திங்கள், 19 அக்டோபர், 2009

A.R.R முதல் தமிழக M.P க்களின் வருகை வரை

ஏலவே எழுதியது சில பல பிரச்சினைகளால் தாமதமாக So matter பழசாய் இருக்கலாம் ஆனால் படித்து பின்னூட்டமிடுங்கள்



தேமதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவச் செய்வோம் என்றான் பாரதி யார் செய்தார்களோ என்னவோ ஏ.ஆர். ரஹ்மான் செய்திருக்கிறார். எவ்வித இந்திய தாக்கங்களும் கலப்புமில்லாது அவர் பணியாற்றும் முதல் Hollywood படமான Couples retreat வெளியாகி இருக்கிறது. படத்தை பார்த்தால் ஒரு Sex comedy போல தெரிகிறது. Hancock இல் கதாநாயகியின் கணவராக வருவாரே(பெயர் தெரியவில்லை) அவரும் Melrose place, Beverly Hills 90210 போன்ற சிரச மற்றும் ITN தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான தொடர்களில் நடித்த Kristin Davisஉம எனக்கு தெரிந்த முகங்கள்.
படத்தில் குறிப்பிட்டாக வேண்டிய அம்சம் படத்தின் sound track Albumத்தில் இடம்பெற்றுள்ள குறு குறு கண் என்ற குறும்பாடல எனக்கு பிடித்தது நீங்களும் இங்கே சென்று கேட்டுப் பாருங்கள்.
பின் குறிப்பு:- இதனால் தமிழருக்கு என்ன ஆதாயம் இலங்கை பிரச்சினையில் ஏதேனும் தீர்வேற்படுமா, தமிழ் உலக அங்கீகாரம் பெறுமா, அண்டை மாநிலங்களுடனான தண்ணீர் பிரச்சினைகள் தீருமா என வாதம் புரிபவர்கள் கவனத்திற்கு.
ஒரு இசை கலைஞ்ன் ஏதோ ஆர்வத்தில் தான் பணியாற்றும் பிறமொழி படமொன்றில் தன தாய்மொழி பாடலொன்றை சேர்த்துள்ளார். கேட்டு ரசித்து விட்டு போவோமே.

தினமலருக்கும் நடிகர் சங்கத்துக்குமான பிரச்சினை சற்று பூதகரமாகியுள்ளதாக தெரிகிறது. விவேக், சத்யராஜ் போன்றோரின் பேச்சுகள் மிகுந்த அநாகரிகமாக இருந்தது உண்மை. சத்யராஜ் அவ்வாறு பேசுவது வழமை என்ற போதும் விவேக்கின் பேச்சு அநாகரிகத்தின் உச்சம் ஜனங்களின் கலைஞனிடம் நான் இதை எதிர் பார்க்கவேயில்லை.
ரஜினியின் பேச்சு ஏற்றுக்கொள்ளக் கூடியது, அதிலுருந்து குறித்த சில வார்த்தைகளை மட்டும் தேர்ந்தெடுத்து அதற்கு பல்வேறு அர்த்தம் தொனிக்கும் விதமாக ரஜினிக்கு சார்பாகவும் எதிராகவும் மீடியாக்களில் வியாபாரத்துக்காகவும் , வலைப்பதிவுகளில் ஹிட்சுக்காகவும் பல்வேறு கருத்தாடல்கள் இடம்பெறுகின்றன. அட்டையில் நடிகைகளின் படம், நடுப்பக்கம் கவர்ச்சி படங்கள், நட்சத்திரங்களின் exclusive பேட்டிகள், சினிமா விமர்சனம், கிசு கிசுக்கள் என மனிதனுள் இருக்கும் வக்கிரமான உணர்வுகளை மேலும் கிளர்த்தி அதன் மூலம் காசு பண்ணும் பத்திரிகைகள் விபச்சார செய்தி போட்டதும் தம் வியாபரத்துக்காகவே அன்றி சமூகப் பிரக்ஞையினால் அல்ல என்பது வெளிப்படை. எப்படியோ பத்திரிகைகள் இனிமேல் சினிமா செய்திகளை வெளியிடுவதில் கட்டுப்பாடு கொண்டு வர உத்தேசித்துள்ளதாக தெரிகிறது. தமிழரிடம் புரையோடிப்போயுள்ள தனி மனித பூஜனையையும், சினிமா நடிகைகளை தம் காம வடிகாலாக எண்ணுவதையும் ஊக்குவித்த பத்திரிகைகளின் இம்முடிவு மாற்றத்தைக் கொண்டு வருமா?




2009 ஆம் வருடத்துக்கான நோபெல் பரிசுகளில் இராசயனவியலுக்கான பரிசை பகிர்ந்த மூவருள் ஒருவர் தமிழர். ராமகிருஷ்ணன் அமெரிக்க வாழ் தமிழர். இங்கு Advanced level Bio science செய்தவர்கள் Ribosome பற்றி அறிந்திருப்போம். புரததொகுப்புக்கென கலங்களில் காணப்படும் மிக நுண்ணிய் அமைப்பு. ரைபோசோம்கள் கலத்தினுள் புரததொகுப்பு நிகழ்த்தும் செயன்முறை பற்றிய ஆய்வுக்காக இப்பரிசு. இவ்வாய்வு எதிர்காலத்தில் வினைத்திறனான புதிய வகை antibiotics இன் உருவாக்கத்திற்கு உதவும் என நம்பப்படுகிறது.
அடுத்தவர் ரட்சகர் Obama பாவம் அவரே அதிர்ந்து போய் தர்ம சங்கடமாய் பேசியிருக்கிறார் விட்டுவிடுவோம். ஒரு வேளை அந்த beer party க்காக கொடுத்திருப்பார்களோ. நண்பன் சொல்கிறான் தமக்குள் அடித்துக் கொண்டாலும் ஒரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினையை தீர்க்க ஒன்று பட்டு பாடுபட்ட ஆசியாவின் அந்த மூன்று அணு சக்தி நாடுகளின் தலைவர்களுக்கும் பகிர்ந்தளித்து இருக்கலாமாம்.

இலங்கையின் தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. எதிர்பார்த்தபடியே ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டணி பாரிய வெற்றியை பெற்றுள்ளது. போகிற போக்கை பார்த்தால் இனி இலங்கையில் ஒரு எதிர்க்கட்சி தலைதூக்கவே முடியாது எனத் தோன்றுகிறது.



ஒருவன் சாகத் துடிக்கும் போது தன வேலையை பார்த்துக் கொண்டிருந்து விட்டு பின் இழவு வீட்டுக்கு வந்து மாலை சாத்துவதை போல இலங்கைக்கு சுற்றுபயணம் வந்திருக்கும் வீரத் தமிழச்சி கவிதாயினி கனிமொழி உள்ளிட்ட இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கிறோம்.
ஆச்சரியம் குள்ளநரிக் கூட்டத்தில் சிறுத்தை ஒன்றும் இருக்கிறது.

திங்கள், 21 செப்டம்பர், 2009

உன்னைப் போல் ஒருவன் பல நிறைகளும் சில சந்தேகங்களும்


மனிதம், மனிதனை மற்றைய விலங்குகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் அம்சம். வவுனியாவின் முகாம்களில் முள்வேலிகளுக்குள் அடைப்பட்ட மூன்று இலட்சம் பேருக்காக வருத்தப்படும் நான் கேப்பட்டிபோல்லாவில் பேருந்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பால் இறந்த சிங்கள குழந்தைகளுக்காகவும் கலங்க வேண்டும். அதை விடுத்து "செத்தான் சிங்களவன்" என்ற பாணியில் மகிழ்வது எவ்விதத்திலும் பொருத்தமாய் இராது.சாமான்ய மனிதனை காவுகொள்ளும் தீவிரவாதத்தை எதிர்த்து தன வீட்டை தானே சுத்தம் செய்ய தீவிரவாதியாகும் ஒரு சாமான்யனின் ஒரு நாளைய வாழ்க்கை பதிவுதான் உன்னைப் போல் ஒருவன்.

படத்தின் கதை ஏற்கனவே A Wednesday பற்றிய பதிவில் சொல்லியிருப்பதால் படத்தை பற்றிய சில அலசல்கள் மட்டுமே.
படத்தில் பாராட்ட வேண்டிய முதல் அம்சம் சந்தேகத்திற்கிடமின்றி பாத்திரங்களோடு கச்சிதமாய் பொருந்திப் போகும் நடிகர்களும் அவர்களின் மிகையற்ற நடிப்பும்தான்.நஸ்ருதீன் ஷாவுடன் ஒப்பிட்டால் குறைவுதான் என்றாலும் கமல் சிறப்பாகவே நடித்துள்ளார். தன்னை stupid common man என்று கமல் சொன்னாலும் படத்தை பார்க்கும் நம்மால் அவ்வாறு உணர முடியவில்லை என்ன செய்வது அவரை ஒரு நட்சத்திரமாகவே பார்த்து பழகி விட்டோம். மோகன்லால் நடித்திருப்பதாய் தோன்றவில்லை வாழ்ந்திருக்கிறார். மூன்று முறை தேசிய விருது பெற்ற இரண்டு பேர் நடிக்கும் படத்தில் இது ஆச்சரியமில்லைதான். ஆனால் கமல்,மோகன்லால் ஆகியோரையும் தாண்டி படத்தில் பங்கேற்ற அனைவருமே சிறப்பாய் நடித்திருப்பது பாராட்ட தக்கது.

கமல் இந்த படத்தில் நடிக்கப் போகின்றார் என்றவுடனே எனக்கு ஏற்பட சந்தேகம் கமலே சொல்வது போல் அமைதிப் பூங்காவான தமிழகத்தில் நடப்பது போல இந்த கதையை எப்படி தமிழாக்கப் போகின்றார் என்பதுதான். ஆனால் திறமையாகவே முயன்றிருக்கிறார் கமல்.

ஆரம்பம் முதல் இறுதி வரை எள்ளல் இழையோடும் இரா. முருகனின் வசனங்கள் அருமை. ஆனால் பல இடங்களில் ஆதிக்கத் திமிர். இவர் பார்ப்பனரா என்ன?
( கமலுடனான அனுபவங்கள் பற்றி எழுதுறேன் என வாய்ப்புக்காக முகஸ்துதி செய்த கட்டுரை இன்னும் சிறப்பாய் இருந்தது. கிட்டத்தட்ட இதே தரத்தில் மனுஷ்ய புத்திரனும் எழுதியிருந்தார். ஜெயமோகன் கூட தான் கிள்ளிக் கொடுத்த சினிமா தனக்கு அள்ளிக் கொடுத்திருக்கின்றதென எழுதியிருந்ததாய் ஞாபகம் . சாருவும் விரைவில் சினிமாவில் எழுதட்டும்.)

ஹிந்தியில் பாடல்களே இல்லாத இந்த படத்துக்கு தமிழில் இத்தனை பாடல்களா என பயந்திருந்தேன். ஆனால் நல்ல வேளையாக படத்தில் அந்த பாடல்கள் இல்லை. எனினும் பின்னணி இசையில் சிறப்பாகவே செயற் பட்டுள்ளார் சுருதி. பல இடங்களில் அவரது இசை மௌனம் காப்பது காட்சிகளுக்குள் எம்மை ஈர்த்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.

இவை படத்தின் நிறைகள் என்றால் எனக்கிருந்த சில சந்தேகங்கள் உங்களுக்கு விடை தெரிந்தால் பகிர்ந்துக் கொள்ளுங்களேன்.

கமலை போலி பகுத்தறிவுவாதி என பலர் சொல்கிறார்கள். அது உண்மைதானோ என எனக்கு இந்த படத்தை பார்த்த போதுதான் சந்தேகம் வந்தது.
தீவிரவாதி தனக்கேற்பட்ட அவலத்தை தன் மனைவி கொல்லப்பட்டதை சொல்லும் போது அவனது மதம் சார்ந்த வழக்கத்தை முன்னிறுத்திய நையாண்டி அவசியமா? தீவிர இந்துத்துவாக்கள் கூட இவ்வாறு செய்ய தயங்குவரே. (அவரது gene களில் இருக்கும் ஏதோ ஒன்று காரணமாயிருக்கும்.)

திருமணமே காலாவதியான ஒரு விடயம் என பேட்டிக் கொடுப்பவர் அரதைப் பழசான தேசபக்தி எனும் அபத்தத்தை தூக்கிப் பிடிப்பதேன்?

நடிகரான ஸ்ரீமன் தன்னை டாக்டர் என சொல்லிக் கொள்கிறார்.இது யாரையேனும் சுட்டுகிறதா?

வோட்டர் லிஸ்ட்டில் தன் பெயர் இல்லாததால் தன்னை invisible man ஆகவே கருதுவதாக சொல்லும் கமல் அடுத்தாய் நாட்டுக்கு super man ஒருவர் அல்லாமல் தன்னை போல common invisible man தான் அவசியம் எனக் கூறுவதில் ஏதும் அர்த்தம் இருக்குமா?

மும்பை குண்டுவெடிப்பை தமிழர்கள் கண்டுகொள்ளவில்லை என ஆவேசப்படும் கமல் ஈழத்தமிழரின் அவலம் கண்டு தீக்குளித்த தமிழகத்தவரை பார்த்து கலங்கிய வட நாட்டவரின் மனிதாபிமானம் பற்றியும் ஓரிரு வார்த்தைகள் கூறியிருக்கலாம்.

எது எப்படியோ படம் பார்க்க வேண்டிய படம். ரசிகர்களிடத்தில் ஏற்பட்டிருக்கும் இரசனை மாற்றத்தை கமல் சிறப்பாக உள்வாங்கியிருக்கிறார். இப்போதெல்லாம் ரசிகர்கள் சசிகுமார்,செல்வராகவன்,அமீரின் அடுத்தப் படம் தொடர்பில் ஆர்வம் காட்டுகின்றனரே ஒழிய ஹீரோக்களின் படங்கள் தொடர்பில் அல்ல. அதுவும் விஜய் பெயரை சொன்னால் சற்று பயப்படவும் செய்கின்றனர். இம்மாதிரியான படங்களுக்கு தரப்படும் ஆதரவு குப்பைகளின் வருகையைக் குறைக்கும்.

திங்கள், 3 ஆகஸ்ட், 2009

முரளி ஒய்வு ஏன்



All good things must come to end at some point என்று சொல்லப்படுவதை அறிந்திருப்பீர்கள். ஆனாலும் அவ்வாறன முடிவுகளை சீரணித்துக் கொள்வதென்பது மிகுந்த சிரமமான காரியமாகும். அவ்வகையில் சடுதியான முடிவுகளால் அதிர்வுற்று அவற்றை ஏற்க தயங்குபவரை தயார் படுத்தவோ என்னவோ முன்கூட்டியே தன ஒய்வு முடிவை வெளியிட்டிருக்கிறார் இலங்கயின் சுழற்பந்து நட்ச்சத்திரம் முரளி

முரளி என்ற பெயர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு புதிதாய் அறிமுகப்படுத்த வேண்டிய பெயரில்லை. டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட்டுகள் எடுக்கப்படுவதெல்லாம் பெரும் சாதனைகளாகக் கருதப்பட்ட காலத்தில் முரளி இதை அவரது வழமையாய் கொண்டவர். 92 இல அறிமுகமானவர் 95 ற்கு பிறகு சாதனைகள் நிகழ்த்தவெனவே கிரிக்கெட் ஆடியவர். இவருக்கு இணையான புறச்சூழல் பந்து வீச்சாளர் இதுவரை தோன்றியதில்லை எனக் கூறினால் அது மிகையில்லை.

இந்த சாதனையாளர் டெஸ்ட் போட்டிகளில் முதற்றடவையாக 1000 விக்கெட்டுகள் பெறப்பட்ட சாதனையை நிகழ்த்துவார் என எதிர்பார்த்திருக்கையில்தான் முரளியிடமிருந்து வந்திருக்கிறது இந்த செய்தி. யாரும் எதிர்பாராத இந்த நேரத்தில் ஏன் முரளி இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கக் கூடும்.

உண்மையாகவே முரளி கூறுவதை போல அவர் ஒய்வு பெற பொருத்தமான வயதை அடைந்திருப்பதாலா?

அல்லது முரளியின் துணையின்றி இலங்கை அணி போட்டிகளை வெல்லக் கூடிய நிலையை அடைந்திருக்கக் கூடிய திருப்தியினாலா?

மென்டிஸ், ஹேரத் போன்ற புதுப் புயல்களின் வருகை எதிர்காலத்தில் தன்னை அணியிலுருந்து ஓரங்கட்டக்கூடிய நிலைமையை உருவாக்கக் கூடிய சாத்தியதினாலா?

அல்லது 20twenty போன்ற பணக்கொழிக்கும் போட்டிகளால் டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை குறைவடைந்து தனது இலக்கான 1000 விக்கெட்டுகள் என்ற சாதனையை அடைய மேலும் காலம் நீடிக்கும் என்பதை உணர்ந்ததால் எடுத்த யதார்த்த பூர்வமான முடிவா?

அல்லது முரளி இங்கிலாந்திலோ இந்தியாவிலோ திரைமறைவில் மேற்கொண்டிருக்கக்கூடிய ஏதேனும் வியாபார ரீதியிலான பேரங்களின் அடிப்படையிலானதா?

எதுவாயிருந்தாலும் இன்னமும் ஒரு வருடத்தில் இம்முடிவு மறு பரிசீலனை செய்யப் படும் வாய்ப்பு உள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.


ஒன்று கவனித்தீர்களா shane warne தும்மினாலும் செய்தியாக்கும் மேற்கத்தைய ஊடகங்கள் இந்த அசாத்திய திறமையாளனின் முடிவைப் பற்றி அத்தனை தூரம் அலட்டிக் கொள்ளவில்லை.

ஞாயிறு, 10 மே, 2009

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்



1995 வருடம் என்று நினைக்கிறேன் அப்பொழுது பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்திருந்த இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு வெற்றி மேல் வெற்றிக் குவித்துக் கொண்டிருந்த ஒரு காலக்கட்டம். எனக்கு 13 வயதளவில்தான் இருக்கும். கிரிக்கெட் வெறி தலைக்கேறியிருந்த சமயம் யாரேனும் நான் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கையில் சனலை மாத்தினார்கள் என்றால் தொலைந்தார்கள்.இப்படி இருக்கும் போதுதான் கிரிக்கெட் காய்ச்சலை இலகுவாய் புறந் தள்ளிய அந்த சம்பவம் நடைப் பெற்றது.

"விஷயம் கேள்விப் பட்டீர்களா? இந்தியாவில் பிள்ளையார் பால் குடிககீராறாம் tv இல காட்டினார்கள்" என்று போகிற போக்கில் ஒருவர் சொல்லிப்போனதுதான் தாமதம் அனைவரும் தெரிந்த இடத்திலெல்லாம் பால் வாங்கிக் கொண்டு வழிப் பிள்ளையார்களுக்கு கொடுக்கத் துவங்கினார்கள். எத்தனை இடத்தில் பிள்ளையார் பால் குடித்தார்? எத்தனை லீட்டர் குடித்தார் என்ற புள்ளி விவரங்கள் தெரியவில்லை. ஆனாலும் போனவர்களில் அநேகமானோர் பரவசம் ததும்பிய முகத்துடன் வந்தனர்.

அப்போதெல்லாம் சிறுவானாயிருந்த நான் அதிகம் வாசிப்பது பக்திக் கதைகளைத்தான் அதுவும் அவற்றை வாசித்து இறைவனின் அற்புதங்களை பார்த்து வியந்து ஆண்டவனே நான் என்ன புண்ணியம் செய்தேனோ இந்துவாய் பிறந்திருக்கிறேன் என்று புளங்காகிதம் கொண்டிருந்த காலம். எனக்கும் பிள்ளையாருக்கு பால் கொடுத்து பார்க்கும் சிறிய ஆர்வம் தலைக்காட்டியது. வீட்டில் என் விருப்பத்தை சொன்னப் போது அதெல்லாம் ஆச்சாரமாய் செய்ய வேண்டியது என என் விருப்பத்துக்கு தடை போடப் பட்டது. ம்ஹ்ம் வீட்டிலுருந்து வெளியே போக வழியில்லை பாலுக்கும் வழியில்லை.


அப்போதுதான் எனக்கு நந்தனாரும், தின்னனாரும் ஞாபகத்துக்கு வந்தனர் அவர்களை விட பக்தியில் குறைந்தவனா நான் என்ற எண்ணத்தோடு திட்டம் ஒன்றை தீட்டினேன். எனது மச்சானும் என்னோடு இந்த செயற்றிட்டத்தில் இணைந்துக் கொண்டான். பூஜையறை சென்று அங்கிருந்த சிறிய பிள்ளையார் சிலையை வெளியே கடத்திக் கொண்டு வந்தேன். வீட்டுக் கொல்லைப் புறத்திலே கம்புகளை ஊன்றி கோயில் போல் அமைத்து அதற்கு யூரியா உரப்பையினால் கூரை அமைத்தோம். உள்ளே களிமண்ணை குழைத்து மேடை போல் அமைத்து விட்டு அதில் விநாயகரை வைத்தோம். பிறகு கிடைத்த பூக்களை எல்லாம் பறித்து அவர் மேல் தூவி விட்டு "ஐந்து கரத்தனை ஆனை முகத்தினை" எல்லாம் பாடி விட்டு பார்த்தால் அவருக்கு கொடுக்க பால் இல்லை. பூஜையறையில் இருந்து விநாயகரை கடத்தியது போல் சமையலறையில் இருந்து பாலை கடத்துவது அவ்வளவு எளிதான ஒரு விடயமாய் இருக்க வில்லை. என்ன கொடுமை கடவுளே இது என்று நொந்தவன் பின் மெல்ல மனதை தேற்றிக் கொண்டு அடியேனின் அன்பை அறியாதவரா கடவுள் கொடுப்பதை மனமுவந்து ஏற்பார் என்ற நம்பிக்கையுடன் spoon ஒன்றை கொண்டு வந்து எங்கள் வீட்டில் toilet போகும் போது தண்ணீர் அள்ள பீப்பாய் ஒன்று வைத்திருந்தனர். அதிலிருந்து சிறிது தண்ணீர் அள்ளி பிள்ளையாருக்கு கொடுக்க என்ன ஆச்சரியம் ஒரு சொட்டு விடாமல் அவ்வளவையும் உறிஞ்சிக் குடித்தார் பிள்ளையார்.
அதிசயம் பார்க்க ஆசைப் பட்ட என் மச்சான் " பாவம் பிள்ளையாருக்கு ரொம்ப தாகம் போல" என கூறி பிள்ளையார் மேல் பலியை போட்டு விட்டு கக்கூஸ் தண்ணியை மேலும் அள்ளி அள்ளி பிள்ளையாருக்கு கொடுக்கத் துவங்கினான். அசூயை படாமல் பொறுமையாக அவ்வளவையும் குடித்தார் பிள்ளையார். சாமி காக்கூஷ் தண்ணி என சந்தேகம் கிளப்ப முற்பட்ட மச்சானை "போடா பிள்ளையார் அப்படித்தான் எளிமையானவர் சாணத்தில் பிடித்து வைத்தாலே அவர் வந்து விடுவார். கோமயம் எலாம் அவருக்கு பிடித்த அபிஷேகப் பொருள் பார்வதி குளிக்கும் போது தேய்த்ததில் உருவான ஊத்தை தானேடா அவர் அதான் ரொம்ப விரும்பிக் குடிக்கிறார் என அவன் வாயை அடைத்தேன்.

அன்று முழுவதும் எல்லையில்லா ஆனந்தத்துடன்தான் இருந்தேன். பிறவிப் பெருங்கடலை கடந்து விட்டதாயும் இறைவனுடன் விரைவிலேயே நான் இரண்டறக் கலக்கும் நாள் வரப் போவதாயும் எண்ணிக் கொண்டேன்.

அப்போதுதான் இடியென தாக்கும் அந்த செய்திக் கிடைத்தது. அதாவது சில விஞ்ஞானிகள் ஏதோ நிறமூட்டிய பாலை கொடுத்த போது பால் சிலையில் துளியாக இருந்ததைக் கொண்டு மயிர்துளைவிளைவு மற்றும் மேற்பரப்பு இழுவிசை என்பவற்றின் ஊடாக ஏதோ விளக்கமளித்து விட்டனராம். திரவ மூலக்கூறுகளை பிணைத்திருக்கும் மேற்பரப்பிழுவிசையினால்(surface tension) புவிஈர்ப்பினையும் மீறி பால் மேலேத் தள்ளப் பட அங்கிருந்து மயிர்த்துளை விளைவினால்(capillary action) பால் தொடர்ந்தும் உள்ளே செல்கின்றது என்பதே இவ்விளக்கமாகும்.

விண்வெளியில் புவியீர்ப்பு புறக்கணிக்கத் தக்க அளவில் தொழிற்படும் இடத்தில் திரவப் பானங்களை பருக மேற்படி மேற்பரப்பிழுவிசையை அவர்கள் பயன்படுத்த நாம் பிள்ளையாரைப் பால் குடிக்க வைக்க பயன் படுத்துகிறோம் இன்னதென்று தெரியாமலே.
தாவரங்களில் காழ் இழையம் வழியே தொடர்ச்சியாய் நீர் உட்செல்வதிலும்
(சாற்றேறம்) மேற்படி விடயங்கள் பங்களிக்கின்றன.

விடுவோம் விரைவிலேயே கண்களில் இரத்தம் வழிதல், வீபுதி, குங்குமம், தேன் வடிதல் போன்ற ஏதாவது செய்து பிள்ளையார் தன்னை நிருபிக்காமலா போகப் போகிறார்.

திங்கள், 13 ஏப்ரல், 2009

அயனுக்கு ஒரு ஞாயம் சிவாஜிக்கு ஒரு ஞாயமா?


கடந்து சென்ற பொங்கல் தினம், தியேட்டர் சென்று படம் பார்க்கும் வாய்ப்பு எல்லாம் இப்படி பண்டிகை விடுமுறைகளில்தான் கிடைக்கும். உடனே காலையிலேயே குளித்து உடுத்து நண்பர்களோடு ஒரு மணி நேரம் முன்னதாகவே தியேட்டர் சென்று இறங்கினால் வாசல் வரை நீளமான வரிசை. டிக்கட் கிடைக்குமென்ற நம்பிக்கை அற்றுப் போனாலும் கூடியிருந்த ஜனத்தை பார்த்து நம்பி மெல்ல அலுவலகத்தை அணுகி விசாரித்தேன்.

"இந்த காட்சிக்கான டிக்கட் எல்லாம் தீர்ந்து அனைவரும் திடேருக்குள் அனுமதிக்கப் பட்டும் விட்டனர்" என புன்னகை மாறாமல் சொன்னார்.

"அடப் பாவிகளா அப்ப எதுக்குடா நிக்கறீங்க " என்ற எண்ணத்தோடு ஒருவரை அணுகி

" அண்ணே house full ஆம்" என்றேன்.

" தெரியும் தம்பி நாங்க நிக்கிறது அடுத்த காட்சிக்கு " என்றார்.

அத்தனை பொறுமையும் அவசியமும் இல்லாத காரணத்தால் நான் நண்பர்களோடு வீடு திரும்பினேன். பின் DVD யில் படம் பார்த்த போது கிரேட் எஸ்கேப் என நினைத்து கொண்டது தனிக் கதை ஆர்வமுள்ளவர்கள் பொங்கல் ரீலிஸ், தப்பித்த உணர்வு என்பவற்றை வைத்து என்னப் படம் எனக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.

ஏலவே பெற்ற மேற்படி அனுபவத்தால் இன்று காலையிலேயே படம் பார்க்கப் போனால் ம்ம் அங்கு ஈ காக்காய் கூட இல்லை. படம் ஆரம்பித்த போது மொத்தமே ஒரு 40 பேர் அதிலும் அந்த corner seat ஜோடி படம் பார்க்க வந்ததா எனத் தெரியவில்லை.

அயன் ஏதேனும் விழுமியத்தைக் கற்றுத் தரும் படமோ, அல்லது மனித வாழ்வின் பல பக்கங்களை யதார்த்தம் மாறாது பதிவு செய்த படமோ, இல்லை ஏதேனும் நவீன முறையிலான இலக்கியம் சினிமாவில் பரீட்சிக்கப் பட்டப் படமோ அல்ல. மேற்படி விடயங்களை சிவஜியிலோ குசேலனிலோ தேடிப் பார்த்து நொந்து அதையிட்டு பதிவிட்ட நெஞ்சங்கள் இதையும் பார்க்காமலிருப்பது நலம்.

படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை சரம் சரமாய் sorry ரீல் ரீலாய் பூ சுற்றுகிறார்கள். ஆனால் வாசனையுடன். இது வரை சொல்லப்படாத கதை இல்லை. ஆனால் சொல்லப் பட்ட விதம் சொல்லப்பட்ட களம் புதுசு.
என்னை கேட்டால் இன்றைய தமிழ் சினிமாவின் no 1 நடிகர் அஜித்தோ விஜயோ இல்லை சூர்யாதான். ஹரி,கௌதம், K.V.ஆனந்த் என முற்றாய் வேறுப்பட்ட இயக்குனர்களின் படங்களில் இவரால் தன்னைப் பொருத்திக் கொள்ள முடிகிறது.
தமன்னா நடிப்பே வரவில்லை பரவாயில்லை பார்த்துக் கொண்டாவது இருக்கலாம்.
பிரபு குறை சொல்ல முடியாத நடிப்பு.

K.V. ஆனந்த், சூர்யாவுக்குப் பிறகு படத்தின் ஹீரோ ஒளிப்பதிவாளர் M.S. பிரபுதான் குறிப்பாக கொங்கோ காட்சிகள்.

அப்புறம் சின்ன வயதிற்குப் பிறகு சண்டைக் காட்சிகளை ரசித்துப் பார்த்தது இந்தப் படத்தில்தான் அதுவும் கொங்கோ chasing காட்சிகள் jackieயின் first strike ஐ ஞாபகப் படுத்தியது. stunt master பெயர் பார்க்கவில்லை தெரிந்தோர் சொல்லுங்கள்.

நிறையப் பேர் படம் catch me if you can போல் இருப்பதை சொன்னார்கள். எனக்கேதோ அப்படித் தெரியவில்லை. பொன்வன்ணனை tom hanks ஓடும் சூர்யாவை leanardo de caprio வுடனும் ஒப்பிட்டாலும் இதில் அதைப் போல் இருவருக்கிடையிலான ஆடு புலி ஆட்டம் அத்தனை சுவாரசியம் இல்லை. ஒன்று catch me if you can இல் போலவே துரத்துபவரும் துரத்தப் படுபவரும் இறுதியில் ஒன்று சேர்கிறார்கள்.

music வழமையான ஹாரிஸ் வந்த புதிதில் முனுமுனுப்பதும் பின் மறந்து போவதும் அவரது பாடல்களுக்கு உள்ள இயல்பு. A.R.R போல நீண்ட நாட்களுக்குப் பின் அட இது நல்லா இருக்கே என சிலாகிக்கக் கூடிய வகையில் அவர் இன்னும் பாடல்கள் தரவில்லை. இந்த படத்தில் முமுனுக்க வைத்தது கூட "விழி மூடி யோசித்தால்" தான்.

நண்பனொருவன் சொன்னான். " ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை இந்த வருஷம் ஏதாவது நல்லப்படம் வந்துச்சா அதான் படம் நல்லது போல இருக்கு பெரிய விசேடமில்லை".உண்மையாகவும் இருக்கலாம்.

அனைவரும் ரசிக்கும் விதமாய் படம் எடுக்கிறோம் என்று கூறும் மசாலா பட இயக்குனர்களுக்கு நீங்கள் எடுக்கும் மசாலாவை இப்படியும் எடுக்கலாமே பார்க்கலாம்.

அப்புறம் இந்தப்படம் பார்த்தப் போது பதிவுகள் தொடர்பில் தோன்றியது குருவி,வில்லு,ஏகன் எல்லாம் போலல்லாது கிட்டத்தட்ட இது போல என்னைக் கேட்டால் இதை விட better ஆகவே இருந்த படம்தான் சிவாஜி ஆனால் அந்தப் படத்தின் மேல் மட்டும் ஏன் இத்தனை காட்டம்.

வெள்ளி, 10 ஏப்ரல், 2009

நானும் என் தேவதையும்


தன் காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்தாய் கவிதை என்ற பெயரில் எழுதிய நான்கைந்து வரிகளுக்குள் அடக்கப்பட்ட சில அலங்காரமான வார்த்தைகள் அவ்வளவே

நித்திரையைக் குழப்பிச் செல்லும்
குருவிகளின் பேரிரைச்சல்
இன்று மட்டும் ஏன்
இத்தனை இனிமையாய்

திரை விலக்கி வானும்
கைகளை நீட்டியது
பேரிரைச்சலுடன்
உனக்கு வாழ்த்து சொல்ல

அகராதியில் உன் பெயரை
சேர்த்தால் என்ன
ஒளிவட்டமும் சிறகுகளும்
அற்ற தேவதை என

உன் ஊரில் பெண்கள்
அத்தனை அழகில்லையாம்
பாவம் உன்னோடு
ஒப்பிடப்பட்டதாலே
இந்த அவப்பெயர்

அழகுக்கும் அறிவுக்கும்
எப்போதும் எட்டாப்பொருத்தமாம்
சொன்னவனை திட்டவில்லை
பாவம் அவன் உன்னை
அறிந்திருக்க வில்லை

அதிகமானோர் காதலித்தனராம்
பேரழகியர் பெயர்
சொன்னார்கள் ஆனால்
அதிகமாய்
காதலிக்கப்பட்டவள் நீ
ஒருவனாலேனும்

பிரிவில்தான் அருமை
தெரியுமாம்
அதிகமாகவே உணர்கிறேன்
உன் அருமையை

அருமையிலும் அருமையானவளே
வாழ்த்துக்கள்
அடுத்த முறை காற்றிலேனும்
கலந்து விடுகிறேன்
என் காதல் கலந்த
வாழ்த்துக்களை

திங்கள், 6 ஏப்ரல், 2009

சிம்ரன் குளித்ததைப் பார்த்தவர் யார்


நிச்சயம் நீங்கள் எதிர்ப்பார்த்து வரும் சுவாரசியம் இங்கு கிடைக்காது நேரத்தை விரயஞ் செய்ய விரும்பாதோர் ஏதாவது உருப்படியாகச் செய்யலாம்.

நம்மவர் திரைப்படத்தில் ஒரு காட்சி வகுப்பறைக்கு வரும் கமல் பாடத்தை துவங்காமல் ஒரு சினிமா பாடலின் முதல் வரியை பாடுவார். உடனே மாணவர்கள் எல்லாம் அடுத்த வரியைப் பாடும் போது இது சினிமாவில் உங்களுக்கு பிடித்த ஊடகத்தில் வந்ததால் ஞாபகம் வைத்துள்ளீர்கள். அதுபோல உங்களுக்கு பிடித்தாற் போல் கற்பித்தல் என் கடமை என்று சொல்வார்.
இப்படித்தான் மாணவர்களுக்கு science ஐ எப்படி இலகுவாக கொடுக்கலாம் என யோசித்த போது ஏலவே நடைமுறையில் உள்ள சில நுட்பங்கள் ஞாபகம் வந்தது. படித்து பாருங்கள் உங்களுக்கு தெரிந்து ஏதும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் பயன் படுத்திக் கொள்கிறேன்.



9 கோள்களையும் (இப்போது எட்டு) ஞாபகம் வைக்க ஒரு எளிய முறை
My very educated mother just show us nine planets இதில் ஒவ்வொரு சொல்லினதும் முதலெளுத்தைப் பார்த்தால்
M- Mercury, V-Venus, E-Earth, M-Mars, J-Jupiter, S-Saturn, U- Uranus, N-Neptune, P-Pluto



ஆவர்த்தன அட்டவணை எல்லோருக்கும் தெரியும் அதை மனனம் செய்ய மாணவர் மத்தியில் புழங்கும் ஒரு வார்த்தை விளையாட்டு
முதல் இருபது மூலகங்களை(elements) மனனம் செய்ய பயன்படுகிறது.
Hello hero little Baby bens car number O five Neeyum Naanum MGR Alla Sivaji Pathmini Saroja குளித்ததை Aru kanaala கண்டது
H- Hydrogen, H-helium, L-lithium, B-Boron, Be- Beryllium, C-carbon, F-Florin, Ne-Neon, Na- Sodium( Natrium) ,Mg-Magnesium , Al- Aluminium, Si- Silicon, P-phosphorus, S-sulphur, கு-குளோரின், Ar-Argon, K- potassium, க- கல்சியம்
சிவாஜி, MGR, பத்மினி, சரோஜா எனப் பெயர்களை பார்த்தால் இது ரொம்பப் பழசு போல் தெரிகிறது. சிவாஜி குளிப்பதில் அத்தனை சுவாரசியம் இல்லாததால் அதை சிம்ரன் என மாற்றலாம் என நினைக்கிறேன். (அப்பாடா தலைப்பையும் பதிவையும் தொடர்பு படுத்தியாச்சு)



இன்னுமொன்று தடையி(resistor) ஒன்றினது தடைப் பெறுமானத்தைக் காண அதிலுள்ள நிற வளையங்களைப் பயன் படுத்த வேண்டும். அந்நிற வளையங்களுக்கு உரிய பெறுமானத்தை பின்வரும் முறையில் ஞாபகம் கொள்ளலாம்.
B.B. ROY of Great Britain had a Very Good Wife
இங்கு முதலாவது B க்கு 0 என ஆரம்பித்து தொடர்ச்சியாக அதன் பெறுமானங்கள் கூடி wife இல் வரும் w க்கு 9 என முடியும். குறித்த பெறுமானத்துக்குரிய வளையத்தின் நிறம் அதற்குரிய எழுத்தினால் காட்டப்பட்டுள்ளது.



ஒளிக்கதிர் ஐதான ஊடகத்திலிருந்து அடர்ந்த ஊடகத்தை நோக்கிப் போகையில் செவ்வனை நோக்கி முறியும் என்பதை " ஐயோ அடிக்காதே நோகுது" என ஞாபகம் கொள்ளலாம்.



வானவில்லின் ஏழு நிறங்களுடன் தொடர்புப் பட்ட VIBGYOR அனைவரும் அறிந்தது. தமிழில் இப்படியும் சொல்லலாம் " ஊத்தைக் கந்தையா நீ பச்சை மரத்தடியில் செக்கச் சிவப்பாய்" முதல் எழுத்துக்களை கவனியுங்கள்.

மூலகங்களின் தாக்க வீதம் கூடிச் செல்லும் ஒழுங்கை காணும் முறை 1950 களின் இலங்கை அரசியல் நிலவரத்தை மையமாகக் கொண்டது.
" பொன்னார் பிளான் வெறும் பாதகச் செயல் ஐயா ஈழத் தமிழர் இலங்கை நாட்டில் அல்லலுறும் மக்கள் சோகத்தால் கண்ணீரைப் பொழிந்தனர்"
முதல் எழுத்துகளின் படி
மூலகங்களாவன பொன்,பிளாட்டினம்,வெள்ளி,பாதரசம்,செப்பு,ஐதரசன்,Pb,இரும்பு,நாகம்,அலுமினியம்,மக்னீசியம்,சோடியம்,கல்சியம்,பொட்டாசியம்
இது முற்றிலும் சரியானதாக இப்போது தோன்றவில்லை ஆனால் சில மாற்றங்களுடன் பயன்படுத்தலாம்.

நேரத்தை தின்றிருந்தால் மன்னியுங்கள்
எதற்கும் திட்டியேனும் ஒரு பின்னூட்டமும் தமிழ்மணம் தமிழிஷ் இல் வோட்டும் போட்டுடுங்க.

வியாழன், 2 ஏப்ரல், 2009

சின்னதொரு செய்தியும் சிரிக்க ஒரு ஜோக்கும்


உயிரினங்கள் வாழக் கூடிய இடம் எனக் கருதப் பட்ட ஒரே இடமான பூமி இன்னும் சில ஆயிரம் வருடங்களில் அத்தகுதியை இழந்து விடும் அபாயம் தோன்றியிருப்பதால் உயிர் வாழ்க்கைக்கு ஏற்ற இன்னுமொரு இடத்தைக் கண்டு பிடிக்கும் நோக்கிலான ஆய்வுகள் நீண்ட காலமாகவே நடைப்பெற்று வருகின்றன. அதிலும் அதிகம் பேரின் கவனத்தை ஈர்த்தது செவ்வாய் கிரகமே.

அவ்வகையில் Russian academy of science இன் ஏற்ப்பாட்டில் Mars 500 என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் தற்போது முக்கியமான கட்டத்தை அண்மித்துள்ளது. இதற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு தொண்டர்களின் பங்கேற்கையுடனான பயிற்சிகள் ஆரம்பமாகி உள்ளன.

இதில் ஒரு முடிவு தெரிந்த பின் நம் கவிஞர்கள் செவ்வாயை இம்சிக்காமல் விட்டு விடுவார்கள் என நினைக்கிறேன். செவ்வாய்க்கே மனிதன் போகும் நாள் வந்த பின்னும் இன்னமும் நம்மவர்கள் செவ்வாய் தோஷம் அது இது என பார்த்துக் கொண்டுதான் இருக்கப் பார்க்கிறார்கள்.

இத்தகவலை டிவி யில் பார்த்த போது சில நாட்களுக்கு முன் படித்த ஒரு Joke ஞாபகம் வந்தது.

சந்திரனில் மனிதன் வாழும் சாதகமான சூழ்நிலைகளை அடுத்து ஒவ்வோர் நாட்டவரையும் கொண்டு சென்று அங்கு குடி வைத்தனராம்.
முதலில் வழமை போல் அமெரிக்கா,
அடுத்து சீனா துரிதமான முன்னேற்றம் அங்கும் இருக்கும் என்று,
பிறகு ரொம்பப் பெரிய ஜனநாயக நாடு என இந்தியா
போனால் போகுதென்று இலங்கை
அவர்களுக்கேற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுத்து விட்டு அப்பீட்டானவர்கள் பத்து வருடம் கழித்து சென்று பார்த்தால்
அமெரிக்கரின் பகுதி பெரிய twin tower எல்லாம் கட்டி படு சோக்காய் இருந்தனர்.
சீனர் இன்னும் ஒரு படி மேலே சென்று ஏகப்பட்ட factoryக்கள் என கலக்கத் துவங்கினர். அவர்களின் அதிகப்படியான ஆர்வக்கோளாறு சந்திரனையே கருப்பாக்கி இன்னொரு சந்திரன் கண்டுப்பிடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது.
இந்தியர்கள் இருக்கும் பகுதி ஜனநாயகவாதிகள் இல்லையா அது தேர்தல் காலம் போலும் தோரணங்களும் மேடைகளும் அப்பப்பா பட்டைய கிளப்பிக் கொண்டிருந்தனர்.
ஒரு ஓரமாய் இருந்த பேனரில் " அகில பிரபஞ்ச டாக்டர் விஜய் ரசிகர் மன்றம் சந்திரக் கிளை" என்ற வரிகளை பார்த்து சிரித்தவாறே மற்ற பக்கம் திரும்பினால் எலுமபும் தோலுமாய் ஒரு கும்பல் அட நாம இங்க எதியோப்பியா சோமாலியா காரனை கூட்டிக் கொண்டே வரவில்லையே எனக் கண்ணைக் கசக்கிக் கொண்டுப் பார்த்தால் அட நம்ம இலங்கையன்.

உடனே அவனை நெருங்கி விசாரிக்க பதட்டப்படாமல் சொன்னான்
" Every day poya day(பூரனைத் தினம்) How can I work?
இலங்கையில் பௌர்ணமித் தினம் விடுமுறை நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Posts with Thumbnails