைஞன், நஸ்ருதீன் ஷாவின் கேசை பதிவு செய்த போலிஸ் அதிகாரி, ஷாவுக்கு வெடி மருந்து தந்தவர்களின் உதவியோடு போலிஸ் இவரை நெருங்குகிறது.
நஸ்ருதீன் ஷா யார்? அவரது நோக்கம் என்ன? அவரை போலிஸ் என்ன செய்தது? போன்ற பல கேள்விகளுக்கு உருக்கமும் விறு விறுப்புமாய் அடுத்தடுத்த காட்சிகளில் பதில் சொல்லியிருக்கும் படம்தான் A Wednesday

அட இதெல்லாம் ஒரு நடிப்பா? நவீன தொழிநுட்பங்களும் அதீத புத்திசாலித் தனங்களும் கொண்ட ஒருவனுக்கு அவனது புகழ் கூறும் ஒரு intro பாடல் கூட இல்லை. சரி பாடல்தான் இல்லை அட்லீஸ்ட் அவர் தீவிரவாதிகளுக்கும் போலீசுக்கும் சவால் இடும் காட்சிகளில் கமராவைப் பார்த்து கைகளை ஆட்டி விரல் சொடுக்கி பேச வேண்டாம். எதுவுமில்லாமல் ஏதோ நம்ம பக்கத்து வீட்டு பெருசு போல புலம்புகிறார். தன்னை முபையையே காக்க வந்த ஆபத்பாந்தவனாக சொல்லக் கூடாதா தன்னை common stupid man என்று சொல்கிறார். அனுபம் கேரும் அப்படியே


கமலாவது இக்குறையை தீர்த்து வைப்பாரா பார்ப்போம். எது எப்படியோ நிச்சயமாய் வயதான பாத்திரத்தில் கமல் அவ்வப்போது தன் உச்சந்த்தலையை சொரிவார் என நினைக்கிறேன்.( கடல் மீன்கள், நாயகன் என எத்தனை கமல் படம் பார்த்திருப்போம்.)
கமல் தமிழின் தலை சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லையென்ற போதும் அவரது அவ்வைச்சன்முகி, வசூல் ராஜா போன்றவற்றில் நடிப்பை ராபின் வில்லியம்ஸ் உடனோ சஞ்சய் தத்துடனோ ஒப்பிட்டிப் பார்த்தால் சொதப்பலாகவே தெரிந்தது. இதிலாவது நஸ்ருதீன் ஷாவை மிஞ்ச வாழ்த்துக்கள்.

புதன், 4 மார்ச், 2009

வினையான விளையாட்டு


பாகிஸ்தானில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி கை விடப்பட்டுள்ளது. போட்டிகள் கைவிடப் படுவது இயல்பு எனினும் இப்போட்டி கைவிடப்படுவதற்கான காரணம் சற்று வித்தியாசமானது.

பலஸ்தீன விடுதலை போராளிகளால் Munich ஒலிம்பிக் போட்டியின் போது நடத்தப் பட்ட black september தாக்குதல் உட்பட விளையாட்டு வீரர்கள் மீது நடத்தப் பட்ட பல தாக்குதல்கள் தொடர்பில் நாம் கேள்வியுற்றிருந்தாலும் கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல்கள் நமக்கு புதிய விடயமாகும்.

தங்களுடையது மட்டும்தான் உயிரு மத்ததெல்லாம் ***** என்ற எண்ணமுள்ள ஆஸ்திரேலியா அணி பாதுகாப்பின்மையையும் மும்பை தாக்குதலை காரணம் காட்டி இந்தியாவும் பாக் வர மறுத்த நிலையில் பாக் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுக்கவும் முன்னரே தங்களை அழைத்தால் பரிசீலிக்க தயார் என முந்திரி கொட்டை தனமாய் அறிக்கை விட்டார் முன்னால் Srilankan cricket இன் தலைவர் அர்ஜுன

பின் இது மேலிடத்திற்கு போனாலும் பாகிஸ்தான் மூலம் கிடைக்கும் பல ஆதாயங்கள் காரணமாக இலங்கை அணியை பாகிஸ்தான் அனுப்பியது இலங்கை கிரிக்கெட் நிர்வாகம். இன்று அதற்கான பலன் கிட்டியுள்ளது. பாவம் இலங்கை அரசின் சுயநல அரசியலுக்கு பலியானது என்னவோ அப்பாவி இலங்கை கிரிக்கெட் வீரர்கள்தான்.



















பொதுவில் மேலைதேயத்திற்கும் இஸ்லாமிய உலகுக்கும் இருக்கும் முறுகலின் வெளிப்பாடு என இந்நிகழ்வு கருதப்பட்டாலும் இச்சம்பவம் அதற்கு சற்றேனும் தொடர்புறாத இலங்கை மீது ஏன் பாய்ந்திருக்க வேண்டுமென்பதே எமது கவலையாகும்.

பெரும்பாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு குடை பிடிக்கும் பாகிஸ்தான் அரசை பயமுறுத்தி அடிபணியச் செய்யும் நோக்கோடு தீவிரவாதிகளால் இத்தாக்குதல் இடம் பெற்றிருக்கலாம்.

அல்லது சிலர் சொல்வது போல இது Raw இன் கைங்காரியம் என்றால் வெட்கப்பட வேண்டியது உலகின் மிகப்பெரிய ஜனநாயகமே. இந்தியா என்று இம்மாதிரியான தன்னலம் சார்ந்த செயற்பாடுகளை மாத்திரம் செய்வதை நிறுத்துமோ.

வட கிழக்கு தமிழர்கள் தம்மை தமிழீழத்தவர்கள் எனக் கூறிக் கொள்கின்றனர். தமிழீழத்திற்கும் உரித்தில்லாது தம்மை இலங்கயராயும் உணர முடியாது மீள இந்தியாவிற்கும் செல்ல முடியாது தவிக்கும் மலையகத்தவர் இது நம்ம நாடுடா என சந்தோஷப் படும் தருணங்களில் இலங்கை கிரிக்கெட் போட்டிகளில் வெல்லும் சந்தர்ப்பங்களும் உண்டு. அதற்காக அவர்கள் தமிழுணர்வு அற்றவர்கள் என கூறுவது அபத்தமான வாதமாகும்.

நேற்றைய சம்பவத்தை தமிழ் தேசியத்தின் வெற்றியாகவும் ஏதோ கடவுளின் செயலாகவும் வர்ணித்த சில பதிவுகளை பார்த்த போது உண்மையில் எரிச்சலாக இருந்தது. இச்சம்பவத்திற்காக நாம் வருந்தவில்லையெனில் சகோதரர் கம்பெனிக்கும் எமக்கும் பெரிய வித்தியாசமில்லை.

இத்தனை போர் நடந்தும் கட்டுநாயக வரை வந்து தாக்கி விட்டு போன புலிகள் ஒரு முறையும் இவ்வாறான பேடித் தனமான தாக்குதல்களில் ஈடுப்பட்டதில்லை. இது கொஞ்சமாவது சிந்தனையாளரின் சிந்தையை கிளரியிருக்கும் என்றே நம்புகிறேன். அதை விடுத்தது இதற்கும் புலிகளுக்கும் தொடர்புண்டு என பழைய பல்லவியையே பாடினால் ம்ஹ்ம் இது என்ன சினப்புள்ளத் தனமா என சிரித்து விட்டு இருக்க வேண்டியதுதான்
Related Posts with Thumbnails