திங்கள், 16 நவம்பர், 2009

பா இளையராஜா இசையும் இத்தாலியில் மாலினிக்கு விருதும்

"பா" ஹிந்தி திரைப்படத்தின் பாடல்கள் வெளிவந்துருக்கின்றன. இந்த மனுஷனுக்கு ஏன் இன்னும் ஹிந்தி திரையுலகில் சரியான break அமையவில்லை என அமிதாப் இளையராஜாவை சிலாகித்ததாய் அறிந்தேன். இளையராஜாவின் பின்னணி இசையின்றி படம் பார்த்த போது ஜீவனின்றி இருந்ததாம். அமிதாப்புக்கு இப்போதுதான் தெரிந்திருக்கிறது 1980 களில் இருந்தே தமிழர்கள் அறிந்து வைத்திருப்பது. ஏற்கனவே இதே பால்கியின் இயக்கத்தில் அமிதாப் நடித்து வெளிவந்த சீனிகம் படத்தில் குழலூதும் கண்ணனுக்கு, மன்றம் வந்த தென்றலுக்கு பாடல்களின் மெட்டை பயன்படுத்திய ராஜா இதிலே எனக்கும் ரொம்பவும் பிடித்த "சங்கத்தில் பாடாத கவிதை " பாடலின் மெட்டை பயன்படுத்தியிருக்கிறார். நான் கேப்டனின் காட்சிகளை பார்க்க பயந்து கேட்க மாத்திரமே செய்த பாடல்.
ஹிச்சய்கி ஹிச்சய்கி, ஹல்கே சோ போலே பாடல்களை கேட்ட போதும் எங்கேயோ கேட்ட உணர்வு.
அமிதாப் நன்றாக நடிப்பார் இங்கே அவரது குரலும் நடிக்கிறது மேரே பா பாடலில்.

கிட்டத்தட்ட பிரட் பிட்டின் The curious case of benjamin button ஐ படம் ஒத்திருக்கும் என நினைக்கிறேன். ஆனால் அது போல வாழ்க்கை பின்னோக்கி நகரும் ஒருவனின் கதையாக அல்லாமல் முதிர்ந்த தோற்றம் கொண்ட சிறுவன் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை மையமாக கொண்டதாக.

நாம் ரசித்து என்ன செய்ய இங்கே ஒருவர் அமிதாப்பச்சனின் நடிப்பையே தரம் தாழ்த்திய இசையை இளையராஜா வழங்கியதாக விமர்சனம் எழுதி நமக்குத்தான் ரசனை போதவில்லையோ என்ற உணர்வை ஏற்படுத்தி விடுவார். என்ன செய்ய அவரே சொல்வது போல போதை தரும் அந்த எழுத்துக்களுக்கு சொந்தக்காரரை வாசிக்காமலும் இருக்கமுடியவில்லை.

பாட்டு இங்கே போய் கேட்கலாம்

மாலினி சிவாஜியோடு
நம்மூர் மாலினி பொன்சேகாவுக்கு, இத்தாலியின் (நமக்கு இத்தாலி என்றவுடன் ஞாபகம் வருவது முசோலினியும் இன்னொரு பாசிஸ்ட் பெண்மணியும்தான்) Levante international film festival இல் அவர் நடித்த ஆகாச குசும் (ஆகாய பூக்கள்) படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றிருக்கின்றார். ஜோ அபேவிக்கிரம, நீட்டா பெர்னாண்டோ வரிசையில் இவரும் சேர்கிறார். சிங்கள சினிமாவின் ராணி என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் இவர் சிவாஜி ஜோடியாக பைலட் பிரேம்நாத் படத்தில் நடித்திருக்கிறார்.

இது சிவாஜியோடு நடித்த போதல்ல தற்போதைய படம்

சிங்கள் சினிமாவின் மீது எனக்கு எப்போதும் ஒரு வியப்புண்டு லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் ஆரம்பித்து வைத்த விருதுக்கான படங்களை எடுக்கும் மரபு இன்னமும் தொடர்வது ஆச்சரியமானது. அதிலும் மேற்கண்ட படத்தை எடுத்த பிரசன்னா விதானகே இலங்கையின் மணிரத்னம் என அறியப்படுபவர் ( என்னைக் கேட்டால் அவரை விட மேல்) . இலங்கை போன்ற ஒரு நாட்டில் இருந்துகொண்டே இராணுவத்தையும் அரசையும் விமர்சித்த இவரது புரசந்த களுவர (பௌர்ணமி இரவு) ஒரு முக்கிய படைப்பு. பின்னணி இசை கூட இல்லாமலே பார்வையாளனை காட்சிகளுக்குள் உள்ளீர்த்துக் கொள்ளக்கூடிய காட்சியமைப்புகள் இப்படத்தின் சிறப்பம்சம்.

அசோகா ஹந்தகம, விமுக்தி ஜெயசுந்தர போன்றோரின் படைப்புகள் கூட முக்கியத்துவம் மிக்கதே.
ஏனோ தமிழக சினிமா விமர்சகர்கள் சிங்கள படங்களை அவ்வளவாக கண்டுகொள்வதில்லை. அவர்கள் அதிகம் பார்ப்பதும் எழுதுவதும் ஈரானிய மற்றும் கொரியப் படங்களைப் பற்றித்தான். அதுவும் விமுக்தியின் சுலங்க எனு பினிஸ்ஸ (காற்று வருவதற்காக) போன்ற ஒரு படம் தமிழில் வருவதற்கும் அதை நம் கலாச்சாரக் காவலர்கள் ஜீரணிப்பதற்கும் இன்னும் பல வருடங்கள் தேவைப்படும். சாருவுக்கு படம் பிடிக்கலாம் பார்த்தாரெனில்.

மேலே நான் சொன்ன இயக்குனர்கள் எல்லாம் கோடிகளில் சம்பளம் வாங்குபவர்கள் அல்ல. தமிழருக்காக மேடைகளில் வாய் கிழிய பேசும் படைப்பாளிகள் தமது படைப்புகளில் மேலே கூறியவர்கள் செய்ததில் சிறிதளவாவது செய்திருக்கிரார்களா ?

3 கருத்துகள்:

ஸ்ரீ.கிருஷ்ணா சொன்னது…

nice post..sir

தர்ஷன் சொன்னது…

நன்றி கிருஷ்ணா

PPattian சொன்னது…

நல்லா எழுதுறீங்க தர்ஷன். இதுதான் உங்கள் பதிவுக்கு முதல் முறை.

//மேலே நான் சொன்ன இயக்குனர்கள் எல்லாம் கோடிகளில் சம்பளம் வாங்குபவர்கள் அல்ல. தமிழருக்காக மேடைகளில் வாய் கிழிய பேசும் படைப்பாளிகள் தமது படைப்புகளில் மேலே கூறியவர்கள் செய்ததில் சிறிதளவாவது செய்திருக்கிரார்களா //

இது எதார்த்தம்.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails