
பால் வேண்டுமானால் பழகப் பழகப் புளிக்கலாம். ஆனால் வைன் பழசாகத்தான் ருசியும் போதையும் அதிகம் என்பர். வைனைப் போலத்தான் நம் இசைப்புயலின் இசையும் கேட்க கேட்க புதிதாய் பாடலில் பொத்தி வைக்கப்பட்ட சூட்சுமங்கள் எல்லாம் பிடிப்பட்டு அப்படியே அந்தப் போதையில் திளைத்து அதன் வசமாகி விடுவோம். முதற்றடவை ராவணன் பாடல்கள் கொஞ்சம் ஏமாற்றத்தை தந்தாலும் போக போகப் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பினாலேயே மேற்கண்ட வரிகள்.
"வீரா" பாடல் ஒரு ஹீரோ புகழ் பாடும் பாடல் முதற்றடவையாக மணி படத்தில். ஒரு தனிப்பாடலாக அல்லாமல் அவ்வப்போது வந்து செல்லும் என நினைக்கிறேன். பாடலில் ஒலிக்கும் சில வரிகள் சத்தியமாய் புரியவில்லை. அது தமிழா என்பதும் சந்தேகமாகவே இருக்கிறது.
"கள்வரே" பாடல் என்னுடைய விருப்பப் பாடகி ஸ்ரேயா கோஷல் பாடியது என்றாலும் ஹிந்தியில் ரீனா பரத்வாஜ் உருகியிருப்பதோடு ஒப்பிட்டால் ஒன்றுமே இல்லை. வலி மிகும் இடங்கள் வலி மிகா இடங்கள் தமிழுக்கு தெரிந்திருப்பது ஸ்ரேயாவுக்கு தெரியாததாலோ என்னவோ சுரத்தேயில்லாமல் இருக்கிறது பல இடங்களில்.
"கெடா கறி" பாடல் ஒரு கல்யாண வீட்டில் பாடப்படும் போல் இருக்கிறது. மிக உன்னிப்பாக கேட்டால் மட்டும் வரிகள் காதில் விழுகிறது.
"இவ கண்ணால பார்த்தா ஜானகி அம்சம் ,
கட்டில் மேல பார்த்தால் சூர்ப்பனகை வம்சம்"என்ற வரிகள் கல்கியில் பிரகாஷ்ராஜ் சொல்லும் ஒரு வசனத்தை ஞாபகப்படுத்திகிறது.
"கோடு போட்டா" பென்னி தயாள் பாடியிருக்கிறார்.
"வத்திப் போன உசுரோட வாழ்வானே சம்சாரி சப்பாத்திக் கள்ளி வாழ வேணாமே மும்மாரி" ஆக்ரோஷமான பாடல் வரிகள். ஆனால் பென்னி தயாளின் குரலில் அந்த ஆக்ரோஷம் சுத்தமாய் தவறியிருக்கிறது.
கார்த்திக் பாடியுள்ள
"உசுரே போகுதே" இந்தப் படத்தில் தமிழுக்கென்றே எடுத்தது போல பாடல் வரிகளும் இசையும் பொருந்திப் போகும் ஒரேப் பாடல். தன மோகித்தப் பெண்ணை அக்கினிப் பழம் என உருவகித்திருப்பது அருமை. அது எப்படி மணி படங்களில் மட்டும் வைரமுத்தால் இப்படி எல்லாம் எழுத முடிகிறது.
"காட்டுச் சிறுக்கி" என்னைக் கேட்டால் ஆல்பத்தின் ஆகச் சிறந்தப் பாடல் இதுதான் என்பேன். நீண்ட நாட்களுக்கு பிறகு அனுராதா ஸ்ரீராம் வழமை போல் பாடலை வளைத்துக் குழைத்து ஏதேதோ செய்கிறார். கூடவே ஷங்கர் மகாதேவன். இசைப்புயலுக்கு இணையாக வைரமுத்தின் பேனாவும் தாண்டவமாடி இருக்கிறது. வெறுமையும் தனிமையுமாய் கணக்கும் மனதின் வலியை
"பாறாங்கல்லை சுமந்து வழி மறந்து ஒரு நத்தைக் குட்டி நகருதடி"என எழுதியிருப்பது எனக்கு ரொம்பவும் பிடித்தது.

என்னளவில் பாடல்கள் மோசமில்லை ஆனால் ஆஹா ஓஹோ எனப் புகழும் ரகமுமில்லை. வைரமுத்து மினக்கெட்டு எழுதியிருப்பது தெரிகிறது ஆனால் வார்த்தைகளை கருவிகள் ஆக்கிரமித்து அமுக்கி விடுவது கவலை. எளிதில் மனதில் ஓட்டும் ரகமான இசை இல்லையாதலால் விண்ணைத் தாண்டி வருவாயா போல் ஹிட்டடிக்க போவதில்லை. அடுத்தி ஹிந்தியில் போல் இல்லாமல் தமிழில் வரிகள் குறித்த இசைக்குள் வலிந்து திணிக்கப்பட்டதைப் போல் தோன்றுகிறது. மணிரத்னம் ஹிந்திக்குத் தரும் அதே முக்கியத்துவத்தை தமிழுக்கும் தந்தால் தேவலாம். எப்படியும் பாடல்கள் நிச்சயமாக மணிரத்னத்தின் காட்சியமைப்புகளுடன் பார்க்கும் போது ஒரு புதுவிதமான பரவசத்தைத் தரும் என்பது திண்ணம். அதுவரை எதிர்பார்த்திருப்போம் ஜூன் பதினெட்டை
இதெல்லாம் இசையை ரசிக்க மட்டுமே தெரிந்த ஒரு பாமரனின் பார்வை. யாரேனும் விவரமறிந்தவர்கள் பாடல்களை நுணுகி ஆராய்ந்து விமர்சனம் எழுதுங்கள். படிக்க ஆவலாயுள்ளோம்.