புதன், 18 நவம்பர், 2009

பேராண்மை என் பார்வையில்

இயக்குனர் S.P. ஜனநாதன் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர். உலகின் மிகச் சிறந்த காதல் கதை என அறியப்படும் Fyodor Dostoyevsky இன் White nights ஐ தழுவி இவர் இயக்கிய இயற்கை அந்த வருடத்திற்கான சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதைப்பெற்றது.

அடுத்து ஈ திரைப்படத்தில் அதுவரை எவரும் தொட்டிராத மூன்றாம் உலக நாடுகளை தமது உயிரியல் ஆயுதங்களை பரீட்சிக்கும் களமாக பயன்படுத்தும் வல்லரசுகளின் சதியையும் அதற்கு துணைபோகும் உள்நாட்டு பூர்ஷ்வாக்களைப பற்றியும் படமாக்கி இருந்தார். அதோடு இணைந்ததாக சேரி மக்களின் வாழ்க்கையும் கூடவே தீவிரவாதிகளாகவே அறியப்படும் நக்சல்களின் போராட்ட குணத்தையும் கூட காட்டி இருந்தார்.

தற்போது வெளியாகி நேரும் மறையுமான இருவகை விமர்சனங்களையும் எதிர்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் ஜனாவின் புதிய படைப்புத்தான் பேராண்மை. வழமையாகவே தமிழ் சினிமாவில் காணப்படும் தர்க்கானுபூர்வமாய் ஏற்கவியலாத பல குறைபாடுகள் இந்த படத்திலும் உண்டு. எனினும் படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதி வரை ஒரு Encyclopedia போல சொல்லும் விடயங்கள் ஏராளம். முதற்பாதியில் சற்றே பிரச்சார தொனி எட்டிப் பார்த்தாலும் பிற்பாதி விறு விறுப்பாய் நகர்வது என்னவோ உண்மை.

மலைவாழ் பழங்குடி இனத்தை சேர்ந்த துருவன் காட்டிலாகா அதிகாரியாய் பணிபுரிகிறான். அங்கே N.C.C பயிற்சிக்கு வரும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பேற்கும் துருவன் அதில் குறிப்பிடட்ட 5 பெண்களாலும் தனது உயரதிகாரி கணபதி ராமாலும் தனது சாதி குறித்தான இழிவசைகளை அவ்வப்போது எதிர்கொள்கிறான். சரியாக கீழ்ப்படிந்து தமது பயிற்சியை நிறைவு செய்யாமையை காரணம் காட்டி அந்த 5 இளம்பெண்களையும் மேலதிகப் பயிற்சிக்கு காட்டுக்குள் அழைத்துச் செல்லும் துருவன் அங்கே அந்நியச் சக்திகளால் நாட்டுக்கு ஏற்படவிருக்கும் அனர்த்தத்தை அறிந்து அதைஅந்த பெண்களின் உதவியோடு தவிர்ப்பதே கதை.

சாதி அடிப்படையிலான புறக்கணிப்புகளை ஏதோ கிராமத்து பெருசுகள் செய்வதாகவே இதுவரை படங்களில் காட்டப்பட்டுள்ளது. இங்கோ எனது students நானே பரிமாறுகிறேன் என ஜெயம் ரவி தரும் வடையை ஒரு பெண் தூக்கிப் போடுவதும், துப்பாக்கிப் பிடிக்க கற்றுத் தருகையில் அசூயையுடன் விலகுவதுமான காட்சிகளில் இளம் பெண்களிலும் வேரூன்றியுள்ள சாதிய வேறுபாடுகளின் தாக்கம் புரிகிறது. ஒருவரோடு பழக முன் அவர்களின் சாதியை பிறிதொருவர் மூலம் விசாரிப்பதும் இன்னுமொருவரின் சாதியை அபிநயங்களின் மூலம் குறிப்பாய் சொல்லி நக்கல் செய்வதுமான பழக்கம் கொண்ட இளம்பெண்களை நானும் சந்தித்திருக்கிறேன்.

படத்தில் வரும் பெண்கள் உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அதைக் காட்டுவதற்கோ என்னவோ அவர்கள் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாகவும் சகஜமாய் தமக்குள்ள A ரக பகிடிகளை பகிர்ந்து கொள்பவர்களாகவும் உள்ளனர். மாடு கன்று ஈன்றதும் சுற்றியிருந்து Happy Birthday to you பாடுவதை இளமைக்கே உரிய குறும்பு என ரசிக்க முடிந்தாலும் அதன் பின் சக தோழியின் உள்ளாடையை உருவுவது, மெதுவடை நல்லா இருக்குமாம் என சொல்லி சிரிப்பது, sir gear போடுங்க நீ போட்டுறாத என்பது, பாம்பு பார்க்கவில்லை என ஏங்குவது இதையெல்லாம் எதில் சேர்ப்பது எனத் தெரியவில்லை. ஒரே வார்த்தையில் சொல்வதாயிருந்தால் திருஷ்டி. அப்படிப் பட்ட பெண்களிடம் போய் ரவி உபரி மதிப்பு பற்றி பாடம் எடுக்கிறார். பொருளாதார அரசியல் கற்பதன் அவசியம் குறித்து சொல்கிறார்.

பல தகவல்களை படம் போகிற போக்கில் சொல்லிப் போகிறது. விவசாய நிலத்தை சேதப்படுத்த அந்நியர்களால் பரப்பப்பட்ட சீமைக்கருவேலமரங்கள், சிறுத்தையின் காலடித்தடம், யானையின் சாணம் ஆகியவற்றைக் கொண்டு தகவலறியும் Discovery, National Geographic channel வகையறா Wild life தகவல்கள் என.

உழைக்கும் வர்க்க சர்வாதிகாரம் வந்தே தீரும் என்கிறார் ஒருவர். இது ஜனாவின் ஆதங்கம் எனப் புரிகிறது ஆனால் க்யூபாவே கொஞ்சம் தாராளம் காட்ட முற்பட்டிருக்கும் வேளையில் இது கொஞ்சம் அதிகப்படியான ஆசைதான்.
போராடப் போகையில் தமிழரின் போராட்டத்தை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது என்கிறார் ரவி. படம் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்ததால் வந்து விட்டது என நினைக்கிறேன்.

படத்தில் நான் சார்ந்த்த மலையகத் தமிழரின் வாழ்வியலையும் இழிநிலையையும் ஒரு சில காட்சிகள் எனக்கு ஞாபகமூட்டின. சிறுவனுக்கு இரவில் பாடமெடுக்கும் போது பச்சை தேயிலை விலைக் குறித்துக் கேட்பதும், தமது நிலத்தில் விளைந்தவற்றை மற்றவர்களுக்கு கொடுத்து சந்தோஷப்படுவதும், பொன்வண்ணன் அவர்களின் பாடப்புத்தகங்களை பார்த்து இதெல்லாம் படிக்கிறானுங்க எனப் பொருமுவதும் அவ்வாறனவற்றில் சில.
அதே படத்தின் பாடல் வரிதான் ஞாபகம் வருகிறது

" தேயிலையும் மரமாகும் அதை வளர்ப்பதில்லை
சிகரத்தில் இருந்தாலும் நாம வளர்வதில்ல"

படத்தில் ஆயுதங்களை அனாயாசமாக பெண்கள் மற்றும் ஜெயம்ரவி கையாளுவது தொடர்பில் ஏற்க சங்கடங்கள் இருந்தாலும் படத்தின் வர்த்தக நோக்கம் கருதியதான அவ்வாறன காட்சிகளை ஜனநாதன் படத்தில் சொல்லிய மற்றைய கருத்துக்களுக்காக மன்னிக்கலாம் என நினைக்கிறேன். ஒன்றுமே செய்யாமல் இருப்பதை விட சினிமா முதலாளிகளை சமாளித்து அவர்கள் தேவையை பூர்த்தி செய்தவாறே தான் சொல்ல வந்த கருத்துக்களில் ஓரளவேனும் சொல்லியது சாதனையல்லவா. தணிக்கை குழு வெட்டியிராத வசனங்கள் இருந்திருப்பின் படம் இன்னும் வீரியமானதாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

படத்தில் தேவையே இல்லாத விடயங்கள் ஏன் என்று விளங்கவேயில்லை.

வடிவேலுவின் நகைச்சுவைப் பகுதி

பெண்கள் திடீரென உணர்ச்சி பெற்று கண்ணனுக்கு மையெல்லாம் இட்டு காளி,துர்க்கை என அகோரமாய் வில்லன்களோடு சண்டையிடுவது.

இறந்த பெண்ணை அடக்கம் செய்யும் போது கந்த சஷ்டி கவசம் ஒலிப்பது.

இருந்தாலும் கொஞ்சம் நிறையவே குறை இருந்தாலும் நிறைவானப் படம்.

6 கருத்துகள்:

யோ வொய்ஸ் (யோகா) சொன்னது…

////தணிக்கை குழு வெட்டியிராத வசனங்கள் இருந்திருப்பின் படம் இன்னும் வீரியமானதாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்/////

நானும் இதைதான் நினைக்கிறேன்,

ஆனாலும் மற்றைய உழுத்துப்போன வடை மாதிரியான படங்களுக்கு மத்தியில் இந்தப்படம் மிகவும் அருமையானதொன்றாகவே எனக்கு படுகிறது.

Karthikeyan G சொன்னது…

You have a intresting style of writing.. pls continue..

தர்ஷன் சொன்னது…

நன்றி யோ வாய்ஸ்

நன்றி கார்த்திகேயன்

Admin சொன்னது…

நான் இன்னும் படம் பார்க்கவில்லை விமர்சனங்களை பார்க்கும்போது படம் பார்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுகின்றது பார்ப்போம்.படம் பார்க்காமல் நான் கருத்து சொல்வது தவறானது

Unknown சொன்னது…

படம் நல்ல படம்...
இன்னும் சொல்லப் போனால் போனால் அழகான படம்...
கொஞ்ச நேருடலான இரட்டை அர்த்த வசனங்கள் தான் படத்தின் பலவீனம்... (சில இடங்களில் அதுவே பலமாகவும் மாறியிருக்கலாம்.)

கொஞ்சம் சினிமாத்தனம் இருந்தாலும் ஜெயம் ரவியின் உடலசைவுகளும் கண்களில் தெரிகிற அந்த கோபமும், பெண்கள் அவமானப்படுத்தும் போது காட்டும் முகபாவனையும் படத்தின் தூண்கள்...

கட்டாயம் பார்க்க வேண்டிய வகைப்பட்மென்று நான் சொல்வேன்....

தர்ஷன் சொன்னது…

//சந்ரு said...

நான் இன்னும் படம் பார்க்கவில்லை விமர்சனங்களை பார்க்கும்போது படம் பார்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுகின்றது பார்ப்போம்.படம் பார்க்காமல் நான் கருத்து சொல்வது தவறானது //

நன்றி சந்துரு
படம் பாருங்கள் கட்டாயம் உங்களுக்குப் பிடிக்கும்

//கனககோபி said...
கொஞ்சம் சினிமாத்தனம் இருந்தாலும் ஜெயம் ரவியின் உடலசைவுகளும் கண்களில் தெரிகிற அந்த கோபமும், பெண்கள் அவமானப்படுத்தும் போது காட்டும் முகபாவனையும் படத்தின் தூண்கள்...//

நன்றி கனககோபி
ஜெயம் ரவியின் நடிப்பும் பாராட்டப் பட வேண்டிய ஒன்றே அவர் வாழ்க்கையில் நிச்சயம் இது ஒரு முக்கியமான படம்

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails