விமலாதித்த மாமல்லன் தனது தளத்தில் பகிர்ந்திருந்த பிரமிள் எழுதிய "சிறிலங்காவின் தேசியத் தற்கொலை" புத்தகத்தை ஒரே மூச்சாக படித்து முடித்தேன். ஒரே மூச்சாக படித்து முடிக்குமளவிற்கு புத்தகம் சுவாரசியமாக இருந்தது பிரதான காரணம். 1984 இல் வெளிவந்த இப்புத்தகம் வரலாற்றுக் காலத்திலிருந்து 83 ஜூலை கலவரம் வரை இலங்கையின் பிரதான இனங்களுக்கிடையே முறுகல் தோற்றம் பெற்று வளர்ந்த விதம் பற்றி விபரிக்கிறது.
சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையின் நிலைமை, தமிழர்-சிங்களவர் விரோதம் முளைகொண்ட விதம், தீர்க்கதரிசனம் அற்ற தமிழ் தலைமைகளின் செயல்பாடுகள், சில தமிழ் அரசியல்வாதிகள் தமது மேட்டுக் குடி சிந்தனையால் மலையகத் தமிழரின் இருப்புக்கு குழி பறித்தமை, தனி நாட்டு கோரிக்கையில் பிடிப்பின்றி இருந்த வடக்கிற்கு வெளியே வதியும் தமிழரையும் தமிழீழத்தை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளிய சிங்கள தேசியவாதம், ஜே ஆரின் திறந்த பொருளாதாரக் கொள்கை முறுகலை தீவிரமாக்கும் ஒரு காரணியாக இருந்தமை, ஜேவிபியினர் எழுபதுகளில் இடது சாரி சித்தாந்தங்களுடன் தமிழருக்கு எதிரான இனவாதத்தையும் தமது கோசமாக கொண்டமை என சுதந்திரம் பெற்றதிலிருந்து இனப்பிரச்சினை உக்கிரம் பெற்ற 83 கலவரம் வரையான காலத்தை எவ்விதப் பாரபட்சமுமின்றி தமிழ்-சிங்கள இரு தரப்பினரும் விட்ட வரலாற்றுத் தவறுகளை சுட்டிக் காட்டி மிகச் சிறப்பாக அலசி ஆராய்ந்திருக்கிறார் நூலாசிரியர்.
இருந்தாலும் வரலாறு கொஞ்சம் தவறான தகவல்களுடன், சிங்களவர்-தமிழர் ஆகிய இருசாராரும் திராவிடர்களே ஒரே பிராந்தியத்திலிருந்து வந்து குடியேறியவர்களான இவர்களுள் தமிழருக்கே இலங்கையில் அதிக பாத்யதை உண்டு என நிறுவ முற்படுவதைப் போல் தோன்றியது. இவ்வாறன கல் தோன்றி மண் தோன்றா கற்பிதங்களே நம் இன்றைய நிலைக்கு காரணம் என் நம்புபவனாதலால் அதை என்னால் ஏற்க இயலவில்லை.
அப்படி என் கண்ணுக்குத் தட்டுப் பட்டவை. தேவநம்பிய தீசனின் பெயர் காரணம் பற்றிக் கூறுகையில் அதில் வரும் நம்பி என்பது இன்றும் கேரளத்தில் வழங்கி வரும் நம்பூதிரி போன்றவற்றின் மரூஉ எனக் கூறுகிறார். ஆனால் அதை தேவநாம் (தேவனின்) பிய(பிரியத்துக்குரிய) தீசன் என்றே படித்திருக்கிறேன்.
இலங்கையின் பூர்விகக் குடிகள் பற்றி பேசும் போது குவேனி என்பது தமிழ் பெயர் எனவும் எனவே அவளும் அவளைச் சார்ந்த ஏனைய இயக்கர்களும் ஆதி திராவிடர்களாகவே இருக்கவேண்டுமெனக் கூறுகிறார். விஜயன் வருகைக்கு முன்னர் இலங்கையில் இருந்ததாக சொல்லப்படுபவர்கள் இயக்கரும் நாகர்களும் ஆவர். ஆனால் அவர்கள் தமிழை பேசிய திராவிடர்கள் என்பதற்கோ இந்து சமய வழிபாடு இருந்தது என்பதற்கோ எவ்வித சான்றுகளும் இல்லை.
இலங்கையின் பூர்விகக் குடிகள் பற்றி பேசும் போது குவேனி என்பது தமிழ் பெயர் எனவும் எனவே அவளும் அவளைச் சார்ந்த ஏனைய இயக்கர்களும் ஆதி திராவிடர்களாகவே இருக்கவேண்டுமெனக் கூறுகிறார். விஜயன் வருகைக்கு முன்னர் இலங்கையில் இருந்ததாக சொல்லப்படுபவர்கள் இயக்கரும் நாகர்களும் ஆவர். ஆனால் அவர்கள் தமிழை பேசிய திராவிடர்கள் என்பதற்கோ இந்து சமய வழிபாடு இருந்தது என்பதற்கோ எவ்வித சான்றுகளும் இல்லை.
அடுத்து விஜயன் சிங்கத்திற்கு பிறக்கவில்லை. இளவரசி ஒருத்திக்கும் சிங்கத்திற்கும் பிறந்த சிங்கபாகூ மற்றும் அவனது சகோதரி சிங்கசீவலிக்கும் பிறந்தவனே விஜயன். அவன் தந்து 700 தோழர்களுடன் நாடு கடத்தப்பட்டான். 200 அல்ல. இலங்கையின் முதற் தலைநகரம் அனுராதபுரமே அன்றி பொலன்னறுவை அல்ல.சரி அதை விடுவோம் புத்தகத்தில் இருந்த வேறு சில சுவாரசியத் தகவல்கள்.
விஜயன் - குவேனியின் காதல் கதை ஒடிஸ்ஸியஸ் மற்றும் ஸரஸ் இன் கதை போலிருப்பதாகவும் மகாவம்சம் இவ்வாறன பல தேச காவியங்களில் இருந்தும் உருவி பிசைந்த கற்பனையான கலவை என்றும் சொல்லியிருந்தது நூற்றுக்கு நூறு உண்மை. அதைப் படித்த போது எனக்கு மேலும் சில கதைகள் ஞாபகம் வந்தது. பண்டுகபாயனின் கதை (இக்கதை "அபா" என்ற பெயரில் சினிமாவாகவும் உண்டு) அப்படியே கிருஷ்ணன் கதையையும், எல்லாளன் மாட்டுக்கும் நீதி வழங்கிய கதை அப்படியே மனு நீதிச் சோழன் கதையையும் , தீசன் மகிந்தரின் கேள்விகளுக்கு பதிலளிப்பது யுதிஷ்டிரர் யட்சனின் கேள்விகளுக்கு பதிலளிப்பதையும் , தீசனுகும் அசோகச் சக்கரவர்த்திக்கும் இடையில் நிலவியதாய் சொல்லப்படும் நட்பு கோப்பெருஞ்சோழன்,பிசிராந்தையார் நட்பையும் ஞாபகப்படுத்தியது.
1970 சே குவேரா குழுவினர் என்ற பெயரில் அரசுக்கு எதிராக செய்த கிளர்ச்சியின் போது வர்க்க உணர்வை வெளிப்படுத்துவதற்கு பதிலாக இன வாத கோசத்தையே முன்வைத்தனர் என்பது ஜேவிபியினர் அப்போதே இப்படித்தான் என்பதற்கு நல்லதொரு உதாரணம். இங்கே நம்மவர்கள் ஏதோ ரோகன விஜேவீர அந்நாட்களில் தமிழரின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டதாக கதைப்பதுண்டு.
அடுத்து அரச மரங்களின் மீதான தமிழர்களின் அச்சம் இன்னமும் தமிழர் மத்தியிலே அரச மரமும் புத்தர் சிலையுமே சிங்கள விரிவாக்கத்தின் ஆரம்பப் படிகளாக பார்க்கப்படுகிறது.
ஆக சிங்கள-தமிழ் இனப் பிரச்சினையின் தோற்றம், இருதரப்பு தலைமைகளின் தவறுகள் ஒரு நாட்டையே போர்ச்சூழலுக்குள் தள்ளியமை என்பன பற்றி சிறப்பாய் அலசுகிறது இந்நூல். அதன்பின்னர் இயக்கங்களுக்கிடையிலான சகோதர படுகொலைகள், இந்திய - இலங்கை ஒப்பந்தம், ராஜீவ் மறைவு, சந்திரிகா அரசு, யாழ் வீழ்ச்சி, ரணில்-பிரபா ஒப்பந்தம், ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு, மகிந்த பதவியேற்பு என அதன் பின்னரான இன்றைய நிலை வரையிலான தமிழ் தேசியத்தின் தற்கொலையை எவ்வித சார்புத் தன்மைகளும் இல்லாமற் அலசும் நூல் இன்றைய நிலையில் சாத்தியமா?
7 கருத்துகள்:
ரசித்தப் படித்தேன்...
நீ வென்றால் உன் வரலாற்றை நீயே சொல்லத் தேவையில்லை..
நீ தோற்றால் உன் வரலாறு சொல்ல நீ இருக்கமாட்டாய்..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.
ஈ - புக்காக இறக்கி வைத்திருக்கின்றேன். இன்னும் படிக்கலை ஆர்வத்தை தூண்டிவிட்டிருக்கின்றிங்க.
படிக்க விரும்புறவங்களுக்கு..
Part 01-
http://www.mediafire.com/?rvk8c3c59fb606c
Part -02
http://www.mediafire.com/?c81b1vnccc4k7a3
சர்ச்சைக்குரிய கேள்விதான்.. பதில்?
நன்றி மதி சுதா
நன்றி ஜனா அண்ணா
நன்றி மணிகண்டவேல்
தர்சன் அவர்களே... இந்தக்கட்டுரையில் ஒரு வசனம் என்னைப்பாதிப்பதாக இருந்தது "ஈழத் தமிழர்கள் தமது மேட்டுக் குடி சிந்தனையால் மலையகத் தமிழரின் இருப்புக்கு குழி பறித்தமை"..
தமிழ் அரசியல் வாதிகள் சிலரால் குழிபறிக்கப்பட்டது அனைவரும் அறிந்த உண்மை... ஆனால் அதற்குள் அனைத்து ஈழத்தமிழர்களையும் அடக்கியிருப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது...
ஏனென்றால் ஒரு மலையகத்தமிழரை பாராளுமன்றுக்கு அனுப்பிய வவுனியாவில் பிறந்தவன் நான்...
தவறு இருந்தால் மன்னிக்கவும்..
மன வருத்தமேற்படுத்தியமைக்கு மன்னியுங்கள் மதுரகன். அப்படியே ஒரு ப்ளோவில் வந்துவிட்டது. எவ்வித உள்நோக்கமும் இல்லை. மாற்றியிருக்கிறேன் சரியா பாருங்கள்
நீங்கள் மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கூறவில்லை என் மனதில் பட்டதை கூறினேன். அத்துடன் சாதாரண பொது மக்களிடமும் அந்தக்குணம் இல்லாமல் இல்லை... பிறரை வேறுபடுத்திக் காண்பதில் பலத்த கெட்டிக்காரர்கள் இவர்கள். அல்லது இருக்கின்ற ஒரு கொஞ்ச சிறுபான்மையினரும் இப்படித் துண்டுபட்டுக் கிடைப்பார்களா...
கருத்துரையிடுக