

ஹாலிவுட் நடிகர்கள் எனும் போது நமக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த ரசிகர்களில் ஒரு சாரார் சீன் கானரி யை சிலாகிக்கும் அதேவேளை நடிப்பில் இவர்களை விஞ்ச யாருமில்லை என மார்லன் பிராண்டோ,ராபர்ட் டீ நீரோ, அல்பசினோ ஆகியோரைப் போற்றும் பிறிதொரு கூட்டத்தினரும் இருப்பார். மேற்சொன்ன ஒருவருக்கும் சற்றும் குறையாத நடிகர்களில் ஒருவராகவே நான் டோம் ஹான்க்சை காண்கிறேன். மேற்சொன்னவர்களின் பெரும்பாலான படங்களை நான் பார்த்ததில்லை. படத்தில் பாத்திரமாகவே மாறி விட்டார் என்று சொல்வதன் முழுமையான அர்த்தம் எனக்கு அப்போதுதான் புரிந்தது. இத்திரைப்படம் வெளிவந்த அதே வருடத்தில்தான் The shawshank redemption,Pulp fiction போன்ற படங்கள் வெளிவந்தது. இம்மூன்று படங்களில் எனக்குப் பிடித்த படம் The shawshank redemption. Pulp fiction முதற்றடவை புரியவில்லை. அண்மையில் பார்த்த போதும் அந்த கதை சொன்ன உத்தி அடடா என்ற பரவசத்தை படம் பார்த்து முடிந்த அந்தக்கணத்தில் ஏற்படுத்தியதே தவிர மனதை எல்லாம் தொடவில்லை. சில நேரம் எனது ரசனையின் போதாமையால் இருக்கலாம். எனினும் அம்மூன்று படங்களிலும் நடிப்பில் கவர்ந்தவர் Tom hanks தான். சின்ன சின்ன அசைவுகளிலே ஒரு அபார நடிப்பை அவர் வழங்கியிருந்தார்.பொருத்தமாக அந்த வருடத்திற்கான அகாடமி விருதும் அவருக்கே தரப்பட்டதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

படத்தின் கதை நிகழ்வதாக காட்டப்படும் காலத்தில் நிகழ்ந்த முக்கியத்துவமிக்க சில சம்பவங்கள் படத்தின் கதையோட்டத்தில் வந்து செல்வது சிறப்பாக இருக்கும். சிறு வயதில் Forrest இன் வீட்டுக்கு வரும் விருந்தினர் எல்விஸ் ப்ரெஸ்லி ஆக இருப்பார். பின்னாளில் தாம் வாழும் காலக்கட்டங்களில் பதவியில் இருந்த அதிபர்களை எதேச்சையாக சந்திப்பார். அமெரிக்கா வியட்நாம் போரில் ஈடுபடுவதும் பின் போருக்கு எதிரான உணர்வு அமெரிக்காவிலேயே உருவாவது, சீனாவுடன் உறவைவலுப்படுத்த ராஜதந்திர நடவடிக்கையாக ping pong ஆட்டக் குழு சீன செல்வது. அமெரிக்காவையே ஆட்டிப் படைத்த ஹிப்பி கலாச்சாரம், ஆப்பிள் கம்பனியின் வளர்ச்சி, AIDS என்பன அவற்றுள் சில.

