ஞாயிறு, 7 நவம்பர், 2010

ஒரு ரஜினி ரசிகனின் பார்வையில் கமலின் சிறந்த 10 படங்கள் பாகம் II




 பாகம்  I
5 . நாயகன் 

டைம்ஸ் சஞ்சிகையினால் எப்போதைக்குமான சிறந்த 100  படங்களில் ஒன்றாக தெரிவானது. பம்பாயில் தாதாவாக கோலோச்சிய தமிழர் வரதராஜ முதலியாரின் கதையையே எடுத்ததாக மணிரத்னம் சொன்னாலும், The God father படத்தின் இரு பாகங்களினதும் பாதிப்பு படம் பூராகவே தெரியும். படத்தைப் பார்த்த போது பிரமித்துப் போயிருந்தாலும் பிறகு The God father பார்த்த போது நொந்து போனதும் உண்மை. ஆனாலும் படத்தை சிறப்பாக தமிழ் படுத்திய வகையில் மணிரத்னம் நிச்சயம் பாராட்டுக்குரியவரே. இதே படத்தின் ஹிந்தி ரீமேக் "தயாவான்" பார்த்தால் மணியின் அருமை புரியும். பின்னணி இசை, ஒளிப்பதிவு, நடிப்பு என எல்லாமே ஒரு படத்துக்கு சிறப்பாக அமைந்தது இந்தப் படத்திற்காய்த்தான் இருக்கும். 

4. மகாநதி 


கமலின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்று. குழந்தை பாலியல் தொழிலாளர்கள் பற்றி உருக்கமாக சொன்ன திரைப்படம். சிறைச்சாலை சென்ற அனுபவம் பெற விரும்பினால் நான் தாராளமாய் பரிந்துரைக்கும் படம் the sawshank redemption . அதற்கு கொஞ்சமும் குறையாத வகையில் தமிழில் இயல்பான சிறைச்சாலைக் காட்சிகள் இடம் பெற்ற படம் என மகாநதியைக் கூறலாம். சலனமற்று  ஓடும் நதியைப் போல தன் போக்கில் இயல்பாய் வாழும் கிருஷ்ணஸ்வாமி பணத்தாசையால் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அதன் விளைவாக அவன் சந்திக்கும் இழப்புகளையும் அடுத்து, தேடிச் சோறு  நிதந்தின்று வாழும் சின்னத்தனமான வாழ்க்கையை விடுத்து கட்டற்ற காட்டாறாய் மாறி அதற்கு காரணமானவர்களை பலி தீர்ப்பதே கதை. நுணுக்கமான நடிப்பு என்பார்களே அப்படி என்றால் என்னவென கமலின் இந்தப் படத்தில் பார்க்கலாம். 

3.  அன்பே சிவம் 


கமல் என் பிரிய நடிகர்களில் ஒருவரான மாதவனுடன் சேர்ந்து நடித்தப் படம். எப்போதும் ஆள் மாறாட்ட குழப்பங்களை வைத்து நகைச்சுவையாய் கதை சொல்லும் சுந்தர் c படம் என்பதால் அன்பு ,சிவம் என இருவர் அவர்களிடையே ஏற்படும் ஆள்மாறாட்ட குழப்பம் என எதிர்பார்த்தால் சுந்தரிடமிருந்து இப்படி ஒரு படமா என வியக்க வைத்தப் படம். நல்லசிவம்  அதீத புத்திசாலித்தனத்தையும், வர்க்க உணர்வையும் தன சோடாப் புட்டி கண்ணாடிக்குள் மறைத்துக் கொண்டு கலகலப்பாய் வாழும் ஒரு போராளி. முதலாளித்துவத்தின் பிரதி நிதியாக அன்பரசு என இரண்டே பாத்திரங்கள் அவர்களுக்கிடையிலான உரையாடல் என் செல்லும் படத்தை போரடிக்காமல் கொண்டு சென்றது சுந்தரின் சாமர்த்தியம்.ஒரு கம்யுனிஸ்டுக்கு இருக்க வேண்டிய தீவிரம் கமலிடம் இருக்காது. அத்தோடு  படத்தை ஆழமாகப் பார்த்தால் பாட்டாளிகளின் எதிரிகளான  பூர்ஷ்வாக்களையும்  அரவணைத்துச் செல்வதே பொதுவுடமைக்கான வழி என்ற ஒரு போலியான தீர்வைக் காட்டுவதாக வேறு தோன்றும்.எனினும் ஆங்காங்கே வரும் அழகான வசனங்களுக்காகவே படத்தைப் பார்க்கலாம். 

2. வறுமையின் நிறம் சிவப்பு 

 என்னை அதிகம் பாதித்த சினிமா பாத்திரம் எது எனக் கேட்டால் Forrest gump க்கு பிறகு இதைத்தான் சொல்வேன். இளந்தாடியும் புத்திசாலித்தனமும் சுயாபிமானமும் எல்லாவற்றுக்கும் மேலாக அறச்சீற்றமும் மிகுந்த கோபக்கார இளைஞன் ரங்கன். காதலுக்காக கூட தன சுயத்தை விட்டுத் தராத அளவுக்கு கர்வம் மிகுந்தவன்.  இந்தப் பாத்திரம் தந்த பாதிப்பில் நானும் முகச் சவரம் பற்றிய கவலை எல்லாம் மறந்து திரிந்த நாட்கள் உண்டு. 

1. சலங்கை ஒலி

 நிராகரிப்பை போன்று வலி தரக்கூடியது வேறெதுவுமில்லை. சலங்கை ஒலி  அப்படி தன் கனவான நாட்டியத்திலும் சரியான அங்கீகாரமின்றி, காதலிலும் வெற்றிப் பெற முடியாது குடிபழக்கத்திற்கு அடிமையாகி மற்றவர்களை விமர்சித்தேனும் தன் சுயத்தை நிறுவ முயலும் ஒருவனின் கதை. 
ஈற்றில் அங்கீகரிக்கப்படாது போன தன் திறமையை தன் காதலியின் மகளின் நாட்டியத்தின் மூலம் மீட்டெடுத்து அக்கைத்தட்டல் தந்த திருப்தியில் உயிர் விடும் பாலக்ருஷ்ணன் பாத்திரம் அலட்சியமும் நிராகரிப்பும் தனிமையும் சூழ்ந்த ஒரு வாழ்வின் கொடுமையை நம்முன் நிகழ்த்திக் காட்டியப் படம். எத்தனை முறை பார்த்தாலும் படம் தரும் பாதிப்பு ஒரு போதும் குறைவதில்லை. என்னளவில் கமலின் ஆகச் சிறந்தப் படம் இதுவே. 



10 கருத்துகள்:

அருண் சொன்னது…

எல்லாம் சரி,ஆனா மும்பை எக்ஸ்பிரஸ் மட்டும் கொஞ்சம் இடிக்குது,
இன்னைக்கு தான் உங்க வலைப்பதிவு பக்கமா வாரேன்.முடிஞ்சா இங்கயும் வாங்க.
http://aruninkurippugal.blogspot.com/

அருண் சொன்னது…

மலையக தமிழர்களை பற்றி நான் எழுத வேண்டும் என எவ்வளவோ எண்ணியிருந்தேன்,பல்கலைக்கழக துவக்கம்,சரியான தகவல்களை சேகரிக்க முடியாமை என கிடப்பிலேயே கிடந்தது.நீங்கள் ஆரம்பித்ததற்கு நன்றி.வாசிக்க காத்திருக்கிறேன்.

அருண் சொன்னது…

முகப்புத்தகத்திலும் வேண்டுகோள் விடுத்திருக்கேன்,மலையகத்திலிருந்து இப்படி ஒருத்தர நான் சத்தியமா எதிர்பார்க்கல,
உங்களுக்கும் எனக்கும் ஒரே வித்தியாசம் நீங்க கதைக்கிற பெரியார்,பெண்ணியம்,மார்க்சிசம் எல்லாத்தையும் நான் ஆதரிக்கிறேன் உங்களுடைய பெரும்பாலான கருத்துக்களுடன் நானும் ஒத்துப்போகிறேன் ஆனால் அவற்றை பற்றிய ஒரு தெளிவான அறிவு இல்லை.புத்தகங்களை தேடிக்கொண்டிருக்கிறேன் ஹட்டனில் அவ்வளவாய் கிடைப்பதில்லையே!

CS. Mohan Kumar சொன்னது…

அற்புதமான தெரிவுகள் வாழ்த்துக்கள்

ஜோ/Joe சொன்னது…

தேவர் மகன் , மைக்கல் மதன காமராஜன் ,விருமாண்டி போன்ற படங்களுக்கு முன்னால் மும்பை எக்ஸ்பிரஸ் , வேட்டையாடு விளையாடு எல்லாம் மிகச்சாதாரணமான படங்கள்.

Jana சொன்னது…

அடடா...சிறந்த தெரிவுகள் தான். ரஜினி இரசிகனின் இந்த பதிவுக்கு, கமல் ரசிகனின் நன்றிகள்.

தர்ஷன் சொன்னது…

நன்றி அருண்,
உங்களை பிறகு தனிமடலில் தொடர்பு கொள்கிறேன்

நன்றி மோகன் குமார் உங்கள் தெரிவுகளும் அருமையாக இருந்தது

நன்றி ஜோ இது என் ரசனையின் அடிப்படையிலான வரிசை மட்டுமே

நன்றி ஜனா, சுகமில்லை என்று கேள்விப்பட்டேன் இப்போது நலமா?

ம.தி.சுதா சொன்னது…

அருமையான தெரிவுகள் வாழ்த்துக்கள்... மும்பை எக்ஸ்பிரஸ் பற்றி கரத்து தெரிவிக்கமாட்டேன் காரணம் தங்கள் தலையங்கத்தை சரியாக விளங்கிக் கொண்டதால் தான் (ரசனை என்பது ஒவ்வொருத்தருக்கும் மாறுபட்டது) வாழ்த்துக்கள்.

pichaikaaran சொன்னது…

தலைவரின் படத்தை பார்க்கும் கண்களால் கமலின் படத்தை பார்க்கலாமா...
வாட் எ ஷேம்....

test சொன்னது…

அருமையான தேர்வுகள்! ஒரு கமல் ரசிகனாக நான் தேர்ந்தெடுத்திருக்கக் கூடிய படங்கள் இவை! மும்பை எக்ஸ்பிரஸ் உட்பட!
இன்றுதான் உங்கள் தளம் வருகிறேன்!
வாழ்த்துக்கள்! :-)

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails