இன்றையத் தினத்தை விடுமுறை நாளாக்கி முதல் நாளே ராவணன் பார்க்க வாய்ப்பேற்படுத்தி தந்த அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி
மணிரத்தினம் தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர். வசனங்களைத் தவிர்த்து காட்சிகளால் கதை சொல்லும் பாணியை தமிழுக்கு கொண்டு வந்தவர். சினிமாவை வெறுமனே கதை சொல்லும் ஒரு ஊடகமாக பார்க்காது தலைசிறந்த தொழிநுட்ப கலைஞர்களின் உதவியுடன் தொழிநுட்ப சாகசங்கள் நிறைந்த செய்நேர்த்தி மிக்க சினிமாக்களைப் பார்க்க மக்களைப் பழக்கப்படுத்தியவர்.
இன்று தமிழகம் பாழ்பட்டிருப்பதே திராவிடக் கட்சிகள் ஆட்சியினால்தான் என்ற உயர்குடி அங்கலாய்ப்பாக வெளிப்படும் இருவர்,ஆயுத எழுத்து மற்றும் வரி ஏய்ப்பைக் கூட ஞாயப்படுத்தி பெருமுதலாளிகளுக்கு காவடி தூக்கிய குரு போன்ற படங்கள் குறித்தான விமர்சனம் எனக்கு இருப்பினும் அதையும் தாண்டி அவரது நேர்த்தி மிக்க படமாக்கற் திறமைக்கு ரசிகன் நான். அவ்வகையில் அவரது ராவணன் படத்தையும் மிகுந்த எதிர்பார்ப்புடனே பார்க்கச் சென்றான்.
சமூகத்தால் நமக்கு கற்பிக்கப் பட்டிருக்கும் நன்னெறிகள் எல்லாம் நாமே உருவாக்கியவை. நன்மை தீமை என்று எதுவுமே இல்லை. ஒருவருக்கு நன்மையாக இருப்பவை பிறிதொருவருக்கு தீயதாகவும் தெரியலாம். ஆனாலும் நம்மில் பலர் எப்போதோ அதிகாரம் படைத்தவர்களால் ஏற்படுத்தப்பட்ட மரபு,விதி,தார்மீக அளவுக் கோள்கள்,இலட்சியங்கள்,கோட்பாடுகள் என்பவற்றால் நிர்ணயிக்கப்பட்ட அதன் வார்ப்பாக இருக்கும் போலி மனிதர்கள்.
மேற்படி அளவுக்கோள்களின் அடிப்படையில் தன் மனதில் ஸ்ரீராமனை போன்ற இலட்சிய புருஷனாக, கடவுளாக தான் வரித்துக் கொண்டவனின் மனதில் வன்மத்தின் காரணமாக வெளிப்படும் மிருகத்தையும் ஆரம்பம் முதலே வெறுக்கத்தக்க குணங்களைக் கொண்டவனாக தான் கருதிய அரக்கனில் வெளிப்படும் தெய்வத்தையும் ஒருங்கே காண நேரும் ஒரு பெண்ணின் கதையே ராவணன். இதைச் சொல்லவும் பரபரப்புக்காகவும் மணி ராமாயணப் பின்னணியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
தன்னை சார்ந்தோருக்கு நல்லவனாகவும் அதிகார வர்க்கத்திற்கு கெட்டவனாகவும் தெரியும் நவீன ராவணனாக விக்ரம். நடிப்பில் அசத்துகிறார். சின்ன சின்ன முகபாவனைகளும் உடல் மொழியும் வசன வெளிப்பாடும் அருமை. ஐஸ்வர்யாவிடம் காதல் வசப்படுவதும் அதை அவரிடம் வெளிப்படுத்துவதுமான கட்டங்களில் அவரது முகபாவனைகள் சிறப்பாக உள்ளன.
சீதையை ஞாபகப்படுத்தும் பாத்திரத்தில் ஐஸ்வர்யா. அதிகமான மேக்அப்புடனும் கிழடு தட்டிய முகத்துடனும் ஆரம்ப க்ளோஸ் அப் காட்சிகளில் பார்க்கும் போது "தலைவா இவள உனக்கு ஜோடியா அடுத்தப் படத்தில பார்க்கனுமா?" என கதற வேண்டும் போல் தோன்றியது. என்றாலும் தொடர்ந்த காட்சிகளில் தன நடிப்பின் மூலம் அவ்வெண்ணத்தை மறக்கச் செய்கிறார்.
ராமனாக ப்ருத்விராஜ் ஒரு போலிசுக்குரிய கம்பீரம் இவரிடம் மிஸ்ஸிங். பழியுணர்ச்சி மிகுந்த ராமன் பாத்திரம் நமக்கு புதிது அதைச் சரியாகவே செய்திருக்கிறார். கும்பகர்ணனாக பிரபு, அனுமானாக கார்த்திக், சூர்ப்பனகையாக ப்ரியாமணி ஆகியோரும் கொஞ்சமே வந்தாலும் நிறைவாய் செய்திருக்கிறார்கள்.
மணிகண்டன், சந்தோஷ் சிவன் இருவரும் அசத்தியிருக்கிறார்கள். கமாராவில் சுருட்டிய இருளும், மழையும், பனியும், வனாந்தரமும், அருவிகளும் கவிதையாக விரிகின்றன திரையில். சந்தோஷ் சிவனின் பங்கு அதிகம் என நினைக்கிறேன். வெளிச்சம் தவிர்த்து வித்தை காட்டுவதில் சமர்த்தர் அவர்தானே. ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களைப் பற்றி ஏலவே இந்தப் பதிவில் சொல்லியிருந்ததைப் போலவே காட்சிகளுடன் பார்த்தப் பின் இன்னமும் சிறப்பாய் உள்ளதாகவே தோன்றியது. பின்னணி இசையும் அருமை. வசனங்கள் சுகாசினி ம்ம் ஞாபகப் படுத்தி சொல்லும் படியான வசனங்கள் ஏதும் இல்லை. வாத்தியார் இருந்திருந்தால் என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
அடுத்து மணி அவர் இழந்த போர்மை இன்னமும் மீட்கவில்லை. அலைபாயுதே க்கு அப்புறம் நான் பார்த்த அவர் படங்கள் மோசமில்லை என்ற போதும் எனக்கு நிறைவைத் தரவில்லை. இதிலும் அது தொடர்வது கவலை. சந்தோஷ் சிவன்,மணிரத்தினம்,ராமாயணம் என்றவுடனே எனக்கு தளபதி ஞாபகத்திற்கு வந்தது. ம்ம் அந்தளவிற்கெல்லாம் இல்லை. வழமையாக மனித உணர்வுகளைக் காட்சிப் படுத்தும் அழகான காட்சிகளால் திரையை நிரப்பும் இவர் அதற்கு நிறைய வாய்ப்பிருக்கும் ஒரு படத்தில் வனாந்தரங்களின் வனப்பையும் அது சார்ந்த சாகசங்களையுமே முன்னிறுத்தியிருக்கிறார். மற்றும் படி அவரது படங்களில் ஏதேனும் அரசியல் பேசவேண்டும் என்ற வழமைக்கேற்ப பழங்குடியினர் மீதான அரச ஒடுக்குமுறைகள், பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் பாலியல் வன்முறை, என்பதெல்லாம் வந்துப் போகின்றது. ராவணின் தம்பி விபீஷணன் பாத்திரம் சமாதானம் பேசச் செல்லும் போது அப்படியே கட்சி மாறிக் காட்டிக் கொடுத்து விடுவார் என எதிர்ப்பார்த்தேன். அப்படியில்லாமல் வீரப்பனின் தம்பி சமரசத்திற்கென அழைக்கப்பட்டு கொல்லப்பட்டதை ஞாபகப்படுத்துவது போல இருக்கிறது. காட்டு வாழ்க்கைக்கு நன்கு பழக்கப்பட்ட பழங்குடியினர், இயற்கையோடு இணைந்த அவர்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் அதிகார வர்க்கம். கொஞ்சமாய் அவதாரை ஞாபகப்படுத்தியது.
விக்ரம் கூட்டத்திடம் அகப்பட்ட கார்த்திக் "இவர்களுக்கு உயிரைக் கொடுத்தவன் நீ, நீயே இவர்களின் உயிரை எடுக்கலாமா" எனப் பேசும் வசனங்கள் எதையேனும் ஞாபகப்படுத்தினால் மணிரத்தினம் என்ற காலத்திற்கேற்ப பயிர் செய்யும் கைதேர்ந்த வியாபாரியிடம் நாமும் ஏமாந்து விட்டோம் என்று பொருள்.
படத்தைப் பற்றிய என் பல கருத்துக்கள் மீண்டும் ஒரு முறை படத்தைப் பார்த்தால் மாறலாம். வழமையாக மணி படங்கள் மீண்டும் மீண்டும் பார்க்கும் போது புதிதாய் ஏதேனும் தட்டுப் படும். ஆனால் இப்படம் வழமைப் போல் இல்லாமல் ரொம்பவும் நேரடியாகவே எடுக்கப் பட்டிருக்கிறது. குறைவாக புத்திசாலித்தனமாக கூர்மையாக வரும் சின்ன சின்ன வசனங்கள் இல்லை. எப்படியோ வழமையான ஒரு மணிரத்னம் படமாக எனக்கு இது இல்லை.
எதற்கும் இருக்கட்டும் திரும்பவும் ஒரு முறை தமிழிலும் ஹிந்தியிலும் படத்தைப் பார்க்க வேண்டும்
8 கருத்துகள்:
இன்னும் படத்தைப் பார்க்கவில்லை.பாரத்துவிட்டு மீண்டும் வருகிறேன்
நல்ல விமர்சனம், மேலோட்டமாக வாசித்தேன், படத்தை நான் பார்க்கும் போது சுவாரசியம் குறைய கூடாது. பகிர்வுக்கு நன்றி
தமிழகம் பாழ்பட்டு இருக்கோ இல்லையோ,ஆனால் சாராயத்தில் மூழ்கி இருப்பது திராவிட கட்சிகளின் கைங்கரியமே,அதனால் வாழ்விழந்து இருப்பது உயர்குடி யாரும் இல்லை,ஏழை மக்கள் தான்.
அருமை தர்ஷன்..
உங்கள் அற்புதமான எழுத்து நடையை ரசித்தேன். குறிப்பாக..
கடவுளாக தான் வரித்துக் கொண்டவனின் மனதில் வன்மத்தின் காரணமாக வெளிப்படும் மிருகத்தையும் ஆரம்பம் முதலே வெறுக்கத்தக்க குணங்களைக் கொண்டவனாக தான் கருதிய அரக்கனில் வெளிப்படும் தெய்வத்தையும் ஒருங்கே காண நேரும் ஒரு பெண்ணின் கதையே ராவணன்
வசனக் கோர்வைகளில் தெளிவாக உள்ளீர்கள்..
என் ரசனை உங்களுடன் ஒத்துப் போவதில் மகிழ்ச்சி.
//அலைபாயுதே க்கு அப்புறம் நான் பார்த்த அவர் படங்கள் மோசமில்லை என்ற போதும் எனக்கு நிறைவைத் தரவில்லை.//
அதே.. :)
//பேசும் வசனங்கள் எதையேனும் ஞாபகப்படுத்தினால் மணிரத்தினம் என்ற காலத்திற்கேற்ப பயிர் செய்யும் கைதேர்ந்த வியாபாரியிடம் நாமும் ஏமாந்து விட்டோம் என்று பொருள்//
மணியின் ரசிகனான போதும் ஒத்துக் கொள்கிறேன்.
LOSHAN
http://arvloshan.com/
நன்றி சுபாங்கன்
நன்றி வரோ
நன்றி லோஷன் அண்ணா
விஜயன் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் பாலும் தேனும் ஓடாமல் இருக்கலாம். எனினும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய உரிமைகளை மறுக்கமுடியாது. அந்தக் காழ்ப்புணர்வையே மணி போன்ற பார்ப்பனர்கள் தம் படைப்புகள் வாயிலாக காட்டுகின்றனர்.
ம்...நேற்று இங்கு பார்க்க என் நண்பர்கள் போனார்கள்! எனக்கு நேரம் கிடைக்கவில்லை. முடிந்தால் பார்த்துவிட்டு பின் வருகிறேன்! ஓகேயா?
நன்றி தங்க முகுந்தன்
அருமையாக எழுதியுள்ளீர்கள். மணிரத்தினத்திடம் எனக்கும் பிடித்தம் உண்டு. இன்னமும் பார்க்க முடியவில்லை
கருத்துரையிடுக